வெண்பனி 6

IMG-20220405-WA0023-7852dc09

வெண்பனி 6

பனி 6

காயப்படுத்த பலர் இருந்தாலும்

மருந்தாக சிலர் இருப்பதாலேயே

நம் வாழ்க்கை

அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.

ஒரு அழகான மாலை நேரம், பறவைகள் அனைத்தும் தங்கள் கூடு தேடி அடைந்து கொண்டிருந்தது. கிச்சு, கிச்சு என்ற சத்தத்தோடு, மரத்தை சுற்றிக் கொண்டிருந்த பறவைகளை, கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் எட்டு வயது பனிமலர்.

ஒரு கப்பில் பாலை எடுத்துக்கொண்டு வந்த ரத்னம்மாள்,”ஏ புள்ள மலரு! என்னத்த அந்த மரத்தையே உத்து உத்து பாத்துட்டு நிக்கறவ?” என்று பாலை அவள் கைகளில் திணித்தார்.

பாலை ஒரு மிடறு விழுங்கிவிட்டு,”அந்த குட்டி குருவி, எவ்வளவு அழகா அதோட அம்மா, அப்பா கூட விளையாடிகிட்டு இருக்கு. எனக்கு மட்டும் ஏன் அம்மா, அப்பான்னு யார் கூடவும் விளையாட முடியல ஆச்சி?” என்றாள், பறவைகளிடமிருந்து பார்வையை விலக்காமல்.

பேத்தியின் கேள்வியில், பாட்டியின் முகம் வேதனையை காட்டியது. “உன்னோட அம்மாவுக்கு உங்கூட வாழ கொடுத்து வைக்கல. அதுதான் சீக்கிரம் சாமி கிட்ட போயிட்டா.” என்றார் வேதனையை மறைத்துக்கொண்டு.

“நான் தான் அம்மாவை கொன்னுட்டேனா ஆச்சி?” என்றவளின் கேள்வியில், பாட்டி துடிதுடித்து போனார்.

“ஏன் புள்ள இப்படி எல்லாம் பேசுற? அவ ஆய்சு முடிஞ்சது  போய்ட்டா.”

“அப்பறம் ஏன் எல்லாரும் என்னை, அம்மாவ கொன்னுட்டு பிறந்தவன்னும், துரதிஷ்டம் பிடிச்சவள்ன்னும் சொல்றாங்க? ஏன் யாரும் என்கூட சேர மாட்டேங்கிறாங்க?”

பிஞ்சு மனதில் நஞ்சை  கலந்த ஊர்காரர்கள் மீதும், அவளது குடும்பத்தார் மீதும் கோபம் எழுந்தது. அவர்களை உண்டு இல்லை என ஆக்கும் வெறியேறியது. ஆனால் அதைவிட மிக முக்கியமானது, ‘வாழ வேண்டிய இந்த சிறு குறுத்து, தாழ்வுமனப்பான்மையில் மூழ்கி வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது’ என முடிவு செய்தார்.

“நம்ம கும்பிடுற பரமேஸ்வரனுக்கு, உன்னோட அம்மா மீனாட்சியை ரொம்ப பிடிச்சது. அதுதான் நீ பிறக்கவும் அவளை அவர் கூட கூட்டிக்கிட்டாரு. நீ பிறந்தக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை” என பொறுமையாக பேத்திக்கு புரியும் படி எடுத்துரைத்தார்.

“ஓஓ ஈஸ்வரனுக்கு யாரையாவது பிடித்தால் அவங்களை அவர்கிட்ட கூப்பிட்டுக்குவாங்களா ஆச்சு?” என்றாள் அனைத்தும் புரிந்தது போல்.

“ஆமா” என்றார் பாட்டி, அவள் புரிந்து கொண்டாளென நினைத்து.

“அப்ப என்னையும் அவர்கிட்ட கூப்புட்டுக்குவாரா?” என்றாள் ஆர்வமாக. பாட்டியின் உடலெல்லாம் ஒரு நிமிடம் நடுங்கியே போனது. 

“வாய மூடு மலரு. என்னத்த பேசிட்டு இருக்கவ?” என்றார் கோபத்தை மறைக்காமல்.

“நீதான ஆச்சி சொன்ன, ஈஸ்வரனுக்கு பிடிச்சா கூப்பிட்டுக்குவாருன்னு. என்னை கூப்பிட மாட்டாரா? அப்ப அவருக்கும் என்னை பிடிக்காதா?” என்றாள் சோகமாக.

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது மலரு. பரமேஸ்வரனுக்கு பிடிச்சாலும், எல்லாருக்கும் ஒரு தேதியை குறிச்சிருப்பான். அப்பதான் நம்மல அவன் கிட்ட கூப்பிடுவான். நீ நூறாய்சுக்கு, பத்து புள்ள பெத்துட்டு, சந்தோஷமா இருக்கணும். அதுதான் நா தினமும் வேண்டிக்கிட்டு இருக்கேன். இனி நீ இப்படி எல்லாம் பேசக்கூடாது.” என அவளுக்கு புரிய வைக்க முயன்றார்.

ஈஸ்வரன்! பனிமலரின் வாயாலேயே தன் விதியை சொல்ல வைத்திருக்கிறான், என்பது பாவம் அந்த முதியோருக்கு அப்போது மட்டுமில்லை எப்போதும் தெரியப்போவதில்லை.

‘ஆச்சி என்ன சொல்கிறார்?’ என அந்த சிறு மலருக்கு புரியவில்லை. அவர் வருந்துவது மட்டும் புரிந்தது. அதனால்,”சரி ஆச்சி! இனி நான் அப்படி பேச மாட்டேன். நீ பீல் பண்ணாத.” என அவரை கட்டிக் கொண்டு,”அம்மா சாமிகிட்ட போயிட்டாங்க ஓகே. ஆனா அப்பா இருக்காங்கள? அவர் ஏன் நம்ம கூட இல்ல? ஏன் எங்கூட விளையாட மாட்டேங்குறாரு?”

தந்தையை பற்றி பெண் கேட்கவும், ‘என்ன சொல்வது?’ என புரியவில்லை. மருமகன் பேத்தியிடம் பாராமுகம் காட்டுவதை உணர்ந்தே இருந்தார். அவர் மட்டுமின்றி அந்த குடும்பத்திலுள்ள பெரியவர்கள் அனைவருமே, பெண்ணிடம் ஒதுக்கம் காட்டுவது புரியாமல் இல்லை. என்னதான் அவர்கள் மலரை ஒதுக்கினாலும், அவர்களே இவளது குடும்பம். அதனால் அவர்கள் மீது பெண்ணிற்கு வெறுப்பு வரக்கூடாது. அது அவளது  எதிர்காலத்தை பாதிக்கும். தங்கள் காலத்துக்கு பிறகு அங்கு தான் அவள் வாழ வேண்டும். அவர்கள் மீது எந்த கசப்பும் இருக்க கூடாது என சிந்தித்தவர், பெண்ணின் மனதில் அவர்கள் மீதான நல்ல எண்ணத்தை விதைக்கும் முயற்சியில் இறங்கினார்.

“உங்க அம்மா போனதுக்கு அப்புறம், உங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. யாராவது கஷ்டப்பட்டா அவங்கள அப்படியே இருக்க விடலாமா?” என பெண்ணிடமே கேள்வி எழுப்பினார்.

“இல்ல ஆச்சி யாராவது கஷ்டப்பட்டால், அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு எங்க மிஸ் சொல்லி இருக்காங்க.” என்றாள் மலரானவள்.

ரத்தினம்மாள் அவளுக்கு நெட்டி முறித்து,”என் செல்ல ராசாத்தி! உங்க அப்பா கஷ்டப்பட்டத பாக்க முடியாம, மறுபடியும் அவருக்கு வேற கல்யாணம் பண்ணிட்டாங்க. அதுதான் உங்க அப்பா உன் கூட விளையாடுறதில்லை. பேசுறதில்லை.” என அவளுக்கு தந்தையின் மேல் வெறுப்பு வராதளவுக்கு அவளுடன் பேசி புரிய வைத்தார்.

சூதுவாது தெரியாத பாட்டி தாத்தாவுடன் வளர்ந்த பனிமலரும், அவர்களைப் போல் வெல்லந்தியாகவே இருந்தாள். அன்பரசனுடன் சேர்ந்து குறும்பு பண்ணுவாளே தவிர, இந்த காலத்து குழந்தைகள் போல் விவரமாக கேள்வி எழுப்ப மாட்டாள்.

அப்படி விவரமாக இருந்திருந்தால் அவளது அடுத்த கேள்வி,’அவர் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், ஏன் என் கூட பேசறதில்லை? நானும் அம்மாவை இழந்து கஷ்டப்பட்டேன்ல. அப்ப அப்பா தானா எனக்கு ஆதரவா இருந்திருக்கணும்?’ என்பதாக தான் இருந்திருக்கும். ஆனால் அதை விடுத்து, பாட்டி சொன்ன அனைத்தையும் கேட்டு,’பாவம் அப்பா’ என முடிவு செய்தாள். அந்தப் பொய் பிம்பம் உடைந்து, அவரின் வெறுப்பை நிச்சயம் உணர்ந்து கொள்வாள் பெண், அப்போது அவளின் நிலை?

பேத்தியின் கேள்வியை மனதில் போட்டு உலப்பிக் கொண்டவர், ‘அவளது குடும்பத்தாரை நினைத்தும், பெண்ணின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையிலும்’ ஒரு சில நாட்களிலேயே இறைவனடி சேர்ந்தார். 

அதன்பின் பெண்ணின் நாட்கள் தாத்தா, அன்பரசன் என குறுகிய வட்டத்துக்குள் சுழன்றது. பாட்டியின் பழக்கத்தை தன் வழக்கமாக மாற்றி, வெள்ளிக்கிழமைகளில் கோயில் செல்வதை தொடர்ந்தாள். தன் மனக்குறைகள் அனைத்தையும், பரமேஸ்வரனின் தோள்களில் இறக்கி வைத்து, தன் மனதை ஆற்றிக் கொள்வாள். அவளை பொருத்தவரை பரமேஸ்வரன் அவளது உற்ற நண்பன்.

தினமும் வீட்டு வேலைகள், சமையல், காட்டு வேலை என உடலை வருத்திக் கொண்ட, தாத்தாவும் அவளது பத்தாவது வயதில் இயற்கை எய்தினார். அடுத்தடுத்த இழப்புகளில் துவண்டு போயிருந்த பெண்ணை, தன் இயல்புக்கு மீட்டெடுத்தது அன்பரசனின் அன்பும், கதிர் அரசனின் அலட்சிய பேச்சும்.

†††††

ரத்தினம்மாள், ராஜேந்திரன் இழப்பிற்கு பின் பனிமலரை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள், கார்த்திகேயனின் குடும்பத்தார். அதில் சுகந்திக்கு ஏக கடுப்பு. அதை மறையாமல் வெளிப்படுத்தினார்.

“எதுக்கு இவளை இங்க கூட்டிட்டு வந்தீங்க?” பனிமலரை நடுக்கூடத்தில் நிற்க வைத்து, அனைவரும் இருக்கும் போது பர்வதம்மாளிடம் கேள்வி எழுப்பினார் சுகந்தி.

“அவளுக்குனு இருந்த தாத்தாவும் போயிட்டாரு. அப்ப அவ எங்க போவா?” பொறுமையாக சுகந்திக்கு எடுத்துரைத்தார் பர்வதம். 

“அதுக்கு எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க? ஏதாவது அனாதை ஆசிரமத்தில் விட வேண்டியது தான.” என்றார் அலட்சியமாக.

அதைக் கேட்ட பனிமலர் ‘தன் தந்தை, தனக்காக பேசுவாரா?’ என அவர் முகத்தை பார்த்தாள். ஆனால் அங்கோ சுகந்தியை அடக்குவதற்கான அறிகுறி எதுவுமில்லை. ‘அப்பா பாவம்’ என்ற பிம்பம் இந்த நிமிடம் உடைந்தது. பெண்ணின் மனது சுக்கல் சுக்கலாக சிதறியது, கண்களில் குளம் கட்டியது. அந்த நொடி முடிவு செய்தால்,’தனக்கு தந்தை என்ற உறவே வேண்டாம்’ என்று. தந்தை என்ற சொல்லையே முழுவதுமாக வெறுத்தாள்.

“சுகந்தி என்ன பேசிட்டிருக்க? அவ இந்த வீட்டு வாரிசு. அவ எதுக்கு ஆசிரமத்துக்கு போகணும்?” என கண்டிப்பு வந்தது எதிர்பாராத இடத்திலிருந்து.

“அண்ணா! அவ ராசி இல்லாதவ. அவ நம்ம வீட்டுல இருந்தா நம்ம குடும்பத்துக்கு தான் கஷ்டம்.” என்றாள் மலரின் மனதை புண்படுத்துமாறு. 

“என்ன கஷ்டம் வந்தாலும் பரவால்ல. அவ இனி இந்த வீட்டில தான் இருப்பா.” என உறுதியாக முடித்தார் தியாகராஜன். சுகந்தி இயலாமையில் பனிமலரை முறைத்து விட்டு சென்றார்.

ஆம்! பனிமலருக்கு ஆதரவாக பேசியது தியாகராஜன், சுகந்தியின் அண்ணா, அரசுகளின் தந்தை. தனக்காக பேசிய மாமாவின் மீது மரியாதை வந்தது மலரானவளுக்கு. 

தியாகராஜன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது, ‘என்னதான் அவள் துரதிஷ்டசாலியாக இருந்தாலும், இந்த வீட்டின் முதல் வாரிசு. அதுவும் பெண் குழந்தை. அவளை அனாதையாக தவிக்க விட்டால், அந்த கேடு தங்கள் குடும்பத்தையே பாதிக்கும்.’

அந்த பெரிய வீட்டில் அவளுக்கென்று ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அங்கு அவளால் ஒன்ற முடியவில்லை. தன் குடிசை வீட்டை நினைத்து மனம் ஏங்கியது. அங்கு பணம் இல்லை என்றாலும், நிறைய அன்பு இருந்தது. இங்கோ பணம்  இருந்தது, ஆனால் அவளுக்கான அன்பு மட்டும் நிராகரிக்கப்பட்டது.

எப்போதும் தாத்தா, பாட்டியுடன் படுத்து தூங்கி பழகிய பெண்ணிற்கு, இந்த வீட்டில் தனியே படுக்க பயம். இருட்டில் படுத்தவளுக்கு சுற்றியுள்ள மேஜை, நாற்காலிகள் அனைத்தும் கரும்பூதமாக காட்சியளித்தது. பயந்து போய் அறையிலிருந்து வெளியே வந்தாள். அங்கு யாரும் அவளது கண்களுக்கு அகப்படவில்லை. ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அன்பரசனின் அறை கதவை தட்டினாள். கதவை திறந்ததோ கதிர் அரசன்.

ஆம்! கதிர் அரசன், அன்பரசன் இருவருக்கும் ஒரே அறை. இப்போது அந்த அறையில் புதிதாக குடி புக உள்ளாள் மலரானவள்.

வாசலில் கேள்வியோடு நின்ற கதிர் அரசனை கண்டு கொள்ளாமல் அன்பரசனிடம் சென்றவள்,”அரசு எனக்கு அங்க தனியா படுக்க பயமாயிருக்கு. நான் உன் கூடவே படுத்துகறேன்” எனக்கூறி அவன் பதிலை எதிர்பார்க்காமல், அவனுடன் அவன் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

அவளின் பயந்து கலங்கி போன முகத்தை கண்ட பதிமூன்று வயது கதிர் அரசன், எதுவும் சொல்லாமல் அவன் இடத்தில் சென்று படுத்தான்.

காலையில் அன்பரசனின் அறையில், அவனை கட்டிக்கொண்டு தூங்கும் மலரை கண்ட சுகந்தியோ ஒரு போர்க்களத்தையே உருவாக்கினார்.

அவளை அவளது தனி அறையில் தான் படுக்க வேண்டும் என பெரியவர்களும் கூற, அவளோ “முடியாது! எனக்கு அங்க தனியா படுக்க பயமா இருக்கு. நான் அரசு கூட தான் படுப்பேன்” என கூறினாள்.

பெரியவர்களால் அவளது பயத்தை புரிந்து கொள்ள முடிந்தது. சிறு குழந்தைகளான அவர்கள் ஒன்றாக படுப்பது பெரியவர்களுக்கு பிரச்சனை இல்லை. சுகந்தி விடுவாரா?

“என்ன நீ? பெரியவங்கள எதிர்த்து பேசுற. இனி உன்னோட ரூம்ல தான் படுக்கிற” என கண்டிப்பாக சுகந்தி கூறினார்.

“எனக்கு பயமாயிருக்கு நான் அங்க படுக்க மாட்டேன்” என மீண்டும் சொன்னதையே திருப்பி சொன்னாள்.

அதில் கோபம் கொண்ட சுகந்தி,”நான் சொல்ற மாதிரி நீ உன்னோட ரூம்ல படுக்குற. இல்லைனா இங்க இருந்து போயிடு” என இரக்கமே இல்லாமல் வார்த்தைகளை விட்டார்.

அதைக் கேட்டு மலரானவளின் மனம் காயப்பட்டது.”எனக்கு உங்களையும் பிடிக்கல, இந்த வீட்டையும் பிடிக்கல. நான் இங்க இருக்க மாட்டேன். எங்க வீட்டுக்கு போறேன்” என அழுது கொண்டே கூற, மாமனின் மனம் உருகி விட்டது, பெண்ணின் கண்ணீரில் கொஞ்சம் இரக்கம் உண்டாகியது. 

“சுகந்தி உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? குழந்தைகிட்ட என்ன பேசுற? அவ தான் பயமா இருக்குன்னு சொல்றால்ல. அவ அன்பு கூட படுக்கிறது உனக்கு பிடிக்கலைன்னா, அவளை உன் கூட உங்க ரூம்ல படுக்க வச்சுக்கோ.” என சுகந்தியின் தலையில் இடியை இறக்கினார்.

அவளை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பாத சுகந்தி,”சரி சரி கொஞ்ச நாள் அவங்க கூட இருக்கட்டும்” என வெற்றிகரமாக பின்வாங்கினார். பெண்ணின் முகம் மலர்ந்தது. அன்பரசுவிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி, தன் மொட்டு தன்னுடனே இருப்பாள் என்பதால்.

பெண் அந்த வீட்டுக்குள் நுழைந்திருந்தாலும், கலகலவென அன்பரசனுடன் சுற்றித்திரிந்தாலும், உலகில் உள்ள அனைத்து சேட்டைகளை செய்தாலும், குடும்பத்துக்குள்  யாருடனும் அதிகம் பேசாமல் ஒதுங்கியே போய்விடுவாள்.

‘தந்தையின் நிராகரிப்பு, சுகந்தியின் வெறுப்பு, தீப்தியின் குத்தல் பேச்சு, மற்றவர்களின் ஒதுக்கம்’ என அனைவரின் நிராகரிப்பையும் உணர்ந்து கொண்டாள். தன் சொந்த வீட்டிலேயே அந்நியமாக உணர்ந்தாள்.

அவளை ஒடிந்து போகாமல் காப்பாற்றியது அன்பரசனின் தோழமையான அன்பும், கதிர் அரசனின் வம்பு பேச்சுகளுமே.

†††††

இதே நிலையில் வருடங்கள் சில கடந்திருந்தன. இப்போது மலர் தன் பத்தாவது வகுப்பில் அடி எடுத்து வைத்தாள். பத்தாவது பொது தேர்வு என்பதால், பள்ளி விடுமுறை இன்றி நடந்து கொண்டிருந்தது. தீப்தி விடுமுறையை மகிழ்ச்சியாக செலவழித்துக் கொண்டிருந்தாள்.

அப்படிபட்ட ஒரு நாள் காலையில், எழும்போதே வயிற்று வலியுடன் எழுந்தாள் பெண். அன்றிலிருந்து இரு வாரங்கள் பெண்ணை வீட்டிலேயே வைத்துக் கொண்டனர். 

எதனால் இந்த அடைகாப்பு மொட்டு மலரானதால். 

அவளுக்கு, வீட்டளவில் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து, சடங்கு செய்ய முடிவு செய்தனர். தீப்திக்கு செய்தது போல் பெரிய அளவில் செய்ய சுகந்தி விடவில்லை.

ஆம்! தீப்திக்கு ஒரு வருடத்துக்கு முன்பே சடங்கு செய்து விட்டனர். அப்போது சாங்கியங்கள், சம்பிரதாயங்கள் அனைத்தும் செய்தது கதிர் அரசன். சுகந்திக்கு அவனை தன் மருமகனாக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசை.  

காஞ்சி பட்டு, அவளது பூசிய உடல் வாகில் பாந்தமாக பொருந்த, மிதமான அலங்காரத்தில் முகம் ஜொலிக்க, எப்போதும் இல்லாத மென்நடையில் வந்தவளின் அழகில், ஒருவனின் இதயம் தாளம் தப்பியது. 

அவளுக்கு குச்சி கட்டி, மாலை அணிவிக்க கதிர் அரசனை அழைக்க, அவனோ,’என் அத்தை மகளைத் தவிர வேறு யாருக்கும் செய்ய மாட்டேன்’ என மறுத்ததால், தானாக அந்த வாய்ப்பு அன்பரசனிடம் சென்றது.

வீட்டில் சில உரிமைகளை அவளுக்கு வாங்கிக் கொடுத்த தியாகராஜன், சில விஷயங்களுக்கு சுகந்தியுடன் ஒத்துக் போனார். அதில் முக்கியமான ஒன்று அவள் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்பது.

அந்த வேற்றுமை இப்போது கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் பெண்ணின் படிப்பில் வந்து முடிந்திருக்கிறது.

ஒருவேளை அவள் திருமணம் முடிந்து, அந்த வீட்டிலிருந்து சென்று விட்டால், அந்தக் குடும்பத்திற்கு எந்தத் தீங்கும் வராது என எண்ணினார். அதனால் சுகந்தி சொன்னது போல், அவளுக்கு திருமணத்தை முடிப்பதே நல்லது, என்று கூறியவர், தன் மகனின் படிப்பு என்று வரும்போது, இவர்கள் பக்கம் சென்று சுகந்தியின் மனதை மாற்றி, உள்ளூரில் படிப்பதற்கு சம்மதம் வாங்கினார்.

இனி அடுத்தது அன்பரசன் பனிமலரின் கல்லூரி பயணம்.

Leave a Reply

error: Content is protected !!