வெண்பனி 8

வெண்பனி 8
பனி 8
நீ போகும் தெருவில்
ஆண்களை விடமாட்டேன்
சில பெண்களை விடமாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பைக்
காற்றில் விடமாட்டேன்
அதைக் கவர்வேன் தரமாட்டேன்
மதுரை பொறியியல் கல்லூரியில், தன் வகுப்பறையில் இருந்த கதிர் அரசனுக்கு இருப்பு கொள்ளவில்லை.
இன்று பனிமலர்க்கும் அன்பரசனுக்கும் முதல் நாள் கல்லூரி தொடங்குகிறது. அவர்களின் புது வாழ்க்கையை துவங்கும் போது, ‘தான் அங்கு இல்லை’ என்ற ஆதங்கம் மனமெங்கும் வியாபித்தது.
புது வாழ்க்கையா?
ஆம்! நிச்சயம் புது வாழ்க்கை தான். இதுவரை படிப்பு ஒன்றைத் தவிர, வேற எந்த கவலைகளுமின்றி, பள்ளி சிறுவர்களாக சிறகடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இனி அப்படி இல்லை, இளைஞர்களாக தங்கள் வாழ்வின் பல மாற்றங்களை எதிர்கொள்ள போகிறார்கள். அடோலஸ்ண்ட் ஸ்டேஜ் மிக ஆபத்தான பருவம்.
பல மேடு பள்ளங்களை கடந்து, மனிதர்களை புரிந்து கொள்வது, இந்தக் கல்லூரி காலத்தில் தான். பருவ வயதின் ஆசைகள் மாறுபடுவதும், தேவைகள் புரிவதும் இந்த கல்லூரி பருவத்தில் தான். இந்த நான்கு வருடம், மிக கவனத்துடன் கடக்க வேண்டிய பருவம். ‘கண்ணாடி பாத்திரத்தை கையாளுவது போல், உணர்வுகளை கவனத்துடன் கையாள வேண்டும். கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலைதான் இந்த கல்லூரி பருவம். அப்போது இது புது வாழ்க்கை தானே?
அப்படிப்பட்ட வாழ்க்கையை அவர்கள் தொடங்கும் போது, உடனிருந்து வழிநடத்த, தான் அங்கு இருக்க முடியாமல் போனதை நினைத்து வருந்தினான்.
அவன் கடைசி வருட படிப்பில் இருப்பதால், கல்லூரி முன்னரே தொடங்கிவிட்டது. முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கை நடைபெறுவதால், எப்போதும் முதலாம் ஆண்டுக்கு ஒரு மாதம் கழித்துதான் கல்லூரி தொடங்கும். அதனால் அன்பரசனும் பனிமலரும் கல்லூரி சேரும் போது, கதிர் அரசன் மதுரையில் இருக்கிறான்.
பள்ளி நாட்களில், அவர்களுக்கு பக்க பலமாக இருந்தவன், அவர்களுக்கு தெரியாமல், அவர்களின் பின் இருந்து, பாதுகாப்பாக வழி நடத்தினான். எப்போதும் ஒரு குடும்பத்தில், மூத்த குழந்தைக்கு பொறுப்புணர்ச்சி அதிகம். அதன் இலக்கணம் மாறாமல் கதிர் அரசன் பொறுப்போடும், அன்பரசன் குறும்போடும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, மதுரையில் தன் கல்லூரி படிப்பை தொடர்கிறான். அப்போது பனிமலரும் அன்பரசனும் இருந்தது, அதே பழைய பள்ளியில், அனைவரும் பழகியவர்களே அதனால் பிரச்சனையில்லை. ஆனால் இப்போது அவ்வாறு இல்லை.
புது கல்லூரி, புது மாணவர்கள், புது ஆசிரியர்கள், புது சுற்றுச்சூழல் என அனைத்தும் மாறுபடுகிறது. புது இடத்தில் இவர்கள் எப்படி பொருந்தி கொள்வார்கள்? இவர்களை அங்கு இருப்பவர்கள் புரிந்து கொள்வார்களா? என பல கேள்விகள், தோன்றி அவனை இம்சித்தது.
பொதுவாக இந்த மாதிரி கேள்விகள், தன் குழந்தைகளை விடுதியில் சேர்க்கும் அனைத்து பெற்றோர்களின் மனதிலும் தோன்றும் ஒன்றுதான். ஆனால் இங்கு தோன்றியதோ ஒரு தமையனிடம் என்பதுதான் அதிசயம்.
தீப்தி எங்கு சென்றாலும், அங்கு இருப்பவர்களுக்கு தான் பிரச்சனை. அவளின் திமிர் பார்வையும், உதாசீன பேச்சும், தான் என்ற அகம்பாவமும், அனைவரையும் இரண்டு எட்டு பின் வைத்தே பழக வைக்கும். அவளை பற்றி பெரிதாக கவலை கொள்ள வேண்டியதில்லை.
ஆனால் பனிமலர் அப்படி இல்லை. சிறுவயதில் வெள்ளந்தியான தாத்தா, பாட்டியுடன் வளர்ந்த பெண். கொஞ்சம் இளகிய மனம் படைத்தவள். தானாக மற்றவர்களுக்கு உதவி செய்வாள். அன்பாக நான்கு வார்த்தை பேசினால் அவளை எளிதாக நெருங்கிவிடலாம்.
தாயின் அழகை மொத்தமாக தன்னுள் அடக்கி பிறந்தவள். அவளின் துறுதுறு பார்வையும், குறும்பு பேச்சும், மாசு மருவற்ற பளிங்கு முகமும், சூதுவாது தெரியாத தூய்மையான மனமும் அனைவரையும் எளிதாக கவர்ந்து விடும். இது அனைத்தையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கியது, தன் சின்ன அத்தை சுகந்தி, ஏற்படுத்திய வதந்தி, ‘பனிமலர் ராசி இல்லாதவள்’
அதனால் சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை, ஆண் பெண் என்று யாரும் அவளுடன் எளிதில் பழக மாட்டார்கள். ஒரு விதத்தில் இது கதிருக்கு நன்மையே. ‘யார் எப்படிப்பட்டவர்கள்?’ என்று ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அதனால் தன் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது.
வதந்தியையும் மீறி, யாரும் (குறிப்பாக பசங்கள்) அவளை நெருங்க முயன்றால், அன்பரசன் அவர்களை அனுமதிக்க மாட்டான். ‘என் மொட்டு! என் உரிமை! எங்களுக்கு நடுவில் யாரும் இல்லை’ என விரட்டி அடித்து விடுவான்.
சிறு வயது முதலே இவர்கள் இருவரும் குறும்புக்காரர்கள். ஏதாவது தவறு செய்து மாட்டிக்கொண்டு முழிப்பார்கள். இப்போதும் அவர்களின் சேட்டைகள் குறைந்ததில்லை. பின் விளைவுகள் எதையும் சிந்திக்காத, குருட்டு தைரியம் அதிகம்.
கதிர் அரசனுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது? ஒரு தாயின் பாசம், தந்தையின் கண்டிப்பு, சகோதரனின் அரவணைப்பு, ஆசிரியரின் வழிநடத்தல், தோழனின் ஆதரவு. இது அனைத்தும் இருந்தாலும், அதிகம் வெளிப்படுவது கண்டிப்பு மட்டுமே. சில நேரம் அவர்களை சீண்டி விளையாடுவதும் உண்டு. சீண்டல்கள் அதிகமாகும் போது முட்டிக்கொண்டு நிற்பதும் உண்டு.
கதிர் அரசன் சொல்வதை அன்பரசன் காதிலாவது கேட்பான், ஆனால் இந்த பனிமலர் காதில் கூட வாங்க மாட்டாள். அதையும் மீறி கட்டாயப்படுத்தினால், அவன் சொல்வதற்கு எதிராகவே அனைத்தும் செய்வாள். எப்போதும் இருவருக்கும் முட்டிக் கொண்டே இருக்கும். மொத்தத்தில் டாம் அண்ட் ஜெர்ரி போல.
இப்போது ‘புதிய கல்லூரியில் எந்த வம்பையும், வாங்காமல் இருக்க வேண்டும்’ என வேண்டிக் கொள்ள மட்டுமே முடியும்.
ஆனால் கதிருக்கு எங்கே தெரியப் போகிறது, முதல் நாளே வம்பை வாங்கிக் கொண்டார்களென்று; கௌதம் கிருஷ்ணா என்ற கொடிய நாகம் அவள் காலை சுற்றி விட்டதென்று; காலை சுத்திய பாம்பு கொத்தாமல் விடாதென்று’
இங்கு சுவாரசியமான விஷயம் என்னவென்றால்? அதன் கொடிய விஷயம், யாரில் பரவ போகிறது என்பதுதான்?பரமேஸ்வரன் வகுத்த கணக்கை, அவனின்றி வேறு யார் அறிவார்?
†††††
கல்லூரி இடைவேளை நேரம், அதற்காகவே காத்திருந்தது போல் அரசுவின் கைபேசி ஒளிர்ந்தது. அவசரமாக தொடர்பில் இணைந்தான். அவன் எதிர்பார்த்தது போல், அவன் மனதில் பூகம்பத்தை கிளம்பி இருந்து அந்த அழைப்பு.
பனிமலர் சேர்ந்திருக்கும் அதே கல்லூரியில், நான்காம் ஆண்டு படிக்கும், அரசுவின் நண்பனிடமிருந்து வந்த அழைப்பு. பொறுமையாக அந்த புறம் சொன்னவற்றை கேட்டவன், அவனிடம் சில உதவிகளை வேண்டி இணைப்பை துண்டித்தான்.
‘பனி உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? எது எதுல விளையாடுறதுனு இல்ல? அவன்கிட்ட போய் ப்ரபோஸ் பண்ணியிருக்க? நீ எல்லாம் தெரிஞ்சு பண்றயா? தெரியாமல் பண்றியா? டேய் அன்பு உனக்கு கூடவா அறிவில்லாம போச்சு? ஒரு பொருக்கி கிட்ட அவளை கோர்த்து விட்டிருக்க’ என கௌதம் கிருஷ்ணாவின் குணநலன்களை, தெரிந்த கதிர் அரசனால் மனதோடு மருகத்தான் முடிந்தது.
பனியை கண்டித்தால்,’என் பேச்சைக் கேட்கக் கூடாது என்ற வீம்பிற்காகவே அவனுடன் பழகுவாள்’ என்பதை உணர்ந்த அரசு, மறைமுகமாக தன் நண்பனின் மூலம், அவளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தினான். அந்த பாதுகாப்பு எந்த அளவு உதவும் என, உறுதியாக சொல்ல முடியாது.
அவளுக்கு மறைமுகமாக பாதுகாப்பு மட்டும் பத்தாது. நிச்சயம் நேரடி பாதுகாப்பு தேவை. அதற்கு அவன் தேர்ந்தெடுத்த ஒரே ஆள் அன்பரசன். ‘மாலையில் அவனுடன் பேசி புரிய வைக்க வேண்டும்’ என்ற சிந்தனையோடு தன் வகுப்பை தொடர்ந்தான்.
மதுரையில் ஒருவனை தவிப்பில் ஆழ்த்தியது தெரியாமல், அன்பரசனும் பனிமலரும் தங்கள் வகுப்பறைக்குள் நுழைந்தனர். அங்கு அமர்ந்திருந்த பெண்ணை பார்த்து, கண்கள் விரிய திகத்துக்கு நின்றனர்.
ஆம்! யாரை கௌதம் கிருஷ்ணாவிடம் இருந்து காப்பாற்றி, பனிமலர் மாட்டிக் கொண்டாளோ? அதே பெண் அந்த வகுப்பறையில், இரண்டாவது வரிசையில் மூன்றாவது பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.
வகுப்பில் நுழைந்த இவர்களை கண்டு, அந்தப் பெண்ணின் முகம் பூவாக மலர்ந்தது. அவர்களிடம் சென்றவள் நன்றி உரைத்து, நட்பு கரம் நீட்டினாள். இவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
†††††
“ஹாய் பிரண்ட்ஸ்! நான் தனலட்சுமி. இந்த கிளாஸ் தான். நீங்க?” என்று அந்த புதிய பெண் தானாக வந்து இவர்களிடம் நட்பு கரம் நீட்டினாள்.
“ஹாய் தனா! நான் மலர் பனிமலர். இவன் அன்பரசன். நாங்களும் இதே கிளாஸ் தான்.” என புன்னகையுடன், நட்பு கரத்தை ஏற்றுக் கொண்டாள். அதில் அன்புக்கு தான் ஏக கடுப்பு.
“ஐ! நீங்க ரெண்டு பேரும் இதே கிளாஸ்தானா? ரொம்ப ஜாலி. உங்களுக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ்னா ரொம்ப பிடிக்குமா?” என்றாள் வெகுளியாக.
“ஐயோ! கம்ப்யூட்டர், ப்ரோகிராமிங்னாளே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. இதோ இங்க நிக்கிறானே, இவனுக்கு கம்ப்யூட்டர்னா உயிர். போனா போகுதுன்னு, அவனோட உயிரை காப்பாத்த, நானும் அவன் கூட சேர்ந்துட்டேன்.” என அன்பரசனை கேலி செய்தாள்.
காதில் புகை வராத குறையாக அவளை முறைத்தவன், விடுவிடுவென சென்று, முதல் வரிசையிலிருந்த நாலாவது பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.
விலகி செல்லும் அவனையே, சோகமாக பார்த்த தனா, “நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா? உங்களை கோபமா முறைச்சிட்டு போறாங்க.” என வருந்தினாள்.
“நீ தப்பா கேட்டா, உன்னை தானே முறைக்கணும்? என்னை எதுக்கு முறைச்சுட்டு போறான்?” என கேள்வியையே விடையாக்கினாள்.
“அதானே? அப்போ உங்க மேல தான் கோபமா?” என திகைத்தாள்.
“ச்ச ச்ச! அவனுக்கு என்மேல் கோபமே வராது” என்றாள் பெருமையாக.
“அப்ப இப்ப முறைச்சிட்டு போனாங்க?” என்றாள் புரியாமல்.
“நான் உன் கூட சேர்ந்து, அவனை கேலி பண்ணிட்டேன்ள, அதுதான் சார் முறுக்கிட்டு போறாரு. இந்த முறுக்கு சுடுறது எல்லாம் நான் அங்க போற வரைக்கும் தான். அப்பறம் சார், டோட்டல் சரண்டர். நீ கவலைப்படாத.” என்றவள், தொடர்ந்து தயக்க குரலில், “அவங்க ஏதும் பிரச்சனை பண்ணுனாங்களா?”
“ஐயோ பாத்தீங்களா, உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன். அதை விட்டுட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கேன். நேரத்துக்கு வந்து என்னை காப்பாத்திட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ்.” என்றாள் உணர்ந்து.
“இட்ஸ் ஓகே! லீவ் இட். நன்றி சொல்லும் அளவு, இது பெரிய விஷயம் இல்லை. உன்னை சீனியர்ஸ் டார்ச்சர் பண்ணாங்களா? ரொம்ப பயந்து போய் நின்ன, அதை பார்த்து தான் நாங்க அங்க வந்தோம்.”
“ராகிங் பண்ண கூப்ட்டாங்க, நான் அவங்களை அண்ணான்னு சொல்லிட்டேன். அதுக்கு கோபம் வந்து ‘நான் உனக்கு அண்ணனா? இனி அப்படி கூப்பிடக்கூடாது’ என சண்டை போட்டாங்க. அவங்க கோவமா பேசவும் எனக்கு பயமாயிடுச்சு. அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க.” என நடந்ததை கூறி முடித்தாள்.
சற்று முன், அன்பரசன் கதை கதையாய், கௌதம் கிருஷ்ணாவின் லீலைகளை சொல்லி இருக்க, பனிமலரால் அவனின் குணத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. இப்போது தனாவின் வார்த்தையின் மூலம், ‘அவனுக்கு அண்ணா என்ற சொல்லே பிடிக்காது’ என தெரிந்தது. இதைக் கேட்கவும் பனிமலரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
வயிற்றைப் பிடித்து சிரித்துக்கொண்டே, அன்பரசனிடம் அமர்ந்து கொண்டாள். தனலட்சுமி ஒன்றும் புரியாமல் ‘பே’ என முழித்து அவளிடத்தில் அமர்ந்தாள். அன்பரசனோ,’பனிமலரை தன்னிடமிருந்து பிரிக்க வந்த ராட்சசி’ என தனலட்சுமியை முறைத்துக் கொண்டிருந்தான்.
தனலட்சுமி! மாநிறமாக இருந்தாலும் களையாக இருப்பாள். அவள் அணிந்திருந்த வெளிர் மஞ்சள் சுடிதார், அவளுக்கு பாந்தமாக பொருந்தியிருந்தது. அமைதியான பெண். கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள். யாரையும் எளிதில் நம்ப கூடியவள். இவளுக்கு பத்தாவது படிக்கும் ஒரு தம்பி இருக்கிறான். பெற்றோர், தம்பியுடன் இருக்கும் அழகான சிறு நடுத்தர குடும்பம்.
தந்தை ஒரு தனியார் வங்கியில், ஐந்து இலக்க சம்பளத்தில் பணிபுரிகிறார். தாய் இல்லத்தரசி. தம்பி நடுத்தர தனியார் பள்ளியில் படிக்கிறான்.
தனலட்சுமிக்கு கணினியை இயக்குவதில் அலாதி பிரியம். அதில் நிறைய தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு, இந்தக் கல்லூரியில் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வந்திருக்கிறாள்.
பனிமலருக்கு கம்ப்யூட்டர் சயின்ஸில் பெரிய ஆர்வம் இல்லை. அவளது விருப்பம் பேஷன் டெக்னாலஜி. அந்த பாட பிரிவு பாரியூர் சுற்று வட்டாரத்தில் இல்லை. அப்படியே இருந்தாலும் நகரங்களில் இருக்கும், கல்லூரிகளின் தரத்துக்கு ஈடாகாது. அதுதான் பேஷன் டெக்னாலஜி படிக்க கோவை செல்ல ஆசைப்பட்டாள்.
அவளது ஆசையில் மண் அள்ளி கொட்டியது சுகந்தியின் வஞ்சம். அவரின் வார்த்தைகளை கேட்ட பிறகு, பனிமலருக்கு கல்லூரி செல்ல பிடிக்கவில்லை. ஏதோ பிச்சை எடுத்து படிப்பது போல் ஒரு எண்ணம். தன்னால் அன்பரசுவின் படிப்பு கெடக்கூடாது, என்பதற்காக மட்டுமே கல்லூரியில் சேர சம்மதித்தாள்.
பனிமலருக்காகவே, அன்பரசன் தன் கல்லூரி படிப்பை துறக்க தயாராக இருந்தான். அன்பரசனுக்காகவே, அன்பரசன் விரும்பிய கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்துள்ளாள் பனிமலர். அவர்களுக்குள் இருக்கும் புனிதமான பந்தத்தை, அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது.
அவனுக்காக அவளும், அவளுக்காக அவனும், எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். ‘ஒருவருக்காக ஒருவர்’ என வாழும் இவர்களுக்கு இடையில், இப்போது புதிதாக இருவர் நுழைந்துள்ளனர்.
ஒருவரின் விருப்பத்திற்காக, ஒருவர், தன் தோழமையை விடவேண்டிய சூழ்நிலை வந்தால், விட்டுக் கொடுப்பாரா?
இந்த இருவரின் புதுவரவால், அன்பரசன் பனிமலரின் உறவில் விரிசல் ஏற்படுமா? நட்பில் இருந்து காதல் மலருமா?