⛪️லேவியின் நவி அவள்🛕

IMG_20230201_214732

⛪️லேவியின் நவி அவள்🛕

லேவியின் நவி 6

காத்திருப்பு காதலிக்கே உரியது

நீ என் கரம் பெற்ற காத்திருக்கிறேன். அதுவும் உற்றார் உறவினரின் ஆசியோடு

என் காத்திருப்பு கல்யாணத்தில் முடியுமா? அல்லது பிரிவில் முடியுமா?

திங்கட்கிழமை காலை எழும்போதே அவளுக்குள் ஏதோ ஒர் உற்சாகம் வந்து ஒட்டிக்கொண்டது.

ஒரு வேலையை இன்று அவனும் வருவான் என்ற மகிழ்ச்சியோ?

மாலை நெருங்க நெருங்க மனம் சந்தோஷத்தில் கூத்தாடியது. இன்னமும் இது நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் உள்ளது.

அந்த குழப்பத்தால் அவனிடம் அவன் காதலிற்கான பதிலை சொல்லும் எண்ணமில்லை அவளுக்கு.

ஆனால் அவனை காண, மனம் துள்ளி குதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தான் எழுந்தாள் என்பதால். கடந்த ஒன்றரை நாளை முயல் வேகத்தில் கடந்தது போல் தோன்ற,

ஆனால் இன்றோ எப்பொழுதடா மாலை வரும் என்று காத்திருந்தவளுக்கு இன்றைய நாள் ஆமை வேகத்தில் நகர்வது போல் தோன்றியது.

எப்படியோ அவன் நினைவில்லையே அன்றைய பொழுதை கழிக்க, மாலையும் வந்தது.

ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தவள், வழக்கம் போல் தன் பிள்ளையாரப்பனிடம் தன் குழப்பத்திற்கான விடையை அருளுமாறு வேண்டிக்கொண்டு, நேர் எதிரில் இருக்கும் தெருவை பார்த்தாள்.

அவளின் நினைப்பு பொய்யாகாமல் அங்கே வந்து கொண்டு இருந்தான் ஜான்.

அவனை கண்டதும் துள்ளிய மனதை கடிவாளம் விட்டு அடக்கி, அமைதியாய் நின்றிருந்தாள்.

ஜானும் இவளை கண்டு விடவே முகத்தில் புன்னகை தவழ அவளருகே சென்றான்.

பின் இருவரும் ஒன்றாக இணைந்து கேப் இருக்கும் இடம் நோக்கி சென்றார்கள்.

“ஒழுங்கா தூங்கினியா?”, ஜான் வினவ,

எங்கே சிறிது நாட்களாக தான் தூக்கம் அவளுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறதே.

“ம்…”, என்று மட்டும் உரைத்தாள் அவன் முகம் பார்க்காது.

அவள் முகத்திலேயே தெரிந்தது அவள் சரியாய் உறங்கவில்லை என்று, ‘இவளுக்கு என்னதான் பிரச்சனை? கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறா’ தன் மனதில் மட்டுமே அவளை வைய்தான்.

இப்படியாக இருவரும் பேசிக்கொண்டு, கேப் இருக்குமிடம் நோக்கி சென்று, அதில் அமர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்வையில் தீண்டிக்கொண்டே இருந்தார்கள்.

ஆபீஸ் சென்று சேர, இருவருக்குமே முக்கியமான வேலைகள் காத்திருந்ததால் அவர்களின் ஃபேவரிட் ஸ்பாட்டான அந்த குளப்படிகளில் அமர முடியவில்லை.

எனவே நேராக அவர்கள் பிளாக்கில் இருக்கும் ஃலிப்ட்டை நோக்கி சென்றார்கள். இரண்டு நாளா பார்க்காததால் அவனை கண்களால் நிரப்பிக் கொண்டிருந்தாள் பெண்.

அதை உணர்ந்தாலும் கவனியாதது போல் வந்தான் இவன். வழக்கம்போல இரண்டாம் தளத்தில் இவள் இறங்கிக் கொள்ள, லிஃப்ட் மூடுவதற்குள் அந்த சிறிய நேரத்தில் அவளை முழுதாய் அவன் கண்களில் சிறைப் பிடித்துக் கொண்டான் ஜான்.

அவரவர் வேலைகளில் அவரவர் முழங்கிப் போயினர்.

அவள் கஸ்டமரின் கிரெடிட் அக்கவுண்ட்டை பார்த்து, அவர்களுக்கு போன் செய்து அவர்களின் அக்கவுண்டில் இவ்வளவு கிரடிட் இருக்கிறது அதை அவர்கள் எப்பொழுது செட்டில் செய்வார்கள் என்பன போன்ற விஷயங்கள் கேட்டு,

அந்த அக்கவுண்டில் அந்த ஒரு தேதியை குறித்து வைத்துக் கொள்வாள். அந்த தேதி வரை அவள் பொறுத்திருந்து அதற்கு மேலும் பணம் வரவில்லை என்றால், மீண்டும் அவர்களுக்கு போன் செய்து பேசுவாள் அதை ரிமைண்டிங் கால்(reminding call)என்று கூறுவர்.

இவள் ஹாண்டில் செய்வது இன்டர்நேஷனல் கஸ்டமர்ஸ். அனைவருமே மிகவும் முக்கியமானவர்கள். எனவே தன்மையாய் பேச வேண்டும் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை அவர்களுக்கு இந்த பர்ச்சேஸ் சம்பந்தமாக தகவல் நினைவில்லை அல்லது அந்த பர்ச்சேஸ் ரெசிபி ஏதாவது தொலைத்து விட்டார்கள் என்றால் இவள் அதன் காப்பியை அனுப்பி வைப்பாள்.

நாம் சிறு சிறு பொட்டிக்கடைகளில் அக்கவுண்ட் வைத்து கடன் வாங்குவோம் இல்லையா, கிட்டத்தட்ட அதே போல் தான் என்ன பணத்தொகை தான் அதிகமாக இருக்கும்.

இதில் பெரும் பிரச்சனை என்ன என்றால் இந்த விஷயங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஏதேனும் ஒரு விஷயம் தவறாய் போனாலோ அல்லது இவள் கஷ்டமர்சை மாற்றி கூப்பிட்டு விட்டாளோ பெரிய எக்ஸ்கலெக்ஷன் ஆகும்.

எக்ஸ்கலெக்ஷன் என்பது நாம் தவறு செய்தாலோ அல்லது ஏதோ கடினமாக நடந்து கொண்டாலோ நம்முடைய கிளையன்ட் நம் மேல்அதிகாரியிடம் ரிப்போர்ட் செய்வதை தான் இவ்வாறு கூறுவர்.

இதனால் அந்த குறிப்பிட்ட எம்ப்ளாயிக்கு அவர்கள் செய்த தவறுக்கு ஏற்றார் போல் சிக்கல்கள் ஏற்படும்.

இவ்வாறு தன் வேலையில் கவனத்துடனும், நிதானத்துடனும் எப்பொழுதும் விழிப்புடனும் இருக்க வேண்டும் வைஷ்ணவி.

அன்று பல ரிமைண்டிங் கால்ஸ், புதிதாய் கால் செய்ய வேண்டிய கஸ்டமர்கள், மெயில் ஹண்ட்டில் செய்வது என தலைக்கு மேல் வேலை தயாராய் இருந்தது அவளுக்கு.

இவ்வாறு ஒன்பது மணி வரை வேலை சரியா இருக்க, அப்பொழுதுதான் மணியை பார்த்து சாப்பிடலாம் என்று வெளியே வந்தாள்.

அதே நேரம் வெளியில் ஜான் இவளுக்காக காத்திருந்தான்.

அவனைக் காணவும் தானாக முகத்தில் சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது பெண் அவளிற்கு.

இருவரும் சேர்ந்து ஒன்றாக கேப்பிட்டேரியாவுக்கு செல்ல, அங்கிருக்கும் மைக்ரோவேவ் ஓவனில் இரண்டு டப்பர்வேர்களை வைத்து சூடு பண்ணி எடுத்து வந்தான் ஜான்.

தன் முன் வைக்கப்பட்ட அந்த டிபன் பாக்ஸை பார்த்தவள் ஜானை நிமிர்ந்து பார்க்க,

“உனக்கு தான் செஞ்சேன் சாப்பிடு”, என்றான் இவன்.

அதை திறந்து பார்க்க, அதில் இவளுக்கு பிடித்த சப்பாத்தியும் பன்னீர் கிரேவியும் இருந்தது.

“நீங்களே செஞ்சீங்களா”, என்றவள் வினவ,

“ம்… சாப்பிடு”, என்று அவனும் சாப்பிட துவங்கினான்.

“செமையா இருக்கு”, என அவள் ரசித்து உண்பதை பார்த்தவனுக்கு அத்தனை மகிழ்ச்சி.

முதல் முறை இதை செய்கிறான். எப்படி செய்ய வேண்டும் என நூறு தடவை அவன் அக்காவை கேட்டு, அதிலும் சில சந்தேகங்கள் வர நூறு முறை யூடியூபில் பார்த்து செய்தான்.

சனி, ஞாயிறு வெளியில் அந்த மெஸ்ஸில் சென்று சாப்பிடும் போதெல்லாம் இவளும் வருவாளோ என்று இவன் எதிர்பார்க்க அவள் வெளியே வரவே இல்லை.

அதைப் பற்றி இப்பொழுது அவன் விசாரிக்க,

அவளின் நினைப்பு இவனை தான் சுற்றி சுற்றி சுழன்று கொண்டிருந்தது. தன்னை தானே பல கேள்விகள் கேட்டு எதற்கும் விடை அறிய முடியாமல் கலைத்து ஓய்ந்து, பெண் எங்கும் செல்லாமல் இருந்த கதை எல்லாம் இவனிடம் எப்படி கூற,

“என்னவோ தெரியல ரொம்ப டயர்டா இருந்துச்சு அதனால அட்ஜஸ்ட் பண்ணி ஹாஸ்டயே சாப்பிட்டு அப்படியே இருந்துட்டேன்”, என்றாள் இவள்.

இவர்கள் இருவரும் சாப்பிட்டு முடிக்கவும், அவனுக்கு கால் வந்தது. அமேசானில் ஒரு பார்சல் ஆர்டர் செய்திருந்தான். ஆபீஸ் அட்ரஸ் கொடுத்திருக்கவே.

இப்பொழுது அது வந்து விட்டது என்று கால் வந்தது. ஆபிஸருக்குள் ஐடி இல்லாமல் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் அங்கு இருக்கும் செக்யூரிட்டிகள். கெஸ்ட் ஆக வருபவர்களுக்கு கூட கெஸ்ட் ஐடி என்று ஒன்று தரப்படும்.

எனவே, இதுபோன்ற ஏதாவது பார்சல் வாங்க வேண்டுமென்றால் கம்பெனியின் மெயின் கேட்டை விட்டு வெளியே சென்று தான் வாங்க வேண்டும்.

இவளிடம் விஷயத்தைக் கூற, அவளும் உடன் வருவதாய் கூற,

சரியென இருவரும் வெளியே சென்றார்கள்.

சிலு சிலுவென காற்று உடலை தழுவ, அந்த நேரம் அந்த குளுமையான காற்று தேவைப்பட்டது பெண்ணிற்கு. கம்பெனியில் பகல் இரவு தெரியாது. அந்த அளவுக்கு ஒளி விளக்குகளால் பகலாய் மாற்றி இருப்பர். காற்றின் இந்த தன்மையை வைத்து தான் அது இரவு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இரவு நேரம் அவனுடன் நடந்து செல்வது மிகவும் பிடித்திருந்தது வைஷ்ணவிக்கு.

அவனின் விரல்களோடு தன் விரல்களைப் இறுக்கமாய் பிடித்து நடைபோட்டால் எப்படி இருக்கும் என்ற, சிறிய கற்பனையும் மனதிற்குள் வந்தது.

‘இப்படி ஆசைகளை உள்ளுக்குள் வைத்து ஏன் மருக வேண்டும்? இருக்கும் குழப்பங்களை அவனிடம் பகிர்ந்து கொள்ளலாமே…’, இப்படியும் அவள் பலமுறை யோசித்ததுண்டு.

ஆனால் அவனைக் கண்டால் அனைத்தும் காணாமல் போய்விடும்.

இவர்கள் இருவரும் அந்த பார்சல் வாங்கி திரும்பி வரும் நேரம்.

அப்பொழுது தான் ஷிப்ட் முடிந்து ஒரு பெண் வெளியே வந்தாள். அந்தப் பெண் இவர்களை தான் நோக்கி வந்தாள்.

இவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் நேரம் “ஒரு நிமிஷம்”, என்று அந்த பெண் இவர்களை நிறுத்தினாள்.

அவள் வைஷ்ணவியை தான் கூப்பிடுகிறாள் என்று இவன் வைஷுவை திரும்பி பார்க்க, அவளோ கண்களில் இது யார்? என்ற கேள்வியுடன் அந்த பெண்ணை பார்த்து இருந்தாள்.

“ஜான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ”, என அந்தப் பெண் சற்று தயங்கி தயங்கி கேட்கவும்.

“ம்…சொல்லுங்க”, என்றான் இவன் இயல்பாய்.

வைஷ்ணவிக்கு என்ன? ஏது? என்று தெரியவில்லை என்றாலும் மனம் ஏதோ ஒரு மாதிரி முரண்டியது.

அந்தப் பெண்ணும் வைஷுவை தயங்கி பார்ப்பதை பார்த்தவள். சற்று நகரப் போக,

அந்தப் பெண்ணே அவளை தடுத்தாள், “நீங்க வைஷ்ணவி தானே”, அந்த பெண் கேட்க,

‘ஆம்’ என இவள் தலையாட்டினாள்.

“நீங்க இருங்க ஒன்னும் பிரச்சனை இல்ல. உங்கள நான் அடிக்கடி இவர் கூட பாப்பேன் நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட் பிரண்ட்ஸ்னு நினைக்கிறேன். சோ நீங்க இருந்தா தப்பு இல்ல.”, என்றாள் வைஷ்ணவியை பார்த்து.

அவள் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் என்று சொல்லவும் ஜானும் வைஷுவும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டார்கள்.

பின் அந்தப் பெண் மெல்ல ஜானிடம், “என் பேரு ஜூலி நான் உங்க ஃப்ளோர் தான் ஆனா எதிர்க்க இருக்க பி கேபின்ல வேலை பார்க்கிறேன்” எனவும்,

‘ஓ அப்படியா’, என அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஜான்.

“உங்கள அடிக்கடி பாப்பேன். முதல்ல எல்லாரும் உங்கள பத்தி சொல்லவும் நானும் பார்த்தேன்… அது எப்படி இப்படி சீரியஸ் ஆச்சுன்னு எனக்கு தெரியல…”

வைஷுவிற்க்கு புரிந்து விட்டது அவள் என்ன கூற வருகிறாள் என்று. அதிர்ச்சியில் தன் கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் ஐடி கார்டை இழுத்துப் பிடித்துக் கொண்டு அங்கு நடப்பதை பார்த்திருந்தாள்.

ஜூலி தொடர்ந்து கூறினாள், “நான்…வந்து…உங்கள”, என்றவள் மிகவும் தடுமாற,

அவளை கையை உயர்த்தி தடுத்து, “நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியுது. பட் ஐ அம் ரியல்லி சாரி. ஐ அம் நாட் இன்ட்ரஸ்டட்.”, என்றான் அந்தப் பெண்ணை காயப்படுத்தி விடக் கூடாது என்ற எண்ணத்துடன்.

பாவம் அந்த பெண்ணின் முகம் கூம்பிவிட்டது. ஒரு புறம் அந்த பெண்ணை பார்க்க கஷ்டமாக இருந்தாலும், மறுபுறம் ஜானின் இந்த பதில் வைஷ்ணவிக்கு மகிழ்ச்சியையே தந்தது.

அந்தப் பெண் அதற்கு மேல் எதுவும் பேசாமல் திரும்பி நடந்து விட்டாள்.

ஜான் வைஷ்ணவியை பார்க்க, அவள் முகம் என்னவென்று தெளிவாக புரியாத ஒரு உணர்வை காட்டியது. அதற்கு மேல் அங்கு அமைதி மட்டுமே நிலவியது.

அங்கிருந்து அவர்களின் ப்ளோர் வந்து ஃலிப்டிலிருந்து இறங்கும் வரை வாய் திறக்கவில்லை. இறங்கிய பின்னும் அவனை ஒரு பார்வை பார்த்து சென்று விட்டாளே தவிர்த்த எதுவும் பேசவில்லை.

ஜானிற்கு சிறிதாய் விளங்கியது அவளின் நிலை. நிச்சயம் அவள் மனதில் அவன் இருக்கிறான் என்பதும் சேர்த்து தான்.

தன்னவனுக்கு தன் முன்பே இன்னொருவள் காதலை கூறி விட்டாளே என்ற கவலை, தன்னுள் அவன் மேல் அவ்வளவு காதல் இருந்தும் தன்னால் அதை வெளிப்படுத்த முடியவில்லை என்ற ஏக்கம்,

இதைப்போல் நான் என் காதலை பகிர்ந்தால் அவன் முகம் என்ன விதமான உணர்வை பிரதிபலிக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆசை, என அனைத்தும் கலந்து அவள் மண்டைக்குள் வலம் வந்து கொண்டிருந்தது.

அது நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அப்பொழுது தெரியவில்லை அந்த தாரகைக்கு.

***

இருவரும் நைட்ஷிப் செல்ல ஆரம்பித்து ஒரு வாரம் முடிந்து இருந்தது.

அன்று மாலை ஆபீசுக்கு கிளம்பினாள். ஒரு இளஞ்சிவப்பும் பச்சையும் கலந்த ஒரு ஷார்ட் குர்த்தி அவளுக்கு ஃபேவரிட்.

அதாவது அந்த உடை போட்டாள், ஏதோ ஒரு மறக்க முடியாத விஷயம் நடக்கும் என்ற நம்பிக்கை. அதை தான் அன்று அணிந்தாள்.

வேண்டும் என்று அவள் அதை அணியவில்லை. ‘என்ன போடலாம்’ என யோசித்த நேரம், அவள் கண்ணில் பட்டது இந்த உடை தான்.

அதை அவள் போட்ட பிறகுதான் இன்னைக்கு நமக்கு ஏதாவது புதுசா விஷயம் காத்துகிட்டு இருக்கா? என சிந்திக்கலானாள்.

அவளின் நம்பிக்கைப்படி இன்று ஏதேனும் மறக்க முடியாத விஷயம் நடக்குமா? அப்படி நடந்தால் அது மகிழ்ச்சி தரக்கூடியதா? இல்லை இருக்கும் மகிழ்ச்சியை பறிக்கக் கூடியதா?

மழைக்காலம் ஆரம்பித்திருந்ததால் நான்கு தினங்களாக மழை விடாமல் பெய்துக் கொண்டிருந்தது. அதுவும் இரவு வேளையில் அதிகமாகவே பெய்ந்தது.

முதல் நாள் அவ்வளவு மழை எதிர்பார்க்காதவள், கேபில் சென்று ஏறுவதற்குள் குடை பிடித்தும் சாரலில் உடை நனைந்திருந்தது.

அதனுடன் அந்த இரவு நேரம் ஏசியில் அமர்ந்து வேலை செய்வதற்குள் நடுங்கி விட்டது.

பின் அங்கு இருக்கும் ஹாண்ட் ஹீட்டரில்(hand heater) தன் துணியை காய வைத்தாள். கைகளிலும் துப்பட்டாவும் தான் அதிகமாக நனைந்து இருந்தது.

அவள் அவ்வாறு நனைந்ததை கண்ட ஜான். மறுநாள் மாற்றுத் துணி ஒன்றுடன் வர சொல்லி இருந்தான்.

முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவள், எதற்கும் இருக்கட்டும் என்று தான் ஒரு மாற்றத்துணி எடுத்து வைத்தது.

ஆனால் அப்படி வைத்தது எவ்வளவு நல்லதாய் போயிற்று என்பது அடுத்த நாள் தான் தெரிந்தது அவளுக்கு.

அடித்த காற்றுக்கும் பெய்த பேய் மழைக்கும் குடை பிடித்தும் பிரயோஜனம் இல்லாமல் தொப்பலாய் நனைந்தாள்.

எனவே, ஆபீஸ் சென்றவுடன் ரெஸ்ட் ரூம் சென்று, அந்த மாற்று உடையை மாற்றிக் கொண்டாள்.

தொடர்ந்து நான்காம் நாள் பெய்த அந்த கனமழை சென்னை நகரத்தையே பாடாய்படுத்தியது.

இருந்த அனைத்து ஏரி, குளங்களும் நிரம்பி விடவே சிறிது சிறி தாய் தண்ணீர் ஊருக்குள் பரவத் தொடங்கியது.

சோழிங்கநல்லூர் எல்காட்டுக்கு எதிரில் ஒரு ஏரி இருந்தது அதிலும் தண்ணீர் நிரம்பி எல்காட் ஆபிஸ்க்குள் புகுந்து விட்டது.

வேலை செய்து கொண்டிருக்கும் எம்பிளாயிஸ் அனைவருக்கும் அறிவிப்பு வந்தது.

ஆபீசிற்குள் வெள்ள நீர் வருகிறது. முழுதாய் வெள்ள நீரில் புகுவதற்குள் அனைவரும் வெளியேறும்படி உரைத்தது அந்த அறிவிப்பு.

அந்த இடம் முழுவதுமே பரபரப்பு சூழ்ந்தது. அனைவரும் பதறி அடித்துக் கொண்டு வெளியில் வந்தார்கள்.

இவர்கள் வேலை செய்யும் ஆபீஸ் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே சொந்த பிளான்ட் மூலம் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அதுவும் அருகிலேயே தான் இருந்தது. அதிலும் வெள்ள நீர் புகுந்து நாசப்படுத்த, சிறிது சிறிதாக மின்சார இணைப்பு சென்றது.

இருள் சூழ்ந்து வெள்ள நீரோடு சேர்ந்து அனைவரும் தத்தளித்து கொண்டிருந்த நேரத்தில், ஜான் மும்முறமாக தன் மொபைல் வெளிச்சத்தில் வைஷ்ணவியை தேடிக்கொண்டு வந்தான்.

அவளின் ஃப்ளோரில் அவள் இல்லை. அவள் மட்டுமல்ல அப்பொழுது அங்கு யாருமே இல்லை அனைவருமே கீழே சென்று இருந்தார்கள்.

இவன் கீழே சென்று பார்த்துவிட்டு தான் வந்திருந்தான். கீழேயும் அவள் இல்லை அவளின் ஃப்ளோரிலும் இல்லை. எங்கே தான் போனாள் அவளுக்கு என்ன ஆயிற்று? தைரியத்தை இழக்கக்கூடாது என்று எங்கெங்கோ சென்று தேடினான்? அதுவரை தைரியமாக இருந்தவன் சிறிது சிறிதாக தன் தைரியத்தை இழக்க துவங்கினான். அவன் வாய் ‘நவி எங்க இருக்க நீ? என்ன ஆச்சு உனக்கு?’ என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஜானின் நவிக்கு என்ன ஆனது? அவள் எங்கே போனாள்?

லேவியின் நவி காதல் தொடரும்…

 

 

error: Content is protected !!