⛪️லேவியின் நவி அவள்🛕

IMG_20230201_214732

⛪️லேவியின் நவி அவள்🛕

⛪️லேவியின் நவி அவள்🛕

லேவியின் நவி – 1

காதல் காற்றைப் போல அனைவருக்கும் சொந்தமானது காற்றுக்கு தனியா ‘மதம், இனம், ஜாதி’ என்று இருக்கிறதா என்ன? அதைப்போல தான் காதலும் இது எதையுமே பார்க்காது…..

பூமியை குளுமையாக்கி அனைத்து உயிர்களுக்கும் ஓய்வை கொடுக்கும் சந்திரன் மறைந்து, வெய்யோன் தன் ஆட்சியை துவங்க வந்திருந்தான்.

முதலில் சிறிது சிறிதாக தன் செந்நிற கதிர்களை பரப்பியவன், இப்பொழுது எட்டு மணி அளவில் மிதமாய் சுட்டெரிக்கத் துவங்கி இருந்தான்.

சென்னையின் புறநகர் பகுதி அது.

புறநகர் பகுதி என்று சொன்னாலும் அந்த சென்னைக்கு இருக்கும் பரபரப்புகள் எதற்கும் சிறிதும் குறையாமல், காலை நேரத்தில் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது குரோம்பேட்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் வேலைக்கு செல்லபவர்கள், வாக்கிங் செல்ல வந்த முதியவர்கள், இப்படி பலதரப்பட்ட மக்கள் பஸ் ஸ்டாப்பிலும் அதை தாண்டி இருக்கும் பிரிட்ஜ் மூலம் ரயில் நிலையம் செல்பவர்களும் என கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

‘இப்படி பஸ் மற்றும் ரயில்களில் வழியும் கூட்ட நெரிசலில் என்னால் செல்ல முடியாது’ என்று நினைப்பவர்களுக்கும் வழியாய் அமைந்தது அங்கிருக்கும் ஷேர் ஆட்டோக்கள்.

பஸ் ஸ்டாபின் அருகே இருக்கும் ராகவேந்திரா நகரில் அமைந்திருந்தது அவனின் வீடு. வீடு என்றால் அவன் குடும்பத்துடன் வசிக்கும் வீடல்ல.

வேலை செய்வதற்காக மட்டுமே இவன் உட்பட நான்கு இளைஞர்களுடன் சேர்ந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். அனைவருமே வெவ்வேறு ஆபீஸில் வேலை பார்ப்பவர்கள்.

காலை விழித்தவன் படுக்கையில் இருந்தபடியே, ‘தன் வலக்கையை தூக்கி நெற்றியில் வைத்து அதை அப்படியே கீழே இறக்கி நெஞ்சில் வைத்து, பின் முதலில் தன் இடது பக்கம் அதன் பின் தன் வலது பக்கம்’ என தூய ‘சிலுவை’ முத்திரையை போட்டான்.

 “மற்றும் ஒரு புதிய நாளை எனக்கு அருளியதற்கு நன்றி இறைவா…இந்த நாளில் எந்த குற்றமும், எந்த பாவமும் செய்யாமல் இருக்க…எனக்கு உமது அருட்கொடையை அருளும் இறைவா…” என ஜெபித்தான் ஜான் லேவி நம் கதையின் நாயகன்.

இது தினம் அவன் காலை எழுந்ததும் செய்யும் வழக்கம். இது அவன் தந்தையின் வழி நடத்துதலால் வந்தது, சிறு வயதிலிருந்தே ‘காலை எழுந்தவுடன் அந்த நாளை நமக்கு அளித்த இறைவனுக்கு நன்றி உரைக்க வேண்டும்’, என்று கூறுவார்.

பள்ளி, கல்லூரி முடித்து, இதோ வேலை செய்து கொண்டிருக்கும் வயதில் கூட, அதை அவன் கடைப்பிடித்து வந்தான்.

எப்பொழுதும் வீட்டில் மாவு இருக்கும். காலையும் இரவும் தோசை அல்லது இட்லி என்று ஊற்றி, அதற்கு தொட்டுக்கொள்ள சிம்பிளான ஒரு சட்னி அரைத்துக் கொள்வார்கள்.

மதியம் ஒருவேளை மட்டும் ஆபீஸில் பார்த்துக் கொள்வார்கள்.

அனைவருமே ஷிப்ட் படி வேலை செய்பவர்கள் தான்.

அவன் காலை எழும்பும்போது அங்கு யாரும் இல்லை. இருவருக்கு நைட் ஷிப்ட் முடிந்து, இன்னும் அவர்கள் வீடு திரும்பியிருக்கவில்லை மற்றும் ஒருவனுக்கு விடியற்காலை ரெண்டு மணிக்கு ஷிப்ட் அதனால் அவன் கிளம்பி விட்டான்.

இவனுக்கு காலை பத்து மணி ஷிப்ட் என்பதால் எட்டு மணிக்கு பொறுமையாய் எழுந்து, காலைக்கடன்கள் அனைத்தும் விரைவாய் முடித்து, தோசை ஊற்றி தேங்காய் சட்னி அரைத்து சாப்பிட்டான்.

எப்பொழுதுமே கொஞ்ச நேரம் முன்னே கிளம்பி விடுவான். அறக்க பறக்க கிளம்புவது அவனுக்கு பிடிக்காது.

தன் பையில் என்னென்ன எடுக்க வேண்டுமோ அனைத்தும் இருக்கிறதா என்று எப்பொழுதுமே செக் செய்து கொள்வான். இதுவரை இதை மறந்து வைத்து விட்டேனே என்று அவன் புலம்பியதில்லை. அவன் பேகை செக் செய்து கொண்டிருக்கட்டும் நேரம் நாம் அவனைப் பற்றி பார்க்கலாம்.

அவனின் இந்த பழக்கவழக்கங்களுக்கு காரணம் அவன் பெற்றோர்கள்.

அவர்கள் வீடு ஒரு மிலிட்டரி கேம்ப் போன்றது. அவனின் அம்மா பெர்னத் தான் அதில் கேப்டன்.

ஒரு பொருள் எடுக்கிறீர்களா, அதை எங்கே எடுக்கிறார்களோ அங்கேயே வைத்து விட வேண்டும்.

எந்த ஒரு இடத்திற்கு கிளம்பினாலும் டயத்துக்கு கிளம்ப வேண்டும் நம்மளால் லேட் என்று யாரும் சொல்லி விடக்கூடாது.

அவ்வளவு ஏன் சாப்பாட்டு விஷயத்திலும் அப்படித்தான் சாப்பாட்டை வேஸ்ட் செய்ய கூடாது. அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கேட்டாலும் கிடைக்காது. அனைத்தும் அளவு தான்.

சாப்பிட்ட தட்டை அவர்களே எடுத்துக் கொண்டு போய் கழுவி வைக்க வேண்டும்.

அதேபோல்தான் ஒரு இடத்திற்கு கிளம்ப போகிறோம் என்றால் அங்கு செல்ல என்னென்ன வேண்டும் என்று தாங்களே பார்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அனைத்துமே மிலிட்டரி ரூல்ஸ் தான்.

அவன் அப்பா டேவிட் பக்தி விஷயத்தில் ஸ்ட்ரெட். தவறாமல் ஞாயிறு தோறும் சர்ச்சுக்கு செல்ல வேண்டும். ‘ஈஸ்டர், கிறிஸ்மஸ், புது வருடம்’, போன்று வருஷத்தில் வரும் விசேஷங்கள் போது தவறாமல் இரவு மாஸ் அட்டென்ட் செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்ல தினம் தோறும் வீட்டில் சாயந்திர நேரத்தில் குடும்ப ஜெபம் நடக்கும். அதில் தவறாமல் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

தங்கள் வீட்டில் இருந்தபோது பக்தி விஷயத்தை சரியா கடைப்பிடித்தவன், வெளியே தங்க வந்த பிறகு அதை கடைப்பிடிப்பதில்ல. காலை எழுந்ததும் சொல்லும் ஒரு ஜெபத்தை தவிர.

காரணம் அவனுக்கு பக்தி இல்லை என்று நாம் நினைத்தால் அதுதான் கிடையாது. அங்கே சென்று வேண்டினால் தான் கடவுள் அருள்வார் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. கடவுள் எங்கும் நிறைந்து இருப்பவர் நான் அவரை சர்ச் சென்று தான் பார்க்க வேண்டுமா? என்ற எண்ணம்.

ஆனால் இது எல்லாம் அவன் அப்பாவிடம் சொல்ல முடியாது. எனவே, ஊருக்கு சென்றாள் அதற்கேற்றார் போல் நடந்து கொள்வான்.

தன் குடும்பத்தை விட்டு தூரம் தள்ளி இருந்தாலும் தன் தாய் தந்தை சொல்லிக் கொடுத்த எதையும் இவனால் மறக்க முடியாது.

சும்மாவா இருபத்தி ஐந்து ஆண்டுகளாக பழகிய ஒரு விஷயம் ஆயிற்றே. இப்போது அவன் தாய் தந்தை இருப்பது அங்கிருந்து ஒரு ரெண்டு மணி நேர பயணத்தில் இருக்கும் மரக்காணம்.

பனிரெண்டாவது வரை அவன் வீட்டில் தான் தங்கி படித்தான். அதன்பின் காலேஜ்க்காக சென்னை வந்தவன், குரோம்பேட்டில் ரயில் நிலையத்துக்கு அருகே இருக்கும் எம்.ஐ.டியில் தான் நான்கு வருடம் பி.இ மெக்கட்ரானிக்ஸ் மற்றும் இரண்டு வருடம் எம்.இ மெக்கட்ரானிக்ஸ் முடித்தான்.

படிப்பு முடிந்த உடன் சோழிங்கநல்லூரில் இருக்கும் எல்காட் பகுதியினுள் ஒரு பிரபலமான கம்பெனியில் டெவலப்பிங் இன்ஜினியராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இந்த வேலையில் அவன் சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அதற்குள் வேலையில் கெட்டி என்று அனைவரிடத்திலும் நல்ல பெயர் வாங்கி இருந்தான்.

அவன் அம்மாவின் பயிற்சி சிறுபிள்ளையில் அவனுக்கு ‘வேப்பங்காயாய் கசந்தாலும்’ இப்பொழுது ‘வெண்ணிலா ஐஸ்கிரீம்’ போல் இனிக்கிறது.

அதுமட்டுமல்ல, அவன் அப்பா ஒரு டீட்டோடலர். அவரைப் பார்த்து வளர்ந்ததினாலோ, இல்லை அவர்களின் ஒரு கோட்டுக்குள் வளர்ந்ததாலோ என்னவோ, இவனுக்கும் எவ்விதமான கெட்ட பழக்கமும் வரவில்லை.

இவன் தங்கி இருக்கும் இடத்தில் மற்ற பசங்கள் தண்ணி அடிக்க, தம்மடிக்க இவனை அழைத்தாலும் போக மாட்டான்.

‘இதெல்லாம் கூட டேஸ்ட் பண்ணி பார்க்கலைன்னா, அப்புறம் என்ன நீ ஒரு ஆண் பிள்ளை’, என பலர் கிண்டல் அடித்தாலும் ஒரு முடிவு எடுத்தால் அதில் தெளிவாக இருப்பவன் ‘நான் குடிக்க மாட்டேன் நீங்க என்ன வேணா சொல்லிட்டு போங்க, அதனால எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல’ என்று அந்த இடத்தை விட்டு சென்று விடுவான்.

அவனுக்கு கேப் (cab) ஒன்பது மணிக்கு எனவே, எட்டு ஐம்பது மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விட்டான்.

ஷிப்ட் பத்து மணிக்கு என்றாலும் இப்பொழுது கேப் ஏறினால் தான் மீது இருப்பவரையும் பிக்கப் செய்து கொண்டு செல்ல முடியும் அந்த கேப் டிரைவரால்.

இவன் ஏரியாவில் இவன் மட்டும் தான் கேபில் ஏறுவான். அங்கே அருகில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸில் தான் எப்பொழுதும் டிரைவர் வண்டியை போட்டிருப்பார் இவன் அங்கே சென்று ஏறிக்கொள்வான்.

அப்படி ஏறலாம் என்று சென்று கொண்டு இருந்தவனின் கண்ணில் பட்டாள் அந்தப் பெண்.

அவன் தெருவுக்கு நேர் எதிர் தெரு முனையில், ஒரு லேடிஸ் ஹாஸ்டல் உள்ளது.

அந்த ஹாஸ்டலிருந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.

எப்பொழுதும் அங்கே பெண்கள் வந்துக்கொண்டும், போய்க்கொண்டும் இருப்பார்கள் தான். இதுவரை யாரையும் நிமிர்ந்து பார்த்ததில்லை இவன்.

ஆனால் இவள் என்னை பார் என்று இவனை ஈர்ப்பது போல் இருந்தாள்.

கடல் நீல நிற சுடிதாரில் ஆங்காங்கே கரு நீல நிற பூக்கள் இருக்க, அதற்கு ஏற்றார்போல கரு நீல நிற பேண்டும் ஷாலும் அணிந்து கடல் தேவதையாய் இருந்தாள் அவள்.

வெளியே வந்தவள் அந்த ஹாஸ்டல் வாசலில் இருக்கும், சின்ன பிள்ளையார் கோவிலில் நின்று வேண்டிக் கொண்டிருந்தாள்.

அதை நின்று பார்த்துக் கொண்டிருந்தான் ஜான் லேவி.

அதன்பின், வேக நடையிட்டாள் அவள் செல்லவும் தான் ‘ஏன் இவ்வாறு ஒரு பெண்ணை பார்த்து நின்று விட்டோம்?’ என்று தன் தலையில் அடித்துக் கொண்டு இவனும் வேக நடையிட்டு கேப் இருக்கும் இடம் நோக்கி சென்றான்.

அங்கே பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த அதே பெண். அவளின் மையிட்ட அந்த பெரிய விழியாள் தன் கையில் இருக்கும் மொபைலை பார்ப்பதும், எதிரே சாலையை பார்ப்பதுமாக இருந்தாள் வைஷ்ணவி நம் கதையின் நாயகி.

இயற்கையாய் சிவந்த அந்த ரோஜா இதழ்கள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. நெற்றியில் சிறு கீற்றாய் விபூதியும் அதன் கீழ் குங்குமமும் வைத்திருந்தாள்.

அடிக்கடி நகத்தை வேறு கடித்துக் கொண்டிருந்தாள். அது போதாது என்று இடை வரை நீண்டிருந்த, தன் பின்னலில் பேண்ட் போட்ட இடத்திற்கு கீழ் தொங்க விட்டிருந்த கொஞ்ச முடியை கைகளில் எடுத்து சுழற்றிக் கொண்டே இருந்தாள்.

ஏதோ டென்ஷனாய் இருப்பதாய் பட்டது இவனுக்கு.

அவளைத் தாண்டி தான் கேப்பிற்கு செல்ல வேண்டும் அவன். ஆனால் கடந்து செல்ல மனம் ஏனோ மறுத்தது.

‘அவளுக்கு என்ன வேண்டும் என்று கேள்’, என அவன் மனம் அவனை உந்த. ‘புதிதாய் பார்த்த பெண்ணிடம் எப்படி பேசுவது’ என்று அமைதி காத்து, அவள் அருகே சென்று நின்றான்.

இவன் போக வேண்டிய கேப் டிரைவர் தூரத்தில் நின்று கொண்டிருப்பது இவன் கண்ணில் பட்டாலும், அங்கே போகாமல் எதோ பஸ்ஸுக்கு எதிர்பார்ப்பவன் போல் ‘பஸ் வருகிறதா’ என்று எட்டி எட்டி பார்ப்பது போல் இவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

இவளோ சுற்றி இருக்கும் எதையும் யாரையும் கவனிக்கவில்லை. அவள் கவனம் முழுதும் அவள் கைபேசியிலும், ரோட்டிலும் மட்டுமே இருந்தது.

இவ்வாறு அவன் அவளை பார்த்துக் கொண்டிருந்த நேரம் அவன் கண்ணில் பட்டது, அவள் பையில் இருந்து எடுத்த அந்த பொருள். அதைப் பார்க்கவும் இவன் கண்கள் பளிச்சிட அவளை நெருங்கினான்.

நெருங்கியது மட்டுமின்றி பேசவும் செய்தான். அப்படி அவன் எதை கண்டான்? அவளிடம் என்ன பேசினான்?

ஜான் லேவி, வைஷ்ணவி இரு வேறுபட்ட மதத்தை சார்ந்தவர்கள். இவர்களுக்குள் காதல் மலர்ந்தால்? இந்த கேள்விக்கான விடையை போகப் போக கதையில் தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!