⛪️லேவியின் நவி அவள்🛕

IMG_20230201_214732

⛪️லேவியின் நவி அவள்🛕

லேவியின் நவி 3

உனக்கும் எனக்கும் பல முரண்பாடுகள் இருக்கின்றன… இருந்தும் உன்னிடம் வரும் இந்த ஈர்ப்புக்கு காரணம் என்ன?ஒருவேளை இதைதான் சொல்வார்களோ எதிர்மறைத் துருவம் ஒன்றையொன்று ஈர்க்கும் என்று!

அங்கே கதவுகள் அனைத்திற்கும் அக்ஸஸ் லாக் பொருத்தப்பட்டிருக்கும். அதற்கென பிரத்தியேகமாய் உருவாக்கிய அந்த அக்ஸஸ் கார்டை காட்டினால் மட்டும் தான் அந்த கதவை திறக்க முடியும்.

எனவே உள்ளே எப்படி செல்வது என இவள் தவித்துக் கொண்டிருந்த நேரம் ஒருவர் வந்தார்.

அவளை நெருங்கி “வைஷ்ணவி நியூ ஜாயினி”, என வினவ,

“எஸ் சார் திஸ் இஸ் வைஷ்ணவி.” என்றாள்.

உடனே முகத்தில் புன்னகையை பூசிக் கொண்டவர். அவரின் அக்ஸஸ் கார்டை பயன்படுத்தி இவளையும் உள்ளே அழைத்து சென்றார்.

பினான்ஸ் டிபார்ட்மெண்டில் பல பிரிவுகள் இருக்கின்றன சேலரி அக்கவுண்ட், ஆடிட்டிங், பட்ஜெட்டின், பினான்சியல் அக்கௌன்ட், காஸ்ட் அக்கௌன்ட், கிரெடிட் கலெக்டிங், கேஷ் கலெக்டிங் இப்படி பல.

முதலில் அங்கே மீட்டிங்க்கு என பிரத்யேகமாக இருந்த ஒரு தனி மீட்டிங் அறையில் இவளுக்கு சிறிதாய் ஒரு வெல்கம் பார்ட்டி போன்று ரெடி செய்திருந்தார்கள்.

அதில் அனைவரும் இவளிடம் அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, இவளைப் பற்றிய இவள் அறிமுகத்தையும் கேட்டுக் கொண்டார்கள்.

அதன்பின் அனைவரும் வெளியேற, மேனேஜர், ப்ராஜெக்ட் மேனேஜர், டீம் லீடர் போன்ற பெரிய தலைகள் மட்டும் உள்ளே இருந்தார்கள். அந்த மேனேஜர் தான் அவள் வெளியே இருக்கும் பொழுது உள்ளே அழைத்து வந்தது.

இவளை எந்த டீமில் போட்டிருக்கிறார்கள், அதில் அவள் என்னென்ன செய்ய வேண்டும், அவளுக்கு யார் மென்டராக (முதலில் நமக்கு வேலை பழகி கொடுப்பவர்) செயல்பட போகிறார்கள் என்பன போன்ற தகவல்கள் அவளுக்கு அளிக்கப்பட்டது.

அவளை கிரெடிட் கலெக்டிங் டிபார்ட்மெண்டில் தான் போட்டிருந்தார்கள்.

அந்த டிபார்ட்மெண்டிலிருந்த ஒரு கணினி முன் அவள் சென்று அமர்ந்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் பாக்யா என்ற ஒரு பெண் அங்கே வந்தாள்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “நான் தான் உங்க மென்டர்”, எனக் கூறினாள்.

முதல் நாள் என்பதால் வெல்கம் பார்ட்டி, அதன்பின் நடந்த ஒரு சிறு மீட்டிங், அவளுக்கென்று கணினி ஒதுக்குவது, அவளுக்கான லாகின் ஐடி பெறுவது இப்படியே காலை வேலை கழிந்தது.

மதிய உணவை அங்கிருக்கும் கேப்பிட்டேரியாவில் எடுத்துக்கொள்வார்கள் என்று பாக்யா கூறியிருந்தாள்.

அவளே கேப்பிட்டேரியாவுக்கு இவளை அழைத்துக்கொண்டு சென்றாள். அதன் பின் அவளுக்கென்று காத்திருந்த ஒரு கேங்கில் அவள் சென்று சேர்ந்து கொள்ள, இவள் அங்கிருந்த ஒரு டேபிளில் தனியாய் சென்று அமர்ந்தாள்.

சிறிது நேரத்தில் அவள் அருகில் யாரோ வந்து அமர்வது தெரிய, தலையை நிமிர்த்தி பார்த்தாள். காலையில் இவளுடன் கேபில் வந்தவன் என்பது தெரிந்தது.

ஜான் இவளை பார்த்து சிரிக்க, அவளும் பதிலுக்கு சிரித்தாள்.

“என்ன வைஷ்ணவி ஃபர்ஸ்ட் டே எப்படி போகுது”, என சகஜமாய் அவன் பேச்சை தொடங்க,

யாரும் இல்லாமல் தனிமையிலிருந்தவளுக்கு இவனே வந்து பேசவும் ஒரு மாதிரி நிம்மதியாய் தான் இருந்தது பெண்ணிற்கு.

அவளும் சகஜமாய் உரையாட துவங்கினாள்.

“ம்… நல்லா போகுது பெருசா ஏதுமில்ல ஜஸ்ட் வெல்கம் பார்ட்டி, மீட்டிங் அப்படி இப்படின்னு போகுது.”

“லாகின் ஐடி வாங்கி கொடுத்துட்டாங்களா?”

“இன்னுமில்ல இப்பதான் மெயில் போட்டு இருக்காங்க”

“ஓகே ஓகே”

“நீங்க…” என மெதுவாய் அவனை பற்றி விசாரித்தாள்.

“நான் ஜான்…ஜான் லேவி இங்கே டெவலப்பிங் இன்ஜினியரா இருக்கேன். வேலைக்கு சேர்ந்து ஒன் இயர் ஆகுது”.

பேசிக்கொண்டே இவன் சாப்பிட, அவள் மட்டும் சாப்பாட்டை அளந்துக் கொண்டிருந்தாள்.

அதைக் கவனித்தவன், “என்னாச்சு ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கலையா?”.

“நான் ஹாஸ்டலில் இருந்து வரேனு உங்களுக்கு எப்படி தெரியும்”

உங்க ஹாஸ்டலுக்கு நேர் எதிர் இருக்க தெருவுலதான் தங்க எடுத்திருக்க வீடு இருக்கு”

“ஓ! அப்போ உங்க பேமிலி”

“எல்லாமே சொல்றேன். முதல்ல ஏன் சாப்பாடு அளந்துட்டு இருக்கீங்க பிடிக்கலையா?”, என மீண்டும் வினவ,

“ம்…. எனக்கு மீல் மேக்கர் பிடிக்காது. என்னவோ அதை பார்த்தா நான் வெஜ் பார்க்கிற மாதிரியே ஒரு ஃபீல்.”

“அப்போ நீங்க நான் வெஜ் சாப்பிட மாட்டீங்களா!”

“ஆமா வீட்ல யாரும் சாப்பிட மாட்டோம்”

அவளிடம் “ஓ…!” என்றவன் மனதிற்குள் ‘வெச்சான் பார் கடவுள் எனக்கு ஆப்பு’ என புலம்பினான். ஏனென்றால் அவனால் நான் வெஜ் இல்லாமல் இருக்க முடியாது.

“இப் யு டோன்ட் மைட் நான் வாங்குன சாப்பாடு சாப்பிடுறீங்களா” என இத்தனை நாள் நான்வெஜ் சாப்பிட்டு சாப்பிட்டு அழித்துவிட்டது என அதிசயமா இன்று வாங்கிய, வெஜ் மினி மீல்ஸ்சை அவளிடம் நீட்டினான்.

முதலில் சிறிது தயங்கினாலும் காலையில் சாப்பிட்ட அந்த இரண்டு இட்லி எங்கோ காணாமல் போயிருக்க பசி வயிற்றை கிள்ள, அதை வாங்கி மடமடவென உண்டாள்.

அதை அவன் கனிவாய் பார்த்துக் கொண்டிருக்க, தண்ணீர் குடிக்க நிமிந்தவள் அவன் பார்வையை கண்டு, “சாரி ரொம்ப பசி அதான்…” என்றாள் தயக்கமாக,

“ஒன்னும் பிரச்சனை இல்ல சாப்பிடுங்க, அப்படியே உங்களோட அந்த மீல் மேக்கர் குழம்பு கொடுத்தீங்கன்னா நானும் கொஞ்சம் சாப்பிட்டுபேன்.”

இப்படி அவன் கூறவும் மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டு, “சாரி சாரி இந்தாங்க” என அவள் எடுத்து வந்த டிபன் பாக்ஸை அவன் புறம் நகரத்தினாள்.

இப்படியே இருவரும் அவரவர் குடும்பம், அவரவர் ஊர், என அனைத்தையும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.

அதிலிருந்து அவள் தெரிந்து கொண்டது அவன் தாய், தந்தை மட்டுமல்லாது அவனுக்கு மார்ட்டினா என்ற தமக்கையும் இருப்பது தான்.

இருவரும் உண்டு முடித்து அவர்களின் பிளாக்குக்கு சென்றார்கள்.

போகும் வழியில் ஒரு செயற்கை குளம் இருந்தது. அதை குளம் என்று சொல்வதை விட, சிறிய ஏரி என்று சொல்லலாம் அந்த அளவு பெரிய பரப்பளவில் உருவாக்கி இருந்தார்கள்.

அதில் வெண்நாரைகள், அன்னபக்ஷிகள் நீரில் நுரை மிதப்பது போல் சுற்றி சுற்றி வர, தாமரை, அல்லி போன்ற நீர் மலர்களும் இருந்தன. அதன் ஓரம் மூங்கில், நாணல்கள் வேறு அரணாய் அமைத்திருந்தனர், பார்ப்பதற்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக இதமாய் இருந்தது.

அவள் அதை ஆர்வமாய் பார்ப்பதைக் கண்டு அங்கே அழைத்து சென்றான்.

“உனக்கு இந்த இடம் ரொம்ப புடிச்சிருக்கு போல”, என கேட்டவன் சட்டென்று, “சாரி, நீ வா போன்னு கூப்பிடலாம் தானே?”.

நீங்க, வாங்க, போங்க என பேசுவது, அவளை மிகவும் தூரமாக வைத்திருப்பது போல் தோன்றியது அவனுக்கு.

“ம்… எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆமா ரொம்ப புடிச்சிருக்கு பாக்கறதுக்கே கண்ணுக்கு நல்லா குளிர்ச்சியா இருக்கு. எப்படி கம்பெனிக்குள்ள இந்த மாதிரி ஒரு குளம்?”

இவளும் முன்பிருந்தே பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள். கஷ்டப்பட்டு அவன் மரியாதை கொடுத்து பேசுவதை.

“நம்ம கம்பெனியே உருவாக்குனது தான். நம்பல வெச்சி செய்றாங்கல…சிஸ்டம பார்த்து பார்த்து கண்ணு வலிச்சு ஓஞ்சு போய் வர எம்ப்ளாயீஸ்க்கு கொஞ்ச நேரமாச்சு கண்ணுக்கு இது மாதிரி இதமான காட்சிகளை பார்க்கட்டும்னு தான்”

மேலும் தொடர்ந்து, “இப்ப ஈ அடிக்குதுல்ல ஈவினிங் டைம்ல நிறைய பேர் இருப்பாங்க.”

“ஓ!”

“மோஸ்ட்லி இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே இல்ல, உனக்கு சீக்கிரமா முடிஞ்சுரும். எனக்கும் வொர்க் கிட்டத்தட்ட முடிய போகுது. நமக்கு ஆறு முப்பதுக்கு கேப். ஒரு சிக்ஸ் ஓ கிளாக் எல்லாம் வந்துட்டேன்னா ஹாப் இன் ஹவர் இங்க ஸ்பென்ட் பண்ணிட்டு போகலாம். ஈவினிங் செம்மையா இருக்கும்”

அவளுக்கும் அங்கிருப்பது பிடித்திருந்தது. எனவே அவன் கேட்டதற்கு ‘சரி’ என்று தலையாட்டினாள்.

அதன்பின் இருவரும் அவர்கள் பிளாக்யை நெருங்கி லிஃப்டுக்காக காத்திருந்த நேரம் பாக்யா வந்தாள்.

“சாப்டியா வைஷு?”, என அவள் வினவ.

பாக்கி அனைவரிடமும் சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம். எனவே அதற்குள் வைஷ்ணவியை வைஷு ஆக்கிவிட்டாள்.

“ம்… சாப்டங்க நீங்க?”

“ம்…ஆச்சு”

லிஃப்ட் ஓபன் ஆகவும் மூவரும் ஏறிக்கொண்டார்கள்.

மூறாவது மாடியில் லிஃப்ட் நிற்கவும், பாக்கியாவும் வைஷுவும் இறங்கி செல்ல, ஜான் அவன் தளம் நோக்கிச் சென்றான்.

லிஃப்ட் முடியது தான் தாமதம் “ஏய்! உனக்கு எப்படி ஜான தெரியும்.” என பரபரத்தாள் பாக்யா.

“அவரு நான் இருக்க ஏரியால தான் இருக்காரு. இன்னைக்கு தான் மீட் பண்ணனேன். அவர்தான் எனக்கு கேப் கிடைக்க, அப்புறம் பிளாக் கண்டுபிடிக்கலாம் ஹெல்ப் பண்ணாரு.”

“நீ போய் பேசின உடனே ஜான் திருப்பி பேசிட்டாரா?”

“நான் போய் பேசல. அவர்தான் வந்து ஹெல்ப் பண்ணாரு”

“நெஜமாவா சொல்ற”, என அவள் ஏகத்துக்கும் ஆச்சரியம் கொண்டாள்.

அதன்பின் பெரிய தலைகள் வர அமைதியாய் இருவரும் உள்ளே சென்று விட்டார்கள்.

பாக்யா அவளுக்கு மென்டர் என்பதால் பாக்யாவின் அருகில் அமர்ந்து, அவள் செய்யும் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

சில நேரத்திற்கெல்லாம் மீட்டிங் என்று அவர்களின் பின்புறமிருந்த டீம் சென்று விட்டார்கள்.

இவர்கள் புறம் அந்த டீமும் இவர்கள் டீமும் தான் இவர்கள் டீமிலிருந்த தலைகளும் அந்த மீட்டிங்கு சென்று விட்டனர்.

வைஷுவின் டீமில் வைஷ்ணவியுடன் சேர்த்து ஆறு பேர் இருந்தார்கள். அதில் இரண்டு ஆண்கள், அவர்கள் முன்னே அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

தேவி, இவள், பாக்யா என மூன்று பெண்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரு டீம் லீடர் இருந்தார்.

தேவி, பாக்யா இருவரும் முன்பின் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த நிலையில், பின் கேபினிலிருந்தவர்கள் சென்றுவிடவே தேவி பாக்யாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

இது எப்பொழுதும் நடப்பது தான் அவர்கள் வேலை முடிந்து விட்டால் ஏதேனும் கதை பேசிக் கொண்டிருப்பது யாரும் இல்லாத போது தான்.

யாராவது இருந்தால் ‘இவர்கள் டீம் வேலை செய்யவில்லை’ என்று தேவையில்லாமல் ஏதாவது பிரச்சனையை கிளப்பி விடுவர்.

தேவி வந்து அமர்ந்தவுடன் ஏதோ பெரும் ரகசியத்தை கூறுவது போல் “ஏய்! வைஷு ஜான் கிட்ட பேசிட்டு இருந்தாடி.”

“என்னடி சொல்ற? வைஷு நெஜமாவா?” என அவளும் பாக்யாவின் ரியாக்சனோடு வினவ,

‘அவர் கிட்ட பேசினது அவ்ளோ பெரிய விஷயமா ஏன் இவங்க ரெண்டு பேரும் இப்படி ரியாக்ஷன் கொடுக்குறாங்க’, என்ன மனதில் நினைத்து வெளியில் ‘ஆம்’ என்று தலையாட்டினாள்.

“நீ பெரிய ஆளு வைஷு”, என தேவி அவளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க.

இவளுக்குத்தான் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.

அவள் அவ்வாறு முழித்துக் கொண்டிருப்பதை பார்த்த பாக்கியா.

“எனக்கும் தேவிக்கும் சைட் அடிக்கறது ரொம்ப பிடிக்கும். எங்களோட ரீசன்ட் கிரஷ் ஜான் தான்.”

“எங்களுக்கு மட்டும் இல்ல நம்ப ப்ளார்ல இருக்க கேர்ள்ஸ் நிறைய பேருக்கு ஜான்னா ரொம்ப பிடிக்கும்.”

“அதான் காஸ்ட் அக்கௌன்ட் டீம்ல ஒரு பொண்ணு எப்படியும் அவனை என்னிடம் பேச வச்சு காட்டுறேன் பாருன்னு சவால் விட்டா.”

கதை கேட்கும் ஆர்வத்தில், “அப்புறம் என்ன ஆச்சு” என்று கேட்டாள் வைஷு.

“எங்கே ஜான் அவளை கிட்ட நெருங்க விட்டா தானே, அவ மட்டுமில்ல இதுவரையிலும் அவன் எந்த பொண்ணு கிட்டயும் நின்னு பேசி நாங்க பார்த்தது கிடையாது.”

“ஓ!”

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த நேரம் திடீரென அவர்கள் டீம் லீடர் வர அவசரமாக அவர்கள் கூட்டணியை கலைத்து, மீண்டும் வேலையில் ஈடுபட்டார்கள்.

பாக்யா சொன்னது போல் இவர்கள் ப்ளோரில் மட்டுமல்ல ஜானுடைய ப்ளோரிலுமே பலர் அவனை நெருங்க முயற்சித்து இருக்கிறார்கள். ஆனாலும் யாரையும் நெருங்கி விட்டதில்லை. அதற்காக பெண்களிடம் பேசவே மாட்டான் என்று கூற முடியாது.

வேலை சம்பந்தமாக, அல்லது ஏதேனும் அவசியம் நேர்ந்தால் பேசுவான். மற்றபடி தள்ளியே தான் இருப்பான்.

அப்படி இருப்பவன் வைஷுவிடம் மட்டும் வலிய சென்று பேசி உதவியது ஏன்?

மாலை அவன் சொன்னார் போன்று சிறிது நேரம் முன்னதாகவே வந்தான். அதே நேரம் அவளும் கீழே செல்ல லிஃப்ட் இருக்காய் காத்திருக்க, திறந்த அந்த லிஃப்ட்டுக்குள் இவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான் ஜான்.

“ஷார்ப்பா கிளம்பிட்ட போலியே?” என்று அவன் கேட்க.

“நீங்க தானே சொன்னீங்க ஈவினிங் டைம்ல அந்த குளம் இன்னும் அழகா இருக்குனு”

“உண்மைதான் நீயே வந்து அத பாத்து தெரிஞ்சுக்கோ.” என்று அவன் கூறிய நேரம் கிரவுண்ட் ப்ளோரில் லிஃப்ட் ஓப்பனானது.

அங்கிருந்த சிறு சாண்டிவிச் ஷாப்பில் சூடாய் ரெண்டு சாண்டிவிச் வாங்கிக் கொண்டு குளம் நோக்கி சென்றர்கள்.

குளத்தில் படிக்கட்டுகள் இருக்க, அதில் அமர்ந்து குளத்தை ரசித்துக் கொண்டே கைலிருந்த சாண்டிவிச்ஜை உண்டார்கள்.

கனலி தன் கனல்களை மூட்டை கட்டியிருந்தான். வானம் மெதுவாய் கருமை பூச துவங்கி இருந்தது.

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தன்னை பிரிந்து செல்லும் கனலியின் மேலிருந்த கோபத்தால் சிவந்திருந்தது வானம்.

அந்த சிவப்பேரிய வானத்துடன் குளத்தை காண அவ்வளவு ரம்யமாக இருந்தது.

அதை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென பாக்யா சொன்ன விஷயங்கள் நினைவு வர, தன் அருகே அமர்ந்திருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

காற்றில் அசைந்தாடிய அலையலையான கேசம், அளவான நெற்றி, கரிய புருவம், கூர்மையான நாசி, மேலுதட்டை சிறிது மறைத்தார் போன்ற அடர்த்தியான மீசை, சிவந்த அதிரங்கள் சற்று பெரிதாய் அம்சமாய் இருந்தது, தேவையில்லாத சதைகள் இல்லை ‘ஜிம் பாடி’ போல மனதிற்குள் நினைத்தாள். இப்படி அவள் அவனை அளவெடுத்துக் கொண்டிருக்கையில்,

“என்ன ரசிச்சாச்சா?” என்று கேட்ட அவன் குரலில் இவளுக்கு தூக்கி வாரி போட்டது.

அதில் இதயம் தடதடக்க அவனை பார்க்க.

அவளின் படபடப்பை ரசித்தவன். “குளத்த பார்த்து ரசிச்சாச்சா கேப் ஏரியாக்கு போகலாமானு கேட்க வந்தேன் அதுக்கே ஏன் இவளோ படபடப்பு” என அவன் வாய் கேட்டாலும்,

அவன் கண்கள் அவனை ரசித்தத்தை தான் அவன் குறிப்பிடுகிறான் என்பதை அப்பட்டமாய் காட்ட, இவளுக்கு எங்கே சென்று ஒளிந்து கொள்வது என்று தெரியவில்லை.

அவளை மேலும் பதட்டமாக விரும்பாதவன்.

“கேப் நம்பர் மெசேஜ் வந்துச்சா? “ எனக் கேட்க,

இவளும் அவளின் போனை எடுத்து கேப் நம்பரை செக் செய்தாள். இருவருக்கும் ஒரே நம்பர் தான்.

பொதுவாக ஒரு இடம் அதை சுற்றி இருக்கும் அனைத்து ஏரியாக்களுக்கும் ஒரு கேப் இருக்கும். ஒரே ஏரியா என்பதால் பிக்கப் ட்ராப் இரண்டிற்கும் இருவருக்கும் ஒரே கேப் தான் இருக்கும்.

“சரி வா டைம் ஆயிடுச்சு கேப் எங்க இருக்குன்னு பார்த்து போய் உட்காரலாம்”.

சரியென இவளும் அவனுடன் சேர்ந்து நடக்கலானாள்.

அந்த நேரம் பார்த்து எங்கிருந்தோ பாக்யா இவள் அருகே வந்து, “உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடி” என்று சொல்லிவிட்டு செல்ல,

சட்டென திரும்பி இவள் ஜானை பார்க்க, அவன் கண்களில் தெரிந்த குறும்பே சொன்னது அவன் அதை தெளிவாய் கேட்டு விட்டான் என்று.

ஏற்கனவே ஒரு வித சங்கடத்தில் வந்து கொண்டிருந்தவளை மேலும் சங்கடப்படுத்தியது பாக்யாவின் இந்த பேச்சு.

அதன் பிறகு அவளால் வாய் திறக்க முடியவில்லை அமைதியாக நடந்து வந்தாள். கேபை தேடி அதில் ஏறி அமர்ந்தவுடன் காதல் ஹெட் செட்டை போட்டுக் கொண்டு கண்கள் மூடி உறங்குவது போல் சீட்டில் சாய்ந்து கொண்டாள்.

வழக்கம்போல டிரைவர் சீட்டருகே அமர்ந்தான் ஜான்.

கண்களை மூடியவளுக்குள் பல கேள்விகள். பாக்யா சொன்னது போல் எந்த பெண்ணிடமும் பேச மாட்டான் என்றால் என்னிடம் மட்டும் பார்த்த முதல் நாளே எப்படி பேசினான்? காலையிலிருந்து அவன் செய்த உதவிகளை எண்ணிப் பார்த்தாள்.

அவனைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தவளை கலைத்தது அருகே யாரோ அவளை அழைக்கும் சத்தம்.

என்னவென்று கண் விழித்து பார்த்தாள். அருகே இருந்த பெண் தான் கேப் சாட்டை அவளிடம் நீட்டினாள்.

அதில் நேரத்தைப் பார்த்து எழுதி கையெழுத்துப் போட்டாள். ஏதோ உந்த நிமிர்ந்து ஜானை பார்க்க,

அதுவரை அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் பார்க்கவும் ‘என்ன’ என்று புருவம் உயர்த்தினான்.

வேகமாக ‘ஒன்றுமில்லை’ என்று தலையாட்டிவள், மீண்டும் தன் சயன கோலத்திற்கு சென்றாள்.

அதை கண்டவன் முகத்தில் குறுநகை தழுந்தது.

இருவருக்குமே ஒருவருக்கொருவர் ஏதோ பல நாள் பழக்கப்பட்டவர்கள் போல் தான் தோன்றியது.

அதுநாள் வரை எந்த பெண்ணிடமும் காணாத ஒரு ஈர்ப்பு இவளிடம் ஏற்பட்டிருந்தது ஜானிற்க்கு.

அதுவரை அம்மா பாட்டி இருவரிடம் மட்டுமே இவள் பார்த்த அக்கறை, பரிவு ஒரு நாள் பழகிய ஜானிடம் வெளிப்பட்டது திகைப்பாய் தான் இருந்தது பெண்ணிற்கு.

லேவி நவியின் காதல் தொடரும்…

 

error: Content is protected !!