💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு 7
‘ஏமாற்றம்’ வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம், அதை நன்றாக கற்றவனின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்…
அதில் சோர்ந்து போனால் இருள் நிறைந்த பாதையை மாறும் வாழ்க்கை…
தியா கோயில் சென்று அவள் வர சொன்னவரின் வரவுக்காக காத்திருக்கும் சமயம், வர்ஷாவிற்க்கு என்ன ஆனது என்று பார்ப்போம் வாங்க.
செம்ம விடுமுறைக்கு தங்கள் சொந்த ஊரான கும்பகோணத்திற்கு அன்னையுடன் சென்றிருந்தாள் வர்ஷா என்று முன்பே நாம் பார்த்தோம்.
அங்கேதான் முதன் முதலில் வாழ்க்கையின் பாடத்தை கற்க துவங்கினாள் அவள்.
அங்கு அவர்களின் பூர்வீக வீடு இருந்தது. அந்த ஊரின் பெரிய தலைக்கட்டு அவர்கள் குடும்பம். அந்த ஊர் மக்கள் இவர்களை பெரிய வீட்டு ஆட்கள் என தான் அழைப்பது வழக்கம்.
இப்பொழுது அங்கு வசிப்பது அவள் தாத்தா வீரராகவன் மற்றும் அவள் பாட்டி மீனாட்சி அம்மாள். வீரராகவரின் அப்பா கட்டிய வீடு தான் அது.
தொழில் காரணமாக கிருஷ்ணமூர்த்தி அவர் மனைவி, மக்களுடன் சென்னையிலேயே தங்கிவிட, விடுமுறை சமயங்களில் மட்டும் இங்கு வந்து செல்வர்.
அவர்களுக்கென்று இங்கே மா மற்றும் தென்னை தோப்புக்கள், மல்பெரி தோட்டம், பண்ணை என அனைத்தும் இருக்கிறது. இதை அனைத்தையும் தாத்தா வீரராகவர் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ராதாவிற்கு தன் மாமனார் மாமியார் மேல் பாசம் அதிகம். அதன் காரணம் அவர்கள் ராதாவை நடத்தும் முறை. கல்யாணமாகி இதோ பிள்ளைகள் கல்லூரி செல்லும் பருவம் வந்த பின்பும் எவ்விதமான கள்ளம் கபடம் இல்லாத அன்பு காட்டுகிறார்கள். அவர்கள் ராதாவை தங்கள் மருமகளாய் அல்ல மகளாய் தான் நடத்துகிறார்கள்.
ஷ்யாம், வர்ஷா இருவரும் தாத்தா பாட்டிக்கு உயிர். அவர்கள் இங்கு வந்தாலே தினமும் விருந்துதான்.
தினம் எங்கேயும் வெளியில் சென்று வருவர். அந்த ஊர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர்கள் தாத்தா தான் அதற்கு தர்மகர்த்தா. அங்கு செல்வது அம்மா மகளின் தினசரி வேலை.
பின், தோட்டம் மற்றும் பண்ணை என ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடத்திற்கு செல்வர்.
இங்கே வந்தால் தன் மாமனாருக்கு தன்னாலான உதவிகள் செய்வார் ராதா.
அப்படி ஒரு நாள் ராதா அவர் மாமனாருடன் கணக்குகள் பார்க்க,
“அம்மா தோட்டத்துக்கு போயிட்டு வரலாமா”, என வந்து நின்றாள் வர்ஷு.
“நேற்று தானே போனோம்.”, என அவர் மறுக்கவும்.
“அங்க போன நல்லா இருக்குமா. நல்லா ஜில்லுனு காத்து, அங்கு இருக்க அந்த மல்பெரி செடி எல்லாம் பார்க்க அவ்ளோ அழகா இருந்துச்சு, போகலாமே ப்ளீஸ்”, எனக்கு கெஞ்சி துவங்கினால்தான் அவள்.
“இல்லைடி எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, நீயே பாக்குறல நம்ம வரும்போதுதான் தாத்தாக்கு கணக்கு வழக்குல ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுது. இல்லனா பாவம் தனியாக அவரே உக்காந்து பண்றாரு இல்ல.”, என்றார் மகளுக்கு புரிய வைக்கும் நோக்கில்.
“சரி நீங்க இங்கே இருங்க அப்ப நான் மட்டும் போயிட்டு வரட்டா”, என்றாள் இறைஞ்சதலாய்.
“தனியாவா…”, என்றார் யோசனையாய், ஏனென்றால் இதுவரை அவளை தனியா எங்கும் அனுப்பியதே இல்லை.
இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சி அம்மா, “ஏன்மா ராதா அங்கன தான் பிள்ளையை வெளியவே விடுறதில்லை, இங்கன என்ன பயம் போயிட்டு வரட்டும் விடு. அதான் தோட்டத்துல வேலையாளுங்க இருக்காங்கல பாத்துப்பாங்க”, என்றார் பேத்திக்கு பரிந்துரையாய்.
பெரியவர் சொல்லவும், “சரிங்க அத்தே”, என்றார் ராதா.
“தேங்க்ஸ் பாட்டி”, என்ன பாட்டிக்கு ஒரு முத்தம் வைத்து கிளம்பினாள் வர்ஷா.
என்னதான் இப்போது கல்லூரியில் படித்தாலும் வெளியுலக அனுபவம் இல்லாதவள் வர்ஷா. ஒரே பெண் என்று பொத்தி பொத்தி வளர்த்து விட்டார்கள் அவர்கள் வீட்டில் இருப்பவர்கள். தாய், தந்தை மட்டும் இன்றி அவள் அண்ணனும் அவளை தனியே எங்கும் விட்டதில்லை.
தனியே வெளியில் சென்று பழக்கப்படாதவள் முதன்முறை இப்படி வரவும் சந்தோஷமாக நடந்தாள். அவளுக்கு இப்படி தனியே வருவது பிடிக்கும் தான் இருந்தாலும் வீட்டில் இருப்பவர்கள் பயப்படவே அவளும் இதுநாள் வரை தனியே வந்ததில்லை.
மல்பெரி தோட்டத்தை சென்று பார்த்தாள். அதைப் பற்றி தாத்தா கூறியது நினைவுக்கு வந்தது அவளுக்கு.
அதாவது மல்பெரி பழம் மட்டுமின்றி அதன் இலைகளும் அதிகம் பயன்படும் என்று.
பெண்கள் என்னதான் மாடர்ன் டிரஸ் என்று போட்டுக் கொண்டாலும், பட்டு சேலைகளுக்கு எப்பொழுதும் பெண்கள் மத்தியில் மதிப்பதிகம்.
அந்த பட்டுச் சேலைகள் பட்டுப்புழுக்கள் கட்டும் கூட்டிலிருந்து கிடைக்கும் நூல் மூலம் தான் நெய்யப்படுகிறது.
இதற்காய் பட்டுப்புழுக்களை தனியாய் பராமரிப்பார்கள். அந்த பட்டுப்புழுவின் வளர்ச்சிக்கு முக்கியமாய் பயன்படுத்தப்படும் ஆகாரம் மல்பெரி இலைகளே.
பட்டுப்பூச்சிகள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எதையும் உண்பதில்லை.
எனவே மல்பெரி இலைகளுக்கு அதிக கிராக்கி இருப்பதால் அதை தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார் வீரராகவன். அதில் கிடைக்கும் மல்பெரி பழங்களையும் விற்பனைக்கு அனுப்புவார்.
இந்த மல்பெரி இலை உற்பத்தி ஆண்டு முழுவதும் பலன் தரும் ஒரு நல்ல பயிராகும். பெரும்பாலும் இறவை சாகுபடியாகவே இதை செய்கின்றார்.
(*இறவை என்றால் கிணறு, ஏரி, கால்வாய் பாசனம் மூலம் பயிர் செய்வது)
வீட்டின் அருகே தான் இருந்தது இந்த தோட்டம். வரிசை வரிசையை செடிகள் நடப்பட்டிருந்தது. சில செடிகளில் ஏதோ சிவப்பு லைட் போட்டார் போன்று மல்பெரி பழங்களும் தொங்கிக் கொண்டிருந்தது. அனைத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டே வந்தவளுக்கு ஏதோ கால் இடற விழப் போகிறோம் என கண்களை இறுக்கமாக மூடி இருக்க, ஒரு முரட்டு கரம் அவளை பற்றி கீழே விழ விடாமல் காப்பாற்றியது.
“யாரது” என மெல்ல இவள் கண்கள் திறந்து பார்க்க,
எதிரே நின்றிருந்தவன் இவளை சிநேகமாய் பார்த்து சிரித்தான்.
சிரிக்கலாமா? வேண்டாமா? என இவள் யோசித்துக் கொண்டிருந்த நேரம், “பார்த்து வரக்கூடாதா”, என்றான் கரிசனமாய்.
“பார்த்துத் தான் வந்தேன் எப்படியோ தடுக்கிடுச்சி.”, என்றாள் இவள்.
“சரி இனி பார்த்து போங்க”, என அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
“கண்டிப்பா”, இவளும் அங்கிருந்து சென்று விட்டாள்.
இதுதான் முதல் முறை ஒரு அந்நிய ஆணவனுடன் பேசியது.
மறுநாள் அன்னையுடன் கோவில் செல்ல, அங்கேயும் அவனை கண்டாள்.
அவன் இவளைப் பார்த்துச் சிரிக்க இவளும் பதிலுக்குச் சிரித்தாள்.
பெரிய வீட்டு மருமகள் என ஐயர் அவள் அன்னையிடம் கோவில் குறைகளை பற்றிப் பேச, இவள் தனியே பிரகாரத்தை வளம் வந்தாள்.
அவனே இவளை நெருங்கி பேச்சு கொடுத்தான்.
“என் பெயர் ரவி, நான் இதே ஊரு தான். நான் என்ஜினியரா இருக்கேன். நீங்க பெரிய வீட்டுக்கு வந்து இருக்கீங்களா?” எனக் கேட்க,
“ஆமா, நான் அவங்க பேத்தி.”
“ஓ! சரி நான் கிளம்புறேன் திரும்ப பார்க்கலாம், பை” நான் அவன் சென்று விட்டான்.
“பை”,என இவளும் கூறி, அன்னை வரவும் வீடு திரும்பினாள்.
அதன் பின் அவள் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அவனும் இருந்தான்.
மீண்டும் ஒருநாள் அவள் தனிமையில் செல்லும் நிலை வரக் குதூகலமாகவே சென்றாள்.
அவள் தோப்புக்குச் செல்ல, ரவி அந்த தோட்டத்தில் இருந்தான். இவளைக் காணவும் இவள் அருகே வந்தான்.
அவளிடம் பேச்சுக் கொடுத்தான் அது வெகுநேரம் தொடர்ந்தது இனி அடிக்கடி சந்திப்போம் என முடிவு செய்யும் அளவு சென்று இருந்தது.
அப்படி சந்திக்கையில் ஒரு நாள் தான் அவளை காதலிப்பதாக கூற,
இவளுக்கு அப்படி ஒரு நினைப்பு இல்லை. தான் நட்பாய் தான் பழகினேன் என்று அவனிடம் எவ்வளவு சொல்லிப் பார்த்தும் அவன் கேட்பதா இல்லை. இறுதியாய் தான் சிந்தித்து கூறுவதாய் சொல்லி வீடு திரும்பி விட்டாள்.
இப்படி யார் என்றே தெரியாதவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோமே என்று முதலில் அவளுக்கு யோசனையாய் இருந்தது.
அதன் பின் அவன் நட்பாய் பேசவும் இவளும் எவ்விதமான யோசனையும் இல்லாமல் பழகிக் கொண்டிருந்தாள்.
அவன் திடீரென்று காதல் அது இது என்று சொல்லவும் இவளுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. அப்படி ஏதேனும் தனக்கு நினைப்பு இருக்கிறதா என்று ஒரு முறை தன்னை அலசி பார்த்தாள்.
ம்…ம்… எந்த இடத்திலும் அப்படி ஒரு நினைப்பு அவளுக்கு வரவில்லை.
மறுநாள் அவனிடம் இதை எப்படியாவது தெளிவாக புரிய வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் சென்றாள்.
ஆனால் அவனோ, “நீ இல்லைன்னு சொல்லிட்டேனா நான் செத்துப் போயிடுவேன்”, என கிணத்தின் விளிம்பில் சென்று நின்று கொண்டான்.
அவனை தடுத்தாள் வர்ஷு, அதை கேட்காமல் விழப்போக, இவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
“நீ சரி சொன்னா நான் கீழ விட மாட்டேன்”, என்றான் இறுதியாக.
கிணற்றின் விளிம்பில் நின்று கொண்டு இவ்வாறு பேசுபவனை கண்டு பயந்தவள் எங்கே தன்னால் ஒரு உயிர் போய்விடுமோ எனப் பயத்தில் ‘சரி’ என்ற வார்த்தையை உதிர்த்து விட்டாள்.
இப்படித்தான் பலர் கத்தி முனையில் காதலுக்கு சம்மதம் வாங்கின்றனர். ஆனால் அது எத்தனை நாள் நிலைக்கும்? நீடிக்கும்?
இதனால் எதிர் தரப்பின் வெறுப்பை தான் தேடிக்கொள்வர். காதலை வற்ப்புறித்தியோ, யாசிதோ பெறக்கூடாது அப்படி செய்தாள் நிச்சயம் அது உண்மையாக இருக்காது.
அடிக்கடி இவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது அலைபேசியிலும் பேசுவது உண்டு. அவன் தான் பேசுவான் இவள் கேட்பதோடு சரி.
அவன் பேசும் போதெல்லாம் உன்னை அப்படி பார்த்துக்கொள்வேன் இப்படி பார்த்துக்கொள்வேன். உன் பணம் எனக்கு பெரிதல்ல நீ தான் என் சொத்து எனக் கூறுவான்.
அவன் என்ன தான் தேனோழுக பேசினாலும் இவளுக்கு ஏனோ அவனுடன் காதல் கல்யாணம் என்று கனவு காண முடியவில்லை.
சரி என்ற ஒன்றை வார்த்தை அவனிடம் கூறியதால். பிடிக்கிறதோ பிடிகளையோ நாம் அவனை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என் மனதில் உருவேற்றிக் கொண்டு பேசினாள்.
***
இப்படியான ஒரு சூழ்நிலையில் தான் அவனின் சுயரூபம் வெளிப்பட்டது.
அன்று ரவியை சந்திக்க வழக்கமான நேரத்திற்கு சற்று முன்னதாகவே சென்றாள். அவர்கள் வழக்கமாக சந்திக்கும் முன்னதாகவே மா தோப்பில் அவனை கண்டு அவன் அருகே செல்ல போனாள்.
அவர்களுக்கு இடையே மோட்டார் ஒன்று இருந்தது. அவன் யாரிடமும் பேசிக் கொண்டு வருவது அருகில் வந்து பின் தான் தெரிந்தது. தன் காரணமாக அவன் யாரிடமும் மாட்ட வேண்டாம் என்ன மோட்டார் ரூமுக்குள் சென்று ஒளிந்து கொண்டாள்.
அவன் தான் கூறியிருந்தான் தாங்கள் சந்திப்பது யாருக்கும் தெரிய கூடாது என்று.
பேசிக்கொண்டே வந்தவர்கள் அவள் உள்ளே இருப்பது தெரியாமல் அந்த ரூமில் அருகே நின்று தங்கள் உரையாடலை தொடர்ந்தனர் அவளைப் பற்றிய பேச்சி தான்.
“என்னடா ரவி இப்ப எல்லாம் பெரிய வீட்டு பொண்ணு கூட அடிக்கடி பார்க்கிற மாதிரி இருக்கு” என்றான் அவனின் நண்பன்.
“இத நான் யாருக்கும் தெரியாம தான பாத்துக்கிட்டேன் உனக்கு எப்படிடா தெரியும்”, என்றான் யோசனையாய்.
“பாம்பின் கால் பாம்பறியும் மச்சி கவலைப்படாத ஊர்ல யாருக்கும் தெரியாது”, என்றான் அவன் பயமறிந்து.
“ஆமாடா அவ வந்த நாளா பாத்துட்டு இருந்தேன். ஒருநாள் தனியா வரத்தை பார்த்து வழியில் விழற மாதிரி செட் பண்னேன் அப்படியே காப்பாத்துற மாதிரி சீன் போட்டேன்”, எனச் சொல்லி புகைக்க துவங்கினான்.
அந்தப் புகை நேடிக்கு வந்த இரும்பலைக் கட்டுப்படுத்திக் கொள்ள படாத பாடுபட்டாள் உள்ளே இருந்த வர்ஷா .
“அப்புறம் எப்படி ஆச்சு லவ் பண்ண வைக்கலாம்னா மசியவே இல்லை சாகப் போறேன்னு மிரட்டி தான் ஓகே சொல்ல வெச்சேன்.”, என்றால் ஏதோ அரிய பெரும் காரியத்தை செய்தவன் போல்.
“அப்புறம் என்ன ஒரே என்ஜாய் தான்”, என்றான் அவன் நண்பன் ஒரு மார்க்கமாக.
“ நீ வேற ஏன்டா வயித்தெரிச்சல கலப்புற அது சரியான பழம். சரியா பேசவே மாட்டேங்குற இல்ல எங்க இருந்து…”, என்றான் எரிச்சலாய்.
“நீ விடமாட்டியேடா…”, என்றான் நண்பனின் குணம் அறிந்து.
“ மத்தவங்க மாதிரி அவளை ட்ரீட் பண்ண கூடாது மச்சி அவ பொன்முட்டை இட்ற வாத்து, அவ போகல போய் தான் காரியத்தை சாதிக்கணும். அவளை கல்யாணம் பண்ணா லைப் செட்டில்… அதுக்கு அப்புறம் நமக்கு புடிச்ச மாதிரி எத்தனை பேர் கூட வேணா சுத்திக்கலாம்.”, என்றான் கண்களில் கனவு மின்ன.
இப்படி அவன் இடியாய் இறக்கிய வார்த்தைகள் அவளை மிகவும் பாதித்தது.
“சரி மச்சி டைம் ஆச்சு. அவ வேற நேரம் நான் போய் காத்துட்டு இருக்கேன். பைடா. அப்புறம் இந்த விஷயம் யாருக்கும் தெரியாம பாத்துக்கோ”, என ஒரு வேண்டுதலையும் வைத்துவிட்டு சென்றார்.
“சரிடா”, இவனும் வேறு வழியில் சென்று விட்டான்.
இவர்கள் போனதும் சிறிது நேரம் கழித்து, எந்த சத்தமும் இல்லை என உறுதி செய்து கொண்டு, மோட்டார் ரூமை விட்டு வெளிவந்து வீடு சென்று சேர்த்தாள்.
அதன் பின் அவனை சுத்தமாய் தவிர்த்தாள். விடுமுறை முடிந்து ஊர் திரும்பவும் கொஞ்சம் நிம்மதியானாள்.
விடாமல் அவன் அழைப்பு வர, அந்த அழைப்புகளையும் தவிர்த்தாள், நம்பரை மாற்றினாள்.
வீடு, கல்லூரி, குடும்பம், தோழிகள் எனது நாட்கள் நகர நகரத் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என அனைத்தையும் மறக்க முயற்சி செய்து ஓரளவு வெற்றி பெற்ற நேரம்.
அன்று தன் அண்ணனுடன் காரில் கல்லூரிக்குச் சென்றாள். வழியில் கார் ரிப்பேர், கடைசி செம் என்பதால் ஷ்யாமிற்கு ப்ராஜெக்ட் வொர்க்காக செல்ல வேண்டி இருந்தது.
தன் தந்தையின் நண்பர் ஆனந்தன் என்பவரின் கம்பெனியில் தான் அனுமதி பெற்று ப்ராஜெக்ட் செய்து கொண்டிருக்கிறான் ஷ்யாம்.
இப்போது அங்கே தான் சென்று கொண்டிருக்கிறான். ‘சரியான நேரத்திற்கு போக வேண்டும்’ என நினைத்தவன். தாங்கள் வாடிக்கையாக சர்வீஸ் செய்யும் மெக்கானிக்கிற்கு போன் செய்து இருக்கும் இடம் சொல்லி காரை எடுத்துக் கொள்ளச் சொன்னான்.
‘ எப்படி போகலாம்’, என இவன் யோசிக்க, இவன் போக வேண்டிய கம்பெனியின் எம்.டியே காரில் வந்தார்.
“என்னப்பா இங்க நிக்கற வண்டி ரிப்பேரா?”, என வினவினார் ஆனந்தன்.
“ஆமா அங்கிள்”
“வாப்பா நம்ம கார்லயே போயிடலாம். நீயும் வாம்மா காலேஜ்ல விட்டுறேன்”, என்றார் வர்ஷுவையும் உடன் அழைத்தார்.
தான் வரவில்லை என அண்ணனுக்கு ஜாடை காட்டி விட்டு, “இல்ல அங்கிள் இதோ காலேஜ் வந்துருச்சு ஜஸ்ட் கிராஸ் பண்ணனும் அவ்வளவுதான்”, என்றால் அவர் அழைப்பை மறுத்து.
அவருக்கு இவளை மருமகளாக்கும் எண்ணம். அவர் மகன் வைபவ்வை இவளுக்கு பிடிக்காது.
கடைந்தெடுத்த அயோக்கியன் அவன். அவனிடம் இல்லாத கெட்ட பழக்கமே இல்லை. நம்பர் ஒன் பொறுக்கி.
எனவேதான் அவள் அவரின் அழைப்பை மறுத்தது.
இந்த விஷயம் ஷ்யாமிற்கும் தெரியும் என்பதால் தன் தங்கையின் மனம் உணர்ந்து,
“அவ போயிடுவா அங்கிள்”, என தங்கைக்கு பத்திரம் சொல்லிக் கிளம்பினான் அவன்.
அவன் போகவும் அவளை நெருங்கி “வர்ஷு” என ரவி அழைக்கவும் சரியாக இருந்தது.
அவனை இங்கே எதிர்பார்க்காதவள் மனம் படபடக்க,
அவனோ “ என்ன வர்ஷு என்கிட்ட சொல்லாமயே வந்துட்டே? போன் பண்ணாலும் எடுக்கல? ஏதாவது பிரச்சனையா? உங்க வீட்ல நம்ம லவ் தெரிஞ்சிருச்சா? அவங்க தான் உன்னை எதுவும் போன் பண்ண விடாம பண்ணிட்டாங்களா?”, என கேள்வி கணைகள் தொடுத்தான்.
அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது, தான் அவனை கண்டு கொண்டது அவனுக்கு தெரியவில்லை என்று.
எப்படி இவனிடமிருந்து விலகிச் செல்வது என்ன அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவளின் எண்ண ஓட்டத்தை அறியாதவன், அவளிடம் காதல் வசனம் பேசியபடி இருந்தான்.
ஒரு கட்டத்தில் அவளின் அமைதியும் மருண்ட பார்வையும் கவனித்து ஏதோ உணர்ந்து, “என்ன பத்தி யாராவது தப்பா சொன்னாங்களா?”, என்றான் சந்தேகமாய்.
அவ்ளோ எதுவும் சொல்லாமல் அமைதியா நின்றிருந்தாள்.
அதைப் பார்த்து மேலும் அவன், “அப்படி எதாவது இருந்தா அதை நம்பாத நான் உன்னை…” என காதல் வசனங்கள் பேச துவங்க.
இதற்கு மேல் அவன் சொற்பொழிவை கேட்க விரும்பாதவள் மேற்கொண்டு பேச வேண்டாம் என கைய உயர்த்தி தடுத்து, தான் அவனை அவன் வாய்மொழியாகவே தெரிந்து கொண்டதை பற்றி வெளியிட்டாள்.
அவன் அதிர்ந்தது சில நிமிடங்களே அதன் பின், “ஓ! எல்லாம் தெரிஞ்சிருச்சா… அதுவும் நல்லதுக்கு தான் எவ்வளவு நாள் தான் நடிக்கிறது சொல்லு, சரி ஒரு பத்து லட்சம் குடு, நான் உன்னை இனிமே டிஸ்டர்ப் பண்ணல”
“நான் எதுக்கு உனக்கு பணம் தரணும்”, என்றால் அவன் ஏன் அவ்வாறு கேட்கிறான் என்று புரியாமல்.
அதற்கான விடையை அவன் வாயால் கூறவில்லை. அதற்கு பதிலாய் அவன் தொலைபேசியில் இருந்ததை காட்டினான்.
அவனும் அவளும் பேசும்போது எடுத்த புகைப்படங்கள்.
அவள் வளர்ந்த சூழல் அவனை நெருங்கி கூட பேசியதில்லை இவள். ஆனால் அவன் அவர்கள் மிகவும் நெருங்கிருப்பது போல் எடுத்திருந்தான்.
“இதுலாம் எப்போ எடுத்தது நான் இப்படிலாம் பேசவே இல்லையே”, என்றாள் ஒன்றும் புரியாமல்.
“அது உனக்கும் எனக்கும் தானே தெரியும் உங்க அப்பா அம்மாக்கு தெரியாதே. அவங்க கிட்ட காட்டுவேன். அதுமட்டுமில்ல பேப்பர்ல டிவில இன்னும் மோசமா மாஃபிங் பண்ணி போடுவேன்.”
…
“நியூஸோட ஹெட்லைன் என்னவா இருக்கும் தெரியுமா பிரபல தொழிலதிபரின் மகளின் காதல் லீலைகள்”
அவனை நிமிர்ந்து முறைத்தாள் பெண். என்ன அதற்கெல்லாம் அசைகின்ற ஆளா அவன்.
மனதில் வலி பரவியது தன் பொருட்டு தன் குடும்பமும் இதனால் அவதிப்படுமோ என்று.
“என்ன சொல்ற”, என்றான் அவள் அமைதியை பார்த்து.
“என்னால எப்படி இவளோ பணம் ரெடி பண்ண முடியும்.”, என்றாள் யோசனையாய்.
“உங்க அப்பா கிட்ட இருக்குறதுக்கு நான் கேட்டது ஒரு பர்சனல் கூட கிடையாது”, என்றான் திமிராய்.
இப்போதைக்கு இவனிடமிருந்து விலகிச்செல்ல வேண்டும் என எண்ணி “சரி எனக்குக் கொஞ்சம் டைம் கொடு”, எனக் கேட்டாள்.
“சரி ஆனா என்னை ஏமாத்த பார்த்தா அப்புறம் நான் சொன்ன மாதிரி டிவி பேப்பர்ல உன் குடும்ப மனம் காத்துல பறக்கும் ஜாக்கிரதை”, என எச்சரித்து சென்றான்.
அந்த ரவியின் பிரச்சனைகளால் அவள் மிகவும் வாடிப்போய் இருந்தாள்.
ஆனால் அருண் மித்து காதல் பிரச்சினை, ப்ராஜெக்ட் வொர்க் என இவளின் மாற்றம் யாரையும் கவரவில்லை.
அதன் பின் அவனை அம்யூஸ்மென்ட் பார்க்கில் தான் பார்த்தாள் வர்ஷா.
இதேபோன்று பல இடங்களில் மிரட்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இது போன்ற பிரச்சினையை நாம் சந்திக்க நேர்ந்தால் முதலில் பயமும் பதட்டமோ படாமல் இருக்க வேண்டும்.
இப்பொழுதெல்லாம் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி விட்டது. அதனால் தவறுகளும் நடக்கின்றன தான்,
ஆனால் அதே நேரம் அந்த தவறுகளை சரி செய்யும் செயல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நம்பிக்கையான ஆளிடம் பகிர்ந்து கொண்டு அதற்கான தீர்வை கண்டறிவோம்.
இதோ இந்த விஷயத்தில் வர்ஷா தன் நெருங்கிய தோழியான தியாவிடம் கூறியிருக்கிறாள்.
தியா இதற்காக என்ன முயற்சி எடுக்கப் போகிறாள்? வர்ஷா இதை தைரியத்துடன் எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்?