😍உணர்வை உரசி பார்க்காதே! 06😍

😍உணர்வை உரசி பார்க்காதே! 06😍
🌹அத்தியாயம் 06
அவன் தங்கையை பார்க்க சென்றதை, மீத்யுகா வேறு பெண்ணை மணம் முடித்து திருட்டுதனமாக பார்த்துவிட்டு வருவதைப் போல் கூறியதுதான் அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.
கீழே விழுந்தவன் எழுந்து நின்று “என்ன டீ ஓவரா பேசுற, எகிற தொகுற! ஜஸ்ட் நெட்பால் கோச் உனக்கு இவ்ளோ எகத்தாளமா? ஆகாது டீ. ஆகவே ஆகாது. நான் யார வேணாலும் பார்க்க போவேன். உனக்கு என்ன டீ பிரச்சினை?” அவன் அவளிடம் அதிகமாகவே எகிறினான்.
“இன்னும் ஒருத்திய வச்சிக்கிட்டு என்னைய கல்யாணம் பண்ணியே அதான் பிரச்சினை.” தன்னை, அவன் வெறுப்பதற்கு இதுதான் காரணமென்று அவள் குரல் நீதி கேட்டு நின்றது.
“யார பார்த்து என்ன சொல்ற” விழிகளை அகல விரித்து கூறிவிட்டு, அவன் ஐவிரல்கள் விரிந்து அவள் கன்னத்தில் சிவக்க பதிந்தது.
அடிவாங்கிய மறுகணமே அவனை அடிக்க கையை ஓங்க, அவள் கையை பற்றியவன், “என் தங்கச்சிய பார்க்க நான் போனா உனக்கு என்ன வந்துச்சு?” அதிகார தோரணையில் அவன் குரல் அதிர்ந்தது.
“தங்கச்சிய பார்க்க போறதுன்னா ஏன்? யாருக்கும் தெரியாம போகணும்?” வக்கீலின் மனைவிதானே குறுக்கு விசாரணையில் இறங்கினாள்.
“எல்லாத்துக்கும் உன் அக்காதான் டீ காரணம்!” வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருந்தது அவனின் பேச்சின் தொனி.
“ஏது, என் அக்காவா? என்ன சொல்றீங்க, என் அக்காக்கும் உங்க தங்கச்சிக்கும் என்ன சம்பந்தம்? சோத்துல முழு பூசணிக்காய மறைக்காம உண்மைய சொல்லுங்க விகுஷ்கி?” மீத்யுகாவின் அகமும் முகமும் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டது.
“…” எந்தவித பதிலுமின்றி ஆழ்ந்த யோசனையும் ஆராத சினமும் அவள் மேலிருந்தது அவனுக்கு.
“இதுலயே தெரியுது என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கிறீங்கனு, என்னைய வெறுக்குறதுக்காக எங்க வீட்டாளுங்கள இழுத்து பேசுறத இதோட நிப்பாட்டுங்க. சொல்லிட்டேன்!” என்று அவள் குரலையும் உயர்த்தி எச்சரித்தாள்.
“நான் எதுக்கு டீ யோசிக்கணும்? உன் அக்கா மாதிரி மனசாட்சி இல்லாதவனா நான். ஆக்சிடன்ட் பண்ணி அப்படியே அம்போனு விட்டுட்டு போக!” குதர்க்கமாகப் பேச ஆரம்பித்து அவளை நன்கு குழப்பினான்.
விபத்தென்று அவன் கூறியதும் ஒரு நிமிடம் திக்கென்றானது அவள் மனம். “யாருக்கு ஆக்சிடன்ட் ஆச்சு, யார அம்போனு விட்டுட்டு போன, ஏன் இப்படி தலையும் இல்லாம வாலும் இல்லாம பேசுறீங்க? ஐயோ ஆண்டவா என்னைய ஏன் இப்படி சோதிக்கிற?”
“தலையாவது வாலாவது, என் தங்கச்சி வாழ்க்கையே வாழவிடாம பண்ணிட்டாளே உன் அக்கா, கல்யாணத்துக்கு முதல் நாள் அவ லவருக்கு கிஃப்ட் வாங்க போனவ போனவதான், ஆஸ்பிடல்ல கிடக்குறா அதுக்கும் உன் அக்காதான் காரணம்!”
“வாட்! அப்போ ஆக்சிடன்ட் பண்ணது என் அக்கா சகியா?” முழிகளை விரித்து விகுஷ்கியை உற்று நோக்கினாள்.
“பிறகு! இவ்ளோ நேரம் என்னத்த சொல்றேன். உன் அக்காதான், உன் அக்கா சகிஷ்ணவியேதான்!” ஏற்றி வைத்த கற்பூரத்தை அணைத்து சத்தியம் அடிப்பதை போல் ஆணித்தனமாய் கூறினான்.
அவன் வார்த்தைகளின் உறுதி அவன் கண்களிலும் முகவாட்டத்திலுமே நன்கு தெரிந்தது. அவன் கூறுவதை மறுக்க முடியாமல், அவள் தமக்கை இப்படி ஒரு விபத்தை ஏற்படுத்தியதை ஏற்கவும் முடியாமல் சிரமத்திற்குள்ளானாள்.
“என் அக்கா அப்படி பண்ண மாட்டா, என்னால ஏத்துக்க முடியல, என்னைய வெறுக்குறதுக்காக நீங்க என்னென்னமோ பொய் சொல்றீங்க. நீங்க சொல்றத, நான் நம்ப தயாரயில்ல.” சகிஷ்ணவி, மீத்யுகாவிடம் எதையும் மறைக்காமல் கூறிவிடுவாள். அப்படி இருக்க இச் சம்பவத்தை பற்றி மூச்சு காற்று ஏனும் விடவில்லை. விகுஷ்கி கூறும் சம்பவத்தை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் தள்ளாடினாள்.
“உங்கிட்ட பொய் சொல்லி எனக்கென்ன கிடைக்கபோகுது. என் தங்கச்சி கல்யாணத்துக்கு முதல் நாள் அவ ஸ்கூட்டர்ல கிஃப்ட் வாங்க போனா, உன்னக்கா சகி கார்ல வந்து ஆக்சிடன்ட் பண்ணிட்டு கொஞ்சங்கூட ஈவு இரக்கமில்லாம அதே இடத்துல விட்டுட்டு போயிட்டா!” தங்கையை எண்ணும்போது மனம் கவலையில் ஆழ்ந்தாலும் மீத்யுகாவிடம் பேசும்போது அவனுடைய குரல் உரத்திருந்தது.
“நீங்க சொல்றத நான் எப்படி நம்புறது. நீங்க லாயர்தானே! ஏன் கேஸ் போடல, எங்கப்பா கிட்ட கூட பேசி இருக்கலாமே! அதெல்லாம் செய்யாம என்னைய கல்யாணம் பண்ணி டார்ச்சர் பண்றீங்க?” அவளது தமக்கையை விட்டுக்கொடுக்கும் எண்ணம் அவளிடம் துளி அளவும் இருக்கவில்லை.
சகிஷ்ணவி சற்று தைரியம் குறைந்தவள். அப்படி இருக்க, அவள் ஒரு விபத்தை ஏற்படுத்தினால் என்று மீத்யுகா நினைக்கும்போது அசாதாரண காரியமாய் தோன்றியது.
அவனுடைய தங்கையின் மணவாழ்க்கை சிறக்காமல் போக, சகியின் தங்கையாகிய மீத்யுகாவின் வாழ்க்கையும் சிறக்கக் கூடாது. அவன் கூறியதில் அவளுக்கு புரிந்த விடயம் இதுவொன்றுதான். அவன் தங்கை படும் பாடெல்லாம், சகியின் தங்கையும் படவேண்டும்.
அதுவும் அதிகமாகவே இடர்களை அனுபவிக்க வேண்டும். என்பதே விகுஷ்கியின் அகத்தில் அதிகளவில் நிலவிய பழிவாங்கும் உணர்ச்சியின் பேராசை.
“ஆமா ஆமா, அதே அதே!”
“வக்கீலுக்கு படிச்ச நீங்களே இப்படி பண்ணலாமா, கேஸ் போட்டு நேர்மையா வாதாடியிருக்கணும். அப்படி இல்ல, அப்பா கிட்ட பேசியிருந்தா பணமாவது கிடச்சிருக்கும். தப்பு பண்ணிட்டீங்க விகுஷ்கி.”
“யாரு, நானா, உன் அக்காவா?” விபத்து ஏற்படுத்தியது தப்பில்லை. வழக்கு தொடர்ந்திருந்தால் பணம் கிடைக்கும் என்ற கருத்து, அவனை மேலும் வெறுப்பிற்கு உள்ளாகியது. பணக்கார வர்க்கத்தின் திமிர் இதுவா? என்பது போல்.
அவன் தொடுத்த வினாவிற்கு அவளிடம் பதில் இல்லை. மௌனித்தால் பெண்.
“என்ன? இப்போ பேச்சு வரலயா?உங்கள மாதிரி பணக்காரவங்க புத்தியே இப்படிதான் டீ. அதுக்குதான் உனக்கு இந்த பனிஷ்மண்ட்.”
“என்ன பனிஷ் பண்ண நீங்க யாரு மேன்?”
“என் தங்கச்சிக்கு அண்ணன் டீ!”
“ச்சீ உங்கள நினைக்கவே அசிங்கமா இருக்கு. நீங்க நேர்மையானவர்னு நான் தப்பு கணக்கு போட்டேன்.”
அவளிடம் கரடுமுரடாக நடந்துகொண்டாலும், அவன் பார்க்கும் உத்யோகத்திற்கு அவன் நேர்மையாக இருப்பான் என்று எண்ணியிருந்தாள். ஆனால், இவ்விடயத்தில் அவன் அப்படி இல்லையென்றானது.
“உன் அக்கா, என் தங்கச்சிய ஆக்சிடன்டா பண்ணது தப்பா தெரியல! நான் கேஸ் போடாம இருந்ததுதான், உனக்கு தப்பா தெரியுதா?”
”ஆமா, என் அக்கா அப்படி ஒரு தப்ப பண்ணிருக்க மாட்டா, நீங்க இவ்ளோ கீழ்தரமா நடந்துப்பீங்கனும் நெனைச்சி கூட பார்க்கல. என்னைய காதலிக்கிறதா பொய் சொல்லி காதலுங்குற வார்த்தையவே கேவலப்படுத்திட்டீங்க விகுஷ்கி”
மீத்யுகா அவன் பெயரை உச்சரித்ததை கூட அவன் கண்டு கொள்ளவில்லை. அவ்வேளை சினத்திற்கு பிறந்த சிங்கமென இருந்தான்.
இந்தவிடயத்தை மறைத்து பழிவாங்கும் எண்ணத்தோடு காதலிப்பதாகவும் பொய் கூறி அவளை திருமணம் செய்தது, அவளகம் ஏற்க மறுத்தது.
இப்படி பழிவாங்கும் எண்ணத்தோடு அவன் இருப்பதற்கு பதிலாக, மகிழுந்தை கொண்டு மீத்யுகாவை, விகுஷ்கி விபத்து ஏற்படுத்தி இருக்கலாமென்று எண்ணினாள்.
“காதலா? காதலுங்குறது ஒரு மாயை, உடல நேசிக்கிறது மட்டும்தான் காதல். உள்ளத்த நேகிக்கிற காதல் எல்லாம் காவியத்துல மட்டும்தான். இப்பெல்லாம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுதான் இருக்கு. சஷ்டி லவ் பண்ணவன்
சஷ்டிக்கு ஆக்சிடன்ட் ஆகி கோமால இருக்கானு தெரிஞ்சதும்! அவன் இந்த கல்யாணமே வேணாம்னு போயிட்டான். காதலாவது கத்திரிக்காயாவது. கிட்டதட்ட ரெண்டு வருஷமா லவ் ஆர் காதலுங்குற வார்த்தய கேட்டாளே காண்டாகுது. உன் அக்கா ஆக்சிடன்ட் பண்ணத நம்ப மாட்ட அதானே!”
தங்கையின் காதலன், சஷ்டி கோமாவில் இருப்பது அறிந்து பிடிக்காமல் போக வேறு திருமணம் செய்துகொண்டான். அதிலிருந்து வந்ததே இவ்வெறுப்பு விகுஷ்கிக்கு. காதலென்றால் கண்றாவிதான்.
கட்டில் இன்பம் காணும்வரை காதலும், தொட்டில் சுகம் கண்டபின் காமமும், கலைந்துவிடும். பாசம் குறைந்துவிடும். இது அவனின் வேத வாக்கு.
கடுகளவும் நம்பத்தயாராக இல்லை அவள். “நம்ப மாட்டேன். எனி எவிடன்ஸ்?” என்று அவனிடம் கேட்டாள்.
“இருக்கு டீ, சிசிடிவி ஃபுட்டேஜ்” என்று கூறி அவனது கைபேசியிலிருக்கும் காணொளியை காண்பித்தான்.
அளவான வேகத்தில் ஒரு இருசக்கர வண்டி வந்துக்கொண்டிருக்க, அதற்கு எதிரே அளவுக்கடந்த வேகத்தில் ஒரு மகிழுந்து அப்பாதையில் பயணிக்க, அதை பார்த்து இருசக்கர வண்டி ஓட்டுனர் ஒதுங்க, ஒதுங்கியது கருதாமல் மகிழுந்து ஓட்டுனர் இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்.
மோதிய வேகத்தில் இருசக்கரவண்டியில் அமர்ந்திருந்த சஷ்டி, வேகமாக வீசுப்பட்டு மின்கம்பத்தில் அடி பட்டிருக்க, சகிஷ்ணவி வெளியே வந்து எட்டி பார்த்துவிட்டு மீண்டும் மகிழுந்திற்குள் ஏறி வேகமாக சென்றிருந்தாள்.
இக்காட்சிகளை அனைத்தும் காணொளியில் தெள்ளத்தெளிவாய் தெரிந்தது.
பொறுமையாய் பார்த்துக்கொண்டிருந்த மீத்யுகா பொறுமையை இழக்க ஆரம்பித்திருந்தாள். தலையில் கையை வைத்து கட்டிலில் அமர்ந்தாள்.
நம்ப முடியாத காட்சிகளை அனைத்தும் கண்களை கசக்கி பார்த்தாலும் காட்சிகள் மாறாது!
தமக்கையின் முகமும் மகிழுந்தின் இலக்கங்களும் அவளுக்கு பரிற்சியமானதுதானே! எப்போது நடந்ததென்ற வினா அவளகத்தில் ஊடுருவியது.
“இ…இது எப்போ நடந்துச்சு? இத வச்சே நீங்க கேஸ் போட்டிருக்கலாமே?” என்று தட்டு தடுமாறிக் கேட்டாள் அவனிடம்.
“சஷ்டிக்கு மேரேஜ் நடக்க ஒரு நாளைக்கு முன்னாடி, இரண்டாயிரத்து இருபது ஜனவரி இருபத்திரெண்டு ஆக்சிடன்ட் பண்ணா உன் அக்கா. நீ உன் அக்காகிட்ட கேளு.
கேஸ் போட்டிருந்தா மட்டும் உன் அக்காக்கு தண்டனை கிடச்சிருமா, உன் அப்பன் விட்டுருவானா, எவிடன்ஸ் எல்லாம் அழிச்சிருப்பான். உன் அப்பா ஒண்ணும் நல்லவன் கிடையாது. பணத்த கொடுத்த எந்தமாதிரி கேஸ்னாலும் வாதாடுவான். சின்ன புள்ள ஆக்சிடன்ட் கேஸகூட ஆக்சிடன்ட் கேஸே இல்லனு வாதாடி உன் அப்பா நமசிவாயம் நாசம் பண்ணிட்டான்.”
“நான் எப்படி கேப்பேன். அவ லைஃப்ல எதும் ப்ராப்ளம் வந்துட்டா? பட், கேட்டே ஆக வேண்டிய விஷயமே!
நீங்க சொல்லுறதெல்லாம் என்னால கேட்டுட்டு இருக்க முடியாது. என் அப்பா நேர்மையானவர். தப்பான கேஸ் வாதாடமாட்டாரு.”
“உன் அக்கா லைஃப் ஸ்பொய்ல் ஆகிரும்ன்னு யோசிக்கிறியே! என் தங்கச்சிக்கு இதுக்கு அப்பறம் யாரு வாழ்க்கை குடுப்பா? என் தங்கச்சி சஷ்டி வாழ்க்கைக்கு என்ன பதில்?”
தமக்கையும் தந்தையும் செய்த தவறிற்கு மீத்யுகாவை பரிகாரமாய் பயன்படுத்துவது தகுமா?
அவன் கூறும் வார்த்தைகள் நியாயமானதுதான் ஆனால் மீத்யுகாவை தண்டிப்பது நியாயமா?
“அதுக்குதான் உன்னைய கல்யாணம் பண்ணேன். வச்சி செய்யணும். இன்னும் இன்னும் நிறைய வச்சி செய்வேன் டீ. என் தங்கச்சி உயிருக்கு போராடி மீண்டு வந்துட்டா, சஷ்டி எப்போ வீட்டு வாராளோ அதுக்கு அடுத்த வாராமே உன்ன வெளிய அனுப்புவேன். இன்னும் அஞ்சே மாசம் அப்பறம் உங்க அம்மா வீட்டுக்கு நீ பேக்அப்.” எகத்தாளமாய் ஆள்காட்டி விரலாள் சுட்டிக்காட்டி கூறினான்.
திருமணத்திற்கு பிறகு ஒரு வருடமென கூறி, இப்போது ஐந்து மாத அளவில் வந்து நிற்கிறது. அவளை வீட்டை விட்டு துரத்தும் பணி.
அவன், அவளை வீட்டை விட்டு துரத்துவதாகக் கூற, அதைகூட அவளால் உள்வாங்க முடியவில்லை. தமக்கை இப்படி ஒரு காரியத்தை செய்ததையும் அவளால் ஏற்க முடியவில்லை. இருப்பினும் அதுதான் உண்மை.
கேட்டு விடலாமா என்று நினைத்து கைபேசியை எடுத்தாள். அடுத்த கணமே உமேஷ்வரி அழைப்பு விடுக்க, “ஹலோ அம்மா, எப்படி இருக்கீங்க?”
“இப்பதான் கேக்க தோனிச்சா, புகுந்த வீட்டுக்கு போயி ரெண்டு நாளாச்சு எனக்கு ஒரு கால் பண்ணிருப்பியா?”
“மா… அப்பாக்கு பேசினேன் மா. கோச்சுக்காதமா.” அன்னையை செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள்.
“சரி சரி, எப்படி இருக்க? மாப்பிள்ளை நல்லா கவனிச்சுக்கிறார?” அன்னையின் நல விசாரிப்பில் அரண்டு போனாள். அன்றைய நாள் நினைவு.
“ஏய்! எங்க டீ பதில காணோம்?”
“அது அது வந்து மா!” முரண்பாடான முத்தத்தை ஒரு நிமிடம் நினைத்து விட்டு, “ந…நல்லா கவனிச்சுக்கிறாரு மா.” என தந்தியடித்தது அவள் வார்த்தைகள்.
மீத்யுகாவிற்கு வெட்கம் அதனால்தான் வார்த்தைகள் தந்தியடிக்கிறது என்று எண்ணி மனமகிழ்ந்தார் உமேஷ்வரி.
சிறிது நேரம் நீண்டது உரையாடல். இப்போது தாயின் உரையாடலை முடித்து தமக்கைக்கு அழைப்பை விடுத்தாள்.
தமக்கைக்கு அழைப்பை விடுத்தால், தற்சமயம் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. நான்கைந்து முறை அழைப்பை விடுக்க தோற்றது அந்த முயற்சி.
முப்பது நிமிடம் கழித்து மீண்டும் அழைக்க, தமக்கை அழைப்பை எடுத்தாள். “சகி, என்ன இவ்ளோ நேரமா யார்க்கிட்ட பேசிட்டு இருக்க?”
“ஏய்! மீயூ மா உனக்கு ஒண்ணு தெரியுமா? உனக்குதான் ஃபோன் போடணும்னு இருந்தேன் நீயே எடுத்திட்ட.”
சகிஷ்ணவி, மீத்யுகாவை கொஞ்சி பேச அதையெல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை.
“ஆமா எனக்கு பேச நினைச்சிட்டு முப்பது நிமிஷமா யார்க்கிட்ட பேசிட்டு இருந்த?”
“அம்மா கிட்ட பேசிட்டு இருந்தேன். உனக்கு ஒரு விஷயம் சொல்லணும்.”
“சொல்லு, சொல்லு என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு.” என்றிட மீத்யுகாவின் மனம் பதற்றத்தில் நூல் அறுந்த பட்டம் போல் திக்கு திசையின்றி சென்றது.
மீத்யுகா எதிர்ப்பார்க்கும் விபரத்தை சகிஷ்ணவி கூறினாளா?
“அது வந்து மீயூ, லேட்டா சொல்றேனு தப்பா எடுத்துக்காத.” என்று தயக்கத்தோடு கூறினாள்.
“முதல்ல நீ விஷயத்த சொல்லு சகி.” என்று தலையில் கையை வைத்து தேய்த்து கொண்டாள்.
“நான் கன்சிவா இருக்கேன் மீயூ கன்ஃபார்ம் பண்ணி ஒரு நாள் ஆகிட்டு ஸாரி டா. நேத்தே சொல்லிருக்கணும்.” என்று தங்கையிடம் புளகிதமாய் விளம்பினாள்.
“இதுதான் விஷயமா?” என வியப்பில் அவள். மீத்யுகா எதிர்ப்பார்த்த விடயத்தை சகிஷ்ணவி இன்னும் கூறவில்லை.
“என்ன இப்படி கேக்குற மீயூ, எவ்ளோ சந்தோஷமான விஷயம் சொல்லிருக்கேன். என்னைய விஷ் பண்ண மாட்டியா?”
‘இந்த மாதிரி நேரத்துல ஆக்சிடன்ட் பத்தி எப்படி கேப்பேன். ஐயோ ஆண்டவா!’ ஆண்டவன் அவளை இப்படி எல்லாம் சோதிக்கலாமா?
“கங்றாட்ஸ் சகி, நான் உன் கூட அப்பறம் பேசுறேன். நான் கொஞ்சம் வெளிய போகணும். டேக் க்யார்.” என்று அழைப்பை துண்டித்தாள்.
இத்தனை நாட்கள் அவளை எந்த வகையிலும் சோசிக்காத கடவுள், தற்போது அவள் மனதினுள் கடந்து சென்று ஆழமாய் சோதிக்க ஆரம்பித்தாரே!
தமக்கை சூலியாய் இருக்க, இந்த விடயத்தை எப்படி வினவுவது. அதிர்ச்சி ஊட்டினால் சிசுவுக்கு எதுவும் ஆகிவிடுமோ? சகிக்கு திருமணம் நடந்து ஒரு வருடமும் பத்து மாதமும். இப்போதான் முதல் கருத்தரிப்பு நிகழ்கிறது.
விகுஷ்கியிடம் எப்படி கூறுவதென்று பலத்த யோசனை, பக்குவமாய் எடுத்துகூற முடியாத நிலை, அவனை எப்படி சமாளிப்பது என்று எண்ண, தலையை சுவற்றில் முட்டி விடலாமா? அவனுடைய இழப்பிற்கு என்ன ஈடு கொடுப்பது என்ற சிந்தனை அவளை ஆட்சி செய்ய ஆரம்பித்தது.
சரியான வேளையில் சனி புகுந்தது போல் விகுஷ்கி அறைக்குள் நுழைந்தான். அவனை பார்த்தவுடனே மீத்யுகாவிற்கு பதற்றமும் பயமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அவன் என்ன வினா தொடுப்பான். அதற்கு எப்படி விடையளிப்பது, “டின்னருக்கு போகணும்னு சொல்லிருந்தேன் ரெடியாகு” என்று அவள் அவளுக்கு அடிமை என்பது போல் அதிகாரத்துடன் கூறினான்.
“நான் வரல” என்று பதிலுக்கு திமிராக செப்பினாள்.
“ஓகே. வெல், நம்ம விஷயத்துக்கு வருவோம். உன் அக்காகிட்ட பேசுனியா? ஆக்சிடன்ட் பண்ணத ஒத்துக்கிட்டாளா?”
- “அக்காகூட பேசுனேன். ஆனா… ஆனா”, ‘இல்லையென்று எப்படி கூறுவது வாத்துவாயன் அதை எப்படி எடுத்துக்கொள்ளுவான்.’
“அ ஆ இ அப்பறமா சொல்லிக்கிட்டு போ. இப்போ விஷயத்த சொல்லு.”
“சகி வெடிங்க் பண்ணி ஒன் ஹியர் டென் மந்த்ஸ். இப்போதான் ப்ரெக்னன்டாகி இருக்கா சோ, என்னால கே… கேக்க முடியல.” என்று தயங்கி தயங்கி அவனிடம் கூறினாள்.
“ஓ… சூப்பர் சூப்பர்! உன் அக்கா சந்தோஷமா இருந்தா போதும். அப்போ என் தங்கச்சிக்கு என்ன பதில்?” என்றிட அவள் மௌனமாகவே இருந்தாள்.
“ப்ளீஸ் புரிஞ்சுகோங்க!” என்று அவனிடம் இறைஞ்சினாள்.
“நான், இந்த பாவம் புண்ணியம் பார்க்குறதெல்லாம் எப்பவோ விட்டுட்டேன். டின்னருக்கு போகணும் கிளம்பு.”
அவனிடம் பிடிவாதம் பிடிக்காமல் ஒதுங்கினாள், “நீங்க போயிட்டு வாங்க. எனக்கு மூட் அப்செட்டா இருக்கு.”
“நீயா கிளம்பினா உனக்கு சேதாரமில்ல. நான் கிளம்ப வச்சா உனக்குதான் சேதாரம் அதிகம். எது வசதி?”
பாவை மீண்டும் மறுத்திட, எந்த வகையில் பாவைக்கு சேதாரமாகியிருக்கும்!
***
உணர்வுகள் தொடரும்…