அழகியின் அடிமைகள்

அழகியின் அடிமைகள்

நந்தவனபுரம் பெயருக்கு ஏற்றார் போல் காடு மலை ஆறு வயல் என அனைத்து இயற்கை வளங்களையும் உள்ளடக்கிய அழகிய கிராமம்.

 

ஊரின் எல்லையில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தை பீதியுடன் பார்த்தவாறு நான்கு பெண்கள் அவர்களுக்குள் ஏதோ முணுமுணுத்தவாறு கடந்து சென்றனர்.

 

அப்போது தூரத்தில் இருந்து ஒரு குரல்  ‘ஹாய் மெத்தைஸ்’ அந்த நான்கு பெண்களும் அவளை கொலை வெறியுடன் காண ‘சாரி அத்தைஸ் எங்க கூட்டமாக கூட்டணியோடு விஜயம் பண்ணிட்டு வரீங்க’ என கேட்டவாறு அவர்களை நெருங்கி இருந்தால் அவள்.

 

யார் அந்த அவள்???

 

அவள் பெயர் மதியழகி பெயருக்கு ஏற்றார் போல மதியை மயக்கும் அழகுடைய மாய மங்கை அவள்.

 

நெட்ட கொக்கு என சொல்லும் அளவுக்கு உயரமும் இல்லை குள்ள குள்ள வாத்து குவா குவா வாத்து என பாடும் அளவுக்கு குள்ளமும் இல்லை.

 

இன்ச் டேப் வைத்து அளந்து செய்தார் போன்ற உயரம் உயரத்திற்கு ஏற்றார் போன்ற கச்சிதமான உடல்வாகு தோற்றத்திற்கு ஏற்றார் போல நடை உடை பாவனை என அனைத்திலும் கை தேர்ந்த சிற்பியினால் செதுக்கப்பட்ட உயிருள்ள (பொன்) பெண் சிலை.

 

சிலையை செதுக்கிய சிற்பிகளை பற்றி கூற வேண்டுமெனில் குணநாதன் மற்றும் மீனா தம்பதியரின் ஒரே புதல்வி குணநாதன் பட்டினத்தில் வங்கியில் மேலாளராக பணி புரிந்தவர் பணி ஓய்வு பெற்றவுடன் சொந்த ஊரில் தஞ்சமடைந்து விவசாயத்தில் இறங்கி விட்டார்.

 

இந்த நந்தவன புறத்தில் பலருக்கு மதியழகியை பட்டினத்துக்காரியாக தான் தெரியும் சிலருக்கு அழகியாக மிகவும் நெருங்கியவருக்கு மட்டுமே அவள் மதி.

 

இப்போ வாங்க நாம மெத்தைஸ் கிட்ட போவோம் சாரி சாரி அத்தைஸ் கிட்ட.

 

‘ஏண்டி அழகி உனக்கு எம்புட்டு முறை சொல்லுறது மெத்தைனு அழைக்காதனு பட்டினத்துக் காரினு திமிரோ’ என நான்கு பெண்மணிகளில் ஒருவர் திமுற.

 

சற்று அடக்கி வாசித்த அழகி ‘என்னத்த இப்படி சொல்லி புட்ட உன்கிட்ட விளையாட இந்த அழகிக்கு இல்லாத உரிமையா’ என முதலை கண்ணீர் வடிக்கும் அழகியைப் பார்க்கவும் பொங்கி எழுந்த பாலில் தண்ணீர் ஊற்றியது போல் பொங்கி எழுந்த அத்தைஸ் அவளின் கண்ணீரில் புஸ்ஸென்று அடங்கி விட்டனர்.

 

‘பிறகு என்ன அத்தைஸ் அந்த மரத்தை பார்த்து அந்த பயம் பயப்படுறீங்க’ என அழகி கேட்க.

 

நால்வரில் ஒருவராகிய தேவி ‘சத்தமா பேசாத புள்ள அந்த மரத்தில பேய் ஓட்டுபவர் ஒருத்தர் பேய் பிடித்து கொண்டு வந்து ஆணி அடித்து அடக்கி வச்சிருக்காரு அதான் யாரும் அந்த பக்கம் போகவே இல்லை’.

 

‘என்ன அத்தை ராத்திரி மாமன் கூட சேர்ந்து ராகவா லாரன்ஸ் படம் பார்த்தியாக்கும் இங்க வந்து ட்ரெய்லர் ஓட்டிட்டு இருக்க’ என அழகி சற்று ஏற்றி இறக்கி கேலி பேச அதை அறியாத அத்தைகள்.

 

‘நீ பட்டினத்துக்காரி உனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது அமைதியா நடையைக் கட்டு’ என கூறி

ஏதோ சந்தேகம் கேட்க வந்த அழகியின் வாயை அடக்கி குண்டுகட்டாக தூக்கி சென்றனர் அத்தைஸ்.

 

நடக்க இருக்கும் விபரீதம் அறிந்து இருந்தால் அவள் வாயோடு சேர்த்து கை காலயும் கட்டி இருப்பாக.

 

அன்று இரவு நடு நிசி நேரத்தில் போர்வைக்குள் இருந்த உருவம் வெளியே வந்து தன்னை முழுவதும் கருப்பு ஆடைக்குள் மறைத்துக் கொண்டு ஊரே பயந்து நடுங்கும் அந்த ஆலமரத்தை நோக்கி இருள் கவ்வி இருந்த அந்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தது அந்த உருவத்தைக் கண்டு தெரு நாய்களும் தெரித்து ஓடின.

 

மரத்தை அடைந்த அந்த உருவம் அதனை சுற்றி சுற்றி வந்தது.

 

‘எங்க இந்த தேவி சொன்ன மாதிரி ஒரு ஆணியும் காணோம்’ என அழகி யோசிக்க அவள் மனசாட்சி சட்டன என்ட்ரி கொடுத்து, ‘ஒரு ஆணியும் புடுங்க வேணாம் நீ உன் ஓன் மணில சூனியம் புட் பண்ணிக்குற’ என அவளைப் போலவே தாறுமாறாக ஆங்கிலத்தையும் தமிழையும் கொலை செய்துவிட்டு மறைந்தது.

 

மனசாட்சியின் எச்சரிக்கையையும் மீறி மரத்தில் இருந்த பெரிய ஆணியை கண்ட அழகி அதனிடம் நீண்ட நேரம் போராடி பிறகு தன் முழு பலம் கொண்டு அதனை புடுங்கி விட்டாள்.

 

சிறிது நேரத்திற்கு அந்த இடமே அத்தனை நிசப்தமாக எந்த அசைவும் இன்றி இருந்தது தான் மட்டும் ஏதோ ஓவியத்தில் இருப்பது போன்ற உணர்வு அழகிக்கு.

 

சிறிது நேரம் மட்டுமே அந்த அமைதி பிறகு பெரிய இடியுடனும் பேய் காற்றுடனும் வானம் இருட்டிக்கொண்டு வானைக் கிழித்துக்கொண்டு மழை பொழிய அழகியை கண்டு ஓடிய நாய்களை விட வேகமாக ஓட்டம் பிடித்தால் அழகி.

 

அப்போது ஓட்டம் பிடித்த அழகி வீட்டின் பூஜை அறையில் ஓட்டத்தை நிறுத்தியவள் அங்கிருந்த அரைகிலோ விபுதியில் குளித்து விட்டு மீண்டும் தன் போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டாள்.

 

பயத்தில் ‘மாரியாத்தா உனக்கு சிலுவை சாத்துரேம்மா ஓஓஓ மை ஜீஸஸ் உனக்கு ஆடி மாசம் என் சொந்த காசுல திருவிழா நடத்தி கூழு ஊத்துரேன் ப்லீஸ் என்னை மட்டும் காப்பாத்து’ என அனைத்து மத சாமிகள் இடமும் மாற்றி மாற்றி வேண்டுதல்களை வைத்தவள் உறங்கிப் போனாள்.

 

காலை சூரிய ஒளியில் கண்கள் கூச உறக்கம் கலைந்த அழகி படுக்கையிலிருந்து எழாமல் படுத்திருந்தவள் தனக்கு அருகில் ஏதோ இருப்பது போன்ற உணர்வு தோன்ற கண் திறக்காமலே படுக்கையில் கைகளை கொண்டு துலாவி பார்த்தவள் கையில் ஏதோ தட்டுப்பட ‘எலி எலி’ என கத்தி கொண்டே படுக்கையில் மற்றொருபுறம் புரண்டு விழுந்தவள் இடுப்பை பிடித்துக்கொண்டு மீண்டும் ‘எலி எலி’ என கத்த.

 

படுக்கையில் இருந்து வந்த ஒளிக் கற்றை ஒன்று அவள் குரல் வளையை தாக்க அழகியின் வாயில் வாயு பகவான் குடிகொண்டான்.

 

பிறகு படுக்கையில் போர்வைக்கு அடியில் இருந்து வந்த அந்த இரண்டு அடி சிறிய உயிரியை விழி விறிய பார்த்தாள் அழகி.

 

பிறகு அழகியை நோக்கி கை குவித்த அந்த உருவம் ‘வணங்குகிறேன் ராணி தாங்கள் என்னை விடுவித்ததற்கு மிக்க நன்றி தாங்கள் என்னை கண்டு பயம் கொள்ள வேண்டாம். நான் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டேன் என்னை பார்த்து தாங்கள் அலற மாட்டீர்கள் என்று வாக்களித்தால் உங்கள் குரல் வளையை விடுதலை செய்கிறேன்’ என பணிவுடன் கேட்கவும்,

 

அழகி மேலும் கீழும் தலையை ஆட்ட அந்த உருவத்தின் விரல் நுனியில் இருந்து கிளம்பிய ஒளி கற்றை அழகியின் அழகான குரலை சரி செய்தது.

 

பயத்தில் அவள் பேச முடியாமல் திணற அவளுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த அது ‘என்னை கண்டு பயம் வேண்டாம் ராணி’ என  மீண்டும் பணிவுடன் கூறவும் அழகி சற்று தனிந்திருந்தால்.

 

‘ஆமா நீ யாரு எங்க இருந்து வந்த உன்ன பாத்தா மனுஷன் மாதிரி இல்லையே’ என அவள் கேட்க.

 

‘ஆம் ராணி நான் மாய உலகை சேர்ந்த மாயாவி இனத்தைச் சார்ந்தவன் இந்த உலகை சுற்றி பார்க்க வந்து ஒரு சாமியார் இடம் மாட்டிக் கொண்டேன் அவர் செய்த வேலைதான் என்னை மரத்தில் அடைத்தது அங்கு விளையாடும் சிறுவர்கள் பயம் கொள்வார்கள் என்று தான் என்னை நானே மறைத்துக் கொண்டேன் என அந்த உருவம் கூறவும்’..

 

‘ஆமா உனக்கு தான் இவ்வளவு சக்தி இருக்கே நீ தப்பிச்சு போகலாம்ல’ என அழகி கேட்க.

 

‘என் சக்தியை நான் என் கரம் கொண்டு தான் வெளிப்படுத்த முடியும் ராணி அவர் சிறை செய்தது என் கரத்தை தான். அதுமட்டுமின்றி என் சக்தி எனக்கு எந்த உதவியும் செய்யாது ராணி இது எங்கள் உலகின் சட்டம் எங்களின் சக்தி பிறருக்கு மட்டுமே உதவ பயன்படுத்த முடியும்’.

 

‘உனக்கு பேர் இல்லையா’ என அழகி கேட்க…

 

‘என் பெயர் பவ் சிக்கா பவ் ராணி’ என கூறவும்.

 

அழகி புரண்டு புரண்டு சிரிக்கத் தொடங்கிவிட்டாள் ‘என்னடா சொல்ற எங்க ஊருல குச்சிமிட்டாயும் குச்சி ஐஸும் அடுத்தவன பாக்க வச்சு வெறுப்பேத்தி சாப்பிடும்போது பாடுற பாட்டு டா இது இதயா பேரா வெச்சி இருக்காங்க’ என அவள் கேலியாக கேட்க.

 

பவ் சிக்கா பவ் முகம் சுருங்க சிரிப்பை நிறுத்தினால் அழகி.

 

‘சரி டா இப்போதுதான் வெளியே வந்து விட்டியே உன் உலகத்துக்கு போகாமல் இன்னும் இங்க என்ன பண்ற’- இது அழகி.

 

‘அது இல்ல ராணி எங்க உலகத்தில உதவி செஞ்சவங்களுக்கு பதில் உதவி செய்யாமல் அவர்களை விட்டு வரக் கூடாது தங்களுக்கு தேவைப்படும் உதவியை உங்களுடன் இருந்து செய்து கொடுத்து என் நன்றி கடனை தீர்த்தால் தான் நான் என் உலகத்திற்கு செல்ல முடியும்’ என கூறினான் பவ் சிக்கா பவ்.

 

அவன் சொல்லி முடிக்கவும் மனதில் பல திட்டங்களை வகுத்துக் கொண்டாள் அழகி.

 

பெரிய ஆச்சரியத்துடன் ‘பரவால்லடா உங்க உலகம் ரொம்ப நல்லா இருக்கே கிடைச்ச சக்தி தப்பா பயன்படக் கூடாது என்று கட்டுப்பாடு உதவி செஞ்சா பதில் உதவி செய்யணும் நல்லொழுக்கம் நிறையப் படைத்தவர்கள் இருக்கீங்க முடிஞ்சா என்னையும் கூட்டி போடா’ என அழகி கூற.

 

‘முடியாது’ என தலையை ஆட்டினான் பவ் பவ்.

 

நீண்ட பெருமூச்சுடன் ‘சரி விடுடா இனி ராணி எல்லாம் வேண்டாம் அழகினு கூப்பிடு நாம் நண்பர்கள்’ என கைநீட்ட தன் குட்டி கரங்கள் கொண்டு அழகியின் கையை தழுவிக்கொண்டான் அவளின் குட்டி நண்பன். (அழகியின் அகராதியில் நண்பன் என்றால் அடிமை என்று அர்த்தம் இது தெரியாமல் சிக்கி கொண்டது பவ் சிக்கா பவ்).

 

‘சரி தங்களுக்கு என்ன உதவி வேண்டும் கூறுங்கள் ராணி’ என பவ் பவ் கூற அழகி முறைப்பதைக் கண்டு ‘சரி சொல்லு அழகி உனக்கு என்ன உதவி வேண்டும்’ என அவளைப் போலவே ஒருமையில் பேசியது அடிமை .

 

‘என் அத்தை பையனை கரெக்ட் பண்ணனும் ஐடியா கொடு டா’ என சாஸ்டாங்கம் ஆக அவன் காலில் விழுந்தால் அழகி இப்போது சிரிப்பது அவனின் முறையானது.

 

இருவரும் கூடி கூடி பல திட்டங்களைத் தீட்டினார்கள்.

 

பிறகு அடிமையும் அழகியும் அவர்களின் திட்டங்களை செயல்படுத்த கிளம்பினர்.

 

அழகியின் அடர்ந்து படந்த கூந்தலில் மறைந்து கொண்டான் சிறியவன்.

 

வயலில் பவ் சிக்கா பவ் வின் சக்தியை எவ்வாறு பரிசோதிப்பது என சிந்தித்தவாறு நடந்து சென்றவளின் கண்களில் சிக்கினார்கள் அழகியின் சோதனை எலிகள்.

 

இவள் ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டு பவ் பவ் வை ஏவினாள்.

 

அவனும் அவள் கூறியது போலவே செய்ய வயலில் வேலை செய்து கொண்டிருந்த  அத்தைகள் சாப்பிட தூக்கு வாளியை தேடி செல்லும் போது தூக்கு அந்தரத்தில் பறந்து இவர்களுக்கு ஆட்டம் காட்ட அரண்டுப் போன அத்தைகள் ஓடியே விட்டார்கள்.

 

துண்ட காணும் துணியக் காணும்னு ஓடுவது என்றால் என்ன என்பதனை இன்று கண்னெதிரே பார்த்த அழகி சிரித்து சிரித்து கண்களில் வெள்ளப் பெருக்கே ஏற்ப்பட்டது.

 

சிறியவன் கேட்ட கேள்வியில் அழகியின் சிரிப்பு நின்றது.

 

‘ஏன் அழகி நீ குளிச்சி எம்புட்டு நாள் ஆச்சு’ பவ் பவ் கேட்க

 

‘ஏன் டா கேக்குற’

 

‘கப்பு தாங்கள புள்ள’ பவ்பவ் கூறிய விதத்தில் மீண்டும் சிரித்து விட்டாள் அழகி(சமாலிஃபிகேஷனாமாம்).

 

………………………….

 

அன்று மாலை யாருமற்ற வீதியில் வலது கையில் வேட்டியின் ஒரு நுனியைப் பிடித்தவாறு கம்பீரமாக நடந்து கொண்டிருந்தான் அழகியின் அத்தை மகன் கௌதம் அர்ஜுன்ரெட்டிக்கு சவால் விடும் ஆணழகன்.

 

 

சற்று தூரம் நடந்து கொண்டிருந்த அவன் அருகில் ஏதோ அரவம் கேட்க திரும்பி பார்த்தான். என்றுமில்லாத அமைதியுடன் அழகி அருகில் நடந்து வர என்ன புயல் பியானோ வாசிக்குது ஏதோ சரி இல்லையே என மனதில் நினைத்தவன்.

 

வேக நடை போட அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது ‘மாமா நில்லு நில்லு’ என சொன்னவள் ஒரு அளவுக்கு மேல் பொறுக்கமுடியாமல் பவ் பவ் வை ஏவ அது தன் சக்தி கொண்டு அவன் நடையை தடை செய்தது.

 

பிறகு அவனை நெருங்கியவள் ‘மாமா எனக்கு எப்போ ஓகே சொல்லுவ நானும் சமஞ்ச நாளுல இருந்து உன் பின்னுக்க முன்னுக்க ஊடாலனு டிசைன் டிசைனா திரிஞ்சிட்டேன் நீ என்னடான்னா கண்டுக்கவே மாட்டேங்கிற’ என உச்ச ஸ்தானத்தில் கத்தியவள் நான்கு துளி கண்ணீரை சிந்திவிட்டு மீண்டும் பவ் பவ் வை ஏவ அது அவன் நடையை விடுவித்தது.

 

அழகி பேசும் போதே அவள் கூந்தலில் மையம் கொண்டு ஊஞ்சலாடும் பவ் சிக்கா பவ் வை பார்த்தவன், அழகி பேசி முடித்துவிட்டு வேக நடையுடன் திரும்பவும் ஒரே புடியில் அவன் கையில் கேட்ச் ஆகினான் சிறியவன்.

 

பவ் சிக்கா பவ் அவன் கையில் பொறியில் சிக்கிய எலி என ஆனது.

 

‘அடியே அழகி நில்லுடி நில்லுடி’ என பவ் பவ் எவ்வளவு கத்தியும் அழகி நிற்காமல் சென்று விட்டாள் ‘கிராதகி’ என அவளை திட்டியவன் அடக்கமாக கௌதம் இடம் அனைத்தையும் கூறி முடிக்கவும் கௌதமிற்க்கு இப்போது அனைத்தும் பிடிப்பட்டது.

 

தன் காதலைப் பெற புதிய அடிமையை அதுவும் சிறிய அளவில் தன்னை விட வலுவான அடிமையை களம் இறக்கி இருக்கிறாள், என இதனை நினைத்தவன் இதழில் உள்ளுர மோகன புன்னகையும் தோன்றி மறைந்தது.

 

பிறகு அழகியின் அடிமையை உள்ளங்கையில் வைத்து ஒரு பிழி பிழிந்து ‘இனி தன்னிடம் வாலாட்ட கூடாது’ என எச்சரித்து அனுப்பி வைத்தான் விட்டால் போதுமென ஓடியே விட்டான் பவ் சிக்கா பவ்.

 

கௌதம் அறிந்து இருக்கவில்லை விரைவில் தானும் அடிமையின் வரிசையில் இடம் பெறப்போவதை.

 

மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு சென்று கௌதம் குளிக்கும் போது அவன் ஆடையை திருடி அவனை காதலுக்கு சம்மதிக்க வைத்து விட வேண்டும் என மிகவும் பழைய ஐடியாவை அரங்கேற்ற அழகியும் அவள் அடிமையும் கிளம்பி சென்றனர்.

 

ஆடையை ஆட்டையை போட்டு திரும்பவும் வெற்று உடலில் ஈரம் சொட்ட சொட்ட இடுப்பில் ஒரு துண்டுடன் பிரிட்ஜில் இருந்து எடுத்த ஆறடி மாசா பாட்டில் போல வந்து நிற்பவனை பார்க்க அழகிக்கு நாணத்தில் உடல் நடுங்க பவ் பவ் க்கு பயத்தில் நடுங்கியது.

 

‘ஏண்டி அழுக்கு மூட்டை அழகி ஓடியா ஓடியா அவன் கையில சிக்கன ஜூஸ்தான் ஓடியாடி’ என அலறியவாறு ஓடியே விட்டது அழகியின் அடிமை.

 

ஓடியவன் கூறியதுபோல கௌதம் அழகியை இறுக்கி அணைத்து ஜூஸ் போடாத குறைதான்.

 

கௌதமின் முதல் தீண்டலில் விகித்துப்போய் இருந்தாள் அழகி.

 

அவளின் உடல் உறைந்து போக இதழ் வறண்டு வார்த்தைகள் மௌன விரதம் மேற்கொண்டன.

 

அவளின் வறண்ட இதழுக்கு அவளின் காதல்மன்னன் தண்ணீர் பாய்ச்ச கண்கள் இரண்டும் மௌனகீதம் பேச இதழ்கள் இரண்டும் ஒன்று காதலை யாசித்தும் மற்றொன்று காதலை வாசித்தும் நின்றன.

 

அவன் உடலின் ஈரம் இவள் ஆடையில் ஒட்டி உறவாட சிறிது நேரத்திற்கு பிறகு சுயநினைவு அடைந்த அழகி அந்த ஆற்றங்கரையில் தனியே நின்று இருந்தாள்.

 

பிறகு நடந்தவை அனைத்தையும் நினைத்து நாணம் புன்னகையுடன் வீடு வந்து சேர்ந்தவள் உறங்கி போனாள்.

 

காலை எழுந்த அழகிக்கு அதிர்ச்சி வீடே விழாக்கோலம் பூண்டு அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

 

………………………………

 

கௌதம் அறையில் கௌதமை உறக்கத்திலிருந்து எழுப்பிய பவ் பவ் அழகி தற்கொலை செய்துகொள்ள கிணத்தடிக்கு சென்றதாகவும், தான் எவ்வளவு முயன்றும் தன்னை எதுவும் செய்யக்கூடாது என கட்டளை இட்டதாக கூறவும் போர்வையை வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தவன் கிணற்றை நோக்கி ஓடினான் கௌதம்.

 

அங்கு அழகி கிணற்றின் விளிம்பில் நின்றுகொண்டு ‘வந்துட்டியா மாமா எவ்வளவு சொல்லியும் நீ என் காதலையும் என்னையும் ஏத்துக்கவே இல்லல’ என கேட்டவாறே ‘எனக்கு கல்யாண ஏற்பாடு பண்றாங்க மாமா உன்ன தவிர வேறு யாரும் எனக்கு வேண்டாம்’ என கூறியவள் அவனை பார்த்தவாறே பின்புறமாக கிணற்றில் சரிந்தாள்.

 

நாடகம் என்று நினைத்த பவ் பவ் அவள் உண்மையில் குதிக்க மயங்கி விழுந்துவிட்டான்.

 

அவள் கிணற்றில் விழவும் ‘மதி’ என்ற அலறலுடன் கௌதம் கிணற்றில் குதித்து இருந்தான்.

 

கிணற்றில் இருந்து அழகியை அள்ளிக் கொண்டு வந்தவன் எவ்வளவு முயன்றும் அழகியின் மயக்கம் தெளியவில்லை.

 

முதலுதவி செய்ய அவன் இதழ் நோக்கி குனிய கண் விழித்தாள் அவனின் மதி.

 

தான் கண் முழித்ததும் வாரி அனைத்து முத்தமழைப் பொழிவான் என நினைத்த அழகி வாங்கிய அறையில் கன்னத்தைத் தேய்த்தார் போல ஏமாந்து நின்றாள்.

 

‘முட்டாளா டீ நீ கொஞ்சம் கூட கூறு இல்ல உனக்கு, காதலாமாம் காதல் பொல்லாத காதல்’ என கேசத்தை கோதி தன்னிலை அடைந்தவன்.

 

‘உன் மேல காதல் இல்லாமயா டீ என் மதி மயக்குன உன்ன ஊரே அழகினு கூப்பிடும் போது உன் அழகுல மயங்குனவன் மதி னு கூப்புட்றேன்’.

 

‘கல்யாண ஏற்பாட பார்த்த மாப்பிள்ளை யாருனு கேட்டியா?’ என்க 

 

அழகியின் இதழ்கள் ‘இல்லை’ என பிதுங்க தன்னிலை மறந்தான் கௌதம்.

 

மீண்டும் அங்கு ஒரு ‌காதல் காவியம் இதழ்களின் ஊடலில் இயற்றப்பட்டது.

 

இப்போது புரிந்தது அழகிக்கு தன் காதல் மன்னவனே ஆசை மனவாளன் என மேலும் மேலும் அவனுள் புதைந்து போனாள் மங்கை அவள்.

 

சற்று நேரத்திற்கு பின் அழகி தன் தாவனியில் இருந்த ஈரத்தை பிழிந்து முகத்தில் தெளிக்க மயக்கம் தெளிந்து கண் விழித்தான் பவ் பவ்.

 

அழகின் சிரித்த முகமே அவனுக்கு சொல்லாமல் சொல்லியது தன்னுடன் சேர்ந்து கௌதமும் அழகியின் அடிமையான கதையை.

 

அடுத்து வந்த ஒரு மாதத்தில் அழகி மற்றும் கௌதமின் திருமண வைபவம் இனிதே முடிய.

 

பவ் சிக்கா பவ் அவன் உலகிற்கு செல்லும் நாளும் வந்தது.

 

அழகி எவ்வளவு அழுது புரண்டும் பவ் பவ் கேட்டுக்கொள்ளவில்லை தன் உலகிற்கு போயே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான்.

 

இவர்களின் பாசப்பிணைப்பை தூர இருந்து பார்த்த கௌதம் அவர்களுக்கு அருகில் வந்து ‘எதுக்கு இப்போ இவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்க, இவன புடிச்சி மறுபடியும் நான் மரத்தில ஆணி அடிக்கிறேன். நீ திரும்ப ரிலீஸ் பண்ணு’ எனக் கூற, பவ் சிக்கா பவ் ஓட, அவனை  வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு கௌதம் துரத்தவும் என அவர்கள் ஓடிப்பிடித்து விளையாட,

 

அழகி தன் இரண்டு அடிமைகளின் கொண்டாட்டத்தையும் பார்த்து அகம் மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

 

முற்றும்…..

   

 

Leave a Reply

error: Content is protected !!