ishq wala love 2
ishq wala love 2
அத்தியாயம் 2
நான் வேண்டும் என்று நினைக்கும் ஒன்று, நான் நினைத்து முடிப்பதற்குள் என் கையில் வந்து தவளவேண்டும். அது பொருளோ, பெண்ணோ, பொன்னோ, நிலமோ அது எதுவாகியினும்… எனக்கு எட்டாத உயரம் என்று ஒன்று கிடையவே கிடையாது. ஏனென்றால் நானே அனைத்தையும் விட உயர்ந்தவன்.
Dude Tom Jacobs
பெயர் : டாம் ஜாகப்ஸ்
வயது : எல்லாம் காதல் கடலில் விழுந்து நீச்சலடிக்க ஏற்ற வயது தான் 29
உயரம் : ஆறடி நான்கு அங்குலம்
தொழில் : உலகின் மிகசிறந்த ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவன். உள்ளூர் அழகியில் இருந்து வெளிநாட்டு கிழவிகள் வரை இவர்களது குடும்ப பிராண்ட் “தி புளு மூன்” பெயரில் ஒரு பொருளாவது, உடையாவது வாங்கி விட மாட்டோமா என ஏங்கி கொண்டிருக்கும் மிக பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் ஆண் வாரிசு மற்றும் அந்நிறுவனத்தின் அறுபது சதவீத ஷேர் வைத்திருப்பவன்.(ஓரு கைப்பையின் விலை ஆரம்பமே இந்திய மதிப்பில் ஐந்து லட்சம்)
ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ் : தற்போது சிங்கிள் பட் காம்பிளிக்கேட்டடு…
“அடேய்களா… கொஞ்சம் விடுங்க டா என்னை… டேய் மாமிச மலைகளா….” என்று எழில் கத்திக்கொண்டிருக்க அவர்களை சுற்றி ஒளி வெள்ளம் மின்ன ஆரம்பித்தது.
‘என்னங்க டா மறுபடியும் கூரை இடிஞ்சு விழுந்து நேரா மின்னல் உள்ளேயே அடிக்குதா…’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளை அணைத்திருந்த இருவருமே விலகி அவளை நடுவில் நிற்க வைத்துக்கொண்டு தங்களை சுற்றி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த பாபராஸிக்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
அந்த ஒளி வெள்ளத்திற்க்கு நடுவே தனக்கு இடதுபுறத்தில் நின்று கொண்டிருக்கும் அவனை யாரென்று அறிவதற்காக நிமிர்ந்துபார்த்தாள் எழில்.
பார்த்தவுடனே தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவனொரு பாரின் சரக்கும் நம் நாட்டு பிஸ்லேரி தண்ணியும் கலந்து செய்த ஆங்கிலோ இன்டியன் என்பது. அவனை எங்கோ பார்த்திருக்கிறாள் ஆனால் சட்டென்று ஞாபகம் வரவில்லை. யாரு இவன் என்ற யோசனையொடு அவனை எழில் பார்த்து கொண்டிருக்கும்போதே,
“விக்ரம் ஜி யுவர்ஸ் நெக்ஸ்ட் ப்ராஜக்ட்?” என்ற நிருபரின் கேள்வி மூலம் அவளது மூளையில் சட்டென்று மின்னல் வெட்டியது.
இவன் “விக்ரம் நேத்தா” பாலிவுட் தயாரிப்பாளர்களின் கனவுகண்ணன். இருப்பத்து ஒன்பதே வயதான வெற்றி இயக்குநர். வெறும் மூன்றே படங்களில் இந்திய திரையுலகையே தனது புறம் திரும்பி பார்க்க அல்ல மண்டியிட வைத்தவன்.
ஏனெனில் முதல் படம் பற்றிய அறிவிப்பு வந்த போதே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவன். இருக்காதா பின்னே ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மட்டுமே ப்ரொடியுஸ் செய்யும் “தி புளு மூன்” பிராண்ட் நிறுவனம் அதாவது எழிலுக்கு வலது புறம் இருக்கும் டாம் மின் குடும்ப நிறுவனம் இவனது படத்துக்கு அதுவும் முதல் படத்திற்க்கே ப்ரொடியுஸ் செய்ய முன்வந்தது, அதோடு மட்டுமில்லாமல் அந்த வருடத்திற்கான உலக அழகி போட்டியில் வென்ற இந்திய பெண் மனீஷா அந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த, அதோடு துணுக்கு செய்தியாக அந்த பெண் அப்பொழுது இந்த கலியுக கண்ணன் டாம்மை வேறு டேட் செய்துக் கொண்டிருந்தாள்.
அடுத்து நமது செய்தியாளர்களின் கைங்கரியாத்தால் இந்த டாமும், விக்ரமும் பாலிய சினேகிதர்கள் என்று அடுக்குஅடுக்காக பல விஷயங்கள் தெரியவந்து படம் ஆரம்பிக்கும் போதே அதிரிபுதிரியாக ஆரம்பித்து மாபெரும் வெற்றியும் பெற்று 100 கோர் கிளப்பில் சேர, விக்ரமை பாலிவுட் இருகரம் நீட்டி அணைத்து கொண்டது. அதற்கு அடுத்து வந்த இருபடங்களும் அதே போன்று பெரும் வெற்றி பெற்றது. முதல் படம் மட்டுமே டாம் தயாரித்தான்.
இவ்வாறு விக்ரமை பற்றி எழில் அறிந்த விக்கிபீடியா அவளுக்கு ஞாபகம் வந்தது.
அதற்குள் அவர்களை சுற்றி இருந்த கூட்டம் மெல்ல கலைந்து சென்று கொண்டிருந்தது. சுயநினைவிற்கு திரும்பியவள் இருவரிடமிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு முன்வந்து அவர்கள் இருவரையும் எதோ அவளின் முறை பையன்களை போன்று முறைமுறைவென்று முறைக்க,
அவளை பார்த்து புருவத்தை சுருக்கிய டாம் “என்ன ஆச்சு?” என்று ஆங்கிலத்தில் வினவ அப்பொழுது தான் அவளை கவனித்த விக்ரம் இவள் யாரென்று கேட்க,
எழில்மதியோ ‘அடபாவி டேய் அப்ப நான் யாருனு தெரியாம தான் ஒடிவந்து கட்டிபிடிச்சு என்னை பரலோகத்துக்கு அனுப்ப ட்ரை பண்ணியா?’ என்பதை போன்ற பார்வையை விக்ரமை நோக்கி வீசினாள்.
“ஷி இஸ் மட்டி…” என்று எழில்மதியின் பெயரை கொலை செய்தவாறு விக்ரமிடம் அறிமுகம் படுத்தி வைத்தான் டாம். எழில்மதி டாம்மை நோக்கி கொலைவெறி பார்வையை செலுத்தியவள்,
“ஐ ஆம் எழில் மதி.நாட் மட்டி..” என்று பல்லை கடித்தவாறு ஆங்கிலத்தில் கூற,
எழில் என்னமோ வடிவேல் வேடத்தில் வந்து “சார்..சார்…ஐ ஆம் நாட் ஆஃப்ரிக்கன் மங்கி.. ஐ ஆம் பாவம் நார்மல் மனிசன் ஃப்ரம் இந்தியா..” என்று கூறியதைப் போல் இருவரும் தங்களுக்குள் எதுவோ பேசியவர்கள் கலகலவென்று சிரித்தனர்.
எதோ தன்னை தான் கலாய்க்கிறார்கள் என்று புரிந்தது. மீண்டும் அவர்களை முறைக்க உடனே இருவரும் வந்து அவளை முன்பு போல் தோளோடு அணைத்துக்கொண்டு சிரித்தவர்கள்,
(டாம் மற்றும் விக்ரம் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொள்வர்.. ஆனால் இது ஒரு தமிழ் நாவல் என்பதால் இனி அனைத்தும் தமிழில்..)
“இனிமேல் உன் பெயர் ஜெர்ரி.. காரண பெயர்..” என்று சிரித்தவாறு ஒருவருக்கொருவர் ஹை பை கொடுத்துகொள்ள, எழில் பேய் முழி முழித்தாள்.
அவர்கள் இருவரும் தோளோடு அணைத்தவுடனே ஜெர்க் ஆனவள் அவர்களது உரிமையான தோழி போன்ற அழைப்பில் முழிக்க ஆரம்பித்தாள்.
“என்னங்க டா நடக்குது இங்கே? இவனுங்க ரெண்டு பேறும் சரியான திமிருபிடிச்சவனுங்கனு தானே இவனுங்க வரலாறு இருக்கு… அப்புறம் எப்படி எங்கிட்ட மட்டும் இப்படி…?” மனதிற்குள் நினைக்கிறேன் பேர்வழி என்று வெளியே சத்தமாக சொல்லிவிட இருவரும் அவளை புரியாத பார்வை பார்க்க அதிலேயே அவர்களுக்கு தமிழ் தெரியாது என்று புரிய அதை வாய் வார்த்தையாக தெரிந்துகொள்ளவும் விரும்பியவள்,
“உங்களுக்கு தமிழ் தெரியாதா?” என்று ஆங்கிலத்தில் கேட்கவும், அவர்கள் இல்லை என்று தலையாட்ட எழில் குஷியானாள்.
அவர்களின் மர்ம சிரிப்பை பார்த்திருந்தால் சுதாரித்து இனிவரும் அனார்த்தங்களில் இருந்து அவள் தப்பிருக்கலாம். விதி யாரை விட்டது…
ஒரு வழியாக விமான நிலையத்தை விட்டு மூவரும் வெளியேறினர். விட்டால் எழில் என்னமோ எங்கயோ ஓடிபோய்விடுவாள் என்பதை போல் இருவரும் அவளை அணைத்தாவாறே அழைத்து வந்தனர்.
அவள் விடுங்க என்று வாய்விட்டு சொல்லியும், அவர்களிடமிருந்து விலக விதவிதமாக அசைந்தும் அவர்கள் இவளை விடவில்லை. தப்பான அணைத்தல் இல்லை தான் இருந்தாலும் இதெல்லாம் இவளுக்கு புதிது அல்லவா… உடன் பிறந்த தம்பி, தந்தையிடமே விலகி நின்று பழகும் நம் பெண்களுக்கு இது கொஞ்சம் அதிகம் தான்.
இந்த டாம்மின் அக்கா ரோஸ் இவளை அணைத்த போதே கூச்சப்பட்டு நெளிந்துக் கொண்டு நின்றவள் ஆயிற்றே. இரு ஆண்களின் தோள் அணைப்பில் எரிச்சலாக வந்தது. அதையும் மீறி எதோ ஒரு உணர்வு அவளை எங்கோ அழைத்து செல்கின்றது… எதையோ அவளுக்கு சொல்ல விழைக்கின்றது.
“சார் ரெண்டு பேரும் கொஞ்சம் விட்டிங்கான நான் போய் ட்ரைவரை கார் எடுத்துட்டு வர சொல்லுவேன்” என்று பல்லை கடித்துக்கொண்டு கூற,
“வேணாம் ஜெர்ரி… இதோ நம்ம வண்டி வந்துருச்சு.” என்று விக்ரம் கூறுவதற்கும், அவர்கள் முன் ஏழுகோடி மதிப்புள்ள ராயல் ராயஸ் கார் வழுங்கிக் கொண்டு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
அந்த காரின் புற தோற்றத்திலும் அதன் பிரமாண்டத்திலும் பிரமித்து நின்றவள் தன்னை அறியாமல் அருகில் சென்று அதை தொட “இந்த கார் உனக்கு பிடிச்சிருக்கா ஜெர்ரி?” என்று ஆசையுடன் ஒலித்த டாம்மின் ஹஸ்கி குரலில் சுயநினைவிற்கு வந்தாள்.
‘ஐய்ய்ய.. . எழிலு எப்பயும் போல சில்லுண்டி தனமா நடந்துக்கிட்டயே.. ஆமாம் இவன் என்ன அவன் பொண்டாட்டிகிட்ட பேசுற மாதிரி ஹஸ்கி வாய்ஸில் ஆசையா கேட்குறான். இவனுங்க ஜியோகிராபி, ஹிஸ்ட்ரி எதுவும் சரி இல்லை வேற… என்ன ஒன்னு இவனுங்க ரெண்டு பேரை விட 3 வயசு முத்தவளா இருக்கனால இவனுங்க எல்லாத்துக்கும் அக்காவா போயிட்டேன்.’ என்று நினைத்து தன்னை ஆசுவாசம் படுத்தி கொள்வதற்குள்ளே, நேரம் காலம் தெரியாமல் அவளது எண்ண அடுக்குகளிருந்து
“தன்னை விட பதினைந்து வயது மூத்த பிரபல பெண் வக்கீலை டேட் செய்து கொண்டிருக்கும் 23 வயதான தீ ஃபுளு மூன் நிறுவன வாரிசு டாம் ஜகாப்ஸ்” என்று அவள் வாசித்த செய்தி கண்களுக்கு முன் ஒட , தலையை குலுக்கி அதை விரட்டினாள்.
“ஆர் யூ ஒக்கே ஜெர்ரி?” என்ற இருவரது குரலிலும் அவர்களை நோக்கி திரும்பிய எழில் பயத்துடனே ஒன்றும் இல்லை என்று தலையாட்ட, இருவரும் ஒருவருக்கொருவர் எழிலின் கவனத்தை கவராதவாறு பார்வையை பறிமாறிக் கொண்டவர்கள் “போலாமா?” என்பதைபோல் விக்ரம் அவளிடம் தலையாட்டி கேட்க,
“இல்லை.. இல்லை… நான் என் வண்டில முன்னாடி போறேன். நீங்க உங்க வண்டில பின்னாடி தொடர்ந்து வாங்க.” என்று அவளது முகத்தில் எவ்வளவு முயன்றும் முடியாமல் சிறிது பயம் தெறிக்க கூற..
அவளது முகத்தில் தெரிந்த பயத்தில் விக்ரம் மற்றும் டாம்மின் முகமும் இருகியது. முயன்று தன்னை நிலைப்படுத்திய டாம் அவளை பார்த்து “உன் ட்ரைவர்க்கு கால் பண்ணி இந்த வண்டியை பாலோ பண்ணி வரசொல்லு.” என்று அழுத்தமாக கூற,
அவனது அழுத்தமான குரலில் ஏனென்று தெரியாமலே அவளது பயம் அதிகமானது. இவர்களை எதிர்த்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் இந்த டாம் சென்னை வந்திருப்பதே அவர்களது ட்ரஸ்ட்க்கு உதவி செய்வதற்க்காக தான். பாதிக்கப்பட்ட, உற்றார் உறவினர்களால் கைவிடப்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு நன்கு வசதியான மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய ஒரு கட்டிடம் கட்டித்தர தான்.
ஏனவே அவனது கோவத்தை சம்பாதிக்க விரும்பாதவள் சரி என்பதை போல் தலையாட்டியவள் சிறிது தூரம் தள்ளிவந்து தனது ட்ரைவருக்கு அழைத்து விசயத்தை கூறினாள், அப்படியே லதா அம்மாவுக்கும் அழைத்து சில நிமிடங்களில் தாங்கள் அந்த இடத்தை அடைந்துவிடுவதாகவும் தாங்களுடன் விக்ரமும் வரும் விசயத்தையும் கூறியவள் வரவேற்க தயாராக இருக்குமாறு கூறிவிட்டு அவர்களை நோக்கி சென்றாள்.
இருவரும் அவளை பார்த்தவாறு தான் எதையோ பேசிக் கொண்டிருந்தனர். அவள் அருகில் வந்தவுடனே தங்களது உரையாடலை நிறுத்தியவர்கள், இருவரும் ஒரே நேரத்தில் தலையாட்டி “போலாமா?” என்பதைபோல் கேட்க, அவள் தலையாட்டவும் அவர்களது ஒட்டுநர் வந்து கதவை திறந்துவிட முதலில் விக்ரம் ஏறி அமர்ந்துக் கொள்ள அடுத்து டாம் ஏறுவானோ என்பதைபோல் எழில் அவனை பார்க்க, அவனோ கண்டுக்கொள்ளாமல் நிற்க வேறு வழி இல்லாமல் எழில் விக்ரம் அருகில் அமர, அவளுக்கு அருகில் டாம் வந்து அமர்ந்தான்.
ஆனால் முன்பு இருந்த ஒரு சினேகபாவம் இருவரிடத்திலும் தற்போது இல்லை.
கதவை மூடிவிட்டு ஒட்டுநர் வண்டியை இயக்க ஆரம்பிக்க, “###### ஹோட்டலுக்கு போங்க அண்ணா..” என்று எழில் கூற,
அவர் “டிக்கே பேட்டி…” என்று கூற,
‘ஓஹ்.. இவரும் ஸ்டார் பிளஸ் சேனல் தானா..’ என்றவள், தனக்கு அருகில் இருப்பதால் மிக பெரியதாக தெரியும் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் எழிலை கண்டுக்கொள்ளவில்லை. தங்களது கையிலிருந்த அலைபேசியில் முழ்கி இருந்தனர்.
ஏன் என்றே தெரியாமல் இருவருக்கும் இடையில் அமர்ந்திருப்பது எதுவோ பயமாக இருந்தது. அவர்களின் உருவமா? அவர்களது செல்வநிலையா? அல்லது இந்த டாமின் கடந்த கால லீலைகளா எதுவோ ஒன்று அவளை மிரட்டியது.