Ithayamnanaikirathey-3
Ithayamnanaikirathey-3
இதயம் நனைகிறதே…
அத்தியாயம் – 3
விஷ்வா, இதயா அவர்கள் இருவரின் மனதிற்கும் வலிமை என்பது போல அவர்கள் மனம் சபத மிட்டுக் கொண்டது.
ஆனால், அவர்கள் உடலால் அவர்கள் மனதின் வலிமைக்கு ஒத்துழைக்க முடியவில்லை.
அவன் உடல் வருத்தத்தில் இறுகியது.
அவள் முகம் மடிக்கணினியில் புதைந்திருந்தாலும், அவள் உடலோ சற்று முன் நடந்த உரையாடலின் தாக்கத்தில் நடுங்கியது.
அவன் முகம் அவளை பார்ப்பதை தவிர்த்தாலும், அவன் கருவிழிகள், கீழே இறங்கி, அவளை நோட்டமிட்டது.
நடுங்கி கொண்டிருந்த அவள் தேகத்தை அணைத்து ஆறுதல் கூற, அவன் மனம் விழைந்தது.
‘ஒண்ணுமில்லை இதயா. எல்லாத்தயும் சரி செஞ்சிரலாம்.‘ அவள் நடுக்கத்தை போக்க அவன் கைகள் பரபரக்க, ‘இதெல்லாம் செய்ய, இதயாவுக்கு இவன் யார்?’ என்ற கேள்வி அவனை சுட்டது.
எதுவும் செய்ய வழியின்றி, என்ன பேசுவது என்று தெரியாமல் தன் முன் இருந்த தண்ணீர் பாட்டிலை அவன் பக்கம் தள்ளினான் விஷ்வா.
அவன் கரிசனம் ஒரு பக்கம் அவளை உருக்க, மறுபக்கம் அவள் கவுரவம் அவளை இடிக்க, தன் கண்களை இறுக மூடி தன்னை சமன் செய்து கொண்டாள் இதயா.
எதுவும் நடக்காதது போல் அவனை ஒதுக்கி விட்டு, தன் மடிக்கணினியில் முழு கவனத்தை செலுத்தினாள் இதயா.
“வேலையை கவனிப்போமா?” அவள் கேட்க, அவன் வேறு எதுவும் பேசாமல், வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டுமே பேசினான்.
இருவரும் உணர்ச்சியின் பிடியிலிருந்து வெளியே வந்திருந்தனர்.
சில நிமிடங்கள், சில மணி நேரமாக அவர்கள் வேலை கடந்து கொண்டே இருந்தது.
“சாப்பிட போவோமா?” அவன் கேட்க, “நான் நித்திலா கூட போறேன்” என்று அவள் கிளம்ப, “சேர்ந்தே போறோம்.” அவன் அழுத்தமாகவே கூறினான்.
அவள் இதழ்கள் ஏளனமாக மடிந்தது.
“சேர்ந்து வாழ முடியாதவங்க சேர்ந்து சாப்பிட்டு என்ன ஆகப்போகுது?” அவனை வார்த்தை என்னும் வாள் கொண்டு கிழித்துவிட்டு அறையை விட்டு வெளியேற எத்தனித்தாள் இதயா.
“அதுக்கு காரணம் நீ.” அவன் குற்றம் சாட்ட, “நானா?” அவள் திரும்பி அவனை பார்த்து எகிறினாள்.
“ஆமாம். உன் திமிர். உன் அகம்பாவம். உன் பிடிவாதம்.” அவன் அடுக்கி கொண்டே போக, அவள் உதடுகள் அவனை பார்த்து ஏளனமாக வளைந்தது.
மேலே பேசுவதற்கு எதுவுமில்லை என்பது போல தோள்களை குலுக்கி கொண்டு, அவள் நடக்க ஆரம்பித்தாள்.
வெளியே சென்று கொண்டிருக்கும் அவளை அவன் ஆழமாக பார்த்து கொண்டிருந்தான்.
“நித்திலா சாப்பிட போலாமா?” இதயா கேட்க, “போய்கிட்டே இரு இதயா… ஒரு வேலை வந்திருக்கு. கொஞ்ச நேரத்தில் வந்துடறேன். என் வயிறும் என்னை புரியாத பாஷயில் திட்டி கிட்டு தான் இருக்கு.” நித்திலா தன் பசியை கேலியாகவே கூறினாள்.
“நித்திலா சீக்கிரம் வா.” என்று கூறிக்கொண்டே உணவருந்தும் இடத்திற்கு சென்று, இருவர் அமரக்கூடிய மேஜையில் அமர்ந்தாள் இதயா.
சற்று நேரத்தில், அவள் எதிரே வந்து அமர்ந்தான் விஷ்வா.
“நித்திலா வருவா” இதயா கூற, “வரமாட்டாங்க” அவன் அவளை பார்த்து கண்சிமிட்டி சிரித்தான்.
“நித்திலா சாப்பிட வர முடியாதபடி நீ தான் வேலை குடுத்தியா விஷ்வா?” என்று இதயா கடுப்பாக கேட்டாள்.
“நான் குடுக்கலை.” அவன் சிரிக்க, “கொடுக்க வச்சிருக்க…” இதயா பற்களை நறநறத்தாள்.
“அப்படி வேணா சொல்லலாம்.” அவன் சிரிக்க, “ரெண்டும் ஒன்னு தான்.” அவள் அவனை முறைத்தாள்.
“கொஞ்சம் வெயிட் பண்ணு. சாப்பாடு வாங்கிட்டு வரேன். சாப்பிட்டுக்கிட்டே சண்டை போடுவோம்.” என்று அவள் முன் அவன் அலைபேசியையும், கார் சாவியையும் வைத்தான்.
“இது எதுக்கு?” அவள் கேட்க, “நீ வேணுமினே, வேற யாரையாவது உட்கார வச்சிட்டேன்னா?” அவன் கைகளை விரித்து கேட்டான்.
“இதை நீ அந்த பக்கம் போனதும், குப்பையில் போடுவேன்.” அவள் அவனை மிரட்டினாள்.
“வாவ்! அப்படியே பண்ணிடு. கார் இல்லைன்னு, நான் உன் வீட்டுக்கு வந்துடறேன். மொபைல் இல்லைனு உன்னதையே யூஸ் பண்ணிக்குறேன்.” அவன் தோள்களை குலுக்கிவிட்டு சென்றான்.
அவன் பேச்சில், அவள் முகத்தில் மென்னகை வந்து அமர்ந்து கொண்டது. அதை மறைக்க, தன் தலையை குனிந்து கொண்டாள்.
அவன் லகு பேச்சு அவள் முகத்தில் புன்னகை வரவழைத்தாலும், அதன் உள் பொருளை சிந்திக்க ஆரம்பித்தது அவள் அறிவு.
‘விஷ்வா எதுக்கு இங்க வந்திருக்கான். இவன் யு.எஸ் வந்து ஆறு மாசம் ஆகுது. முதலில் சிகாகோக்கு வந்திருக்கான். அங்க இருந்து ப்ராஜெக்ட் மாத்திக்கிட்டு இங்க வந்திருக்கான்.‘ அவள் அவன் வந்தபின் அறிந்து கொண்ட விஷயத்தை கிரகித்து கொள்ள ஆரம்பித்தாள்.
‘விஷ்வா சொல்றது உண்மை தான். மூணு வருஷமா இங்க வர போராடிருக்கான். அதுக்கு முன்னாடி?’ அவள் கேள்வி அந்த இடத்தில் தேங்கி நின்றது.
அவளுக்கு தன் மகனின் நினைவு வர, ‘கூட கூட்டிட்டு வந்திருப்பானா? இல்லை…‘ தன் மகனை பார்க்கும் ஆவல் எழ, அவள் கைகள் அவன் அலைபேசி பக்கம் சென்றது.
ஒவ்வொரு கடவுச்சொல்லாக முயற்சி செய்து பார்த்தாள் இதயா. ‘பாஸ்வார்ட் இன்கரெக்ட்‘ என்ற செய்தி வந்து கொண்டே இருந்தது.
‘எல்லார் பர்த்டே டேட்ஸ்ஸும் ட்ரை பண்ணிட்டேன். எதுமே வொர்க் ஆகலியே?’ அவள், அவன் இருக்கும் இடத்தை பார்த்தபடி முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
விஷ்வா வருவது தெரிந்ததும், அவன் அலைபேசியை அவன் இடத்தில் அவசரமாக வைத்துவிட்டு மௌனமாக அமர்ந்திருந்தாள் இதயா.
“என்ன, எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தியா? சாப்பிட ஆரம்பிச்சிருக்கலாமே?” அவன் கேட்க, “அதெல்லாம் இல்லை.” அவள் முணுமுணுத்தாள் அலைபேசியை நொண்டி கொண்டிருந்த தன்னை தானே நொந்து கொண்டபடி.
தான் வாங்கி கொண்டு வந்த மெக்ஸிகன் உணவை பார்த்துக் கொண்டே, “என்ன என் மொபைலை அன்லாக் பண்ண முடிஞ்சிதா?” அவன் புருவம் உயர்த்த, அகப்பட்டுக் கொண்டவள் கண்டு கொள்ளாதவள் போல், தன் உணவை எடுத்தாள்.
“உன்னால முடிஞ்சிருக்காது.” அவன் கர்ஜித்தான்.
அவன் கோபத்தில், அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.
தன் மகனின் முகத்தை பார்க்க முடியாத வருத்தம் அவள் முகத்தில்.
தன் சிந்தனை அனைத்தையும் ஒதுக்கி விட்டு, தன் உணவை திறந்தாள் இதயா.
“தேங்காய் சாதம்?” அவன் கேட்க, அவள் பதிலேதும் கூறாமல், சாதத்தை அலைந்து கொண்டு இருந்தாள்.
“உனக்கு பிடிக்காதே?” அவன் அக்கறையோடு கேள்விகளை தொடுக்க, அவன் அக்கறையில் ஒரு நொடி குழைந்து தன்னை மறந்து பேச ஆரம்பித்தாள் இதயா.
“தியாவுக்கு ரொம்ப பிடிக்கும். வேர்க்கடலை போட்டு பண்ணினா ரொம்ப பிடிக்கும். ஆனால், இங்க நிறைய குழந்தைகளுக்கு நட்ஸ் அலர்ஜி உண்டு. அதனால, நட்ஸ் இல்லாமல் ஸ்கூலுக்கு கொடுப்பேன்.” அவள் படபடவென்று மகளின் மீதுள்ள பாசத்தில் கடகடவென்று பேசினாள்.
தன் மகளை பற்றிய முதல் தகவல். இதயாவின் வழியாக!
அவன் கண்கள், அனைத்தையும் மறந்து, இதயாவின் முகத்தில் தெரிந்த பாசத்தில் அவளை பார்த்துக்கொண்டு, தன் மகள் பற்றிய செய்தியை உள் வாங்கி கொண்டு இருந்தது.
அவள் பேசிமுடிக்கவும், “என்னை மாதிரியே இல்லை?” அவன் கேட்க, அவள் கண்களில் அதிர்ச்சி தொற்றிக் கொண்டது.
“தியா…” அவன் பாசத்தோடும், ஆசையோடும் உச்சரித்தான்.
“நைஸ் நேம்.” அவன் கூற, “எஸ்… என் வாழ்க்கையில் விளக்கேற்ற வந்தவள்.” பெயர் காரணத்தை அழுத்தமாக கூறி உண்ண ஆரம்பித்தாள் இதயா.
அந்த வார்த்தைகள் அவனை தாக்க, ஒரு நொடி அடி வாங்கியவன் போல் அமர்ந்திருந்தான் விஷ்வா.
தனக்கும், அவனுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல, தேங்காய் சாதத்தை உண்ண ஆரம்பித்தாள் இதயா.
தன்னை மீட்டுக் கொண்ட விஷ்வா, தன் வலிய கரங்களால் அவள் கைகளை பிடித்தான்.
பல வருடங்களுக்கு பின் அவனின் பிடியில் அவள். அவள் உடலில், ஆயிரம் வகையான உணர்ச்சிகள்.
கோபம், வெறுப்பு, வருத்தம் இவை எல்லாம் இருந்தாலும், அவன் மீதான காதலும் ஒட்டிக் கொண்டு தானே இருகிறது.
அவள் உருகிக்கொள்ள முயல, அவன் பிடிமானம் இறுகியது.
‘யாரும் பார்த்து விடுவார்களோ?’ என்ற அச்சம் அவள் விழிகளில்.
தன் விழிகளை சுற்றும் முற்றும் சுழல விட்டாள். ‘மத்தவங்க தான் இவளுக்கு பிரச்சனையா?’ அவன் மனமும், அறிவும் ஒரு சேர கணக்கிட்டு கொண்டது.
இதயா பதட்டமாக அவனை பார்க்க, “இப்படி எல்லாம் பார்க்காத. நம்மளை யாரும் பார்க்க மாட்டாங்க. அதுவும் இந்த ஊரில்… அப்படியே பார்த்தாலும் ஒண்ணுமில்லை. எல்லாருக்கும் கொஞ்ச நாளில் விஷயம் தெரிய தானே போகுது.” அவன் பேசிக்கொண்டே உணவை இடம் மாற்றினான்.
“உனக்கு பிடிக்காததை ஏன் சாப்பிடுற?” அவன் கேட்க, “பிடிச்சது, பிடிக்காதது இந்த சில வருஷத்தில் மாறிருக்கும் விஷ்வா.” அவள் அவனை தடுக்க வழி இல்லமால் கூறினாள்.
“உனக்கு இந்த மெக்ஸிகன் ஃபுட் பிடிக்கும் சாப்பிடு.” அவன் கூறிக்கொண்டே, அவள் கொண்டு வந்திருந்த தேங்காய் சாதத்தையும், கத்திரிக்காய் பொரியலை உண்ண ஆரம்பித்திருந்தான்.
“என் பிடித்தம் மேல உனக்கு என்ன அக்கறை?” அவள் கேட்க, “சரி விடு. எனக்கு பிடித்த தேங்காய் சாதத்தை சாப்பிடுறேன்னு வச்சுக்கோ.” அவன் பேசி கொண்டே உண்ண ஆரம்பித்தான்.
“ரொம்ப நல்லாருக்கு இதயா.” அவன் ருசித்து கொண்டே சிலாகிக்க, மேலும் பேச எதுவுமில்லை என்று இதயா,”கையை விட்டா தான் சாப்பிட முடியும்” தன் வலது கை, அவன் இடது கையில் சிகியிருக்க கடுப்பாக கூறினாள்.
“என் மகள் கையை பிடிச்சிருக்கும் உன் கையை விட மனசில்லை. ஆனால் நீ சாப்பிடனுமே…’ வருத்தம் தொனிக்க அவன் நக்கல் பேச, இவனிடம் பேசி பிரயொஜனம் இல்லை என்று அமைதியாக உண்ண ஆரம்பித்தாள்.
“தேங்காய் சாதம் செம்ம டேஸ்ட். ருசிக்கு, நீ சமைச்சது மட்டும் தான் காரணமா? இல்லை நீ சாப்பிட்ட ஸ்பூனும் காரணமா?” என்று அவன் சந்தேகம் கேட்க, இதயா படக்கென்று எழுந்தாள்.
அவள் கைகளை மீண்டும் பிடித்து அமர வைத்தான் விஷ்வா.
“சரி… இனி பேசலை.” அவன் உறுதியாக கூற, “என்னை தொடாதீங்க.” அவள் கண்டிப்போடு கூறினாள்.
“என் மனசை முதலில் தொட்டது நீ.” அவன் இரு பொருள் பட கூறினான்.
அவள் முறைக்க, “இல்லை, காலைல உன் ஆள் காட்டி விரலால், என் நெஞ்சை தொட்டியே அதை சொன்னேன்.” அவன் விளக்கமளிக்க, அவன் விளக்கத்தில் தன் முகத்தை இன்னும் கடுப்போடு வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.
இவர்கள் உணவை முடித்துக் கொண்டு உள்ளே நுழைய, நித்திலா அப்பொழுது தான் வேலையை முடித்துக் கொண்டு எதிரே வந்தாள்.
விஷ்வா, இதயா இருவரும் ஒன்றாக வருவதில் அவள் புருவம் வளைந்தது.
‘ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து வருவது சகஜம் தான். ஆனால், இதயா?’ அவள் மூளை சிந்திக்க ஆரம்பித்தது.
‘இதயா யார் கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் பழக மாட்டாளே? இன்னைக்கு காலையில் இருந்து இதயா கிட்ட ஏதோவொரு பதட்டம். மீட்டிங்க்கு சீக்கிரம் வரவ கூட இன்னைக்கு வரலை?’ நித்திலாவின் மூளை கணக்கிட ஆரம்பித்தது.
வேலையை முடித்து கொண்டு மகளை அழைக்கும் நேரத்திற்கு கிளம்பினாள் இதயா.
விஷ்வா, அவளை பின் தொடர்ந்தான்.
அமெரிக்க, சாலையில் ஜீ. பி. எஸ் இல்லாமல் எதுவும் நடக்காது என்று அறிந்தவன் தன் ஹோண்டா சி. ஆர். வி வெள்ளை காரில் ஜீ. பி. எஸின் உதவியோடு அவள் காருக்கு பின்னே தன் காரை செலுத்தினான்.
அவர்கள் அபார்மெண்ட்க்குள் நுழைந்தான். காரை நிறுத்திவிட்டு, இதயா அறியாவண்ணம் மரத்திற்கு பின் ஒளிந்து கொண்டான்.
குழந்தைகளை அழைக்க பல பெற்றோர்கள் இருந்ததால், இதயா இவனை கண்டு கொள்ளும் வாய்ப்பு கம்மியே.
அந்த மஞ்சள் நிற பேருந்திலிருந்து இறங்கும் தன் மகளை ஆவலாக பார்த்தான் விஷ்வா.
கொழுகொழு கன்னங்கள். பரபரத்து கொண்டிருந்த விழிகள்.
அவள் செய்யும் சேட்டையை அந்த கருவிழிகளின் அசைவு கூறியது. அழுத்தமான நடை.
‘பிடிவாதக்காரி தான் போலும்.‘ அவன் மனம் எண்ணிக் கொண்டது.
தன் தலை முடியை விரித்து விட்டிருந்தாள். ஒவ்வொரு அடிக்கும் தன் தலையை ஸ்டைலாக அசைத்துக் கொண்டாள்.
அந்த குட்டி உருவம் செய்த செய்கைகளை அவன் மனம் பூரிப்போடு ரசித்து கொண்டிருந்தது.
அவள் அணிந்திருந்த உடையை அவனை ஈர்த்தது.
“இவ சைஸ்க்கு ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்.” அவன் ரசனையோடு முணுமுணுத்துக் கொண்டான்.
தன் மகளை கொஞ்சியே தீர வேண்டும், என்று அவன் ஒரு அடி முன்னே எடுத்து வைக்க, “அம்மா…” இதயாவின் கழுத்தை கட்டிகொடண்து குழந்தை.
அவன் ஆணி அடித்தார் போல் அந்த இடத்தில் நின்றான். அவனுக்கு நிதர்சனம் புரிந்தது.
மெதுவாக கூட்டம் கலைய, அவர்கள் முன்னே சென்று நின்றான் விஷ்வா.
“தியா, நீ போய் விளையாடு. நான் பேசிட்டு வரேன்.” இதயா கூற, “ஓகே மா.” கூறிக்கொண்டு ஓடினாள் தியா.
“எங்க வந்திருக்க?” அவள் கேட்க, “உனக்கே தெரியும்.” அவன் அசட்டையாக கூறினான்.
விளையாட சென்ற குழந்தை, தன் தாயின் முக மாற்றத்தில், அவள் அருகே வந்து கேட்ட கேள்வியில், இதயா அதிர்ச்சியாக பார்க்க, அவன் கலகலவென்று சிரித்தான்.
இதயம் நனையும்…