நிரல் மொழி – 6

நிரல் மொழி – 6
ஷில்பா!!
ப்ராஜெக்ட்டிற்கான அரசின் டென்டர் கிடைக்கும் வரை, ஷில்பாவிற்கு ஓய்வு என்பதே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறாள்.
ப்ராஜெக்ட் என்று நிகிலிடம் சொன்னாளே! இங்கே அவளது ப்ராஜெக்ட் என்ன?
சென்னை அருகிலுள்ள தானியங்கு மயமாக்கிய அனல் மின்நிலைய ஆலையை (நீராவியிலிருந்து மின்சாரம் எடுப்பது) மேம்படுத்துதல் மற்றும் நவீன மயமாக்குதல் ஆகும்.
அவள் வேலை பார்க்கும் நிறுவனம்… ஏற்கனவே இதுபோன்ற ஒரு ப்ராஜெக்ட்டை, தூத்துக்குடி அனல் மின் நிலைய ஆலைக்குச் செய்து தந்திருக்கிறது!
அதற்கு ஷில்பாதான் ‘ப்ராடைக்ட் மேனேஜராக’ இருந்தாள். முன் அனுபவம் இருப்பதால், ஷில்பாவின் நிறுவனம் இந்த ப்ராஜக்ட்டையும் அவளிடமே தந்திருக்கிறது.
ஆனால்… தூத்துக்குடி அனல் மின் நிலைய ஆலையை விட, சென்னை அனல் மின் ஆலை அளவில் பெரிது.
ஆட்கள், உபகரணங்கள் மற்றும் நிதி… இவை அனைத்தும் இருமடங்காகத் தேவைப்படும்.
ஆதலால், இந்த ப்ராஜெக்ட்-காக ஒட்டுமொத்தமாக எவ்வளவு நிதி வேண்டும்… வாடிக்கையாளர் தேவைகள் என்னென்ன… என்று ‘சேல்ஸ் டீமிடம்’ கேட்டு அறிந்தாள்.
ஆட்கள் அதிகம் தேவைப்படும் என்பதால், ஏற்கனவே இருக்கின்ற ‘டெக்னிக்கல் டீமில்’… மேலும் சில திறமையான ஆட்களைச் சேர்க்க முடிவு செய்தாள்.
இது எல்லாவற்றிற்கும் நிறுவனத்திடம் பேசி, ஒப்புதல் வாங்கியிருந்தாள்.
எங்கும், எந்த இடத்திலும் சிறு தவறும் வந்து வீடக் கூடாது என்ற எண்ணத்தில் வேலை செய்தாள்.
இங்கு ‘வேலை செய்வது’ என்பது அவளுக்குக் கீழே வேலை செய்வோர் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதே ஆகும்.
ஷில்பா, அதைத் திறம்படச் செய்யத் தெரிந்தவள்!
ஆதலால்தானே இப்படி ஒரு பதவியை… இந்த வயதில் அடைய முடிந்தது!
இதையெல்லாம் தாண்டி ஏதேனும் சிறு பதற்றம் வந்தால், அதை நிகிலிடம் பகிர்ந்து கொண்டாள்.
கடைசியில், அவள் எடுத்த முயற்சிகளுக்குப் பலனாக, அரசின் டென்டர் அவர்கள் நிறுவனத்திற்குக் கிடைத்தது!
அதுவும் நிகிலின் திருமணத்தை ஒட்டி வந்த நாட்களில்தான், இந்த டென்டர் கிடைத்திருந்தது.
ஷில்பாவிற்குப் பெரிய மகிழ்ச்சி! மேலும், ஓர் நிறைவு!!
ஒரு ‘ப்ராடைக்ட் மேனேஜராக’, இது அவளின் அடுத்த வெற்றி!
டென்டர் கிடைத்த பின், ‘ப்ராஜெக்ட் டீமீடம்’ அனல் மின் நிலைய ப்ராஜெக்ட் பொறுப்புகளை கொடுத்து விட்டு, அடுத்த ‘ப்ராடைக்ட்’… அடுத்த இலக்கு என்று சென்றுவிட்டாள்.
இந்த ப்ராஜெக்ட்டை, ஷில்பா நிறுவனத்தின் ‘ப்ராஜெக்ட் எக்ஸ்க்யூஸன் டீம்’ பார்த்துக் கொண்டது!
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆயின!
முழுதுமாக திட்டத்தைச் செயல்படுத்தி, அதை வாடிக்கைக்காரரி–டம்(customer) கொண்டு சென்று சேர்ப்பதற்கு!
ஒன்னேகால் வருடம் திட்டத்திற்கு தேவையான வன்பொருள் (hardware-PLC/HMI) மற்றும் மென்பொருள்(SCADA) தயாரித்தனர்.
பின், வாடிக்கையாளரின் அனல் மின்நிலைய தளத்தில்(thermal power plant) அதை நிறுவுவதற்கு நான்கு மாதங்கள் ஆனது.
இதோ எட்டு மாதங்கள் ஆகிவிட்டன!! அனல் மின் நிலைய ப்ராஜெக்ட் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு!
இன்று வரை, தங்கள் தொழிற்சாலைத் தயாரிப்பு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பது… ஷில்பாவிற்கு ஒரு சந்தோஷமே!
ப்ராஜெக்ட் செயல்படுத்தி, எட்டு மாதத்திற்கு பின்னரான ஒரு நாளில்…
நிகிலின் வீட்டில்…
நிகில்-மிலா திருமணம் முடிந்து, ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் ஆகியிருந்தது.
மகனைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடியே, வீட்டு வாசலில் நிகில் நின்று கொண்டிருந்தான்.
அவன் அருகில் நின்று, மிலா பேசிக்கொண்டிருந்தாள்.
மகன்! மிலா–நிகில் இவர்களின் குழந்தை! பெயர் ஜெர்ரி!!
அவர்கள் இருவரும் வாழும் அழகான வாழ்க்கைக்கு மேலும் அழகு சேர்க்க வந்தவன், ஜெர்ரி!!
இப்படி ஜெர்ரியைக் தூங்க வைத்துக் கொண்டே… மிலாவின் பேச்சுக்களைக் கேட்டபடி… இருப்பது நிகிலிற்குப் பழக்கமான, வழக்கமான ஒன்றுதான்!
பிடித்தமான ஒன்றும் கூட!
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதுதான், ஷில்பா வந்து நின்றாள்.
வழக்கத்தை விட, அன்று அவளது முகத்தில் மலர்ச்சி அதிகமாகத் தெரிந்தது.
ஷில்பாவின் முகத்தைப் பார்த்ததும், “ஹே! ஷில்பா… இன்னைக்கு என்ன ஃபேஸ் பிரைட்டா இருக்கு?” என்று மிலா கேட்டாள்.
அதன் பின்தான், நிகில் அவளைக் கவனித்தான். அவனுக்கும் அவளிடம் ஒரு வித்தியாசம் தெரிந்தது.
“சொல்லு ஷில்பா?” என்று மிலா ஆர்வமாகக் கேட்டாள்.
“ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆனதுக்கு, என்னைய மேனேஜ்மென்ட்–ல ப்ரைஸ்(praise) பண்ணி… சேலரி இன்க்ரீமென்ட் கொடுத்திருக்காங்க. ப்ளஸ், இதே மாதிரி இன்னொரு ப்ராஜெக்ட்… என்கிட்ட கொடுத்திருக்காங்க”
“வாவ்! ட்ரீட் வேணும் ஷில்பா” என்றாள் மிலா.
“என்ன வேணும்னு சொல்லு?” என்றாள் ஷில்பா.
“ம்ம்ம்” என்று யோசித்தவள், “ஹோலி வருது. ஸோ, ட்ரெஸ் வாங்கிக் கொடு” என்றாள்.
“ஸூயர்! ஒரு நாள் ஷாப்பிங் கூட்டிட்டுப் போறேன்” என்றவள், ‘நீ எதுவும் சொல்ல மாட்டியா?’ என்பது போல் நிகிலைப் பார்த்தாள்.
“கன்கிராட்ஸ்” என்றவன், “அம்மாகிட்ட சொன்னியா?” என்று கேட்டான்.
“ஃபர்ஸ்ட் அம்மாகிட்டதான் சொன்னேன். அப்புறம்தான் உங்க ரெண்டு பேர்கிட்டயும்… “
“என்ன சொன்னாங்க?” என்றான்.
“சந்தோஷப்பட்டாங்க… அப்புறம் மாப்பிள்ளை பார்க்கவா-ன்னு கேட்டாங்க”
“பார்க்க சொல்லிட்டியா ஷில்பா??” என்று மிலா கேட்டாள்.
“எனக்கு அதுலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை மிலா. இன்னும் நிறைய அச்சீவ் பண்ணனும். இதை விட பெரிய பெரிய ப்ராஜெக்ட்ஸ் பண்ணனும்” என்றாள் கண்களில் கனவுகளைத் தேக்கி வைத்தபடியே!
அவளையே பார்த்துக் கொண்டு நின்றவர்களிடம்… ஒரு சின்ன சிரிப்பைத் தந்துவிட்டு, மேலும் பேச்சைத் தொடர்ந்தாள்.
சற்று நேரத்தில், “ஜெர்ரி தூங்கிட்டான். நான் உள்ளே போறேன்” என்ற நிகில், “ஏற்கனவே லேட்டாகிருச்சு. ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருக்கக் கூடாது?” என்று இருவரிடமும் அழுத்திச் சொல்லிவிட்டுச் சென்றான்.
“இதோ இப்போ கிளம்பிடுவேன் நிகில்” என்று சொல்லிய ஷில்பா, அதன் பின்னும் ஒரு அரைமணி நேரம் மிலாவிடம் சிரித்துச் சிரித்துப் பேசிவிட்டுதான் கிளம்பினாள்.
ஆனால், அதுதான் கடைசியாக ஷில்பா சந்தோஷமாக இருந்த நாள்.
அதன்பின் வந்த நாட்களில் ஷில்பா தன் மகிழ்ச்சியைத் தொலைத்துக் கொண்டே வந்தாள்.
நாட்கள் நகர்ந்தன…
ஒரு மாதம் முடிந்திருந்தது. இந்த ஒரு மாத காலத்தில், ஷில்பாவிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன.
அதில் ஒன்றாக… வார இறுதிகளில் நிகில் வீட்டிற்கு வந்தால், முன்புபோல் ஷில்பா பேசவில்லை.
நிகில், ஷில்பாவைக் கவனித்துக் கொண்டேதான் இருந்தான்.
ப்ராஜெக்ட் வெற்றி அடைந்ததால்… இந்த ஒன்பது மாதங்களாக அவளது முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த நம்பிக்கை, மகிழ்ச்சி இப்பொழுது இல்லை.
அதுமட்டுமல்ல! அவளது முகம் தன்னம்பிக்கையை இழந்து காணப்பட்டது.
ஏதோ ஒரு கலக்கம் அவள் முகத்தில் குடி கொண்டிருந்தது.
நிகில் இதைக் கண்டு கொண்டாலும், ஷில்பாவிடம் எதுவும் கேட்கவில்லை.
கண்டிப்பாகத் தன்னிடம் சொல்லுவாள் என்று நம்பினான்!!
அடுத்து ஒரு பத்து நாட்கள் சென்றிருந்தன.
அன்று… நிகில் வீட்டில்…
மடியில் ஜெர்ரியை உட்காரவைத்து… நிகில், அவனுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தான்.
மிலா… தன் அம்மாவுடன் கைப்பேசியில் பேசியவாறே, இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
அக்கணம் அழைப்பு மணி ஓசைக் கேட்டது.
நிகில் கதவைத் திறக்க எழும் பொழுது… “நீ அவனுக்கு ஊட்டு. நான் பார்க்கிறேன்” என்று சொல்லி, மிலா சென்று கதவைத் திறந்தாள்.
ஷில்பா நின்று கொண்டிருந்தாள்.
“அம்மா ஷில்பா வந்திருக்கா. அப்புறமா பேசறேன்” என்று அழைப்பைத் துண்டித்து, “உள்ளே வா” என்று சொல்லிவிட்டு, மீண்டும் சமயலறைச் சென்றுவிட்டாள்.
வீட்டிற்குள் வந்த ஷில்பா… நிகிலிற்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே, நிகில் ஜெர்ரிக்கு ஊட்டிவிட்டான்.
அவள் முகம் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பது போல் தெரிந்தது.
இதுவரை, ஷில்பா ஏன் இப்படி இருக்கிறாள் என்று நிகிலிற்குத் தெரியாது. ஆனால், இன்று அவனுக்குக் காரணம் தெரியும்.
ஆதலால், “என்ன பிரச்சனை ஷில்பா?” என்றான் நிகில்.
“நத்திங்க்” என இயல்பாக இருப்பது போலச் சொல்லி, மேசையில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.
மீண்டும் அவளை… அவள் செய்கைகளைப் பார்த்தவன், “மிலா” என்று அழைத்தான்.
“ஹாங் நிகில்… என்ன?” என்று, சமயலறையில் இருந்து மிலா எட்டிப் பார்த்தாள்.
“நம்ம ரூம் டேபிள்–ல ரெண்டு நியூஸ் பேப்பர் இருக்கும். அதை மட்டும் எடுத்திட்டு வாயேன்” என்றான்.
அவன் சொன்னதைப் கேட்டு, ஷில்பாவின் முகம் ஒரு மாதிரி ஆயிற்று!
அவனும் அதைக் கவனித்தான்.
நிகில் சொன்னது போல, அவர்கள் அறையில் இருந்த செய்தித்தாளை எடுத்து வந்து… மிலா சாப்பாட்டு மேசை மீது வைத்தாள்.
அந்தச் செய்தித்தாள் இரண்டையும் ஷில்பாவின் புறமாக நிகில் நகர்த்தினான்.
அருகில் இருந்த செய்தித்தாளைப் பார்க்காமல்… நிகிலைப் பார்த்து, “என்ன நிகில்?” என்று ஷில்பா கேட்டாள்.
“உங்களைப் பத்தின நியூஸ்தான்! பேப்பர்ல வந்திருக்கு. அதான்…” என்றான், ஜெர்ரிக்கு மேலும் ஒரு வாய் ஊட்டி விட்டபடி!
ஷில்பா பதில் சொல்லவில்லை. ஆனால், அவள் முகமானது வலி… வேதனை என்ற இரண்டையும் காட்டியது.
அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் விதத்தில் பேதமை தெரிந்ததால்… மிலா, அங்கேயே அமர்ந்துவிட்டாள்.