இனிய தென்றலே – 19

இனிய தென்றலே – 19

தென்றல் – 19

காதல் இத்தனை துன்பங்களை தரக்கூடியதென்று தெரிந்திருந்தால், வைஷாலி காதல் என்னும் வார்த்தையைகூட இனிமையாக உச்சரித்திருக்க மாட்டாள்.

காதலித்ததால் மிகக்குறுகிய காலத்தில் இவள் பட்ட இன்னல்கள் நெரிசலோடு மனதில் முட்டிக் கொண்டுதான் நிற்கின்றன.

ஊசிப்போன பட்டாசாய் இவளின் ஆசைகள், சந்தோஷங்கள் எல்லாம் இவள் முன்னே நமத்துப் போய் கிடக்க, தன்அறையில் மடங்கி அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அரைமணி நேரமாய் அவளது விசும்பலின் ஒலி மட்டுமே அந்த அறையை நிறைத்துக் கொண்டிருக்கிறது.

நடந்து முடிந்த நிகழ்வை அத்தனை எளிதில் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கணவனின் உதாசீனமான பேச்சிலும் அவனது நிராகரிப்பிலும் இரும்பேறிய பாரமாய் இதயம் கனத்து கிடந்தது. தவிப்பும் கோபமும் மாறிமாறி அவளை காவு வாங்கிக் கொண்டிருந்தது.

“நான் என்ன, நீங்க வாங்கின பொருளா அசோக்? உங்களுக்கு வேணும்ங்கிற போது மட்டும் பேசி சிரிக்க? அத்தனை சுயநலவாதியா நீங்க? எனக்காக மாறவே மாட்டீங்களா?” கண்கள் சிவக்க மனைவி கேட்ட ஒவ்வொரு கேள்வியும் இதயத்தை கூறாய் கிழிக்க, சலனமற்று நின்றிருந்தான் அசோக்.

‘என்னை மட்டுமே நினை, பூட்டி வைத்த அன்பை வெளிப்படுத்தி காதல் செய்ய முயற்சியெடு’ என்று பாடம் நடத்தாத குறையாக போதனை செய்தாளே? அத்தனையும் விழலுக்கு இரைத்த நீராக்கிவிட்டு இப்பொழுது அவள் முன்னே குற்றவாளியாய் நின்று கொண்டிருக்கிறான் கணவன்.

“எனக்கும் மனசிருக்கு. அதுல ஆசாபாசங்கள் நெறைஞ்சு இருக்கு. வலுக்கட்டாயமா என்மேல பாசம் காட்டத் தெரிஞ்சவருக்கு, என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணத் தெரியலையே, ஏன் அசோக்?” சபிக்கபட்டவளாய் விமோசனத்தை கேட்டுக் கொண்டிருக்க, அவன் மௌனத்தை அசைபோட்டுக் கொண்டிருந்தான்.

“உங்க அன்பு, என் உணர்வையும் என்னோட காதலையும் காயப்படுத்த மட்டுமே செய்யுது!” ஆத்திரம் தலைக்கேற தன்உஷ்ணப் பேச்சால் வெடித்துக் கொண்டிருந்தாள் வைஷாலி.

அவளை ஓரப்பார்வையால் உள்வாங்கியபடியே அமைதியாக அகன்றவன், குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

“ரொம்ப அழுதுட்ட ஷாலி! போதும். கொஞ்சம் அமைதியாயிரு!” எந்தவொரு எதிர்பேச்சும் பேசாமல் அவளிடம் தண்ணீரை நீட்ட,

“நான் இங்கே குமிறிட்டு இருக்கேன். பதில் சொல்லாம, உங்க அக்கறையில நிக்கிறீங்க? என் வார்த்தைக்குகூட மதிப்பு கொடுக்க மாட்டீங்களா?” என்றவளின் பார்வை கணவனை எரிக்கத் தொடங்கியது.

“டென்ஷன் ஆகாதடா… உடம்புக்கு நல்லதில்ல!” பரிவுடன் அவள் தலையை தடவிச் சொல்ல,

“நீங்க என்னை தொடனும்னா நான் அழுதுகிட்டேதான் இருக்கணுமா அசோக்?” முகம் பார்த்து அரற்றியவளின் அழுகுரல் அவனை அசைத்துதான் பார்த்தது.

“தர்க்கம் பண்ணாதே ஷாலி! உன்னோட உணர்வுக்கு மதிப்பு கொடுக்கலன்னு நீ கவலைப்படுற… ஆனா, நான் உனக்கு எந்தொவொரு காயமும் மனக் கஷ்டமும் வந்திடக்கூடாதுன்னு தள்ளி நிக்கிறேன். நீ இல்லாத உலகத்தை சிந்திச்சுகூட பார்க்க முடியாத பலவீனமானவனா இருக்கேன்டா!

என்னை நல்லா புரிஞ்சும் என்னை பத்தின எல்லா விஷயங்களை தெரிஞ்சும் நீ, இப்படி பிடிவாதம் பிடிக்கிறது உனக்கே நல்லதில்லடா!” தன்ஆதங்கத்தை எல்லாம் ஒரெடியாய் கொட்டிவிட்டு, பெருமூச்சோடு நொடிநேரம் நின்றவன், இருவருக்கும் பிடித்தமான மல்லிகை பந்தலுக்கு சென்று அமர்ந்து விட்டான்.

மனைவியாக, தன்னிடம் மட்டுமே கொண்டாடும் அவளின் உணர்வுகளை, அணைத்து ஆராதிக்க வேண்டியவனே உதறித் தள்ளியதில் அவனுக்கும் மனம் வலிக்கத்தான் செய்தது.

இவனது நிதர்சனங்கள் எல்லாம் எதார்தத்திற்கு அப்பாற்பட்டு இருக்க, அத்தனை எளிதில் மனையாளின் காதலை அங்கீகரிக்க இவனுக்கும் தைரியம் வரவில்லை.

மனமெங்கும் மீண்டுமொரு அசம்பாவிதம் தன்னால் அவளுக்கு ஏற்பட்டு விடுமோ என்ற பதட்டத்தில் மனைவியை விட்டு விலகியிருந்தான்.

சொல்லிப் புரிய வைக்குமளவிற்கு அவள் தன்னை பற்றி அறியாதவள் அல்ல. ஏதோ உணர்வின் வேகத்தில் தன்னை நாடி, இதோ தன்னை நிந்தித்தும் விட்டாள்.

இந்த சமயத்தில் தானும் கோபம் கொண்டால், இருவரின் புரிதலான நேசத்தில் அர்த்தமில்லாமல் போய்விடும்.

அவளாக அமைதி கொள்ளட்டுமென்றே மனைவியை தனியே விட்டுவிட்டு தோட்டத்திற்கு வந்து விட்டான்.

இங்கே வந்தமர்ந்தால், மனைவி எவ்விதம் கரைகிறாளோ என்ற கலக்கத்தில் மனம் பதறத் தொடங்கியது.

அதைவிட பெரிய சோதனை, சன்னமாக வீசிய தென்றலும் மனையாள் அருகில் இல்லாமல் சுகிக்காமல்போக, மனைவியுடன் மட்டுமே, இங்கேவர உனக்கு அனுமதியுண்டு என்ற புதிய சட்டத்தை போட்டு மலர்த் தோட்டம் அவனை கழுத்தை பிடித்து தள்ளுவதைபோல மூச்சு மூட்டிப் போனான்.

‘இந்த குட்டிபிசாச விட்டுட்டு கொஞ்சநேரம் இருக்க நெனைச்சாலும், மனசும் கேட்க மாட்டேங்குது, செடி கொடியும் என்னை வில்லனா பார்க்குது’ சன்னச் சலிப்பில் அவளைத்தேடி வீட்டிற்குள் நுழைய, பாட்டி அவனை பிடித்துக் கொண்டார்.

“நேரம் போகுதே சாமி! வந்து சாப்பிட்டு மேல போங்க! ராசத்தி எங்கே? கூப்பிடுங்க!” என இரவு உணவு உண்ண இருவரையும் அழைக்க,

“அவளுக்கு தலைவலிக்குதுனு ரெஸ்ட் எடுக்குறா பாட்டி!” பொய்யுரைத்து நல்லவனாகிக் கொண்டான் அசோக். 

“ஐயோ, வீட்டை ரெண்டாக்கிடுவாளே! நான் போய் அவளை பார்த்துட்டு வர்றேன்!” பதைப்புடன் முதியவர் மேலே செல்ல எத்தனிக்க,

“மாத்திரை குடுத்திருக்கேன், பாட்டி! கொஞ்சநேரம் தூங்கட்டும். நான் பார்த்துக்குறேன்” அவசரகதியில் அவரை நிறுத்தி வைத்தான்.

“அப்போ சரி! நீ சாப்பிட்டு முடிப்பா… அவளுக்கு மேலே அனுப்பி வைக்கிறேன்”

“ரெண்டு பேருக்கும் சேர்த்தே கொடுங்க பாட்டி! நானும் அவளோட சேர்ந்து சாப்பிடுறேன்”

“அட! ஒருவேள, தனியா சாப்பிடகூட உன் வீட்டம்மா உனக்கு அனுமதி குடுக்கலயாயா?” கேலிபேசியவரின் உள்ளம் முழுவதும் பூரித்து கிடந்தது.

பேத்திக்கு தான்செய்யும் அத்தனை கவனிப்பையும், தனதாக்கிக் கொண்டு நிற்பவனை ஆதூரமாய் பார்த்து நெட்டி முறித்தார் பாட்டி.

ஒருவாரமாய் இருவரையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். இவனுக்காக பேத்தி முன்னிற்பதும், மனைவியின் தேவைக்காக கணவன் மெனக்கெடுவதும் என அனைத்து விஷயங்களிலும் இருவரும் ஒருவரையொருவர் மிஞ்ச முடியாமல்தான் இணைந்து திரிகின்றனர்.

“நீ, மேல போய்யா! நான் சாப்பாடு குடுத்து விடுறேன்!” என்றவர் கையோடு தைல பாட்டிலையும் சேர்த்தே கொடுத்தார்.

“இத தடவி தலைபிடிச்சு விட்டா, சத்தமில்லாம தூங்கிடுவா தம்பி. உடம்பு சுகமில்லன்னா சாப்பிட முரண்டு பிடிப்பா… கழுதைக்கு ஊட்டி விட்டா மட்டுமே, அந்த சமயத்துல சாப்பாடு உள்ள போகும்” அலுப்புடன் சொன்னவர்,

“ரொம்ப செல்லமா வளர்த்துட்டேன் ராசா! இவளை வச்சு மேய்க்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்!” அசட்டு சிரிப்பொன்றை அவர் உதிர்க்க, தன் இறுக்கம் தளர்ந்து வாய்விட்டு சிரித்தான் அசோக்.

“நீங்க ரொம்ப அருமையா வளர்த்துருக்கீங்க பாட்டி… டோன்ட் வொர்ரி! என் வீட்டம்மாவ, இப்படி கவனிச்சே கைக்குள்ள போட்டுக்குறேன்!” கண்சிமிட்டு விட்டு மேலே சென்றுவிட, பின்னோடு உணவும் வந்து சேர்ந்தது.

தனது அழுகையை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்து தலை தாழ்த்தி சோபாவில் அமர்ந்திருந்தாள் வைஷாலி. கணவன் சொல்லிச் சென்றதையும் அவனின் உண்மையான நிலையையும் ஆழ்ந்து யோசித்திருப்பாள் போலும்! அமைதியாகத்தான் கணவனைப் பார்த்தாள். ஆனால் கோபம் போயிற்றா? அது அவளுக்கே தெரியாது.

“முகம் கழுவிட்டு வா ஷாலி! சாப்பிடலாம்” கை அலம்பிக் கொண்டு வந்தவன் உணவை தட்டில் எடுத்து வைக்க, அவளோ அசையாதிருந்தாள்.

“நேரமாகுதுடா… சாப்பிட்டு தெம்பானாதானே, செகண்ட் ரவுண்ட் சண்டை கண்டினியூ பண்ண முடியும். இன்னும்கூட அதிகநேரம் அழலாம்” நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல, சோபாவில் இருந்த தலையணையை அவன்மேல் விசிறியடித்தாள் வைஷாலி.

“பசியெடுத்தா இப்படிதான் ரவுடித்தனம் செய்யத் தோணும். எனக்கும் பசிக்குது. நீ சாப்பிட்டாதான் நானும் சாப்பிடமுடியும். என்ன செய்யலாம்?” அவள் அருகில் வந்தவன்,

“என்னை பட்டினி போடாதேடா! மீ பாவம்!” கெஞ்சியபடியே அவளது தாடையை உயர்த்த, கணவனின் அன்பான அனுசரனையில் மனம் கரையத் தொடங்க, அவளிடமிருந்து பதில் வந்தது.

“போய் கொட்டிக்கோங்க! யார் வேண்டாம்னு சொல்றா?”

“ஓகே தாங்க்ஸ்!” என்றவன் வேகவேகமாய் உணவை தட்டில் வைத்துக்கொண்டே,

“வாவ்! சப்பாத்தி, இடியாப்பம், இட்லி, காலிபிளவர் குருமா வித் சட்னி. ம்ம்… ஒருபிடி பிடிக்க போறேன்!” நாக்கை தொங்கப் போட்டுக் கொள்ள, இவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.

‘என்ன அலட்சியம்? அவ்வளவு இளக்காரமா போயிட்டேனா இவனுக்கு?’ மனதோடு பொருமிக் கொண்டு, பல்லை கடித்தவளின் வாயினில் உணவை திணித்தான் அசோக். இவனை திட்டுவதில் தன்னை மறந்து போயிருக்க, எளிதாக உணவை ஊட்டியிருந்தான் கணவன்.

“சின்ன பிள்ளையாட்டம் துப்பி வைச்சா, உனக்கு குருமா, சட்னி அபிஷேகம் நடக்கும்” கணவனின் மிரட்டலில் வேகமாய் முழுங்கினாள்.

“படுபாவி! மனசுல நெனைச்சத கரெக்டா சொல்றான்”  வைஷாலி முணுமுணுக்க,

“பொண்ணுங்க சைக்காலஜி என் ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்குடா!” என்று அவளை சூடேற்ற

“போடா மடையா! இங்கே நிக்காதே, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை தனியா விட்டுட்டு போனேல்ல… இப்போ மட்டும் எதுக்கு வந்து ஊட்டி விடுற?” ஏகத்திற்கும் ஒருமைக்கு தாவியவாறு, சண்டை போட்டுக்கொண்டே கணவனிடம் உணவை வாங்கிக் கொண்டிருந்தாள் வைஷாலி.

‘ஆகமொத்தம் இவளுக்கு இப்போதைய வருத்தம் எல்லாம் நான் தனியாக விட்டு சென்றதுதானா? நடந்து முடிந்ததை ஒதுக்கி வைத்து மீண்டு விட்டாள், நன்றி தெய்வமே!’ என்று இறைவனுக்கு மனதோடு நன்றிகளை கூறிக்கொண்டு, கவனத்தை மனைவியிடம் திருப்பினான் அசோக்.

“உன்னை விட்டுட்டு போனதுக்கு என்னை துரத்தி விட்டுட்டாங்கடா… நீ தெம்பா சண்டைபோட ரெடியாகிக்கோ! தோட்டத்துல போய் கண்டினியூ பண்ணுவோம்” ஒரு குழந்தையாகவே மனைவியை கையாளத் தொடங்கி இருந்தான் அசோக்.

“என் பேச்சை கேக்காதவங்க, என்கூட பேசவும் வேணாம்” வாயில் உணவை அடைத்துக் கொண்டு இவள் முறுக்கிக் கொள்ள,

“சரி நான் பேசல, நீயே பேசு! அப்போதான் நிறைய சாப்பிட முடியும்” என்றவன் அடுத்த சப்பாத்தியை தட்டில் வைத்துக் கொண்டான்.

“மாட்டேன்… உன்கூட பேசவும் மாட்டேன் நீ குடுக்குறத சாப்பிடவும் மாட்டேன்” அடமாய் இவள் வாயை மூடிக் கொள்ள,

“பாட்டிக்கு, உன்ன பத்தி சரியா தெரியலடா! உனக்கு கோபம் வந்தா, நீ சாப்பிட அடம் பிடிப்பன்னு அவங்க சொன்னாங்க, இல்ல அவ சாப்பிட்டு தெம்பா சண்டை போடுவான்னு நான் சொன்னேன். அது சரியா போச்சு!”

“அடப்பாவி இங்கே நடந்தத பாட்டிக்கு சொன்னியா? அறிவிருக்கா உனக்கு? மனசுலதான் குட்டிசாத்தான் குடியிருக்குன்னா, மூளை கூடவா அதுகிட்ட அடமானம் போயிருக்கு? நீ எப்படிடா நாற்பது பேருக்கு வேலை சொல்லி கொடுத்து ஒப்பேத்துற?” படபட பட்டாசாய் பொரிந்து, தனது அழுத்தத்தை எல்லாம் கரைத்துக் கொண்டிருந்தாள்.

“நீ எப்படி தெரியாத்தனமா என்கிட்ட வந்து மாட்டினியோ, அதே மாதிரி அவங்களும் வந்து மாட்டுறாங்கடா! வாட் டு டூ?” தோளைக் குலுக்கியபடியே இடியாப்பத்தை அவளுக்கு திணித்தான்.

“உண்மைய சொல்லுங்க ஏகே? கீழே பாட்டிகிட்ட என்னத்த உளறி வச்சீங்க?”

“ரெண்டு பேருக்கும் டிஷ்யூம் டிஷ்யூம்னு சொன்னேன்”

“பொய் சொல்றீங்க?” என்று கணவனை அனுமானித்தவள்,

“ஊட்டி விட்டா மட்டும் பத்தாது, இடையில தண்ணியும் குடுக்க தெரியனும்” குறைபட்டுக் கொண்டே தானாகவே எடுத்துக் குடித்தாள்.

“ஃபர்ஸ்ட் டைம், கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும் கண்ணு! கோவிச்சுக்காதே ராசாத்தி! நான் பொய் சொன்னேனா இல்லையானு கேட்டுட்டு வருவோமா?” பாட்டியின் மாடுலேசனில் அசோக் சொல்ல,

“உதைபடுவீங்க ஏகே! பாட்டிய இமிடேட் பண்ணினா?” என்று கோபமலையில் மீண்டும் ஏற முயற்சிக்க,

“சரிங்க மேடம்! நெத்தி கண்ணை திரும்பவும் தொறக்க வேணாம்” அலட்டிக் கொள்ளாத விக்கிரமாதித்தனாய் அவளை மலையிறக்கினான்.

“என்னை டைவர்ட் பண்ணாதீங்க! பாட்டிகிட்ட என்ன சொல்லி வச்சீங்க?”

“நான் பொய் சொல்றேன்னு தெரியுதுல்ல… கெஸ் பண்ணு ஷாலி! நான் என்ன சொல்லியிருப்பேன்னு”

“ஓ… எனக்கு தெரியாதா உங்க லட்சணம்? எனக்கு உடம்பு சரியில்ல… வயித்துவலி, தலைவலின்னு வாய்க்கு வந்தத ஓட்டி விட்டுருப்பீங்க! சரிதானே?” தெனாவெட்டாய் மனைவி கேட்க,

“ஹவ் ஸ்வீட் ஆஃப் யூ டார்லிங்? எப்படிடா ஒரு வார்த்தைகூட பிசகாம சொல்ற? பாரேன் எனக்கு புல்லரிச்சு போச்சு!” சீண்டலை தொடர்ந்தான். 

“அரிக்குற இடத்துல மிளகாப்பொடி தூவிவிடவா? குளுகுளுன்னு இருக்கும்” அவளும் நக்கலில் இறங்க,

“உன் சேவை எனக்கு எப்பவும் தேவைடா ஷாகுட்டி! எனக்கு குளிரெடுத்தா, பெட்ஷீட் போர்த்தவும் நீதான் வரப்போற! என் உடம்பு எரிஞ்சா ஐஸ் வைச்சு விடவும் நான், உன்னைதான் தேடப்போறேன்”

“நினைப்புதான் உங்களுக்கு!” உதட்டை பழிப்பு காட்டியபடி முறைக்க,

“அஃப்கோர்ஸ்! மை வொய்ஃப் ஆல்வேஸ் மை பெஸ்டி ஷா!” என்றவனின் உற்சாகப் பேச்சில் மகிழ்ந்தவள்,

“உங்ககூட பேசவே கூடாது, உங்கள பார்க்கவும் கூடாதுனு இருந்தேன் ஏகே!” அமைதிக்கு திரும்ப முயற்சிப்பவளாய், மென்குரலில் பேசத் தொடங்கினாள் வைஷாலி.

“நீ கொழந்தடா உனக்கு ரிவென்ஜ் எடுக்கத் தெரியாது”

“இல்ல, இல்ல! ஒருநாள் நானும் பழி வாங்குவேன்!” அசராமல் சபதம் எடுக்க,

“இப்பவும் அதுதானே செய்ற? என்கிட்ட சாப்பாடு வாங்கிட்டு, சண்டையும் போடுற” என்றவன் இட்லியை தட்டில் வைக்க,

“போதும்! நிறைய சாப்பிட்டேன், நீங்க சாப்பிடுங்க!” பொறுப்பான மனைவியாய் கணவனை கவனிக்க ஆரம்பித்து விட்டாள்.

கோபமாகவும் வெறுப்பாகவும் துவங்கிய சண்டை, அவனின் அன்பிலும், இவளின் அக்கறையிலும் முற்றிலும் மாறித்தான் போனது.

கணப்பொழுதில் தடம்மாற வைத்த தன்இளமையை அக்கணம் வைஷாலி வெறுத்தே போனாள். கணவன் சொல்வதுபோல் அனைத்தும் தெரிந்திருந்தும், இவ்வாறு நடந்து கொள்ளத் தூண்டிய தனது மடத்தனத்தை எங்கே சொல்லி முட்டிக் கொள்வது?

கணவனிடம் மன்னிப்பை வேண்டவும் பெரும் சங்கடம் வந்தது அவளுக்கு. அமைதியாய் அவனுக்கு அருகில் அமர்ந்து, பாரிமாறிக் கொண்டிருந்தவளை பார்த்து,

“கோபம் போயிடுச்சாடா! நார்மல் ஆகிட்டியா?” கனிவாய் கேட்க, அவனது கரிசனத்தில் மொத்தமாய் வீழ்ந்தே போனாள்.

“நான் உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் ஏகே!” கரகரத்த குரலில் கணவனின் தோள்சாய,

“ரிலாக்ஸ் ஷா! திரும்பவும் ஆரம்பிக்காதே, என்னால தாங்க முடியாது” இடக்கையினால் அவளின் தோளினை தட்டிதர, அதற்கே காத்திருந்தவளை போல் மார்பில் சரிந்து தேம்பத் தொடங்கி விட்டாள்.

“நான் அவசரபட்டிருக்கக் கூடாது ஏகே! உங்களுக்கு ரொம்ப வலிச்சிருக்கும் இல்ல…” பரிதாபமாய் கேட்க,

“இப்படி நீ கேக்கிறதுதான் வலிக்குது. உனக்கில்லாத உரிமையா? என்னை வச்சு செய்றதுக்கு உனக்கு மட்டுமே ரைட்ஸ் இருக்கு” சிரித்தபடியே அவளை பார்த்து கண்சிமிட்ட,

“என்னை கேலி பண்றீங்க! நான் செஞ்சது தப்புதான்!” மூக்குநுனி சிவக்க மீண்டும் அழ முயற்சிக்க,

“அம்மா தாயே! போதும் என்னை படுத்தி வைக்கிறது… பத்து நிமிஷம் டைம் குடு! சாப்பிட்டு உன்னை செல்லம் கொஞ்சுறேன்” மாறாத புன்னகையுடன் உண்ணத் தொடங்கினான்.

“அச்சோ! உங்களை சாப்பிடகூட விடாம நான் சண்டை பிடிக்கிறேன். சாரி ஏகே!” என்று அவனை விட்டு விலகி நிற்க,

“விளக்கம் போதும், சாரி வேண்டாம்னு சொன்ன மேடம் எங்கே போனாங்க ஷாலி?” குறும்புடன் அசோக் கேட்டான்.

“என் லவ்வர்பாய் காணமா போனமாதிரி, அவளும் காணாம போயிட்டா…”

“இவ்வளவு கொஞ்சுறேன்… இப்பவுமா அவன் வரல? தமிழ்ல கூப்பிடாம இங்கிலீஷ்ல சுருக்கி கூப்பிடுற இதுல என்ன வித்தியாசம் இருக்கு?”

“அதான் இல்லையே! ஏகே – அசோக் கிருஷ்ணாக்கு சுருக்கமா இருக்கலாம். பட், அகி சம்திங் ஸ்பெஷல் ஃபார் மீ!” கண்சிமிட்டலுடன், பெருமை பேசினாள்.

“வாட் ஸ்பெஷல்? இந்த மரமண்டைக்கு சொல்லேன் ஷாலி!”

“சொன்னா தங்குமா? பிகாஸ் மரமண்டையில எதையும் ஏத்த முடியாதே?”

“அடிப்பாவி… நான் பாவமா இல்லையாடி? இன்னும் எவ்வளவுதான் என்னை ஓட்டுவ?” என்றவன் தட்டில் அவசரமாய் கையலம்பிக் கொண்டு, மனைவியின் காதை பிடித்து திருகினான்.

“நீங்க சொன்னததானே, நானும் சொன்னேன்! பேட் பாய் என்னடி டி போட்டு கூப்பிடுற, சொல்லமாட்டேன் போ!”

“நீ ஏதோ வில்லங்கமா பேர் வச்சிருக்க… சொல்லுடி தங்கம்! ச்சே… சொல்லுடா தங்கம்!” என்று கெஞ்ச, அது என்ற மிதப்பான பார்வையில் அவனை பார்த்து சிரித்தாளே தவிர வாயை திறக்கவில்லை.   

“ஒழுங்கா சொல்லு, இல்ல…” என்று இழுத்து நிறுத்த,

“இல்லன்னா என்ன பண்ணுவீங்க பாஸ்?” ஏறியிருந்த திமிர்தனம் இறங்கவேயில்லை அவளிடத்தில்…

“ஒன்னும் பண்ணமுடியாது. என் குடுமி உன் கையில சிக்கி சின்னாபின்னமாக போகுது. அத பார்த்து அழக்கூட எனக்கு தெம்பிருக்க போறதில்ல…” மிகுதியான சோகத்தில் முகத்தை சுருக்கிக் கொண்டான் அசோக்

“அச்சோ ஏகே! சின்ன விசயத்துக்கும் இப்படி உடைஞ்சி போறீங்களே! உங்களுக்காவே சொல்றேன்! அகி-ன்னா அன்பிற்கினியவன்–ன்னு அர்த்தம். கிருஷ்ணரோட தமிழ் பேர்கள்ல ஒன்னு. பாட்டி தெனமும் தமிழ் அஷ்டோத்திரம் சொல்வாங்க… அப்போ கேட்டுருக்கேன்.

நீங்களும் என்னை பார்த்து அப்படியே அக்கறை சக்கரையாவே உருகிப் போறீங்களா… அதையே உங்களுக்கு வச்சுட்டேன்!” தோள்களைக் குலுக்கியபடியே இலகுவாய் சொல்லி முடிக்க, ஆனந்த அதிர்ச்சியுடன் மனைவியை பார்த்தான்.

“அகி-க்கு இப்படி ஒரு விளக்கமா? நெஜமாவே நான் ரொம்ப அதிர்ஷ்டஷாலிடா! இந்த பேருக்காகவே நான் ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணனும் போல! உனக்கு எப்ப தோணுதோ அப்ப கூப்பிடு! இன்னைக்கு நிறையவே என்னை ஆச்சரியப்படுத்திட்டு இருக்க நீ?”

“இல்ல ஏகே! என்னை நானே அசிங்கப்படுத்திட்டு  இருக்கேன். டாக்டர் கவுன்சிலிங் டைம்ல பொறுமையா இருக்கனும்னு சொன்னதையும் மறந்து, அத்துமீறி உங்களை காயப்படுத்திட்டேன். என்னை நினைச்சா, எனக்கே கேவலமா இருக்கு”

“இந்த உணர்வை எல்லாம் என்கிட்டதானேடா நீ காமிக்க முடியும். நீ என்னோட அதிசயம். கடவுள் எனக்காக அனுப்புன அற்புதம்டா நீ! இத்தனைநாள் பொறுத்த, இன்னும் கொஞ்சநாள் எனக்கு டைம் குடுடா!” உணர்ச்சி பிழம்பாய் மன்றாடினான் அசோக்.

“நான் உங்களை ரொம்ப இக்கட்டுல மாட்டி வச்சுட்டேன் ஏகே!” மீண்டும் அவள் தவிக்கத் தொடங்க,

“என்னுடைய வார்த்தைகளை நம்பி காத்திரு ஷா! எல்லாம் சரியாகும். நான் சரியாக்குவேன்” வார்த்தைகளில் உணர்ச்சிகள் மேலிட, மனைவியை உச்சி முகர்ந்து சாந்தப்படுத்தினான். இருவரும் அதற்கடுத்து எதைப் பற்றியும் விவாதிக்காமல் அன்றைய நாளினைக் கடத்தினர்.

விருந்து முடிந்து சென்னைக்கு வந்த பிறகு, முன்னைவிட ஈடுபாட்டுடன் பிரணாயாமம், யோக பயிற்சிகளில் தன்னை மூழ்கடித்து கொண்டான் அசோக். அவ்வப்பொழுது மருத்துவ ஆலோசனைகளுக்கும் மனைவியுடன் சென்று வந்தான்.

அசோக்கின் அண்ணன் அருண்கிருஷ்ணா, மனைவியின் வளைகாப்பு மற்றும் பிரசவத்திற்கென மைதிலியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வருகைதர, குடும்பத்தினர் கவனம் முழுதும் அவர்களிடம் திரும்பியது.

வளைகாப்பு விழாவில் பொறுப்பாய் அனைத்து வேலைகளிலும் தங்கமணிக்கு ஆதரவாக வைஷாலி நிற்க, அசோக் தன்னால் முடிந்த உதவிகளை செய்தான்.

கணவன் அலுவலகத்திற்கு சென்ற பிறகு, தனது ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைவதில், தன் கவனத்தை திருப்பினாள் வைஷாலி.

ஓவியக் கலையிலுள்ள விருப்பம், அதற்கான படிப்பு எல்லாம் தன்வசப்பட்டு இருக்க, தடையின்றி வரைவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். மாலைபொழுதுகளில் வண்ணக் கலவைகளும், சட்டங்கள், தூரிகைகள் வாங்கவே தம்பதிகளுக்கு நேரம் போதவில்லை. அசோக்கும் தனது நண்பர்கள் குழுமத்தை முற்றிலும் விட்டு விலகத் தொடங்கி இருந்தான்.

குறித்த நாளில் மைதிலி பிரசவிக்க, மழலையின் வரவில் மொத்த குடும்பமும் மகிழ்ந்து போனது. சூட்டோடு சூடாக வைஷாலியையும் பிள்ளை பெற்றுக் கொள்ளச் சொல்லி சொந்த பந்தங்களும் வற்புறுத்த, அசட்டுப் புன்னகையில் கடந்து கொண்டிருந்தாள்.

அசோக்கிற்கும் அப்படியே! அண்ணன் அருண் குடும்ப வாழ்விற்கான ஆலோசனைகளை கூறும் மையத்திற்கும் அழைத்துச் சென்றான். இவனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தந்தை சொல்ல கேட்டிருந்தவன், தமையனாக முயற்சிகள் மேற்கொண்டான்.

“இது ஒன்னும் கடலை தாண்டுற பெரிய விசயமில்ல அசோக்! டேக் இட் ஈசியா ஹாண்டில் பண்ணலாம். எதுக்கு நீ இவ்வளவு யோசிக்கிறேன்னு தெரியல?”

“கொஞ்சநாள் போகட்டும்னு ரெண்டு பேருமே முடிவு பண்ணிருக்கோம் அருண்! இப்போதைக்கு எந்த இஷ்யூவும் இல்ல… ஷாலிக்கும் இதுக்கெல்லாம் கவுன்சிலிங் போக இஷ்டமில்ல.”

“நீ என்கூட வா! அடுத்து வேணும்னா வைஷாலிய கூட்டிட்டு போ! உன்னை நம்பி வந்த பொண்ணுக்காவாவது பாரு” என்று வம்படியாக தம்பியை அழைத்து சென்றான் அருண்.

அசோக்கும் ஆலோசனைகளை கேட்டுக் கொண்டான்தான். ஆனால் செயலில் இறங்க அவனுக்கு இன்னமும் தயக்க இருந்தது.

திருமணம் முடிந்து முழுதாய் ஆறு மாதங்கள் முடிந்திருந்தது. இருவருக்குள்ளும் எந்தவித பிரச்சனையும் இல்லை. எந்தவித உரசலும் இல்லை. சிறு குழந்தைகள் ‘குட்மார்னிங், குட்நைட்’ சொல்லி நாள் முழுவதும் விளையாடுவதைப் போலதான் இருவரும் நாட்களை கடத்திக் கொண்டிருந்தனர்.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கிராமத்திற்கு சென்று பாட்டியை பார்த்து வரவும் தவறவில்லை. அசோக் புகை, போதையை முற்றிலும் தவிர்த்து மாதங்களும் கடந்திருந்தது.

இந்த நிலையில் மீண்டும் வெளிநாட்டு தலைமை அலுவலகத்திற்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயத்துடன் உத்தரவுவர, அசோக் அந்த ஏற்பாட்டில் இறங்கினான்.

வைஷாலியையும் சேர்த்து தன்னுடன் அழைத்து செல்வதற்கென பாஸ்போர்ட் விசா போன்ற ஏற்பாட்டில் இறங்க, வரமாட்டேன் என்று பிடிவாதத்தில் நின்றாள் வைஷாலி.

Leave a Reply

error: Content is protected !!