சரணாலயம் – 15
சரணாலயம் – 15
சரணாலயம் – 15
கம்பராயப் பெருமாள் கோவிலில் அர்ச்சனை தரிசனம் முடித்துக் கொண்டு வெளிப்பிரகார சுற்றில் அமர்ந்திருந்தான் சசிசேகரன். எதிரில் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு சோட்டு, தித்லி, பவன்(லட்சுமியின் பிள்ளைகள்) மூவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சோட்டுவின் ஆர்பாட்டத்தை கண்ட லச்சு, “ரொம்ப சுட்டியா இருக்கானே? வீட்டுல சேட்டை அதிகமோ?” பிள்ளைகளின் விளையாட்டை ரசித்தபடி லட்சுமி, சசியிடம் கேட்க,
“ஆமாக்கா… பார்வைக்கு என்னை போல இருந்தாலும் குணமெல்லாம் இவங்கம்மா மாதிரிதான். இவனுக்கு லீவ் விட்டா, சரணிக்கு பீபீ ஏறிடும். அவ்வளவு குரங்கு சேட்டை பண்ணுவான்.
வீட்டுக்குள்ளயே இருக்குறதால இவனை சமாளிக்க முடியாம, அவளும் ஒய்ஞ்சு போயிடுவா!” மனைவியை நினைத்து சசிசேகரன் பேசிய நேரத்தில், அலைபேசி வழியாக அழைத்த அவனது மணவாட்டி,
“என்ன கேப்டன் ஜீ! ஜூனியர்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க? பொண்டாட்டியதான் அம்போன்னு விட்டுட்டீங்க… அவங்களையாவது ஒழுங்கா பார்த்துக்கோங்க!” சிடுசிடுப்புடன் மகனை விசாரித்தாள் சரண்யா.
“இப்ப என்ன ஆச்சுன்னு பாய்லராட்டம் கொதிக்கற? நீ உங்கப்பாகூட வெளியே போன மாதிரி, அவனும் அவங்கப்பா கூட வெளியே வந்திருக்கான்டி… என் புள்ளைய பார்த்துக்க எனக்கு தெரியும். போன காரியம் முடிஞ்சதும் பத்திரமா வந்து சேரு!” அக்கறையுடன் உத்தரவிட,
“இந்த சப்பைகட்டு அக்கறை ஒண்ணும் எனக்கு தேவையில்ல… உங்க பிடிவாதம்தான் பெரிசுன்னு என்கூட வரலதானே! கோவில்லயே குடியிருங்க… பொண்டாட்டின்னு ஊருபக்கம் வந்துடாதீங்க!” மீண்டும் கணவன் மீது காயத் தொடங்கினாள்.
‘போச்சுடா… மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறா’ மனதிற்குள் மிரண்டவன்,
“பிடிவாத பிசாசுக்கு வாக்கபட்டு, அதோட குணம் என்னையும் ஒட்டிருச்சுடி! என்ன பண்றது?”
“தெரிஞ்சுதானே இந்த பிசாசை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கீங்க கேப்டன்! இப்படியே பதிலுக்கு பதில் என்னை கிண்டல் பண்ணிட்டு இருந்தா, ஊருக்கு போனதும் உங்க மூணுவேளை சாப்பாட்டுக்கு என்னால உத்திரவாதம் கொடுக்க முடியாது” காட்டமாக கூறிய சரண்யாவின் குரலில் அத்தனை எரிச்சல் மண்டிக் கிடந்தது.
“சரண் ஆர் யூ ஓகே? அங்கே உன்கூட யார் இருக்கா? ஏன் இவ்ளோ ஹார்ஸா பேசுற?”
“என் பாதுகாப்புக்கு நீங்க பிளாக்கேட்ஸ அனுப்பியிருந்தா அவங்களாவது என் பக்கத்துல நின்றுப்பாங்க. இப்போ யாரும் இல்ல… நான் தனியா நிக்கிறேன்” வெறுமையுடன் இவள் கூற,
“ஏன் வேலுமாமா, உங்கப்பா எல்லாம் எங்கே போனாங்க?”
“ஆபீசுக்குள்ள இருக்காங்க… ஒரே கூட்டமா இருக்குன்னு என்னை வெளியே நிக்க சொல்லிட்டாங்க! அப்பா கூட வந்த லயா அக்காவும் உள்ளேதான் இருக்கா… என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டாங்க…” சினுங்கிக் கொண்டு சொன்னவளின் குரலில், மனைவியின் மனநிலையை நன்றாக அறிந்து கொண்டான் சசிசேகரன்.
காலையில் தன்னுடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரச்சொல்லி சரண்யா அழைக்க, சசிசேகரன் பிடிவாதமாக மறுத்து விட்டான்.
“உங்கப்பா, உன்னை கூப்பிட்டு இருக்கார்… நீ மட்டும் போயிட்டு வா! அவர் வேலையெல்லாம் முடியட்டும். அப்புறமா குழந்தைய காட்டலாம்” மீறமுடியாத குரலில் சொல்லிவிட, அப்போதிருந்தே இவள் கோப பட்டாசாய் வெடிக்கத் தொடங்கி இருந்தாள்.
“வந்த இடத்துல இப்படிதான் என்னைத் தனியா விடுவீங்களா?”
“அடிப்பாவி! இருக்குற சந்து பொந்தெல்லாம் சுத்தி பார்த்து வளர்ந்த ஊருல, துணைக்கு ஆள் கேக்குதா உனக்கு? என்னதான் எடுத்து சொன்னாலும் நான் வரமாட்டேன். நீ மட்டும் போயிட்டு வா!” உறுதியாக சொன்னதோடு பேச்சினை முடித்துக் கொண்டான்.
அவர்கள் வீட்டு பிரச்சனை, அவர்கள் பெண்ணை வைத்து முடித்துக் கொள்ளட்டும். இடையில் தலையிடவோ வேடிக்கை பார்க்கவோ தான் செல்வதாக இல்லையென்ற முடிவினில் நின்றான் சசிசேகரன்.
அதோடு உள்மனதில் உறங்கிக் கொண்டிருந்த அவனது தன்மானம், ஊருக்கு வந்ததும் விழித்துக் கொண்டதில், எங்கே தன்னையும் அறியாமல் யாரையாவது பேச்சில் புண்படுத்தி விடுவேனோ என அஞ்சினான்.
அதனாலேயே அவள் போகும் முன்னரே இவன் பிள்ளைகளை கிளம்ப வைத்து, லட்சுமியுடன் கோவிலுக்கு புறப்பட்டு விட்டான். வேலாயுதம் தன் பங்கிற்கு எடுத்துச் சொல்லியும் வரமாட்டேன் என மறுத்துக் கிளம்பியவனை, அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அழைத்து வார்த்தைகளால் விளாசிக் கொண்டிருக்கிறாள் சரண்யா.
“டேக் இட் ஈசி சரண்! இதெல்லாம் எதிர்பார்த்து தானே வந்தோம்… வேலை முடிஞ்சதும் வந்து பேசுவாங்க!”
“ம்ப்ச்… இப்படி சொல்லியே என்னை கூல் பண்ணிடு! எனக்கு என்னமோ இங்கே இருக்கவே பிடிக்கல சசி! நீ இருந்தா பெட்டரா ஃபீல் பண்ணுவேன்… எனக்காக வாயேண்டா! நான் பாவமில்லையா?” கோபம் போய் கெஞ்சும் குரலில் கேட்க,
“சாரி மை டியர்! ஒண்ணுக்கு மூணுபேர் அங்கே உனக்கு இருக்காங்க! ஆனா, என் புள்ளைக்கு நான் ஒருத்தன்தான்… சோ டேக் கேர் அண்ட் குட்பாய்!” என அழைப்பை முடித்தான் சசிசேகரன்.
“ரொம்ப பண்றடா நீ! புள்ளைய கொஞ்சம் சமாளின்னு உன் பையன தூக்கிட்டு வா! அப்ப இருக்கு உனக்கு…” மனதோடு கருவிக் கொண்டே நிமிர, வேலாயுதம் வெளியே வந்ததை கண்டாள்.
“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் மாமா?”
“இன்னும் ரெண்டு பதிவு இருக்குமா… சீக்கிரமா வந்தும் நாலாவது டோக்கன் தான் கிடைச்சதாம். ஃபார்மாலிடிஸ் எல்லாம் பக்காவா முடிச்சு வைச்சுட்டோம்… எல்லாரும் சைன் போடுறது மட்டும்தான் பாக்கி!” என விளக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் வெற்றிவேல் சக்திவேல் இருவரும் ஒன்றாக அங்கே வந்து சேர்ந்தனர்.
பத்து வருடங்கள் கழித்து உடன் பிறந்தவர்களை பார்த்ததில் மனம் மகிழ்ச்சி அடைந்தாலும் அதனை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. வந்தவர்களும் இவளை பார்த்து சிரிக்கவோ, எப்பொழுது வந்தாயென விசாரிக்வோ இல்லை. தோற்றத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், திமிரும் தெனாவெட்டும் சற்றும் குறையாமல்தான் இருவரும் தங்கையை நோக்கினர்.
“வந்ததும் உன் புத்திய காமிச்சுட்டியா! உன்னை கூப்பிட்டது நான்… ஆனா நீ அங்கே போயி இறங்கியிருக்க!” மனதில் மூண்ட கோபத்துடன் கருவினான் வெற்றிவேல்.
“அதையே தான் நானும் கேக்குறேன்! கூப்பிட்டா மட்டும் போதாது… வந்தவள வான்னு கூப்பிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போகவும் தெரிஞ்சுருக்கனும்! அத செஞ்சியா நீ?
நான் இந்த தேதிக்கு வர்றேன்னு மெசேஜ் பண்ணேன் தானே! அதுக்கு ஒரு ரிப்ளையாவது குடுக்க முடிஞ்சதா உன்னால?” பதிலுக்கு இவளும் காரம் குறையாமல் பேசினாள்.
வெற்றிவேலிடமிருந்து பதில் வராமல் போனதில், எங்கு போய் யார் வீட்டில் நிற்பதென்று இவள் தவித்த தவிப்புகள் எல்லாம் சொல்லில் அடக்கிவிட முடியுமா?
அந்த அவஸ்தைகளை எல்லாம் கோபமாக பிள்ளை மீதும் கணவன் மீதும் தானே இறக்கி வைத்தாள். மனிதனாக இருந்தால்தானே இதெல்லாம் உரைப்பதற்கு என்று அவனை மனதிற்குள் தாளித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கே நின்றிருந்த வேலாயுதம், “சரணி பொது இடத்துல நின்னு இதெல்லாம் பேசணுமா?” என இடையிட்டவர்,
“வெற்றி உனக்கும் சொல்றேன்! குடும்பச் சண்டைய வீதிக்கும் கொண்டு வராதீங்க…” முகச்சுளிப்புடன் முடித்துக் கொண்டார்.
“இப்டி இவங்க சார்பா வந்து நிக்கிறதுக்கு, நீ வராமயே இருந்திருக்கலாம். உன்னாலதான் நாங்க இன்னைக்கு இங்கே வந்து நிக்கிறோம்” வெற்றிவேல் பேசிக்கொண்டே போக,
“இந்த கருமத்துக்கு தான், இவளை கூப்பிடவேண்டாம்னு சொன்னேன், கேட்டியா நீ?” உடன் சக்திவேலும் தங்கையிடம் கோபத்துடன் பேசினான்.
ஆகமொத்தம் தங்கையை தள்ளி நிறுத்துவதில் இவர்களின் நிலைப்பாடு இன்றும் மாறவில்லை. காலம் அனைத்தையும் மாற்றியமைக்கும் என்பது ஒரு சிலரின் விசயத்தில் பொய்யாகிப் போகின்றது.
“முட்டாப்பசங்களா! வாய மூடித் தொலைங்களேன்டா… உங்கள போயி வரச் சொன்ன, உங்கப்பனை தான் சொல்லணும்!” என சற்றே குரலை உயர்த்திய வேலாயுதம்,
“நீ உள்ளே வாம்மா! இவனுங்க கூட நிக்கிறதும், சாக்கடை பக்கத்துல நிக்கிறதும் ஒண்ணுதான்…” கடுகடுத்தபடியே அவளை அலுவலகத்தினுள் அழைத்து சென்றார்.
அங்கே உள்ளே ஒரு ஓரமாக இருந்த நீளபெஞ்சில் அமைதியாக கமலாலயா அமர்ந்திருக்க, இடைவெளி விட்டு அமர்ந்திருந்த எழுத்தரின் டேபிளின் அருகில் சிவபூஷணம் நின்றிருந்தார்.
முன்தினம் மாலை தொலைபேசியில் மகளிடம் பேசியதோடு சரி. காலையில் சரண்யா இங்கே வருவதற்கு முன்பே இவர் வந்து விட்டிருக்க, இன்னும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
பத்து வருடங்கள் கழித்து இப்போதுதான் தந்தையை பார்க்கிறாள் சரண்யா. பாதிக்கும் மேலே கரைந்து போயிருந்த சிகையை மேலெழுந்தவாறு சீவியிருக்க, அவரின் அடர்த்தியான மீசையிலும் வெள்ளிமணிகள் கோர்த்தது போல் நரையோடியது.
கம்பீரமும் ஆளுமையும் குறையவில்லை. ஆனால் பார்வையில் மட்டும் கண்டிப்பு குறைந்து கனிவு சேர்ந்திருந்தது. முகத்தில் சிரிப்பு என்பது எப்பொழுதும் போல் இப்போதும் இல்லை. தோற்றத்தில் மெலிந்து, சுகவீனம் கண்டு தேறியிருந்தவரைப் போல் உடல் சோர்வு கொண்டிருந்தது.
மனைவியின் மறைவும் மகன்களின் நிராகரிப்பும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் புரட்டி போடுகின்றன? இப்படிபட்ட மகன்களையும் அழைத்து அப்படி என்னதான் பதிவு செய்யப் போகிறார் என்று எதுவும் தெரியாமல் சரண்யாவின் மனம் இடைவிடாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.
‘லயாக்காட்ட கேப்போமா? பதில் சொல்வாளா? என்னை பார்த்து இதுவரைக்கும் சிரிக்ககூட செய்யல… எப்படி நான் பேசுறது?’ மனதோடு அனைத்தையும் அலசி ஆராய்ந்த நேரத்தில், இவளை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலாலயா.
தமக்கையின் அழுத்தப் பார்வையில் சரண்யாவின் உள்ளமும் ஆட்டம் காண, வீம்பை விட்டு தானாகவே அவளிடம் பேசச் சென்றாள்.
“நல்லா இருக்கியா லயாக்கா? பத்து வருசத்துல நீ மாறவே இல்ல… அப்பிடியே இருக்க!” தொடர்ந்து இவள் மெதுவாக கேட்க,
“சந்தோஷமா இருக்கேன்!” என்ற ஒற்றை பதிலில் முகத்தை திருப்பிக் கொண்டாள் லயா.
‘ஐயோ… இதென்ன, இத்தன வீராப்பு இவளுக்கு? இப்ப என்ன கேட்டுட்டேன்னு மூஞ்சிய திருப்பிக்கிறா? இவகூட பேச்சு குடுத்து அப்பா எப்படி இருக்கார், எங்கே தங்கியிருக்கார்னு கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தா வெட்டி விட்டுப் பேசுறாளே!” என்று மனதோடு முணுமுணுத்தவளுக்கு அன்றைய நாளின் கடுப்பின் அளவு மில்லிமீட்டரில் இருந்து சென்டிமீட்டருக்கு ஏறியது.
மொட்டு மொட்டென்று அங்கேயே நின்றதில் ஒருமணிநேரம் முடிந்த பிறகு, இவர்களின் பதிவிற்கான டோக்கன் எண்ணையும் பெயரையும் கூறி அழைத்தனர்.
வேலாயுதம் வெளியே சென்று இரண்டு சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு உள்ளேவர, அடுத்தடுத்த காரியங்கள் மளமளவென்று நடந்தேறின.
பதிவாளரின் முன்னே வைக்கபட்டிருந்த மையினை எடுத்து கைநாட்டு வைத்து கையெழுத்தும் போடச் சொல்ல, என்ன ஏதென்று தெரியாமல் செய்தாள் சரண்யா.
இவளின் சகோதரர்களோ எல்லாவற்றையும் அறிந்திருந்தவர்களைப் போல, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, வேண்டா வெறுப்பாக கையொப்பமிட்டனர்.
வரிசையாக மூன்று பத்திரபதிவுகள் நடந்து முடிந்தது. அருகில் நின்றிருந்த கணக்கர் அதை ஒவ்வொன்றாக பிரித்து சரிபார்த்துக் கொண்டே,
“நேரம் வந்தா எல்லாம் தன்னால நடக்கும்னு சொல்றது சரிதான். உங்க மகன்களும், உங்க பொண்ணும் சேர்ந்தே வந்ததால ஈஸியா முடிஞ்சது.” என்று சொல்ல,
“ஆமா சார்! இன்னைக்கு ஒரு பதிவை மட்டும் பண்ணிட்டு, அப்புறமா என் பொண்ணை கூப்பிட்டு விட்டு மத்த ரெண்டையும் செய்ய நெனைச்சேன்… அவளும் வந்ததால சேர்த்தே பண்ண முடிஞ்சது. கூடவே இருந்து நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கீங்க… ரொம்ப நன்றி சார்!” என சிவபூஷணம் அவருக்கு நன்றி சொல்ல,
“முன்கூட்டியே பத்திரம் வாங்கி ரெடி பண்ணி வைச்சதால சிரமம் இல்லாம முடிஞ்சது சார்! அவ்வளவு தான்… இதுல என்னென்ன பதிவு பண்ணினோமோ அதுக்கான விவரங்கள் எழுதின டாக்குமெண்ட்ஸ் இருக்கு” என்று சில டைப் அடித்த பேப்பர்களை சிவபூசணத்திடம் கொடுத்தவர்,
“அசல் பத்திரம் கைக்கு வர்றதுக்கு கொஞ்ச நாளாகும். நெட்ல அப்லோட் பண்ணி அப்ரூவர் வாங்கணும். பத்திரம் ஹெட் ஆபீஸ் போயிட்டு வரணும். நிறைய டெர்ம்ஸ் இருக்கு… ரெடியானதும் உங்களுக்கு தகவல் சொல்றோம்” என்று பேச்சை முடித்துக் கொள்ள, அனைவரும் வெளியே வந்தனர்.
“இப்போ சந்தோஷமா உங்களுக்கு? சொன்ன மாதிரியே சாதிச்சுட்டீங்க!” வெற்றிவேல் கோபத்தை வெளியே காட்ட முடியாமல் முணுமுணுக்க
“நீங்க கேட்டபடி நாங்க நடந்துகிட்டோம். அதே மாதிரி நீங்களும் சொன்னபடி செய்யனும். பொண்ணு வந்து சேர்ந்துட்டான்னு எதையும் தள்ளி போடவோ மாத்தவோ கூடாது” திட்டவட்டமாய் பேசினான் சக்திவேல்.
“எனக்கே சொல்றியா சக்தி? இந்த பத்திரமெல்லாம் கைக்கு வரட்டும். அடுத்து உங்க வேலைய கையில எடுக்கிறேன்” உறுதிபட தந்தை கூறியதும் மகன்கள் மறுபேச்சின்றி கிளம்பி விட்டனர்.
அதன் பிறகு, “புறப்படுவோமா வேலு?” நண்பனை கேட்ட சிவபூஷணம்,
“கமலி நீ வர்றியா இல்ல, வேற வேலை இருக்கா?” என அவளிடம் தொடர,
“மளிகை சாமான் லிஸ்டும், பணமும் குடுத்துட்டு வர்ற வேலை இருக்குங்கய்யா… நான் இப்படியே கெளம்புறேன்” அவள் புறப்பட முயல, சரண்யாவை பார்ப்பவர் யாரும் இல்லை.
ஏனோ அந்த இடத்தில் தான் இருப்பது அதிகப்படியாக தோன்றிவிட, தன்னை கவனிப்பார் யாரும் இல்லையென்ற ஆதங்கமும், காலையில் இருந்தே உண்டான கடுப்பும் சேர்ந்தே தலைதூக்க, தன்னையும் அறியாமல் கொதித்து விட்டாள்.
“ஐயோ… நிறுத்துறீங்களா உங்க பேச்ச… சின்ன பிள்ளை கூட என்ன மிட்டாய் யார் குடுத்தான்னு தெரிஞ்சு சாப்பிடும். ஆனா, என்ன எதுன்னு ஒண்ணுமே சொல்லாம, வரிசையா சகட்டுமேனிக்கு என்னை கையெழுத்து போட வச்சுட்டீங்க…
நானும் பெரியவங்கட்ட கேக்க வேணாம். அவங்களா சொல்வாங்கன்னு பார்த்தா யாரும் அத பத்தி பேசாமா, அடுத்த வேலைய பார்க்க கெளம்புறீங்க!” கோபத்துடன் மூச்சு வாங்க பேசியவள்,
“ஏன் லயாக்கா? அப்படியென்ன வெவரமில்லதவளா நானு? சொன்னா புரிஞ்சுக்க மாட்டேனா? இல்ல என் மூஞ்சியில இனாவான்னு எழுதி ஒட்டியிருக்கா…” படபடவென்று சரண்யா வெடித்துவிட, அமைதியாக அவளை ஒருபார்வை பார்த்தபடியே, ஒன்றும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டாள் கமலாலயா.
“அக்கா, நீயாவது வெவரம் சொல்லிட்டுப் போ!” என்றவளின் அழைப்பை அவள் ஏற்காமல் செல்ல, நொந்து போன பாவனையில் தன் தந்தையையும் வேலாயுதத்தையும் பார்க்க,
“நீ கேக்குற விவரத்த உங்கப்பா சொன்னாதான் நல்லாயிருக்கும் சரணி! அதுக்குதான் நான் எதுவுமே சொல்லல… வீட்டுக்கு போயி சொல்வான். வாம்மா!” என சமாதானப்படுத்திய வேலாயுதம், தந்தை மகள் இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
மூவரும் வீட்டிற்கு வந்து மதிய உணவை முடித்துக் கொண்ட நேரத்தில், குழந்தைகளும் ஒருவழியாக உணவை உள்ளே தள்ளி இருந்தனர். தித்லியின் கைங்கரியத்தில் சோட்டு பருப்பு சாதத்தை சீனியில் ஒற்றிக் கொண்டு சுவைத்து முடித்தான்.
“இந்த ஒருநாளே எனக்கு கண்ணு கட்டுதுடி சரணி! சத்தியமா சமாளிக்க முடியல… கோவில்ல கேள்வி கேட்டே என்னை டயர்டு ஆக்கிட்டான். பாவம் சசி! ஹிந்தியிலயும் இங்கிலீஷ்லயும் அவனுக்கு புரியுற மாதிரி பொறுமையா எடுத்து சொன்னான்” லச்சு காலையில் நடந்ததை திரைக்கதையாக அவிழ்த்துவிட, சுரத்தில்லாமல் கேட்டாள் சரண்யா.
மகனின் போக்கு எங்கே எப்படி இருக்கும் என்பதை அறிந்தவளுக்கு, லச்சு சொன்னதில் அதிசயிக்கவில்லை. அதோடு மனதிற்குள் கடுப்பும் கணகணத்துக் கொண்டிருக்க,
“அவருக்கு என்ன… நாள் முழுக்க மகனை கையில வச்சுட்டு ஜால்ரா அடிக்க சொன்னாலும் செய்வாரு! கொஞ்சமும் கண்டிக்கமாட்டாரு… அதுலதான் இவனும் ஓவரா ஆடுறான்” சலிப்பு தட்டி பேசினாள்.
“என்னடி சுருதி வேற மாதிரி வருது, சரியில்லையே… போன வேலை முடிஞ்சது தானே! இல்ல வேற எதுவும் பிரச்சனையா?” லட்சுமி கேட்க,
“என்ன பிரச்சனை? அதெல்லாம் அவங்கவங்க வேலைக்கு போயி ஒத்தாசை பண்ணிட்டு வந்தாச்சு… நம்மை திரும்பி பார்க்கறவங்க தான் யாரும் இல்ல…” லயா தன்னுடன் பேசவில்லையே என்ற ஆதங்கத்தில் சரண்யா கொட்டிவிட,
“என்ன சொல்ற சரணி? புரியல எனக்கு…”
“ஒண்ணுமில்ல விடுக்கா… வெளியே போயிட்டு வந்த டயர்ட்ல இருக்கேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்” என்று அவள் மாடிக்கு செல்ல முற்பட,
“சரணீ!” என்றழைத்த சிவபூஷணம்,
“சேகரை வரச் சொல்லு…” என்றவர் வேலாயுதம் குடும்பத்தையும் அங்கேயே இருக்கச் சொன்னார்.
இரண்டு பக்க சோபாவிலும், சுற்றி போட்ட நாற்காலியிலும் அனைவரும் அமர்ந்திருக்க, பிள்ளைகளுக்கு தனி அறையில் கார்ட்டூன் ஓடிக் கொண்டிருந்தது. சோட்டுவும் பவனும் பின்பாட்டு பாட, தித்லி தலையில் கை வைக்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.
“தீபி குட்டி! கொஞ்சநேரம் தாத்தா பேசி முடிக்கிற வரைக்கும் இந்த வாலுகுட்டிகள பார்த்துக்கோ செல்லம்!” என்று இரண்டு தாத்தாக்களும் சேர்ந்து அன்புக் கட்டளையிட்டிருக்க அதை பொறுப்பாய் செய்து கொண்டிருந்தாள்.
சிவபூஷணம் மதியம் வேலாயுதம் வீட்டிற்கு வந்தவுடன் பேரனையும் சசியையும் கண்களால் பார்த்து நிறைத்துக் கொண்டார்தான். ஆனால் தானாக அழைத்து பேச முற்படவில்லை. இப்பொழுது மகளின் மூலமாக அவனை அழைத்தவருக்கு ஏனோ இன்னமும் மாப்பிள்ளை என்று உறவுமுறை சொல்லி அழைக்க வாய் வரவில்லை.
சரண்யா சொல்லி சசிசேகரன் அங்கே வந்து நின்றதும், “நல்லா இருக்கியா சேகரா? வேலையெல்லாம் எப்படி போகுது?” சாதாரணமாக சிவபூஷணம் கேட்க,
“நான் நல்லா இருக்கேன்யா… வேலையெல்லாம் நல்லபடியா போகுது” என பதிலளித்தான் சசிசேகரன். இருவரும் தங்களின் நிலையிலிருந்து சற்றும் மாறாமல் பேசிக் கொண்டார்கள்.
“நீ குடும்பமா வந்ததுல ரொம்ப சந்தோஷம் சேகரா! அதவிட சந்தோஷம் இன்னைக்கு நீ சரணிய அனுப்பி வைச்சது. நிச்சயமா நான் இதை எதிர்பாக்கல…” என்றவர் மகளை பார்த்து,
“உன்னை பொறுத்த வரைக்கும், நான் இன்னமும் உன்னை சரியா புரிஞ்சுக்கலன்னு நினைக்கிற… நான் இப்படிதான்னு உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னு எனக்கும் தெரியல…
இன்னைக்கு நடந்த பத்திர பதிவு விவரத்த உன்கிட்ட சொல்லித்தான் கூட்டிட்டு போயிருக்கணும். எல்லாமே திடீர் ஏற்பாடா பண்ணினதால சொல்ல முடியாம போயிடுச்சு! நான் சொன்னா நீ கேட்டுப்பேன்னு ஒரு நம்பிக்கையில எல்லாமே முடிச்சேன்!” என்றவர் பேசப்பேச எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
“சிவா! என்ன சொல்லணுமோ அத சொல்லி முடிடா! எதுக்கு உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டு இருக்க? உன் உடம்புக்கு நல்லதில்ல… ஏற்கனவே பல உளைச்சல்ல இருக்க நீ!” நண்பனின் மேலுள்ள அக்கறையோடு வேலாயுதம் பேச, சரண்யாவிடம் அனைத்தையும் விளக்கத் தொடங்கினார் சிவபூஷணம்.
“உங்க பாட்டி அதாவது எங்க அம்மா அகிலாண்டமும் கமலாலயா பாட்டி மங்களாம்பிகை அம்மாவும், இந்த கிராமத்துக்கு கல்யாணம் முடிச்சு வந்த நேரத்துல, அதாவது நான் பொறக்கறதுக்கு முன்னாடியே, ரெண்டு பெரும் சேர்ந்து விளையாட்டுத்தனமா ஒரு நல்ல காரியம் ஆரம்பிச்சது, இன்னைக்கு வளர்ந்து விருட்சமா நிக்குது…” என்றவர், அன்றைய நாளின் கதையினை சொல்ல ஆரம்பித்தார்.
“ரெண்டு அம்மாக்களும் கல்யாணம் முடிச்சு, ஒரே கிராமத்துக்கு வாழவந்த காலகட்டத்துல ரெண்டு குடும்பத்துலயும் விவசாயம் ரொம்ப பெரிய அளவுல பண்ணிட்டு இருந்தாங்க. ரெண்டு குடும்பமும் ஒற்றுமையா இருந்ததால எந்த பாகுபாடும் இல்லாம வேலையும்கூட மொத்தமா எடுத்து போட்டு பண்ணினாங்க.
ரெண்டு குடும்பத்துக்கும் சொத்து, நிலபுலன் வகையறால எந்த குறைவும் இல்ல… கல்யாணம் முடிஞ்சதும் ரெண்டு அம்மாக்களும் சேர்ந்து ஒவ்வொரு சாகுபடிக்கும் அறுவடைக்கும் வர்ற லாபத்துல பத்து சதவிகிதத்தை தனியா சேமிச்சு வைக்க ஆரம்பிச்சாங்க…
இந்த பத்து சதவிகித சேமிப்பு குடும்பத்து பெண்களுக்கு மட்டுமே சேரணும்னு ரெண்டு வீட்டுப் பெரியவங்களும் அந்த காலத்துலயே எழுத்து மூலமா பதிவும் பண்ணி வைச்சுட்டாங்க…
எங்க குடும்பத்துல நான் மட்டும்தான். அதே போல மங்களாம்பிகை குடும்பத்துல அவங்க பொண்ணு மட்டும்தான். அதனால ரெண்டு அம்மாக்களும் என்னோட கல்யாணம் முடியுற வரைக்கும் அந்த சேமிப்பை பிரிவினை பண்ணிக்கல…
எனக்கு ரெண்டு ஆண் பிள்ளைகளோட ஒரு பொண்ணா சரண்யா பிறந்த பிறகுதான், இருந்த சேமிப்பை வெளியே எடுத்தாங்க. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால சேமிப்பு அது.
அந்த வருசத்துல ஊரை தாண்டின காட்டுபகுதிக்கு முன்னாடி ஏக்கர் கணக்குல இருக்குற நெலத்தை, அரசாங்கம் குத்தகைக்கு விட்டு விவசாயம் பார்க்க முடிவெடுத்தது. ஊர் விஸ்தரிப்பு பசுமை புரட்சின்னு முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி ஆரம்பிச்சாங்க… (கற்பனைக்காக)
அந்த சேமிப்பு பணத்துல நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சோம். மெதுமெதுவா அது விரிவடையவும் ஒரு கட்டத்துல அந்த நிலங்களை கிரயம் பண்ண அரசாங்கம் முன் வந்தப்போ ஏறக்குறைய நூறு ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டோம்.
அப்போ சரண்யாக்கு பத்து வயசு. கமலிக்கு கல்யாணம் முடிச்ச நேரம். அப்பவே வேலையோடு வேலையா அந்த நூறு ஏக்கர் நிலத்துக்கும் ரெண்டு பேத்திகளை வாரிசாக்கி என்னையும் சௌந்திரவல்லியையும் கார்டியனா நியமிச்சாங்க!
இந்த விஷயம் கமலிக்கும் தெரியாது. தாத்தாவோட சொத்து பேரனுக்கு வரும்போது, பாட்டியோட சொத்து பேத்திகளுக்கு சொந்தமாகனும்னு உயில் எழுதி பதிவும் பண்ணினோம். பேத்திகளுக்கு பிறகு அவங்க சந்ததிகளுக்கு மட்டும்தான் சேரணும்னு ரெண்டு அம்மாக்களும் தெளிவான உயில் எழுதி வைச்சுட்டாங்க. அதுக்கு பிறகு அந்த இடத்துல தொடர்ந்து விவசாயம் நடக்க ஆரம்பிச்சது.
மங்களாம்பிகை அம்மா இறந்த பிறகு அவங்க சொத்தெல்லாம் கமலிக்கு போனதுல, அவங்களோட நிலபுலன்களோட, இந்த நூறு ஏக்கர் நிலத்துக்கும் அவளே பொறுப்பெடுத்துக்க ஆரம்பிச்சா… என்னோட யோசனையும் அவளோட உழைப்பும் சேர்ந்து விவசாயம் தொடந்து நடந்தது. ஒரு கட்டத்துல எல்லா இடத்துலயும் ஆட்களை நியமிச்சு கவனம் செலுத்த முடியல…
அந்த நேரத்துலதான் விவசாயக் கல்லூரிகள்ல இருந்து களப்பணிக்கு(field work) நிலம் குத்தகைக்கு தேவைப்படுதுன்னு கேட்டு வந்தாங்க. வருமானம் கொறைஞ்சாலும் படிப்புக்காகன்னு கேட்டு வரும்போது, என்னால தவிர்க்க முடியல…
அந்த நேரத்துல எனக்கு மனசும் நிறைஞ்சு போனது. மூணுல ஒரு பங்கு லாபத்தை வருமானமா பேசி, மொத்த நிலத்தையும் குத்தகைக்கு விட்டுட்டோம். அதுலயும் நல்ல வருமானம் வந்தது. அது இன்னமும் தொடர்ந்து நடந்துட்டு வருது.
அந்த விவசாய நிலங்களுக்கு ஒட்டியே வீடு கட்டி, அங்கேதான் இப்ப கமலி தங்கியிருக்கா… ஸ்டூடண்ட்ஸ் வந்து வேலை பார்க்கிறதுக்கு வசதியா பக்கத்துல இருபது அறைகள் இருக்குற மாதிரி ஹாஸ்டல் ஒண்ணும் கட்டி விட்டுருக்கோம்.
இப்ப அந்த நூறு ஏக்கர் நெலத்தைதான் சரிபாதியா பிரிச்சு சரண்யா பேர்லயும் கமலாலயா பேர்லயும் பதிவு பண்ணி, நான் கார்டியன் பொறுப்புல இருந்து விலகியிருக்கேன்!” என்று நீளமாக மூச்சு விடாமல் பேசி முடித்தார் சிவபூஷணம்
“மொத நடந்த ரெண்டு பதிவும், இந்த சொத்து பத்திரபதிவு தான்மா… ரெண்டு பெண்களோட பேருலயும் தனித்தனியா பிரிச்சு எழுதியாச்சு!
இதுல உன்னோட பங்கு பிரிச்சு எழுதும் போது கூடபிறந்தவங்களோட கையெழுத்து வேணும். அதுக்குதான் உன் அண்ணன்ங்கள வரச் சொன்னேன்…
நீ நேத்து வந்திருக்கிறதா வேலு சொன்னதும் அவசரஅவசரமா இந்த ஏற்பாட்டை செஞ்சு முடிச்சேன்” என்று பெருமூச்சுவிட்டு பேச்சிற்கு இடைவெளி விட்டார் சிவபூஷணம்.
“நாந்தான் எனக்கு எதுவும் வேண்டாம்னு எழுதி கொடுத்துட்டேனே? திரும்ப எப்படி நீங்க எனக்கு சொத்து எழுதி வைக்க முடியும்? எதுக்காகப்பா இந்த பாரத்தை என்னை சுமக்க வைக்கிறீங்க?” விளங்காமல் கேட்டாள் சரண்யா.
“அசட்டுத்தனமா அவன் கேட்டு, நீ எழுதி கொடுத்தா, அது செல்லுபடியாகிடுமா? அப்டி பிராப்பரா எழுதி இருந்தாலும், அதை பதிவு பண்ணி இருக்கணும். உன் கூடப் பொறந்தவங்களுக்கு மூளை சூடா இருந்ததே ஒழிய, அது வேலை பார்க்கல…
அதனால இந்த சொத்து நேரடியா உனக்கு வர்றதுல எந்த குளறுபடியும் இல்ல… யாரும் எதுவும் செய்ய முடியாது சரணீ!” தெளிவாக மகளுக்கு விளக்கியதில் தர்மசங்கடமாக கணவனைப் பார்த்தாள் சரண்யா.
‘இதற்கும் மேல் என்னால் எதிர்த்து, ஒன்றும் பேச முடியாது நீ பார்த்துக் கொள்’ என்றவளின் கெஞ்சல் பார்வையில் சசிசேகரன் இடையிட்டான்.
“நான் எந்த சொத்தும் வேண்டாம்னு முடிவு பண்ணித்தான், சரணிய கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! உங்ககிட்ட இருந்து எதையும் நாங்க எதிர்பார்க்கல… நீங்க எங்களை ஏத்துகிட்டதே போதும். இதுக்கு மேல எங்களை வற்புத்தாதீங்கய்யா!” என்று தன்மையாக எடுத்துக் கூற,
“சேகரா… நடந்து முடிஞ்சத பேச வேண்டாமே! அந்த சமயத்துல நானும் உங்களுக்கு எதிரா இருந்தவன்தான். ஆனா எந்த காரணத்துக்காகவும் மகள்ங்கிற உரிமையை விட்டுக் கொடுக்க நான் நினைக்கல… ஏதோ ஒரு கோபம், ஆதங்கம், நடந்த எல்லாத்தையும் நானும் வேடிக்கை பார்த்துட்டு நின்னுட்டேன்…
காதல் கல்யாணம்ன்னு அடுத்தநிலைக்கு யோசிக்காம, குடும்பம்ங்கிற குண்டுசட்டியில மட்டுமே பயணம் செஞ்சு பழக்கப்பட்டவனுக்கு வேற எப்படி நடந்துக்கறதுன்னும் தெரியல…
யாரும் யாருக்காகவும் யோசிக்கவோ முடிவெடுக்கவோ அப்போ நேரம் கொடுக்கலையே?” என்றவர் வெளிப்படையாக தனது நிலையை எடுத்துரைத்ததில், இவர் சொல்வதும் சரிதானே என்று தோன்றியது.
தந்தை தன்பொருட்டு இத்தனை விளக்கங்களை சொல்லிக் கொண்டிருக்கிறாரே என்று தவித்த சரண்யாவிற்கும், திருமணத்திற்கு முன்பு கணவன் தன்னை கடிந்து கொண்டு பேசியதெல்லாம் நினைவிற்கு வந்தது.
நடந்து முடிந்ததை நினைத்து இப்பொழுது வருந்தி என்ன பயன்? என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவள்,
“தயவு செய்து மறந்திடுங்கப்பா… நாங்களும் பொறுமையா இருந்திருக்கனும். சசியும் இதை சொல்லிட்டே இருப்பார். நீங்க என்கூட பேசினதே போதும். எனக்கு இந்த சொத்து எல்லாம் வேண்டாம்.
ஏற்கனவே நான் எழுதிக் கொடுத்தது, அப்படியே இருக்கட்டும். அதுவுமில்லாம இதையெல்லாம் நிர்வாகம் பண்ற சக்தி எனக்கில்லப்பா…” என்று கெஞ்சும் மகளை அப்பொழுது தான் ஆசைதீர பார்த்து மகிழ்ந்தார் சிவபூஷணம்.
வயது முப்பதை தாண்டியிருந்தாலும் இன்றும் குறும்புக்காரியாக துடுக்குத்தனம் செய்யும் சிறுமியாகவே தெரிந்தாள். மகளின் சொத்து வேண்டாம் என்ற கெஞ்சல் பாவனையில் லயித்துப் போனவர்,
“இன்னும் நீ மாறவே இல்ல சரணீ! உங்கம்மாட்ட எப்படி கெஞ்சி, கொஞ்சிட்டு உன் காரியத்தை சாதிப்பியோ அப்டியே தான் பேசுற…” என்றவருக்கு தன்னை சமன்செய்து கொள்ள நிமிடநேரம் தேவைப்பட்டது.
“இதப்பாரு சரணீ! இந்த சொத்து, நான் உனக்கு மட்டுமே கொடுக்கல… உனக்கு பிறகு வர்ற உன்னோட சந்ததிகளுக்கு கொடுக்குறேன்! அத காப்பாத்தி, இன்னும் பலமடங்கு பெருக்கி கைமாத்தி விடவேண்டிய பொறுப்பு மட்டுமே உன்னுடையது” என்று சிவபூஷணம், மகளின் கடமையை நினைவுபடுத்தினார்.
“ஆனாலும் அதுல வர்ற லாபம் எல்லாம் நேரடியா எனக்குதானே வந்து சேரும். அதுதான் வேண்டாம்ன்னு சொல்றேன்…” மேலும் அவள் தன் முடிவில் நிற்க, வேலாயுதம் இடையிட்டார்.
“போதும் சரணி! நீ வேண்டாம்னு சொல்றது கொஞ்சமும் சரியில்ல… கமலிக்கும்தான் அவளோட சொத்துக்களை எல்லாம் நிர்வாகம் பண்றதுல விருப்பமில்ல… ஆனா அவ என்ன உங்களை மாதிரி வேண்டாம்னு சொல்லி கையை பிசைஞ்சுட்டு நிக்கிறாளா?
அவளோட கடமை இந்த சொத்துக்களை காப்பாத்த வேண்டியதுன்னு நெனைச்சு அவ வேலைகளை தொடர்ந்து செய்துட்டே போகலையா? அவள பார்த்து உன்னால செய்ய முடியாதா? இல்ல செய்யக்கூடாதா?” என்று வேலாயுதம் கேட்க அவளிடமிருந்து பதிலில்லை.
வேண்டாமென்று மறுப்பவர்களை ஒத்துக்கொள்ள வைக்கும்படியாக சிவபூஷணம் பேச்சினை தொடர்ந்தார்.
“உனக்காகன்னு வந்து சேர்ற எதையும் நீ அவ்வளவு ஈஸியா வேண்டாம்னு சொல்லிட முடியாது சரணீ! ஒரு குடும்பத்துல இருந்து வர்ற சொத்துங்கிறது பரம்பரை கௌரவத்துக்கு சமானம். அதை வேண்டாம்னு சொல்ல யாருக்கும் உரிமையில்லை. இத தெரிஞ்சுக்காம வீம்பா சொத்து வேண்டாம் சுகம் வேண்டாம்னு பேசுறது சுத்த பைத்தியக்காரத்தனம்.
ஒருத்தனுக்கு அவன் சொத்தை வேணாம்னு சொல்றதுக்கு எப்படி உரிமை இல்லையோ அதே போல ஊதாரித்தனமா செலவு செய்றதுக்கும் உரிமை கிடையாது. அது அவன் முன்னோருக்கும் அவனுக்கு பின்னாடி வர்ற சந்ததிக்கும் செய்ற துரோகம். உங்களுக்கான பொறுப்புக்கள் இதுன்னு உங்களை உணரவைக்க தான் சொத்துக்களை பிரிச்சு கொடுக்குறோம். இதுக்கு மேல விவரம் வேண்டாம்னு நினைக்கிறேன்” என்று அவர் முடித்துக் கொள்ள,
“அதெல்லாம் மனப்பூர்வமா வாங்கி, பொறுப்பு எடுத்துப்பா சிவா… நீ மூணாவதா பதிவு பண்ணியே அந்த பத்திரத்தோட விவரத்தை சொல்லு… அதுக்காகதானே நீ ரொம்ப முயற்சி பண்ணின…” என்று வேலாயுதம் பேச்சினை திசை திருப்பி விட்டார்.