ISSAI,IYARKAI & IRUVAR 19

PhotoGrid_Plus_1603258679672-dd82cf11

ISSAI,IYARKAI & IRUVAR 19

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 19


ஓர் அரங்கம்!  இசைப்பிரியர்களால் நிரம்பி வழிந்தது!

ஓர் மேடை! பெரிய மேடைக்குள், வெள்ளை நிற சாட்டின் துணி கொண்டு அலங்கரித்திருந்த சிறிய மேடை! இசைக் கருவிகளுடன் இசைக் கலைஞர்கள் அதில் அமர்ந்திருந்தனர்!

அவர்களின் நடுவே தேன்பாவை! அரையடி அகலத்திற்கு கருஞ்சிவப்பு நிற கரை வைக்கப்பட்ட கத்தரிப்பூ நிறப் பட்டுப்புடவையில் அமர்ந்திருந்தாள்!!

பெரிய மேடைக்கு நடுவே அமைக்கப்பட்ட சிறு மேடைக்கு மட்டும், மேலிருந்து விளக்கொளி பாய்ச்சப்பட்டது!

முதல் வரிசையில் அமர்ந்திருந்த பாண்டியனும், செண்பகமும் ‘என்ன பாடல் பாடப் போகிறாள்?’ என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேடையிலிருந்த பாவையின் கவனத்தில் இருந்தது எல்லாம் வேணிம்மா கற்றுக் கொடுத்த இசையும், அவர்கள் இருவரின் கனவுதான்!

மெல்லிசையாய் வீணையின் மீட்டலோடு கச்சேரித் தொடங்கியது!

வீணை-மிருந்தங்க இசையோடு சேர்ந்து, “எல்லாம் இன்ப மயம்…” என்று ஆரம்பித்து, கானமழை பொழியத் தொடங்கினாள், தேன்பாவை!!

எல்லாஆஆம் இன்ப மயம் புவி மேல்

இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்

எல்லாஆஆம் இன்ப மயம்… புவி மேல்

இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்

எல்லாஆஆஆம் இன்ப மயம்…

– ஒவ்வொரு முறை ‘எல்லாம்’ என்று பாடுகையில், பொடிப் பொடிச் சங்கதிகள் போட்டுப் பாடினாள்.

அல்லாஆஆதனவும் ஆவனவும்… ம் ம் ம்” என்று ‘உம்’ ஆலாபனைப் பாடியவள், “ஆஆஆ… ஆ… ஆஆ… ஆ…” என ‘ஆ’ என்ற சப்தம் கொண்ட நீண்டதொரு ஆலாபனை பாடினாள்.

பின் ஒரு சிறு முறுவலுடன் முன்னிருக்கும் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டே,

அல்லாஆதனவும் ஆவனவும் தெரிந்த

அல்லாதனவும் ஆவனவும் தெரிந்த

நல்லோஓஓர் மனதினில் நாடும்

அனபானவோர் வினை முடிவதெல்லாஆஆம் இன்ப மயம்

 – இது பாடி முடித்த நொடியிலே…

எல்லாம் இன்ப மயம் புவி மேல்

இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்

எல்லாம் இன்ப மயம்…

என்று மீண்டும் பல்லவியை பாடுகையில், அவள் பாடலின் தாளத்திற்கு ஏற்ப மிருதங்க வித்வான் வாசித்தார்

வாய்ப்பாட்டில் ஓர் நொடி நிறுத்தம்! அதன் பின்,

மலையின் அருவியிலே

வளர் மழலை மொழிதனிலே

என்று இருமுறை பாடுகையில்… லகரங்களும் ழகரங்களும், அவளது உச்சரிப்பில் உவகை கொண்டன!

மேலும், கேட்போரின் கண் முன்னே மலையும் மழலையும் வந்து போயின!

முட்டிகளில் மெல்லிய அசைவு கொடுத்துக் கொண்டே,

மலரின் மணந்தனிலே

வயலின் பயிர்தனில்

மனையாள் பணிதனிலேஏஏ

நிலவின் ஒளியாலும் குழலின் இசையாலும்

நீலக்கடல் வீசும் அலையாலுமேஏஏ

என்று முக்கனிச் சுவையில் தோய்த்தெடுத்தக் குரலில் பாடி முடித்தாள்.

மேலும்… மலரிதழ், வயல்வெளி, நிலவொளி, ஆழ்கடல்… இவையாவும் எட்டிப் பார்த்துவிட்டுப் போனது, தன் இசையால் கேட்போரைக் கட்டிப் போட்டிருப்பவளின் கச்சேரியை!

முன்னிருந்த மைக்கை லேசாக சரிபடுத்தியபடி,

கலைஞன் சிலையிலும்….

கவிதை பொருளிலும்…

கான மாமயிலின் ஆடல் அறு சுவையில்

காதலோடு மனிதனின் புலன் காண்ப…

தெல்லாம் இன்ப மயம்

என்று ஒரே மூச்சில் பாடி, முதல் வரியில் வந்து முடிக்கையில் தோகை விரித்தாடும் மயிலின் அழகு குரலில் கொட்டிக்கிடந்தது!

கண் மூடி கண் திறக்கும் காலஅளவில் ஓர் நிறுத்தம்!!

அதன் பின்,

கரிஸ நிதப மபதநி… இன்ப மயம்

நிரிஸ நிதபமபகரி… இன்ப மயம்

என்று தாளங்கள் போட்டபடியே பாடியவள், “எல்லாம் இன்ப மயம்” என்று தொடங்கிய இடத்திலே முடித்தாள்.

ரிகரிஸநி தநிரிஸ நிதபதா மபகரி… இன்ப மயம்

நிநிஸநி தநிபப தமபரிக மதநிஸரி… இன்ப மயம்

தநிசரிதநிரிநிதநி மதகசரிக மபதநி… இன்ப மயம்

நிநிஸநி தநிதத பமகரிகஸ மபதநி… இன்ப மயம்

– இந்த இடத்தில் மிரட்டும் மிருதங்கமும், தேன்மிட்டாய் போன்று தேன்பாவை குரலும் போட்டி போட்டுக் கொண்டன.

ரிகரிஸரிகக… ஆஆஅ… ஆ… ஹா” என்ற ஆலாபனையை அலட்டாமல் பாடியவள்,

ரிகரிசரிககரி கரிரிஸதஸ ஸதபதபப

ஸதத ரிஸஸக ஸரிதஸபதரி

என்று பாடி, வீணை மீட்டிடும் இசைக் கலைஞரைப் பார்த்து, ஓர் மெல்லிய நகையாடும் முகத்தோடு “இன்ப மயம்” என முடித்தாள்.

தஸகபதப கபகக தபபத ககதப

கரிகரிரி ஸதகசகரித

பஸதக பகதப ஸதரிஸகரி இன்ப மயம்

– கைகள் உயர்த்தி… கண்கள் மூடி… கமகங்களுடன் ஸ்வர்க் கோர்வை பாடுகையில் களைப்பெல்லாம் களிப்பாய் மாறிடும் விந்தை நடந்தது, அரங்கத்தில்!

இன்னும்… ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் எல்லாம் சேர்ந்த ஸ்வர கோர்வைகளை… அந்தச் சிவப்புக் கயிறு கட்டிய கரத்தனை காற்றில் அசைத்தபடி பாடி, அரங்கத்தில் இருப்போரின் இதயத்தை இன்னிசையால் இயக்கிக் கொண்டிருந்தாள்.

இன்னும் சில ஸ்வரக் கோர்வையை… முகமலர்ந்து, முன் வரிசையில் அமர்ந்திருக்கும் சில முன்னணி கர்னாடகப் இசைப் பாடகர்களைப் பார்த்துப் பாடினாள்.

அது இன்னும் அழகூட்டின, கச்சேரிக்கு !

கடைசியில்… கருஞ்சிவப்பு அட்டிகை அணிந்த கழுத்தை நிமிர்த்திக் கொண்டு, கண்கள் மூடிக்கொண்டு,

பதம பஸநி பதம பகரி ஸரி நிச தநி ஸநிதபமப

நித நிதப மப ரிஸ ரிஸநி தநி கரிச நிதப தபமகஸரி

ரிக ஸரிகமபத ரிஸநிதநிப

தநிப தநி ஸரி கரி ஸநி தபநி

பதமபதநிஸரிகஸரிநி

ஸரிக ஸரிநிச கமபதநிஸ

ரிகஸரிகரி பதமபதநி கரிக ரிஸப தபக தஸரி

கரிஸ தபம நிதப ரிஸநி

ரிகமபதநிஸ கரி கரிஸநிதரிஸ

நிஸநிதபஸநி ஸநிதப கரிஸநிதரிஸ

ஸரிகமபதநி இன்ப மயம்

என்ற அட்சரம் மாறாமல் அனாசியமாக ஸ்வர கோர்வையை பாடி, கண் திறந்து… “எல்லாம் இன்ப மயம்” என்று பல்லவியைப் பாடுகையில், கேட்போரின் கரகோஷமும் சேர்ந்து கொண்டது.

அந்தச் சந்தோஷத்தில்,

எல்லாம் இன்ப மயம்…

புவி மேல்

இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்

எல்லாம் இன்ப மயம்

என்று பாடி… பாடலை நிறைவு செய்தாள், தேன்குரலாள் இந்தத் தேன்பாவை!

கைதட்டல்கள் தொடர்ந்தன!

இன்முகத்தோடு இருகைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தாள்!!

பாவையின் இன்னிசையை நேரலையில் கேட்டவர்களின் இதயத்தில், அவள் குரல் மற்றும் இசையறிவின் மேல் ஓர் பிரமிப்பு, ஓர் நன்மதிப்பு வந்திருக்கும்!

நம்பியோடு இருந்ததால் நன்மதிப்பு கிடைத்தது. இனிமேல் இந்த நன்மதிப்பை நற்பெயராக மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்!

நிச்சயம் முயற்சிப்பாள்!!

சரி! அவளது கச்சேரியை முன்வரிசையில் அமர்ந்திருந்து கேட்ட உறவுகள் எப்படி உணர்கின்றனர்?

செண்பகம்!? பெருமையாக உணர்ந்தார்! மகனும் மருமகளும், அவர்களுக்குப் பிடித்த விடயத்தைச் செய்து பேரும் புகழும் அடைய வேண்டும் என்று மனதார ஆசிர்வதித்தார்!

சிவபாண்டியன்?! உயிர்துணையின் இசைக் கச்சேரியைக் கேட்டு மெய்மறந்து இருக்கின்றான்!!

வேறென்ன சொல்ல?!

அதன்பின்,

சற்றுநேரத்திற்கு… ஏனையோரின் கச்சேரி! தனி ஆவர்த்தனங்கள்! இசையில் சாதித்தோருக்கு சால்வை அணிவித்து பாராட்டுக்கள்! இவை மட்டுமே, அந்த அரங்கத்தில்!!

அதன்பின், இன்று கச்சேரி செய்தவர்களில், அவள் வயதையொத்த பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருந்தாள், பாவை.

சுற்றுப் புறத்தைக் கவனிக்காமல், ராகமொழி பேசுபவர்களுடனான பேச்சு சுவாரஸ்யமாகச் சென்றது. பரஸ்பரம் அலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றார்கள்.

பின் ஓடி வந்து… அவள் பேசி முடிக்கும் வரை, அவளுக்காக காத்துக் கொண்டிருந்த அம்மா-மகனுடன் சேர்ந்து கொண்டாள்.

மூவரும் அரங்கத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தனர்.

பாடல் பாடி முடித்ததிலிருந்து, பாவையின் முகமெங்கும் சிரிப்புதான்! மனதெங்கும் பூரிப்புதான்! மனதின் பூரிப்புதான், முகத்தில் சிரிப்பாக வெளிப்பட்டது போல!!

வேணிம்மாவின் ஆசை, வெகுநாள் கனவு நிறைவேறியிருக்கிறது அல்லவா? அது தந்த பூரிப்பு!

தனியே பாடி, தனக்கென்று பிரத்யேக கைதட்டல்கள் பெற்றுக் கொண்ட தருணங்களை நினைக்கையில், மனம் தரையில் நின்று கொண்டே தாவிக் குதித்துக் கொண்டிருந்தது!!

அதே மனநிலையுடன் காரை நோக்கிப் போய்க்கொண்டிருக்கையில், “கேட்க நல்லா இருந்தது பாவை” என்றார், செண்பகம்.

“தேங்க்ஸ் செண்பாம்மா” என்றாள் சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டே இருந்தவள்.

மேலும்… அமைதியாக வந்த கணவனைப் பார்த்து, “நீங்க ஒன்னும் சொல்ல மாட்டிக்கிறீங்க?” என்று கேட்டாள்.

“நல்ல வாய்ஸ்” என்றவன், “இதெல்லாம் எப்படி நியாபகம் வச்சிருக்க?” என்று கேட்டான்.

“நாலு வயசிலருந்து வேணிம்மா-கிட்ட கத்துக்கிறேன்” என்று பெருமையாகச் சொன்னாள்.

– இப்படியே மூவரும் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

சிவபாண்டியன் வீடு,

வீடு வந்ததுமே, ‘நேரமாயிற்று! முதலில் சாப்பிடலாம்’ என்று செண்பகம் சொன்னதற்கு, ‘பூஜை செய்த பிறகே உணவு’ என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாள், பாவை.

பசி மிகுதியாக இருந்ததால், சிவாவும் செண்பகமும் பேசிக் கொண்டே இரவு உணவு எடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

சற்று நேரத்தில் குளித்துவிட்டு வந்தவள்… அவளுக்கென்றே வரவேற்பறையில் அமைக்கப்பட்டிருந்த பூஜை மாடத்தின் முன் அமர்ந்துகொண்டு, விளக்கேற்றி கடவுளை வழிபட ஆரம்பித்தாள்.

இதற்கிடையே சாப்பிட்டு முடித்திருந்த சிவா, ‘ஒரு ஃபோன் பண்ணனும் -மா’ என்று சொல்லிவிட்டு, அறைக்குள் சென்றிருந்தான். அதன் பின்னரே, பாவை சாப்பிட வந்தாள்.

பாவைக்குப் பரிமாறிக் கொண்டே, “இது பழக்கமா?” என்று கேட்டதற்கு, “ம்ம்ம்! வேணிம்மா சொல்லிக் கொடுத்தது” என்று சொல்லிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

“சரி சரி!” என்றதும், “அப்புறம் இன்னொன்னு செண்பாம்மா! நளினி கங்கிராட்ஸ்-ன்னு மெசேஜ் அனுப்பியிருக்காங்க” என்றாள் மகிழ்ச்சியாக!

“அப்படியா??” என்று சிரித்தவர், “கொஞ்ச நாள்-ல உன்னைப் புரிஞ்சி நடந்துப்பா. நீ எதையும் நினைக்காத” என்று மனதிலிருப்பத்தைச் சொன்னார்.

இதழ்கள் விரிந்த ஓர் புன்னகையோடு, தலையாட்டினாள்.

நளினி-பாவை, இருவருக்கும் பெரிய வயது வேறுபாடு இல்லை. இருவரின் உறவுநிலையும்… உரிமையை எடுத்துக் கொள்ளல், விட்டுக் கொடுத்தல், கட்டிக் காத்தல் போன்றவற்றைச் சார்ந்து உள்ளது!

ஆதலால், உரசல்கள் வந்து போகலாம். எனினும் உறவுநிலை மாறப் போறதில்லை!

உதட்டளவு பேச்சுக்கள் வந்து… பின், அவை உரிமையான பேச்சுகளாக மாறி… உள்ளன்பு வருவதற்கு கொஞ்ச காலஅவகாசம் தேவை!

இப்படியே மாமியாரும் மருமகளும் பேசிக் கொண்டிருக்கையில்… அறையிலிருந்து வெளியே வந்த மதி, ” எப்போ வந்தீங்க?” என்று கேட்டார்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான்” என்றவர், “தூங்கிக்கிட்டு இருந்தீங்களா?” என்று கேட்டார்.

“ஆமா செண்பா!” என்றவர், “சிவா சாப்பிட்டானா?” என்று கேட்டுக் கொண்டே… அலமாரியிலிருந்து ஒரு பூங்கொத்தை எடுத்து, சாப்பாட்டு மேசையில் வைத்தார்.

“சாப்பிட்டான்” என்றவர், “யாருக்கு இது?” என்று செண்பகம் கேட்டார்.

அதே கேள்வியுடன் பாவை பார்த்தாள்.

“பாவைக்கு! மாப்பிள்ளை ஹைத்ராபாத் போனதால கச்சேரிக்கு வர முடியலை-ல. அதான் பாவைக்காக அனுப்பியிருக்காரு”

“நல்லாருக்கு மாமா” என்று ஆசையாகச் சொல்லி, பூங்கொத்தை தன் பக்கமாக இழுத்து வைத்துக் கொண்டாள்.

“சரிம்மா சாப்பிடு” என்று பாவையைப் பார்த்துச் சொல்லிவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு… மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டார்.

இரண்டு நாளில் மதியின் மனநிலை மாற்றம் இந்த அளவே! அதாவது, ‘சாப்பிடுங்க’ என்று பொதுவாகச் சொன்னவர், ‘சாப்பிடு’ என்று பாவை முகத்தைப் பார்த்துச் சொல்லும் அளவிற்கு!!

இன்னும் மற்றம் வரும்!

அதன்பின்… சற்றுநேரம் செண்பகத்திடம் பேசிவிட்டு, தன் அறைக்குள் சென்றாள்.

சிவபாண்டியன் அறை

கண்ணாடித் தரை, வண்ண வண்ண கூழாங்கற்கள், போன்சாய் மரங்கள், பாண்டியன் எடுத்த புகைப்படங்கள் என்றிருந்த அறையில்… ஒரு பக்கச் சுவரில் மட்டும் ஓர் சிறிய மாற்றம் வந்திருந்தது.

பாவை தந்த பாண்டியனின் பிறந்தநாள் பரிசு புகைப்படமும், பாண்டியன் எடுத்ததில் பாவைக்குப் பிடித்திருந்த ‘கிரிஸ்டல் பால்’ புகைப்படமும்…  அழகிய வேலைப்பாடுககள் கொண்ட சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்தன!

பாவை உள்ளே நுழையும் போது, பாண்டியன் ‘ராக்கிங் சேரில்’ கண்கள் மூடிச் சாய்ந்திருந்தான்.

கண்ணாடித் தரையின் மேல், பூனை போல் நடந்து… கணவனருகில் சென்றதும், அவன் மடியில் அமர்ந்து… மனதோடு தலைசாய்த்துக் கொண்டாள்.

திடிர் பாரத்தை தித்திப்பாய் தாங்கிக் கொண்டே, தாரத்தை ஆரத்தழுவிக் கொண்டான்.

அதன்பிறகு,

சற்று நேரத்திற்கு… பொதுவான பேச்சுக்கள்! பிரியமான பார்வைகள்! இவை மட்டுமே, இருவருக்குள்ளும்!!

அதன்பின்… சட்டென்று சத்தங்கள் குறைந்து… சலனங்கள் பிறந்து… மனதில் சாய்ந்திருப்பவளை சற்றே நிமிர்த்தி… அவள் முகம்தனில் முத்தங்கள் வைத்தான்.

அவன் இதழ் பதித்த இடத்திலெல்லாம்… சின்ன சின்ன இதயங்கள் உருவாகி ‘என்ன? என்ன?’ என்று வினாயெழுப்பித் துடிக்கத் துவங்கியது.

வினாவிற்கு விடையெழுதும் முயற்சியாக… அவன் விரல்கள், அவளது இடையில் நடை பழக ஆரம்பித்தன!

என்னே விந்தை!? தடாலென்று விழுந்தது அவள்! அதுவும் அவன் மனமென்னும் மைதானத்தில்!!

அய்யோ விபத்தா? இல்லை! இல்லை! இது நாணம்!!

கன்னத்துப் பருக்களும் வெட்கத்தை வெளிப்படுத்த, “பால்கனி போகலாமா?” என்று கேட்டதற்கு, மந்தகாச மொழியில் மறுப்புத் தெரிவித்தான்.

கடைக் கண்ணால் கணவனைப் பார்த்து… கஷ்டப்பட்டு… கடினப்பட்டு… “எமோஷனல் குளோஸ்னஸ் வந்துடுச்சா?” என்று கேட்டதற்கு, ‘ஆமாமடீ சரிபாதியே’ என்பது போல் மையலாய் ஓர் முகிழ்நகை புரிந்தான்!

“அப்படின்னா?” என்றதன் பின், வார்த்தைகளுக்கு விடுமுறை விட்டாயிற்று!

இவ்வாறு இயல்புகள் மாறாமல் இதயங்கள் பரிமாறிக் கொள்வது எவ்வளவு அழகு!? அவ்வாறு இதயங்கள் பரிமாறிக் கொண்ட பின், இதழ்கள் பரிமாறிக் கொள்வது எத்தனை இதமானது!? இயல்பானது!?

இன்றியமையாததும் கூட!!

அட! இங்கேயும் அதுதான்! ஆதலால்தான் வார்த்தைகளுக்கு விடுமுறை!!

ஆம்! வார்த்தைகள் உச்சரித்த உதடுகள் முத்தத்தை உச்சரிக்க ஆரம்பித்திருந்தன! முத்தத்தின் முடிவில்… அவள் முத்துப் பற்கள் முழுவதும், அவன் முத்தத்தின் கறைகள்!!

கறை நல்லது! ஆம், முத்தத்தின் கறை நல்லது!!!

அதன்பின்னர்… அட! இதற்கு மேல் தாமதம் கொடிது! தாம்பத்தியம் இனிது!!

நாகலாபுரம் அருவி!

இரண்டு நாட்கள் பின்னர் வந்த ஒரு நாளின் அதிகாலை பொழுதில்…

சில இடங்களில் பாசிகள் படர்ந்து வழுவழுப்பாக மாறிய பாறைகள்! பெரும்பான்மையான இடங்களில் சொரசொரப்பான பாறைகள்!

பச்சை பசேலென்று இருக்கும் செடிகளில் கிளைகள், பாறை இடுக்குகளிலிருந்து ‘என்னை பார்?’ என்று சொல்வது போல வெளியே நீட்டிக் கொண்டிருந்தன!

கொஞ்சம் பெரிய மரங்கள், ஆங்காங்கே!

நிமிர்ந்து பார்த்தால் அதிகாலைப் பொழுதின் நீலவானம்! குனிந்து பார்த்தால் கணுக்கால் அளவு நீர்!

இப்படி ஒரு இடத்தில் நின்று கொண்டு, “இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?”என்று கேட்டாள், பாவை.

“இங்கே இருக்கிறப்போதான் உன்னைப் பத்தி அம்மா சொன்னாங்க” என்றான் கேள்விக்குப் பதிலாய்!

“ஓ!” என்று வியந்ததும், “அதான்! உன்னை இங்கே கூட்டிட்டு வரணும்னு ரொம்ப நாள் ஆசை!” என்றான் விருப்பமாக!

“அப்படியா?” என்றாள் ஆச்சரியம் விலகாத குரலில்!

“ம்ம்! ரெண்டு மூணு டைம் உன்கிட்ட சொல்லியிருப்பேனே” என்று சொல்லிவிட்டு, தண்ணீரின் ஊடே நடக்க ஆரம்பித்தான்.

யோசித்துப் பார்த்தாள். கல்யாணப் புடவை எடுத்த அன்று கேட்டது மட்டும் நியாபகத்திற்கு வந்தது.

‘இன்னொரு நாள்’ என்று யோசித்துக் கொண்டிருக்கையில், “பாவை வா” என்று பாண்டியன் அழைத்தும், புடவையை லேசாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, அவனை நோக்கி நடந்து சென்றாள்.

கையில் கேமராவுடன் நின்று கொண்டிருந்தவன் அருகில் வந்ததும், “போட்டோ எடுக்கப் போறீங்களா?” என்று கேட்டாள்.

“ம்ம்ம்” என்றவன், “நீ அங்கே உட்கார்ந்துகோ” என்றான், ஒரு பாறையைக் காட்டி!

“ஐயோ! பட்டுப்புடவை பாழாயிடும்” என்று மறுப்பு சொல்லி, போகாமல் நின்று கொண்டே இருந்தாள்.

“பாழான நான் வாங்கித் தர்றேன் பாவை” என்று சொல்லி, ‘போய் உட்காரு’ என்பது போல் சைகை செய்தான்.

“இப்படித்தான் சொல்லுவீங்க. ஆனா, வாங்கித் தர மாட்டிங்க” என்றாள் குறையாக!

‘எதைச் சொல்கிறாள்?’ எனப் புரியாமல் குழம்பிப் போய் பார்த்தான்.

“முத நாள் பேசினப்போ, ஒரு லிப்ஸ்டிக்-க பாழாக்கிட்டு… அதை வாங்கித் தர்றேன்னு சொன்னீங்க” என்று நினைவு படுத்தியவள், “இன்னும் வாங்கித்தரலை?!” என்றாள் நையாண்டித்தனத்துடன்!

தலையைச் சொரிந்து கொண்டே, “சாரி! நிஜமா மறந்திட்டேன். பட், இந்த தடவை கண்டிப்பா மறக்க மாட்டேன். போ” என்று சிரித்துக் கொண்டே சொல்லி, அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் சென்றதும், நீருக்குள் இருந்த சிறுசிறு பாறைகள் மீது பார்த்து பதனமாக நடந்து… ஒரு பாறையின் மேல் அமர்ந்து கொண்டாள், பாவை!

இலையும் தழையுமாக இருக்கின்ற இடத்தில், ‘எதைப் புகைபடமெடுப்பான்?’ என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பாண்டியனும்… சற்றுநேரம் வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள் என சுற்றி வந்தவன்… பின் பாவை அருகில் வந்து அமர்ந்தான்.

“போட்டோ எடுத்தாச்சா?” என்று கேட்டதற்கு, “ம்ம்” என்று சொல்லி, ‘பாரு’ என்பது போல், அவனது கேமராவை அவளிடம் கொடுத்தான்.

பின், இரு கைகளையும் தலைக்கு ஏதுவாக வைத்து… பாறை மேல் படுத்துக் கொண்டு, ரசனையுடன் இயற்கையைப் பார்த்தான்.

ஒரு ஆறடி உயரத்தின் பாறையிலிருந்து விழும் சிறு நீர்வீழ்ச்சி! அங்கிருந்து விழுந்து, கொஞ்சம் பெரிய கூழாங்கற்கள் மேலே ஓடும் நீர் மற்றும் அதன் சலசலப்பு!

நீர்வீழ்ச்சிக்கு அருகே ஓர் கற்பாறை! அதிலிருந்து நீர் தெரித்ததால் ஈரமாகியிருந்த பாறை!

அந்த ஈரத்தை உணர முடிந்தது. காரணம், அதன் மீதுதான் படுத்திருந்தான். இப்பொழுது ரசனையுடன் தன்னருகில் அமர்ந்திருப்பவளை பார்த்தான்.

சுற்றிலும் இருக்கும் சூழலுக்கு ஈடாக, இலைப் பச்சை வர்ண புடவை உடுத்தியிருந்தாள்! ஒரு சான் அளவிலாலான கறுப்பு கரை!

கரை முழுவதிலும், சரியான இடைவெளியில் உலகப் புகழ் பெற்ற காதல் சின்னமான தாஜ்மஹால் இழையப்பட்டிருந்தது, தங்க ஜரிகையில்!

ஒரே நேரத்தில் இயற்கை ரசிகனாகவும், இல்லாள் ரசிகனாகவும் அவதாரம் எடுத்திருந்தான் போல!!

இதே நேரத்தில் பாண்டியன் எடுத்தப் புகைப்படங்களை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள், பாவை!

முதலில் வண்ணத்துப் பூச்சியின் படம்…

முன்-பின் இறக்கைகளைத் தூக்கிக் கொண்டு, ஆறு கால்களையும் பழுப்பு நிற மரப்பட்டையில் ஊன்றி நின்று கொண்டிருந்த ஊதா நிற வண்ணத்துப் பூச்சி!

உணர் கொம்புகள், உறிஞ்சி குழல்கள், உடற்பகுதி மற்றும் பரிசம்… இவையாவும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன!!

அடுத்தது வண்டின் புகைப்படம்…

மலரின் மகரந்த மடலிலிருந்து எடுத்த மகரந்தத்தை, பின்னங்காலில் சேர்த்து வைத்திருந்த தேனீ! அதுவும் மலரிதழில் நின்று இளைபாறிக் கொண்டிருந்த நிலையில்!

அதற்கடுத்தது…

பச்சை இலையின் ஒற்றை நீர்த்துளிக்குள் அடங்கிய பாறைகள் மற்றும் நீர்வீழ்ச்சி!

“சின்ன சின்னதெல்லாம் பெரிசா தெரியுது” என்றாள், புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே!

“இது மேக்ரோ போட்டோகிராபி. அப்படித்தான் இருக்கும்” என்றான், கண் திறவாமல்!

“ஓ!” என்று மீண்டும் பார்க்க ஆரம்பித்தப் பொழுது, பாண்டியன் எழுந்து அமர்ந்தான்.

“காஃபி குடிப்போமா?” என்று பாவை கேட்டதும், “ம்ம்” என்றான், எழுந்து நின்று சோம்பல் முறித்தபடி!

வீட்டிலிருந்து வருகையில்… இருவருக்கும் காஃபி தயாரித்து, பிளாஸ்கில் எடுத்து வந்திருந்தாள்.

பிளாஸ்கிலிருந்த காஃபியை இரண்டு காகிதக் கோப்பையில் ஊற்றி, ஒன்றை நின்று கொண்டிருந்தவனிடம் நீட்டினாள்.

அவனும் வாங்கிக் கொண்டான். பின்… பிளாஸ்கை மூடிவிட்டு, தானும் குடிக்க ஆரம்பித்தாள்.

இரண்டு மிடறு குடித்ததும், “பாவை” என்று அழைத்து, “நான் ஒண்ணு கேட்கட்டுமா?” என்று கேட்டான், ஏடாகூடத்தின் முன்னறிவிப்பாக!

நிமிர்ந்து பார்த்து, “நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு, நானே சொல்லட்டுமா?” என்றாள், அவன் எண்ணத்தை படித்தவளாக!

“ம்ம்ம்” என்று முணுமுணுத்ததும், ” ‘காஃபி கூட நல்லா போடத் தெரியாதா?’ அதான பாண்டியன்?!“ என்று முறைப்பாகக் கேட்டாள்.

“ப்பா! அன்டர்ஸ்டான்டிங் வேற லெவல் ஹனி” என்று முறுவல் செய்ததும், “உங்களை” என்று முகத்தைச் சுருக்கிக் கொண்டு, எழுந்து அடிக்க வருகையில்… அவளிடமிருந்து தப்பிக்க ஓட ஆரம்பித்தான்.

பாறைகளைக் கடந்து… காட்டு வழிப் பாதையில் ஓடும் கணவனைத் துரத்திக் கொண்டே போனாள், கானங்களின் காதலி!

காதலில் விழுந்தவர்கள் ஓடிக் கொண்டிருப்பதால்… காட்டு வழிப் பாதை, காதல் வழிப் பாதையாக மாறியது!!

ஆகா, காதல் அழகானது! மறுக்க முடியாத ஒன்றுதான்! ஆனால், புரிதலுடனான காதல் ஆழமானதாகிறது!!

இவர்களுக்குள் முதலில் இருந்தது, அழகான காதல்! இப்போதிருப்பது ஆழமான காதல்! எந்தக் காலகட்டத்திலும் மாறாமல் இருக்கும்!!

அருவியின் சத்தத்தைத் தோற்கடிக்கும் ஆனந்தச் சிரிப்புடன், இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

காதல் வழிப் பாதையில் தூரங்கள் அழகல்லவா? ஆதலால்தான், நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்… பாவையின் பாண்டியனும், பாண்டியனின் பாவையும்!

சுருக்கமாக, இசை… இயற்கை மற்றும் இந்த இருவரோடு, இப்பொழுது இன்பமும் இணைந்து கொண்டது!!


Leave a Reply

error: Content is protected !!