நேச முரண்கள் – 8
நேச முரண்கள் – 8
நேச முரண்கள் – 8.
கனவுகளில் கூட
நெருங்க முடியவில்லை
உன்னை.
வேல்விழியில்
மின்னும் வெறுப்பினால்
விலக்கி வைப்பது
வேதனை தருகிறதடி…
இருள் சூழ்ந்த இடத்தில் தன் ஒளியை கொண்டு இரவை பகலாக மாற்றுவதில் முனைப்போடு மின்விளக்குகள் மின்ன அந்த ஒளியிடம் நிலவினால் கூட போட்டி போட முடியவில்லை.
இவர்கள் வருகைக்காக வேண்டி அனைவரும் முழித்திருக்க,
காரிலிருந்து இறங்கியவளை எப்பொழுதும் போல இன்றும் தனது அழகினால் ஈர்த்தது அந்த கட்டிடம்.
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள ஊர்களை செட்டிநாடு என சொல்லப்படுகிறது. இங்கு உள்ள பாரம்பரியமான வீடுகள் செட்டிநாட்டு வீடுகள் என்று அழைக்கப்படுகிறது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் வகையில் அமைந்த அந்த வீடுகள் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்.
அது போன்றதொரு பெரிய வீடுதான் விஜய வர்மனின் இல்லம்.
வயல்கள் சூழ்ந்த பகுதியில், இரண்டு ஏக்கர் மொத்த பரப்பளவு கொண்ட இடத்தில், சுற்றிலும் பலவகை மரங்கள் நிறைந்த தோட்டம் அமைந்திருக்க, நடுவில் கம்பீரமாக முப்பதுக்கு மேற்கண்ட அறைகளை தன்னகத்தே அடக்கி கொண்டு மிகப்பெரிய தூண்கள் ஆங்காங்கே அமைந்தபடி, அரக்கு, பச்சை வண்ணம் மின்னி அதன் எழிலை பறைசாற்றுவது போன்று இருந்த அந்த வீடு எப்போதும் வினோதாவின் விருப்பத்திற்கு உரியதாகும்.
வழக்கம்போல அந்த கட்டிடம் ஏற்படுத்திய தாக்கம் இப்போதும் அதிகமாக இருக்க, முதல் முதலில் தான் இங்கு வந்த தினம் மனதில் நிழலாடியது அவளுக்கு, அதில் மூழ்கியிருந்த வினோதாவின் நினைவுகளை கரம் பற்றி இழுத்து வந்தது அருளாசினியின் அதிரடியான குரல்.
தனது வம்சத்தின் வரவுக்காக வேண்டி தூங்காமல் காத்திருந்த விஜயேந்திரன், அருளாசினி இருவரும் வண்டி வந்த சத்தத்தில் விரைந்து வெளியே வர, வினோதா தன் விழிகளில் ஊற்றெடுத்த நீரினை மறைப்பதற்காக வேண்டி கைப்பையை காரிலிருந்து எடுப்பதுபோல் குனிந்து கொள்ள…
“வாங்க” என்று பொதுவாக அழைத்த வர்மனின் தந்தை வாஞ்சையுடன் வினோதாவை பார்த்து.
“நல்லா இருக்கியா தாயி?” என்று அன்பாக கேட்க, அந்த பாசமான மனிதரிடம் பேசாமல் அதற்குமேல் மௌனம் என்னும் திரையின் பின்னால் ஒளிந்துகொள்ள அவளால் முடியவில்லை.
“நல்லா இருக்கேன் மாமா” என்றவள் எப்போதும் போல் அவர்களின் பாதம் பணிந்து வணங்க “நல்லா இரும்மா… நல்லதே நடக்கும் எல்லாம் உன் மனசு போல” என்று சொன்னவர் தன் பையில் இருந்த பணத்தை மருமகள் கைகளில் கொடுத்து அவளை கண்டு புன்னகைத்தவாறே மகனை முறைக்கவும் தயங்கவில்லை.
வர்மனிற்கு எப்போதும் இதிலெல்லாம் துளிகூட விருப்பம் இருந்ததில்லை, பாதம் பணிந்தது கூட ஒரே ஒருமுறை தனது திருமணத்தின்போது அதுவும் அவனது பெற்றவர்களை மட்டும் தான்.
வினோதாவின் பெற்றவர்கள் இடத்தில் கூட அவன் அதை செய்யவில்லை, அவர்கள் அதை பெரிதாக எதிர்பார்க்கவும் இல்லை என்பது வேறு விஷயம்.
மகளின் நிறைவான வாழ்க்கையே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் வினோதாவின் மனதில் அது எப்பொழுதும் ஒரு சிறு குறையாக உள்ளது என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று.
இது போன்ற செய்கைகளை கண்டால், அவளை கூட சில சமயம் கடிந்து விடுவான் “இது என்ன பழக்கம் முட்டாள்தனமா இருக்கு, டெல்லி வரை போய் படிச்சவ தானே நீ?” என்று வெடுக்கென கேட்பான் அவன்.
அவன் சொல்வதை துளியும் கண்டு கொள்ள மாட்டாள், அவளின் பெற்றவர்களின் வளர்ப்பு என்பது வினோவின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும். பழமையும் புதுமையும் இணைந்து செய்த பூவையவள்.
டெல்லி வரை சென்று படித்த போதும், அவளின் மனதை யாரின் உருவமும் பதியாத வெற்று பக்கமாக பாதுகாத்து வைத்ததே இது போன்ற அன்பான தளைகள் தான்.
மருமகளின் தலையை மெதுவாக வருடிக் கொடுத்த பின் தன் பேரப் பிள்ளைகளின் அருகே சென்றார் வர்மனின் அன்னை.
காரின் உள்ளே இரவின் குளிருக்கு இதமாய் ஒருவரை ஒருவர் நெருங்கி அமர்ந்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்த சிறிய மொட்டுக்களை கண்டது அத்தனை மகிழ்வைத் தந்தது அவருக்கு.
இவர்கள் இருவரின் பிடிவாதத்தில் பிள்ளைகள் தங்களை விட்டு மனதளவில் தொலைவில் சென்றது போல் எப்போதும் தோன்றும் அவருக்கு, அதுவே வர்மன், வினோதா இருவர் மீதும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது அருளாசினிக்கு.
காரின் கதவுகளை திறந்தவர், அவளின் அண்ணன் மீது சாய்ந்திருந்த ரஷ்மியை மெதுவாக வருடிக் கொடுத்து தூக்கி கொள்ள, அந்த அசைவில் கண்விழித்து விட்டான் தீபன்.
எழுந்தவன் “பாட்டி” என்று ஆசையுடன் அழைக்க, புன்னகையுடன் அவனின் தலையை வருடிக் கொடுத்தவர் “தீபா… வாங்க தங்கம்” என்று அவனின் நெற்றியில் முத்தமிட, பதிலுக்கு அவரின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன், வேகமாக வண்டியை விட்டு இறங்கி ஓடி சென்று “தாத்தா” என்று கத்தியபடி சென்று அவரின் மீது தாவி ஏறிக்கொண்டான், எப்போதும் அப்படி தான் அவன்.
“செல்ல கண்ணா எப்படி இருக்க தங்கம்?, இவ்வளவு நாள் ஆச்சு இந்த தாத்தாவை வந்து பார்க்க என் பட்டுங்களுக்கு” என்று ஆசையுடன் பேசிய விஜயேந்திரனின் குரல் சற்று கரகரப்பாக தான் வெளியே வந்தது பிள்ளையின் அன்பினை கண்டு.
அதன் பின் அவரை விட்டு கொஞ்சம் கூட விலகவில்லை வர்மனின் மகன். தன் அன்பான தாத்தாவிடம் மெல்லிய குரலில் இரண்டு வருடகால கதையை பேசிக் கொண்டிருந்தான் தீபன்.
அவனின் குரலை கேட்பதே பெரியவர்கள் இருவருக்கும் போதுமானதாக இருந்தது, இழந்த சுவர்க்கம் கைகளில் கிடைத்தது போல் இருந்தது இந்த பிள்ளைகளின் வரவினால் அவர்களுக்கு.
அருளாசினி தன் தோளில் சாய்ந்து உறங்கி கொண்டிருந்த பேத்தியை கைகள் நடுங்க வருடி கொண்டே தீபனின் வார்த்தைகளை ரசித்துக் கொண்டிருந்தார்.
அத்தனை நிம்மதியாக இருந்தது அவர்களின் முகம், பிள்ளைகளுக்கு ஏங்கிய மனதில் அமைதி வந்து குடிகொண்டிருக்க இந்த நிமிடத்தின் அருமையை பரிபூரணமாக அனுபவித்துக் கொண்டிருந்தனர் மூத்தவர்கள் இருவரும்.
பெரியவர்களின் அன்பு, தவிப்பான நிலை கண்டு சற்று குற்ற உணர்வாக இருந்தது இளையவர்களுக்கு..
பின்னிரவு நேரம் என்பதால் அதற்கு மேல் எதையும் பேசிக்கொள்ளாமல் மாடி முழுவதும் உள்ள பகுதியை மகன், மருமகள் இருவருக்கும் ஒதுக்கி இருந்ததை சொல்லி, தன் குலக் கொழுந்துகள் இருவரையும் தூக்கிக் கொண்டு சென்று விட்டனர் அருளாசினி, விஜயேந்திரன் இருவரும்.
அத்தனை பெரிய வரவேற்பறையில் வர்மனிற்கும் வினோதாவிற்கும் இடையே தனிமை தாண்டவம் ஆடியது.
அதுவரை இருந்த மனநிலை சட்டென்று மாறிவிட்டது வினோதாவிற்கு. கால்களில் இரும்பு குண்டை வைத்தது போல் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் தடுமாற, அதிர்ந்து நின்றவள் மனதில் மாடியில் உள்ள அவர்களின் அறை… அதில் தொடங்கிய அவர்களின் இல்லறமாகிய நல்லறம்… நல்லறமா அது? ஆம் உலகத்தாரின் பார்வைக்கு என்றும் அது நல்லறமே… என்று பல… நினைவுகள் தோன்றி பெண்ணவளை நகரவிடாமல் செய்ய பேந்த பேந்த விழித்து கொண்டு இருந்தாள்.
அதுவரை அவளின் முகத்தையே வேதனையுடன் பார்த்து கொண்டிருந்த வர்மன், மனைவியின் அதிர்வை கண்டு மெல்ல வினோவின் கரங்களை பற்றி, “இந்த வீட்டில் உன்னோட உணர்வுகள் எந்த விதத்திலும் பாதிக்க படாதுடா… உன்னை, உன் மனதை என்னை விட என் அம்மாவிற்கு நன்றாக புரியும் வினி, மாடி ஃபுல் அஹ் தான் நமக்கு ஒதிக்கிருக்காங்கலே தவிர, ஒற்றை அறையை இல்லை” என்று வெறுமையாக சொன்னவன், “உனக்கு பிடிக்காதது எதுவும் இங்கே நடக்காது,” என்றவன் மாடியை நோக்கி சென்று விட்டான்.
அவனின் வார்த்தைகளை கேட்டவள் இதழ்களில் கசந்த முறுவல் ஒன்று வெளிவந்தது. ‘என் உணர்வுகள் ஏமாற்றத்தை முதலில் உணர தொடங்கியது இங்கே தான்’ என்று நினைத்த படியே மேலே செல்ல… முன்பு தாங்கள் இருந்த அறைக்கு சற்றே தள்ளி ஒரு அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
மாமியாரின் புரிதலை எண்ணி வியந்தவாறே மெல்ல அதனுள் சென்றவளை வரவேற்றது பலவகை பூக்களின் நறுமணம்.
அந்த அறையை ஒட்டியிருந்த பால்கனியில் இருந்த செடிகள் தன் மலர்களை கொண்டு சுற்றி இருந்த இடம் முழுவதும் தன் வாசத்தால் நிரப்பி இருந்தன.
அந்த இனிமையான சூழலில் மனம் லேசாக மாறினாலும், என்ன முயன்றும் தூக்கம் தொலை தூரம் தான் சென்றுவிட்டது வினோதாவிற்கு.
வர்மனை பார்த்த பிறகு இப்பொழுதெல்லாம் சில நாட்களாக அவளுக்கு தூக்கம் பகையாகி போனதை எண்ணி கடுப்பாக வந்தது வினோதாவிற்கு.
தள்ளி இருந்தும் தன் உணர்வுகளை தடுமாற செய்பவனை என்ன செய்ய என்று அவளுக்கு தெரியவில்லை. மனதை அடக்கி உறங்க முயன்றவளுக்கு அது கூட ஏமாற்றத்தை தான் பரிசாக தந்தது.
இவளின் நிலை இப்படி இருக்க கொண்டவன் நிலையோ இதைவிட மோசம்.
மேலே வந்து படுக்கையில் விழுந்தவன் நெஞ்சம் எதையும் மறக்கவில்லை இப்போது அவன் புரிந்து கொள்ளும் வினோவின் உணர்வுகளை முன்பே புரிந்திருந்தால் அழகான வாழ்க்கையை அருமையாக கொண்டு சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தை என்ன முயன்றும் அவனால் தவிர்க்க முடியவில்லை.
சற்று முன்னர் கீழே தன்னவள் அதிர்ந்த முகம் கண்டு அவளை சமாதானம் செய்ய முயன்ற வர்மனின் மனம் கொஞ்சமும் கூட சமாதானம் ஆகவில்லை.
தன் நிலை எண்ணி உள்ளம் இயலாமையில் துடித்தது.
வந்தது முதல், தாய்… தந்தை இருவரும் அவனிடம் தனியாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ‘வாங்க’ என்று பொதுவாக சொன்னவர்கள் தான். அதன் பின் எதையும் அவனிடம் நேரடியாக சொல்லவில்லை.
மனைவியின் வெறுப்பும், பெற்றவர்களின் பாரா முகமும் வேதனையை தர… அந்த அறையோ அவனின் வலியை மேலும் அதிகரிக்க செய்தது.
இதே இடத்தில் அவர்கள் கூடி களித்த பொழுதுகள்… தன்னவளிடம் செய்த செல்ல சீண்டல்கள்… அவளது வெக்கத்தை அவன் உடைத்த இனிய தருணங்கள்… என்று அனைத்தும் கண் முன்னே தோன்றி மனதை வதைக்க தூக்கம் கூட துக்கத்தை தான் கொடுத்தது.
****************************
காலை நேர பரபரப்பு மிகுந்து காணப்பட்டது விஜயேந்திரன் மாளிகையில்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்திருக்கும் அவர்களின் வீட்டு வாரிசுகள் பெரியவர்களின் கண்களை நிறைத்தது மட்டுமில்லாமல், மனதையும் நிம்மதியில் ஆழ்த்தியது என்றால் மிகையல்ல.
சிறகுகள் முளைத்த வண்ணத்துப்பூச்சியை போல வளைய வந்தாள் அவர்களின் வீட்டு குட்டி இளவரசி.
ரஷ்மிகா இறுதியாக இந்த வீட்டுக்கு வந்த போது நான்கரை வயதில்தான் இருந்தாள் அதனால் பெரிதும் எதுவும் அவளுக்கு ஞாபகம் இல்லை இப்போது வீட்டின் முற்றம் ஆகட்டும், பின்கட்டு தொழுவத்தில் நிற்கும் மாடுகள் ஆகட்டும், மூன்று நாட்களுக்கு முன்பு தான் பிறந்த சிறிய வெள்ளையும் கருப்பும் கலந்த கண்ணுக்குட்டி என அனைத்தும் அவளுக்கு குதூகலத்தை கொடுத்தது.
ஓரிடத்தில் நிற்காமல் தன் குஞ்சு பாதங்களை அங்குமிங்கும் அலைய விட்டு சிட்டாகப் பறந்து கொண்டிருந்தது அந்த சிட்டுக்குருவி.
டெல்லி போன்ற கட்டிடங்கள் நிறைந்த ஜனசந்தடி மிகுந்த பகுதிகளில் காணப்படாத அழகு, இயற்கை எழில் கொஞ்சும் சுற்றிலும் வயல்கள் நிறைந்திருக்க, நடுவில் அமைந்த அந்த வீட்டில் துள்ளி விளையாடியது.
தோட்டத்தில் ஓடிய குட்டி முயலின் பின்னே ரஷ்மி ஓடிக்கொண்டிருக்க, தங்கையுடன் சேர்ந்து விஜயதீபனும் அந்த அழகிய சூழ்நிலையில் புன்னகையுடன் ஒன்றி போய் இருந்தான்.
மருண்ட விழிகளுடன் தத்தித்தாவி தன் பெரிய காதுகளை நிமிர்த்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த முயலை “அண்ணா நீ அப்படி வந்து பிடி, நான் அதை இப்படி வரேன்” என்றவள் சட்டென முயலின் மீது தாவி விழ, அது ‘உனக்கும் பெப்பே உங்க அப்பாவுக்கும் பெப்பே’ என்று சின்னவளுக்கு அழகாக போக்கு காட்டி ஓடிவிட்டது.
சின்னகுட்டிக்கு அது ஒன்றும் ஏமாற்றமாக எல்லாம் இருக்கவில்லை, அனைத்தும் விளையாட்டாகவே இருந்தது. தீபன் வந்து “போதும் செல்லம் , அந்த குட்டி பாவம் இல்ல, வா வேற விளையாடலாம்” என்றவன் கீழே விழுந்த தங்கையை தூக்க, தன் அண்ணன் தன்னை அள்ளி கொள்வதற்கு வாகாக கைகளை தூக்கியவள் தீபனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
குழந்தைகளின் அன்பு சற்று தொலைவில் நின்று பார்த்துக்கொண்டிருந்த அருளாசினியின் கண்களை நீர் நிறைய வைத்தது.
எத்தனை அருமையான குழந்தைகள். பெற்றவர்கள் இருவரும் இருக்க அவர்களுடன் இணைந்து ஒன்றாக முடியாமல் ஒருவரிடம் மட்டும் வாழ்கிறார்கள்.
‘ஒற்றை பிள்ளையாய் வளர்ந்ததினால் தானோ என்னவோ தன் மகனிற்கு சிறிதளவுகூட விட்டுக்கொடுத்து மணவாழ்க்கையை திறம்பட கொண்டு செல்ல தெரியவில்லையோ!’ என்று மனம் அடித்துக்கொண்டது அன்னைக்கு.
அவரும் தான் என்ன செய்வார் மகனுக்கு பிறகு இறைவன் அந்த கொடையை கொடுக்கவே இல்லை வர்மனின் தாய்க்கு.
மகன் மருமகள் இருவரின் முட்டாள்தனத்தினாலும், வீண் பிடிவாதத்தினாலும் சின்னவர்களை போட்டு அலக்கழிக்கின்றனர் என்று வருந்தியவர், இதனை ஒரு. முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தார்.
பிரிவுக்கான காரணம் எதுவும் இந்த நிமிடம் வரை அவர்களுக்கு சரிவர தெரியாது,
மகனின் மூலமாக தான் அவர்களுக்கு இடையே இருந்த மன வேற்றுமை காரணமாக பிரியப் போகிறார்கள் என்று இவர்களுக்கு தெரியும் ஆனால் அதன் காரணத்தை அவனும் சொல்லவில்லை… எப்போதும் அவர்கள் எது சொன்னாலும் தட்டாமல் ஏற்றுக் கொள்ளும் வினோதாவும் சொல்லவில்லை.
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிரிவு ஒன்றே நிலை என்று இருந்தவர்களை மனதை மாற்ற பெற்றவர்களால் கொஞ்சமும் முடியவில்லை.
வினோதாவின் பெற்றவர்கள் அன்பாக, கோபமாக, அதட்டி என சொன்ன எதையும் அவளும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அரவிந்தனுக்கு தான் அத்தனை மனவருத்தம். அவனது ஒரே அன்பு தங்கையின் மணவாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியை எண்ணி, நெருங்கிய தோழியான வருணிகாவிடம் கூட எதையும் சொல்லவில்லை வினோ.
மனதை மூடி மறைப்பதில் மட்டும், முருங்கை மரத்தில் தொங்கும் வேதாளம் என நிரூபித்தனர் வர்மன், வினோதா ஜோடி.
அவர்களாக பிடிவாதத்தை விட்டால் ஒழிய தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று புரிந்த அனைவரும் பார்வையாளராக மாறிவிட…
மற்றவர்களுக்கு வாய்ப்பை தராமல் தங்கள் வாழ்க்கையில் தாங்களே மிக மோசமாக விளையாடினர் கணவன் மனைவி இருவரும்.
*********************************
இரவு நேரத்தில் உறங்காததினால் காலையில் எழும் போது தலை மிகவும் பாரமாக இருந்தது வினோதாவிற்கு.
மெல்ல எழுந்து பால்கனியில் நின்றவள் விழிகள் அவளையும் அறியாமல் வர்மன் அறையின் மீது பதிந்தது.
மெத்தையில் படுக்க முடியாமல் ராத்திரி பால்கனி ஊஞ்சலில் வந்து அமர்ந்தவன் அப்படியே உறங்கி விட… அப்போது தான் எழுந்து அமர்ந்திருந்தான் இரவு உடையில் கலைந்த முடியுடன் இருந்தவன் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க அவனது பார்வையில் விழுந்தாள் பாவையவள்.
இரவு முழுவதும் போராடி வேண்டாம் என்று தவிர்த்த நினைவுகள் எல்லாம் அவளுக்கு வர்மனை கண்டதும் காட்டாற்று வெள்ளம் என்று அவள் மன தடைகளை எல்லாம் தகர்த்து எரிந்து கொண்டு வெளியே வந்தது நினைவலைகள் படமாக ஓட.
வர்மனின் மனம் அவளை தொடர்ந்தது அந்த கணத்தில்.
திருமணத்திற்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தயார் செய்து கொண்டவன் ஹார்மோன்கள் அவனது வயதிற்கு ஏற்றது போல் மெதுவாக சுரக்க துவங்க, மணநாளில் அஞ்சனங்களில் மைதீட்டி, அதரங்களில் லேசாக சாயம்பூசி, கன்னங்களில் வெக்க சிவப்பு மின்ன பட்டுபுடவையில் நடந்து வந்தவளின் அழகு அவனை கிறக்கத்தில் ஆழ்த்தியது.
அழகாக இருக்க வேண்டிய அவசியமில்லை, மனைவி என்று இருந்தாலே அவளைவிட்டு தள்ளி இருப்பது ஆண்களுக்கு பெரும் சவால் தான். அதிலும் மனதை மயக்கும் தோற்றத்துடன் இளமை ததும்பும் துணையை விட்டு தள்ளி இருக்க வர்மன் ஒன்றும் விஸ்வாமித்திரர் இல்லை, அவரே மேனகையிடம் சறுக்கிறவர் என்பது மறுக்க முடியாதது.
அதே நேரம் அவனுக்கு குடும்பம், மனைவி, பிள்ளைகள்… என என்னும் போதே கடுப்பாக இருந்தது.
மறுக்க முடியாமல் அமைந்து விட்ட வாழ்கையை ஏற்று கொண்டவன் பிள்ளை என்னும் தொல்லைகள் இப்போது வேண்டாம் என்று முடிவெடுத்தான்.
வாழ்வில் எந்த முடிவை மனைவியின் சம்மதம் இல்லாமல் எடுக்க கூடாதோ அதை வெகு சுலபமாக முடிவு செய்தவனை என்னதான் சொல்வதோ!
தனது ஆசைகள் நிறைவேறும் பச்சதில் பெண்ணவளின் எதிர்பார்ப்புகள் மரித்துப் போவ போவதை அந்த ஆண்மகன் அறியவில்லை.
மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே
திசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்.