தண்ணிலவு தேனிறைக்க… 19

TTIfii-1ddfbb4f

தண்ணிலவு தேனிறைக்க… 19

 தண்ணிலவு – 19

கொரானா இரண்டாம் அலையின் தீவிரமான தாக்குதலில், மீண்டும் ஆங்காங்கே பொது முடக்கத்தின் எதிரொலி கேட்கத் தொடங்கியிருந்தது.

மறுபடியும் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டதில். குழந்தைகள் பழையபடியே விடுப்பில் அடங்காத ஆட்டம்போட ஆரம்பித்திருந்தனர்.

சூழ்நிலையின் தீவிரம் அறிந்து, புனேயில் தனது குடியிருப்பை காலிசெய்து கொண்டு, சென்னைக்கு மொத்தமாக வந்துவிட்டிருந்தான் பாஸ்கர்.

அனைத்து வேலைகளையும் இணையத்தின் மூலமாக முடித்துக் கொள்ளும் வசதியினை ஏற்படுத்திக் கொண்டு,  தனது அலுவலை கவனிக்கத் தொடங்கியிருந்தான்.  காரியமே கண்ணாக மேல்மாடி அறையில் எப்போதும் மடிக்கணினியுடன் அடைந்து கிடக்க ஆரம்பித்து, வாரம் ஒன்று கடந்திருந்தது.

மூன்று வாரத்திற்கு முன்பு கோபமாக, மனைவியிடம் ‘நானிருக்குமிடம் வந்துசேர்’ என பேசிவிட்டு வைத்தவனை, இயற்கையும் சதிசெய்து, அவனையே மனையாளின் இருப்பிடம் தேடி வரவைத்திருந்தது.

ஒவ்வொரு முறையும் தானே அவளின் இருப்பிடம் தேடி வருவதாக சுணங்கிக் கொண்ட பாஸ்கர், இன்னமும் மனதிற்குள் கடுகடுத்துக் கொண்டிருந்தான்.

இன்றுடன், இருவரும் பேசி முழுதாய் ஒரு மாதத்திற்கு மேல் கடந்து விட்டது. குழந்தைகளை வைத்துக் கொண்டே இதுநாள் வரையிலும் இருவரும் சமாளித்து வந்துவிட இவர்களின் விலகல் யார் கண்களுக்கும் புலப்படவில்லை.

வீட்டில் இருப்போரின் எண்ணிக்கையும் அதிகமாகி, இடப் பற்றாக்குறை இன்னலும் சேர்ந்து கொண்டதில், பாஸ்கரின் மனதிற்குள் சீக்கிரமே புதுவீட்டிற்கு சென்று விடவேண்டுமென்ற எண்ணம் தலைதூக்கத் தொடங்கியிருந்தது.

தனிமையில் வேலையை பார்த்து வருபவனுக்கு, சதா ஆள்நடமாட்டம் மற்றும் சலசலப்பு இருந்ததில், இவனது அலுவலும் பின்தங்க ஆரம்பிக்க, விரைவில் தனிக்குடித்தனம் செல்லும் முடிவினை எடுத்து விட்டான்.

கீழ்தளத்தை முதலில் முடித்துவிட்டு, பின்னர் மாடி ஃபோர்சனில் வேலையை முடக்கி விடலாமென்ற பாஸ்கரின் யோசனையை கருத்தில் கொண்டே வேலைகளும் துரிதமாக நடைபெற ஆரம்பித்தன.

“வீட்டுக்கு A டூ Z திங்க்ஸ் வாங்கணும்… உன்னோட பட்ஜெட், அதோட, இந்த கிரிட்டிகல் சிட்சுவேசன் எல்லாம் அனுசரிச்சு, சிம்பிளா கிரகப்பிரவேசம் நடத்தலாம் பாஸ்கி… எதையும் இழுத்து வைச்சுக்காதே!” முன்யோசனையுடன் மிதுனா கூறியது சரியென்று தோன்றினாலும், பதில் சொல்ல மனையாளின் முகத்தைப் பார்த்தான் பாஸ்கர்.

“எனக்கும் அதுதான் சரின்னு படுது… வீணா ரிஸ்க் எடுக்க வேணாம். ஐம்பதுபேர் மட்டுமே கலந்துக்கற மாதிரி பங்ஷன் அரேன்ஜ் பண்ணுவோம்…” மொட்டையாக சிந்தாசினி பதில் கூறியதில், இவள் யாரிடம் பேசினாளென்று யாருக்கும் தெரியவில்லை.

‘இவ மொகத்த, ஒருத்தன் பார்த்துட்டு இருக்கானேன்னு பாவபட்டாவது என்னைப் பார்த்து பதில் சொல்றாளா? இவளை எப்பவும் எல்லாரும் தாங்கிட்டு இருக்கிறாங்கல்ல… அந்த திமிரு! இன்னும் என்கிட்ட ஒரு வார்த்தை பேசல… அப்படியென்ன அழுத்தம் இவளுக்கு? நீ நடத்துடி… நானும் நடத்துறேன்!’ மனைவியை கருவிக் கொண்டவனின் மனம், அவளின் விலகலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது.

‘அடுத்த ஜென்மத்துல சத்தியமா பொண்ணுங்க பக்கமே தலைவைச்சு படுக்ககூடாது… அப்டி இல்லன்னா சூடு சொரணை இல்லாத ஜடமாவே, என்னை கடைசி வரைக்கும் இருக்க வை ஆண்டவா!’ மிகவும் நொந்து போனவனாக மறுஜென்மத்திற்கான வேண்டுதலை வைத்துக் கொண்டான்.

சிந்தாசினிக்குமே இன்னதென்று புரியாத மனநிலைதான். சட்டென்று மனம் வெற்றிடம் கொண்டதாய் ஒரு நினைவு. இந்த கணத்தை அவளாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

உருவமே இல்லாத ஏதோ ஒன்று, ஒளியெழுப்பாது அவளை தாக்குவது போலிருக்க, ஒருவித தவிப்போடுதான் நடமாட ஆரம்பித்தாள். புதிய வேலைக்கான முயற்சிகளையும்  வீடு கட்டும் காரணத்தை வைத்து, தற்காலிகமாக நிறுத்தியும் வைத்தாயிற்று…

தானாகச் சென்று பேசினால், கணவன் தன்னைக் கடித்து குதறிவிடும் அபாயமிருக்க, என்ன செய்வதென்றே புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

‘முன்ன பின்ன புருஷனை தாஜா பண்ணி, ஐஸ் வச்சு பழகியிருந்தா இந்த அவஸ்தை இருந்திருக்காதோ’ மனைவிக்கே உரிய பலவாறான யோசனைகளும் அடுத்தடுத்து வந்து அலைகழிக்க தொடங்கின. 

தனிமை என்பதும் இருவருக்குமே எட்டாக்கனியாகிப் போனது. சொந்தபந்தங்கள் புடைசூழ வாழும் கூட்டுக் குடும்பத்தில், மிக அரிதான, சொற்ப இயலாமைகள் இவர்களையும் சூழ ஆரம்பித்ததில், இருவரும் தங்களது பனிப்போரினை வெகுஜோராய் நடத்திக் கொண்டனர்.

நேரம் காலம் யாருக்கும் காத்திருக்கவில்லை. அடுத்த பத்து நாட்களில் புதுமனை புகுவிழாவிற்கான நல்லநாள் குறிக்கப்பட்டு, அதன் வேலைகள் எல்லோரையும் இழுத்துக் கொண்டது.

வழக்கம்போல் பாஸ்கருக்கு அலுவல் வேலையே கழுத்தை நெறித்ததில், எங்கும் அசையாமல் வீட்டோடு தங்கிவிட்டான். தயானந்தனுக்கும் அந்த நேரத்து தொழில் நெருக்கடிகளை சமாளிப்பதற்கே நேரம் போய்விட, விழா ஏற்பாடுகளை பெண்கள் தங்களின் பொறுப்பில் ஏற்றுக் கொண்டனர்.

பாஸ்கரின் பெரிய அக்கா சாந்தினியும் வந்து இணைந்து கொள்ள, சிந்தாசினி, மிதுனா சேர்ந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தனர்.

வீட்டு வாசலில் இருந்து பின்கட்டு வரைக்குமான அன்றாடத் தேவைகள், சின்ன டம்ளரிலிருந்து பெரிய அண்டா வரை என சகலமும் வாங்க வேண்டியிருக்க, சற்று அதிகமான அலைச்சல்தான் மூவருக்கும்.

அலமேலுவும் மரகதமும் சேர்ந்து சமையலறை சாமான்கள், மளிகை, இத்யாதி வகைகளை சேர்க்கத் தொடங்கிவிட, அவர்களுக்கும் நொடிநேரம் ஓய்வில்லை.

குழந்தைகளும் அவ்வப்போது பெரியவர்களுக்கு உதவிசெய்து, கையோடு சேட்டைகளையும் செய்து கடுப்பைக் கிளப்பினர்.

அனைவருக்குமான புதுத் துணிமணிகளையும் பெண்களே சென்று வாங்கி வந்திருக்க, இன்னமும் இரண்டு நாட்கள்தான் விழாவிற்கு இடையில் இருந்தது.

“நம்ம குடும்பத்துல, நீ எடுத்து செய்யுற மொத விசேஷம் பாஸ்கி! சித்தப்பா, பெரியப்பா, மாமாக்கு எல்லாம் நேருல போயி, முறையா அழைப்பு வைக்கணும்!” சாந்தினி உத்தரவாகச் சொல்லிவிட, மறுபேச்சின்றி ஹோண்டா டியோவில் மனைவியுடன் கிளம்பி விட்டான்.

இரண்டு இடத்திற்கு சென்று அழைத்து விட்டு, பேசாமடந்தைகளாக வண்டியில் பயணம் செய்துவர, ஒரு கட்டத்தில் இருவருக்குமே அலுப்பு தட்டியது.

‘இப்படி ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டு நிற்பதற்கா, மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்தது?’ சலிப்பான எண்ணம், ஏகநேரத்தில் இருவரின் மனதிலும் தோன்றியதோ என்னவோ, சிந்து கணவனின் தோளில் அழுத்தம் கொடுக்க, அதற்கு முன்னமே பாஸ்கரும், வண்டியை ஓரமாக நிறுத்தி இருந்தான்.

இறங்கியவள், அவன் முகம் பார்க்க, இவனும் பதில் பேசாமல் அருகிலிருந்த காஃபிஷாப்பிற்கு செல்ல, பின்னோடு நாய்குட்டியாக மனைவியும்…

அங்கே சென்று இருவருக்குமாக சேர்த்து, இவனே சாக்லேட்மில்கை ஆர்டர் செய்துவிட்டு, புருவத்தை உயர்த்தி என்னவென்று சைகையால் கேட்க,

“ஓ… அவசியத்துக்கு கூட என்னோட பேச மாட்டீங்க, அப்படிதானே?” கிசுகிசுப்பான குரலில் கடுகடுத்துக் கொண்டவளைப் பார்த்தவனுக்கு, சிரிப்போடு கோபமும் வந்தது.

‘எங்கு வந்து என்ன கேட்கிறாள்? பைத்தியக்காரி!’ மனதிற்குள் நினைத்ததை வெளியே சொல்லாமல் நமட்டுச் சிரிப்பை இவன் உதிர்க்க,

“சகிக்கல… தலைக்கு வடசட்டி, கண்ணுக்கு சோடாபுட்டி, திருடனாட்டம் முகத்துக்கு சல்லாத் துணி… கோமாளிய விட கேவலமா இருக்கீங்க!” உச்சிவெயில் உஷ்ணத்தில் சீறியவள், கணவனின் கூலர்சை வெடுக்கென்று கழட்டி கீழே வைத்தாள். 

“அடிப்பாவி… சின்சியர் சிட்டிசனா ரூல்ஸ் ஃபாலோ பண்றது உனக்கு கோமாளித்தனமா இருக்கா? ஹெல்மெட்டும், மாஸ்க்கும் போடலன்னா ஃபைன் போடுவாங்கடி! அப்புறம் இந்த கூலர்ஸ்… அடிக்கிற வெயிலுக்கு இதை அவாய்ட் பண்ண முடியாது. அதோட நம்ம ஸ்டைல் மெயின்டெயின் பண்ற ஹார்டுடிஸ்க்(hard disk) இதுதானே!” கண்ணடித்துக் கொண்டே மீண்டும் கூலரை மாட்டிக் கொள்ள, அடக்கமுடியாத கோபத்தில் பல்லைக் கடித்தாள் சிந்தாசினி. 

அத்தனை கோபம் அவளுக்கு, கணவனின் மேல்… கடந்த இரண்டு நாட்களாக இவளாக இரண்டொரு வார்த்தை பேச முயற்சித்தாலும் விலகிச் செல்கிறான். இரவில் கிடைக்கும் தனிமைப் பொழுதிலும் மடிக்கணினியை கட்டிக்கொண்டு அறைக்குள் தஞ்சம் அடைந்து விடுகிறான்.

தினப்படி செலவுக்கணக்கை கூறலாமென்றாலும், இவனாகவே மிதுனாவிடம் கேட்டுக்கொண்டு, அத்தோடு தன் கடமை முடிந்ததென ஒதுங்கிக் கொள்கிறான்.  

அலட்சிய பாவனையில் கணவன் காட்டும் ஒதுக்கம், நிமிர்ந்தே பார்க்காத தீவிரத்துடன் நடமாடுவதெல்லாம் சேர்ந்து, மனைவியின் மனதை வெகுவாக கசக்க செய்திருந்தது.

“என்ன சைலண்ட் ஆயிட்ட? சொல்ல வந்தத சீக்கிரம் சொல்லு…” ஏனோதானோவென்று இவன் கடமைக்கு கேட்டதில், பேச விரும்பியவளுக்கும் மனம் விட்டுப் போனது.

ஆனாலும், தன்னிடத்தில் இவன் இத்தனை அழுத்தம் காண்பிக்க வேண்டுமா என்று ஆதங்கப்பட, மனசாட்சி உன்னைவிடவா எனக்கேட்டு எக்காளமிட்டது.

“ஒண்ணுமில்ல… உங்களுக்கு ஏதாவது இருந்தா சொல்லுங்க!” வெறுமையாக கூறி முகம் திருப்பிக்கொண்டாள்.

“எனக்கும் ஒண்ணுமில்ல… வழக்கமா சல்வார், குர்தி விட்டுட்டு இப்படி சில்க் காட்டன்ல உன்னை சைட் அடிக்கிறதும் சுகமாத்தான் இருக்கு…. இப்படியே டெய்லி ஊர் சுத்துவோமா?” உதட்டுக்குள் அடக்கிக் கொண்டாலும், பாஸ்கரின் கண்கள் சிரிப்பை வெளிப்படுத்திவிட,

“அதுக்கு மட்டும்தான் நான் வேண்டியிருக்கேனா?” சிடுசிடுப்பாக கேட்கும்போதே ஆர்டர் செய்ததும் வந்துவிட, தன்னால் வாயை மூடிக்கொண்டாள்.

“வெளியே வந்து சாமியாடாதடி! நான் சொல்ல வர்றத, நீ புரிஞ்சுக்க மாட்ட… உன்னோட விருப்பம் எனக்கும் ஒத்துப்போகாது. அதையும் மீறி பேச ஆரம்பிச்சா, வீண் சண்டைதான் வருது. ரெண்டு பேரும் இப்படியே அமைதியா இருந்து காலத்தை ஓட்டுவோம். இப்படி சொன்னதும் உடனே, புருசனுக்கு உன்மேல அன்பில்ல, ஆசையில்லன்னு முடிவு கட்டாதே… அதெல்லாம் ஃபிக்சட் டெபாசிட்டா பத்திரமா மனசுகுள்ள இருக்கு. குடிச்சிட்டு கிளம்பு!” பேச்சு முடிந்ததாக எழுந்தவனைப் பார்த்ததும், சிந்தாசினியின் மனம் துணுக்குற்றது.

வெளியில் சகஜமாக இருப்பதாக காட்டிக்கொண்டு, தன்மீதான அத்தனை ஆத்திரம், அதிருப்திகளையும் அடிமனதில் அமிழ்த்தி வைத்திருக்கிறானே? இது எங்கே போய் முடியப் போகின்றதோ? உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே, முன்னைவிட அதிகமாக தளர்ந்து போனாள்.  

************************

மறுநாள் மதிய உணவிற்கு பிறகு, மனைவியை வம்படியாக தன்அறைக்கு கடத்திக்கொண்டு வந்திருந்தான் பாஸ்கர்.

“எந்த டென்சனும் குழப்பமும் இல்லாம ரிலாக்ஸா இருக்கியா?” சீண்டலுடன் கேட்டவனை எப்போதும்போல் சிந்தாசினி முறைக்க,

“சரி… சரி! சிரிச்ச மாதிரியே நான் குடுக்குறத வேண்டாம்னு சொல்லாம வாங்குவியாம்” புன்னகையுடன் தான்வாங்கிய தாலிசெயினை கொடுத்து, மறுத்து விடாதே என்ற பாவனையில் நின்றான் பாஸ்கர்.

அழகான முகப்பு பதித்த ஒன்பதுபவுன் தாலிக்கொடி, முறுக்கு குறையாமல் மினுமினுத்தது. திருமணமான பெண்ணிற்கு கணவனின் திடீர் அன்பளிப்பாக தாலிக்கொடி வந்தால் மனம் கசக்குமா என்ன?

அதுவும் தன்னைத் தவிர்ப்பவன் முன்வந்து கொடுத்தால்… சொல்லவும் வார்த்தைகள் வேண்டுமோ? சிந்தாசினிக்கு உள்ளமெங்கும் விகசித்த பூரிப்பு, முகத்தில் மலர்ந்து விரிந்தது. ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,    

“இப்போ இருக்குற செலவுல, இதையும் ஏன் வாங்கினீங்க?” சூழ்நிலையை அறிந்தவளாய் விசாரித்தாள் மனைவி.

“கேள்வி கேக்காம எதையும் வாங்கிக்க மாட்டியா நீ?” இவனும் பதில் கேள்வி கேட்க,

“என் கையிருப்பு சுத்தமா காலியாகிடுச்சு… உங்களோடதும் குறைஞ்சிருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். வீடு செட்டிலாகுற வரைக்கும் செலவுகள் இழுக்கும். இத்தனை கஷ்டத்துல எனக்கு செயின் தேவையான்னு கேக்குறேன். இதைகூட கேக்க கூடாதா?” உரிமையோடு குறைபட்டுக் கொண்டதில் மகிழ்ச்சியடைந்தான் பாஸ்கர்.

“ஐஎஸ்ஐ முத்திரை குத்தின அக்மார்க் பொண்டாட்டி ஆகிட்டடி நீ… வெரி வெல்டன் மைடியர்!” கொஞ்சிக் கொண்டவன், மனைவியின் நெற்றியின் மீது செல்லமாக தலை முட்டிக்கொள்ள,

“நான் கேட்டதுக்கு இதுதான் பதிலா?” கொம்பு முளைத்துவிடும் பயத்தில் இவளும் பதிலுக்கு முட்டினாள்.

“ம்ப்ச்… உடனே கோபம் வந்துடுச்சா! இது மூணு வருசத்துக்கு முன்னாடி, நகைசீட்டு போட்டு வாங்கினேன். அப்பவே குடுக்க நினைச்சாலும் நீ பாராமுகமா இருந்ததால அப்படியே வைச்சிருந்தேன்.

ஆனாலும், அஞ்சனா விசேஷத்துக்கு வந்தப்பவே எடுத்துட்டு வந்துட்டேன். அப்பவும் நான் வாங்கிக் கொடுத்த பட்டுபுடவைய கூட நீ கட்டிக்கமாட்டேன்னு முறுக்கிட்டு நின்னதுல, அக்காகிட்ட குடுத்து வைச்சிருந்தேன்.

உன்னோட தேவைக்கு, என்னை எதிர்பார்க்காம இருந்ததுல, இந்த செயினை நீ வாங்கிப்பியா மாட்டியான்னு எனக்குள்ள எப்பவும் ஒரு தயக்கம், சந்தேகம் தங்கிப்போச்சு! இப்பவும் அக்காதான் அதட்டல் போட்டு, நீ குடுக்கிறியா இல்ல நா குடுக்கவான்னு கேட்ட பிறகுதான், உன்கிட்ட கொண்டுவந்து கொடுக்குறேன்.

இதை மறுக்க மட்டும் செய்யாதே சிந்தா! உனக்காக நான் முதல்முதலா ரொம்ப ஆசையா வாங்கினது” கண்களை சுருக்கி கணவன் கெஞ்சவும், இவளும் அச்சோ பாவமே என உருகிப்போனாள்.

“பொண்டாட்டிக்கு இவ்வளவு தூரம் பயபடுறவரா நீங்க?” விழிவிரித்து கேட்டவளின் பாவனையில் சொக்கியவன்,

“அதெல்லாம் இன்னும் க்ளோசா பழகிப் பார்த்தா தான் தெரியும் மேடம்!” உல்லாசப்பேச்சுடன், தன்நெஞ்சில் மனையாளை சாய்த்துக் கொண்டதும், அவளும் சலுகையாய் ஒட்டிக்கொண்டாள்.

“ம்ம்… பாக்குறேனே! இருக்குற கோபத்தை எல்லாம் ஃபில்டர் பண்ணாமலேயே என்மேல இறக்கி வைக்கிறீங்க!” சிறுபிள்ளையாய் சிணுங்கிக் கொள்ளவும்,

“அடேயப்பா! நான் பேசாம இருக்கிறது, உன்னால தாங்கிக்க முடியலையா? இத்தன வருஷம் எப்படி இருந்த?”

“அதான் தெரியல… ஆனா இப்போ எல்லாம் சுத்தமா முடியல மாமா!” ஆற்றமையாக சொல்லவும், ஒற்றைக்கையால் மனைவியை வளைத்துக் கொண்டான் பாஸ்கர்.

“அப்ப… நீ, நல்லபொண்ணா மாறிட்டே வர்றேன்னு சொல்லு…” கிண்டலடித்தவன், மனைவியின் முகவடிவை அளந்தபடி, 

“இப்படிதான் மனசுல எது இருந்தாலும் வெளியே கொட்ட பழகிக்கணும் சினிகுட்டி! அதுதான் உன்னோட மாமாக்கும் நல்லது”

“இப்பவும் உங்களுக்கு கோபம் போயிடுச்சா இல்லையான்னு தெரியல… ஆனாலும் இதுக்கு தேங்க்ஸ் மாமா!” தாலிக்கொடியை காண்பித்து சிலிர்த்துக்கொண்ட, மனைவியை பார்வையால் துளைத்தான் பாஸ்கர்.

வெகுவருடங்களுக்குப் பிறகான தன்னவளின் உருகல், மருகலில் பித்தனாகிக் கொண்டிருந்தான் கணவன். நீண்டகால விலகலுக்கு, இனிமேலாவது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என ஏங்கியே மீண்டும் அவளை ஊடுருவிப் பார்க்க,

“இப்படியெல்லாம் பார்க்காதீங்க மாமா!” வெட்கத்துடன் தலைதாழ்த்தி சொல்ல,

“என் பொண்டாட்டிய ஆசையா, அன்பா பாக்கறேன். பார்க்கற எனக்கே தோணாத நினைப்பெல்லாம் உனக்கெதுக்கு வருது?” தாடையை உயர்த்தி, புருவத்தை ஏற்றி இறக்கி ஜாடைபேசினான்.

“ஆமாமா… பாக்குற தோரணையே சொல்லுதே… ஆளை விடுங்க!” முனுமுனுத்து அவனிடம் இருந்து விடுபட்டு செல்ல முயல,

“ஃபர்ஸ்ட் டைம் கிஃப்ட் குடுத்திருக்கேன். அதுக்கு காம்ப்ளிமெண்ட் இல்லையா சிந்தாசினி?” விலகியவளை தடுத்து அணைத்துக்கொள்ள, எப்போதும்போல் சிந்தாசினியின் உள்ளும் புறமும் மத்தாப்பு சிதறல்களில் சிவந்தது.

“விடுங்க மாமா!” என்றவளின் குரல், அவளுக்கே கேட்காமல் போய்விட,

“என்னை ரொம்ப சோதிக்காத சிந்தா! விரதம் கலைக்க எனக்கும் ஆசை இருக்காதா?” ஆசையுடன் கண்களால் மனைவியை களவாடத் தொடங்கினான்.

“போதும்… போதும்… உங்க ஆசைக்கெல்லாம் பதில் சொல்லனும்னா முடிவே இருக்காது!” க்ளுக்கென்று சிரித்தவள்,

“இப்போதைக்கு இந்த காம்ளிமெண்ட் போதும்” அணைத்தவன் கைகளை முன்னே கொண்டு வந்து தானாகவே முத்தம் பதிக்க, கணவனின் ஆசை தீவிரமானது.

“ம்ப்ச்… பொழுதுக்கும் லேப்டாப்பை தட்டுற கைக்கு வேணாம்… எனக்கு குடு!” காதலனாக வம்பை வளர்க்க, புரியாமல் விழித்தாள் சிந்தாசினி. 

“நான்… எனக்கு முத்தம் குடுக்க சொன்னேன்…” ‘எனக்கு’ என்ற வார்த்தைக்கு கணவன் அழுத்தம் கொடுக்க,

“இது உங்க கைதானே? மாமா!”

“பார்க்கிறவனுக்கு எல்லாம் கைகுடுப்பேன், எப்பவும் டைப் பண்றேன்… எனக்கே என் கைய பார்க்க பிடிக்காது! நீ, என் இடத்துக்கு வா!”

“எங்கே?” அப்பாவியாக அவனிடமே கேட்க

“நான் சொல்லமாட்டேன்! ஆனா எனக்கு கிடைச்சே ஆகணும்!” பகிரங்கமாய் காதல் வீம்பு செய்ய,  

‘தெரியாத்தனமா வாயக்குடுத்து மாட்டிக்கிறதுன்னு சொல்றது இதைத்தானா? அநியாயத்துக்கு இம்சை பண்றாரே!’ தயக்கங்கள் கொண்ட மனது, கணவனை செல்லமாய் கடிந்து கொண்டது.

காதல்பாடத்தில், கணவன் சொல்வதைச் செய்யும் கிளிப்பிள்ளைக்கு, அவனது கள்ளமொழியின் அர்த்தம் புரிந்தாலும், அமைதியாக இருந்தாள்.  

“உன் ஆக்சன் எல்லாம் அவ்வளவுதானா? உன்னோட பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கும்னு சொல்லவா?” கிசுகிசுத்தவனின் உதடுகள் ரகசியங்களை பேச ஆரம்பிக்க, வேகமாக அடுத்த கட்டத்துக்கு முன்னேறியவனை தடுப்பது பெரும்பாடாய் இருந்தது.

“வேண்டாம், வேண்டாம் நானே… ஒன்னே ஒண்ணுதான்!” கிசுகிசுத்தவளின் கை, கணவனின் கழுத்தில் மாலையாகிப் போக, இடைவெளியில்லாமல் இறுக்கிக் கொண்டான்.

“இப்படி பனை மரமா வளர்ந்து நின்னா எப்படி?”

“இப்படி என் அளவுக்கு, நீயும் வந்து குடுக்கணுமாம்” அணைத்தவாறே தன் உயரத்திற்கும் தூக்கியிருந்தான் பாஸ்கர்.

விட்டுப்போன பழக்கத்தை, தொடரும் ஆசையில், நெற்றியில் இதழை ஒற்றிவிட்டு, “இறக்கி விடுங்க மாமா!” மென்குரலில் பேசிட

“எனக்கு… முத்தம் குடுத்தா இறக்கி விடறேன்”

“இதென்ன பிடிவாதம் மாமா? உங்க தலைய யாருக்கும் அடமானம் வச்சுருக்கீங்களா?” வெளிவராத சிரிப்பில் சிந்தாசினி கேட்க,

“அது என் பொண்டாட்டி ஏரியா…”

“ம்ப்ச்… புதுசு புதுசா சொல்லிட்டு இருக்கீங்க” என்றவள், மென்மையான இதழை இரு கன்னங்களிலும் ஒற்றியெடுத்து விட்டு,

“சந்தோஷமா?” கேட்டவளின் குரலும் நாணத்தால் குழறத் தொடங்கியது. 

“நீ உன்னோட இடத்துலயே இருக்க… நான் இருக்குற இடத்துக்கு வா சினிகுட்டி!” மனைவியை இறக்கிவிட,

“முடியல மாமா! உங்க இடம் எது?” அறியாபிள்ளையாக தடுமாறி, கணவனின் இடப்பக்க இதயத்தில் முத்திரை பதிக்க,

“அது என் பையன் இருக்குற இடம்டி!” பாஸ்கர் சொன்னதும், வலது மார்பில் இதழைப் பதிக்க

“இது என் அக்கா, மாமாக்கு சொந்தமான இடம்” சீண்டலுடன் கண்ணடிக்க,

“ஆசைக்கும் ஒரு அளவிருக்குடா பாச்சு! இப்படியெல்லாம் மோசமா கேட்டு வாங்கக்கூடாது” பொய்கோபத்தில் சொன்னவளுக்கு, கணவனின் ஆசையும் தெளிவாக விளங்கத்தான் செய்தது.

“எங்கே குடுக்கனும்னு ரெண்டு தடவை அழுத்திக் கேட்டிருந்தா சொல்லியிருப்பேன். அத விட்டுட்டு நீயா ஊர்வலம் வந்தா நானா பொறுப்பு?” நமுட்டுச் சிரிப்பில் சீண்ட, மனைவிக்கு கோபம் வந்து விட்டது.

“ஆமா… எனக்குதான் மனசு நிறைய ஆசையிருக்கு! அதான் ஊர்வலம் வந்திட்டு இருக்கேன். தெரிஞ்சு போச்சுதானே? விடுங்க என்னை…” முறுக்கிக்கொள்ள,

“நான் கேட்டது கிடைக்காம, உன்னை விடமாட்டேன்” என்றவனை மீண்டும் முறைக்க ஆரம்பித்தாள் மனைவி.

“உன் முட்டைகண்ணால, சூனியம் வைக்காதடி! இன்னும் பாக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு! என் பங்கை நானே எடுத்துக்கறேன்…” என்றவனின் உதடு, மனைவியின் இதழில் பதிந்தது. அவளில் மூழ்கி தன்னைத் தொலைத்து, முழுதாய் அவளின்மேல் சாய்ந்து கொண்டான்.

கணவனின் பாரத்தில் தடுமாறியவள், திடமாய் நிற்பதற்காக அவனையே பிடித்துக்கொள்ள, அதுவே கணவனின் ஆசைக்கும் வேகம் தந்து, இன்னும் அதிகமாய் புதைந்துபோக உசுப்பேற்றியது.    

மயங்கியவனை தாங்கிக் கொண்டவளுக்கு தடுக்கும் வழிதான் தெரியவில்லை.

“என் மஞ்சளழகிடி நீ!” மோகத்தில் பிதற்றியவன், அவளது மல்லிகைசரத்தில் வாசம் பிடித்து, முன்னேறியவாறே,

“எனக்கு எங்கே முத்தம் குடுக்கனும்னு புரிஞ்சுதா சினிகுட்டி?” கேட்டவனின் இதழ்கள் தடையில்லாத பயணத்தை தொடங்கிவிட, பேச்சும் வரவில்லை அவளுக்கு.

கணவனின் நெருக்கம், அவனது அருகாமை கொடுத்த தடுமாற்றத்தில், வெட்கத்தில் சிவந்த உடலும் நடுங்கத் தொடங்கியது.  

“இப்படி முத்தம் குடுக்க உன்னை தவிர வேற யாருக்கும் உரிமையில்ல… யாரும் குடுக்கவும் முடியாது. உனக்கும் எனக்கும் மட்டுமேயான இடம் இது. இப்போ புரியுதா?” தாபத்தோடு உளறியவனின் பயணம், மனைவியின் கழுத்தில் தஞ்சமடைந்தது.

கணவனின் மீசைக் குறுகுறுப்பும், இயல்பான கூச்சமும் சிந்தாசினியை நெளிய வைத்தாலும், விலகிச் செல்ல நினைக்கவில்லை.

“என் கண்ணுக்குள்ளயும் நீ இருக்க… அதுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை பண்ற?” விடாமல் கேட்டு, தன் கண்களுக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொண்டதில், மனைவி என்றும் தன் கைப்பாவைதான் என்பதை மீண்டும் அவளுக்கே நிரூபித்திருந்தான் பாஸ்கர்.

அன்றைய வேலைகள் அனைத்தும் தேங்கி நிற்க, இவர்களை கட்டிப்போட்ட காதல்வலையை உதறித்தள்ள இருவருக்குமே மனம் வரவில்லை.

ஆனால், சூழ்நிலைகளும் காலநேரங்களும் அதனை அனுமதிப்பதில்லையே? பாஸ்கரின் செல்பேசிக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்புவர, அன்றைய ஓட்டம் மீண்டும் ஆரம்பித்தது.

 

உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை!

உனக்காகவே மலர்ந்தது மலைக்கோவில் மல்லிகை!

இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது…

அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது…

தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்..!

 

Leave a Reply

error: Content is protected !!