Thanimai – 13

Thanimai – 13
அரவிந்தன் – இதழினி
தன்னுடைய வாழ்க்கையில் பொற்காலம் என்று அவன் நினைப்பது தாய் – தந்தையோடு கழித்த அந்த நாட்களை மட்டும்தான். விளையாட்டு போக்கில் படிப்பை முடித்த அரவிந்தனுக்கு சென்னையில் வேலை கிடைத்தது.
அந்த விஷயம் அறிந்த நாளில் இருந்தே பெற்றவர்களின் முகத்தில் வந்துபோகும் கவலையைக் காண நேர்ந்தது. தங்களின் பூர்வீகமான அன்னூரைவிட்டு செல்ல மனமில்லை என்பது ஒருபக்கம் இருக்க, ஒரே மகனை தனியாக அனுப்பவும் விருப்பமின்றி நாட்களை கடத்த தொடங்கினர்.
அரவிந்தன் தன் முடிவில் வெகுதெளிவாக இருந்தான். படிப்பு முடிந்ததும் இரண்டு வருடம் வேலை. பிறகு பெற்றோரின் விருப்பபடி பெண்ணை பார்த்து திருமணம் செய்ய வேண்டுமென்று வாழ்க்கை பற்றி திட்டமிட்டான். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் கடவுளை பற்றி மறந்துவிடுவோம் என்பதாலோ என்னவோ அடிக்கடி நான் இருக்கிறேன் என்று ஏதோவொரு வழியில் உணர்த்துகிறார்.
அவன் சென்னை செல்வதற்கு தேவையானவற்றை எடுத்து வைக்க அவனை போக வேண்டாமென்று சொல்லி தடுத்தார் வைதேகி.
அவர் சொன்னதை அவன் காதில் வாங்காத காரணத்தினால், “அப்போ நாங்களும் சென்னை வருவோம். நீயில்லாமல் என்னால் இங்கிருக்க முடியாதுடா. நீ என்ன செய்வீயோ எனக்கு தெரியாது. எங்களையும் உன்னோடு சென்னை கூட்டிட்டு போ” என்றார் பிடிவாதமாக.
“அம்மா இங்கே இருக்கிற சென்னைக்கு போறதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் பண்றீங்க.. இதெல்லாம் ரொம்ப டூ மச் அம்மா.. நைட் டிரெயின் ஏறினால் காலையில் இங்கே வந்துவிடுவேன். அதெல்லாம் தெரிஞ்சும் சென்னை வரேன்னு நிற்கிறீங்க” என்று தாயை வாரினான் மகன்.
அதுவரை தாய் – மகனின் வாக்குவாதத்தில் தலையிடாமல் அமர்ந்திருந்த சந்திரசேகர் மகனின் காதைப்பிடித்து திருகி,“ஏன் ஸார் எங்களை இங்கே விட்டுட்டு போய் அங்கே நல்ல சைட் அடிச்சிட்டு ஊரை சுற்றலாம் என்ற எண்ணமோ” என்று கிண்டலாக கேட்டார்.
அவனுக்கு அப்படியொரு எண்ணம் இல்லையென்றால் வாலிப வயதில் பெண்களை ரசிக்காத ஆண்களும் இங்கில்லை. அவன் மட்டும் அதற்கென்ன விதிவிலக்கா?
தந்தையின் கேள்விக்கு சிரித்து மழுப்பாமல், “இதெல்லாம் இந்த வயசில் சகஜம் அப்பா. பொண்ணுங்களை சைட் அடிக்காதேன்னு அட்வைஸ் மட்டும் பண்ணாதீங்க. அதை நானெல்லாம் கேட்க மாட்டேன்” நாசுக்காக உண்மையை ஒப்புக்கொண்டு தான் ஊருக்கு செல்வதற்கான உடைகளை எடுத்து வைக்க தொடங்கினான்.
“டேய் என்னடா அப்பாவிடமே இப்படி சொல்ற?” வைதேகி அதிர்ச்சியோடு கணவனையும், மகனையும் மாறி மாறி பார்த்தார்.
“இதுக்கெல்லாம் அதிர்ச்சியாகாமல் நமக்கு தேவையானவற்றை எடுத்து வை வைதேகி. இவனோடு நம்மளும் சென்னை போறோம்” தன் முடிவைக் கூறிவிட்டு போனை கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றார்.
அரவிந்தன் ஒரே பையன் என்பதால் வீட்டில் அவன் வைத்தது மட்டும்தான் சட்டம். அவனுக்கு பிடித்த விஷயங்களை செய்ய பெற்றோர்கள் என்றும் தடைவிதித்ததில்லை. அவனின் செயல்களுக்கு பின்னோடு சில காரணமிருக்கும் என்று புரிந்து வைத்திருந்ததால் இன்றுவரை அவனை கண்டித்தது கிடையாது.
அவன் எங்கே சென்றாலும் கடைசியில் வீட்டிற்கு வந்ததும் சந்தித்த நபர்களை பற்றி சொல்லிவிடுவான். இதுவரை தாய் தந்தையிடம் அவன் ஒரு விஷயத்தையும் மறைத்ததில்லை. அதுவே அவனின் பிளஸ் பாயின்ட் என்று சுற்றி இருப்பவர்கள் சொல்வதுண்டு. அதேபோல காதல் பற்றிய வீண் கற்பனைகளை மனதில் அவன் வளர்த்து கொள்ளவில்லை.
ஆனால் தனக்கு வரபோகும் மனைவி எப்படி இருக்க வேண்டுமென்று சில கற்பனைகள் வைத்திருந்தான். அதை அறிந்திருந்த சந்திரசேகரும், வைதேகியும் தன் மகனின் ரசனைக்கு ஏற்ற பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று நினைத்தனர்.
இதோ அவன் படிப்பு முடிந்து சென்னையில் வேலை கிடைத்துவிட அவனோடு புறப்பட்டு செல்லும் முடிவில் உறுதியாக நின்றனர். அவனும் அதற்குமேல் வாக்குவாதம் செய்யாமல் தாய், தந்தையோடு சென்னை நோக்கி பயணித்தவன், அங்கே தான் வேலைக்கு செல்ல வசதியான ஏரியாவில் வீட்டைப் பார்த்து குடியேறினர்.
“அம்மா உங்களுக்கு வீடு பிடிச்சிருக்கா?” என்று அக்கறையுடன் விசாரித்த மகனுக்கு புன்னகையைப் பதிலாக கொடுத்தார். சந்திரசேகரின் நீண்டநாள் கனவான புத்தகக்கடையை அங்கே சென்று தொடங்கினார். ஆரம்பத்தில் அவரின் கடைக்கு வரும் நபர்கள் குறைவாக இருந்தபோதும் நாளுக்கு நாள் அவரின் வருமானம் அதிகரித்தது. இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு பிடித்த நூல்களை வாசிப்பார்.
வைதேகி கிராமத்தில் வளர்ந்த பெண் என்பதால் கணவன், மகன், வீடு, கோவில் இது தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. தன் குடும்பத்தை கவனித்து கொள்ளும் பாசமிகுந்த பெண்மணி. அவருக்கென்று இருக்கும் ஒரே ஆசை தன் மகனின் திருமணம் மட்டுமே!
ஆரம்பத்தில் வேலையில் சில தடுமாற்றம் வந்தாலும் அந்த வேலையை விருப்பத்துடன் செய்ததால் அதில் இருக்கும் நெகடிவ் அவனின் கண்ணிற்கு பெரிதாக தெரியவில்லை. வழக்கம்போல வேகமான நடையுடன் நிறுவனத்திற்குள் நுழைந்த அரவிந்தனை கண்ட மகேஷ் அவனின் பளிச்சென்ற முகத்தை கண்டான்.
“ஏன்டா எந்தநேரமும் சிரித்த முகமாகவே இருக்கிறாயே.. உனக்கு பிரச்சனையே வராதா?” என்று ஆதங்கத்துடன் கேட்டான் மகேஷ்.
அவனின் கண்ணில் தெரிந்த பொறாமையை கவனித்தவன், “என் வாழ்க்கையில் பிரச்சனையா? அதெல்லாம் வராதுடா. தேவையில்லாத பிரச்சனையில் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே இங்கே முக்கால்வாசி பேருக்கு நிம்மதி கிடைக்கும். அவனவன் வாழ்க்கையை விட்டுட்டு அடுத்தவன் வாழ்க்கையில் என்ன நடக்குதுன்னு தீவிரமாக யோசித்தால் தலைவலி மட்டுமில்ல ஹார்ட் அட்டாக் கூட வருதாம்” என்று சிரிக்காமல் சொல்லிவிட்டு அவனின் கேபினுக்கு சென்றுவிட்டான்.
இருவரின் உரையாடலையும் கவனித்த ரோஸ்மி சத்தமில்லாமல் சிரிக்க அதன்பிறகே அவன் தன்னை கலாய்த்துவிட்டு சென்றதை உணர்ந்து, “காலையில் வந்து இவனிடம் வாயைக் கொடுத்தேனே என்னையெல்லாம்..” தன்னை தானே அர்ச்சித்தபடி அவனின் வேலையில் கவனத்தை திருப்பினான் மகேஷ்.
எந்த நேரமும் சிரித்த முகமாக இருக்கும் அவனை கண்டு நிறையபேர் பொறாமைப்படுவார்கள். அவனைப்போல யாராலும் உண்மையாக சிரிக்க முடியவில்லை என்று! அது என்னவோ உண்மைதான்!
நூற்றில் பத்து சதவீதம் நபர்கள் மட்டுமே சந்தோசமாக இருக்கின்றனர். மீதம் இருக்கும் தொண்ணூறு சதவீத நபர்கள் போலியான முகமூடியை அணிந்துகொண்டு வலம் வருகிறார்கள். இப்படியே அவன் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடம் சென்றது. இந்நிலையில் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.
சந்திரசேகரும் – வைதேகியும் சேர்ந்து சில பெண்ணை தேர்ந்தெடுத்து மகனிடம் காட்டினர். அன்று விடுமுறை நாள் என்பதால் மாலை நேரம் அரட்டையடித்தபடி தோட்டத்தில் அமர்ந்தனர்.
அப்போது கையில் புகைப்படத்துடன் வந்த வைதேகி, “இந்தா தரகர் கொடுத்துட்டு போன பொண்ணுங்க போட்டோ. உனக்கு இதில் யாரை பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்றார்.
தன் கையிலிருந்த போட்டோவை பார்த்தவன் முதலில் இருந்த பெண்ணின் புகைப்படத்தை காட்டி, “இந்த பொண்ணு ஓகே அம்மா” சற்றும் யோசிக்காமல் பதில் கொடுத்தான் மகன்.
“ஏன்டா இவ்வளவு சீக்கிரம் முடிவெடுத்துட்ட” என்று ஆச்சர்யபட்ட தாயின் கன்னத்தை கிள்ளியவன்,
“அம்மா என்னதான் பார்த்து விசாரித்து முறைப்படி கல்யாணம் பண்ணினாலும் அவளிடம் சில குணங்கள் இயல்பாகவே பிடிக்காமல் போயிடும். இவ்வளவு செய்தபிறகு டைவர்ஸ் என்று போய் கோர்ட் வாசலில் நிற்பாங்க.. நமக்கு இது தேவையா?” என்ற கேள்விக்கு அவனின் தாயாரோ மறுப்பாக தலையசைத்தார்.
தன் மனையாளை மகுடிக்கு மயங்கிய பாம்பு போல ஆட்டி வைக்கும் மகனை நினைத்து மனதிற்குள் சிரித்து கொண்டவர், “இப்போ நீ என்ன சொல்ல வரன்னு நேராக சொல்லுடா” என்று அதட்டல் போட்டார்.
“சிம்பிள் அப்பா. பொண்ணு பற்றி தரகர் சொன்னது ஜாதகம் இதெல்லாம் ஒருப்பக்கமிருக்கட்டும். இந்த பெண்ணோட வீட்டுக்கு போய் பார்ப்போம். கொஞ்சநேரம் பேசினால் எல்லாமே தன்னால் புரிந்துவிடும். அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம்” என்று அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டான்.
தரகரிடம் பெண்பார்க்க வரும் தேதியை சொல்லியனுப்பினர். அவர்களுக்கும் அரவிந்தனை மிகவும் பிடித்ததால் சரியென்று சம்மதித்தனர். குறிப்பிட்ட தேதியில் மூவரும் பெண்ணின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கே வந்தவர்களை வரவேற்று அமர வைத்து சோமநாதன், “இதழினி என் தங்கச்சி பொண்ணு. சின்ன வயதிலேயே குடும்பத்தை இழந்த பெண்ணை நாங்கதான் எடுத்து வளர்த்திட்டு இருக்கோம்” என்று வெளிப்படையாக உண்மையை உடைத்து பேசினார்.
“ம்ஹும் தரகர் சொன்னாருங்க. இந்த காலத்தில் தங்களோட பிள்ளைகளை வளர்க்கவே திண்டாடுறாங்க. ஆனால் நீங்க உங்க தங்கச்சி மகளை படிக்க வைத்து முறைப்படி எல்லாம் செய்ய நினைக்கிறது மனசுக்கு நிறைவாக இருக்கு” என்று முகம் மலர கூறினார் வைதேகி.
சிறிதுநேரம் பேச்சில் கழிய ராஜேஸ்வரி இதழினியை அலங்காரம் செய்து அழைத்து வந்தார். அவளோடு ஐந்து பத்து வயதுடைய சிறுவன் நின்றிருப்பதை கண்டு சந்திரசேகர் விசாரிக்க, “லேட் மேரேஜ் என்பதால் குழந்தை பிறக்க லேட் ஆகிடுச்சுங்க” என்றார் புன்னகையோடு.
அத்தை சொல்படி அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்றாள். கண்ணில் படபடப்பு மின்னிட துடிக்கும் இதயத்தை அடக்கும் வழி தெரியாமல் விரல் நகங்களை கடித்தபடி நின்ற இதழினியை பார்வையால் அளந்தான் அரவிந்தன்.
அவளை முதலில் பார்ப்பவர்கள் ஸ்கூல் படிக்கும் பெண்ணாக இருப்பாளோ என்று யோசிக்கும்படி அவளின் தோற்றம். நெடுநெடுவென்று உயரமாக வளர்ந்திருந்தவள் ஒல்லியாக இருந்தாள். ஆரஞ்சு வண்ண பட்டுப்புடவையில் அளவான ஒப்பனையோடு நின்றிருந்தவளைப் பார்த்தவுடன் அரவிந்தனுக்கு பிடித்து போனது.
“நாங்க கொஞ்சநேரம் தனியாக பேசலாமா?”அனைவரிடமும் பொதுவாகக் கேட்டான். அவர்கள் சம்மதிக்கவே அருகில் இருந்த அறைக்குள் சென்றவனின் பின்னோடு பயத்துடன் சென்றாள் இதழினி.
அவளை நேருக்கு நேர் பார்த்தவன், “நீ பதட்டப்படும் அளவிற்கு இங்கே ஒண்ணுமே நடக்கல. இது உன் வீடு. நான்தான் உன்னைப் பெண்பார்க்க வந்திருக்கேன். ஒரு உண்மைச் சொல்லட்டுமா?” குறுஞ்சிரிப்புடன் அவன் கேட்க அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.
“நான்தான் தனியா வந்து உன்னிடம் வசமாக மாட்டிகிட்ட மாதிரி ஒரு ஃபில் வருது. என்னவோ இன்னைக்கே ஓகே சொல்லி நாளைக்கே திருமணம் என்ற லெவலில் பேசிட்டு இருப்பதை பார்க்கும்போது இப்படியே ஓடி போயிறலாம் போல இருக்கு” என்றவன் சொன்னது தான் தாமதம் தன்னை மறந்து பக்கென்று சிரித்துவிட்டாள்.
அவளின் மலர்ந்த முகத்தை ரசனையோடு ஏறிட்டு, “ம்ஹும் இந்த சிரிப்பைதான் உன்னிடம் நான் எதிர்பார்த்தேன். வாழ்க்கை ரொம்ப கஷ்டமான சுமை ஒண்ணுமே இல்ல. ஜஸ்ட் லைக் தட் என்று சாதாரணமாக எடுத்துக்கோ. நீ எப்போதும் ஹாப்பியா இருந்தா உன்னை சுற்றி இருப்பவங்களும் ஹாப்பியா இருப்பாங்க. எனக்கும் அதுதான் பிடிக்கும்” என்றபோது மனம் லேசானது போல உணர்ந்தாள் இதழினி.
அதற்குள் அவனின் தாயார் குரல்கேட்டு அறையைவிட்டு வெளியேற, ‘காலம் காலமாக பொண்ணு பார்க்க வரவங்க தனியாக போய் இதைத்தான் பேசறாங்களோ?’தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டு அவன் சொன்னதை யோசிக்க தொடங்கினாள்.
திருமணம் என்ற ஒன்றை நினைத்து கனவு காணாமல் வேலை என்று சுற்றி திரிந்தவள். திடீரென்று பெண் பார்க்க வருகிறார்கள் என்றவுடன் பதட்டம் அதிகரித்தது. சிலநொடி பேச்சில் தன் மனதின் படபடப்பை மறக்கடித்துவிட்ட அரவிந்தனை அவளுக்கு பிடித்து போனது.
அங்கிருந்தவர்கள் அவனின் சம்மதத்தை கேட்க, “எனக்கு ஓகே. உங்க பொண்ணுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நல்லா கேட்டுகோங்க” என்று சிறு புன்னகையோடு கூறியவனின் பார்வை நிலக்கதவின் அருகே நின்றவளின் மீதே நிலைத்தது.
“என்னம்மா உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?” என்ற கேள்விக்கு ஒரு தலையாட்டல் மட்டுமே பதிலாக கிடைத்தது.
அடுத்தது தாம்பூலம் மாற்றி நிச்சயதார்த்தம், ஜவுளி எடுப்பது என்று நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. ஒவ்வொரு நாளும் அவனோடு பேசும்போதும் ஏதோவொரு உணர்வை தனக்குள் விதைத்தவனின் மீது அவளின் நேசம் படர தொடங்கியது.
இதோ விடிந்தால் திருமணம் என்ற நிலையில் கூட அவனின் நினைவுகள்தான் அவளின் மனதில் படமாக ஓடியது.
மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.
காலை நேரத்தில் கார்கால மேகங்கள் காற்றில் ஒன்றோடு ஒன்று உரசி ஒட்டி உறவாடியதால் மழை பொழிய துவங்கியது. ஆனால் மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் எந்தவிதமான தங்குதடையுமின்றி நடந்தது.
அங்கிருந்த ஒரு மண்டபத்தின் முன்னே, “அரவிந்தன் வெட்ஸ் இதழினி” என்ற பெயர்கள் பூக்களால் அலங்கரிப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு வந்தவர்களை பன்னீர் தெளித்து வரவேற்று அமர வைத்தனர்.
ஐயரின் பக்கத்தில் நின்று அவர் கேட்ட அனைத்தையும் எடுத்து கொடுத்தார் வைதேகி. அதே நேரத்தில் பெண்ணின் அறையில் சிரிப்புடன் தயாரான இதழினியின் முகத்தில் நிறைவான சந்தோஷம்.
“ஏய் என்னடி இப்போவே மாப்பிள்ளையோடு டூயட் பாட போயிட்டியா?” கிண்டலடித்து சிரித்த தோழிகளை அவள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் கிண்டலில் அவளின் முகம் செந்தாமரை மலரைப் போல மலர தொடங்கியது.
அதே நேரத்தில் பட்டுவேட்டி சட்டையுடன் மணமேடையில் அமர்ந்தவனின் மனம் அவளின் வரவை எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கினான். ஐயர் சொல்லும் மந்திரங்களை அப்படியே ஒப்பித்தபோதும் ஆவலோடு அவள் வரும் திசையை நோக்கியது விழிகள்.
பெண்ணவள் நாணத்துடன் தரையை நோக்கியபடி நடந்து வந்து அருகே அமர அவளை விழிகளால் பருகியவன், “ம்ஹும் சும்மா சொல்லக்கூடாது சுமாரா மேக்கப் போட்டு இருக்காங்க” என்றதும் அவள் திரும்பி அவனை முறைத்தவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டினான்.
அவன் தன்னை வேண்டுமென்றே கேலி செய்வதை உணர்ந்து சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டாள். ஐயர் கொடுத்த தாலியை அவளின் கழுத்தில் அணிவித்து தன்னவளாக ஏற்றுக் கொண்டான். அதன்பிறகு மற்ற சடங்குகள் முறைப்படி நடந்தது. பகல் பொழுது இனிமையாக கனிந்திட இரவு நேரமும் வந்தது.
பால் சொம்பை கையில் ஏந்தி அறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு பார்வையால் அரவிந்தனை தேடினாள். மெல்ல அவளின் பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
அவனின் கரங்கள் இடையோடு விளையாட மங்கையவளின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவளின் காதோரம் ஊர்ந்த அவனின் உதடுகளோ, “இதழினி.. இந்த இதழ்கள் இனி என்றும் என் சொந்தமடி”அவளின் பெயரை பிரித்து வாக்கியமாக கூறினான்.
சட்டென்று அவளை தன் பக்கம் திருப்பி விழிகளை ஊடுருவிய அரவிந்தனின் பார்வை அவளின் இதய நரம்புகளை மீட்டி சென்றது. வாழ்க்கை என்ற பாடலுக்கு பல்லவியை அவளின் இதழ்களில் அவன் எழுத தொடங்க, அவனே சகலமும் என்றெண்ணி சரணமடைந்தாள் பெண்ணவள்.
இருமனங்களும் இணைந்து திருமணம் என்ற பந்தத்தின் உள்ளே அடியெடுத்து வைத்தனர். அடுத்த கட்டமாக ஈருடலாய் இருத்தவர்கள் ஓருடலாக மாறி போயினர்.