உன் காதல் என் தேடல்

உன் காதல் என் தேடல்

தேடல் – 12

 

அந்த அழகிய கிராமத்தில், எங்கு பார்த்தாலும் திருமணம் முடிந்த புதுப் பெண்ணின் முகம் நாணத்தில் தலைகுனிந்து பூமி பார்ப்பது போல் செழித்து விளைந்திருந்த நெல்லின் எடை தாங்காமல் கதிர்கள் தலைகுனிந்து பூமித்தாயை பார்த்திருந்தன.

 

அந்த ஊரில் உள்ள விளை நிலமாகட்டும், அரிசி மில், சர்க்கரை ஆலை, இல்லை வேறு எந்தத் தொழிலாக இருந்தாலும் அது சொந்தமாக இருப்பது ஒரே ஒருவருக்குத் தான்… அது முத்துவேல்.

 

முத்துவேலிடம் பணத்தோடு சேர்ந்து, அது கொடுத்த ஆணவம், அகங்காரமும் நிறைத்திருந்தது. தன்னிடம் வேலை செய்பவர்கள் தனக்கு அடிமை என்ற எண்ணம் கொண்ட முரட்டு ஃபீஸ். அவர் மனைவி காமாட்சி, கணவன் எது செய்தாலும் பொறுத்துப் போகும் அக்மார்க் கிராமத்து மணம் மாறாத குடும்பத் தலைவி. இந்தத் தம்பதிகளின் மகன்கள் அபிநந்தன், அடுத்து ரகுநந்தன், மகள்கள் அகல்யா, ராகவி. என்ன தான் முத்துவேலின் பிள்ளைகளாக இருந்தாலும் இளையவர்கள் நால்வரும் குணத்தில் அப்பாவைப் போல் இல்லாமல் அனைவரையும் மதித்து நடக்கும் நல்லபிள்ளைகள்.

 

ஐந்து வருஷம் கழித்துத் தன் பாட்டி வீட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அபிநந்தனுக்கு வயது பதினெட்டு. அரும்பு மீசை, உடற்பயிற்சியின் உதவியால் நல்ல ஆரோக்கியமான உடல்வாகு, வயதிற்கே உரிய குறும்பு என்று துள்ளித் திரிந்த அபிநந்தன் வாழ்க்கையை இந்தப் பயணம் அடியோடு புரட்டிப் போடப் போகிறது என்று தெரியாமல் இரண்டு பக்கமும் பச்சைநிறக் கடல் அலை போல் வளைந்து நெளிந்து ஆடிய வயல்வெளியை பார்த்தபடி தன் ஃபைக்கில வந்து கொண்டிருந்த நந்தன் வரும் வழியில் தன் மாந்தோப்பை பார்த்தவன் மனதில் சிறுவயதில் அங்கு ஓடி விளையாடிய ஞாபகங்கள் வர அங்கு செல்ல ஆசைப்பட்டு ஃபைக்கை தோப்புக்குள் திருப்பினான்.

 

அபிநந்தனை அங்குப் பார்த்த தோப்பு காவல்காரன், எங்கிருந்தோ ஓடி வந்து தன் சின்ன முதலாளிக்கு குனிந்து வணக்கம் வைக்க,

 

“என்ன முருகா இது! உனக்கு எத்தன முறை சொல்லி இருக்கேன். நா உன்ன விட வயசுல சின்னவன். இந்த மாதிரி கும்புடு போடாதன்னு” என்று செல்லமாக முறைக்க.

 

“நா என்ன தம்பி பண்றது? அது அப்படியே பழகிப்போச்சு. நீங்க மட்டும் இல்ல, உங்க தம்பி, தங்கச்சிங்க கூட பல முறை இந்த மாதிரி பண்ணாதீங்கன்னு சொல்லிட்டாங்க. என்னால தா பழக்கதை மாத்த முடியல. அத விடுங்க தம்பி நீங்க எப்டி இருக்கீங்க? படிப்பெல்லாம் எப்டி போகுது தம்பி. சிங்கப்பூர் போனாவரு அப்படியே அங்கயே இருந்துட்டீங்களே” என்று தான் தூக்கி வளர்த்த பிள்ளையின் வளர்ச்சியைப் பார்த்து வியந்த படி விசாரிக்க.

 

“நா நல்ல இருக்கேன் முருகா. படிப்பு நல்லா தான் போகுது. படிப்பை பாதியில விட்டுவிட்டு வர முடியல. அதோட பாட்டிக்கு என்ன அவங்க கூடவே வச்சிக்கணும்னு ஆச. இப்ப கூட என்ன விட அவங்களுக்கு மனசே இல்ல. நா தான் கொஞ்ச நாள் அப்பா, அம்மா, தம்பி தங்கச்சிங்க கூட இருக்கேன்னு பிடிவாதம் புடிச்சு வந்தேன். என்னோட படிச்ச பையனோட அக்காக்கு சென்னையில கல்யாணம். அத சாக்கா வச்சு கிளம்பி வந்துட்டேன். நேத்து தான் கல்யாணம் முடிஞ்சுது. ஃப்ரண்ட் ஃபைக்கை கேட்டு வாங்கிட்டு ஊருக்கு வந்தேன் முருகா.”

 

“அப்ப இனி இங்க தான் இருக்கப் போறீங்களா தம்பி”? என்று முருகன் சந்தோஷமாகக் கேட்டான்.

 

“ம்ம்ம் கொஞ்ச நாள் இருப்பேன் முருகா. இப்போதைக்கு அது தான் முடிவு. உனக்குத் தான் அப்பா பத்தி தெரியுமே. எனக்கும் அவருக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். அவர் செய்யுறது தப்பு. இதுல என்னையும் அவர மாதிரி ஆக்கப் பாக்குறாரு. அதனால தான் நா பாட்டி வீட்டுக்கே போனேன்” என்று சலித்துக் கொண்ட நந்தனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தான் முருகன்.

 

“தம்பி வெயில்ல வந்திருக்கீங்க. குடிக்க ஏதாவது கொண்டு வரட்டுமா? மோர் குடிக்குறீங்களா தம்பி?”

 

“ம்ம்ம் கொண்டு வா முருகா. நானும் அப்படியே தோப்பை சுத்தி பாத்துட்டு வரேன்” என்றதும், முருகன் “ஒரு நிமிஷம் தம்பி ஒரே ஓட்டமா ஓடிப்போய்ட்டு வரேன்” என்றவன் தன் வீட்டை நோக்கி ஓட, நந்தன் தோப்பை சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தான்.

 

ஒரு இடத்தில் மாமரத்தின் கீழே சில மாங்காய் விழுந்து கிடக்க ‘என்ன இது? மாங்கா எல்லாம் ஏன் இப்படிக் கீழ கெடக்கு’ என்று யோசித்தவன் அதில் இருந்து ஒரு மாங்காயை எடுக்க,

 

“ஓய்! யாரு அது? என் மாங்கா மேல கை வைக்குறது”? என்ற ஒரு பெண்ணின் குரல் கேட்க நந்தன் தோப்பை ஒரு முறை சுற்றிப் பார்த்தவன் நிமிர்ந்து மேலே பார்க்க, வாழைத்தண்டு போல் வெள்ளை வெளேர் என்று கொலுசு போட்ட ரெண்டு கால்கள் மட்டுமே தெரிந்தது.

 

“என்ன இது கால் மட்டும் தான் இருக்கு. ஒருவேள மோகினி பிசாச இருக்குமோ?” என்று நந்தன் சொல்லி முடிக்கும் முன் தொப்பென அவன் முன் குதித்தவள் “ஓய் நெட்ட கொக்கு யாரா பார்த்து பிசாசுன்னு சொன்ன?” என்று இடுப்பில் கை வைத்து அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

பதினாறு வயதில், பாவாடை தாவணியில், இடுப்பு வரை தொடும் பின்னலை முன்னால் போட்டு தாவணியை இடுப்பில் சொருகி, நெற்றியில் இருந்த குங்குமம் வியர்வையில் வழிந்து அவள் நாசியில் இறங்கி ஓட அவள் மேனியில் இருந்து மஞ்சளோடு கூடவே ஏதோ சுகந்தமான வாசமும் சேர்ந்து வர, கிராமத்து தேவதை போல் கண்முன் நின்றவளை நந்தன் கண்கள் இமைக்க மறந்து அந்த வெண்ணெயில் செய்த அழகு சிலையை ரசித்துக் கொண்டிருந்தது.

 

“ஓய் என்ன அப்படியே முழுங்குற மாதிரி பாக்குற”? என்ற அவள் கொஞ்சு குரலில் அதட்ட, அதில் சுய உணர்வு வந்தவனுக்கு, ஏன் அவளை அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பது புரியவில்லை. இந்த உணர்வு நந்தனுக்குப் புதிதாக இருந்தது. இதுவரை எந்தப் பெண்ணிடமும் தோன்றாத ஒரு புதிய உணர்வு இவளிடம் தோன்றுவது நந்தனுக்கே வியப்பாக இருந்தது.

 

“யார் நீ?” இங்க என்ன பண்ற? என்று கேட்ட நந்தனை முறைத்தவள் “அட பாருடா? இவரு என்னமோ இந்தத் தோப்புக்கு ஓனர் மாதிரி இல்ல கேள்வி கேக்குறாரு? ஹலோ நல்லவரே நீயும் இங்க மாங்கா திருட தான் வந்திருக்கேன்னு மறந்துடாத. அதுவும் சுயமா திருடாம, நா கஷ்டப்பட்டுப் புடிங்கி போட்ட மாங்காவ சுடப்பாக்குற நீ”? என்று தன் பிஞ்சு விரல் நீட்டி அவனை மிரட்ட ஒரு சிறு புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

 

அவன் விழி பார்வையின் அர்த்தம் புரியாத பேதை “ஓய்! என்ன நா பேசிட்டே இருக்கேன். நீ ஈஈஈஈன்னு இளிச்சிட்டு இருக்க. மரியாதையா ஓடிப் போய்டு. இல்ல கத்தி தோப்பு காவல் ஆள கூப்புடுவேன்” என்றவள் அடுத்த நிமிஷம், “அடியேய் அறிவு கெட்டவளே, அவன் திருட வந்திருக்கான்னா நீ மட்டும் என்ன மாங்கா திருட பர்மிஷன் லெட்டரா வாங்கிட்டு வந்திருக்க? காவல்காரன் வரத்துக்கு முந்தி, முதல்ல நீ இங்கிருந்து ஓடு டி” என்று முனுமுனுத்தவள் கீழே கிடந்த மாங்காயை எடுத்துத் தன் தாவணி முந்தானையில் மூட்டை கட்டிவிட்டு நிமிர்ந்து நந்தனைப் பார்த்து உச்சுக்கொட்டிவிட்டு “உன்ன பாத்த பாவமா இருக்கு. உனக்குத் தராம நா மட்டும் இத தின்ன எனக்குத் தான் வயிறு வலிக்கும். இந்தா” என்று ரெண்டு மாங்காயை அவனிடம் நீட்டியவள் அங்கிருந்து நகரப் போக.

 

“ஏய் யாரது தோப்புக்குள்ள”? என்ற முருகனின் குரலைக் கேட்டவள், தலையில் கை வைத்து போச்சு போச்சு எல்லாம் போச்சு. முருகண்ணன் வருது. நா மட்டும் அது கையில் சீக்குனேன் அவ்ளோ தான். அது என் பாட்டி கிட்ட போட்டுக் குடுத்துடும்” என்று பதறியவள் கையில் இருந்த மாங்காயை கீழே தவற விட “அய்யோ இதுவும் போச்சா”என்று சுத்தி முத்தி நோட்டம் விட்டு “யோவ்! நீ என்னய்யா மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த மருமகன் மாதிரி இன்னும் இங்க நின்னுட்டு இருக்க? எங்கயாவது தப்பிச்சு ஓடுயா. முருகண்ணா பாத்த முதுகுத்தோல உரிச்சிடும். வாய்யா” என்று அவன் கையைப் பிடித்து இழுக்க நந்தன் ஒரு இன்ச் கூட நகரவில்லை. “யோவ் வாய்யா, அண்ணா வந்துடப் போகுது” என்று கத்த அவன் நகர்வதாக இல்லை.

 

“நீ எப்படியோ ஒழிஞ்சு போ. நா போறேன்” என்றவள் கை நந்தனின் கையில் சிக்கி இருந்தது. “யோவ் கைய விடுய்யா! அய்யோ!! அண்ணா வந்துட்டு இருக்கே. டேய் கைய விடு டா” என்று அவள் கத்தி முடிக்கும் முன் முருகன் அங்கு வந்துவிட்டார்.

 

“போச்சு போச்சு! எல்லாம் இவனால தான். இவனை காப்பாத்த நெனச்சு நானும் சேந்து மாட்டிக்கிட்டேன். டேய் நீ எல்லாம் நல்லா வருவ டா. மூஞ்சப்பாரு மீந்து போன மாவுல சுட்ட போண்டா மாதிரி நல்லா மொழு மொழுன்னு. ச்சே இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்ல போல” என்று வாய்க்குள் முனங்கிட.

 

அங்கு வந்த முருகன் “ஓஓஓ நீ தானா நா அப்பவே நெனச்சேன். ஏம்மா எத்தன முறை உனக்குச் சொல்றது? வயசு பொண்ணு இப்டியா சின்னபுள்ள மாதிரி நடக்குறது. இது மட்டும் உன்னோட அம்மாச்சிக்கு தெரிஞ்சுது, அது உன் முதுகுத் தோல உரிச்சு உப்புத் தடவி வெயில்ல காயப்போட்டும்” என்று எரியும் அவள் பயத்தில் இன்னும் பெட்ரோலை ஊத்தினார்.

 

“முருகா அந்தப் பொண்ணு ஒன்னும் மாங்கா திருடல. மாங்கா வேணும்னு கேட்டுச்சு. நா தான் பறிச்சுக்கச் சொன்னேன். நீ போ” என்றான்.

 

“ஓஓஓ நீங்க தான் சொன்னீங்களா தம்பி. அப்ப சரி. இந்தாங்க தம்பி மோரு. நீங்க இங்கயே இருங்க நா இதோ வந்துடுறேன்” என்று முருகன் நகர அவள் கண்ணை உருட்டி, இதழைப் பிதுக்கி ஒருமாதிரி அசடுவழியும் பாவனையில் நந்தனைப் பார்க்க அவளின்‌ அந்தக் கோணல் முகம் கூடக் கூடுதல் அழகாகத் தான் இருந்தது அவளுக்கு.

 

“நீ…”

 

“…………”

 

“நீங்க யாரு?”

 

“என் பேரு அபிநந்தன். இந்த ஊர்ல முத்துவேல் இருக்காரே அவரோட பையன். இது எங்க தோப்பு தான்” என்று சொல்ல,

 

அவனை அசடுவழிய பார்த்தவள் “சாரிங்க, நீங்க யார்னு தெரியாம, சாரி” என்று மூக்கைச் சுருக்கி, கண்ணைக் குறுக்கி ஒரு மாதிரி சொல்ல இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் அவளை இப்படிக் கொஞ்ச வைத்து ரசிக்கலாம் என்று தோன்றியது நந்தனுக்கு.

 

“இட்ஸ் ஓகே. நீ இந்த மாங்காவ எடுத்துட்டுப் போ” என்றது தான் உடனே எல்லா மாங்காயையும் எடுத்துக் கொண்டவள் “ரொம்பத் தேங்க்ஸ்” என்று விட்டு நகர “ஏய் உன்னோட பேர் சொல்லாமயே போறயே”?

 

“மதிநிலா” என்று கத்திச் சொல்லிவிட்டு அவள் ஓடிவிட மதிநிலா பொருத்தமான பேரு. மதிநிலா என்று தனக்குள் சொல்லி பார்த்தவன்… “மதி” என்று அவள் பெயரைச் சுருக்கி தன் மனதில் போட்டுக் கொண்டான்.

 

தற்செயலோ, விதிச்செயலோ அல்லது இயல்பாக நடந்ததோ, அடுத்தடுத்து அபிநந்தன், மதிநிலா சந்திப்புகள் நடக்க இருவர் இடையே இருந்த விலகல் குறைந்து நெருக்கம் வளர்ந்தது. ஆறுமாதம் இப்படியே போக, அபிநந்தன் அவளுக்கு அபி ஆகிப்போனான். மதிநிலா அவனுக்கு மட்டும் ஒளி தரும் மதி ஆகிப் போனாள்.

 

நந்தனுக்கு மதியுடன் பழகிய கொஞ்ச நாளில் தனக்கு அவள் மீதிருக்கும் உணர்வுக்கு என்ன அர்த்தம் என்று புரிந்துவிட்டது. மதி மீது அவனுக்கு இருப்பது வெறும் நட்போ, அன்போ இல்லை. அது காதல். தூய்மையான காதல் என்று அவனுக்குப் புரிந்தது. ஆனால், சின்னக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த மதிக்கு தன் அபி மீது தனக்கிருப்பது வெறும் அன்பும், பாசமாகத் தான் தெரிந்தது.

 

நந்தன், மதிக்கு தன் காதலை புரியவைக்கப் பார்த்து முடியாமல் “கடவுளே என்ன ஏன் இப்படிச் சோதிக்குற? அந்தப் பக்கி பாக்கத் தான் பெரிய பொண்ணாட்டம் இருக்கு. ஆனா, மனசு இன்னும் பச்ச கொழந்த மாதிரி. மாங்கா திருட, பட்டாம்பூச்சி புடிக்க, சின்னப் பசங்க கூட கண்ணாமூச்சி விளையாடுறதுலயே இருக்கு. இந்த லட்சணத்துல நா எங்க இருந்து என் காதலைச் சொல்லி அது அந்த மரமண்டைக்கு புரிஞ்சு? அய்யோ நெனைக்கவே கண்ணக்கட்டுதே! எனக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுப்பா” என்றவன் சாமியைக் கும்பிட்டு விட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத கோவில் பின்புறம் உட்கார்ந்திருக்க கை நிறையப் புளியம் பழத்தோடு வந்தாள் நம்ம அபியின் மதி.

 

“அபி இந்தா புளியம் பழம் எடுத்துக்கோ” என்றவளை நந்தன் முறைத்துப் பார்க்க.

 

“ஏய் அபி! அப்டி பாக்காத. இத நா திருடல. மாமா ஊர்ல இருந்து வாங்கிட்டு வந்தாரு. உனக்காக எடுத்துட்டு வந்தேன். நீதான் அடுத்தவங்க தோப்புல எதுவும் எடுக்கக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டியே. அதுவும் உன் தலமேல அடிச்சு. நா ஏதாவது செஞ்சா உனக்கு தானா ஏதாவது ஆகிடுமே. அப்றம் நா எப்டி திருடுவேன்” என்றவள் கண்ணில் அவள் அபி மீது வைத்திருக்கும் அன்பு அப்பட்டமாகத் தெரிய நந்தனுக்கு அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

 

சட்டென ஏதோ தோன்றா “மதி நீ ஒரு தடவ சத்தியம் பண்ணிட்டா அத மீறவே மாட்ட இல்ல?” என்று கேட்க,

புளியம் பழத்தை வாயில் வைத்துக் கடித்தபடியே ஆமாம் என்று அவள் தலையாட்டினாள்.

 

“அப்ப எனக்கு ஒரு சத்தியம் பண்ணி தருவியா மதி?”

 

“என்ன? என்ன சத்தியம் அபி? சொல்லு செய்றேன்.”

 

“நீ கடைசி வரை என் கூடவே இருப்பேன்னு எனக்குச் சத்தியம் பண்ணு மதி” என்றவனைக் குழப்பமாகப் பார்த்தாள் மதி.

 

“அது எப்படி முடியும் அபி? இப்பவே பாட்டி என் கல்யாணம் பத்தி அடிக்கடிப் பேசுது. அப்பா, அம்மா இல்லாத பொண்ணு சீக்கிரம் ஒருத்தன் கையில் புடிச்சு குடுக்கனும்னு தவிச்சிட்டு இருக்கு. இன்னு ரெண்டு மூனு வருஷம் போனா, பாட்டியும், மாமாவும் என்னை யாருக்காச்சும் கட்டிக் குடுத்துடுவாங்களே. அப்றம் நா எப்டி உன்னோடவே இருக்க முடியும்”? என்று அப்பாவியாகக் கேட்க நந்தனுக்க நெஞ்சில் நெருப்பு வைத்தது போல் எரிந்தது.

 

“அப்ப நானே உன்னக் கல்யாணம் கட்டிக்குறேன். அப்ப நீ என்னோட இருப்ப இல்ல மதி?”

 

“ஒளராத அபி. நீ யாரு நா யாரு? நீ என்னைக் கல்யாணம் பண்றது கனவுல கூட நடக்காது. என்ன எப்பவும் சின்னப் புள்ளன்னு சொல்லுவியே. இப்ப நீதான் சின்னப் புள்ள மாதிரி பேசுற. பேசாம எழுந்து வீட்டுக்குப் போ நேரமாச்சு” என்றவள் எழுந்து கொள்ள நந்தன் அவள் கையைப் பிடித்து இழுக்க அவன் மார் மீதே போய் விழுந்தாள் மதி. தன் மீது விழுந்தவளை, அவன் தான் நெஞ்சோடு சேர்ந்து இறுக்கி அணைத்து கொள்ள, என்னதான் உலகம் தெரியாத பெண்ணாக இருந்தாலும் இயற்கையிலேயே பெண்ணிற்கு இருக்கும் அடிப்படை உணர்வு அவளை எச்சரிக்க “அபி என்ன பண்ற நீ? யாராவது பாக்கப் போறாங்க என்ன விடு” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு அவனை விட்டு விலகி வந்து அவனைத் திட்ட வாயெடுக்க கண்கலங்கி அழுது சிவந்திருந்த அவன் கண்களில் இதுவரை தெரியாத ஏதோ ஒன்று இன்று அவளுக்குத் தெரிந்தது.

 

“வேணா அபி. இதெல்லாம் சரிபட்டு வராது. நீ தேவை இல்லாம” என்று ஆரம்பிக்க அவள் இதழ்களைத் தன் கரம் கொண்டு மூடிய நந்தன். நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி. புரிஞ்சுக்க. நீ எனக்கு வேணும்” என்று அவன் குழந்தை போல் அடம்பிடிக்க மதிக்குத் தான் என்ன செய்வதென்று புரியவில்லை.

 

“ப்ளீஸ் அபி, உங்கப்பாக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும் ப்ளீஸ் இதெல்லாம் வேணாம்” என்று அவள் கெஞ்ச.

 

“இதுதான் உன் முடிவா மதி”? என்ற அவன் கேள்விக்கு அவள் ஆமாம் என்று தலையாட்ட “நீ எனக்கு இல்லன்னு ஆகிட்டா உன்னோட அபி செத்துடுவான் மதி” என்றவன் அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்ளப் போக.

 

“அபி என்ன பண்ற நீ? கம்பிய கீழ போடு” என்று அவள் கத்திக் கதற, அப்ப நீயும் என்னை விரும்புறேன்னு ஒத்துக்கோ. நீ என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சத்தியம் பண்ணு இல்ல” என்று அவன் மறுபடியும் கம்பியை ஓங்க,

 

“சரி…” என்று காதை மூடிக்கொண்டு கத்தியவள். “நா உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன். இந்த மதிநிலா உசுரு, மனசு, உடம்பு இந்த மூனும் என் அபிக்கு தான் சொந்தம். அபிக்கு மட்டும் தான் சொந்தம். இது என் குலசாமி மேல சத்தியம் போதுமா”? என்று கத்திச் சொல்ல.

 

நந்தன் தன் கையில் இருந்த கம்பியை தூக்கிப் போட்டவன், மதியை இழுத்து தன்‌ மார்மீது போட்டு அணைத்துக் கொள்ள தன் மனதிலும் தன் அபி மேல் காதல் இருக்கிறது என்று உணர்ந்த மதிநிலாவும் தன் பங்கிற்கு அவனைத் தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.

 

பாவம் அப்போது அந்தக் காதல் கிளிகளுக்குத் தெரிந்திருக்காது. காதல் என்ற வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே முத்துவேல் அந்தக் கிளிகளின் சிறகை வலிக்க வலிக்கப் பிடிங்கி எறிய போகிறார் என்று…

 

 

Leave a Reply

error: Content is protected !!