Vanavil – 14

hqdefault (2)-28010c5a

Vanavil – 14

 அத்தியாயம் – 14

மேகவேந்தன் – கார்குழலி திருமணநாள் இனிதாக விடிந்தது.

அந்த திருமணத்தை ஏற்பாடு செய்த தன் தோழியின் குடும்பத்தினர் ஒரு வாரமாக எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் முற்றிலுமாக குழம்பி போனாள் கார்குழலி.

அத்தனை ஏற்பாடுகளை செய்த மகிழ்வதனி குடும்பம் திருமணத்திற்கு வராமல் போனதை வைத்து மண்டபத்தில் உள்ளவர்கள், “என்னதான் இருந்தாலும் அவங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்குது. அதுக்கு கண்ணாலம் நடக்காதப்போ நாலுபேர் தப்பாக பேசுவாங்கலே.. அதுனாலதான் வராமல் இருந்திருப்பாகன்னு நினைக்குதேன்” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

இந்த ஒருவாரமாக அவளின் எந்த அழைப்பையும் யாரும் எடுக்காமல் இருக்க, “அக்கா இந்த நகையை போட்டுக்கோ. வதனிக்கா உங்களுக்காக வாங்கி அனுப்பியிருக்காக..” என்று தமக்கையின் கையில் தந்தான் சரவணன்.

தன் தம்பியை நிமிர்ந்து பார்த்த கார்குழலி, “என்னவே விளையாடுதியா? அப்பா – அம்மா, வதனி மூணு பேரும் இல்லாமல் நான் மணமேடைக்கு போவ மாட்டேன். நீ முதலில் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லு” என்று அதட்டினாள்.

சரவணன் கேள்வியாக நோக்கிட, “அப்பா – அம்மா இருவரும் எங்க போயிருக்காவ.. உன் கைக்கு இந்த நகை எப்படி வந்ததுலே?” என்றாள்.

“ம்ஹும் அவங்க சொந்தத்தில் யாருக்கோ ரொம்ப சீரியஸ்னு சொல்லிட்டுப் போனவே. இந்த நகையை வதனி அக்காவோட பி.ஏ. கொண்டு வந்து கொடுத்தார்” என்றான் சாதாரணமாக.

தன் தம்பியை உக்கிரத்தோடு முறைத்தவள், “என்னாலே எந்த கேள்விக்கும் சிக்காமல் பதில் சொல்லுதே.. என்ன திமிரா?” அவன் சொன்னதை நம்பாமல் கேட்டாள்.

“ஐயோ அக்கா நான் என்னை நம்பு. அவிய மூணு பேரும் எங்க போனாங்கன்னே தெரியல. ஆனால் உன் கல்யாணத்திற்கு கட்டாயம் வருவாக என்ற நம்பிக்கை எனக்கிருக்கு. நீ சீக்கிரம் தயாராகி மேடைக்கு வா” அவன் அறையைவிட்டு வெளியேறினான்.

கார்குழலி மன சஞ்சலத்தோடு தயாராக, “பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்ற குரல் கேட்க, அவளை அழைத்துசென்று மேகவேந்தன் பக்கத்தில் அமர வைத்தனர். அனைவரின் முன்னிலையில் அக்னி சாட்சியாக வைத்து அவளின் கழுத்தில் தாலிகட்டினான்.

அதே நேரத்தில் ஒரு உயிர் மண்ணைவிட்டு பிரிந்த தகவல் கிடைக்க யாரின் கவனத்தையும் ஈர்க்காத வகையில் மண்டபத்தைவிட்டு வெளியேறினான் இளஞ்செழியன்.

ஏழு நாட்களுக்கு முன்பு..

மகிழ்வதனி சென்ற வேலை சுமூகமாக முடியாத நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போதே பெங்களூரில் இருந்து காரில் ஊருக்கு கிளம்பும் முன்னர் தந்தைக்கு அழைத்தாள்.

அதிகாலை நேரத்தில், “பரிமளா சீக்கிரம் கிளம்பும்மா.. நம்ம கடைக்குள் நுழைய பத்துமணி ஆகிடும். இங்கிருந்து நிலக்கோட்டை பக்கத்தில் இல்லை. வண்டியில் போக தாமதம் ஆகலாம்” என மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்க செல்போன் சிணுங்கியது.

“ஹலோ வதனி.. இந்த நேரத்தில் போன் செய்யுதே..” என்று சொல்ல,

“அப்பா நான் காரில் ஊருக்குக் கிளம்பிட்டேன். நீங்க என்ன செய்யறீங்க? கல்யாண ஏற்பாடு எல்லாம் எப்படி போகுது?!” அக்கறையுடன் விசாரிக்க,

 “நாங்க கார்குழலிக்கு நகை எடுக்க நிலக்கோட்டை கிளம்பிட்டு இருக்கோம் வதனி. அந்த புள்ளக்கு உண்மை தெரிஞ்ச கட்டாயம் வேண்டான்னு சொல்லிப்புடும்னு பொய் சொல்லிட்டு கிளம்புதோம்” என்றார்.

மறுப்பக்கம் அவர் சொன்னதைக் கேட்டவுடன், “நானும் நிலக்கோட்டை வந்த பொறவு நகை எடுத்துட்டு வீட்டுக்கு போவோம்” என்றாள் மகள்.

“சரிம்மா.. காலையில பத்து மணிக்கு மேல நல்ல நேரம்னு சொன்னவே.. நீ அதுக்குள்ள வர பாரு..” என்றவர் அழைப்பைத் துண்டித்து, மனைவியோடு பைக்கில் கிளம்பினர்.

உடனே தங்கியிருந்த ஹோட்டல் ரூமைக் காலி செய்துவிட்டு காரில் நிலக்கோட்டை நோக்கி பயணித்தாள் மகிழ்வதனி. அதிகாலை நேரம் என்பதால் சாலையில் அதிக வண்டிகள் இல்லாமல் போகவே தன்னால் முடிந்தளவு வேகமாக காரைச் செலுத்தினாள்.

நிலக்கோட்டை நெருங்க ஒரு மணிநேரம் இருக்கவே, அவளின் மனம் திடீரென்று படபடக்க தொடங்கியது. இதுநாள்வரை அப்படியொரு உணர்வை உணராத மகிழ்வதனி ரோட்டோரம் இருந்த டீக்கடையில் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி தண்ணீர் வாங்கி முகத்தில் அடித்து கழுவிவிட்டு மீண்டும் காரில் சென்று அமைதியாக அமர்ந்தாள்.   

அதே வழியாக அதிக வேகத்துடன் வந்த காரைக் கண்டசெந்தூரன், “விபத்து நடக்கும் பகுதி.. மெல்ல போகவும் போர்டு பார்த்த பிறகும் இவ்வளவு வேகமாக போறவங்களை என்ன செய்யறது?” என்று அவர் சொல்லி வாயை மூடவில்லை.

அந்த கார் முன்னே சென்ற பைக் மீது மோதி, அங்கிருந்த குழியில் கவிழ்ந்து விழுந்தது. அதை நேரில் பார்த்த ஊர்மக்கள் ஓடிச்சென்று அடிபட்டவர்களை காப்பாற்றும் போதுதான் செந்தூரன் இருவரையும் அடையாளம் கண்டுகொண்டார்.

அவருக்கு இருந்த படபடப்பில் தகவலை முதலில் யாரிடம் சொல்வது என்ற சிந்தனையோடு இளஞ்செழியனுக்கு அழைத்தார். திருமண வேலையில் வீடே மூழ்கியிருக்க, வாசலில் வாழைமரம் கட்ட சொல்லிக் கொண்டிருந்தவனின் செல்போன் சிணுங்கியது.

“ம்ம்.. சீக்கிரம் முடிச்சிட்டு மத்த வேலையைக் கவனிங்கலே” என்று போனை எடுத்து, “ஹலோ மாமா சொல்லுங்க..” என்றான்.

“தம்பி நான் ஒரு வேலையா நிலக்கோட்டை வரைக்கும் வந்த இடத்தில எதிர்பாராத விதமா ஒரு விபத்து நடந்துபோச்சு. யாருன்னு பார்த்த அது மனோகர் – பரிமளா இருவரும் அடிபட்டு கிடக்குறாங்கவே. அந்த புள்ள நம்பர் என்கிட்ட இல்ல. நீ கொஞ்சம் விசாரிச்சு சொல்லுப்பா.. இந்த தகவலை சொல்லோணும்” அவனின் தலையில் இடியை இறக்கினார்.

அவர் சொன்னதைகேட்டு சிலநொடிகள் அசைவற்று நின்று போனான் ஒரு பக்கம் தான் விரும்பும் பெண்ணின் பெற்றோர், மற்றொரு பக்கம் தம்பியின் திருமணம் நின்றுவிடும் என்ற உண்மையறிந்து என்ன செய்வதென்று வேகமாக யோசித்தான்.

“செழியா” என்றழைக்க தன்னிலைக்கு மீண்டவன்,  

“என்ன சொல்லுதிய.. இங்கன கண்ணால வேலை நடந்திட்டு இருக்கிற சமயத்தில் இந்த சேதி மத்தவங்க காதுக்கு எட்டுன அம்புட்டுத்தான். சரி நீங்க அவியளோட ஹோஸ்பிடல் போங்க.. நானு நேரில் கிளம்பி வருதேன்” என்றவன் சொல்ல அவரும் சரியென்று போனை வைக்க நினைத்தார்.

அதற்குள், “மாமா இந்த விஷயம் மத்தவுக காதுக்குப் போவக் கூடாது” என்றான் ஒருவித அழுத்தத்துடன்.   

 “சரிப்பா.. நீ கொஞ்சம் சீக்கிரம் வா” என்றவர் அழைப்பைத் துண்டிக்க, யாரிடமும் சொல்லாமல் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான் இளஞ்செழியன்.

இந்த விவரம் தன்னவளுக்கு தெரிய வந்தால் என்ன நடக்குமோ என்று மனம் ஒருப்பக்கம் பதற, அவர்களை நிலக்கோட்டையில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக விவரம் அறிந்து வேகமாக சென்றான்.

அவர்களுக்கு அவசர பிரிவில் சிகிச்சை நடக்க, “ஐயா இவுக அடிபட்டு கிடந்த இடத்தில இந்த பணமும், இந்த செல்போனும் இருந்தது” என்று ஒருவன் கொண்டு வந்து கொடுக்க, திடீரென்று செல்போன் சிணுங்கியது.

 திரையில் மகிழ்வதனியின் புகைப்படம் கண்டு, “தம்பி போன் வருது..” அந்த பையனிடம் கொடுத்தார் செந்தூரன்.

அவரது அவசரம் புரிந்து உடனே அழைப்பை எடுக்க, “அப்பா நான் நிலகோட்டை வந்துட்டேன். நீங்க எங்கே இருக்கீங்க?” என்று வேகமாக விசாரிக்க,

“ஹலோ அக்கா நான் சொல்வதைப் பொறுமையாக கேளுங்க. உங்கப்பா, அம்மாவிற்கு ஆக்சிடென்டாகி ஹோஸ்பிட்டலில் சேர்த்து இருக்கோம்” என்றவன் மருத்துவமனை பெயரைச் சொல்ல, அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.

சிலநிமிடம் உலகம் சுழல்வதை நிறுத்திக்கொண்டது போல உணர்ந்த பெண்ணவளுக்கு மூச்சுவிடுவது கூட சிரமாக இருந்தது. சற்றுமுன் தன்னுள் ஏற்பட்ட இனம்புரியாத உணர்விற்கு இதுதான் காரணம் என்று புரிந்துபோனது.

இப்போது தான் இருக்கும் சூழ்நிலையில் உணர்ச்சி வசப்பட்டு நின்றால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை கேலி கூத்தாகிவிடும் என்று உணர்ந்து தன் மனதினைத் திடபடுத்திக் கொண்டாள்.

“நான் இன்னும் கொஞ்சநேரத்தில் வருகிறேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

சிறிதுநேரத்தில் மருத்துவமனை முன்பு காரை நிறுத்திவிட்டு ரிசப்சனில் விசாரிக்க, ஐ.சி.யூ. நோக்கி வேகமாக நடந்தாள். அவளைப் பார்த்த செந்தூரன் எழுந்து நிற்க, “அப்பா, அம்மா எப்படி இருக்காங்க” விழிகளில் வலியைத் தேக்கி படபடப்புடன் கேட்டாள்.

“இருவருக்கும் டிரீட்மெண்ட் நடந்திட்டு இருக்கும்மா” என்றார் செந்தூரன்.

சிறிதுநேரத்தில் வெளியே வந்த டாக்டரிடம் அவள் பதட்டத்துடன் விசாரிக்க, “உங்கப்பா உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் இப்போது அவர் கோமாவில் இருக்கிறார். அவரை நீங்க மருத்துவமனையில் வைத்து பார்த்துக்கொண்டால் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கு” என்றவர் தொடர்ந்து,

“ஆனால் உங்கம்மா நிலை ரொம்பவே கிரிட்டிகல் தான். அவங்க பிழைக்க வாய்ப்பில்லை முடிந்தவரை உறவுகாரங்களுக்கு சொல்லி அனுப்பிருங்க” என்று கையை விரித்துவிட, தாயின் இழப்பை ஏற்க மனதைத் திடபடுத்திக் கொண்டாள்.

அங்கே நடந்த அனைத்தும் பார்த்த செந்தூரன், “சரிம்மா.. இனிமேல் நீ பார்த்துக்கோ. நான் கிளம்புதேன்” என்றார்.

திடீரென்று தோழியின் திருமணம் நினைவு வரவே, “ஒரு நிமிஷம்” என்ற அவரைத் தடுத்த மகிழ்வதனியைக் கேள்வியாக நோக்கினார்.

“நீங்க செய்த உதவியை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அதே நேரத்தில் இந்த விஷயம் ஊருக்குள் இருக்கும் மத்தவங்களுக்கு தெரிஞ்சா கல்யாணம் நின்றுபோக வாய்ப்பிருக்கு. அது அந்த பெண்ணின் வாழ்க்கையைக் கேள்வி குறியாக்கிட்டும். அதனால இங்கன நடந்ததை யாரிடமும் சொல்லாதிய” என்றவளின் குரல் கரகரத்தது.

அவ்வளவு துக்கத்திலும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாகக் கூடாது என்று நினைக்கும் அவளின் நல்லமனதை நினைத்து, “நான் இங்கன வந்ததை யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்று அவர் பேசிக்கொண்டு இருக்க புயல்வேகத்தில் உள்ளே நுழைந்தான் இளஞ்செழியன்.

“வதனி” என்ற குரல்கேட்டு திரும்பிய பெண்ணவள் ஓடிச்சென்று அவனைக் கட்டியணைத்து கதறி அழுதாள்.

மெல்ல அவளின் முதுகை வருடிவிட்டு, “நீ அழுவதால் நடந்த எதையும் மாற்றிட முடியாது. இந்த நேரத்தில் தான் சூழ்நிலையைத் தைரியமாக கையாள வேண்டும்” என்று அவளுக்கு தைரியமளிக்க, அவனைவிட்டு விலகி நின்றாள்.

அங்கே நடந்த அனைத்தையும் செந்தூரன் சொல்ல, “சரி இனி நான் இங்கே மேனேஜ் பண்ணிக்குவேன். நீங்க இருவரும் கிளம்புங்க” என்றவுடன் செழியன் முகம் கோபத்தில் சிவந்தது.

“இந்த நிலையிலும் நீயேன் இப்படி இருக்கிற.. உன் சந்தோசத்திலும், துக்கத்திலும் எனக்கு பங்கு இல்லையா? என்னவோ சாதாரணமா நீங்க கிளம்புங்க நான் பார்த்துகிறேன்னு சொல்ற?” என்று அவளிடம் சண்டையிட்டான்.

“ஆமா அப்படித்தான் சொல்ல முடியும். வீட்டில் விசேஷத்தை வச்சுக்கிட்டு இங்கன இருப்பதால் யாருக்கும் எந்த இலாபமும் இல்ல. அங்க ஒருத்தி மணிவண்ணன் தற்கொலையை நினைச்சு மனசுக்குள் மருகிட்டு கிடக்கற. இப்போ இந்த விஷயமும் தெரிஞ்சா அவ வாழ்க்கையே வீணாக போயிடும்” என்றவள் சொல்வதில் இருக்கும் உண்மை அவனைச் சுட்டது.

செழியன் அவளை முறைத்தபடி நின்றிருக்க, “இந்த சமயத்தில நீங்க என்னோட இருப்பதைவிட அங்கே இருப்பதுதான் நல்லது. அதனால் முதலில் கிளம்புங்க” அவனை அங்கிருந்து அனுப்புவதில் குறியாக இருந்தாள்.

அவளுக்கும் அதைவிட்டால் வேறு வழியில்லை.  அவளைப் பொறுத்தவரை இளஞ்செழியன் தன்னை நேசிக்கிறான். இப்போது தான் இல்லாத இடத்தில் தனக்காக நின்று அனைத்தையும் செய்வான் என்று முழுமனதாக நம்பினாள். அவன் மணிவண்ணனின் தம்பி என்ற விஷயம் அவளுக்கு இன்றுவரை தெரியாது.

“இதற்குமேல் உன்னிடம் பேசி பயனில்லை. நான் ஊருக்கு கிளம்பறேன். அங்கே கல்யாணம் முடிந்தவுடன் இங்கேதான் வருவேன். அப்போதும் இப்படியே ஏதாவது காரணத்தைச் சொல்லி அனுப்ப தயாராக இரு” என்று கோபத்துடன் பேசியவன் முன்னே செல்ல செந்தூரன் அவனைப் பின்தொடர்ந்தார்.

“செழியன் ஒரு நிமிஷம்” என்று வேகமாக அவன் அருகே சென்றவள்,

“அவங்க இருவரும் கிளம்பி வந்ததே நகை வாங்கத்தான்” என்றவள் வேகமாக தன் டெபிட் கார்டை அவனிடம் நீட்டினாள்.

அதை வாங்காமல் அவன் கேள்வியாக நோக்கிட, “நியூ மாடலில் நகை எடுத்து சரவணன் கிட்ட கொடுத்துடுங்க. அப்புறம் அப்பா, அம்மா விஷயம் ஏதும் யாருக்கும் சொல்லாதீங்க. இந்த திருமணம் முடியும்வரை எனக்கு போன் செய்யாதிய” என்று அடுக்கிகொண்டே செல்ல அவன் மெளனமாக நின்றிருந்தான்.

அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் தன் மீது அவள் வைத்திருக்கும் காதலை உணர்ந்தான். அவள் இருக்கும் இடத்தில் தன்னை நிறுத்த முற்படும்போது மகிழ்வதனி மனதை புரிந்து கொண்டான்.

அவளிடம் டெபிட் கார்டை வாங்கிய செழியன், “உனக்கு எந்தநேரம் என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் போன் பண்ணு” அவன் சொல்ல சரியென்று தலையசைத்தாள்.

ஆண்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பியவுடன் சேரில் அமர்ந்த பெண்ணின் மனம் தாயைச் சுற்றியே வட்டமிட்டது. தனக்கொரு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற அவரின் கனவு கடைசியில் கனவாகி போனதை நினைத்து மனம் வலித்தது.

இத்தனை சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஒவ்வொரு நாளையும் கடத்தினாள்.  கடைசியாக மேகவேந்தன் – கார்குழலி திருமணத்தன்று பரிமளாவின் உயிர் உடலைவிட்டு பிரிந்தது.

அதைக்கேட்டு உள்ளம் கண்ணாடி போல சில்லு சில்லாக நொறுங்கியது. இதுவரை எந்தவிதமான ஆபத்தும் வராது என்று மனதைத் தேற்றிய பெண்ணால் தாயின் இழப்பை ஏற்றுகொள்ள முடியவில்லை.

பிணவறை முன்பு இருந்த வைக்கபட்டு இருந்த தாயின் சடலத்தைப் பார்த்தாள். முகம் எந்தவிதமான கீறல் இல்லாமல் உறங்குவது போல இருக்க  உடல் ஒருபக்கம் சிதைந்து இருந்ததால் உடல் முழுவதும் கட்டுகளோடு இருந்தார்.

தன் தாயை இந்நிலையில் கண்ட வதனி உணர்வுகள் துடைக்கபட்ட முகம் அந்த இளைஞனை என்னவோ செய்ய, “அக்கா அழுகை வந்தால் அழுதுடுங்க” என்று சொல்ல மறுப்பாக தலையசைத்து வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

இன்று இருக்கும் நிலையில் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற காரணத்தால், “அவங்களுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை இங்கேயே செய்ய சொல்லிருங்க” என்று அந்த இளைஞன் கையில் பணத்தைக் கொடுத்தாள். தாயின் இறுதி சடங்கை முடித்துவிட்டு தந்தைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தவள் வீடு வந்து சேர்ந்தாள்.

அதே நேரத்தில் மண்டபத்தில் இருந்து கிளம்பிய இளஞ்செழியனிடம், “தம்பி அந்தப்புள்ள அங்கேயே காரியத்தைச் செய்ய சொல்லிட்டு கிளம்பி வந்துடுச்சு. நீ முதலில் போய் அந்த புள்ளய பாருப்பா” என்று தகவல் சொல்லி அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் செந்தூரன்.

Leave a Reply

error: Content is protected !!