Mazhai – 13

0520d3d9c8c5d716e872d21837acce0f-37e08455

Mazhai – 13

அத்தியாயம் – 13

இதற்கிடையே திவாகர் – முகிலரசன் நட்பு நாளுக்கு நாள் நன்றாக வளர்ந்தது. அவன் தங்கையைப் பற்றி பேசுவதைக் கேட்டு இந்தளவுக்கு ஒரு அண்ணன் இருக்க முடியுமா? என்ற சந்தேகமே வரும் அளவிற்கு நடந்துகொண்டான்.

ஒவ்வொரு நாளும் அவனது தங்கை அனுப்பும் மெசேஜ் பற்றி தகவலை மறக்காமல் பகிரும் திவாகர், மற்ற எந்த தகவலையும் பகிராமல் இருந்தான்.

இந்த நேரத்தில் அவனது தங்கைக்கு பிறந்தநாள் வருகிறது என்று சொல்லி ஊரைச் சுற்றியலைந்து அவளுக்கு சேலையை தேர்ந்தெடுத்து கொரியர் அனுப்புவிட்டு ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட சென்று அமர்ந்தனர்.

“விஜிம்மா இந்நேரம் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் தெரியுமா? அவங்கதான் இப்போது உயிரோடு இல்லை. நானும் இந்தியாவில் இல்லாததால் பிறந்தநாளை கொண்டாடுகிறாளான்னு தெரியல” என்று அவன் சொல்லிவிட்டு கைகழுவ எழுந்து சென்றான்.

அதுவரை அவன் சொன்னதை சிந்தித்த முகிலன் கவனத்தை ஈர்க்கும் விதமாக திவாகரின் செல்போன் சிணுங்கியது. அதன் திரையில் பிசாசு என்ற பெயருடன் தன்னவளின் புகைப்படம் கண்டு திடுக்கிட்டான்.

 திவாகர் சிற்பிகாவின் அண்ணன் என்ற உண்மை தெரியவரவே, ‘இப்படியொரு அண்ணன் இருக்கும் விஷயத்தை என்னிடம் மறைத்துவிட்டாளே.. ஆனால் இதுவும் நல்லதுக்குதான். இன்றைய நிலையில் அவளைப் பற்றிய தகவலைத் தெரிந்துகொள்ளலாம்’ தனக்கு சாதகமாக நினைத்தான்.

அதே நேரத்தில் நண்பன் இதுவரை பகிர்ந்த விஷயத்தில், தனக்கு தேவையானவற்றைத் தேடிக் கோர்த்து பார்க்கும்போது சிற்பிகா திருமணநாளில் இருந்தே தன்னை விரும்புவதையும், தன்னுடைய கோபத்தைக் கண்டு அவள் விலகியதையும் சொல்லாமல் புரிந்து கொண்டான்.

தன்னுடைய பிரிவு அவளை வெகுவாக பாதித்திருந்தபோதும், தங்களது இல்வாழ்க்கையில் நடந்த விஷயங்களை தமையனிடம் கூட மறைத்து வைத்திருப்பதை நினைத்து உள்ளம் துள்ளியது. அடுத்த வாரத்தில் அவளுக்கு பிறந்தநாள் என்ற கூடுதல் தகவல் அவனது சந்தோஷத்தை இரட்டிப்பாக மாற்றியது.

‘இன்னைக்கு உனக்கு கிப்ட் வாங்கி வைக்கிறேன். ஆனால் நேரில் வந்துதான் தருவேன்’ என்று மனதில் நினைக்கும்போது வந்து சேர்ந்தான் திவாகர்.

“என்னடா பலமான யோசனையில் இருக்கிற மாதிரி தெரியுது..” என்று சொல்லும் போதே,

“உன் செல்போன் அடிச்சுது திவா.. அதில் இருக்கின்ற பொண்ணுதான் உன் தங்கச்சியா?” தெரியதவனைப் போலவே கேட்டான்.

உடனே போனை எடுத்து பார்த்த திவாகர், “ஆமாண்டா.. என் தங்கச்சி சிற்பிகாதான். உனக்கு இன்னும் இவளைப் பற்றி நிறைய விஷயம் தெரியாது. இனிமேல் என்னோடு இருக்கத்தானே போறே. சீக்கிரமே இவளைப் பற்றி நிறைய விஷயம் தெரிஞ்சுக்குவே பாரு” சிரித்தபடி அவன் சாப்பாட்டில் கவனத்தைத் திருப்பினான்.

‘ம்ஹும் எனக்கும் அவளைப் பற்றி நிறைய விஷயம் தெரியாது. அந்த இம்சை இதுவரை என்னிடம் எந்த உண்மையும் சொல்லல. உன் மூலமாக அவளோட கடந்தகாலத்தை தெரிஞ்சிக்கிறேன்’ மனதினுள் நினைத்தவன், திடீரென்று தலையில் தட்டி, “ஷ்.. இதை எப்படி மறந்தேன்” என்றான் கொஞ்சம் சத்தமாகவே.

சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்த திவாகர், “என்னாச்சுடா ஏதாவது பிரச்சனையா?” என்று அக்கறையுடன் விசாரித்தான்.

“ஆமாண்டா உன் தங்கச்சி பிறந்தநாள் அன்றுதான் என் மனைவிக்கும் பிறந்தநாள். இவ்வளவு நேரம் ஞாபகமே வரல.. நானும் அவளுக்கு ஏதாவது கிப்ட் வாங்கணும்” என்றான் முகிலன் தீவிரமான பாவனையோடு.

“ம்ஹும் சீக்கிரம் சாப்பிடு! நீ போய்  கிப்ட் வாங்கியதும் கிளம்பலாம்” திவாகர் சொல்லவே சரியென்று தலையசைத்து அவனோடு கிளம்பினான்.

அவனுக்கு பிடித்த ஒரு பொருளை கிப்ட் ஷாப்பில் வாங்கி பேக் செய்தவன்  மகிழ்ச்சியுடன் வீடு வந்து சேர, “அந்த கிப்ட்டை கொரியர் அனுப்பவில்லையா?” அவன் கேட்டான்.

முகிலனின் முகம் பிரகாசமாக, “கிப்ட் பிரிக்கும்போது பக்கத்தில் இருந்து அவளது மலர்ந்த முகத்தைப் பார்க்கணும்.  இதை நேரில் கொடுத்தால் தான் சரியாக இருக்கும்னு அனுப்பல” வழக்கத்திற்கு மாறாக உற்சாகமாக கூறிவிட்டு அறைக்குள் சென்று மறைந்தான்.

அந்த வார இறுதியில் சிற்பிகாவின் கைகளில் திவாகரின் பார்சல் கிடைக்கவே, ‘தங்கச்சிக்கு சேலை எடுக்க நேரமிருக்கு. நான் அனுப்பும் மெசேஜ் எதுக்குமே பதில் அனுப்ப நேரமில்லை’ என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டபோதும் மனதிற்குள் நிறைவை உணர்ந்தாள்.

பிறந்தநாள் அன்று அந்த சேலையைக் கட்டி போட்டோவை  எடுத்து அனுப்பிய கையோடு, “அவர் எனக்கு வாங்கிய கிப்ட்டை நேரில் வந்து தருவதாக சொல்லி சஸ்பென்ஸ் வச்சிட்டாரு அண்ணா. அவர் எப்போ நேரில் வந்து நான் என்னைக்கு அந்த கிப்ட்டை  பார்ப்பதோ?!” குறுந்தகவல் ஒன்றை தட்டிவிட்டு கல்லூரிக்கு புறப்பட்டாள்.

அவள் வகுப்பிற்குள் நுழைந்ததும், “விஷ் யூ ஹாப்பி பர்த்டே” என்று வாழ்த்தவே, “தேங்க்ஸ்டி” என்றாள்.

அன்று கிளாஸ் ஆரம்பிக்கும் முன்பு, “அண்ணா உனக்கு போன் செய்து விஷ் பண்ணினாரா?” என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தாள்.

தன் தோழியை முறைத்த புவனா, “அவர்தான் போன் செய்யல. நீயாவது போன் பண்ணி சண்டை போடலாம் இல்ல.  இவ்வளவு அன்பை மனசில் வச்சிக்கிட்டு அதை அவரிடம் எதுக்காக மறைக்கிற என்று எனக்கு சத்தியமாக புரியல” என்று புலம்பினாள்.

அவளின் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்த சிற்பிகா, “அவரிடம் தான் தாழ்ந்து போகக்கூடாது என்ற ஈகோதான். திருமணமான நாளே விவாகரத்து பற்றி பேசினார். அது என்னை எவ்வளவு பாதிச்சது என்று அவருக்கு தெரியாது” என்று இடைவெளிவிட்டு,

“இந்த ஈகோ இல்லையென்றால் எல்லோரின் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும். அவர் மறுபடியும் இந்தியா வந்து என்னை விரும்புவதாக சொல்லட்டும் அப்போது யோசிக்கலாம்” அடுத்து படிக்க வேண்டிய புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கினாள்.

வாழ்க்கையில் காலமும், நேரமும் யாருக்காகவும் நிற்பதில்லை. நாட்கள் மாதங்களாகி வருடங்களாக உருண்டோடியது. நேற்றுதான் முகிலன் வெளிநாடு சென்றது போல தோன்றியது. ஆனால் அதற்குள் இரண்டு ஆண்டுகள் மயமாக மறைந்து போனது.

இதோ இவளும் ஒரு டிகிரியை வெற்றிகரமாக முடித்துவிட்டு லா காலேஜில் அப்ளிகேஷன் போட்டுவிட்டு கவுன்சிலிங் நாளுக்காக காத்திருந்தாள். இந்த இரண்டு ஆண்டுகளில் முகிலனின் வீட்டினர் யாருமே அவளிடம் பேசுவது இல்லை.

நிரஞ்சன் – மிருதுளா இருவரையும் அடிக்கடி கோவிலில் பார்க்க நேர்ந்தாலும், அவர்களும் அளவோடு பேசிவிட்டு நகர்வதால் முகிலன் இந்தியா வரவில்லை என்ற தகவலைத் தவிர மற்ற எந்த விசயமும் தெரியாமல் போனது.

விடுமுறையில் இருப்பதால் பார்ட் டைம் ஜாப்பை ஃபுல் டைமாக மாற்றிக் கொண்டாள். அதுமட்டும் இன்றி சிற்பிகாவின் காந்த குரலுக்கு தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியிருந்தது. அந்தளவிற்கு நீங்காத நினைவுகள் நிகழ்ச்சி வழியாக மக்களின் மனதில் இடம்பிடித்திருந்தாள்.

அன்றும் வழக்கம்போலவே எப். எம். ஸ்டுடியோவில் வந்து வேலையைக் கவனிக்க தொடங்கினாள். அவள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழக்கும் நேரத்தில், “இன்னைக்கு நீங்காத நினைவுகளில் காதலன் ஆர் காதலியின் பிரிவு என்ற டாப்பிக்கில் பேச சொன்னாங்க சுஜாதா மேடம்” மஞ்சுளா தகவலை கூறிவிட்டு நகர்ந்தாள்.

அவள் சொன்னதைகேட்டு மனம் மீண்டும் அவனை நோக்கி பயணிக்க, சட்டென்று மனதிற்கு கடிவாளமிட்டு நிகழ்ச்சியில் கவனத்தை திருப்பினாள்.

“ஹாய்.. ஹாய்.. நீங்காத நினைவுகள் நிகழ்ச்சியில் இன்றைய டாப்பிக் என்ன பேச போறோம் என்று ரொம்ப ஆவலாக எதிர்பார்த்துட்டு இருப்பீங்க. மனசு முழுக்க காதல் இருந்தும் அதை சொல்லாமல் பிரிந்து சென்ற லவ் ஜோடிகள் பற்றி பேசலாம்னு தோணுச்சு.. அதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர்” என்று இலக்கத்தை கூறி பாடலை ஒலிக்கவிட்டாள்.

‘பூங்காற்றிலே உன் சுவாசத்தை’ பாடல் ஒருபக்கம் காதில் தேனாய் பாய அடுத்து சொல்ல வேண்டிய கவிதையை அவசரமாக எழுதினாள்.

அந்த பாடல் முடிந்ததும் நிகழ்ச்சியில் இணைந்தவள், “இன்றைய நிகழ்ச்சியில் நுழையும் முன்பு.. ஒரு கவிதையோடு தொடங்கலாம்..

கானல் நீராக மாறிய

என் காதலைக் கண்டுபிடிக்க

நீ நடந்து சென்ற பாதையில்

எனது காலடி சுவடுகளை தேடுகிறேன்..

கிடைக்காத காதலை நினைத்து

கலங்கி நிற்கிறேன்..

தொலைந்து போன காதலை

மீட்டெடுத்து உயிர் தர வாராயோ..” அவள் இங்கே உணர்ச்சிகளில் பிடியில் சிக்குண்டு தவித்த இதயத்துடன் மக்களின் மனதை வசியம் செய்ய அவளது குரலை ரெகார்ட் செய்தான் ராகுல்.

பிறகு, “என் தங்கச்சி உன்னை நினைச்சு காதல் மழையாய் பொழியறா.. அதில் நனைய நீதான் இங்கே இல்ல.. அட்லிஸ்ட் அவ வாய்ஸ் கேட்டு மனசை தேத்திக்கோ” நக்கலோடு முகிலனுக்கு குரல் பதிவை அனுப்பி வைத்தான்.

இந்த இரண்டு ஆண்டுகளில் முகிலனின் திருமண வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றமும் வரவில்லை. அவனது திறமையைக் கண்ட நிறுவனம் அடுத்தடுத்து ப்ராஜெக்ட்டை அவனிடமே கொடுக்க அதை முடித்து தருவதில் நாட்கள் மின்னல் வேகத்தில் பறந்தது என்று சொல்லலாம்.

இதற்கிடையே வீட்டினருடன் போனில் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள, பலமுறை தாயார் அவனை மறுதிருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியும் அதை காதிலேயே வாங்காமல், “அதெல்லாம் நான் இந்தியா வந்தபிறகு பேசிக்கலாம் அம்மா” என்று சொல்லியே நாட்களை கடத்தினான்.

அவன் பிடிகொடுக்காமல் பேசுவதைக் கண்ட சதாசிவம் மட்டும் மௌனம் சாதித்தார். அவருக்கு தெரியும் மகனின் மனதில் சிற்பிகாவைத் தவிர யாருக்கும் இடமில்லை என்று! அதனால் அவனிடம் மறுதிருமணம் பற்றி பேச்சே எடுக்காமல் இருந்தார்.

அன்றும் அதுபோல வீட்டில் இருந்தபடி இருவரும் லேப்டாப்பில் வேலை செய்யும்போது திவாகர் அறியாமல், ராகுல் அனுப்பிய குறுந்தகவல் பார்த்து அந்த குரல் பதிவை கேட்டு ரசித்தான்.

“அடிப்பாவி இவ்வளவு லவ்வை மனசில் வச்சுகிட்டுதான் என்னை இன்னமும் சுத்தலில் விடுகிறாயா? ம்ஹும்.. நீ உன் ஆசைப்படி வக்கீல் ஆனபிறகு இந்தியா வந்து உன்னை கவனிச்சுக்கிறேன். இம்சை கூட இருக்கும்போது சொல்லாத காதலை எப்.எம்.பில் ஊரே கேக்கும்படி சொல்லிட்டு இருக்கிறாளே..” என்று அவன் அறைக்குள் தனியாக புலம்பினான்.

அவனது சத்தம்கேட்டு எழுந்து வந்த திவாகர், “என்னடா பைத்தியம் முத்திடுச்சா? பொண்டாட்டியை நினைச்சு இப்படி தனியாக உட்கார்ந்து புலம்பிட்டு இருக்கிற..” என்ற கேள்வியுடன் அறையின் வாசலில் நின்று கேலி செய்தான்.

திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்த முகிலன் வேறு எங்கோ பார்த்தபடி பின்னதலையை வருடி, “நாங்க இருவரும் சேர்ந்து இருந்தபோது எதுக்கு எடுத்தாலும் கோபத்தில் எரிந்து விழுவேன். இப்பவெல்லாம் அது எங்கே போச்சுன்னு யோசிச்சிட்டே உட்கார்ந்து இருக்கேன்” என்றவன் முகம் பிரகாசமாக இருந்தது.

இந்த இரண்டு வருடங்களில் முகிலன் குணம் ஓரளவு தெரியும் என்றபோதும், கணவன் என்ற நிலையில் அவனையும் அறியாமல் சிதறவிடும் வார்த்தைகள் நினைத்து அடிக்கடி அவனை கேலி செய்வது வழக்கமான ஒன்றுதான்.

இன்றும் அதுபோலவே, “ம்ஹும் இந்தியா வந்தால் கண்டிப்பா என் தங்கச்சியைப் பார்த்து நீ இங்கே செய்த சேட்டையை சொல்லணும்டா” என்றான் சிரித்தபடி.

“உன் தங்கச்சியிடம் தானே தாரளமாக சொல்லுக்கோ. அவளால் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் அங்கிருந்திருந்தால் கட்டாயம் படிப்பை பாதியில் நிறுத்தும்படி ஆகியிருக்கும். அதுக்கு பயந்தே வெளிநாடு கிளம்பி வந்தேன் தெரியுமா?” அவனது விளக்கத்தில்,

“அடப்பாவி இது தெரியாமல் என் தங்கச்சி அங்கே சோககீதம் வாசிக்கிறாளே.. அவளுக்கு உண்மை தெரிஞ்சிருந்தால் அவளே உன்னை பிளைட் ஏற்றி வெளிநாடு அனுப்பியிருப்பாள். படிக்கின்ற பிள்ளையைத் திருமணம் செய்ய வேண்டான்னு சொன்னால் எவன் கேட்கிறான்” என்றான் நக்கலோடு.

“இது எல்லாத்துக்கும் காரணம் எங்கப்பாதான். நான் சொன்னதைக் கேட்காமல்  கல்யாணம் பண்ணி வச்சாரு. இப்போ பாரு அவளைவிட்டு பிரிந்து இவ்வளவு தூரம் வந்து உட்கார்ந்து இருக்கேன்” அவன் கன்னத்தில் கைவைத்து புலம்ப, திவாகர் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான்.

இன்றுவரை சிற்பிகாவின் கணவன் தானென்ற உண்மையைச் சொல்லாமல் அவனோடு நட்பாக பழகினான் முகிலன். தனக்கொரு நல்ல நண்பன் அமைந்துவிட்ட சந்தோஷத்தில் தன் தங்கையைப் பற்றிய உண்மையை பகிர்ந்தான்.

இப்போதெல்லாம் சிற்பிகாவின் அனைத்து தகவலும் அவனுக்கு அத்துபடி. எந்த நேரத்தில் எப்படி இருப்பாள், அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்ற அனைத்து தகவலையும் விரல் நுனியில் வைத்திருந்தான்.

இன்று அவனிடம் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றே, “ஆமா உன்னை வளர்த்தது பாட்டி என்று சொல்ற.. அப்போ விஜிம்மாவிற்கு உன்னைப் பிடிக்காதா?” என்று கேட்கவே திவாகர் புன்னகை உதட்டில் உறைந்தது.

அவனது முகமாறுதலை கவனித்த முகிலன் எழுந்து வந்து, “ஸாரிடா” என்று தோளில் கை வைத்தான்.

அந்த ஸ்பரிசத்தில் தன்னிலைக்கு மீண்டவன், “நீ நினைக்கின்ற மாதிரி சிற்பிகா என் சொந்த தங்கச்சி இல்லடா” திவாகர் உண்மையைப் போட்டு உடைக்க அதிர்ந்தான்.இதுநாள்வரை சிற்பிகா அவனது சொந்த தங்கை என்றே நினைத்திருந்தான்.

அதிலும் அவள் மீது அவன் வைத்திருக்கும் பாசம் கண்டு, “ஏய் எதில் விளையாடணும் என்று ஒரு அறிவில்லை” என்று கோபத்தில் கத்தினான்.

அவனை ஆழ்ந்து நோக்கி, “நிஜமாகவே நான் சொல்வது உண்மை. எனக்கு அப்பா – அம்மா இல்ல. என்னை படிக்க வைத்து ஆளாக்கியது எல்லாமே என் பாட்டிதான்” என்றவன் அறைக்கு சென்று வரும்போது கையில் சில ஆல்பத்துடன் வந்திருந்தான்.

சோபாவில் உட்கார்ந்து இருந்த முகிலனின் கையில் கொடுத்து, “நான் இன்னைக்கு அவமேல் காட்டும் பாசத்திற்கு முழுக்க காரணமே விஜிம்மாதான். அவங்களுக்கு எப்போதும் நான் ஸ்பெஷல்” என்றபடி மற்றொரு சோபாவில் அமர்ந்தான்.

முகிலன் அமைதியாக அந்த ஆல்பத்தை புரட்டியதில் புதிதாக கட்டபட்ட வீட்டின் முன்பு நின்று எடுத்த போட்டோவை பார்த்ததும், “இந்த போட்டோவில் பார்க்கும்போது விஜிம்மா கன்சீவாக இருக்கிற மாதிரி தெரியுது” என்று தொடங்கினான்.

“ஆமா அவங்களுக்கு ஐந்து மாசம் இருக்கும்போது தான் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் வீடுகட்டி குடிவந்தாங்க. ராஜுப்பா, விஜிம்மாவை லவ் மேரேஜ் செய்தவர். அவங்களுக்கு ஒன்று வேண்டும் என்று கேட்டால் அதை உடனே வாங்கி தருவார். இவங்களோட விருப்பபடி ஆசைபட்டு கட்டிய வீடுதான் இது” என்றவன் விளக்கம் கொடுக்க அதை மெளனமாக உள்வாங்கினான்.

திவாகர் நினைவலைகள் கடந்தகாலம் நோக்கி பயணித்தது.  

Leave a Reply

error: Content is protected !!