YALOVIYAM 11.1
YALOVIYAM 11.1
யாழோவியம்
அத்தியாயம் – 10
சென்னை உயர் நீதிமன்றம்…
அலெக்ஸ் மற்றும் தியாகு குழு இரண்டாவது கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்திருந்த நிலையில், அதன் சாராம்சத்தை ஊடங்களின் செய்திகளுக்காக தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் மதிப்பெண்களை அதிகரிக்க, இந்த முறைகேட்டில் இன்னும் இரண்டு வழிகள் பின்பற்றப் பட்டிருக்கின்றன.
அதில் ஒன்று, கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் மதிப்பெண் ஆவணங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருப்பது. அதாவது இவர்களுக்கு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதன்படி கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் ஓஎம்ஆர் ஷீட்டில் விடைகளை நிரப்பாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அல்லது சரியாகத் தெரிந்த வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க வேண்டும்.
பின் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த பல்கலைக்கழக அலுவலர்கள், அவர்களின் குறைவான மதிப்பெண்ணை அதிகமான மதிப்பெண்ணாகத் திருத்தியிருக்கின்றனர்.
மேலும் தணிக்கையின்(AUDIT) போது மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த மாணவர்களின் ஓஎம்ஆர் ஷீட்டை பெற்று, கூடுதலாகப் போடப்பட்ட மதிப்பெண்ணுக்கு ஏற்றார் போல ஓஎம்ஆர் ஷீட்டில் விடைகளை நிரப்பியிருக்கின்றனர்.
கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் பட்டியலில் இருக்கும் சிலருக்கு, அவர்களின் பெயர் மற்றும் பதிவு எண்ணை பயன்படுத்தி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக அலுவலர்களால் விடைத்தாள் பெறப்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்த ஆதாரம் தரகர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது.
இதேபோல் ஆள்மாறாட்டம் செய்யும் பொழுது தேர்வு அறையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக நுழைவுச் சீட்டில் இருக்கும் ‘பெய்டு ப்ராக்ஸியின்’ புகைப்படம், தேர்வு முடிந்ததும் கல்வியில் பின்தங்கிய மாணவரின் புகைப்படமாக மாற்றப்பட்டிருக்கிறது.
இதற்கு ஆதாரம், பெய்டு ப்ராக்ஸியின் புகைப்படங்கள் உள்ள நுழைவுச் சீட்டுகள், சில தரகர்களிடமிருந்து பறிமுதல் செயப்பட்டிருக்கிறது.
முறைகேட்டில் மற்றொன்று விடைத்தாள்கள் வெளியீடு. குறிப்பிட்ட மாணவர்களுக்கு, அவர்கள் தரும் பணத்தின் அடிப்படையில் விடைத்தாள் லீக் செய்யப்ட்டிருக்கிறது.
இதற்கு உடந்தையாக இருந்த பல்கலைக்கழக அலுவலர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களது பெயர் பட்டியல் வெளியிடப்படும்.
ராக்கெட் லீடர் பிடிபட்டு, அவனிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்து வரும் கடைசி கட்ட அறிக்கையில், முக்கிய குற்றவாளிகளின் பெயர் மற்றும் முறைகேட்டிற்குத் துணைபோனவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும்.
இதுவே இரண்டாவது கட்ட அறிக்கையின் சாராம்சமாகும்.
இதே நாள் மாலையில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுபோன்ற முறைகேட்டுச் செயல்களைப் பல்கலைக்கழகம் ஒருநாளும் அனுமதிக்காது. இதற்குத் துணை போன பல்கலைக்கழக அலுவலர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டதும், அவர்கள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்படுவர் என்பதே அந்த அறிக்கை ஆகும்.
அன்றைய முக்கிய செய்திகள், ஊடங்களின் விவாதப் பொருட்கள், யூடூயூப் காணொளிகளின் பேசுபொருட்கள் என எல்லாமும் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் குறித்து வெளிவந்த இரண்டாவது கட்ட அறிக்கை பற்றியே இருந்தன.
அதிலும் மிக முக்கியமாக பல்கலைகழக அலுவலர்கள் சிலரும் இதற்கு துணை போயிருப்பது, கல்வித்துறை அமைச்சர்களுக்கும் இதில் தொடர்பு இருக்குமா? போன்ற தலைப்புகளில் விவாதங்கள் இருந்தன.
இதன் பின்பு விசாரணை எப்படிப் போகும்? இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? நீதிமன்றம் உத்தரவின் படி தவறான வழியில் பட்டப்படிப்பு வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களிடமிருந்து, அவைகள் திரும்பப் பெறப்படுமா?
அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருப்பதால் கைது நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்படுமா? இப்படி இன்னும் நிறைய கேள்விகள் மக்கள் மனதிலும் வந்திருக்கத் துவங்கியது.
சுருக்கமாக டீக்கடை பெஞ்சில் அமர்ந்து சாமானியனும் பேசும் அளவிற்கு செய்தி பரவியிருந்தது.
பிரபல தனியார் மருத்துவமனை
மற்ற நாளிலிருந்து வேறுபட்டு, இன்றைய தினத்தில் மருத்துவமனை வளாகத்தில் சில ஊடக நபர்கள், கட்சி ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.
‘சூப்பர் டீலக்ஸ்’ அறைப் பிரிவின் வெளியே போடப்பட்டிருந்த குஷன் நாற்காலியில் லதா அமர்ந்திருந்தார். மகள் நிலை குறித்த கவலையில் அழுதபடியே இருந்தார்.
லதா அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி இருந்த லிங்கத்திற்கு, அவரின் கட்சி உடன்பிறப்புகள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.
மருத்துவமனை அறை உள்ளே…
மருத்துவமனை படுக்கையில் சுடர் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவள் எதிரே இரு காவலர்கள் நின்று கொண்டிருந்தனர்.
புருவத்தின் கீழே, கண் இமைக்கு மேலே அடிபட்டிருந்தது. அதற்கு மருந்திட்டு பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது. அதையும் தாண்டி வீக்கம் தெரிந்தது. வலது முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை இருந்த காயத்திற்கு பெரிய கட்டு போடப்பட்டிருந்தது.
நடந்ததைப் பற்றி காவலர் அவளிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். முன்னே பின்னே வந்த வண்டிகளை பற்றிச் சொன்னாள்.
உடனே, “கார் நம்பர் நோட் பண்ணீங்களா?” என்று கேட்டார்.
“ம்ம்ம்” என்று முன்னே சென்ற வண்டி எண்ணைச் சொன்னவள், “பேக்-ல வந்த கார் நம்பர் தெரியலை” என்றாள்.
“ஆக்சுவலா என்ன நடந்தது? எத்தனை பேர் அட்டாக் பண்ணாங்க?”
“ரொம்ப நேரமா பிரன்ட் & பேக்-ல கார் வந்துகிட்டு இருந்தது. ஓவர்டேக் ட்ரை பண்ணேன். பட் அது முடியலை. ஒரு ஸ்டேஜ்-ல டிரைவ் பண்ண முடியாம ஸ்டாப் பண்ணதும், முன்னாடி போன கார்-லருந்து ரெண்டு பேர் இறங்கினாங்க. பின்னாடி பாலோவ் பண்ண கார்-ல இருந்து ஒருத்தன் இறங்கினான்.
ஃபர்ஸ்ட் பயமா இருந்தது. ஸோ என்ன செய்யன்னு தெரியாம நான் கார்-லருந்தே இறங்கவே இல்லை. வந்தவங்க கார் க்ளாஸ்ஸ ஒடைச்சி என்னை அட்டாக் பண்ண ஆரம்பிச்சாங்க. முடிஞ்ச அளவு தடுக்கப் பார்த்தேன். ஆனா அவங்க மூணு பேர். ஸோ என்னால சரியா ப்ரொடெக்ட் பண்ண முடியலை. அதுனாலதான் கைலயும் கண்-லயும் காயம்.
பட் அந்த நேரத்தில அந்தப் பக்கம் வெஹிகிள் வந்ததும், வந்த கார்-லேயே தப்பிச்சுப் போயிட்டாங்க” என தப்பித்து விட்டோம் என்ற தைரியத்தில் தடையின்றி பேசினாள்.
“அடிச்சவங்க யாரு-ன்னு அடையாளம் காட்ட முடியுமா?”
“ம்ம்! பார்த்தா சொல்லுவேன்”
“மர்டர் அட்டெம்ப்ட் மாதிரி தெரியுதா? இல்லை, அட்டாக் மட்டும்தான் பண்ண வந்தாங்களா?”
“அட்டாக் மட்டும்தான் பண்ண வந்திருப்பாங்க. அது ஸூயரா சொல்ல முடியும்”
“ஏன் அட்டாக் பண்ணாங்கன்னு தெரியுமா?”
மதி மற்றும் வேறு சில காரணங்களையும் மனதில் வைத்துக் கொண்டு, “தெரியலை” என்றாள்.
“ஓகே! அப்பாகிட்ட பேசிக்கிறேன்” என்று வெளியில் சென்றார்.
வெளியில் வந்த காவலர் லிங்கத்தின் அருகில் சென்று, “சார்! அவங்க கார் நம்பர் நோட் பண்ணியிருக்காங்க. அதை வச்சிப் பார்க்கலாம்” என்றார்.
“ம்ம்”
“எதுக்காக அட்டாக் பண்ணாங்கன்னு தெரியலைன்னு சொன்னாங்க. உங்களுக்கு யார் மேலயாவது டவுட் இருக்கா?”
‘ஏன் இப்படிச் சொல்றா?’ என்று புரியாமல், ‘இல்லை’ என்று தலையசைத்தார்.
சுடரை மருத்துவமனையில் அனுமதித்தவர்களிடம், “அவங்களைப் பிடிக்க நீங்க ட்ரை பண்ணலையா?” என்று காவலர் கேட்டார்.
“நாங்க பைக்-அ நிறுத்தினதும், அவங்க எஸ்கேப் ஆகிட்டாங்க” என்றதும், லிங்கத்திடமும் அவர்களிடமும் மேலும் சில தகவல்கள் சேகரித்துவிட்டு காவலர் சென்றார்.
செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா
மாலை ஆறு மணி-க்கு மேல் சென்னையிலிருந்து செங்கல்பட்டிற்கு தியாகு திரும்பியிருந்தார். இளைப்பாறிவிட்டு வரவேற்பறையில் அமர்ந்து திலோவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஒருபக்கம் டிவி ஓடிக் கொண்டிருந்தது. அடிக்கடி அதைப் பார்ப்பதும் திலோவுடன் பேசுவதுமாக நேரம் கடந்தது.
7:00 மணிக்கு மேல் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்த யாழ்மாறன், அப்பாவைப் பார்த்ததும் அப்படியே அவர் அருகில் உட்கார்ந்து, “எப்போ-ப்பா வந்தீங்க?” என்று கேட்டான்.
“அரௌன்ட் 6” என்று சொல்லியதும், அவனின் களைத்த தோற்றத்தைக் கண்டு, “மாறன் காஃபி?” என திலோ கேட்டதற்கு, “ம்கூம்! பசிக்குது-மா. ரெப்ஃபிரேஷ் பண்ணிட்டு வர்றேன். சாப்பிடலாம்” என எழுந்தான்.
அக்கணம் டிவியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த ஓவியச்சுடர் தாக்கப்பட்டச் செய்தியைக் கேட்டு அசையாமல் அதிர்ந்து நின்றான்.
மகனின் முகமாற்றத்தைக் கண்ட தியாகு, “மாறன் என்ன?” என்று கேட்டதும், “சுடர்” என டிவியைக் காட்டினான்.
“உனக்கு அந்தப் பொண்ண தெரியுமா?” என்று தியாகு கேட்டதும், “ம்ம்” என்றவன், செய்திகளைப் பார்த்தபடியே, “நான் லவ் பண்ற பொண்ணு” என்றான்.
திலோவும் தியாகுவும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்தனர். பின் இருவரும் ஒரு சேர மாறனைப் பார்த்தனர்.
சற்று நிமிடங்கள் அசைவில்லாமல் நின்றவன், அம்மா-அப்பாவிடம் தான் சொன்னது விளங்கியதும், “சாரி… இப்படி ஒரு சிச்சுவேஷன்-ல சொல்லுவேன்-னு எக்ஸ்பெக்ட் பண்ணலை” என மீண்டும் அமர்ந்து கொண்டான்.
மூவருக்குள்ளும் நீளமான ஒரு அமைதி நிலவியது. இலகுவாக பேசிக் கொள்பவர்களுக்கிடையே இதுவரை இருந்திடாத ஒரு இறுக்கம் வந்திருந்தது.
தியாகு பேசுவது போல தெரியவில்லை என்றதும், “ஏன்…?” என்று ஆரம்பிக்கப்போன திலோ, அது சரியான கேள்வியல்ல என நினைத்து, “எப்படி அந்தப் பொண்ணு தெரியும்?” என்று கேட்டார்.
“ஒரே காலேஜ்-ம்மா” என்று மட்டும் சொல்லி, அப்பாவைப் பார்த்து, “ப்பா” என்றதுமே, “இது சரியா வராது மாறன்! விட்ரு” என்று சொல்லி தியாகு எழுந்ததும், மாறனும் எழுந்தான்.
“ப்பா! நான் சொல்றதை… ” என பேச ஆரம்பிக்கையில், “இது சரி வராது மாறன்” என்று மீண்டும் அழுத்தமாகச் சொன்னார்.
“ஃபர்ஸ்ட் நானும் அப்படித்தான் நினைச்சேன். பட்…” என மாறன் முழுதாய் சொல்லி முடிக்கும் முன்னே, “இதைப் பத்திப் பேச வேண்டாம்” என்று தன் மறுப்பை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
“ஏன்? ஏன் பேசக் கூடாது?”
கோபத்துடன் “பாரு” என தியாகு டிவியை காண்பித்து, “டுடே’ஸ் பிரேக்கிங் நியூஸ் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஸ்கேம்தான். பட் அதைப்பத்தி பேசாம… இதைப் பத்திப் பேசறாங்க. இஸ் திஸ் ஸோ இம்பார்ட்டன்ட்?” என்று அவனிடமே கேட்டார்.
என்ன சொல்வான்? என்ன சொல்ல முடியும்? எதுவும் சொல்ல முடியாது. எனவே அமைதியாக நின்றான்.
“ஐ திங்க் இதெல்லாமே டிராமா! ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி… ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற ட்ராமா. இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் கேஸ்-லருந்து மக்களைத் திசை திருப்பிறாங்க” என்று எரிச்சலுடன் சொன்னார்.
மேலும், “ஓகே! அவங்க அரசியல் எதுக்கு நம்ம வீட்டு-ல?” என்று அழுத்தமாய் கேட்டவர், “இது சரி வராது! இது வேண்டாம்” என மாறனிடம் தெளிவாகச் சொன்னார்.
அடுத்த நொடியா? இல்லை, அதனினும் குறைவான நொடியிலா? சரியாகக் கணிக்க இயலவில்லை! ஆனால், “அது முடியவே முடியாது” என்று மாறன் சொல்லியிருந்தான்.
“ஏன்? ஏன் முடியாது? ‘நானும் ஃபர்ஸ்ட் அப்படித்தான் நினைச்சேன்-னு’ இப்ப கூட சொன்னியே? அப்புறமென்ன?”
“ஆமா நினைச்சேன். பட் அதுக்கப்புறம்…” என ஒரு வேகத்தில் ஆரம்பித்து, ‘எப்படிச் சொல்ல?’ என்று தவித்தவனிடம், “அதுக்கப்புறம் என்ன?” என்று தியாகு தயக்கமின்றி கேட்டார்.
அந்தக் கேள்வியில் எரிச்சலடைந்தவன், “ம்மா! இதெல்லாம் எப்படி-ம்மா எக்ஸ்பிளேன் பண்ண முடியும்?” என்று கேட்டு அம்மாவிடம் தனக்காக ஆதரவு தேடினான்.
உடனே, “தியாகு வெயிட். பொறுமையா பேசுங்க” என்ற மனைவியிடம், “திலோ! முதல அவனை அந்தப் பொண்ணுகூட பேச வேண்டாம்-ன்னு சொல்லு” என்று கோபத்துடன் சொன்னார்.
“அதெல்லாம் முடியாது-ம்மா. ஏற்கனவே அப்படி இருந்திருக்கேன்! அப்படி இருந்தா, சுடர் எப்படிக் கஷ்டப்படுவான்னு எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் எனக்குள்ள பெரிய பெயின் கிரியேட் பண்ணும்.
நான் நானாவே இருக்க மாட்டேன்! எல்லா செஞ்சிக்கிட்டு இருந்தாலும் எதுவுமே செய்யாத மாதிரி ஒரு பீல் இருக்கும். ஒரு எம்ட்டிநெஸ் வரும்-மா” என்று தன் காதல், காதலி பற்றிச் சொன்னான்.
மகனின் பேச்சைக் கேட்ட தியாகு, “இவன் உளறிக்கிட்டு இருக்கான் திலோ” என்று விட்டேற்றியாகச் சொன்னார்.
அப்பாவின் பேச்சில் எழுந்த கோபத்தில், “உளறலை-ம்மா! உள்ளதைச் சொன்னேன்” என்று மாறன் குரலை உயர்த்தினான்.
“திலோ! எதுக்குத் தேவையில்லாம பேசிக்கிட்டு? இந்தப் பொண்ணு வேண்டாம். நீ வேற பொண்ணு பாரு” என்று தியாகு எளிதாக முடிவெடுத்தார்.
“வேற பொண்ணா?” என்று எரிச்சலுடன் கேட்டவன், “ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோங்க” எனத் தீர்மானமாய் பேசப் போகும் குரலில் சொல்லவும் திலோவும் தியாகுவும் மகனைக் கூர்ந்து பார்த்தனர்.
“சுடர் என்கிட்ட எடுத்துக்கிற உரிமையை வேற எந்தப் பொண்ணுக்கும் கொடுக்க முடியாது. கொடுக்கவும் மாட்டேன். அன்ட் நான் சுடர்கிட்ட பேசற மாதிரி வேற எந்தப் பொண்ணுக்கிட்டயும் பேச முடியாது. பேசவும் மாட்டேன். எனக்கு சுடர்தான்! சுடர் மட்டும்தான்!” என்று தெள்ளத் தெளிவாய் சொன்னான்.
அப்படிச் சொல்லிவிட்டு ஆவேசமாகச் அறைக்கு செல்ல வேண்டுமென நினைத்தான். ஆனால் அது மரியாதைக்குரிய செயலாக இருக்காது என்ற எண்ணத்தில் அப்படியே நின்றான்.
ஆனால் தியாகு, “இவன்கிட்ட பேசறதே வேஸ்ட் திலோ” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றதும், சுடருக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே மாறனும் அவனது அறைக்குச் சென்றான்.
கணவரின் பின்னே வந்த திலோ, “ஏன் இவ்ளோ கோபம் தியாகு?” என்றார்.
“உனக்கும் புரியலையா திலோ?” என்று இயலாமையுடன் கேட்டவர், “இது அவன் கெரியரை ஸ்பாயில் பண்ற விஷயம்!” என்றதும், திலோ விழிகள் விரித்துப் பார்த்து நின்றார்.
“அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணா, இவனோட முடிவுகளை ‘மாமனார் கட்சிக்கு ஃபேவரா நடக்கிறான்னு’ எதிர்க்கட்சி அரசியலாக்க பார்ப்பாங்க! இவன் மேல ஒரு கட்சியோட சாயம் விழும்!
அன்ட் இப்போ எடுக்கிற மாதிரி தன்னிச்சையா முடிவுகளை அப்பவும் எடுக்க முடியுமா?
அந்தப் பொண்ணு, அவ அப்பா கட்சிக்கு எதிரா எதுவும் பண்ணாதீங்கன்னு இவன்கிட்ட கேட்க மாட்டா-ன்னு என்ன நிச்சயம்? அப்ப இவன் என்ன பண்ணுவான் திலோ?
இவன் கண்டிப்பா அப்படிப் பண்ண மாட்டான். அது அந்தப் பொண்ணுக்கும் இவனுக்குமான ரிலேஷன்ஷிப்-அ பாதிக்காதா?! பெர்சனல் லைஃப்… கெரியர் லைஃப் ரெண்டும் ஸ்பாயில் ஆயிடும்!
சப்போஸ் அந்தப் பொண்ணே அவ அப்பா கூட சேர்ந்து பாலிட்டிக்ஸ்-ல இறங்கிட்டா என்ன செய்ய? பார்க்கிற வேலையை விட்டுட்டு, இவனும் அந்தப் பொண்ணு கூட சேர்ந்து கட்சி வேலை பார்ப்பானா? இதுக்குத்தான் படிக்க வச்சோமா?” என மறுப்பதற்கான காரணங்களை விளக்கிச் சொன்னார்.
பிறகும் தாளாமல், “உனக்கு நியாபகம் இருக்கா திலோ? காலேஜ் லாஸ்ட் டே எவ்வளவு ஆசையா இவனைக் கூட்டிட்டுப் போய் ஐஏஎஸ் கோச்சிங் சென்டர்-ல சேர்த்தோம்.
அதுக்கப்புறமும், தே வே ஹி கிராக்டு தி எக்ஸாம்! டாப் ரேங்க்! மாக் இன்டர்வியூ-ல அசத்தினது! எந்த பார்ட்டிக்கும் ஃபேவரா நடக்காத சிவில் சர்வன்ட். இப்பவும் இந்த ஸ்கேம் விசில் ப்லோவர்!
அவனை நினைச்சி எவ்ளோ பெருமையா இருந்தேன். ஆனா பர்சனல் லைஃப்-ல இப்படியொரு முடிவு எடுப்பான்னு நினைச்சுக் கூட பார்க்கல” என தன் ஆதங்கத்தைச் சொல்லி, அமைதியாகினார்.
திலோவிற்கு, கணவரின் ஆதங்கம் புரிந்தது. இருந்தும் இந்த விடயத்தில், மகனிற்காக அவரிடம் பேசி, சம்மதிக்க வைக்கலாமா? என்றும் யோசித்தார்.
இதே நேரத்தில் சுடர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில்…
லேசாகச் சாய்ந்து அமர்ந்திருந்த மகளிற்கு, லதா ஊட்டிக் கொண்டிருந்தார். அக்கணம் உள்ளே வந்த லிங்கம், “உன் ஃபோன்” என சுடரின் கைப்பேசியைக் கொடுத்தார்.
இடக்கையால் வாங்கிக் கொண்டவளிடம், “கவனமா இருன்னு சொன்னேன்-ல? அப்புறம் ஏன் தனியா போன?” என்று கண்டிக்கும் தொனியில் கேட்டார்.
“அப்பா, அந்த வீடியோ அப்லோட் பண்ணி நிறைய நாளாச்சு. போட்டவுடனே பிரச்சனை வரலை… அப்புறம் நான் எடிட் பண்ணிக் கொடுத்த பையனும் இப்படின்னு எதுவும் சொல்லலை. அதான்…”
“அந்தப் பையன் சொல்லலைன்னா? நீ அவன்கிட்ட ‘சேஃபா இருக்கியா? எதும் பிரச்சனையா-ன்னு?’ கேட்டிருக்க வேண்டாமா?”
‘கேட்டிருக்கலாம்’ என்று தோன்றியதால், அமைதியாக இருந்தாள்.
“சரி! போலீஸ் கேட்டப்போ ஏன் எதுவும் சொல்லலை?” என்று அடுத்த கேள்வி கேட்டார்.
“ப்பா! அதுக்கு காரணம் இருக்கு. நான் எடிட் பண்ணிக் கொடுத்தது யாருக்கும் தெரியாது. அந்தப் பையன் எதுவும் சொல்ல மாட்டேன்-னு இருக்கான். நான் மட்டும் இப்படிச் சொன்னா, அது பெரிய இஸ்யூ ஆகும்.
கேஸ் டைவர்ட் ஆகும். இன்வெஸ்டிகேஷன் ப்ராப்பரா போய்க்கிட்டு இருக்குப்பா. அதை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன். அதோட எனக்கு எதுவும் ஆகலை-ல? இப்படியே போகட்டுமே”
“ரொம்ப ஈஸியா சொல்ற!? எனக்கு எப்படி இருக்கு-ன்னு தெரியுமா?” என வருந்தியவர், “இனிமே எங்க போகணும்னாலும் அப்பா-கிட்ட சொல்லு. நான் அரேஞ் பண்றேன்” என்றார்.
இருவரின் பேச்சின் இடையே, “என்ன பேசறீங்க ரெண்டு பேரும்?” என்று லதா புரியாமல் கேட்டதும், “அம்மா உங்களுக்கு இது தெரியாது” என்றாள் சுடர்.
“லதா! உனக்கும்தான். இனிமே எங்கேயும் தனியா போறேன்னு சொன்னா, விடக்கூடாது” என்று மனைவியிடமும் லிங்கம் சொன்னார்.
“எப்பவும் ராஜா-தான் கூட்டிட்டுப் போவான். இந்த தடவை என்னமோ தனியா போறேன்னு சொன்னா… சரி பகல்தான-ன்னு நானும் ஒன்னும் சொல்லலை” என்றார்.
பிறந்தநாளுக்குப் பின் சுடர் ராஜாவிடம் பேசவில்லை. அவனும் பேசவில்லை. வந்தும் பார்க்கவில்லை. அதுவே சுடருக்கு மனவேதனையைத் தந்தது. கூடவே இன்று இன்னும் ராஜா வராமலிருப்பது வேதனையைக் கூட்டியது.
அதே மனநிலையுடன் சாப்பிடுகையில், “சுடர், மாறா-ங்கிற பேர்லருந்து கால் வந்தது” என்று லிங்கம் மகளைப் பார்த்ததும், சுடர் திருதிருவென முழித்தாள்.
அப்பாவையும் மகளையும் பார்த்த லதா, “யாரு அது?” என மகளிடம் கேட்டார்.
முதலில் ‘சொல்லவா? வேண்டாமா?’ என்ற தயக்கத்தில் இருந்தாள். பின், சொல்லிவிடலாம் என நினைத்து, “ம்மா! அது மாறன்! முழுப்பேர் யாழ்மாறன். செங்கல்பட்டு டிஸ்ட்ரிக்ட் கலெக்டர். நாங்க லவ் பண்றோம்” என்றாள்.
“இது எப்போ-லருந்து?” என்று லதா குரல் உயர்த்தினார்.
“காலேஜ்-லருந்து”
லதா ஒருமாதிரி பார்த்ததும், “ம்மா! மறைக்கணும்னு நினைக்கலை. படிப்பு முடிஞ்சதும் சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள ராஜாண்ணா விஷயம்… அவங்க கொஞ்சம் சாரியாகட்டும்னு நினைச்சேன்” என்று அப்பா, அம்மாவை மாறி மாறி பார்த்துச் சொன்னாள்.
“ராஜா-க்குத் தெரியுமா?” என்று கேட்டதும், “தெரியும்-மா” என்றாள்.
ஒன்றுமே சொல்லாமல் நின்ற கணவரிடம், “நீங்க என்னங்க ஒன்னுமே சொல்ல மாட்டிக்கிறீங்க?” என்றதும், “இன்னைக்கு இருக்கிற மனநிலையில எதையும் யோசிக்க முடியலை” என்றார்.
‘நீங்களாவது ஏதாவது சொல்லுவீங்களா?’ என்று அம்மாவைப் பார்த்தவளிடம், “அப்பா முடிவு சொல்லட்டும். அப்புறம் ராஜாகிட்ட பேசிட்டுப் பார்க்கலாம்” என்றார்.
அதற்குமேல் மூவருக்குள்ளும் அமைதிதான் நிலவியது. சுடர் சாப்பிட்டதும், லிங்கம் மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொடுத்தார். பின், “படுத்து ரெஸ்ட் எடு” என்றதும், படுக்காமல் அப்படியே இருந்தாள்.
“என்ன சுடர்?”
“ஃபோன் பேசணும்-ப்பா” என்றாள்.
“இந்த நிலைமையில பேசணுமா? ரெஸ்ட் எடு” என்று லிங்கம் சொன்னதும், “அதான?! பேசாம படு” என்று லதாவும் சொன்னார்.
“கொஞ்சம் நேரம் பேசிக்கிறேனே?” என்று சுடர் கெஞ்சியதும், சிறிது நேரம் லிங்கம் அமைதியாக இருந்தார். பின், “வா லதா” என்றதும், இருவரும் வெளியே சென்றனர்.
உடனே மாறனுக்கு அழைத்தாள்.