EUTV 1

EUTV 1

1

 

         “நீ பார்த்து என்னை ரசிச்சா…

          நான் காட்டு தீயா எரியுறேன் டா…”

என்ற பாடல் செவி வழி நுழைந்தவுடனே தனது காரில் ஒடிக்கொண்டிருந்த அந்த அலைவரிசையை சட்டென்று அமர்த்தினான் கணிதன்.

“இடியட்… இடியட்…இர்ரெஸ்பான்சிபிள் இடியட்” என்று அவளை திட்டியவாறே காரை அந்த தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஒரமாக பார்த்து நிறுத்தினான். காரிலிருந்து கீழேறங்கி இயற்கை காற்றை சுவாசித்த பிறகு தான் மனநிலை சீராகியது போல் இருந்தது. மனமும் நேராக சிந்திக்க ஆரம்பித்தது.

“இந்த பாட்டு கேட்டு நான் எதுக்கு ரியாக்ட் ஆகனும்? இட்ஸ் ஜஸ்ட் அ சாங்க் கணி. அன்ட் ஷீ இஸ் ஜஸ்ட் பாஸிங் கிளவுட் இன் யுவர் லைப். ஷீ இஸ் நாட் வொர்த் பார் யுவர் ஆங்கர்…ஜஸ்ட் லீவ் ஹர் தாட்ஸ் இடியட்…” என்று தன்னையை திட்டிக் கொண்டிருந்தவனுக்கு வாட்ஸாப்பில் செய்தி வந்தற்க்கான ஒலி எழுப்ப அதை எடுத்து என்னவென்று பார்த்தவனுக்கு இறங்கிய கோவம் மீண்டும் மேலெழ ஆரம்பித்தது.

இதிலும் அவள் தான். அடர் பச்சை நிற லாங்க் கவுன் அணிந்திருந்தாள். அவளது நிறத்திற்கும் அது நன்றாக பொருந்தி போயிருக்க அவன் கண்களுக்கே அவள் கியூட்டாக தான் தெரிந்தாள். எக்ஸ்ட்ரா கியூட்னெஸ்சுடன் மைக்கை இறுக்கமாக பிடித்துக்கொண்டு எதோ ரஹ்மான் பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தாள்.

“மூஞ்சைப்பாரேன் நல்லா ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி. இதை பார்த்து தான் டி ஏமாந்துட்டேன். இர்டெட்டிங்க் ####” என்று கணிதன் கெட்ட வார்த்தையில் அள்ளி தெளிக்க ஆரம்பிக்க அங்கு வீசி சென்ற காற்றும் டேய் கணிதா நீயாப்பா இது என்று கேட்பது போன்று ஒரு நொடி நின்று மீண்டும் வீச ஆரம்பித்தது.

“பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு மூஞ்சி மேல சொல்லிருக்கனும் டி மூஞ்சி மேல…” என்று அவன் அவள் நிழலுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது நியாஸ்தன் மனசாட்சி ‘கணம் கோட்டார் அவர்களே…’ என்றவாறு ஆஜராகி அவள் தன்னை தனது மூஞ்சிக்கு மேலயே தன்னை நிராகரித்த நினைவுகளை அவனுக்கு ஒளிப்பரப்ப,

“ஆமாம் அவள் வேணாம்னு தான் சொன்னா? அவ சொன்னது சீரியஸாவா இருந்தது? எதோ விளையாடுறானு நினைச்சேன்.” இவன் மட்டுமில்லை நூற்றில் தொண்ணூறு சதவீதம் பேருக்கு அவள் பேசுவது ஜஸ்ட் லைக் தட் தான். சீரியஸாகவே எடுத்து கொள்ள மாட்டார்கள்.

 அதற்கு முக்கிய காரணம் தத்திதத்தி அவள் தொட்டிருந்த ஐந்தே காலடி உயரம், அவளது என்ன நடந்தா எனக்கென்ன ஆட்டியூட், மிகவும் அப்பாவி தனமான அந்த முகம், முக்கியமாக அவளது கீச் குரல் என்று அனைத்தும் அவள் ஒரு விசயத்தை வலியுறுத்துகிறாள் என்பதையே யாருக்கும் புரியவிடாது. ஒரு குழந்தை தங்களிடம் சாப்பாடு வேண்டாம் என்பதை கோவத்துடன் சொல்வது போன்று தான் இருக்கும்.

கணிதன் இவளது நிராகரிப்பை பெரிதாக எடுத்து கொள்ளாதற்கு காரணம் முதல் தடவை தன்னை பார்த்த பொழுது விரிந்த கண்களைப் போன்றே தன்னை பிடிக்கவில்லை என்று சொல்ல வந்த பொழுதும் விரிந்து ரசனையுடன் தன்னை பார்த்த கண்களால் தான்.

கணிதனிற்கு மலர்விழி மீது இன்னும் பிடித்தமா? என்றால் சத்தியமாக கிடையவே கிடையாது என்பது தான் அவனது வாதம். இது அவனுக்கும் அவனின் ஆண் என்ற அல்டர் ஈகோவிற்கும் நடக்கும் சண்டை அவ்வளவு தான் என்பான். உண்மையும் கூட அதான்.

காரை இயக்க ஆரம்பித்தவனுக்கு அவனை அறியாமலே மீண்டும் அவனது எண்ணவோட்டங்கள் அவளை தேடி சென்றிருந்தது.

அதே நேரத்தில் ஒரு ஆடவனின் அருகில் அவனின் தோள்மீது சாய்ந்திருந்த மலர்விழியின் எண்ணங்களும் இவனை நினைத்து பின்னோக்கி சென்றது.

***

           “ரொம்ப பண்ணாதே மலரு… பொண்ணு தானே பார்க்க வாராங்க. இன்னைக்கேவா உன்னை தாலிக்கட்டி தூக்கிட்டு போகப் போறாங்க?” என்று கார்த்திகா தனது பெரியப்பாவின் மகளான மலர்விழியிடம் பொறிந்துக் கொண்டிருந்தாள்.

              “டி… வர மாப்பிள்ளை காலேஜ் ப்ரொபஸராம்… காலேஜ் முடிச்சு ரெண்டு வருசமாகியும் இன்னும் ஐஞ்சு அரியர் வைச்சுக்கிட்டு திரியுறேன். என்னை போய்…” என்று மலர்விழி இழுத்து நிறுத்த அவளை பெண்பார்க்கும் நிகழ்வுக்காக தயார்படுத்திக்கொண்டிருந்த  அவளது அத்தைமகள் ஈஸ்வரி, அவளது சித்தப்பா மகள்கள் கார்த்திகா,  ஷிவானி மூவருக்கும் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது.

         ஏனென்றால் மலர்விழியின் படிப்பறிவு என்பது அவர்களது ஏரியாவிற்க்கே மிகவும் பிரசித்திபெற்ற ஒன்றாகும். மலர்விழிக்கும் படிப்புக்கும் உள்ள உறவானது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் இருக்கும் நட்பைப் போன்றது. இருவருக்கும் ஒருத்தரையொருத்தர் ஆகவே ஆகாது.

                ஒன்றாம் வகுப்பிலே பள்ளியை கட்டடித்துவிட்டு அவளது அப்பத்தா வீட்டிற்கு சென்று விட்டு பள்ளி முடியும் நேரம் சரியாக கார்த்திகா மற்றும் ஈஸ்வரியுடன் வீட்டிற்கு வந்துவிடுவாள். பசங்க படத்தில் வரும் முடியை இழுத்தால் அப்பத்தா என்றும் கத்தும் சிறுவனைப் போல் மலர்விழி அப்பத்தா செல்லம். அவள் அப்பத்தாவிற்கு இவள் என்றால் உயிர். அதனால் இவள் அப்பத்தா ஒன்றும் சொல்லமாட்டார். இவள் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவளது தாய் விஷக்காய்ச்சல் தாக்கி இறக்க் இவளது இருப்பு அப்பத்தா வீடே என்றாகிவிட, பள்ளி என்பது வாரத்திற்கு ஒருமுறை சென்றுவரும் சுற்றுத்தலமாகி போனது.

                    தமிழ்நாட்டின் கல்வி திட்டத்தின்படி எப்படியோ எட்டாம்வகுப்பு வரை மாதத்தில் நான்கு நாட்கள் சென்றாலும் பாஸாகிவிட ஒன்பதாம் வகுப்பில் ஆப்பு ரெடியாக இருந்தது. பத்தாம் வகுப்பில் பொதுதேர்வில் தங்கள் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி காட்டவேண்டும் என்று வடிகட்டியதில் முதலில் வெளியேற்றப்பட்ட கசடு மலர்வழி தான்.

               அத்தனை நாளும் நாடு ஒன்றே தனது குறிக்கோள் என்பதைப் போன்று  தனது மகளுக்கு காசு அனுப்பவது மட்டுமே கடமை என்று நினைத்துக்கொண்டு ஆறு மாசத்துக்கு ஒருமுறை வந்து மகளையும் உடன்பிறப்புகளையும் பார்த்துவிட்டு நாட்டு எல்லையை பாதுகாத்துக்கொண்டிருந்த சிவராமனுக்கு இச்செய்தி கடத்தப்பட வேலையாவது ஹைகோர்ட்டாவது என்று உடனடியாக வீட்டிற்கு வந்து மலர்விழியை ஆத்திரம் தீரும் மட்டும் அடித்து தீர்த்துவிட்டு என்று நீங்கள் நினைத்தால் தவறு மலர்விழியின் காது தீய்ந்து இரத்தம் வரும்மட்டும் அறிவுரைக்கூறி அவளை பிய்த்து எடுத்து, மலர்விழியின் பள்ளி தலைமையாசிரியரிடம் கெஞ்சி கூத்தாடி முதல் இடைத்தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்காவிடில் மீண்டும் எட்டாம் வகுப்பிற்க்கே அனுப்பிவிடுங்கள் என்று உத்திரவாதம் கொடுத்துவிட்டு முதல் வேலையாக தனது பணியை இராஜினாமா செய்தார்.

             இருக்காதா பின்னே அந்த காலத்திலே பத்தாம் வகுப்பில் நானூற்றி ஐம்பது மதிப்பெண் எடுத்து விருதுநகர் மாவட்டத்திலே முதல் மாணவராக வந்தவர். அவருடைய ஒரே ஒரு பெண் இப்படி செய்தால் அவரும் என்ன செய்வார். அதற்கு பின்பு மலர்விழியை என்ன என்னமோ செய்து எப்படியோ பத்தாம் வகுப்பில் ஜஸ்ட் மிஸ் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்று சொல்லுவார்களே அதைப்போன்று பார்டரில் மலர்விழியை தேர்ச்சி பெற வைத்தார்.  

    இதைப் போன்று பண்ணிரெண்டாம் வகுப்பிலும் மயிரிழையில் தேர்ச்சி பெற்றாள். தான் எடுத்த மதிப்பெண்ணுக்கு எங்கேயும் கல்லூரி கிடைக்காது சந்தோஷமாக வீட்டில் இருக்கலாம் என்று நினைத்தவளுக்கு இடியாக வந்த செய்தி. தெருவுக்கு தெரு எஞ்சீனியரிங்க் கல்லூரி ஆரம்பித்துவிட்டு மாணவர்களை சேர்க்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்த ஒரு கல்லூரியில் லட்சங்களில் டோனேஷன் கட்டி மலர்விழியை எலக்ரானிக்ஸ் பிரிவில் சேர்த்துவிட நொந்துப் போனாள். அப்படி இப்படி என்று முப்பது என்று இருந்த அரியரை இரண்டு வருடங்கள் போராடி இப்பொழுது தான் ஐந்து அரியர் என்று வந்திருக்கிறாள்.

             அப்படிப்பட்ட மலர்விழிக்கு போய் JEE MAIN தேர்வில் இந்திய அளவில் பத்தாவது இடம் பிடித்து சென்னை ஐஐடியில் மின்னனுவியல் பிரிவில் இளங்கலை  படித்து பட்டம் பெற்று அடுத்து டெல்லி ஐஐடியில் முதுகலை படித்து பட்டம் பெற்று மதுரையின் மிகசிறந்த பொறியியல் கல்லூரியில் பேரராசிரியராக வேலை செய்து கொண்டிருப்பவன் மாப்பிள்ளை என்றால்!

              இதெல்லாம் மலர்விழியின் தந்தை சிவராமன் மணமகனின் பெயர் புகைப்படம்  என்ற முக்கியமான ஒன்றைக்கூட சொல்லாமல் காட்டமால் அந்த மேதகு மாப்பிள்ளையைப் பற்றி மலர்விழியிடம் கூறியது.

            “முதல்ல மாப்பிள்ளையை பாரு. உனக்கு பிடிக்காட்டி மாமா என்ன கட்டாய திருமணமா பண்ணி வைக்கப் போறாரு சொல்லு?” என்று ஈஸ்வரி தனது மாமன் மகளை தேற்ற,

               “ஹே எங்க அப்பாவுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம்? அவருக்கு என்சீனியரிங்க் அப்படின்றது அவரோட கனவு… அது நிறைவேறாதுனால தான் எப்படியாச்சும் என் மூலமா அதை சாதிக்கனும்னு நினைச்சு வராத படிப்பை வர வைச்சு டார்ச்சர் பண்ணார். இந்த மாப்பிள்ளை அவர் என்னவாகனும்னு நினைச்சு இருந்தாரோ அந்த மாதிரி இருக்க மனுசனை எப்படி அவர் மகளுக்கு கட்டிவைக்காம இருப்பாரு சொல்லு பார்ப்போம். உனக்கே தெரியும் என்னால நம்ம சமுத்திரகனியை  கஷ்டபடுத்திட்டு  எதுவும் செய்ய முடியாதுனு… ” என்று தன்னுடைய புலம்பலை மலர்விழி கொட்டிக்கொண்டிருந்தாள்.

                அதற்குள் அந்த அறையில் வேகமாக நுழைந்த கண்ணகி அதாவது மலர்விழியின் சித்தி கார்த்திகாவின் தாய் “ஏய்ய்… மாப்பிள்ளை வீடு வந்துட்டாங்க டி… எல்லாம் முடிஞ்சாச்சா? ” என்றவாறு வந்தவர் தனது மச்சானின் மகளை ஆசையாக பார்த்தவர் “மாப்பிள்ளை உனக்கு அம்சமா பொருத்தமா இருப்பார் டி” என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே மலர்விழியை மட்டும் அந்த அறையில் விட்டுவிட்டு கண்ணகியை இடித்து தள்ளிவிட்டு வேகமாக வரவேற்பறைக்கு விரைந்தனர் மூவரும்.

                             “ஹே என்ன டி இது?” என்று ஈஸ்வரி குழப்பத்துடன் கேட்டதற்கும் காரணம் இருக்க தான் செய்தது. ஏனெனில் அங்கு கிட்டதட்ட ஒரே முகவடிவில் சில வயது வித்தியாசங்களுடன் ஐந்து இளைஞர்கள் அமர்ந்திருந்தனர்.

          இதிலிருந்தே அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று புரிந்துவிட்டது. “உன் வம்சத்து ஆண்கள் அனைவரும், பெண்களே பொறாமைக்கொள்ளும் தேகநிறத்தில், ஆறடி உயரத்திற்கு குறையாமல் பிறக்க கடவாயக!” என்று இவர்கள் குடும்பத்திற்கு எதோ வீணாபோன முனிவர் சாபம் விட்டிருக்க வேண்டும். அங்கிருந்த அந்த ஐந்து இளைஞர்கள் மட்டுமில்லாது அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த இரண்டு நடுத்தர வயது ஆண்களும் அப்படி தானிருந்தனர்.

             “இதுல யாரு மாப்பிள்ளை?” என்று கார்த்திகா வினவ,

            “ஹே இவரு நம்ம தொகுதி எம்.எல்.ஏ ஆதித்யன் ஜோசப் தானே?” என்று முதலாவதாக அமர்ந்திருந்தவனை பார்த்து கைநீட்டி ஷிவானி கூறினாள்.

            அதன்பிறகு தான் அவனை கூர்ந்துநோக்கிய இருவருக்கும் அவன் தான் என்பது புரிய “ஆமாடி… போன மாசம் எங்க காலேஜ்க்கு கூட வந்திருந்தார்.” என்று கார்த்திகா கூறினாள். அரசியல் பற்றி அரிச்சுவடி கூட அறியாத இவர்கள் மூவருக்கும் கூட ஆதித்யன் ஜோசப் பற்றி தெரிந்திருக்க காரணம் தமிழகத்தின் மிக இளவயதில் எம்.எல்.ஏ ஆகியது இவன் தான். தன்னுடைய இருபத்திமூன்றாவது வயதில் பதவி ஏற்றான். இப்பொழுது பத்து வருடங்கள் கடந்திருந்தன.

                    “அப்போ இவர் தான் மாப்பிள்ளையா?”

                    ஷிவானி “நோ.. நோ… இவருக்கு போன வருசம் தான் அவரோட மாமா பொண்ணுக்கூட மேரேஜ் ஆச்சு.”

                       கார்த்திகா“அவரோட வொயிப்பை காணோமே?”

                       “அவங்க ரெண்டுப்பேரும் பிரிஞ்சுட்டதா ஒரு பேச்சு.” என்று ஷிவானி கூற இருவரும் யாருடி நீ இவ்ளோ விசயம் தெரிஞ்சுருக்கு உனக்கு என்பதைப்போல் பார்க்க,

                              அதற்கு தனது முத்துமுரல்கள் தெரிய சிரித்த ஷிவானி,”ஓரு அழகான ஆளு நம்மளுக்கு எம்.எல்.ஏ, சோ அவரைப்பத்தி தெரிஞ்சுகிறதுல ஒன்னும் தப்பில்லையே. அதுமட்டுமில்லாம இவரோட மாமனார் நம்ம நிதியமைச்சர் சண்முகம் தான். அப்புறம் அவரோட வொயிப் ஜோசப் Law firmவுடைய ஒன் ஆப் தி பார்ட்னர்… ” என்று ஆதித்ய ஜோசப்பின் விக்கிபீடியாவையே இவள் ஒப்பிக்க இருவரும் ஆவென்று பார்த்திருந்தனர்.

                    “இவ்ளோ தானா? இல்ல இன்னும் இருக்கா?” என்று இருவரும் ஒருசேர கேட்க,

                  “இருக்கு. இந்த பேமிலி யாருன்னா இந்தியால டாப் 10 லா ஃபிர்ம்ஸ்ல டாப் த்ரீல இருக்க ஜோசப் லா firm தான் இவங்க. இதுல பார்ட்னர் யாருமே வெளி ஆளுங்க கிடையாது. இவங்க பேமிலி மட்டும் தான். சக்தி இருக்குற ஷேர் இவர் ஆதித்யன் கொடுத்தது அப்படின்னு கேள்விப்பட்டேன். ”

                      “ஹே அவங்களாடி இவங்க…!” என்று அதிசயித்த ஈஸ்வரி தனது கையிலிருந்த கைப்பேசியில் கூகுள் ஆண்டவரின் உதவியை நாட அங்கு அமர்ந்திருந்த இரு தந்தைமார்களைப் பற்றியும், அந்த பாண்டவ சகோதர்களைப் பற்றியும்  இரு தாய்மார்களைப்பற்றியும் தனக்கு தெரிந்த தகவல்களை கொட்டிக்கொண்டிருந்தது.

       அதாவது என்னவென்றால், 1918களில் மதுரைப் பகுதிகளில் பிரமலைக் கள்ளர் சமூகத்தினரைக் குறிவைத்து ஆங்கிலேயர் குற்றப்பரம்பரைச் சட்டத்தைச் செயல்படுத்தி அம்மக்களை கொடுமைப் படுத்தி வந்தனர். அதில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் இந்த ஜோசப் குடும்பத்தின் அதாவது இந்த ஐவரின் தந்தைமார்களின் தாத்தா வேலுச்சாமியும் ஒருத்தர்.

       அவர்கள் அனுபவிக்கும் கொடுமையை தாங்க முடியாமல் ஜார்ஜ் ஜோசப் என்ற வக்கீல் எதிர்ப்பு தெரிவித்து பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டார்..[

      அதில் வேலுச்சாமியின் தந்தையையும் ஒரு பொய் வழக்கிலிருந்து காப்பாற்றினார். அதில் அவரின்பால் கவரப்பட்ட வேலுச்சாமி படித்து பட்டம்பெற்று வழக்குரைஞர் ஆனார். ஜார்ஜ் ஜோசப்பின் மீது கொண்டிருந்த அளவுக்கடந்த அன்பினால் தன் பெயருக்கு பின் வேலு ஜோசப் என்று சேர்த்துக்கொள்ள, அதுவே அவர்களது குடும்பத்தின் பின்பெயராக, அடையாளமாக மாறியது.

                     அவருக்கு ஒரே ஒரு பையன் திலகர் ஜோசப். அவரும் தன் தந்தையின் வழியிலே வழக்குரைஞர் பட்டம் பெற்று தனது முயற்சியால் லா ஃபிர்ம் ஒன்றை ஆரம்பித்தார். அவர் ஸ்வப்னம் என்ற பஞ்சாபி பெண்னை மணம்புரிந்தார். அவர்களுக்கு தினகரன் ஜோசப், சுதாகரன் ஜோசப் என்ற உருவ ஒற்றுமையற்ற இரட்டை ஆண்பிள்ளைகள்.   

             சகோதரர்கள் இருவருமே தங்களது தந்தையின் அடியைப் பின்பற்றி வழக்குரைஞர் ஆகினர். இருவரும் தொட்டது அனைத்தும் வெற்றிப்பெற தமிழகத்தின் சிறந்த அடையாளமாக மாறிவிட தங்களது லா ஃபிர்ம்மை இந்தியாவின் அடையாளமாக மாற்றினர்.

                தினகரன் ஜோசப்க்கு அப்பொழுது மத்திய அமைச்சராக இருந்தவரது மகள் விஜயாவை பெற்றோர் மணமுடித்து வைத்தனர். தனது மாமியாருக்கு சிறிதும் குறையாத வகையில் அவரது பஞ்சாபி கோதுமை நிறத்தையே வந்து பாரு என்று சொல்லும் அளவிற்கு இளமஞ்சள் நிறத்தில் இருந்தார்.தினகரன் மற்றும் விஜயா தம்பதியினருக்கு இருவர். ஒருத்தன் ஆதித்யன் ஜோசப், இன்னொருத்தன் கணிதன் ஜோசப்.

                தனக்கு சில நிமிடங்களே மூத்தவரான தினகரன் மணம்முடித்து இரு ஆண்பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் வரையிலே திருமணத்தில் சிறிதும் நாட்டமில்லாமல் தனது பேச்சிலர் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தார் சுதாகரன் ஜோசப்.

                 அவரது பேச்சிலர் வாழ்க்கையை முடித்து வைக்கவே மலையாள திரையுலகில் நுழைந்தார் பார்வதி நாயர். அவர் திரைத்துறையில் உச்சத்தில் இருந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட சில சட்ட சிக்கல்களை கலைய ஜோசப் பிரதர்ஸை தேடிவர சுதாகரனும் பார்வதி நாயரும் காதல் வயப்பட சிக்கல்களை அவிழ்த்துவிட்டு அவரை தன்னுடன் இறுக மனைவியாக கட்டிக்கொண்டார் சுதாகரன் ஜோசப்.

               சுதாகரன் பார்வதி தம்பதியருக்கு முதலில் வீரேந்திர ஜோசப், விஜயயேந்திர ஜோசப் என்ற உருவ ஒற்றுமையற்ற ஒரு இரட்டையர்கள். தங்களது வம்சத்திலே பெண்ணே இல்லையே ஒரு பெண்ணாச்சும் வேண்டுமென்று அடுத்து ஒரு குழந்தை பெற்க அதுவும் ஆணாகி போய்விட அவன் பெயர் ரிஷிபன் ஜோசப்.

             ஆகமொத்தம் ஜோசப் குடும்பத்தில் அடுத்த தலைமுறைக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் என்று மொத்த குடும்ப வரலாற்றையும் பார்த்தவர்கள் அவர்கள் இப்பொழுது என்ன என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மூத்தவரான தினகரன் சொல்ல கேட்டனர்.

                    தினகரன் மற்றும் சுதாகரன் இப்பொழுது லா பிர்ம்ல் இருக்கிறார்கள். தினகரனின் மனைவி விஜயா ஒரு தமிழாசிரியர். தமிழுக்கென்றே புகழ்பெற்ற ‘செந்தமிழ்’ என்னும் கல்லூரியை நடத்தி வருகிறார்.

             சுதாகரனின் மனைவி பார்வதி நாயர் தற்பொழுது எதுவும் நடிக்கவில்லை என்றாலும் சில குறிப்பிடதகுந்த தயாரிப்பு நிறுவனங்களில் சைலண்ட் பார்ட்னராக பணிபுரிகிறார்.

                மூத்தவனான ஆதித்யன் லண்டனில் சென்று லா முடித்திருக்கிறான் தற்பொழுது எம்.எல்.ஏவாக இருக்கிறான்.(வயது 31)

                கணிதன் அதாவது இப்பொழுது பெண்பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளை புகழ்பெற்ற இஞ்சீனியரிங்க் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிகிறான். (வயது 29)

        அடுத்தவன் வீரேந்திரன் தனது தாயின் வழியை பின்பற்றி அவனது தாய்வழி தாத்தாவின் இயக்கத்தில் ஒரு படம் நடித்திருக்கிறான். அது இன்னும் திரையிடப்படவில்லை போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை சென்று கொண்டிருக்கிறது. (வயது 25)

            விஜயேந்திரன் மதுரை சட்டகல்லூரியின் இளங்கலை பட்டம் பெற்றுவிட்டு  சில வருடங்கள் இவர்களிடமே ஜீனியராக இருந்தவன் தற்பொழுது முதுகலை பட்டம் லண்டனில் உள்ள லா ஸ்கூலில் படித்துக்கொண்டிருக்கிறான். இன்னும் சில மாதங்களில் முடிவடைய போகிறது. இப்பொழுது அண்ணனின் திருமணத்திற்காக விடுமுறையில் வந்திருக்கிறான்.(வயது 25)

              ரிஷிபன் கடைக்குட்டி. மும்பையில் பாலிவுட்டின் புகழ்பெற்ற  ஆடை வடிவமைப்பாளர் சஞ்சய் மல்கோத்ராவிடம் உதவியாளராக  பணிபுரிகிறான். (வயது 22) என்று அனைவரது விவரங்களையும் தினகரன் கூறிமுடித்தார்.

                “ஹான். ஒஎம்ஜி! நம்ம பேமிலியோட வரலாறு நீங்க சொல்லி முடிக்குறதுக்குள்ள கணி அண்ணாக்கு வயசே ஆயிடும் போல… ஹே கேர்ள்ஸ் போய் பொண்ணை கூட்டிட்டு வாங்க ஒடுங்க…” என்று ரொம்ப நேரமாக தங்களையும் கையில்  வைத்திருக்கும் கைப்பேசியும் பார்த்து பேசியவாறு இருந்த ஈஸ்வரி, கார்த்திகா, ஷிவானியை விரட்டினான் ரிஷிபன்.

            “டேய் சும்மா இருடா…” என்று அவனை அதட்டிய பார்வதி மலர்விழியின் தந்தையை நோக்கி “விளையாட்டு பையன். எப்பயும் இப்படி தான். இம்சை தாங்காது.” என்று அவர் பேசிக்கொண்டிருக்க,

                   ரிஷிபன் சொல்லியும் அங்கிருந்து அகலாத பெண்கள் அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

                     “நம்ம மலருக்கு இவர் கொஞ்சம் ஒவர் தான் என்ன கார்த்தி?” என்று வெண்மை நிற சட்டை நீல நிற ஜீன்ஸ் அணிந்து நாற்காலியில் அமர்ந்திருக்கும்போதே நான் உயரமானவன் என்பதை நீருபிக்கும் விதமாக கால்களை தரையில் பரப்பி வைத்துக்கொண்டு மின்விசிறியின் உபயத்தால் பறந்த முன்நெற்றி முடியை ஒதுக்கி விட்டவாறு கார்த்திகாவின் தம்பியான கதிரவனிடம் பேசிக்கொண்டிருந்தவனை பார்த்து ஈஸ்வரி கார்த்திகாவிடம் கூற,

                 “எப்படியும் மலர் இவரை வேணாம்னு தான் சொல்லுவா… சோ பெரியப்பாக்கிட்ட பேசி நானே கல்யாணம் பண்ணிக்க போறேன்… என்ன மலரைவிட நான் ஒரு ஐஞ்சு வருஷம் தானே சின்ன பொண்ணு? எப்படியும் எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கனும் தானே அது ஏன் இவரா இருக்க கூடாது?” என்று கார்த்திகா பதில் பேசுவதற்குள் அந்த இடமே வெள்ளத்தில் மூழ்குமாறு ஜொல்லு விட்டுக்கொண்டு பேசியவள் அனைவருக்கும் இளையவளான ஷிவானியே தான்.

                       “எடு விளக்கமாத்தே…. ஷ்ஷ்கூல் போக வேண்டிய வயசுல கல்யாணம் கேட்குதா உனக்கு… முதல் வாயை துடை டி வழியுது. கருமசண்டாளம். ஏண்டி ஈஸ்வரி இதெல்லாம் நீ கேட்கமாட்டியா?” என்று ஆற்றாமையாக கார்த்திகா பொறிய,

              அதற்கு சிரித்துக்கொண்டே ஈஸ்வரியை நோக்கி திரும்பிய கார்த்திகா, “ஆனா பாரேன் மச்சி. உன் விதியை… இந்த ஐஞ்சு பேருமே உனக்கு அண்ணன் முறை தான் வேனும்…” என்று கூற,

         “உங்களுக்கு ஒரே ஒரு அத்தை மகளா பிறந்த இத்தனை வருசத்துல எனக்கு என்ன நல்லது நடந்து இருக்குன்னு சொல்லு பார்ப்போம்? எப்பயும் உங்களால நான் இழந்தது தான் அதிகம். அதுல இந்த ஜோசப் பிரதர்ஸும் அடக்கம். போங்க டி… ”

                “டேய் அண்ணா… உனக்கு கண்டிப்பா இந்த் பேமிலில தான் பொண்ணு கட்டி ஆகனுமா?” என்று தனது அருகிலிருந்த கணிதனின் காதிற்குள் முனுமுனுத்தான் விஜய்.

             “ஆமாம். என்ன இப்ப?”

               “இல்லை டா… உன் வருங்கால மாமனாரோட மூக்கை பாரேன். ஏன் டா அது மட்டும் மூஞ்சில இருந்து ஒரு மீட்டர் வெளிய இருக்கு?” என்று கேட்க, அவர்களது பேச்சில் இடைநுழைந்த வீர்

               “அவரோட பொண்ணுக்கும் அந்த மாதிரி மூக்கு இருந்தா என்ன பண்ணுவ ப்ரோ?” என்று கேட்டுக்கொண்டிருக்க ஆதித்யனை தவிர மீதமிருந்த நால்வரின் அலைப்பேசியும் வாட்ஸாப்பில் தகவல் வந்தற்க்கான ஒலி எழுப்ப அவர்களது ஜோ பிரதர்ஸ் என்ற குழுவில் செய்தி வந்திருந்தது. ஆதித்யன் தான் அனுப்பிருந்தான்.

            “உன் ஆளு மூக்கு பெருசா இருந்தா இலியானா அக்கா சொல்லுற மாதிரி கிஸ் அடிக்கும் போது மூக்கும் மூக்கும் இடிச்சிக்கிட்டு கஷ்டமா போயிரும் கணி…” என்று அனுப்பிருக்க, தங்கள் மூவருக்கும் எதிரிலிருக்கும் சோபாவில் அமர்ந்திருந்தாலும் தங்களது பேச்சை புரிந்து பதில் அனுப்பியவனை யாரும் அதிசயமாக எல்லாம் பார்க்கவில்லை.

             இது இவர்கள் ஐவர்க்குள் எப்பொழுதும் நடக்கும் ஒன்று தான். ஒரே இடத்தில் இருந்தார்கள் என்றால் மீதிருக்கும் நால்வரும் என்ன யோசிப்பார்கள் என்று ஒவ்வொருத்தனும் அறிந்திருப்பார்கள்.

          “ஆமா அண்ணா திங்க் அபவுட் இட்… ” என்று ரிஷிபன் அனுப்ப

           “டேய் ஒரு உடன்பிறப்புக்கிட்ட பேசுற மாதிரியா டா பேசுறீங்க கேனை பசங்களா… என் ஆளு ஒரு தேவதை டா. இவரை மாதிரிலாம் இல்லை. அண்ட் ஒன் மோர் திங்க் என் மாமனாருக்கு அந்த பீரங்கி மூக்கு தான் அழகே…!” என்று கணிதன் அனுப்ப என்று ஒரு சில நிமிடங்கள் குதுகலமாக சென்றது.

                   கண்ணகி மலர்விழியை அழைத்து வர அந்த இடமே நிசப்தமாகியது. அனைவரும் பெண்ணை ஆர்வமாக பார்க்க, அவளோ யாரையும் நிமிர்ந்து பார்க்கமால் குனிந்த தலை நிமிராமல் நின்றுக் கொண்டிருந்தாள்.

        பார்வதி “வாமா… இங்கே வா…” என்றழைக்க மலர்விழி அப்பொழுதும் நிமிராமல் குரல் வந்த திசை நோக்கி நடந்து சென்று அவருக்கும் விஜயாவிற்கும் இடையில் இருந்த இடைவெளியில் அமர்ந்தாள்.

           சுதாகரன் “பாப்பா உன் பெயர் என்ன மா?” என்று கேட்க, ‘பாப்பாவா???’ என்ற குமுறலுடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள் மலர்விழி.

       “மலர்விழி…” என்று கூறிவிட்டு மீண்டும் குனிந்துக்கொள்ள,

அடுத்து தினகரன் என்ன படித்திருக்க என்று கேட்டதற்கும் இதே மாதிரி செய்ய கடுப்படைந்த வீர் “ஏங்க மலர் விழி உங்க விழியை மலர்ந்து மாப்பிள்ளை யாருன்னும் பாருங்க…” என்று சொல்ல, கடிந்த பற்களுடன் அவர்களை நோக்கி திரும்ப அந்த சோபாவில் இரண்டவாதாக அமர்ந்திருந்தவனை பார்த்து உயர்மின் அழுத்த நிலைக்கு உள்ளானாள்.

           தன்னையறியாமல் எழுந்து நின்றவள் தன் இரு கரங்கள் கொண்டு தனது வாயை பொத்தி வீர் சொன்னது போன்று மலர்விழிகள் மலர்ந்து கணிதனை பார்த்தது.

                      “என்ன ஆச்சு மலர்???” என்று அவளது தந்தை கேட்க, அதில் சுயவுணர்வு பெற்றவள் “ஓன்னுமில்லை பா…”என்றவாறு அமர்ந்தவளுக்கு இந்த திருமணத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற உறுதியே பிறந்தது.

             அவள் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று உறுதி பூண்டுக்கொண்டிருக்க இன்னும் இரண்டு வாரத்தில் நிச்சயம் என நாள் குறிக்கப்பட்டது. மலர்விழி அதிர்ச்சியுடன் தனது தந்தையை பார்த்தவள் அடுத்து கணிதனை பார்க்க அவனோ கண்களை சிமிட்டினான்.

                “க்ர்ர்ர்ர்ர்ர்….”

Leave a Reply

error: Content is protected !!