kiyya-28

kiyya-28
கிய்யா – 28
பூங்காவிலிருந்து துர்கா கிளம்பிவிட, இலக்கியா அவள் செல்லும் வழியையே பார்த்து கொண்டிருந்தாள்.
சில நிமிடங்களுக்கு பின் புல் தரையிலிருந்து எழுந்த இலக்கியா திரும்ப, அங்கு மார்பில் கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்த விஜயபூபதியை பார்த்து ஒரு நொடி அதிர்ந்து தன்னை சுதாரித்து கொண்டாள்.
அவன் நிதானமாக அவள் அருகே வந்தான். எதுவும் பேசவில்லை. அவளை மேலும் கீழும் பார்த்தான்.
‘போலாமா?’ என்பது போல் தலை அசைத்து, அவன் அவளுக்கு யார் என்ற கட்டாயத்தை உணர்த்த கடமைப்பட்டவன் போல், அவள் கைகளை அழுத்தி பிடித்தான்.
அவன் வேகமாக நடக்க, அவள் அசையாமல் அங்கு நின்றாள்.
“என் மனைவியின் கைகளை பிடிக்க மட்டுமில்லை, வெளியிடத்தில் என் மனைவியை தூக்கவும் நான் தயங்க மாட்டேன்.” அவன் அவள் முகம் நெருங்கி, அவள் கன்னத்தை நிமிண்டினான்.
அவள் கண்கள் பெரிதாக அச்சத்தில் விரிந்தன.
அவன் விரல்கள் அவள் கன்னத்தை நிமிண்டினாலும், அவன் குரல் மெதுவாக ஒலித்தாலும், அதில் கோபம் வழிந்து கொண்டிருப்பதை உணர்ந்த இலக்கியா அவனை கூர்மையாக பார்த்தாள்.
“என்ன யோசனை இலக்கியா? எப்படி உன் அத்தானின் தோள்களில் மாலையாக கைகளை கோர்த்துக்கிட்டு, அத்தான் உன்னை மென்மையா இடையோட தூக்க ஊர்வலம் போகலாமுன்னு ஆசையா யோசிக்குறியா?” அவன் அவள் முகத்தை உயர்த்தி, தன் புருவங்களை உயர்த்தி வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“உனக்கு ஆசை அப்படினா நான் எதை வேணும்ன்னாலும் செய்யணுமில்ல? நான் தயார்” அவன் இடைவரை குனிந்து நக்கல் பேச, ‘அத்தான் செம்ம கடுப்பில் இருக்காங்க போல. இலக்கியா நீ செத்த டீ…’ எதுவும் பேசாமல் இலக்கியா அவனோடு நடக்க ஆரம்பித்தாள்.
அவன் நடை, அவன் முகபாவம், அவன் செயல் என அவன் ஒவ்வொரு உடல் மொழியும் காட்டியது அவன் கோபத்தை.
அவன் சினத்தோடு தோட்டத்து வீட்டிற்குள் சென்று கதவை அடைக்க, “இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி ஓவரா பண்றீங்க விஜயபூபதி?” அவள் சீற, அவன் அவள் கன்னத்தில் “பளார்…” என்று அறைந்தான்.
“அறிவு இருக்கா உனக்கு? உனக்கு எல்லாம் தெரியுமா?” அவன் சீறினான்.
கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, “துர்கா, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் என்னை விட்டு விலக நினைச்சா. விதி, தொழில் நஷ்டத்தில் வர, அப்பவும் துர்கா சட்டுன்னு நம்மளை விட்டுட்டு போக முடியலை.” அவன் பொறுமையாகவே பேச எண்ணினான்.
“உங்களுக்கும், துர்காவுக்கும் அவங்க அப்பா தானே பிரச்சனை?” இலக்கியா, அவன் முன் ஆள் காட்டி விரலை நீட்டிக்கொண்டு கேள்வி எழுப்பினாள்.
“எனக்கும் துர்கா அப்பாவுக்கும், என் உடல் நிலை சரி இல்லாதப்ப கொஞ்சம் பிரச்சனை பேச்சில் வந்தது என்னவோ உண்மை தான். துர்கா ரொம்ப நல்லவ… என் கிட்ட இருக்கிற பிரச்சனைக்காக என்னை விட்டு விலக மாட்டா. அதே நேரத்தில், அவங்க அப்பாவை மீறவும் மாட்டா.” அவன் மூச்சை உள்ளிழுத்து தன்னை மேலும் அமைதிப்படுத்த முயற்சி செய்தான்.
“அதை தான் நானும் சொல்றேன். துர்கா கிட்ட பேசி, நான் எல்லாத்தையும் சரி செய்யறேன்.” இலக்கியா தலை சாய்த்து கூற, அவள் சங்கை பிடித்திருந்தான் விஜயபூபதி.
“முட்டாள்… முட்டாள்… முட்டாள்…” அவன் கோபத்தில் கத்தினான்.
அவன் உள்ளிழுத்து நிதானித்த மூச்சு காற்று இப்பொழுது வேகமாக வெளிவந்து அவள் தேகத்தை தீண்டியது.
“துர்கா அப்பாவும், நானும் இப்ப தினமும் பேசுறோம். அது தெரியுமா உனக்கு? எனக்கு தெரிந்த குடும்பத்திலிருந்து துர்காவுக்கு மாப்பிள்ளை பார்த்தோம். இன்னைக்கு தான் துர்காவை பொண்ணு பார்க்க வந்திட்டு போயிருக்காங்க.” அவள் கழுத்தை அழுத்தியபடியே அவன் பேச, அவள் மூச்சு திணறியது.
‘திட்டறதை தள்ளி இருந்து திட்டினா என்னவாம்?’ இலக்கியா அவன் கொடுத்த அழுத்தத்தின் வலியில் சிந்தித்து கொண்டு தன் கழுத்தை அசைத்து கொண்டாள்.
அவள் வலியை அறிந்து கொண்ட அவன், தன் பிடியை தளர்த்திக் கொண்டான்.
ஆனால், விலகவில்லை. உன்னிடம் எனக்கு உரிமை இருக்கிறது என்பது போல அவள் சுவாசக்காற்றை உணரும் இடத்தில் நின்று கொண்டான்.
“காதலுக்கும், குடும்பத்துக்கும் இடையில் தவிச்சிக்கிட்டு இருந்த துர்கா, இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறிட்டு இருக்கா. துர்கா எப்ப மனசு மாறுவா? அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாதான்னு நான் தவிக்கிறேன். நீ அதை கெடுத்திருவ போல?” அவன் வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“நான் என்ன பண்ணேன்? உங்களக்கு நல்லது பண்ணத்தான்…” இலக்கியாவும் சீற, அவன் தன் கரங்களால், அவள் அதரங்களை மூடினான்.
அவன் கரம் கொண்டு மூடியதில், அவள் வார்த்தைகள் தோற்று போக, அவள் இதழ்கள், அவன் கரங்களோடு பேசிக்கொண்டன.
அவள் இதழின் தீண்டலில், அவன் கண்கள் அவள் விழிகளோடு மோதிக் கொண்டன.
அவள் விழிகளில் அவனுக்கான அன்பு மிளிர, ‘இவள் என்னை விட்டுக்கொடுப்பாளா? இவர்கள் விட்டுக்கொடுத்து விளையாட நான் என்ன பொம்மையா?’ அவனுக்கு இன்னும் கனன்றது.
“எங்களுக்கு நல்லது பண்ண நினைச்சிருந்தா, நீ என்னை கல்யாணம் பண்ணிருக்க கூடாது. கல்யாணம் பண்ணிட்டு, போறேன் போறேன்னு சொன்னா…” கோபத்தில் அவன் வார்த்தைகள் தாறுமாறாக விழுந்தன.
அவன் விரல் மெல்ல அவள் முகத்தை வருடி, அவள் கழுத்தை தீண்டி, அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலியை தீண்டி அவள் நெஞ்சோரம் வீற்றிருந்த மாங்கல்யத்தை அழுத்தியது.
அவன் கொடுத்த அழுத்தம் வலிக்க, ‘ஸ்…’ சத்தமிடவே அவள் எண்ணினாள். ஆனால் அவன் பேசிய சொற்கள் கொடுத்த வலியில் அவள் இதயம் ஒரு நொடி துடிப்பை நிறுத்தி அவளை சிலையென நிற்க செய்தது.
அவள் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள். நொடிப்பொழுதில், அவள் கோபம் கரையை கடந்தது.
‘படார்… படார்…’ என்று தலையில் அடித்து கொண்டு கதறினாள். அவள் கைகளை பிடித்து தடுக்க முயன்று அவன் தோற்று போனான்.
“எல்லாம் என்னால் தான்… எல்லாம் என்னால் தான்… என் பிறப்பால் தான். இல்லை இல்லை என்னால் இல்லை. எனக்குன்னு கேள்வி கேட்க ஆள் இல்லாமல் உங்க குடும்பத்தில் அனாதையாய் என்னை வளர வைத்தான் பாருங்கள். இந்த கடவுளால் தான்.” அவர்கள் அருகே இருந்த சாமி படத்தை தூக்கி வீசினாள்.
அவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள் இலக்கியா. கோபத்தின் வேகத்தில் அவள் சுவாசம் அவன் இதயத்தை தொட்டது.
“நான் தான் காரணம் இல்லை?” அவள் கதறியப்படி கேட்க, அவள் விழி நீர் அவன் தேகம் தொட்டு தெறித்து விழுந்தது. அவள் கண்கள் அவனை வலியோடு பார்க்க, அவள் வலியில் அவன் தூண்டிலில் மாட்டிய மீனாய் துடிதுடித்து போனான்.
அவள் முகத்தில் அப்பி கொண்டிருந்த சோகத்திலும், அவள் கண்களில் மண்டி கிடந்த வலியிலும், ‘இல்லை… இல்லை… நீ காரணம் இல்லை…’ என்று அவளை அவனுள் புதைத்து ஆறுதல் கூற, அவன் கைகள் அவளை நெருங்க, காற்று புகும் இடைவெளியில் அவன் சிந்தை புகுந்து கொண்டு நிதானித்து கொண்டது.
‘உணர்ச்சிகளுக்கு நேரம் இல்லை. எத்தனை நாள் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டத்தை ஆடுவது.’ அவன் உடல் இறுகியது.
‘நான் வைக்கிறேன் இந்த ஆட்டத்திற்கு முற்று புள்ளி.’ அவன் கைகளை சரேலென்று விலக்கி கொண்டான்.
அவள் தோள்களை பற்றினான். அவளுக்கு வலிக்கும் என அறிந்தே அவளை குலுக்கினான்.
“நீ தான்… நீ தான்… எல்லா பிரச்சனைக்கும் காரணம். உன் கிட்ட கெஞ்சினேன் நான், நம்ம கல்யாணம் வேண்டாமுன்னு… உன் வாழ்க்கையை முட்டாள் போல் அழிச்சிக்கிட்டவ நீ. எனக்கும், துர்காவுக்கும் இடையில் வராத, வந்தால் நீ சிக்கி சின்னா பின்னாமாகிடுவன்னு சொன்னேனா இல்லையா?” அவன் கோபம் கொண்டு கத்த,
“ஏன் அத்தான் நிறுத்திடீங்க? இன்னும் சொல்லுங்க. உங்க வாழ்க்கையை அழிச்சவ நான். உங்க ஆருயிர் காதலி துர்காவின் வாழ்க்கையை அழிச்சவ நான்” தன் மார்பில் தட்டிக் கொண்டு இலக்கியா குரலில் வலியோடு அடுக்கி கொண்டே அவள் கைகள் ஒவ்வொரு முறையும் அவளை அடிக்கும் பொழுது அவன் மார்பையும் தீண்டி செல்ல,
‘உன் வலி எனக்கும் அல்லவா?’ என்பது போல் அவன் இதயம் வலியில் துடித்தது.
அவன் அவள் தோள்பட்டையை தாண்டி உள்ள ஜன்னல் கம்பியில் தன் கைகளை அழுத்தினான். ‘தன்னவளின் வலியை அந்த இரும்பு கம்பிகள் தாங்கி கொள்ளாதா?’ என்று அவளறியாமல் அதை அழுத்தினான்
“ஆமா, அப்படி தான் சொல்லுவேன்” அவன் குரல் கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தியது. ‘அவன் இருக்கிறான்…’ என்று உணர பேதை மனம் மறுத்தது. ‘நான் இருக்கிறேன்…’ என்று உணர்த்த அவனும் விரும்பவில்லை.
“நன்றி கடனுக்கு கல்யாணம் பண்ணவ நீ” தன் ஆள் காட்டி ஒற்றை விரலை திருப்பி, அவள் முகம் நிமிர்த்தி, அவன் அவளை குற்றவாளி கூண்டில் நிறுத்தினான்.
அங்கு மயான அமைதி. “நான் உங்களை நன்றி கடனுக்காக மட்டும் கல்யாணம் செய்யலை.” அவன் கைகளை தட்டிவிட்டு இலக்கியா முகத்தில் அடித்து கொண்டு வெடித்தாள்.
அப்பொழுது கதவு வேகமாக தட்டப்பட்டது.
“டேய், கதவை திற.” நிர்மலாதேவியின் குரல் ஓங்கி ஒலித்தது.
“இலக்கியா பாவம். அவளை வெளிய அனுப்பு. உங்களுக்குள் என்ன பிரச்சனை.” அவர் குரல் தோட்டத்து வீட்டிற்கு வெளியே கண்டிப்போடு ஒலித்தது.
இலக்கியா உணர்ச்சி துடைத்த முகத்தோடு விஜயபூபதியை பார்த்தாள். சுவரோரமாக சாய்ந்து தன் நாடியை முட்டு பகுதியில் பதித்து தன் கைகளால் கால்களை கட்டி கொண்டு தான் நின்று கொண்ட இடத்திலேயே அமர்ந்தாள்.
அவள் முகத்தில் அழுத்தமும் பிடிவாதமும் மண்டி கிடந்தது.
அவன் கதவருகே சென்றான். சற்று நிதானித்து கொண்டவன், கதவை திறக்கவில்லை.
“அம்மா, பேசிட்டு இருக்கோம். ஒரு பிரச்சனையும் இல்லை.” மில்லிமீட்டர் இடைவெளியில் அவளருகே அமர்ந்தான். தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
“நிர்மலா, நீ ஏன் இப்படி கூப்பாடு போடுற? அப்படி ஒன்னும் அவங்களுக்குள்ள பெரிய பிரச்சனை வந்திராது”பாட்டி, தன் பேரனின் மீதுள்ள அதீத நம்பிக்கையில் கூறினார்.
“இல்லை அத்தை… இலக்கியா…” நிர்மலாதேவி ஆரம்பிக்க, “அவ மேல உனக்கு என்ன திடீர் அக்கறை.” இப்பொழுது பாட்டி சீறினார்.
“இவ்வளவு நாள் எனக்கு இலக்கியா மேல அக்கறை இல்லைன்னு நீங்க சொல்லறீங்களா?” நிர்மலா தேவி கோபமாக கேட்க, “நீ வெளி காட்டிக்கிட்டதே இல்லையே.” ரங்கநாத பூபதி தன் மனைவியை குற்றம் சாட்டினார்.
“எந்த அன்பை வெளிக்காட்டி என்ன ஆகப்போகுது. எது நடக்க கூடாதுன்னு நான் நினைச்சேனோ எல்லாம் நடந்திருச்சு.” அவர் தன் சேலை முந்தானையை முகத்தில் மூடிக்கொண்டு விம்மினார்.
அங்கு நடப்பது எதுவும் புரியாமல் பார்த்து கொண்டிருந்த ஸ்ரீராம், தன் அத்தையை பார்த்தான்.
“புருஷன் பொண்டாட்டி பிரச்சனைக்குள்ள நாம போக கூடாது. அவங்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். எல்லாரும் வீட்டுக்குள் வாங்க” பாட்டி உத்தரவிட, வேறு வழியின்றி அனைவரும் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அவர்கள் பேசிக் கொண்டிருப்பது கேட்க, தோட்டத்து வீட்டிற்குள் இலக்கியாவும், விஜயபூபதியும் மௌனமாக அமர்ந்திருந்தனர்.
அவர்கள் சென்றதும், தன் கேள்வியை தொடர்ந்தான் விஜய பூபதி.
“மேடம் என்னை, நன்றி கடனுக்காக கல்யாணம் செய்யலை. அப்ப, காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டிங்க?” அவன் கேள்வி நக்கலாக வெளிவர, ‘காதல்…’ இந்த வாரத்தை அவள் செவிகளில் நாராசமாக ஒலிக்க, “ஐயோ…” என்று அலறினாள் இலக்கியா.
“காதல்… காதல்… காதல்… அப்படி ஒரு மண்ணும் எனக்கு உங்க மேல கிடையாது. அந்த கண்ராவி எல்லாம் எனக்கு உங்க மேல எல்லாம் வரவே வராது” அவள் அவன் மீது எரிந்து விழுந்தாள்.
அவன் முகத்தில் ஓர் ஏளன புன்னகை.
“உன்னை இடிச்சா அம்மாவுக்கு ஏன் வலிக்குது?” அவன் நெற்றி சுருங்க, “வழக்கமா நீங்க இடிக்க மாட்டீங்க. அவுங்க தானே இடிப்பாங்க.” அவள் கூற, “அது தான் நானும் கேட்குறேன். நாங்க இடிச்சா அவங்களுக்கு ஏன் வலிக்குதுன்னு?” அவன் தன் கேள்வியில் அழுத்தத்தை கூட்டினான்.
“ஏன்னா, நான் அவங்க அண்ணன் பொண்ணு” இலக்கியா கூற, விஜயபூபதி அதிர்ச்சியில் பக்கவாட்டில் திரும்பிக்கொண்டு அவளை பார்த்தான்.
“ரொம்ப எல்லாம் ஷாக் ஆக வேண்டாம். அதுக்காக எல்லாம் உங்க அம்மாவுக்கு என் மேல பாசம் எல்லாம் கிடையாது. நான் ரொம்ப வருத்தப்பட்டா கொஞ்சம் பதறுவாங்க. அவ்வுளவு தான். அவங்களுக்கு என்னை பிடிக்காது.” அவள் பேச, அவன் அவளை யோசனையாக பார்த்தான்.
“அம்மா, இது வரைக்கும் இதெல்லாம் என்கிட்டே சொன்னதே இல்லையே. பாட்டி, அப்பா கூட…” அவனிடம் கோபம்.
“உங்க அம்மாவுக்கு சொல்ல விருப்பம் இல்லை. அதனால் யாரும் சொல்லலை. அப்படி சொல்லி இவங்கெல்லாம் சந்தோஷ படுற அளவுக்கு என் அம்மா அப்பாவும் வாழலை” அவள் குரலில் விரக்தி.
“ஸ்ரீராம் அப்பாவின் சாயல். அவங்க அண்ணனை மாதிரி இருக்கிற ஸ்ரீராமை உங்க அம்மாவுக்கு பிடிக்கும். நான் என் அம்மாவின் சாயல். சாயல் மட்டுமில்லை. என் பேச்சு, என் பிடிவாதம் எல்லாம் என் அம்மாவை மாதிரின்னு சொல்லி சொல்லி உங்க அம்மா என்னை திட்டுவாங்க” அவள் அசட்டையாக கூறினாள்.
“உனக்கு இதெல்லாம் எப்படி தெரியும்? யாரு சொன்னா. எனக்கு தெரியாதே” அவன் குரலில் இப்பொழுது வருத்தம் மண்டி கிடந்தது.
“எல்லாரும் தெரிந்து கொள்ள இது ஒன்னும் அவ்வளவு சிறப்பான விஷயம் இல்லை” அவள் குரலிலும் இப்பொழுது வருத்தம். அவள் சற்று விலகி அமர்ந்து கொண்டாள்.
“…” முழுதும் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தோடு அவன் அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“அம்மா, அப்பா ரெண்டு பெரும் விரும்பி தான் கல்யாணம் பண்ணிருக்காங்க. ஆனாலும், சரியான புரிதல் இல்லாமல் சண்டை வந்திருக்கு. எப்பவும் அம்மா தான் சண்டைக்கு காரணமுன்னு அத்தை சொன்னாங்க.” கொஞ்சம் ஆழ மூச்சு எடுத்து கொண்டாள்.
“பாட்டியும் அப்படி தான் சொன்னாங்க.” அழுத்தமாக கூறினாள்.
“அப்படி ஒரு சண்டையில், அம்மா என்னையும் தம்பியையும் தூக்கிட்டு சொல்லமா எங்கையோ போய்ட்டாங்க. எங்களை எல்லாம் தேடி தேடி எங்களை பார்க்க முடியலைன்னு வருத்தத்தில் அப்பா கொஞ்சம் நாளில் இறந்துட்டாங்க.” இலக்கியாவின் உடலும், கைகளும் இறுகியது.
அவள் சொற்கள் இறுகி கொண்டு தொண்டையோடு நிற்க, அவளை ஆறுதல் படுத்த அவன் அவள் கைகளை பிடித்து தன் கைகளுள் புதைத்து கொள்ள எத்தனித்தான்.
அவன் கைகள் அவளை தீண்ட முற்படுகையில், “யாருடைய அனுதாபமும் ஆறுதலும் எனக்கு தேவை இல்லை.” தன் கைகளை தன்னோடு இறுக்கி கொண்டு, சற்று கடினமாகவே கூறினாள்.
“அம்மாவின் கோபம், பிடிவாதம் இதெல்லாம் தான் அப்பாவை கொன்னுடுச்சுனு அத்தைக்கு கோபம். அம்மாவும் தனியா கஷ்டப்படத்தில் ரொம்ப நாள் உயிரோட இல்லை. சாகும் தருவாயில் மாமாவுக்கு தகவல் சொல்லிட்டு எங்க ரெண்டு பேரையும் மாமா கிட்ட ஒப்படைச்சிட்டு இறந்துட்டாங்க” மனனம் செய்ததை ஒப்பிவிப்பது போல் கடகடவென்று கூறி முடித்தாள் இலக்கியா.
அவள் முகத்தில் வெறுப்பு கொஞ்சம் சலிப்பு.
“அத்தை, எங்க மேல முதலில் பாசமா தான் இருந்தாங்க. ஆனால், அப்புறம் நீங்களும், நானும் நெருக்கமா பழகும் விதத்தில் உங்க அம்மாவுக்கு என் மேல் சந்தேகம்.” அவள் விரக்தியாக சிரித்து கொண்டாள்.
“எங்க நான் உங்களை மயக்கி கல்யாணம் பண்ணிப்பேனோன்னு.” அவள் கூற, “ச்சீ… ச்சீ…” அவன் இடைமறிக்க, “உங்க அம்மாவை சொன்னால் வலிக்குதா? உங்க வீட்டில் எல்லாருக்கும் இந்த சுயநலம் தான்” இலக்கியா வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
மடமடவென்று தன் அறைக்குள் சென்று பெட்டியை திறந்து, அவள் வைத்திருந்த குருவி கூட்டை அவன் முன்னே வீசினாள். அதிலிருந்து, இரு குருவிகள் கண்களை உருட்டி கொண்டு, “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழுப்பின.
‘இதுக்கு பின் தான் கிய்யா… கிய்யா… மேஜிக் மறைஞ்சிருக்கோ?’ அந்நேரத்திலும் அவனுள் கேள்வி எழுந்தது.
‘இப்ப கேட்டா, கொன்னுடுவா.’ தன் எண்ணத்தை ஒதுக்கி வைத்து, அந்த குருவி கூட்டை கைகளின் எடுத்தான் விஜயபூபதி. அவன் கண்களில் அன்றைய தினத்தின் சாயல்.
“இது முன்னாடி ஒரு நாள் உன் ரூமில் இருந்த குருவிக்கூடு கலைஞ்சிடுச்சுன்னு நீ அழுதப்ப நான் செய்து கொடுத்தது தானே?” அவன் கண்களில் ஆச்சரியம்.
“ஆமா அத்தான். எனக்காக… நான் அழுதேன்னு நீங்க செய்து கொடுத்த இந்த குருவி கூடு எனக்கு ரொம்ப பிடிக்கும்.” அவளிடம் விம்மல்.
“உங்க பெயரை சொல்லி நான் இந்த குருவிகளை கொஞ்சிகிட்டு இருந்தேன். நிச்சயமா அதில் காதல் இல்லை அத்தான். அந்த உணர்வு காதல் இல்லை. எனக்கு தெரியும். நான் உங்க மேல வச்சிருக்கிற உணர்வு காதல் இல்லை. அதுக்கும் மேல… நீங்க எனக்கு வேணுமின்னு நான் நினைச்சதே இல்லை. உங்களை என் கணவனா நான் நினைச்சதே இல்லை.” அவள் நிறுத்த அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.
“எனக்குன்னு யாரும் இல்லாத சமயம். நீங்க மட்டும்தான் என் மேல அன்பு காட்டுவீங்க. நான் உங்களுக்கு நன்றி சொல்லி தான் இந்த குருவிகளை கொஞ்சி கொண்டிருந்தேன்.” அவள் ஆழ மூச்செடுத்து மீண்டும் தொடர்ந்தாள்.
“உங்களை காதலிக்கும் தகுதி எல்லாம் எனக்கு கிடையாதுன்னு எனக்கு அப்பவே தெரியும் அத்தான். அப்படி எனக்கு ஒரு எண்ணமும் ஒருநாளும் வந்தேதே இல்லை அத்தான். நான் உங்களுக்கு மனைவியாக வர தகுதி இல்லாதவள்ன்னு எனக்கு தெரியாதா? உங்க குடும்பத்தை அண்டி பிழைத்து கொண்டிருக்கும் அனாதை தானே அத்தான் நான். ” அன்றைய நிகழ்வில் கண்கலங்கி, இலக்கியா இன்று வாக்குமூலம் போல் விஜயபூபதியிடம் விளக்க முற்பட்டாள்.
“லூசு… லூஸு… ஏன் லூசு மாதிரி பேசுற?” அவன் அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டு, அவளை ஆறுதல் படுத்தினான்.
அவனிடமிருந்து விலகி, அவன் முன் கைகளை விரித்து சிந்தித்தாள் இலக்கியா. அவள் தலை முடி கலைந்திருந்தது. அவள் முகமெங்கும் கண்ணீர். “நான் உங்க மேல வைத்திருக்கும் அன்பு நிஜம். நீங்க கொடுத்த குருவிகளை நான் இன்னும் பத்திரமாக வைத்திருப்பது நிஜம்.” அவன் காலடியில் கிடந்த குருவிகளை தன் நெஞ்சோடு சேர்த்து கொண்டு கூறினாள்.
அவள் தீண்டலில், அது “கிய்யா… கிய்யா…” என்று அலறியது.
“உங்க மேல நான் நிறைய மரியாதை வச்சிக்கிருக்கேன் அத்தான். நீங்க நல்லாருக்கனுமுனு நான் ஒவ்வொரு நொடியும் நினைப்பேன். உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா அத்தான். ஆனால், எனக்கு உங்க மேல காதல் கிடையாது அத்தான். அது ஒருநாளும் எனக்கு உங்க மேல வராது. நான், உங்க மேல வச்சிக்கிற அன்பு, பாசம், மரியாதை எல்லாம் அந்த காதலுக்கும் மேல, இந்த உலகத்தில் அதற்கு ஏதாவது பெயர் உண்டானு எனக்கு தெரியலை அத்தான். ஆனால், அத்தை சொன்ன மாதிரி நான் நினைச்சதே இல்லை அத்தான்” அவள் சிறுகுழந்தை போல் தன்னிலை விளக்கம் கொடுத்து பதறினாள்.
அவள் பதட்டத்தில், அவன் கண்கள் கலங்கியது. அவன் அவள் தலை கோதினான்.
“எனக்கு உன்னை தெரியும் இலக்கியா.” அவன் அவளை தன் தோள் மீது சாய்த்து கொண்டான்.
மேலும் பேச முடியாதவள் போல், அவன் மார்பில் சாய்ந்து விம்மினாள். “ஆனால், அத்தை என்னை அன்னைக்கு அடிச்சி தலை முடியை பிடித்து வீட்டை விட்டு வெளிய தள்ளிட்டாங்க. உன் அம்மா, என் அண்ணனுக்கு பண்ணதை, நீ திரும்பவும் என் பையனுக்கு செய்ய திட்டம் போடுறியான்னு?” அன்றைய வலியை இன்றும் உணர்பவள் போல அவள் நடுங்க, அவன் பிடி இன்னும் அவளுக்கு ஆதரவாக இறுகியது.
“ஏன் இலக்கியா, இதெல்லாம் நீ என்கிட்ட சொல்லவே இல்லை. உன் அத்தான் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” அவன் ஆழமான குரலில் கேட்டான்.
“ஒருவேளை நீங்களும் என்னை நம்பாமல் போய்ட்டா?” அவள் தலையை உயர்த்தி, கண்களை பெரிதாக விரித்து அப்பாவியாக கேட்டாள். அவள் குரல் இன்றும் அச்சத்தை வெளிப்படுத்தியது.
“நான் உன்னை நம்புவேன் இலக்கியா. நீ தான் என்னை நம்பலை.” அவன் குரலும் அவளை குற்றம் சுமத்தியது.
இலக்கியா உதட்டை சுளித்து கொண்டாள். “ஆனால், விதியை பார்த்தீங்களா? உங்க அம்மா எதுவெல்லாம் நடக்க கூடாதுன்னு நினைச்சங்களோ, அது எல்லாம் நடந்திருச்சு.” மேலும் பேச தடுமாறுபவள் போல் தன் கண்களை இறுக மூடி திறந்தாள்.
“மாமா… மாமா…” அவள் தடுமாறினாள்.
“உங்களை கல்யாணம் செய்து, என் அம்மா, அப்பாவுக்கு செய்த பாவத்தை என்னை சரி செய்ய சொன்னாங்க. உங்க நிலைமைக்கு நான் துணை நின்னா, அத்தையின் கோபம் மாறும்முன்னு சொன்னாங்க.” அவள் குரலில் விரக்தி.
“நன்றி கடன்… அடுத்து பாவ கடன்…” அவள் அவனிடமிருந்து விலகி கொண்டாள்.
“நான் அப்பவும் மாமா கிட்ட மறுப்பு தெரிவிச்சேன். எந்த கடனுக்கும் திருமணம் தீர்வாகாதுன்னு சொன்னேன். அத்தைக்கு என்னை பிடிக்காது. அத்தானுக்கு என்னை பிடிக்காது. துர்காவுக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன்னு சொன்னேன் அத்தான். ஆனால், அதுக்கு அப்புறம் மாமா…” அவள் மேலே பேச முடியாமல் தடுமாறினாள்.
“மாமா…” அவன் அவளை பேசவைக்கவே முயற்சித்தான்.
“மாமா என் காலில் விழுந்துட்டாங்க அத்தான்.” முகமூடி கதறினாள்.
“அந்த நொடி நான் செத்துட்டேன் அத்தான். எனக்கு வேற வழி தெரியலை அத்தான். மாமா சொல்றதுக்கு நான் சரின்னு சொல்லிட்டேன் அத்தான். எனக்கு விவரம் தெரிந்து எனக்கு எல்லாமே மாமா தான். அதுக்கு மேல மாமாவுக்கு மறுப்பு தெரிவிக்கும் சக்தியை அந்த கடவுள் எனக்கு கொடுக்கலை அத்தான்.” அவள் அழுகையினோடே வார்தைகளை கோர்த்தாள்.
அவன் சுவரோடு சாய்ந்து உறைந்து நின்றான்.
“மாமாவுக்கு காரியமாகனும். உங்களுக்கு துர்கா வாழ்க்கை நல்லாருக்கணும். அத்தைக்கு மகன் வாழ்க்கை நல்லாருக்கணும். நான் உங்க குடும்பம் முன்னாடி பகடையாகிட்டேன். இல்லையா அத்தான்?” அவள் குரலில் வலி இருந்தது.
“அன்னைக்கு கூட எனக்கு வலிக்கலை அத்தான். உங்களுக்கு என்னை பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். துர்காவுக்கு கஷ்டம் தரேன்னு எனக்கு தெரியும். எல்லாத்தையும் சரி செய்யலாமுன்னு நம்பினேன் அத்தான். எனக்காக இத்தனை வருடம் செய்தவர்களுக்கு திரும்பி செய்யறேன் தான்னு நினச்சேன். ஆனால், எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமுன்னு நீங்க சொன்னப்ப…” நிறுத்திக் கொண்டாள் இலக்கியா.
அவள் வார்த்தைகள் கூற முடியாத வலியை அவள் முகமும், மடிந்த அவள் இதழ்களும் காட்டியது.
அரங்கேறிய சம்பவங்களை அறிந்து கொண்ட அவனும் உடைந்து போனான்.
வருத்தத்தை பனியாய்
விலக்கவே விழைகிறேன்
பனி அல்ல நான்
பெரும் எரிமலையென
பொங்குவதேனோ?
சிறகுகள் விரியும்…