அன்பின் உறவே… 8
அன்பின் உறவே… 8
அன்பின் உறவே…8
அடங்க மறுக்கும் மனதை, அமைதிப்படுத்தும் வித்தை தெரிந்திருந்தால் இந்நேரம் ரவீணா நிம்மதியாய் இருந்திருப்பாள். தந்தையின் இளப்பமான வார்த்தைகளை கேட்டு அவளின் அகமும் புறமும் கொதித்துக் கொண்டிருந்தது.
காதலிப்பது அத்தனை பெரிய பாவச்செயலா? பிறந்தநாளன்று கத்தியின் மேல் நிற்கவைத்தே கேள்விகள் கேட்டு பிரஜேந்தரை நோகடித்ததில் இவளின் மனமும் வெகுவாய் காயப்பட்டிருந்தது. எல்லாம் காதல் படுத்தும்பாடு!
சற்றும் யோசிக்காமல் என்னவெல்லாம் பேசிவிட்டார்? தன் ஆளுமையைக் காண்பிக்க, மகளென்றும் பாராமல், இருவரையும் இணைத்து கீழிறக்கிப் பேசிய தந்தையின் மனோபாவத்தில் உயிரோடு புதைந்தே போனாள்.
பிரஜேந்தரின் செயலுக்கு, தான் எதிர்வினையாற்றியதை கேட்டும், குற்றவாளியாக நிற்க வைத்து நிந்தித்து விட்டார். உடலும் மனமும் கூசும்படியான வன்சொற்களில் முற்றிலும் உடைந்து போயிருந்தாள் ரவீணா.
பாசத்தை வெளிப்படுத்துவதிலும் சுயநலம், கௌரவத்தை பார்ப்பவரிடம் நியாயத்தையும், நம்பிக்கையையும் எதிர்பார்த்து நின்றது தவறுதான்.
பருவமயக்கத்தில் சுகத்தை தேடி அலைபவளாக தன்னை சித்தரித்து, அதற்கு உடந்தையாக அம்மாவையும் கோர்த்து விட்டுவிட்டார். இப்பழிச் சொற்களை கேட்டு எதிர்த்துப் பேசினால் அதற்கு அடங்காபிடாரி, அதிகப்பிரசங்கி பட்டம் வேறு… நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. போதும் பெற்றவரின் உறவு என்று நினைக்க வைத்து விட்டார் மனிதர்.
“உங்கப்பா எப்படிபட்டவர்னு இப்பவாவது புரிஞ்சதா… இதுக்கு பிறகும் காதல்தான் பெரிசு, அந்த பையன்தான் வேணும்ங்கிற நெனைப்பு இருந்தா அதை மறந்துடு வினு!” வெடித்து வந்த விசும்பலை முழுங்கிக்கொண்டு அம்மா சுகந்தி சொல்லும்போது அத்தனை ஆத்திரம் வந்தது ரவீணாவிற்கு…
“அவரோட சுபாவத்துக்கு நான் ஏன்மா, என் காதல விட்டுக் கொடுக்கணும்?” அழுத்தமாகவே கேட்டாள்.
பிரஜேந்தர் அத்துமீறி நடந்து கொண்டான்தான். ஆனால் தன்மீதுள்ள நேசத்தை நெஞ்சுயர்த்தி உடைத்துச் சொல்லி விட்டானே! அந்தப் பெருமையில் மிதப்பாகவே கேள்வி வந்தது.
“இப்ப இனிக்கும்டீ! ரெண்டு வருசம் போனதுக்கப்புறம் அவனோட சுபாவம், வக்கிரமெல்லாம் வெளியே தெரிய வரும்போது, நாமதான் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிப்போம். ஆம்பளைங்க எப்பவும் ஒரே மாதிரிதான் இருப்பாங்க! எனக்கு வந்த கேடு உனக்கும் வாய்க்க வேணாம். இந்த காதல், கருமாந்திரம் எல்லாத்தையும் விட்டுட்டு ஒழுங்கா இருக்கப் பாரு!” அம்மா சொல்லச் சொல்ல கொதித்துப் போனாள் மகள்.
“உனக்கு தோல்வியில முடிஞ்சா, அதை மொத்தமா தப்புன்னு சொல்வியா’மா? நீ ஒருத்தி பெயிலானதுக்கு சப்ஜெக்ட்டை குறை சொன்னா எப்படி?” அலட்டிக் கொள்ளாமல் ரவீணா பேசப்பேச சுகந்திக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“பல்ல தட்டி கையில கொடுத்திருவேன் நாயே! எனக்கே புத்தி சொல்ல வந்திட்டியா? ஒருதடவ முடிவெடுத்தா அதுல உறுதியா இருக்கணும். அந்த உறுதிய உன்னோட காதல் குடுக்குமா? அப்படி வர்ற உறவு நம்ம கூட வாழுற உறவுகளுக்கு உறுத்தலா மாறிடக்கூடாது…” தாய் அதட்டலில் இறங்க,
“அப்ப உன்னோட காதல், கல்யாணம், விவாகரத்துன்னு ஒவ்வொரு நெலையிலயும் உன் அம்மா மனசு நோகாமாதான் இருந்தாங்களாம்மா? நீயா ஏற்படுத்திகிட்ட உறவு அவங்களுக்கு உறுத்தலா இருக்குன்னு உன்னை தடுத்து நிறுத்தி இருக்காங்களா?” பட்டென்று தெறித்து விழுந்த ரவீணாவின் கேள்வியில் அம்மாவும் பாட்டியும் விதிர்த்துப் போய் நின்றனர்.
இளரத்தம், காதலின் வீரியமென அனைத்தும் மகளின் வடிவில் நின்று சுகந்தியை குற்றவாளியாக நிற்கவைத்து விட்டது. வாலிபவயதில், காதலின் மயக்கத்தில் குருமூர்த்தியை கைப்பிடித்ததும், அடுத்தடுத்து கணவனுடனான பிரிவு, மகளின் உரிமைக்கு நீதிமன்றம் ஏறி இறங்கியது என எல்லா நிலையிலும் தனது விருப்பம் மட்டுமே நடக்க வேண்டுமென்று பிடிவாதமாக நின்றவர் சுகந்தி.
மகளின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லையென்றாலும் எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல், இதுநாள் வரையில் மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இன்னமும் அவளுக்கு ஆதரவாக இருப்பவர் தாய் அம்சவேணி.
தற்போது ரவீணாவின் கேள்வியில், தனது தாயின் மனவேதனை சுகந்திக்கு புரிந்தாலும், இதுநாள் வரையில் எதற்காகவும் தன்னை விட்டு விலகி நிற்காதவரை கடவுளைப் போலவே கண்டார். என்ன நடந்தாலும் மகளை விட்டுக்கொடுக்காத அப்பாவி அவர். இதோ, இப்போதும் பேத்தியின் கேள்வியில் அதிர்ந்து நின்ற பெண்ணை காக்கும் விதமாய்,
“அவ நம்பிப் போய் ஏமாந்ததால தான் உனக்கு எடுத்துச் சொல்றா… அவபட்ட கஷ்டத்துல ஒருசதவீதம் கூட, அவ பெத்த பொண்ணு உனக்கு வேணாம்னுட்டு பேசுறா… அது உனக்கு தப்பா படுதா? பனைமரத்துக்கு கீழே நின்னு பால் குடிச்சாலும் கள்ளுன்னு சொல்ற உலகத்துலதான், நாம இன்னமும் வாழ்ந்துட்டு இருக்கோம் ராஜாத்தி! எதிர்த்து பேசாம எல்லாம் உன்னோட நல்லதுக்குதான்னு மனசுல பதிய வைச்சுக்கோ! படிச்சபுள்ள, உன் அம்மாவோட வாழ்க்கைய கண்கூடா பார்த்துகிட்டு இருக்கறவளுக்கு எதுவும் சொல்லித் தெரியனும்ங்கிற அவசியமில்ல…”
கண்டிப்பும் வாஞ்சையும் கலந்து வந்த பாட்டியின் வார்த்தைகளுக்கு, எதிர்வார்த்தை பேசத் தோன்றாவிட்டாலும், தனது முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேனென்று சட்டமாகக் கூறிவிட்டாள் ரவீணா.
அம்மாவின் பிடிவாதத்தை இரண்டு மடங்காக பெருக்கிக் கொண்டு வீம்புடன் நின்றாள். அம்மாவும் பாட்டியும் இரவு முழுதும் தர்க்கம், கெஞ்சல், கொஞ்சல், அதட்டல் என அனைத்து வழிகளில் முயற்சித்தும் அவளின் மனதை அசைக்க முடியவில்லை.
இவர்களின் கதா காலேட்சேபத்தில் இடைவிடாது அழைத்துக் கொண்டிருந்த பிஸ்தாவின் அழைப்பினை கவனிக்க மறந்தே போனாள். அப்படியே அழைப்பை ஏற்றிருந்தாலும் அவனுக்கு சாற்றுமுறைகளாக பல வசவுகளையும் திட்டுகளையும் கொடுக்கத் தயாராக இருந்தது பெண்மனம்.
அவனது அவசரபுத்திக்காக அவனது காதலையே மறுக்கும் சிறுபிள்ளை வீம்பெல்லாம் அவளிடத்தில் இல்லை. கோபம்… முடிவில்லா கோபம், கோபமோ கோபம் மட்டுமே தற்போது அவளது பிஸ்தாவினிடத்தில் உண்டு.
அதை ஆற்றுப்படுத்தும் பொறுப்பு அவனுடையது. தனதன்பின் நிழலை தேடி அவன் எப்போதாகினும் தன்னைத் தேடி வந்துவிடுவான் என்ற திடமான நம்பிக்கையில் நிம்மதியாகவே அவள் உறங்கச் செல்ல, மறுநாளின் விடியல் பல களேபரேங்களை தாங்கிக் கொண்டு விடிந்தது.
**********************
பருவமெய்திய பெண்களை வீட்டில் வைத்திருப்பது பெற்றோரின் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதற்கு சமமென்பது என்கிற சொலவடை இந்த காலத்திற்கும் ஏற்புடையது. ரவீணாவின் தந்தை குருமூர்த்திக்கும் அவ்வாறே…
மகளின் பிறந்தநாளன்று பிரஜேந்தர் தனது வீட்டில் நிகழ்த்திய அத்துமீறலை அத்தனை எளிதாய் மறக்க முடியாமல் கொந்தளித்தவர், அதிரடியாக அடுத்தடுத்த காரியங்களில் இறங்கினார். அன்றைய இரவே மகளை அழைத்து கடுமையான வார்த்தைகளில் கடிந்துபேசியவர், மறுநாள் காலையில் அவளின் அலைபேசியை தன்வசமாக்கிக் கொண்டார்.
“எக்ஸாம், வைவா நடக்கும்போது மட்டும் வெளியே போனாபோதும். மிச்சநாள்ல வீட்டுலயே அடங்கி, ஒடுங்கி இரு… எனக்கு தெரியாம வெளியே போறது, வர்றதுன்னு யாரும் எந்தவொரு வேலையும் வச்சுக்ககூடாது” வீட்டின் சர்வாதிகாரியாக அனைத்தையும் தீர்மானித்து, டிரைவரின் பெயரில் புது காவலாளியை வீட்டு கெஸ்ட்ஹவுசில் குடியேற்றினார்.
மீண்டுமொருமுறை தடாலடியாக வீட்டில் நுழைந்து எந்தவொரு வம்பினையும் பிரஜேந்தர் அரங்கேற்றி விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். எப்படியும் பெண்ணை சந்திக்க இங்கே வருவான் என்பதும் அவர் அறிந்த விஷயம். ஒருகாலத்தில் இவரும் காதலனாக அரிதாரம் பூசியவர் தானே!
விடிந்தும் விடியாத பொழுதில் தனது வீட்டின் எல்லைக்குட்பட்ட காவல்நிலையம் சென்று, நடந்த அனைத்து விசயங்களைச் சொல்லியே தனக்கும், மகளுக்கும், வீட்டிற்குமென காவல்துறையின் பாதுகாப்பை வேண்டி நின்றார்.
சற்றே நிதானித்திருந்தால் மகளின் பெயரும், தனது குடும்பத்தின் தன்மானமும் சேர்ந்தே அடிபடப்போவது நன்றாகப் புரிந்திருக்கும். அத்தனை பக்குவம் இருந்திருந்தால் சம்பவத்தின் போதே அமைதியுடன் செயல்பட்டு பிரச்சனையையும் அடக்கியிருப்பார். ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்ட மஹானுபாவர் அவர். வேறொன்றும் சொல்வதற்கில்லை.
“பெரிய இடத்துப் பையன்… எப்ப, என்ன செய்வான்னு சொல்ல முடியாது சார்! என்னாலயும் எப்பவும் என் பொண்ணு பக்கத்திலேயே இருந்து பார்த்துக்க முடியாது. என் தொழில் அப்படி! இன்னும் ரெண்டு மாசத்துல மகளுக்கு கல்யாணம் முடிச்சு வைக்கிறதா பிளான் பண்ணியிருக்கேன். அதுவரைக்கும் என் வீட்டுக்கு போலீஸ் புரொடக்சன் அவசியம் வேணும்…” வரிசையாக காரணங்களை குருமூர்த்தி முன்வைக்க, காவல்துறையும் பாதுகாப்பு தர சம்மதம் தெரிவித்தது.
ஆகமொத்தம் பிரஜேந்தர்- ரவீணாவின் காதல் விவகாரம் வெளியில் கசியத் தொடங்குவதற்கு குருமூர்த்தியே காரணமாகிப் போனார். சமூகத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக வலம்வரும் கருணாகரன் குடும்பவாரிசின் மீதே ஒருவர் புகார் அளித்திருப்பதை உடனே அவரிடம் தெரியப்படுத்தியது காவல்துறை.
சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில், பிறர் மதிக்கும் இடத்தில் இருக்கும் கருணாகரனுக்கு, குருமூர்த்தியின் செயல் மிகப்பெரிய அவமதிப்பாகிப் போனது.
“யார் வீட்டு பையன் மேல, யாரு கம்பிளைண்ட் கொடுக்குறது? அந்த குருமூர்த்திய ஏதாவது ஒரு பிரச்சனையில மாட்டிவிட்டு உள்ளே தள்ளுயா!” தகவலைச் சொல்ல வந்த அதிகாரியிடமே பெரும் சீற்றத்துடன் கொந்தளித்து சொன்னார் கருணாகரன். பெரிய இடங்களில் எந்தத் துறையும் அவர்களின் கைப்பிள்ளைகளாகவே மாறிவிடுவதால் அவரின் குரலும் சற்று உரக்கவே ஒலித்தது.
“சார்… அப்படியெல்லாம் சட்டுசட்டுன்னு ஆக்சன் எடுக்க முடியாது. நீங்க சொசைட்டியில பெரிய புள்ளிங்கிறதால தான் இந்த கேஸ் கம்பிளைண்டோட நிக்குது. இதுவே வேற இடமா இருந்திருந்தா, கேஸ் ஃபைல் பண்ணி, நீங்க, அவருக்கு செய்யச் சொன்ன காரியத்தை, நாங்க உங்க பையனுக்கு செஞ்சு முடிச்சிருப்போம்!
கொஞ்சநாளைக்கு பையனை உங்க கண்ட்ரோல்ல வச்சுக்கோங்க… இல்லன்னா, ஊருல இருக்க வைக்காம வெளிநாட்டுக்கு அனுப்பி வைங்க! அந்த பொண்ணோட கல்யாணம், காட்சி முடிஞ்சதும் திரும்ப அழைச்சுக்கலாம்.
கல்யாண விஷயம் பையனுக்கு தெரியவந்தா சிலிர்த்துகிட்டு திரும்ப பிரச்சன பண்ணப் போவானுங்க… எதுவா இருந்தாலும் காதுங்காதும் வச்ச மாதிரி விசயத்தை முடிச்சுக்கோங்க சார்!” தன்மையாக கூறிவிட்டு கடமையை முடித்துக் கொண்டுச் சென்றது காவல்துறை.
வெளியாட்கள் வந்து கண்டிக்குமளவிற்கு நடந்து கொண்ட இளையமகனின் செயலை நினைத்து அவனைக் கொன்றுபோடும் ஆவேசமே ஏற்பட்டது தந்தைக்கு… ஆண்டாண்டு காலமாக போற்றிப் பாதுகாத்து வந்த குடும்பப் பெருமையை காற்றில் பறக்க விட்ட மகனை என்னசெய்தால் தகும் என்றே மனதில் பலவகையான எண்ணங்களை அசைபோட்டபடியே பிரஜேந்தரின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தார் கருணாகரன்.
தனக்கெதிரான நண்பர்களின் பேச்சினில் கடுப்பினைச் சுமந்து கொண்டு மதியம் வீட்டிற்கு வந்தவனை, முன்தினம் போலவே கோபத்துடன் எதிர்கொண்டார் தந்தை. அருகினில் அம்மா சரஸ்வதியும் அமைதியாக அமர்ந்திருந்தார்.
மருமகள்கள் எப்போழுதும் போல் ஹாலிலும் சமையலறையிலும் ஏதோ ஒன்றை உருட்டியபடி நடப்பதை வேடிக்கை பார்க்கத் தயாராய் நின்று கொண்டிருந்தனர்.
“இன்னைக்கு யார் வீட்டுக்கு போயி நம்ம வீட்டு கௌரவத்த அடகு வச்சிட்டு வந்த?” எடுத்த எடுப்பிலேயே காரமாகவே கேட்ட தந்தையின் வார்த்தைகளில் சிலைபோல் உறைந்தான் பிரஜேந்தர்.
தான் சொல்லாமல் மறைத்து வைத்த நேற்றைய விஷயம் ஒருவேளை அப்பாவின் காதிற்கு வந்துவிட்டதா? எவ்வாறு சாத்தியம் என மனக் குழப்பத்தில் பதில் அளிக்காமல் முழித்தான்.
“ஊருல ஒண்ணுமில்லாம ஷோ காமிக்கிறவன் எல்லாம் நம்ம குடும்பத்து மேல புகார் கொடுத்துட்டு போறான். அவன் குடும்பத்துல ஆயிரம் ஓட்டை வச்சுக்கிட்டு பெரிய யோக்கியனாட்டம் நம்ம வீட்ட பார்த்து காறித் துப்பிட்டு திரியுறான். இத அப்படியே தொழில் வட்டாரத்துலயும் இவன் பரப்ப விட்டா, குடும்பத்துக்கு நல்ல பேருதான் நெலைச்சு போகும். பொறுக்கித்தனம் பண்றவன்னு சொல்லாம சொல்லிட்டுப் போறான். இப்படிப்பட்ட பேச்செல்லாம் வாங்கி தலைகுனிஞ்சு நிக்கிறதுல ரொம்ப சந்தோசமா இருக்குல்ல…” குத்தல் வார்த்தைகள் தடையின்றி வெளிப்பட, நன்றாகவே பிரஜேந்தருக்கு விஷயம் புரிபட ஆரம்பித்தது.
“உன்னால பிரச்சனை வரும்னு அவன் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு நிக்கிறானாம். பெரிய பெருமைதான் உனக்கு வந்து சேர்ந்திருக்கு. உனக்குனு ஒரு அடையாளத்தை தேடிக் கொடுக்கணும்னு, நான் பல யோசனை பண்ணிட்டு இருந்தா, நீ ரவுடித்தனம் பண்ணி திமிராத் திரியுற!”
யாரையும் வாயைத் திறக்க விடாமல் அவராகவே தனது மனத்தாங்கலை கோபமொழிகளாக கொட்டிக்கொண்டே போனார். பெரியவரின் பேச்சைக் கேட்டு மனைவியே அரண்டு நிற்கும் பொழுது வேறு யார் இவருடைய பேச்சில் மூக்கை நுழைப்பது? அதற்கும் மீறி மகன் பேசமுன்வர, அதற்கும் கைநீட்டி தடுத்து நிறுத்தி விட்டார்.
“உன்னோட விளக்கத்தையோ, உன் பக்க நியாயத்தையோ கேக்க நான் தயாரா இல்ல… என்னோட பேச்சை கேட்டு ஒழுங்கா என் மகனா மட்டும் இருக்கப்பாரு! அப்படியெல்லாம் முடியாது… அந்த திமிரு பிடிச்சவன் பொண்ணு பின்னாடிதான் சுத்தப் போவேன்னா, இங்கே இருந்து மொத்தமா போயிடு! சல்லிக்காசு இங்கேயிருந்து தேறாது உனக்கு… யாரும் உன்ன இங்கே பிடிச்சு வைக்கல…” ஆணித்தரமாக தனது இறுதி முடிவை கூறிவிட்டு சென்று விட்டார்.
அன்பாய் சொன்னால் கண்களில் விரலை விட்டு ஆட்டம் காண்பிக்கும் பிஸ்தாவிற்கு, அப்பாவின் கண்டிப்பு கலக்கத்தையும் பயத்தையும் கொடுத்தாலும் சுயத்தையும் உரசிப் பார்த்தது. ரோசம், ஆவேசம், ஆங்காரம் என கொதித்தெழும் அத்தனை உணர்வுகளும் ஒரேநேரத்தில் திரண்டு அவனை இறுக்கச் செய்தன. இத்தனை எள்ளல் பேச்சினை கேட்டுக் கொண்டு இங்கே இருக்க அவனின் மனம் சற்றும் ஒப்பவில்லை.
வீட்டை விட்டு வெளியேறும் எண்ணம் தலைதூக்கிய அடுத்த நிமிடமே எங்கே சென்று தங்குவது? எப்படி வாழ்வது? உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கே பிறர் தயவை நாடி நிற்க, பெரிய வீட்டுப் பிள்ளைக்கு சட்டென்று உடல் கூசிப் போனது.
தனது தற்போதைய வாழ்க்கை நெறிமுறைகளை அலசி ஆராய்ந்ததில் உடலும் மனமும் சற்றே நிதானித்தது. ஆனால், அந்த நிதானமும் வீட்டை விட்டு வெளியேறும் முடிவினை மட்டுமே ஆலோசித்தது.
தீவிர யோசனையுடன் தோட்டத்தில் நடைபயின்றவனின் விரல்கள் அவனையுமறியாமல், ரவீணாவின் அலைபேசி எண்ணை அழுத்தியிருக்க, அவளும் அழைப்பினை ஏற்றிருந்தாள்.
*********************
காவல்நிலையத்திற்கு சென்று வந்த குருமூர்த்தியிடம் இருந்து மகளின் அலைபேசியை சற்று முன்புதான் சுகந்தி கேட்டுப் பெற்றிருந்தார்.
“ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ணிட்டு இருக்கா… ஸ்பெசல் கிளாஸ் போகாம, இங்கே இருந்தே படிக்கிற வேலையை பார்க்கட்டும். ஃபோனக் குடுங்க!” வலுக்கட்டாயமாக அலைபேசியை பிடுங்கிக் சென்று மகளின் கைகளில் திணித்திருந்தார் சுகந்தி.
மதியம் ஒருமணிக்கு மேல் வகுப்புகள் முடிந்த நேரத்தில், வீட்டுப் பெரியவர்கள் மதிய உணவை முடித்துவிட்டு ஓய்வெடுக்க சென்றிருந்தனர். அவ்வேளையில் அலைபேசியில் பிரஜேந்தரின் அழைப்பு வந்து ரவீணாவை அலைகழித்தது.
‘படுபாவி! செய்யறதையும் செஞ்சுட்டு ஃபோனா பண்றே? இவனுக்கு நேரங்காலமே இல்லையா? அட்டெண்ட் பண்ணமாட்டேன் சாவுடா நீ!’ மனதிற்குள் கரித்துக் கொட்டியவள், பிஸ்தாவின் அழைப்பினை ஏற்கவே இல்லை.
கோபத்திற்கு தகுதியே உரிமைதான்…
உரிமைக்கு அடித்தளமே அன்புதான்…
கோபத்தையும் உரிமையையும் பாலமிட்டு
கோர்ப்பதே அன்பின் வெளிப்பாடுதான்!
காதலியின் கோபம்…
அவள் தந்தையின் குரோதம்…
இவனது தந்தையின் ஆங்காரம்…
இதற்கெல்லாம் அடித்தளமான பிஸ்தாவின் காதல்… அவனை வாழ வைக்கப் போகிறதா? வீட்டை விட்டு வெளியேற்றப் போகிறதா? இனிவரும் பதிவுகளில்…