அன்பின் உறவே – 23

அன்பின் உறவே – 23

அன்பின் உறவே… 23

“ஆளுயரத்துக்கு வளர்ந்து நின்னு என்ன பிரயோசனம்? வயசு ஏறின அளவுக்கு புத்தி ஏறலையே! இவ எல்லாம் நாளபின்ன வெளியுலகத்துல எப்படி இருக்கப் போறான்னு  சந்தேகமா இருக்கு” தனது மனக்குமுறலை கொட்டத் தொடங்கினார் அம்சவேணி பாட்டி.

குருமூர்த்தி அனைவைரையும் தட்டிக் கழித்து விட்டுச் சென்றதும் நிமிடங்கள் அமைதியாக கரைந்து நிற்க, அதை உடைத்தவாறு பேசினார் பாட்டி.

“எதுக்கும்மா தேவையில்லாதத பேசணும்? அவங்களை மொதல்ல வெளியே போகச் சொல்லுங்க. இந்த மனுஷன் இப்படி போனதுல இன்னும் என்னென்ன பிரச்சனை வந்து நிக்கப் போகுதோ தெரியல? இதுல இவங்களும் இங்கேயே நின்னுட்டு இருந்தா வேண்டாத பேச்செல்லாம் வளரத்தான் செய்யும்” கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக சுகந்தி, தாயையும் மகளையும் விரட்டியடிக்க, அவர்களுக்கு பெருத்த அவமானமாகிப் போனது.

“எங்க மேல தப்பிருக்குன்னு உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க! உங்க பொண்ணோட வார்த்தைக்காக தான் இங்கே நிக்கிறோம். மத்தபடி இங்கே இருக்கணும்னு எங்களுக்கு எந்த அவசியமும் இல்ல” பொங்கிய ரோசத்துடன் சீறியெழுந்தவளாய் ஆராதனா பேச, மகளை அடக்கிவிட்டு ரவீணாவின் முகத்தைப் பார்த்தார் அன்னலெட்சுமி.

“இவ பண்ணின அரைவேக்காட்டு தனத்துக்கு நானும் கேஸ் போட்டு தண்டனை வாங்கிக் கொடுத்தா, அதைவிட பைத்தியகாரத்தனம் வேற எதுவுமில்ல. இவளோட சேர்ந்து என் பேரும் நாறிப் போறதுக்கு, நானே கோடு இழுத்து குடுத்த மாதிரி ஆகிடும். இனிமேலாவது ஒழுங்கா இருக்க சொல்லுங்க!” அதிருப்தியுடன் தன் பேச்சினை முடித்துக் கொண்டாள் ரவீணா.

ஆராதனாவின் மேல் பரிதாபம் எழுந்தாலும் அதையும் தாண்டிய கோபம் உள்ளுக்குள் மூள்வதை யாராலும் தடுக்க முடியவில்லை. ‘இவளின் விதிக்கு பிறரை ஆட்டிவைப்பாளா’ என அனைவரின் மனதிலும் ஓயாத கண்டங்கள் குமைந்து கொண்டிருந்தன.

“உன் முடிவு இப்படி இருக்கும்னு நான் ஏற்கனவே கெஸ் பண்ணிட்டேன் பிங்கி! அதனாலதான் இவளோட ஸ்டேஷனுக்கு போகாம, இங்கே கூட்டிட்டு வந்துட்டேன். ராஜூவை விட்டு ஸ்டேஷன்ல இன்ஃபார்ம் பண்ணியாச்சு. நாளைக்கு போயி கம்பிளையின்ட வாபஸ் வாங்கிடலாம்” பிரஜேந்தர் கூறி முடிக்க, அப்பொழுதும் ஆராதனா மன்னிப்பை வேண்டவே இல்லை.

ரவீணா அனுபவித்த கொடுமையான உணர்வுகளின் தாக்கத்தினை அறிந்ததில் இருந்து ஆராதனாவின் மனம் சமனடைய மறுத்தது. தனது தவறுக்கு மன்னிப்பு வேண்டாமென திமிராய் நின்றிருந்தவள், தமக்கையின் முகத்தை பார்க்கவும் வெட்கிப் போயிருந்தாள்.

சகோதரியாக பார்க்கவில்லை என்றாலும் அவளை, தன்னைப் போன்ற சாதாரண பெண்ணாய் பார்த்திருக்கலாம் என்கிற காலம் கடந்த ஞானோதயம் இப்பொழுது தோன்ற, அசையாமல் அன்னையின் முகம் பார்த்து செய்வதறியாது நின்றாள்.

தன் குடும்பத்தைப் போலவே, இந்தக் குடும்பமும் தந்தையால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததும் இவளுக்கு சவுக்கடி கிடைத்த நிலைதான். மனப்பொருமலுடன் பழிவாங்க நினைத்ததெல்லாம் புஷ்வானமாய் சிதறிப் போயிற்று.

“பொண்ணுன்னா இப்படி இருக்கணும்டீ! வாய்ப்பு இருந்தும் எல்லா பக்கமும் யோசிச்சு முடிவெடுக்குற நிதானம்தான் நம்மை கௌரவப்படுத்தும். இன்னும் மசமசன்னு கையை பிசைஞ்சிட்டு நிக்காதே! மனசை விட்டு மன்னிப்பு கேட்டுட்டு வா, கிளம்புவோம்!” மகளை ஊக்கினார் அன்னலெட்சுமி.

அன்னையின் பேச்சில் நிதர்சனத்தை உணர்ந்தவளாக, அனைவரின் முன்னிலையில் ரவீணாவின் கையை தனக்குள் வைத்துக் கொண்டு, “என்ன சொல்லி மன்னிப்பு கேக்கறதுன்னு எனக்குத் தெரியல. என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு. என் மேல பரிதாபப்பட்டு என்னை மன்னிச்சிடாதே! எந்த முறையிலாவது எனக்கு தண்டனை குடுத்திடேன்” கெஞ்சலாய் வேண்டி நின்றாள் ஆராதனா.

பெரியவள் மாட்டேன் என மறுக்க, சிறியவள் வேண்டுமென அடம் பிடித்து நின்றதில் குருமூர்த்தியின் பெண்கள் என இருவரும் நிரூபித்தனர். 

“நான் என்ன மொபைல் கோர்ட் நடத்திட்டு இருக்கேனா, இல்ல ஜட்ஜ் போஸ்டுல உக்கந்திருக்கேனா? பனிஷ்மென்ட் கொடுன்னு உன் பிடிவாத்தத்துலயே நிக்கிறியே அறிவுகெட்டவளே! அதான், எங்கம்மாவே வெளியே போகச் சொல்லிட்டாங்களே! இன்னும் எதுக்கு உருகிப் பேசி என்னை வெறுப்பேத்த பாக்கற?

திரும்பிப் பார்க்காம அப்படியே போயிடு! உறவுன்னு நினைச்சோ, பழக்கம்ன்னு சொல்லியோ என் முன்னாடி மறந்து போயும் வந்து நின்னுடாதே! இதைவிட பெருசா உன்னை நோகவைக்க எனக்கு தெரியல. இதான் நான் உனக்கு கொடுக்குற தண்டனை. இது போதுமா, திருப்தியா இருக்கா?” கடுகடுப்புடன் மூச்சு வாங்கியபடி பேசிய ரவீணா ஒய்ந்து போய் அமர்ந்து விட்டாள்.

இவளின் ஒவ்வொரு செயலிலும் ஏனோ அன்னலெட்சுமி சிலிர்த்தே போனார். அதட்டலில்லாத பாவனை, குற்றவாளி எனத் தெரிந்தும் தண்டிக்கவோ நிந்திக்கவோ முயற்சிக்காத பொறுமை. இவையெல்லாம் அத்தனை எளிதில் எவரிடத்திலும் பார்த்துவிட முடியாது.

“பொண்ணை ரொம்ப அருமையா வளர்த்திருக்கீங்க க்கா!” சுகந்தியிடம் மெச்சிக்கொண்ட அன்னலெட்சுமி,

“நீ நல்லா இருப்படா தங்கம். மனசு லேசான பொறவு என்ற வூட்டுக்கு வந்து ஒருவாய் சாப்பிட்டு போகணும் கண்ணு!” ரவீணாவை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்தவர், பிரஜேந்தரிடம் வந்து நின்றார்.

“என்ற குடும்பமே உங்களுக்கு கடமைபட்டிருக்குங்க தம்பி! நன்றி சொல்லி உங்களை, நான் ஒதுக்கி வைக்க விரும்பல. அம்மிணிக்கு கோபம் கொறைஞ்சதும் குடும்பத்தோட என்றவூட்டு மாப்பிள்ளையா வாங்க! உங்களுக்கு மரியாதை செய்ய நாங்க காத்துட்டு இருப்போம்” தழுதழுத்து கூறிவிட, அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.

“ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க ஆண்ட்டி! இனி, எல்லாமே நல்லதாவே நடக்கும்னு நினைப்போம்” ஆறுதல் கூறிய பிரஜன் ஆராதனாவை கண்டிப்புடன் நோக்கினான்.

“நானும் அடாவடியா என் போக்குல திரியறவன்தான். ஆனா, இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யுற தைரியம் எனக்கு வந்ததில்ல. சில காரியங்கள் செய்யவே கூடாதுன்னு இருக்கற மாதிரி, ஒருசில செயல்களுக்கு மன்னிப்பும் கொடுக்கவே கூடாதுன்னு சட்டம் கொண்டு வரணும். அப்போதான் இந்த மாதிரி சில்லறைத்தனமான காரியமெல்லாம் காணாமப் போகும்” முதன்முதலாக ஆராதனாவிடம் கோபத்துடன் பேச, அந்தப் பெண்ணின் மனதில் மெல்லிய பயம் தொற்றிக் கொண்டது. 

ஏற்கனவே குற்றக் குறுகுறுப்பில் தவித்துக் கொண்டிருந்த பெண்மனம், உரிமையான மிரட்டலில் பயந்து பணிந்து போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

“இவ்வளவு நாள் நீ எப்படியோ எனக்கு தெரியாது? ஆனா, இனிமே நீ இருக்குற இடம் தெரியக்கூடாது. இந்த மாதிரி அதிகப்பிரசங்கிதனம், சேட்டை எல்லாம் பண்ணேன்னு வையி, உண்மைக்குமே உன்னை களி திங்க வச்சுடுவேன்! உங்கம்மாவுக்கு தைரியம் சொல்லு, உன் தம்பி உன்னைப் பார்த்து வளரணும். அதை மனசுல வச்சுக்கோ!

யாரோடயும் வம்பு வெச்சுக்க கூடாது. உன்னை, நான் வாட்ச் பண்ணிட்டே இருப்பேன். மீறி ஏதாவது நடந்தது… இந்த பிஸ்தா இறங்கி அடிச்சு நீ பார்த்தது இல்லையே?” கோபத்துடன் கண்களை உருட்டி, மீசையை முறுக்கி மிரட்டவும் ஆராதனாவிற்கு சர்வமும் அடங்கிப் போனது.

தலையை தாழ்த்திக் கொண்டு, “இனிமேட்டு ஒழுங்கா இருக்கேனுங்க மாமா!” அவள் முணுமுணுக்க,

“அது!” உரத்த குரலில் மிரட்டி விட்டு,

சுகந்தியிடம்  வந்தவன், “கோவிச்சாக்தீங்க அத்தை! எப்பவுமே அஹிம்சாவாதியா இருந்தா தலையில மொளகா அறைச்சுடுவாங்க! இப்படியொரு காட்டு காட்டினாத்தான் நாம யாருன்னு ஊருக்கு தெரியும், நம்மையும் நாலுபேர் மதிப்பாங்க!” கம்பீரம் குறையாமல் பிஸ்தா கூற,

“சந்தர்ப்பம் கிடைச்சா, எவன் மூஞ்சியை உடைக்கலாம்னு காத்திருக்கிற ரௌடிக்கு என்ன ஒரு பில்-டப்!” கிண்டலடித்தாள் ரவீணா.

“நல்லவனா மாறலாம்னு பார்த்தா நக்கல் பண்ணியே சீண்டி விடுவாங்க!” மனைவியை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே கூறியவன்,

“பழையபடி பிஸ்தா அதிரடிய ஆரம்பிக்க வேண்டியது தான்!” என்றபடியே காலரை நிமிர்த்திக்கொண்டு ஆராதனவைப் பார்க்க, அவளின் பயப்பார்வையோ இன்னும் மாறவில்லை.

“அந்த பயம் இருக்கணும். அதான் உனக்கு நல்லது” அவளிடம் கூற,

“ரொம்பத்தான் நினைப்பு!” பழிப்பு காட்டினாள் ரவீணா.

“ஊருக்குள்ள வெறும் உப்புமா சாப்பிடற எத்தனையோ நல்ல பசங்க இருக்காங்க! ஆனாலும் உங்க அக்கா என்னைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தக்கால்ல நின்னாளே, அது ஏன்னு அவகிட்ட கேளு! எல்லாம் இந்த பிஸ்தாவோட மாஸ்ல மயங்கி தான்!” பேச்சோடு பேச்சாக மனைவியை கோர்த்து விட்டு அவளின் வாயடைத்தான் பிரஜேந்தர்.

இருவரின் பொய் முறைப்பும் கோபச் சீண்டல்களுமே சூழ்நிலையின் கனத்தை குறைத்து விட, மெல்லிய கீற்றாய் அனைவரின் முகத்திலும் புன்னகை அரும்பி நின்றது.

“உங்க வீட்டுக்காராருக்கு கடன் கொடுத்தவங்களை வரவழைச்சு பேசுங்க! எப்ப என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காம என்னை கூப்பிடுங்க! எல்லாம் சரியாகிடும். கவலைபடாதீங்க!” ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்த பிரஜேந்தரை நன்றியுடன் பார்த்தார் அன்னலெட்சுமி.

இனி எந்தவித குழப்பங்களையும் விளைவிக்க கூடாதென்ற முடிவில் ஆராதனாவும் தாயுடன் கிளம்பிச் சென்றாள். தவறை உணர்ந்தவளின் எதிர்கால  முன்னெடுப்புகள் நிதானமாகவும் விவேகமாகவும் அமையட்டும் என வாழ்த்தி அவர்களுக்கு விடையளிப்போம் நண்பர்களே!

அவர்கள் சென்ற பிறகு பிரஜேந்தரும் புறப்பட ஆயத்தமாக, “ரவீணாவ இங்கேயே விட்டுட்டுப் போங்களேன் தம்பி. எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” நேரடியாகவே மாப்பிளையிடம் சுகந்தி கேட்டுவிட, ஒருநிமிடம் யோசித்தவன் அவளுடைய விருப்பம் எப்படியோ அப்படியே என்று தோள்குலுக்கினான்.

ரவீணாவும் கணவனை குதர்க்கமாய் பார்த்துக் கொண்டே, அங்கேயே இருக்க ஒத்துக் கொண்டாள்.

“என்னடீ பார்வையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு, என்ன பிளான் பண்றே?” மெதுவாய் மனைவியின் காதில் கிசுகிசுக்க,

“புது சொந்தம்… புது மச்சினச்சி எல்லாம் வந்த பிறகு, பொண்டாட்டி பக்கத்துல இருக்கக் கூட கசக்குது போல” குற்றப்பாட்டை படித்தாள்.

‘ஆஹா… பிங்கி, ரெட் சில்லி ஆகிட்டாளே! கும்பிடு போட்டா கொட்டுவாளே, என்ன பண்ண?’ உள்ளுக்குள் திருதிருத்துக் கொண்டே அசடு வழிய,

“என்னடா சிரிக்கிற, பாக்கவே கண்றாவியா இருக்கு!” பல்லைக் கடிக்க,

“இல்ல… நான் இல்லாம என் பட்டர்பெட் தூங்காதுன்னு எனக்கு தெரியும். அதுக்கு சின்னதா ஒரு டெஸ்ட் வச்சேன்!” பொதுவில் கிண்டலடிக்க, அவனை துரத்த ஆரம்பித்தாள் ரவீணா.

அவளின் அறைக்குள் வந்ததும் தன்னை துரத்தி வந்தவளை சட்டென அருகே இழுத்து கொள்ள, வேகமாக தன்மீது வந்து மோதியவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். நொடிநேர உரசல் இருவருக்குள்ளும் கலவையான எண்ணங்களை மீட்டுச் சென்றது.

“உங்கம்மா இருக்கச் சொன்னா, நீயும் சரின்னு தலையாட்டுற! இந்த பிஸ்தாவை விட்டுட்டு உன்னால இருக்க முடியுமா மை சால்டி பட்டர்?” மையல் பேச்சில் அவள் நெற்றியிலிருந்து உதடு வரை தன் இதழ்களால் கோடு வரைந்தான் பிரஜேந்தர்.

“போடா ஜோக்கர்! இத்தன வருஷம் நீ தாலாட்டு பாடித்தான் நான் தூங்கினேனா? உன்னோட கஷ்டத்த என்னோட அலம்பலா மாத்த ட்ரை பண்ணாதே மேன்! கிளம்பு, கிளம்பு காத்து வரட்டும்” வெளியே தள்ளாத  குறையாக விரட்டியடித்து கணவனை வெறுப்பேற்றினாள் ரவீணா.

“வேணாம்டீ பட்டரூ! பிஸ்தாவ சீண்டினா ஜாஸ்தி சேதாரம் உனக்குதான்!” பதிலுக்கு இவன் மிரட்ட,

“நெனைப்பு தான் பொழைப்பை கெடுக்குது. கிளம்புடா நீ!” மழுப்பலாய் சிரித்துக் கொண்டே அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினாள்.

அன்று மாலைவரை அம்மாவின் சீராட்டலில் பொழுதினைக் கழித்தவளுக்கு முன்னிரவுப் பொழுது வந்ததும் மெல்ல மெல்ல கணவனின் கோபமுகமே முன்வந்து அவளை மிரட்டிப் பார்த்தது.

பாசத்திலும் நேசத்திலும் உருகிக் குழைந்தாலும் கணவனாக அவனது அதிரடிகள் எப்படி என்று நன்றாக அறிந்து இருந்தவளுக்கு அவனை எப்படி சமாளிப்பதென்ற இமாலய கவலை சூழ, யோசனையில் ஆழ்ந்து போனாள்.

இரவு மணி பதினொன்றை தாண்டிய நேரத்தில் பிரஜேந்தர் வீட்டிற்குள் நுழைய, சப்பாத்தியும் சிக்கன் குருமாவின் வாசமும் மூக்கினைத் துளைத்தது. ஆள் அரவமில்லாமல் முன்னறை இருக்க, உணவை முடித்துக் கொண்டு வந்தவனை பின்னோடு அணைத்து குறுகுறுப்பு காட்டியது ஒரு வளைக்கரம்.

“நீ கோபமா புறப்பட்டு வந்ததும், என்னால அங்கே இருக்கவே முடியல” முதுகுக்கு பின்னால் கிசுகிசுத்த மனைவியின் குரலில் மெல்ல சிரித்துக் கொண்டான் பிரஜன்.

“பிஸ்தாவா கொக்கா? என் ட்ரீட்மெண்ட் உன்னை ஓடி வரவைச்சிடுச்சு பார்த்தியா?” மார்பை அணைத்துக் கிடந்த வளையலை மெல்ல வருடி, அவளை தன் பக்கம் இழுக்க,

“பிராடு பிஸ்தா! போங்காட்டம் ஆடுற நீ!” செல்லமாக கணவனின் மார்பில் குத்தினாள் ரவீணா.

“ஷப்பா… அநியாயத்துக்கு அராஜகம் பண்றடீ! தள்ளிப் போ, அந்த பக்கம்” பொய்யாய் இவன் விலக,

“ஏண்டா இப்படி விரட்டுற? என் குடும்பம் பண்ணின தப்புக்கு நீயும் என்னை பழிவாங்குவியா ப்ரஜூ?” மெய்யான கவலையுடன் இவள் கேட்க, பிஸ்தாவின் முகம் கடுகடுத்துப் போனது.

“ஆரம்பிச்சுட்டியா! தேவையில்லாத ஏழரையை கூட்டுறதுக்கு தான் இங்கே வந்தியாடீ? யார் எப்படி இருந்தாலும் உன்மேல எனக்கிருக்கிற காதலும் அன்பும் என்னைக்கும் மாறாதுன்னு இன்னும் எத்தனை முறை சொல்லணும்? என்னை சந்தேகப்படுறது நீ, உன்னையே சந்தேகப்படுற மாதிரி புரிஞ்சுக்கோ! இதுக்கு உனக்கு மன்னிப்பே கிடையாது” முறுக்கிக் கொண்டு செல்ல,

‘ஐயோ மீண்டும் மலையேறி விட்டானே’ என்ற தவிப்புடன் அவனையே சுற்றி வரத் தொடங்கினாள் ரவீணா.

“செல்ல ப்ரஜூ! கேடி பிஸ்தா!” என கொஞ்சிக் கெஞ்சியே கணவனை மலையிறக்க, அவனுமே மனைவியிடம் முழுமையாக  சரணடைந்தான்.

செல்லச் சண்டைகளும், அளப்பரிய காதலும் இருவரது அன்பின் உறவை பலப்படுத்தியே வாழ்க்கையை இனிமையாக்கட்டும்!!

 

Leave a Reply

error: Content is protected !!