நெருப்பின் நிழல் அவன்! 9 (அ)
நெருப்பின் நிழல் அவன்! 9 (அ)
அத்தியாயம்: 9
ஈஸ்வரனின் தாத்தா துரை அந்த காலத்திலேயே சாப்ட்வேர் இன்ஜினியர் முடித்து வெளிநாட்டில் வேலை செய்தவர். திருமணம் முடித்து ரத்தினம் பிறந்து கொஞ்ச நாட்களிலேயே வேலையை வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு வந்து மதுரையில் தொழில் தொடங்கி குடும்பத்துடனே இருந்து கொண்டார். வருடங்கள் சென்றது. துரைக்கு இரண்டாவது பெண் குழந்தை மலர் பிறந்தாள். அப்பாக்களுக்கு எப்போதும் மகள் என்றாலே பிடித்தம் அதிகம் தான்..! அதிலும் தன் தாயை போலவே இருந்த மலர் துரைக்கு உயிர் ஆகி போனாள்.
துரையின் அலட்டல் இல்லாத குணம்.., பண்பான பேச்சு.., அவரின் தொழில் திறமை, தெளிவான சிந்தனை… அனைத்தும் சுற்று வட்டாரத்தில் அவருக்கு நல்ல பெயரை ஏற்ப்படுத்தியது.
கஷ்டப்படுபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியையும் செய்வார். அவரின் பண்பாக குணத்தையும், உதவும் மனப்பான்மையையும் உணர்ந்த சிலர் அவரை அந்த ஆண்டு வந்த எலக்சனில் நிற்க சொல்லி கூறினர்.
மக்களுக்கு பணியாற்றும் வேலை என்பதால் யோசித்து பதில் சொல்வதாக சொல்லிவிட்டு வந்தவர். மனைவி பருவதத்திடம் விசயத்தை கூறினார். அவர் கட்சியில் சேர்ந்தாள் மனைவியுடனான நேர செலவிடல்கள் குறையலாம்!! அதனால் மனஸ்தாபங்கள் வரலாம்..!, எனவே முடிவு எடுக்கும் முன்பே மனைவியின் கருத்தை கேட்டார்.
பருவதமும் கணவன் வளர்ச்சிக்கு துணை நிற்பதாக முழு மனதுடன் ஒத்து கொண்டார். துரைக்கும் அரசியலில் ஈடுபாடு இருக்கவே சில யோசனைக்கு பிறகு தன் சம்மதத்தை கூறி கட்சியில் இணைந்து கொண்டார்.
எலக்சனில் கட்சி மீட்டிங், பிரச்சாரம் என்று நிற்க நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருந்த தூரையின் முன் தன் எட்டு வயது மகன் குமரனை கையில் பிடித்து கொண்டு வந்து நின்றார் வேலு.
வந்தவர் யார்..! என்று தெரியவில்லை என்றாலும் வீட்டிற்கு வந்தவர்களை “வாங்க…” என்று வேலுவை வரவேற்ற துரை “இருங்க.. என்ன சாப்பிடுறிங்க?” என்று வேலுவை உபசரித்து விட்டு, அவர் கையை இறுக்கி பற்றியபடி பயந்து போய் நின்ற குமரனையும் “உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்.?” என்று கேட்டார்.
“ஐயோ.. அதெல்லாம் வேண்டாமுங்க, ஒரு வேலை தந்திங்கனா போதும். குடும்பம் கஷ்டம். சாப்பாட்டுக்கு விழி இல்லை..” என்றார் வேலு.
“வேலையா…!” என்று யோசித்து துரை என்ன வேலை செய்விங்க..?” என்று கேட்கவும், வேலு “கார் ஓட்டுவேன் ஐயா…” என்று கூற, “சரி அப்போ நாளையில இருந்து இங்க வேலைக்கு வாங்க..” என்ற துரை “நீங்க என்ன படிக்குறிங்க..?” என்று குமரனை கேட்க, “மூனு..” என்றான் சின்ன குரலில் மிரட்சியுடன். அவனை தூக்கி கொண்டவர் அவனை சாப்பிட வைத்து, அவனுக்கு வேண்டியதை வாங்கி கொடுக்கும் படி ஆயிரம் ரூபாய் பணம் வேலுவிடம் கொடுத்து நாளையில் இருந்து வேலைக்கு வரும்படி கூறி வேலுவை அனுப்பி வைத்தார் துரை.
மறுநாள் காலையில் வேலு வேலைக்கு வரும் போது குமரனையும் அழைத்து வர.. அதன் பிறகே அவனுக்கு அன்னை இல்லாதது தெரிந்தது. மழலை மனம் மாறாமல் தன் மகன் ரத்தினம் வயதில் இருந்த குமரனை.., துரைக்கு பிடித்து இருக்க, இதில் அவன் அன்னை இல்லாததும் தெரியவும் தன் பிள்ளை போல் பார்த்து கொண்டார்.
வேலுவிடம் பேசி ரத்தினத்தை சேர்த்த பள்ளியில் குமரனையும் சேர்த்து விட்டார். தாய்.. இல்லாத பிள்ளை என பருவதமும் நன்றாக பார்த்து கொள்ள குமரன், ரத்தினத்துடனும், மலருடனுமே வளர்ந்தான்.
ஆனால் மனைவியும் இல்லாமல் மகனும் தன்னிடம் ஒட்டாமல் இருந்து விடுவானோ என பயந்த வேலு, வேலை முடிந்து வந்ததும் குமரனை அவர் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார். துரையும் அவரின் மனம் புரிந்து குமரனை அழைத்து செல்லவிட்டாலும், அவனின் தேவைகள் அனைத்தையும் அவன் கேட்காமலேயே செய்தார்.
பள்ளி படிப்பு முடிந்ததும் ரத்தினத்துடன் சென்னையில் காலேஜ் சேர்த்து விடுவதாக துரை கூற, வேலு அருகில் இருந்த கல்லூரியே போதும் என்க, குமரனும் படிப்பில் ஆர்வம் இல்லாமல் பிடிவாதம் பிடித்து அருகில் இருந்த கல்லூரில் சேர்ந்து கொண்டான். அதில் துரைக்கு மனவருத்தம். குமரன் படிப்பின் அவசியம் புரியாமல் இன்னும் சிறு பிள்ளையாகவே இருப்பதாக நினைத்து வருந்தினார்.
சரி கல்லூரி முடிந்ததும் மேல் படிப்பை நல்ல கல்லூரியாக பார்த்து சேர்த்து விடலாம். இந்த மூன்று வருடத்தில் அவனும் நல்லது கெட்டது அறிந்து கொள்வான் என துரை நினைக்க, கல்லூரி படிப்பு முடிந்ததும் வேலுவிடம் கார் ஓட்ட கற்று கொண்டவன் லைசன்ஸ் வாங்கி விட்டு துரையிடம் “ஐயா.. நான் உங்களுக்கு கார் ஓட்ட வரேன்” என்று வந்து நின்றான்.
அவனை கோபமாக பார்த்த துரை “நான்.. உன் மேல் படிப்புக்கு சீட் வாங்கி வச்சா.. நீ கார் ஓட்ட போறியா..!!, ஓழுங்க படிக்க வேலையை பாரு..” என்றார் அதட்டலாக. “நான் மேல படிக்கலை. நீங்க தான சொன்னிங்க படிப்பு முடிஞ்சதும் உனக்கு பிடிச்சத பண்ணுனு..!! எனக்கு கார் ஓட்ட தான் பிடிச்சிருக்கு” என்றான் புதிதாக துரை வாங்கிய காரை ஆசையாக பார்த்து.
அவன் கண்களில் அவனின் ஆசையை பார்த்தவர் “எடோய்.. உனக்கு இந்த கார் மேல ரொம்ப இஷ்டம் னா.!! நீ இந்த கார்லயே காலேஜ் போக நான் ஏற்பாடு பண்றேன். நீ மேல படி..” என்றார் அப்படியாவது படிப்பை தொடர்வானா என்ற ஆசையில். குமரனோ “வேண்டாம்.. எனக்கு இதுக்கு மேல படிக்க பிடிக்கலை. நான் உங்களுக்கு கார் ஓட்டுறேன்” என்று பிடித்த பிடியில் நின்று விட்டான்.
துரை எவ்வளவு பேசி பார்த்தும் குமரன் கேட்கவில்லை. வெளியே வேறு கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறியும்… கேட்காமல் பிடிவாதமாக இருக்க துரை மனமே இல்லாமல் குமரனை தனக்கு டிரைவராக வைத்து கொண்டார்.
வருடங்கள் சென்றது குமரன் வேலைக்கு சேர்ந்து துரையுடன் ஒட்டி கொள்ளவும், தோட்ட வேலை பார்ப்பதாக கூறி வேலு விலகி கொண்டார். துரையும் கட்சி மீட்டிங் செல்லும் போதெல்லாம் குமரனையும் உடன் அழைத்து செல்பவர் அதன் நெளிவு சுழிவுகளையும் கற்று கொடுத்தார்.
அந்த ஆண்டு தேர்தலில் யார் யாரை எதிர்த்து நிற்கிறார் எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்று பேச்சு வார்த்தை நடந்தது. கடைசியில் துரையை எதிர்த்து ஆளும் கட்சியின் எம்எல்ஏவான பாண்டி நின்றான்.
பாண்டி அன்டர்கிரௌன்டில் அடிதடி முதல் கொலை, கடத்தல் போன்ற வேலை செய்பவன். அவன் தாத்தா காலத்தில் இருந்தே அரசியல் பின்புலம் உள்ளவன். அவன் குணம் அறிந்த துரை எப்போதுமே அவனிடம் ஒரு முகமனுடன் கடந்து விடுவார். பாண்டியை எதிர்த்து துரை நிற்பது என்று முடிவாகி விட மக்களிடம் நல்ல பெயர் உள்ள துரை தன்னை எதிர்த்து நிற்பது பிடிக்காத பாண்டி அவரை தூண்டி விட்டு பிரச்சனை செய்ய நினைத்து அவரை மட்டம் தட்டி பேசினான்.
துரை நினைத்தால் பாண்டியை பேசியே அடக்கி விடலாம் ஆனால் பாண்டியின் கோபம் அவர் பிள்ளைகள் மீதோ… இல்லை மனைவி மீதோ திரும்பும். இவனோ கொலை செய்ய அஞ்சாதவன் பிள்ளைகளை ஏதும் செய்த பிறகு வருந்தி என்ன பயன்..!, கண்ணை இழந்த பிறகு சித்திரம் படைத்து பயன் இல்லையே!! எனவே பாண்டி தன்னை அவன் பொட்டைடா என்று கூறிய வார்த்தையையும் கண்டும் காணாமல் இருந்து கொண்டார். அதற்கு அவரின் இத்தனை வருட அனுபவம் மிகவும் உதவியது என்றாள் மிகையில்லை.
பாண்டியின் பேச்சிக்கு பதில் தனது வெற்றி ஒன்று மட்டுமே என நினைத்தவர் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் கட்சியில் பேசி கொண்டிருக்க மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்று விட்டு வந்த குமரன் காதில் பாண்டி துரையை திட்டுவது கேட்க “டேய்… எங்க ஐயாவையா பேசுற…” என பாண்டி சட்டையை பிடித்து சண்டைக்கு பாய்ந்து இருந்தான்.
நடக்க இருந்த விபரிதம் புரிந்த துரை உடனடியாக குமரனை பாண்டியிடம் இருந்து பிரித்து தன் அருகில் நிறுத்தி கொண்டவர் மற்றவர்கள் கை அவன் மேல் படாமல் அரனாக நின்று கொண்டார்.
பாண்டியும் அவன் ஆட்களும் குமரனை அடிக்க வர, அத்தனை பேரையும் பேசியே சமாளித்தவர் பாண்டியனின் கோபத்தை குறைக்கு பொருட்டு “குமரா.. பாண்டி கிட்ட மன்னிப்பு கேளு” என்றார் துரை.
குமரனும், ரத்தினமும் வேறு.. வேறு.. இல்லை துரைக்கு. பாண்டி நினைத்தால் குமரனை இரவோடு இரவாக ஆளை முடித்து விட்டு காணவில்லை என்று விடுவான். ஆனால் போக போறது ஒரு உயிர் அல்லவா…!! அதனால் வயதில் பெரியவனான பாண்டியிடம் மன்னிப்பு கேட்பதால் குமரனின் தன்மானம் பாதிக்கப்படாது என்றும் பிரச்சனையை அத்துடன் தீர்க நினைத்தவர் குமரனை மன்னிப்பு கேட்கும் படி கூறினார்.
குமரன் வீம்பாக மன்னிப்பு கேட்காமல் நிற்க “குமரா.. உன்னை மன்னிப்பு கேட்க சொன்னேன். உன்னை விட வயசுல பெரியவர்! ஒரு மட்டு மரியாதை வேணாம்..!, கை தீட்டுற அவர் கால்ல விழுத்து மன்னிப்பு கேளுடா..” என்றார் துரை கோபமாக.
ஆனால் துரையை திட்டியதால்.., தான் பாண்டியை அடித்து, அதற்கு துரை தன்னை திட்டுவதை அவமானமாக நினைத்த குமரன்.., துரை சமயம் பார்த்து அவர் பணக்கார புத்தியை காட்டியதாக நினைத்தான். அவரின் அரசியலுக்கு ஆபத்து வந்து விட கூடாது என தன்னை அவமானப்படுத்தியதாக நினைத்தான். மனம் தான் நம் சிறந்த எதிரி இல்லையா..!! ஒன்றையும் ஒன்பதாக ஆக்கி கூறும் வல்லமை, திறமை அதற்கு மட்டுமே உண்டு!!.
துரையை தவறாக நினைத்த குமரன் “நான் ஏன் மன்னிப்பு கேட்கனும்!! அவன் தான் தப்பா பேசுனான்…” என்று மீண்டும் மரியாதை குறைவாக பேச, பாண்டி குமரனை அடிக்க வரவும் அவனை தடுத்த துரை குமரனை அடித்து இருந்தார்.
அதில் குமரனுக்கு துரை மீது வன்மத்தை வளர்த்ததை அறியாதவர் அவனை அதட்டி, கெஞ்சி மன்னிப்பு கேட்க வைத்து தானும் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்து அழைத்து வந்து விட்டார்.
அது குமரனை வெகுவாக தாக்க துரை மீது வெறுப்பை வளர்த்து கொண்டவன், தன்னை அவமானப்படுத்தியது போல் அவரையும் அவமானப்படுத்த நினைத்தான். அந்த இடத்தில் தான் செய்த பிரச்சனைக்கு துரை மன்னிப்பு கேட்டதையும் குமரன் மறந்து இருந்தான்.
வீட்டிற்கு வந்ததும் தன் செயலுக்கு காரணமும் கூறிய துரையை அவன் நம்பவில்லை. அவரின் விளக்கம் அந்த இளம் ரத்தத்தின் சூட்டை தணிக்கவில்லை. குமரன் மீண்டு கட்சி மீட்டிங்கிற்கு வந்தால் பாண்டியனுடனான மோதல் தொடரும் என நினைத்த துரை, அந்த வருடம் தான் முதலாம் ஆண்டு கல்லூரி படித்த மலருக்கு பாதுகாப்பாக குமரனை அனுப்பி வைத்தார். பஞ்சுக்கு நெருப்பை காவல் வைத்த கொடுமை அரங்கேறியது.
சின்ன வயதில் இருந்து உடன் சுற்றும் மலர் முதலில் குமரனின் பழி வாங்கும் எண்ணத்தில் வர வில்லை. ஆனால்.. துரையை மற்றவர் முன்பு தலை குனிய வைத்தே ஆக வேண்டும் என சந்தர்ப்பத்தை தேடிய குமரனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மலர் கருத்தில் பதிய அவளை வைத்து காயை நகர்த்தினான்.
மனதில் வஞ்சத்தை வைத்து கொண்டு இளம் பூவான மலரின் மனதில் காதல் விதையை விதைத்தான். காதல் எப்பேர் பட்ட திறமைசாலியையும் கோழை ஆக்கும் ஆயுதம். அது குமரனுக்கும் நன்றாக உதவியது. மலருக்கும் சின்ன வயதில் இருந்தே உடன் வளர்ந்த, எந்த குறையும் சொல்லும் படி இல்லாத குமரனை பிடித்து விட இருவருக்கும் காதல் தொடர்ந்தது. மலர் கெட்டு நின்றாள் துரை தலை நிமிர முடியாது..! எந்த கட்சிக்காக தன்னை அவமானப்படுத்தினாரோ அதே கட்சியில் அவரால் இருக்க முடியாது.. என்று நஞ்சை வளர்த்து அதை காதல் என மலரிடம் கடத்தினான்.
அந்த நேரம் ரத்தினத்திற்கும் திருமணம் முடிந்து ஈஸ்வரன் பிறந்து இருந்தான். குமரன் எவ்வளவு முயன்றும் மலரிடம் எல்லை மீற முடியவில்லை. ஆசையாக பேசுவது போல் அருகில் சென்றாலே தள்ளி நின்று கொள்வாள். ஏனோ..! காதலில் எல்லை மீற முடியவில்லை மலரால். இதில் மலரின் ஒதுக்கம் குமரனை இன்னும் ஆத்திரம் கொள்ள வைத்தது.
நாட்கள் வருடங்களாக செல்ல அவர்கள் காதலும் வளர, பருவதம் இயற்கை ஏய்தி இருந்தார். மலரும் படிப்பு முடிந்து வேலைக்கு செல்ல தொடங்கி இருந்தாள். துரை குடும்பத்தை வீழ்த்த சந்தர்ப்பம் தேடிய குமரன் இத்தனை நாள் அது கிடைக்காமல் போக இனிமேலும் காலம் கடந்த விரும்பாமல் மலரை கடந்த பிளான் செய்தான்.
இந்த நிலையில் மலர் உடன் வேலை செய்பவரின் பிறந்த நாள் விழாவிற்கு செல்வது தெரிந்து… அவளை அழிக்க பக்காவாக பிளான் செய்தவன் கூல்டிரிங்கில் போதை மருந்தையும், அது பெய்ளியர் ஆனால் மயக்க மருந்து என முடிவு செய்து வைக்க மலரின் கெட்ட நேரம் இரண்டையும் அருந்தி இருந்தாள். அதில் கடத்தல் அவசியமற்று போனது.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளுடன் உடலுறவில் ஈடுபட்டவன் அதை மலர் அறியாமல் பார்த்து கொண்டான். ஆனால் பெண் உடல்வலி இழக்க கூடாததை இழந்து விட்டதாக தோன்ற, குமரனிடம் தனக்கு என்ன நடந்தது என்று கேட்டாள்.
அந்த வஞ்சகனோ, மலர் போதை போட்டுவிட்டு தள்ளாடியபடி வந்ததாகவும்.. அவன் யாரும் அறியாமல் வீட்டில் கொண்டு விட்டு விட்டதாகவும் கூற.. ‘போதையினால் தான் தன் உடல் மாற்றம் போல்!’ என எண்ணிய மலர் அதன் பிறகு அதை பற்றி நினைக்கவில்லை.
காதல்.., நண்பர்கள், வேலை, என நாட்கள் அழகாக செல்ல மாதவிடாய் தள்ளி போனதை கவனிக்க தவறி இருந்தாள். மூன்று மாதம் நிறைவடைந்த பிறகே உடல் மாற்றம் மனதில் உறுத்த, அந்த போதையினால் ஏதும் பிரச்சனையோ என்று நினைத்தவள் வீட்டில் கூறாமல் குமரனிடமே கூறி மருத்துவமனை சென்று செக்அப் செய்ய அவள் கர்பம் என் தெரிய வந்தது.
அதற்காக இத்தனை வருடம் காத்திருந்த குமரனோ மலர் பார்வை தன் மேல் திரும்பும் முன் ‘அவள் அடுத்தவனுடன் சென்று பிள்ளை வாங்கி கொண்டு! தன்னை ஏமாற்றி விட்டதாக..’ அவதூறு பேசி மலரை காயப்படுத்தினான்.
மலரும் தன் கர்பத்திற்கு காரணம் யார் என்று தெரியாமலும் குமரனின் பேச்சிலும் உடைந்து போனவள்… அப்போதும் குமரன் மேல் சந்தேகப்படவில்லை. இழக்க கூடாததை இழந்த தன் அவல நிலையை நினைத்து மலர் கண்ணீரில் கரைய அவளை திட்டிவிட்டு அங்கேயே விட்டு சென்ற குமரன் அதன் பிறகு துரை வீட்டு பக்கமே வரவில்லை. இனிமேல் அவன் நினைத்தது தானாகவே நடக்கும் என்று மலரை அங்கேயே விட்டு சென்று இருந்தான்.
மலர் இருந்த நிலமைக்கு எப்படி வீடு வந்தாள் என்று நினைவு இல்லாமலேயே வீட்டிற்கு வந்து சேர்ந்தவள் வீட்டில் சொன்னால் தன் தந்தையும், தமையனும் துடித்து போவர் என்று நினைத்து வீட்டில் சொல்லாமல் மறைத்து விட்டவள் அவள் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். ஆனால் மனம் மறைத்த விசயத்தை அடுத்த இரண்டு மாதத்தில் வயிறு காட்டி கொடுத்தது.