மயங்கினேன் பொன்மானிலே – 22

மயங்கினேன் பொன்மானிலே – 22
அத்தியாயம் – 22
வம்சி எதுவும் பேசாமல் ஹாலில் இருந்த சோபாவில் மெளனமாக அமர்ந்திருந்தான். அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அக்காவின் பேறுகாலத்தை பார்க்க வேண்டும். அக்காவின் குழந்தை பிறந்தபின் தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் எண்ணினான். அவனுக்கு உண்மையில் அப்பொழுது அது பெரிய குற்றமாக தெரியவில்லை. ஆனால், இப்பொழுது மிருதுளாவின் ஏக்கம் அவன் நெஞ்சை பிசைந்தது. மிருதுளா, சோபாவின் அருகே தன் தலையை சோபாவில் வைத்தப்படி அமர்ந்திருந்தாள்.
அவர்களுக்கு இடையில் மிதமிஞ்சிய மௌனம். சில நொடிகளுக்கு பின் அவள் சற்று கோபமாக விழுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தாள். அவளின் அங்க அசைவில் அவன் கண்டுகொண்டான், அவளிடமிருந்து சற்று அழுத்தமான வார்த்தைகளே வெளி வருமென்று. அவன் கணிப்பை சிறிதும் பொய்யாக்காமல் அவள் வார்த்தைகள் சற்று அழுத்தமாக வந்து விழுந்தன.
“எனக்கு இப்ப குழந்தை எல்லாம் வேண்டாம். உங்க அக்காவுக்கு குழந்தை பிறந்த பிறகே எனக்கு பிறக்கட்டும். உங்க அக்காவுக்கு வேலைக்காரி வேலைப் பார்க்க தானே எல்லாம் செய்தீங்க? உங்க அக்கா மாமியார், இன்னைக்கு உங்க அக்கா வளைகாப்பை பற்றி பேசினாங்க. அடுத்த வாரம் வைக்கனுமுனு சொன்னாங்க. அந்த வளைகாப்பை சிறப்பா பண்ணுவோம். அப்புறம் உங்க அக்காவுக்கு குழந்தை பிறக்கட்டும். அதுக்கு சிறப்பா பெயர் வைப்போம். அப்புறம் மாமா மடியில் வைத்து மொட்டை அடிச்சி காது குத்துவோம். சிந்துவும், எப்பப்பாரு குட்டி பாப்பா குட்டி பாப்பான்னு அதை பத்தி தான் பேசுறா. எல்லாம் சிறப்பா உங்க விருப்படி நடக்கட்டும்” பேசிவிட்டு மடமடவென்று சமையலறைக்குள் சென்றாள் மிருதுளா.
கோபத்தில் பொரிந்துவிட்டு சென்ற மனைவியை பரிதாபமாக பார்த்தான் வம்சி. ‘இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்றா நான் எண்ணினேன். எத்தனை, அன்போடு நடக்க வேண்டும் என்று நான் நினைத்தது எதுவுமே நடக்கவில்லையே. இவளுக்கு ஒரு குழந்தை வந்துவிட்டால் எல்லாம் மாறுமோ?’ சமையலறை நோக்கி சென்ற மனைவியை வெறுமையாக பார்க்க, அவள் மடமடவென்று மீண்டும் இவன் முன் வந்து நின்றாள்.
“நான் உங்களை காயப்படுத்தணுமுன்னு நினைக்கலை. ஆனால், உங்க அக்கா வயிறை பார்க்க பொழுதெல்லாம் என் வயிறு பத்திகிட்டு எரியுது. அந்த குழந்தை தானே என் குழந்தையை கொன்னுடுச்சுனு எனக்கு தோணுது. உங்க அக்காவுக்கு குழந்தை வராமல் இருந்திருந்தால், என் வயிற்றில் குழந்தை இருந்திருக்குமில்லைன்னு எனக்கு தோணுதுங்க. நான் இப்படி எல்லாம் யோசிக்க கூடாதுனு பெருந்தன்மையா நினைக்க தான் செய்யுறேன். ஆனால், நான் சராசரி பொண்ணு தான்னு என் மனசும், மூளையும் என் எண்ணத்தில் சம்மட்டியா அடிச்சி சொல்லிருந்துங்க” அவள் விம்மியபடி தன் முந்தியால் முகத்தை மூடிக்கொண்டு அவர்கள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டு, “ஓ…” என்று கதறினாள்.
கதவின் மறுபக்கம், தன் கண்களை இறுக மூடிக்கொண்டு அதன் மீது சாய்ந்து நின்று தன் மனைவியை சமாதானம் செய்யும் இயலாமையை தன் உடல் இறுக்கத்தில் மறைத்துக்கொண்டான். அவர்களுக்கு இடையே, இருந்த கதவு மெலிதாக இருந்தாலும், அவன் செய்த தவறு, என்பது அவர்களுக்கு இடையே பெரிய இடைவெளி என்று அன்பு கொண்ட அந்த தம்பதியினருக்கு புரிந்தும் புரியாத நிலையில் இருந்தது.
ஒரு வாரத்தில், வளைகாப்பு என்று முடிவானது. சிந்துவை உண்டான பொழுது முதல் வளைகாப்பு, அப்பொழுது இருந்த சூழ்நிலையில் சரியாக செய்ய முடியவில்லை என்று இதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர் உதய் குடும்பத்தினர். வம்சி தன் தமக்கைக்கு தேவையான அனைத்தையும் சிறப்பாக செய்திருந்தான். மிருதுளா ஒதுங்கவும் இல்லாமல், அளவுக்கு அதிகமான ஆர்ப்பரிப்பும் இல்லாமல் வம்சிக்கு உதவியாக வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.
பத்மப்ரியாவின் வளைகாப்பு நாளும் வந்தது. வம்சி மிருதுளாவுக்கும் அரக்கு நிறத்தில் சந்தன நிற பட்டு ஜரிகையில் புது புடவை வாங்கி கொடுத்திருந்தான். அவளும் கிளம்பியிருக்க, வம்சியும் வேட்டிச் சட்டையில் கிளம்பி இருந்தான். வம்சியின் கம்பீரம் அவளை ஈர்த்தாலும், அவள் கண்களில் அதையும் தாண்டிய சோகம் இழையோட, வம்சி தன்னவள் முன் சென்றான். அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அவள் தோள்கள் மீது கைபோட்டான்.
தவறு செய்த அன்று கூட அவன் தடுமாறவில்லை. இன்று என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினான். அவனை புரிந்து கொள்பவள் போல், “நேரமாச்சு கிளம்புபோவமா?” என்று கேட்டாள் மிருதுளா. “கிளம்பலாம் பங்காரு” அவன் தலை அசைத்தான். “நாம, திரும்பி வரும் பொழுது உங்க அக்காவும் கூட வருவாங்க தானே?” அவள் கேட்க, “ம்… வருவாங்க. நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்” என்றான் அவன் மெதுவாக, இப்பொழுது அவள் தலை அசைத்து கொண்டாள்.
இருவரும் பத்மப்ரியாவின் வளைகாப்பு வீட்டிற்கு சென்றனர். வம்சி தன் மனைவியை முன்னிறுத்தி அனைத்தயும் செய்ய, பத்ம ப்ரியாவின் மாமியார் “மிருதுளா, நீ இப்படி கொஞ்சம் வாயேன்” என்று கூறி, அவளுக்கு வேறு வேலைகளை கொடுத்துவிட்டார். வம்சியின் நெற்றி சுருங்கியது.
“மிருதுளா” இப்பொழுது வம்சி தன் மனைவியை அழைக்க, “வம்சி, மத்த எல்லாம் நீ சொல்றபடி இருக்கலாம். ஆனால், இது குழந்தை விஷயம். இதுல நீ சொல்றதை கேட்க முடியாது.” என்றார் பத்மப்ரியாவின் மாமியார், வம்சியையும் மிருதுளாவையும் தனியே அழைத்து. வம்சி புரியாமல் பார்க்க, மிருதுளா அடிபட்ட பார்வை பார்த்தாள்.
அவளால், பத்மப்ரியாவின் மாமியார் கூற வருவதை கணிக்க முடிந்தது. “இத பாருப்பா வம்சி. முதலில், உன் பொண்டாடிக்கு குழந்தை இல்லை. அது மட்டுமில்லை வந்தும் கலைஞ்சு போயிருக்கு.” அவர் கூற, “அதுக்கு…” என்றான் வம்சி ஒரு மாதிரியான குரலில்.
“நான் தப்பா எதுவும் சொல்லலை வம்சி. உன் மனைவிக்கும் ஏக்கம் இருக்கத்தான் செய்யும். அதை நான் தப்புனு சொல்ல மாட்டேன். ஆனால், அந்த ஏக்க பார்வை என் வீட்டு வாரிசை பாதிச்சிட கூடாது பாரு. அதனால், உன் பொண்டாட்டியை கொஞ்சம் ஒதுங்கியே நிற்க சொல்லு” கூறிவிட்டு, வேலை இருக்கு என்று மடமடவென்று நகர்ந்து விட்டார் பத்மப்ரியாவின் மாமியார்.
மிருதுளாவால் மனிதர்களை புரிந்து கொள்ள முடிந்தது. “இவங்க என்ன நினைச்சிட்டு இருக்காங்க? நான் கொடுக்குற சீர்வரிசை வேணும். என் காசு வேணும். என் உதவி வேணும். நான் செய்யுற வேலை வேணும். என் பங்காரு மட்டும் முன்ன நிற்க கூடாதா?” அவன் சீறிக்கொண்டு செல்ல, “எங்க போறீங்க?” அவன் முன் கைகளை நீட்டிக் கொண்டு நின்றாள் மிருதுளா.
“இப்பவே அக்கா கிட்ட சொல்லி, இதுக்கு ஒரு நியாயம் கேட்போம். என் மனைவி இருக்க கூடாதான்னு? அக்கா, என்ன சொல்றாங்கன்னு கேட்போம். அக்காவும் வேண்டாமுன்னு சொல்லிட்டா, இப்பவே கிளம்புவோம்” அவன் உறுதியாக கூற, “இப்படி சண்டை போடத்தான் இந்த வளைகாப்பு வீட்டை ஏற்பாடு பண்ணீங்களா?” அழுத்தமாக கேட்டாள் மிருதுளா. “உங்க அக்கா உங்களுக்கு சாதகமாவே பேசுவாங்கன்னு வச்சிப்போம். நான் தான் விஷேஷ வீட்டில் உங்களை சண்டை போட சொன்னேன்னு எல்லாரும் சொல்லுவாங்க” மிருதுளா கூற, அவன் சற்று நிதானித்தான்.
“நீங்க அவசரப்பட்டு எல்லாத்தையும் செய்யறீங்க” அவள் பொதுவாக கூற, அவன் விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தான். “பொது இடத்தில சண்டை போட்டு நியாயம் கேட்டா, நீங்க பெரிய ஆள் கிடையாது. நம்ம மரியாதை தான் கெட்டு போகும். தூண்டிவிட்டவங்க அமைதியா தான் இருப்பாங்க. நியாயம் கேட்குறவங்களுக்கு தான் கெட்ட பெயர். இவ்வளவு செஞ்சிட்டு, எதுக்கு கெட்ட பெயர் வாங்குறீங்க. அமைதியா போயிடுவோம்.” மிருதுளா கூற, “பங்காரு…” அவன் அன்பாக அழைத்தான். அந்த அழைப்பில் காதலை தாண்டி, அன்பை தாண்டி, உரிமையை தாண்டி, ‘என்னவள் எத்தகையவள்?’ என்ற பெருமிதம் மித மிஞ்சி இருந்தது.
“தம்பி, என் வளைகாப்பு வீட்டுக்கு வந்திட்டு கூட உன் பொண்டாட்டி கூடவே பேசிகிட்டு இருந்தா எப்படி டா?” பத்மப்ரியா அவனை உரிமையோடு அழைக்க, மிருதுளா சிரித்துக்கொண்டாள். அன்று பிறந்தநாளுக்கு கேக் வெட்ட அழைக்கும் பொழுது இருந்த ஏதோவொரு அச்சம் பாதுகாப்பின்மை இன்று மிருதுளாவுக்கு இல்லை. வம்சி மாறிவிட்டானா? இல்லை அவள் ஏற்றுக்கொண்டாளா? அவளுக்கு தெரியவில்லை.
வளைகாப்பு சிறப்பாக முடிந்தது. பத்மப்ரியா, தாம்பூல பையும் வளையளையும் மிருதுளாவிடம் நீட்டினாள்.
மிருதுளா வளையல்களை வாங்கிக்கொள்ள, “இதை போட்டுக்கோ. தினமும் வீட்டில் பூஜை பண்ணு. வீட்டில் விளக்கு ஏத்து. சீக்கிரம் குழந்தை வரும்” பத்மப்ரியா கூற, ‘இதெல்லாம் செய்தால் குழந்தை வருமுன்னு எனக்கு தெரியாதே’ என்பது போல் மிருதுளா தன் நாத்தனாரை பார்த்து வைக்க, வம்சி தன் தமக்கையை கடுப்பாக பார்த்தான்.
“அப்புறம் கோவிலுக்கு போய் கொஞ்சம் பரிகாரம் பண்ணினா…” என்று பத்மப்ரியா தொடங்க, “அக்கா…” என்று வம்சி சற்று கோபமாக இடைமறித்தான். “டேய், இது பொம்பளைங்க சமாச்சாரம். நீ ஏன் எல்லா விஷயத்திலையும் தலையிடுற? நீ குழந்தை பத்தி அக்கறை இல்லாமல் சும்மா ஊரை சுத்தலாம். மிருதுளாவுக்கு பொறுப்பு வேண்டாமா? நீ இதுல எல்லாம் தலையிடாத” தன் தமக்கை கூற, அவன் முகம் அசூயையை காட்டியது. தம்பிக்கு பிடிக்கவில்லை என்றதும், பத்மப்ரியாவும் மேலும் பேசவில்லை.
மிருதுளா உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு நடமாடிக் கொண்டிருந்தாள். சிந்துவின் தோழர்களும் தோழிகளும் வந்திருந்தார்கள். கூடிக்கூடி பேசி சிரித்தார்கள். மிருதுளா அவர்களை கடந்து செல்கையில் மௌனித்துக் கொண்டார்கள். எல்லார் கையிலும் அலைபேசி, ‘நமக்கென? சொன்னால் நம்மை யார் மதிக்க போகிறார்கள்?’ என்ற நிலைக்கு வந்துவிட்டாள் மிருதுளா.
பத்மப்ரியாவை அழைத்து செல்வது பற்றி வம்சி பேச, மறுப்பு தெரிவித்துவிட்டார் அவள் மாமியார். “மிருதுளா, அக்காவை நல்லா பார்த்துப்பா” வம்சி பேச ஆரம்பிக்க,
“அவளுக்கு அவ குழந்தையையே பார்த்துக்க தெரியலை. இதுல உங்க அக்காவை எப்படி பார்த்துப்பா. நாங்க, பத்மாவை நல்லா பார்த்துப்போம். இரண்டாவது குழந்தைக்கு எதுக்கு உங்க வீட்டுக்கு? என்னால், என் பேத்தி சிந்து இல்லாமல் இருக்க முடியாது. அம்மா வந்தா, அவளும் அங்க வரணுமுன்னு சொல்லுவா…” என்று அவர் பேசிக்கொண்டே போக, “தம்பி, அத்தை சொல்றது தான் சரி. நான் இங்கையே இருக்கேன். உனக்கு எதுக்கு சிரமம்?” பத்மப்ரியா அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்துவிட்டாள்.
“சரி அக்கா. நாங்க கிளம்புறோம்” என்றான் வம்சி. “என்னடா தம்பி, அதுக்குள்ள கிளம்புற? எல்லாரும் இருக்காங்களே. உனக்கு என்ன அவசரம்?” என்று அவன் தமக்கை கேட்க, “இல்லை அக்கா. எல்லா வேலையும் முடிஞ்சிருச்சு. நாங்க எதுக்கு?” என்றான் வம்சி சற்று வருத்தத்தோடு. பத்மப்ரியாவின் கண்கள் சுருங்கியது. மிருதுளா, யோசனையாக தன் கணவனை பார்த்தாள். “தம்பி, கோபமா?” என்று அவள் கேட்க, “அதெல்லாம் இல்லை அக்கா. எனக்கு கொஞ்சம் தலைவலிக்குற மாதிரி இருக்கு.” அவன் கூற, “நான் காபி கொண்டு வரட்டுமா?” என்று பத்மப்ரியா அக்கறையாக கேட்டாள்.
“இல்லை அக்கா. நான் என் வீட்டுக்கு போகணும். கொஞ்சம் அமைதியா படுக்கணும். மிருதுளா எனக்கு தேவைன்னா காபி போட்டுக் கொடுப்பா”அவன் மிருதுளாவை அழைத்து கொண்டு கிளம்பினான். வீட்டிற்கு வந்ததும் சோர்வாக சோபாவில் சாய்ந்து அமர்ந்தான். அவனுள் பல குழப்பங்கள்.
மிருதுளா எதுவும் பேசவில்லை. ‘என்ன பேசுவது? செத்த பாம்பை எத்தனை முறை அடிப்பது?’ என்று அவள் மௌனமாக விலகி சென்றுவிட்டாள். அவர்களுக்கு இடையில் அதன் பின் மௌனம். சற்று நிசப்தம். அவனை பேசி சமாதானம் செய்யும் அளவுக்கு மிருதுளாவுக்கு பெருந்தன்மையான மனம் வரவில்லை. வம்சியை கேள்விகளும் குழப்பங்களும் அரிக்க ஆரம்பித்தது.
மிருதுளாவின் அமைதியும் அவனை கொல்ல ஆரம்பித்தது. ‘இதைவிட ஆக்கிரோஷமாக மிருதுளா என்னிடம் சண்டை போட்டிருக்கலாமோ?’ என்று அவன் மனம் சற்று வருந்த ஆரம்பித்தது.
‘ஒருவேளை குழந்தை வராவிட்டால்?’ அவன் மனம் அஞ்சியது. ‘தவறு செய்தவன் நான் தான். தண்டனை எனக்கு மட்டும் தான் இருக்க வேண்டும். கடவுளே பங்காருவை எந்த காரணம் கொண்டும் தண்டித்துவிட்டடாதே! அவள் எல்லா வருத்தத்தையும் நான் தாங்கி கொள்கிறேன்.’ அவன் சிந்தை வேண்டிக்கொள்ள ஆரம்பித்தது.
நாட்கள் அதன் போக்கில் நகர, மிருதுளா மிகவும் சோர்வாக காணப்பட்டாள். அவன் பார்வை அவளை அக்கறையோடு தழுவியது. “பங்காரு, உடம்புக்கு ஏதாவது செய்யுதா?” அவன் பலவிதமாக பலதடவை கேட்டுவிட்டான். “அதெல்லாம் இல்லைங்க” அவள் மறுத்துவிட்டாள். என்றுமில்லாமல், சில நாட்களில், “நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?” என்று அவன் முன் கோரிக்கையோடு வந்து நின்றாள் மிருதுளா.
வம்சிக்கு எதுவோ புரிவது போல் இருந்தது. “பங்காரு…” அவன் குரல் உணர்ச்சி வசப்பட்டிருந்தது. அவள் எதுவும் பேசவில்லை. “பங்காரு…” அவன் அவள் முகத்ததை கைகளில் ஏந்தி, கண்களால் வினவினான். அவள் எதுவும் பேசவில்லை. “பங்காரு…” அவள் முகமெங்கும் இதழ் பதித்தான். “உன் முகம் இப்பல்லாம் ரொம்ப ஏக்கத்தை காட்டுச்சா? நானே கொஞ்சம் பயந்துட்டேன். குழந்தை வர லேட் ஆகிறோமோன்னு. நீ வருத்தப்படுறியேன்னு” அவன் பேசிக்கொண்டே போக, “நான் எங்க வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா?” என்று அவள் அதில் குறியாக நிற்க, அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.
“என்ன ஆச்சு பங்காரு? ஏம்மா என்னை விட்டுட்டு போகணும்?” அவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தியபடி கேட்டான். “நான் போயிட்டு, ஒரு நாலு ஐந்து மாசம் கழிச்சி வந்துடறேன்” அவள் மெல்லிய குரலில் கூறினாள். “ஏன்டா?” அவன் மிகவும் கனிவாக கேட்டான். “இல்லை, இன்னும் எதுவும் மாறலை. உங்க அக்காவுக்கு குழந்தை பிறக்கலை. எனக்கு குழந்தை வேணுமின்னு நான் நினைத்தேன். ஆனால் இப்பவே வேணும்னு நினைக்கலை…” அவள் தயங்க, “அதனால் என்ன பங்காரு?” அவன் புரியாமல் கேட்டான்.
“இல்லை, நீங்க… நீங்க என் குழந்தையை கொன்னுட்டிங்கன்னா?” அவள் தயங்கினாலும் சொல்லிவிட்டாள். அவன் அவளிடமிருந்து மின்சாரம் தாக்கியது போல் சரேலென்று விலகினான். “நாலு, ஐந்து மாசமாகிட்ட நீங்க எதுவும் பண்ண மாட்டீங்க. ஏன்னா, எனக்கு ஏதவாவது ஆகிருமுன்னு பயப்படுவீங்க. உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.” அவள் பேச, அவன் இதயம் நின்று விடாதா என்று தவித்தது.
தான் தவறு செய்த பின்னும் அவள் காட்டிய அன்பில் கர்வம் கொண்ட அவன் மனம், அவன் உடைத்த அவன் மீதான அவள் நம்பிக்கையை எண்ணி சுக்கு நூறாய் உடைந்தது.
மயங்கும்…