OVIYAPAAVAI-12
OVIYAPAAVAI-12
ஓவியம் 12
அந்த ஊரிலேயே இது போல திருமணம் இதற்கு முன்னர் நடக்கவில்லை எனும் அளவிற்குத் தங்கள் திருமணத்தை விமர்சையாக நடத்தி இருந்தான் ரஞ்சன். பெண் வீட்டார் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதிலும் குறிப்பாக மஞ்சுளாவும் பல்லவியும் பறக்காத குறை. ஏனென்றால் இந்த மாப்பிள்ளையைச் சிபாரிசு செய்தது அவர்கள் இருவரும்தானே! அதிலும் பல்லவி வெளிப்படையாகவே வீட்டு அங்கத்தவர்கள் முன்பு பெருமைப் பேசினாள்.
“என்னமோ இந்த மாப்பிள்ளை வேணாம் வேணாம்னு சொன்னீங்க, இப்பப் பார்த்தீங்களா? நீங்களேத் தேடி இருந்தாக் கூட இப்பிடியொரு மாப்பிள்ளையை உங்களால கண்டுபிடிச்சிருக்க முடியுமா?”
“ம்… போதும் போதும், கொஞ்சம் அடக்கி வாசி.” சுரேஷ் முறுக்கிக் கொள்ள அப்போது ஜெயராமும் மஞ்சுளாவும் சிரித்துவிட்டார்கள்.
“அது மட்டுமா பல்லவி? மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் ரொம்ப நல்ல மாதிரியாத்தான் தெரியுறாங்க இல்லை?”
“ஆமாக்கா! வெளிநாட்டுலேயே வாழுறவங்க பாருங்க, நம்ம ஊர்ல காட்டுற வெட்டி பந்தா அவங்களுக்குக் காட்டத் தெரியலை.”
“அது உண்மைதான்.” இப்படிக் குடும்பத்தார் ரஞ்சனையும் ரஞ்சன் வீட்டு ஆட்களையும் பேசும் போது சுமித்ராவுக்கு அளவில்லாத ஆனந்தமாக இருக்கும். வாழ்க்கையில் தனக்கு இனி என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது என்று நினைத்திருந்த பெண்ணுக்கு நடப்பவையெல்லாம் இனிப்பாகத்தான் இருந்தது.
அதிலும் ரஞ்சன்! அவனை என்னவென்று சொல்வது?! சுமித்ராவின் மனநிலை ஓவியன் விஷயத்தில் முழுதாக மாறிப் போனது. ஆரம்பத்தில் அவனது ஓவியங்களும் அவனது அடாவடித்தனங்களும் அவன் மேல் அளவில்லாத வெறுப்பையேப் பெண்ணுக்கு உண்டு பண்ணி இருத்தன. ஆனால் என்றைக்கு சுமித்ரா அவனிடம் தனது கடந்த காலத்தைப் பற்றிப் பேசினாளோ… அன்றிலிருந்து அவன் செய்கைகள் அனைத்தும் மாறிப்போயின.
உண்மையைச் சொல்லப் போனால் தான் நினைத்த போதெல்லாம் அவள் அனுமதியின்றி அவளைத் தொட்டவன் இப்போதெல்லாம் பக்கம் வரவேப் பலமுறை யோசிக்கிறான்! அவன் அபிப்பிராயங்கள் கூட இப்போது அவளிடம் எட்ட நின்றுதான் சொல்லப்படுகின்றன.
“வலது காலை எடுத்து வெச்சு உள்ள வாம்மா.” சந்திரமூர்த்திக்கு இன்னும் இதுபோன்ற சம்பிரதாயங்களில் நம்பிக்கை இருந்தது. சிவப்புப் பட்டுக்கட்டி, நகைகள் அணிந்து, தலைநிறையப் பூச்சூடி, அஞ்சன விழிகள் சற்றே மிரள புது வீட்டினுள் காலடி எடுத்து வைத்தாள் சுமித்ரா.
இதுவரை ஜெயராம், சுரேஷின் அன்புத் தங்கை. தாலி ஏறிய நொடி முதல் திருமதி சுமித்ரா. மனதுக்குள் மெல்லிய பாரம் ஒன்று தோன்ற ரஞ்சனை திரும்பிப் பார்த்தாள் சுமித்ரா. விட்டால் அவளை இப்போதே அள்ளிக் கொள்வான் போல ஒரு மந்தகாசச் சிரிப்போடு நின்றிருந்தான் ஓவியன்.
இந்த வீட்டை வாங்கி சுமித்ரா பெயரில் பதிவு பண்ணிய நொடி முதல் அவளைக் கலந்தாலோசித்துத்தான் அனைத்தையும் முடிவு செய்தான் ஓவியன். வீட்டுக்குப் பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு, ஏதாவது மாற்றங்கள் செய்வது வரை அனைத்திலும் சுமியின் ஆலோசனைக் கேட்கப்பட்டது.
“பரவாயில்லை ரஞ்சன், நீங்க உங்க விருப்பப்படி செய்யுங்க, லண்டன் ல உங்க வீடு எப்பிடி இருக்கும்னு எனக்குத் தெரியாதில்லையா?”
“லண்டன் வீடு எப்பிடி இருந்தா என்னம்மா? நீயும் நானும் இங்கதான் வாழப் போறோம், அது நம்ம ரெண்டு பேரோட விருப்பப்படியும் இருந்தாப் போதும்.”
“ம்…”
“வீடு முழுசும் உங்களுக்கு, ஒரேயொரு ரூம் மட்டும் எனக்கு, அதை என்னோட ட்ராயிங் ரூமா நான் யூஸ் பண்ணிக்குவேன், ஓகேவா?”
“ம்…” ஒரு புன்னகையோடு தலையாட்டி இருந்தாள் சுமித்ரா. இந்த வீட்டிற்குப் பலமுறை வந்திருந்ததால் அவளுக்கு எதுவுமே இப்போது புதிதாக இருக்கவில்லை. ஆனாலும் மனது கொஞ்சம் படபடத்தது.
அன்றைய கோலாகலம், குதூகலம் எல்லாம் இனிதாக நிறைவு பெற பெண் வீட்டார் சொல்லிக் கொண்டு கிளம்பும் நேரமும் வந்திருந்தது. மஞ்சுளா அதிகம் பேசவில்லை. அன்னை போல இது காலம் வரை சுமித்ராவை வளர்த்தவர் என்பதால் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. ஒரு தலையசைப்போடு வெளியே வந்துவிட்டார்.
ஆனால் பல்லவி அப்படியில்லை. வீடு முழுவதையும் ஒரு வலம் வந்தாள். எல்லா வசதிகளும் அங்கேச் சரிவர இருக்கிறதா என்று கண்கள் கணக்கெடுத்தன. இறுதியாக சுமித்ராவின் அறையை எட்டிப் பார்த்தாள். ரஞ்சன் அங்கே இல்லை. நாத்தனார் மட்டும் தனியே உட்கார்ந்திருக்கவும் தைரியமாக உள்ளே வந்தாள்.
“அண்ணீ…” பல்லவியைக் கண்டவுடன் சுமித்ராவின் கண்கள் லேசாகக் கலங்கியது.
“எதுக்கு இந்தக் கலக்கம் சுமித்ரா? பத்து நிமிஷம் நடந்தா நம்ம வீடு வந்திரப் போகுது, இப்ப எதுக்குக் கண் கலங்குற நீ?”
“….” தன் கலக்கத்தைச் சட்டென்று விழுங்கிக் கொண்டாள் இளையவள். பல்லவி எப்போதுமே இப்படித்தான். அவள் குரலில் கண்டிப்பு மட்டும்தான் தெரியும். அதற்காக சுமித்ரா மேல் பாசம் இல்லாமலில்லை. அந்தத் தாயில்லாப் பெண் மேல் அளவுகடந்த பரிவு இருந்தாலும் அது கண்டிப்போடுதான் வெளிப்படும் எப்போதும்.
“இங்கப்பாரு சுமி, இன்னும் ரெண்டு, மூனு நாளையில இவங்க எல்லாரும் கிளம்பிடுவாங்க போல, அப்பிடித்தான் வெளியேப் பேசிக்கிட்டாங்க, அதுக்கப்புறம் நீயும் மாப்பிள்ளையும் மட்டுந்தான் இங்க இருக்கப்போறீங்க, அப்புறமென்ன?”
“சரி அண்ணி.”
“சும்மா சும்மாக் கண்ணைக் கசக்கிக்கிட்டு நிற்கப்படாது, இப்ப இருந்தே மாப்பிள்ளைக்கு எது புடிக்கும், எது புடிக்காதுன்னு தெரிஞ்சுக்கணும், புரியுதா?”
“ம்…”
“இப்பவே புருஷனை எவ்வளவு தூரம் வளைச்சுப் போட முடியுமோ அவ்வளவு தூரம் வளைச்சுப் போட்டுக்கணும், சும்மாவே அந்த மனுஷன் உம்பின்னாடி ஆடுற மாதிரித்தான் தெரியுது, அதுக்காக நீ ஏனோதானோன்னு இருந்திராதே.” பல்லவியின் உபதேசத்தில் இப்போது சுமித்ரா திருதிருவென முழித்தாள்.
“எதுக்கு இப்போ இந்த முழி முழிக்கிறே? இத்தனை வயசாச்சு, யூனிவர்சிட்டி வரைக்கும் போய் படிக்கிறே, புருஷனை எப்பிடிக் கைக்குள்ளப் போட்டுக்கணும்னு உனக்கு நான் சொல்லித்தரணுமா? என்னப் பொண்ணு நீ?!” இதற்கு என்னவென்று பதில் சொல்வது?! யூனிவர்சிட்டி படிப்புக்கும் புருஷனை கைக்குள் போட்டுக் கொள்வதற்கும் என்ன சம்பந்தம்?!
“சரி சரி, மறுவீட்டு விருந்துக்கு உங்க பெரிய அண்ணனும் அண்ணியும் முறையா நாளைக்கு வந்து அழைப்பு வைப்பாங்க, வீட்டைச் சுத்திப் பார்த்தேன், நல்ல விசாலமா வசதியாத்தான் இருக்கு, ஏதாவது அவசரம்னா சட்டுன்னு எனக்கு ஒரு கால் பண்ணு, புரிஞ்சுதா?”
“புரிஞ்சுது அண்ணி.”
“ம்… அப்போ நாங்க கிளம்புறோம்.”
“ம்…” பல்லவி விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார். சுமித்ராவிடம் விடைபெறும் அளவிற்கு மஞ்சுளாவுக்கு தைரியம் இல்லாததால் சொல்லிக் கொள்ளாமலேயே போய்விட்டார். ஆனால் ரஞ்சனிடம் திரும்பத் திரும்பத் தங்கள் பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டுதான் கிளம்பினார்.
“போதும் க்கா வாங்க, அவர் பொண்டாட்டியை பார்த்துக்க அவருக்குத் தெரியாதா?” ரஞ்சனிடம் புலம்பிக் கொண்டிருந்த மஞ்சுளாவை இப்படிச் சொல்லித்தான் அழைத்துக்கொண்டு போனாள் பல்லவி. அண்ணியின் நிலையே இதுவென்றால் அண்ணன்களை கேட்கவும் வேண்டுமா?! ஒருவாறாக சுமித்ராவின் குடும்பத்தாரை அனுப்பிவிட்டுத் தங்கள் அறைக்கு வந்தான் ரஞ்சன்.
கல்யாணக் களைப்பில் வீடே அமைதியாக இருந்தது. பெண் வீட்டாரும் இரவு விருந்தை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டதால் அனைவரும் ஓய்வெடுக்கப் போய்விட்டார்கள். சாஸ்திரம், சம்பிரதாயம் எதையும் அந்தளவு நுணுக்கமாகக் கடைப்பிடிக்காத மனிதர்கள் என்பதால் முதலிரவுக்கான எந்த ஏற்பாடுகளும் அங்கே இருக்கவில்லை.
ரஞ்சனின் புத்தம் புதிய அறை, இப்போது அவனது புத்தம் புது மனைவியோடு இன்னும் அழகாக இருந்தது. கல்யாணப் புடவையைக் கூட மாற்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அந்தக் கண்களில் மட்டும் மெல்லியதாக ஒரு கலக்கம். புதுப் பெண்ணுக்கே உரித்தான எந்த பாவத்தையும் அந்த முகம் காட்டத் தவறியிருந்தது.
“சுமி…” ரஞ்சன் அழைத்ததுதான் தாமதம், அவனருகேச் சட்டென்று வந்தாள் சுமித்ரா.
“ரஞ்சன், இவ்வளவு நேரமும் எங்கப் போயிட்டீங்க நீங்க? நான் கொஞ்சம் பயந்து போயிட்டேன் தெரியுமா?”
“எதுக்குப் பயப்பிடணும் சுமி? நம்ம வீட்டுல என்னப் பயம் உனக்கு?” ரஞ்சன் இதை ஓரளவு எதிர்பார்த்திருந்ததால் இலகுவாக மனைவியை எதிர்கொண்டான்.
திருமணத்துக்கும் நிச்சயதார்த்தத்துக்கும் இடைப்பட்ட இந்தக் காலகட்டத்தில் ரஞ்சன் தன் கனவு மங்கையை நன்றாகப் புரிந்து கொண்டான்.
வெளிப்பார்வைக்கு சுமித்ரா சாதாரணமாகத் தெரிந்தாலும் அவள் மனது ஒரு அசாதாரண நிலையில் இருப்பது அவனுக்கு நிச்சயம்.
என்ன தகவல் தேவைப்பட்டாலும் கூகுளை குடைவது அவன் வழக்கம் என்பதால் இப்போதும் பெண்ணின் பிரச்சனையைப் பற்றி ஆராய ஆரம்பித்திருந்தான். மற்றைய உறவுகள் விஷயத்தில் சுமித்ராவுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.
அவள் இடறும் இடம் காதலன் அல்லது கணவன் என்ற ஸ்தானம்தான்.
காதலான இருந்தவன், கணவனாக வர இருந்தவன் செய்த தவறு அந்தச் சிறு பெண்ணின் மனதை ஆழமாகக் காயப்படுத்தி இருந்தது. காயம்பட்ட மனது அந்த ஸ்தானத்தில் அத்தனைச் சீக்கிரத்தில் இன்னொரு மனிதனை அமர்த்தத் தயங்கியது, பயந்தது.
அதிலும் தான் அத்தனை நல்ல மனிதானாக சுமித்ராவிடம் அறிமுகமாகவில்லை என்பதையும் ரஞ்சன் மறக்கவில்லை. இத்தனைச் சுலபத்தில் பெண் தன்னை ஏற்றுக்கொண்டதே பெரிய விஷயம் என்றுதான் நினைத்தான் ஓவியன்.
“இதே புடவையில தூங்கிறதா ஐடியாவா சுமித்ராக்கு?” பேச்சை மாற்றினான் ரஞ்சன்.
“ஐயையோ! இதோட எப்பிடித் தூங்க முடியும் ரஞ்சன்?”
“அப்போ சேஞ்ச் பண்ணலாமே சுமி.”
“இல்லை… எனக்கு…”
“இங்கப்பாரு சுமி, இது உன்னோட வீடு, இங்க நீ எது பண்ணுறதுக்கும் தயங்கத் தேவையில்லை.”
“ம்…”
“அடுத்த வாரமே அப்பா, அம்மா, ஸ்வப்னா எல்லாரும் கிளம்பிடுவாங்க.”
“அப்போ நீங்க?!” மின்னல் வேகத்தில் வந்தது கேள்வி.
“உன்னை இங்க விட்டுட்டு நான் எங்கப் போகப் போறேன்?!” பதிலும் கேள்விக்குக் குறையாத வேகத்தில் வந்து வீழ்ந்தது.
“ஓ…” அந்த ஒற்றை ஓசையில் அத்தனை அமைதி.
“போய் குளிச்சிட்டு வாடா.” கணவன் சொல்லவும் அங்கிருந்த கப்போர்ட்டை திறந்து தனக்கான ஆடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் போனது பெண். ஏற்கனவே சுமித்ராவின் ஆடைகள் சில இங்கே வந்திருந்தன. ரஞ்சன் அவளுக்கென்று தனியாக ஒரு கப்போர்ட்டை ஒதுக்கி இருந்தான். படிப்பதற்கும் இன்னொரு ரூமை அவளுக்காக ஒதுக்க வேண்டும் என்று நினைத்திருந்தான். இப்போதைக்கு குடும்பத்தினர் தங்கி இருப்பதால் நினைத்ததை அமுல்படுத்த இயலவில்லை.
பாத்ரூம் கதவு திறந்து கொள்ளவும் திரும்பிப் பார்த்தான் ரஞ்சன். கூந்தலை உயர்த்திக் கட்டியபடி நைட் ட்ரெஸ்ஸில் வெளியே வந்து கொண்டிருந்தாள் சுமித்ரா. கையில் கல்யாணப் புடவை இருந்தது. இதற்கு முன்பும் அவளை இப்படிப் பார்த்திருக்கிறான். ஆனால் இப்போது அவள் கழுத்தில் கிடந்த தாலி அவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது.
சுமித்ராவுக்கும் என்னத் தோன்றி இருக்குமோ! எதுவுமேப் பேசாமல் புடவையை மடித்து கப்போர்ட்டில் வைத்தாள். கூந்தலைத் தளர்த்தி ஒற்றைப் பின்னல் போட்டாள். மேற்கொண்டு பேச இருவருக்கும் எதுவுமே இல்லாததால் ரஞ்சன் குளியலை முடித்துக் கொண்டு வந்தான்.
“ரஞ்சன்.”
“ம்…”
“இதுவே சாதாரணமா நடந்திருந்த ஒரு கல்யாணமா இருந்திருந்தா…” பெண் முடிப்பதற்கு முன்பாக ரஞ்சன் இடைமறித்திருந்தான்.
“ஹேய் நில்லு! அதென்ன சாதாரணமா நடந்திருந்தா? அப்போ இப்ப என்ன அசாதரணமாவா நம்மக் கல்யாணம் நடந்திருக்கு?”
“இல்லை… நான் அப்பிடிச் சொல்லலை, நம்ம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப…”
“அது என் விஷயத்துல பொருந்தும் சுமி, நான் உன்னை ரொம்பவே விரும்பித்தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.” ஒரு புன்னகையோடு பேசினான் ரஞ்சன். பெண் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து பின் பேச ஆரம்பித்தது.
“அப்போ நாந்தான் உங்களுக்கு நியாயம் பண்ணலையா ரஞ்சன்? இதைத்தானே நான் ஆரம்பத்துலேயே சொன்னேன், உங்களுக்கு என்னை மாதிரி ஒரு பொண்ணு வேணாம், உங்களுக்கு என்னை விட ரொம்ப நல்ல மாதிரியா, உங்களை ரொம்ப நேசிக்கிற பொண்ணா…” மூச்சு விடாமல் சுமித்ரா அடுக்கிக்கொண்டே போக ரஞ்சன் திடுக்கிட்டுப் போனான். அவள் குரல் இப்போது அளவுகடந்த பதட்டத்தைக் காட்டியது.
“சுமி, ரிலாக்ஸ்… கூல்… கூல், எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற?” அவளின் கைப்பிடித்து அவளைக் கட்டிலுக்கு அழைத்துச் சென்றவன் அங்கே பெண்ணை அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டான்.
“உனக்கு அப்ப நான் சொன்ன பதில்தான் இப்பவும், எனக்கேத்த பொண்ணுன்னு எத்தனைப் பேர் வேணும்னாலும் இருக்கலாம், ஆனா நான் ஆசைப்படுற பொண்ணு நீ மட்டுந்தான்.” ஆணித்தரமாக அழுத்திச் சொன்னான் ஓவியன்.
“என்னோட இடத்துல இப்போ உங்களை உருகியுருகி நேசிக்கிற ஒரு பொண்ணு இருந்திருந்தா உங்களோட இந்த முதலிரவு ரசிக்கும் படியா இருந்திருக்குமில்லை?” அவள் முகத்தில் இப்போது மென்மை மீண்டிருந்தது.
“ஹா… ஹா…” அவள் பேசியதைக் கேட்டபோது ஓவியன் வாய்விட்டுச் சிரித்துவிட்டான்.
என் இரவுகளை எத்தனைத் தூரம் நீ வண்ணமயமாக மாற்றி இருக்கிறாய் என்று நீ அறிய மாட்டாய் பெண்ணே! இந்த ஓவியன் வர்ணங்களைக் குழைத்ததை விட கனவுகளில் உன்னோடு குழைந்ததுதான் அதிகம்! நான் ஓவியமென்று வரைந்ததெல்லாம் நீதானே! என்னை ஓவியனாக்கியதும் நீதானே!
“சுமி… நெக்ஸ்ட் மன்த் உனக்கு எக்ஸாம் இருக்கு, எனக்கு பாரிஸ் ல நடக்கிற ஃபங்ஷனுக்கு பெயின்டிங் அனுப்புற வேலையிருக்கு, அதை முதல்ல நாம பார்ப்போம், அதுக்கப்புறமா இதைப்பத்தியெல்லாம் யோசிக்கலாமே?”
“நீங்க யோசிக்கிறப்போ இதே முதலிரவு வராது ரஞ்சன்.”
“சரி, அப்போ இன்னொரு தரம் கல்யாணம் பண்ணிக்குவோம்! நம்மளை யாரு தடுக்கப் போறா?!” குறும்பாகச் சொன்னவன் அவள் கைகளைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டான்.
“சுமி… ஃபர்ஸ்ட் நைட்டுன்னா இந்த சினிமாவுல வர்ற மாதிரின்னு நினைச்சியா? ஒவ்வொருத்தரோட அனுபவமும் வித்தியாசமா இருக்கும், நமக்கு இப்பிடி.”
“ஆனா உங்களுக்கு இன்னும் கொஞ்சம் பெட்டரா அமைஞ்சிருக்கலாம்.”
“அப்பிடிங்கிற!”
“ம்…”
“ஏனப்பிடித் தோணுது உனக்கு?”
“நீங்க ரொம்ப நல்ல மாதிரி ரஞ்சன்.” பெண்ணின் அந்தப் பதிலில் ஓவியனின் கண்கள் பளிச்சிட்டன.
“முதல் தடவைப் பார்த்தப்போ என்னை அடிக்கக் கைநீட்டின பொண்ணா இது?!” என்றான் வியப்பைக் காட்டி.
“முதல் தடவைப் பார்க்கிற பொண்ணுக்கிட்ட நடந்துக்கிற மாதிரி ஓவியரும் நடந்துக்கலையே!”
“உனக்குத்தான் அது முதல் தடவை சுமித்ரா, என்னைப் பொறுத்தவரைக்கும் அப்பிடியில்லைம்மா.” அந்த இதமான வார்த்தைகளில் பெண் எதை உணர்ந்ததோ! ஓவியனின் தோளில் தலை சாய்த்துக் கொண்டது. ரஞ்சன் சிலிர்த்துப் போனான். இத்தனைச் சீக்கிரத்தில் இப்படியொரு இணக்கத்தை அவன் அவளிடம் எதிர்பார்த்திருக்கவில்லை.
“சுமி…”
“ம்…”
“தூங்கலாமா?” அதற்கு மேலும் பெண்ணோடு தனித்திருக்க ரஞ்சன் துணியவில்லை. ஆசை கொண்ட மனது எந்த நொடியும் அலைபாயும் ஆபத்திருந்தது. எந்த மறுப்பும் சொல்லாமல் அந்தப் பெரிய படுக்கையில் அவனருகே படுத்துக் கொண்டாள் சுமித்ரா. அதுமட்டுமின்றி படுத்தவுடன் உறங்கியும் போனாள்.
நிர்மலமான அந்த முகத்தையே இமைக்காமல் பார்த்திருந்தான் ஓவியன். அவளிடத்தில் இன்றைக்குச் சில மாற்றங்களை அவன் அவதானித்திருந்தான். முதல்முறையாக இன்றைக்கு அவனை அவள் தேடியிருக்கிறாள். தோள் மேல் தலை சாய்த்தாள். இதோ… எந்தக் கவலையும் இல்லாமல் தூங்குகிறாள். ரஞ்சனுக்கு குதூகலமாக இருந்தது.
சுமித்ராவை தன் வழிக்குக் கொண்டு வருவது அத்தனைக் கடினம் என்று அவனுக்குத் தோன்றவில்லை. இன்பமான மனநிலையில்தான் அவனும் உறங்கினான். ஆனால் விடியலில் அவன் முகம் வாடிப்போனது.
ரஞ்சன் கண்விழித்த போது சுமித்ரா உறங்கிக் கொண்டுதான் இருந்தாள். அவளை அத்தனை நெருக்கத்தில் பார்த்தபோது ஓவியனின் முகம் முதலில் மலர்ந்துதான் போனது. அரவம் செய்யாமல் மெதுவாக எழுந்தவனை எதூவோத் தடுத்து நிறுத்தியது.
சட்டென்று தலை திருப்பிப் பார்த்தான் ரஞ்சன். அவன் இரவு ஆடையின் ஒரு நுனியைத் தன் இரவு ஆடையின் நுனியோடு முடிச்சுப் போட்டு வைத்திருந்தாள் பெண். நகர முடியாமல் அவனை இழுத்து நிறுத்தியது அந்த ஆடைப் பிணைப்பு. பெருமூச்சோடு ஒரு நொடி அமைதியாக நின்றுவிட்டான் ரஞ்சன்.