உணர்வை உரசி பார்க்காதே! 11

IMG-20211108-WA0067-0d9e000e

உணர்வை உரசி பார்க்காதே! 11

🌹அத்தியாயம் 11

அவள் பல்லை காட்டிக்கொண்டிருப்பதை விகுஷ்கியால் சகிக்க முடியவில்லை. “இப்போ எதுக்கு சும்மா பல்ல பல்ல காட்டுற, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?” 

“சும்மா அப்படியே பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.” என்று மீத்யுகா பேச்சை பிதற்றினாள். 

“சும்மா அப்படியே பார்த்துட்டு போறதுக்கு, இது பீச்சா, பார்க்கா, இல்ல சினிமாவா?” எதற்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்தும் அவள் வாயால் பிடிப்பதற்காக கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தான். 

வேறு வழியின்றி, “சஷ்டிய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.” என்று அவள் விழிளை தாழ்த்திக் கொண்டாள். 

“என் தங்கச்சிய பார்க்குறதுக்கு நீ யாரு?” என்று கூறிவிட்டு ஒற்றை விரலால் அவன் புருவத்தை சுரண்டினான். 

“நான்” என்று கூறி சிறு இடைவெளி விட்டு, “நான் சஷ்டிக்கு அண்ணி” என்று உரிமையாய் கூறினாள். 

“அண்ணியாவது பன்னியாவது, என் பர்மிஷன் இல்லாம நீ எப்படி என் தங்கச்சிய பார்க்க வரலாம்?” 

“ரொம்ப பிகு பண்ணாதீங்க. நான் ஒண்ணும் வெளி ஆள் இல்ல. உங்க வைஃப், ஃபர்ஸ்ட் அதை புரிஞ்சிக்கோங்க.” 

“முடியாது! நீ எனக்கு வைஃப் இல்ல. சஷ்டி டீடைல்ஸ் கேட்டு சிஸ்டர் கிட்ட பேரம் பேசுறல்ல, அப்பவே புரிஞ்சிக்கிட்டேன். நீ எப்படி பட்ட ஆளுனு.”

“ஐயோ! நீங்க மட்டும் ஏன்தான் இப்படி இருக்கீங்களோ தெரியல, சிஸ்டர் கிட்ட நான் தப்பா எதுமே பேசல, நீங்க சொன்னது உண்மையா இல்லயானு பார்க்க வந்தேன். அவ்ளோதான்! போதுமா?” 

“ஆமா, நான் மட்டும்தான் இப்படி இருக்கேன். நல்லவனா இருக்கத்தான் விடமாட்டிங்களே! நான் என் தங்கச்சி கூட பேசணும் நீ கார்ல போய் வெய்ட் பண்ணு. நான் வருவேன்.” 

அவன் கூறியதற்கு மீத்யுகா, “ம்ம்” என்று விட்டு நகர, “நான் வரும் வரைக்கும் கார்லயே வெய்ட் பண்ணணும். புரிஞ்சிதுதானே!” 

“புரிஞ்சிது விகுஷ்கி, பொய்க்கி கண் உருட்டி உருட்டி மிரட்டாதீங்க. நீங்க வரும் வரைக்கும் கார விட்டு எங்கயும் போகமாட்டேன். போதுமா?” என்று கூறிவிட்டு மகிழுந்தை நோக்கி நடந்தாள். 

அவனும் சஷ்டியை பார்க்க அறைக்குள் நுழைந்தான்.  மீத்யுகா மகிழுந்தின் அருகில் வந்தவள், ‘உலகத்துலயே இல்லாத தங்கச்சி, ரொம்பதான் பண்றான் இந்த மனுஷன். போயும் போயும் இந்த மனுஷன கல்யாணம் பண்ணிட்டு நான் படுற பாடு இருக்கே நாய் படாத பாடு.’ என்று தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தாள். 

ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவன் மகிழுந்தின் அருகில் வந்தான். 

மீத்யுகாவின் கால் கடுத்துப் போயிருந்தது. “காருக்குள்ள உக்காந்து இருக்க வேண்டியதானே?” 

“ஆமா கார் கண்ணாடிய உடைச்சிட்டுதான் உள்ள போய் உக்காரணும்.” 

“வரும் போதே எங்கிட்ட சாவிய வாங்கிட்டு வந்து இருக்கலாமே!” 

“இப்போ எதுக்கு இங்க வெய்ட் பண்ண சொன்னீங்க. முதல்ல அதை சொல்லுங்க?” 

“உங்க அப்பாதான் உன்னைய கையோட அழச்சிட்டு வர சொன்னாரு, அதான் வெய்ட் பண்ண சொன்னேன். கார்ல ஏறு” 

“நான் ஆட்டோல வரேன். எனக்கு கார் வேணாம்.” அன்று அவன் காரிலிருந்து இறக்கி விட்டதை எண்ணி, அவனுக்கு முன்னதாகவே முச்சக்கர வண்டியில் கிளம்பினாள். 

ஆனால் அவனுக்கு பிறகுதான் வீட்டை வந்து அடைந்தாள். வீட்டு வாசலில் அவளுக்காய் காத்திருந்தான். அவள் வருதை கண்டு அவள் அருகில் வந்தான். 

“எங்க போயிட்டு வாரீங்கனு உங்க அப்பா கேட்டா பீச்சுக்கு போயிட்டு வந்தோம் அப்படினு சொல்லணும். ஓகே, நீ அப்படி சொல்லாட்டி உனக்குதான் நஷ்டம்” 

மீத்யுகா எதுவும் கூறாமல் வீட்டினுள் சென்றாள். “என்னமா வீட்டு வரச் சொல்லி இவ்ளோ நேரம் எங்கதான் போயிட்டு வாரீங்க?” 

“ஸ்போர்ட்ஸ் க்ளப் போயிட்டு அப்படியே பீச் போயிட்டு வாரோம் பா. அதான் லேட்டு, என்ன விஷயம் பா இவ்ளோ அவசரப்படுறீங்க?” 

“உனக்கு தாலி பிரிச்சி போடணுமாம், லட்சுமி காசு வாங்கிட்டு வந்துட்டோம். நல்ல நேரத்துல பூஜை பண்ணிட்டு எடுத்து வைம்மா. ஊருக்கு போய் பிரிச்சு போடலாம்.” 

“நீங்களே பூஜை பண்ணிருக்கலாமே, அதுக்கு எதுக்கு நான்.” 

“இங்க பாரு மீத்யுகா, நீ வர வர சின்ன புள்ள கெடயாது. கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்க முயற்சி பண்ணு” என்று உமேஷ்வரி கடிந்தார். 

அதன் பிறகு இருவரும் குளித்துவிட்டு பூஜை அறைக்குள் சென்று பாட்டி கூறியது போல் பூஜை செய்து விட்டு பெரியோரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். 

“மாப்பிள்ளை நாளைக்கு காலைல ஊருக்கு கிளம்புவோம். சரியா?” என்று நமசிவாயம் கேட்டார். 

“மாமா அது வந்து, நான் ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு வாரேன். நீங்க மீத்யுகாவ அழச்சிட்டு போங்க.” 

“ஏன் பா, எங்க கூட வாரதுல உனக்கு எதும் பிரச்சனையா?” என்று நமசிவாயம் சலனத்தோடு விகுஷ்கியிடம் வினவினார்.

“இல்ல மாமா, யோகி சார் பிசினஸ அவங்க பையன் பேருக்கு மாத்தணும். இன்னும் ரெண்டு நாள்ல செஞ்சி தாரேனு சொல்லிட்டேன். இப்போ முடியாதுன்னா எதும் நினைப்பாரு அதான் மாமா.” 

“ஓ சரி மாப்பிள்ளை, கல்யாணத்துக்கு அப்பறம் முதல் முறை வீட்டுக்கு வரீங்க. அதனால ரெண்டு பேரும் சேர்ந்தே வாங்க. நாங்க நாளைக்கு கிளம்புறோம்.”

“சரி மாமா, ரெண்டு நாள் கழிச்சு நான் மீத்யுகாவ அழச்சிட்டு வாரேன்.” 

“சரிப்பா ரொம்ப லேட் பண்ணிறாத.” 

“இல்ல மாமா கரக்டா வந்ததுறோம்.” என்று விகுஷ்கி கூற, அதனை ஏற்றுக்கொண்டு காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்பதனால் மூவரும் உறவினர் அறைக்குள் சென்றனர். 

“எங்க வீட்டு ஆளுங்கள அவோய்ட் பண்ணணும்தானே ரெண்டு நாள் கழிச்சு வாரேனு சொன்னீங்க?” என்று மீத்யுகா வருத்தத்தோடு கேட்டாள்.

“உங்க வீட்டு ஆளுங்கள அவோய்ட் பண்றது என் நோக்கமில்ல. கஷ்டப்படுத்துறதுதான் என் நோக்கம். பட் நான் இப்போ சொன்னது உண்மை. இதை நம்புரதும் நம்பாம இருக்கிறதும் உன் விருப்பம். இப்போ எனக்கு தூக்கம் வருது தயவு செஞ்சு டிஸ்டப் பண்ணாத.” என்று கூறிவிட்டு அவன் அறையில் உள்ள சோபாவில் படுத்துறங்கினான். 

மீத்யுகாவிற்கு உறக்கமற்ற இரவாய் போனது. அவன் கூறுவதெல்லாம் நம்பவும் முடியாமல் ஏற்கவுமுடியாமல் இருந்தாள். அவன் பிடிவாதம் பிடிக்காமல் சற்று இளகினால் இருக்கும் பிரச்சனைகளை முடித்துவிடலாமே என்று சிந்தனை வேறு அவள் உறக்கத்தை வரவிடாமல் செய்தது. 

வானம் விடிந்து அவள் கண்கள் மட்டும் உறக்கிமின்றி சிவந்திருந்தன.  வீட்டினர் ஊருக்கு கிளம்புவதால்  குளம்பியை கலந்து அனைவரையும் எழுப்பி விட்டாள்.

மீத்யுகா, உமேஷ்வரியின் அருகில் சென்று, “இன்னைக்கே நீங்க எல்லாரும் கிளம்பணுமா, இன்னும் ரெண்டு நாள் இருந்து எங்க கூடவே கிளம்பளாமே மா.” என்று சற்று வருத்ததோடு கேட்டாள். 

“இல்ல மீத்யுகா, இது உங்க மாமியார் வீடு விருந்தோ மருந்தோ ரெண்டு நாளைக்குதான் சரி மூனாவது நாளைக்கு கிளம்பிறணும். நீங்க சந்தோஷமா இருக்கத நாங்க கண்ணால பார்த்துட்டோம், அதுவே போதும். நாங்க இன்னைக்கு கிளம்புறோம். நீங்க ரெண்டு நாள் கழிச்சு வாங்க.” என்று மீத்யுகாவின் கன்னத்தை வருடிக்கொடுத்தார் உமேஷ்வரி. பிள்ளையை அழைத்து செல்ல ஆசை இருந்தாலும் கணவன் கூறுவது சரி என்றது அவரின் மனம்.

காலை உணவு உண்டு முடிய மதுரைக்கு கிளம்பினர். விகுஷ்கியும் நேரத்திற்கு எழும்பி வழி அனுப்பி வைத்தான். 

“இப்போ சந்தோஷமா இருக்கீங்களா விகுஷ்கி?” தாய் தந்தையர் வழி அனுப்பி வைத்ததும் கலங்கிய கண்களோடு வினவினாள். 

“இப்போ எதுக்கு மூக்க சிந்துற, இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு போகதானே போற?” என்று அதட்டலாக கூறினான். 

“நாளைக்கு உங்களுக்கும் ஒரு பொண்ணு பொறக்கும் என்ன பண்றீங்கனு பார்ப்போம்?” 

“பொறக்கும் பொறக்கும் கண்டிப்பா பொறக்கும் பட் உனக்கும் எனக்கும் கண்டிப்பா பொறக்காது.” 

“லைஃப் லாங்க் உங்க கூடதான். என்னதான் நடக்குதுன்னு பார்க்கதான் போறேன்.” 

“ஓ! எங்கூட லைஃப் லாங் இருக்கணும்னு ஆசை வேற இருக்கோ, போன போகுது எங்க வீட்டு வேலக்காரியா இருந்துட்டு போ.” என்று வாழ்க்கை பிச்சை போடுவதை போல் கூறிவிட்டு கறுப்பு கவுனை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினான். 

வக்கிரத்தில் அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகளின் வீரியம் அவள் மனதை புண்படுத்தியது. 

வாழ்வில் அடுத்த நிமிடம் என்ன நடக்குமென்று அறியாமல், அவன் வீசிய வார்த்தைகள் இன்று அவன் வாழ்வை எப்படி எல்லாம் மாற்றியமைக்கப் போகிறது என்று அறிந்திருப்பானா? 

கொட்டிய வார்த்தைகளை மீண்டும் வாயிற்குள் மீட்டுக்கொள்ளும் காலத்திற்கு தள்ளப்படுவான். அதை அன்று அறிவான்!

விகுஷ்கியின் வீட்டு வாசலில் அழைப்பு மணி ஒலிற, கதவை திறந்தாள் மீத்யுகா. இரு ஆடவர்கள் முன்நிற்க, “யார் நீங்க?” என்று வந்தவர்களிடம் வினா தொடுத்தாள். 

“நாங்க விகுஷ்கியோட ஃப்ரெண்ஸ்” 

“ஓ… உள்ள வாங்க.” என்று இருவரையும் வரவேற்றாள். 

இருவரும் கதிரையில் அமர்ந்த பிறகு, “விகுஷ்கி வீட்ல இல்லயா, நீங்க யாரு?” என்று விகுஷ்கியின் நண்பன் வினவினான். 

“அவரு வெளிய போயிட்டாரு, நான் மிஸஸ். விகுஷ்கி.” என்று மீத்யுகா கூறும் வார்த்தைகளை கேட்டு வியப்பில் ஆழ்ந்தனர். 

“என்ன? விகுஷ்கிக்கு மேரேஜ் ஆகிருச்சா!” என்று ஒருவன் கேட்க, மற்றொரு நண்பன், “எப்போ மேரேஜ் ஆகிச்சு சிஸ்டர்?” என்று கேட்டான். 

“மேரேஜ் ஆகி பத்துநாள் ஆகுது.” என்று சாதாரணமாக கூறினாள். 

“ஓகே சிஸ்டர், நான் வெங்கட், இவன் மதன். நாங்க வந்த விஷயத்த சொல்றோம். நாளைக்கு நைட் மதன் யூகே போறான். சோ இன்னைக்கு நைட் சின்னதா ஒரு பார்ட்டி அரேஞ் பண்ணிருக்கோம். விஸ்கிக்கு ஃபோன் போட்டேன் எடுக்கவே இல்ல. அதான் நேர்ல வந்தோம். வீட்லயும் இல்ல. நீங்க கொஞ்சம் சொல்றீங்களா சிஸ்.” என்றான் வெங்கட். அவனது நண்பர்கள் அவனை விஸ்கி என்று அழைப்பதை மனதில் எண்ணி நகைந்தாள். 

“ஓகே ப்ரோ, சொல்றேன்.” 

“சிஸ் நீங்களும் எங்களோட ஜாய்ன் ஆகுங்க, நீங்களும் பார்ட்டிக்கு  வாங்க.” என்று மதன் மீத்யுகாவயும் அழைத்தான். 

மீத்யுகாவும் முகம் சுளிக்காமல், “ஓகே ப்ரோ” 

“டிடைல்ஸ் எல்லாம் விஸ்கிக்கு மெசெஜ் பண்ணிட்டேன். ரெண்டு பேரும் வாங்க.” என்று மீண்டும் மதன் அழைத்தான். 

வந்த இருவரும் கிளம்பிவிட, லட்சுமி மீத்யுகாவை தனியாய் அழைத்தார். “அம்மாடீ, உங்கூட கொஞ்சம் பேசணும் சமையல் கட்டுக்குள்ள வாரீயா?” 

“போங்க கா வரேன்.” 

அடுக்களைக்குள், “என்ன விஷயம் லட்சுமி கா?” 

“நீங்க ரெண்டு பேரும் உண்மையாவே சந்தோஷமா இருக்கீங்களா?” என்று லட்சுமி  திடீரெனக் கேட்டார். 

“ஏன் கா அப்படி கேக்குறீங்க?” தம்பதிகளின் நெருக்கத்தின் நிலையை உணர்ந்த லட்சுமி இப்படி ஒரு கேள்வியை கேட்பார் என்று மீத்யுகா எதிர்பார்க்கவில்லை. 

“இங்க நான் ரெண்டு வருஷமா வேலை பார்க்குறேன். எனக்கு தெரியாத தம்பிய பத்தி, உங்க ரெண்டு பேருக்குள் என்ன பிரச்சனை வெளிய நல்லா இருக்கீங்க. ரூமுள்ள போனா ஓரே சண்டை.” 

“அதை பத்தி இன்னைக்கு பேச வேணாம் கா. நாளைக்கு பேசுவோம். இன்னைக்கு மூடே அப்செட்.” என்றவள் கூற்றை முடிய வதனம் வாடியது.

“சரிமா, தம்பி கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மா. தம்பி கோபமா சத்தம் போட்டாலும் மனசுல எதும் வச்சிக்க மாட்டாருமா. பார்த்து சூதானமா நடந்துக்க.” என்று அவனுடைய குணத்தை நல்லவிதமாக எடுத்து விளம்பினார். இப்படி அனைவரிடமும் இயல்யாய் இருப்பவன் மீத்யுகாவிடம் மட்டும் ஏன் இம்சைவாதி ஆனான். 

“சரி கா.” என்பதை தவிர வேற எதுவும் அவளால் கூற முடியவில்லை. 

உலகத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் ஓரே குணமா, எல்லா சூழ்நிலைகளிலும் ஆண்களை பெண்கள்தான் சமாளித்து நடக்க வேண்டுமா, ஒரு சூழ்நிலையிலும் பெண்கள் மீது கருணை இரக்கமெல்லாம் வராதா? 

பெண்களுக்கென்று எப்போது சுதந்திரம் கிடைக்கும். பெண்களுக்காக பல சட்டங்கள் இருந்தும் அடிமை தனம்தான் பெண்களை ஆட்சி செய்கிறது. 

விகுஷ்கியுடன் போரட்ட வாழ்க்கைதான் இனி, தடை தாண்டி ஓடுவது போல் தினமும் ஒவ்வொரு தடைகளை தாண்டுவாள் மீத்யுகா. 

நண்பர்கள் வருகை தந்ததை கைபேசியின் வழியே கூறிவிட்டு,  அவள் விளையாட்டு சங்கத்திற்கு கிளம்புவதாக கூறினாள். 

“நீ எங்க வேணா போ, எனக்கென்ன.” எகத்தாளமாய் விளம்பினான். 

“நீங்க ஒண்ணும் கேர் பண்ண தேவையில்ல, என்னையும் ஒரு மனுஷியா மதிச்சு உங்க ஃப்ரெண்ஸ் இன்வைய்ட் பண்ணாங்க, அதான் சொன்னேன்.” 

 அவன் அதையெல்லாம் பொருட்ப்படுத்தாமல் அழைப்பை துண்டித்திருந்தான். அவனின் புத்தியை அறிந்த மீத்யுகாவும் அவள் பணியில் முழ்கினாள். 

பல நாட்களுக்கு பிறகு பந்தை கையில் எடுப்பது இதமாக்கியது அவளகத்தை. பந்து கையில் எடுத்தது பாதி உயிர் வந்து சேர்ந்தது போல் ஓர் உணர்வு. 

மாணவர்களிடையை சற்று கெடுபிடியாய் நடந்து கொள்ளாமல் வழக்கத்திற்கு மாறாய் சுமூகமாய் இருந்தாள். அடுத்த ஆட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் பணியை ஆரம்பித்திருந்தாள். 

பந்து பரிமாறும் ஐவகைகள், எதிர் அணிக்கு பந்து கைமாறமல் பந்தை எப்படி கையால்வது, விளையாடும் போது உடலை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, வலைப்பந்தாட்டத்தின் விதிமுறைகள் என அனைத்தையும் முதலிருந்து கற்றுக்கொடுத்தாள்.  

“இன்னைக்கு இது போதும் கேர்ள்ஸ், நாளைக்கு டீமா பிரிச்சு விளையாடலாம்.” 

அனைத்து மாணவர்களும் ஓரே நேரத்தில், “ஓகே கோச்” என்று சத்தமாகக் கூறினர். 

“என்ன திவி பசங்கள பத்தி ஏதோ சொன்னா? நல்லாதானே இருக்காங்க.” என்றாள் மீத்யுகா.

“எனக்கு பயப்பட மாட்டீங்கிறாங்க. உனக்கு பயப்படுறாங்க, அதான்.” 

“பசங்ககூட ஃப்ரெண்ட்லியா இருக்கணும். அதே நேரம் கொஞ்சம் ஸ்ரிக்ட்டா இருக்கணும் அவளோதான்.” பல நாட்களுக்கு பிறகு பணியில் இணைந்திருப்பதால் வேலை பளு அதிகமாயிருந்தது. 

திவ்யாவுடன் பேசியவாறு அவள் வேலைகளை செய்துகொண்டிருந்தாள். மணி ஆறை கடக்க மனமின்றி வீட்டுக்கு கிளம்பினாள். வீட்டில் லட்சுமியின் முகத்தை பார்ப்பதை சங்கடமாய் கருதினாள். 

வீட்டிற்கு வந்து குளியல் வேலைகள் முடிய, மனதுக்கு அமைதியாய் சினிமா பாடலை பாடியவாறு குளம்பியை பருகினாள். 

விகுஷ்கி பாடும் எசப்பாட்டின் குரல் கேட்க முடியாமல், காலையில் பாடுவதை நிறுத்திவிட்டாள். 

லட்சுமியுடன் சுமூகமாய் பேசிக்கொண்டு இரவு உணவை மீத்யுகா தயார் செய்தாள். 

மணி எட்டை கடக்க விகுஷ்கிக்கு காத்திருக்காமல் லட்சுமியுடன் இணைந்து உணவருந்தினாள். 

விகுஷ்கிக்கு, இரவு நண்பர்களுடன் விருந்து என்பதால்  இன்னும் வீட்டுக்கு வரவில்லை. நான்கைந்து முறை தொலைபேசியின் வழியாய் அழைத்திருந்தாள், ஆனால் விகுஷ்கி கைபேசியை  முழுவதுமாய் அணைத்திருந்தான் செய்திருந்தான். 

அவனுக்கு காத்திருப்பது வீணென்று இரவு உடையை அணிந்து உறக்கத்திற்கு சென்றாள் மீத்யுகா. 

நன்கு உறங்கியிருக்க உறக்கத்தை கலைக்கும் வகையில் லட்சுமி மீத்யுகாவை எழுப்பினார். 

எதற்கு என்று தெரியாமல் தூக்க கலக்கத்தில் லட்சுமியுடன் கீழே வந்தாள். 

விகுஷ்கியை ஒரு கையால் தாங்கியவாறு வெங்கட் அருகில் நிற்க, தன்பாட்டில் ஏதோ புலம்பிக்கொண்டிருந்தான். மீத்யுகா சற்று குழம்பினாள். “விகுஷ்கிக்கு என்னாச்சு?”  

“ஸாரி சிஸ், ஆப்பிள் சோடானு நினைச்சி விகுஷ்கி விஸ்கிய குடிச்சிட்டான். அவனுக்கு அதெல்லாம் பழக்கமில்ல. கொஞ்சம் பார்த்துக்கோங்க சிஸ்.” என்று கூறி விகுஷ்கியை கதிரையில் அமர்த்தினான்.

“நோ நோ ஐ அம் ஸ்ரோங்க்!” என்று அவன் கூறும் விதமே அவன் அருந்திய போதை நிலையை நன்கு விளக்கியது. அத்தோடு வெங்கட்டும் கிளம்பினான்.

மீத்யுகா, என்ன செய்வதென்று லட்சுமியின் முகத்தை பார்க்க, “நீ ஒரு பக்கம் புடிமா, நான் ஒரு பக்கம் புடிக்கிறேன். ரூம்ல தூங்க வச்சிறலாம்.” 

இருவரும் போதையில் இருப்பனை தோளின் மேல் கைகளை இட்டு அங்குமிங்கும் தள்ளாடி மெதுவாக நகர்ந்து செல்ல, அறையின் வாசலில் லட்சுமி நின்றுக்கொண்டார். அதன் பின் மீத்யுகா தனியே அறைக்குள் அழைத்துச் சென்று கட்டிலில் கிடத்திவிட்டு நகர, அவன் மீத்யுகாவின் கையை பிடித்துக்கொண்டான். 

“எங்க டீ போற, புருஷன் பக்கத்துல இருக்காம எங்க டீ போற?” என்று போதை மயக்கத்தில் அவள் கையை பற்றி மல்லுக்கு நின்றான்.

அவன் இருக்கும் நிலையை அறிந்து, “விகுஷ்கி கைய விடுங்க. நீங்க டிரிங்க்ஸ் பண்ணிருக்கீங்க. நாளைக்கு பேசலாம்.” என்று கையை  தட்டிவிட்டு நகர முயன்றாள். 

“யாரு, யாரு சொன்னா நான் ஜஸ்ட் ஆப்பிள் சோடாதான் குடிச்சேன். நீ என் பொண்டாட்டிதானே என் பக்கத்துல வந்து படு.” என்று போதை கலந்த வார்த்தையோடு அவளை அவன் புறம் இழுத்தான். 

“ஐயோ விகுஷ்கி! கைய விடுங்க. குடிச்சுட்டு வந்து வம்பு பண்ணாதீங்க.” என்றாள் சற்று குரலை உயர்த்தினாள். 

விகுஷ்கியோ அப்பாவி போல் முகத்தை வைத்து, “என் பொண்டாட்டிய பக்கத்துல இருக்க சொன்னது தப்பா, என்னைய பார்த்தா பாவமா இல்லயா உனக்கு?” என்று சிறுபிள்ளை போல் இளகிய குரலில் அவள் மனதை கலைக்க ஆரம்பித்தான். அவன் இப்படி எல்லாம் பேசுவது மீத்யுகாவிற்கு புதிதாய் தெரிந்தது. 

“நீங்க குடிச்சிருக்கீங்க. நாளைக்கு பேசலாம். ப்ளீஸ்!” என்று அவனை விட்டு விலக மீண்டும்  முயற்சித்தாள். 

“நீ எனக்கு வேணும். ” என்று அவள் ஆடையை பற்றி எழுந்து நின்றான். போதை அவனுக்கு கொடுத்த மயக்கத்தில், மீத்யுகாவை வார்த்தைகளால் மயக்க ஆரம்பித்தான். 

அவன் செய்கையில் திகைத்து போயிருந்தாள். ஆடையை பற்றும்போது அவள் உடலில் ஏற்பட்ட கூச்சமும் நடுக்கமும், “கொஞ்சி கொஞ்சி பேசி என்னைய குழப்புறானே!” 

ஆடையை பற்றியவன் மெதுவாக இடையை பற்ற ஆரம்பித்தான். இடையை பற்றி நேராக நிற்கவில்லை. நிற்பதற்கு அவன் உடல் ஒத்துழைக்கவில்லை. 

அவன், அவள் மீது விழ, அவன் தொடுகையில் அவள் மேனி கூச்சத்தை உணர, மஞ்சத்தில் அவள் விழ, அவள் மீது அவன் விழுந்தான். 

***

உணர்வுகள் தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!