நினைவு தூங்கிடாது 2.2
நினைவு தூங்கிடாது 2.2
நிழல்
முதல் பார்வையில் என்னை ஈர்த்தவளே
உன் முகவரி தேவையில்லை
முக வரி போதும் என்று
என் இதயம் தொலைத்ததை
என்னவென்று நான் சொல்ல
ஈஸ்வர்யின் மன இறுக்கம், கோபம் அனைத்தையும் காட்டி, அவனது வாகனம் நூற்று இருபது வேகத்தில் பறந்தது. பசுஞ்சோலை கிராமத்தை அடைந்ததும், அதன் பசுமையில் மயங்கிய அவனது வாகனமும் அவனை போல், வேகத்தை குறைத்து நாற்பதில் செல்ல ஆரம்பித்தது.
வாகனம் பயணிக்கும் வேகத்தில், அவனது கோபத்தை உணர்ந்த அவனுடைய அன்னை, பயந்து அவனுடன் பயணித்தார். மகனின் கோபம் குறைய, குறைய அவனது வாகனத்தின் வேகமும் குறைந்ததை உணர்ந்து தன்னுள் சிரித்துக் கொண்டார்.
அருகருகே நின்று பேசிக்கொண்டிருந்த ஒரு இளம் ஜோடி, சுற்றுச்சூழலை ரசித்து வாகனத்தை ஓட்டி கொண்டிருந்த ஈஸ்வரனின் கவனத்தை கவர்ந்தது. தானாக அவனது பார்வை அவர்களிடம் சென்றது, ஆனால் மனமோ,’எங்க போனாலும் காதல்’ என இகழ்ச்சியாக நினைத்தது.
ஈஸ்வரனின் வாகனத்தை கண்டதும் பேசிக்கொண்டிருந்த இளைஞன், வழியை மறைத்து நின்றிருந்த பெண்ணின் கரத்தை பற்றி, தன்னருகே நிறுத்தி இவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினான். அவர்கள் பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்தது.
அந்தப் பெண்ணின் முகம் சில நொடிகள் இவன் புறம் திரும்பியது. அவளது இயற்கை அழகின் வசீகரத்தில், ஈஸ்வரனின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. நகரத்தில் செயற்கை அலங்காரத்துடன் இருந்த, காகித மலர்களை ரசித்திருந்த கண்கள், இப்போது இயற்கை அழகோடு மிளிரும், இந்த மலர் முகத்தாலிடம் மையல் கொண்டது. முதல் பார்வையிலேயே அவனை வசியம் செய்தது அந்த நிலவு முகம். இதை அறியாது போனது யாரின் குற்றம்?
அவர்களை கடக்கும்போது, காற்றோட்டத்திற்காக திறந்திருந்த ஜன்னலின் வழியே அவன் காதில் விழுந்த வார்த்தைகள்,”ஏ புள்ள, எப்ப இந்த மாமனை கட்டிக்கப்போற?”
“போ மாமா ….” என அத்தோடு வார்த்தைகள் தேய, அவன் அந்த இடத்தை கடந்திருந்தான். அந்தக் குரலின் இனிமை தித்திப்பாக அவனுள் இறங்கியது. அந்த பெண்ணின் பிம்பம் தன் கண்களிலிருந்து மறையும் வரை, பின்புறதை காட்டும் கண்ணாடி வழியே அவளை மட்டுமே பார்த்திருந்தான்.
கிராமப்புறங்களில் இந்த மாதிரி சீண்டல் பேச்சுகள் வழக்கமான ஒன்று, என்பதை தெரியாத ஈஸ்வரன்.’மிஞ்சி மிஞ்சி போனா பதினாறு பதினேழு வயசு இருக்கும். அதுக்குள்ள இவளுக்கு காதல் கேக்குது.’ என முதல் பார்வையிலேயே தன் மனதை கவர்ந்த, யாரென்று தெரியாத அந்த பெண்ணை வெறுக்க தொடங்கினான்.
‘காரணமே இல்லாமல் ஒருவனின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறோம்’ என்பதை தெரியாத அமிர்தா, தன்னை மாமன் என சொல்லிக்கொண்ட அவனிடம் வாயாடி கொண்டிருந்தாள்.
“போ மாமா உனக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு. பக்கத்து ஊர் மாலா கூட நிச்சயம் முடிச்சுட்டு வந்துட்ட. திருவிழா முடியவும் கல்யாணம். இதுல என்னை கட்டிக்க கேட்குற?” அவன் குமட்டில் குத்தினாள்.
“அதுக்கு என்ன புள்ள. நீ மட்டும் ‘ம்ம்ன்னு’ ஒரு வார்த்தை சொல்லு. உன்னை தூக்கிட்டு போய் தாலி கட்டி போடறேன்” வீரமாக வசனம் பேசினான்.
“உன் வீரம் எல்லாம் வாய் பேச்சுல மட்டும்ன்னு, எனக்கு தெரியாதா?” என அவனுக்கு பழிப்பு காட்டினாள்.
“இந்தா வரேன். நான் வாய் பேச்சுல மட்டும் இல்ல, செயல்லயும் வீரன்னு காட்டுறேன்” என அவளை நெருங்கினான்.
அவனிடமிருந்து சற்று தள்ளி நின்று,”ஆசை தோசை. உனக்கு எல்லாம் அந்த முட்டக்கண்ணி மாலாவே பெருசு, இதுல உனக்கு இந்த அம்மு கேக்குதா? என்னை கட்டிக்க மகாராஜா குதிரையில” என ஆரம்பித்து,”ச்ச” என தன் நாக்கை கடித்து,”இப்ப தான் குதிரை இல்லையே, சரி ப்ளஸர் கார்ல் வருவான்.” என்றாள் கண்களில் கனவு மின்ன.
“அடி வாயாடி கழுதை. உனக்கு மகாராஜா கேக்குதா? உள்ளூர்ல எவனாவது குப்புசாமி, கருப்பசாமின்னு துரு பிடிச்ச சைக்கிள்ல வருவான். அவனை கட்டிக்கோ.” என பேச்சோடு பேச்சாக அவளை நெருங்கிருந்தவன், அவள் தலையில் கொட்டி கிண்டலடித்தான்.
அவன் கொட்டிய தலையை தேய்த்துக்கொண்டே அவனை முறைத்து, கோப மூச்சை இழுத்துவிட்டு,”இதுக்காகவே நான் ஒரு மகாராஜாவை கட்டிட்டு வந்து காமிக்கிறேன். அப்படி இல்லைனா என் பேர் அமிர்தா இல்ல. இது சவால்” என சொல்லிவிட்டு அவளின் வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
அவளுடன் பேசிக்கொண்டிருந்த வாலிபன், “விளையாட்டுப் பிள்ளை” ரசித்து கூறி அந்த இடத்தை காலி செய்தான்.
††††††
ஈஸ்வரின் வாகனம் அந்த ஊரிலிருந்த பெரிய வீட்டின் முன் நின்றது. அவர்கள்தான் அந்தக் கிராமத்தில் பெரிய குடும்பத்தார். முதல் மரியாதை அனைத்தும் அந்தக் குடும்பத்துக்கே வழங்கப்படும்.
ஈஸ்வரனின் அன்னை அந்தக் குடும்பத்தில் இரண்டாவது பெண். அவருடன் பிறந்தது ஒரு மூத்த சகோதரி, ஒரு இளைய சகோதரன். தம்பி பெற்றோர்களுடன் அங்கயே இருக்கிறான். அக்கா தன் குடும்பத்துடன் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார். இவர்களுக்கு தலா ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
அதில் ஒரு பெண் மட்டும் ஈஸ்வரனுக்கு மூத்தவள். இரு ஆண்களும், ஒரு பெண்ணும் ஈஸ்வரனை விட இளையவர்கள். அந்த வீட்டின் கடைக்குட்டி ரேகா, ஈஸ்வரனின் மாமா மகள். பிருந்தா, அமிர்தாவின் வகுப்புத் தோழி. பரீட்சை முடிவுக்காக காத்திருக்கும் குமரி பெண்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தன் பிறந்த வீட்டை பார்க்கப் போகும் மகிழ்ச்சியில், தன் மகனை மறந்து வீட்டிற்குள் சென்று மறைந்தார் தேவி, ஈஸ்வரனின் அன்னை.
அங்கு பண்ணை வேலை செய்து கொண்டிருந்த ஆட்களை அழைத்து, வாகனத்திலிருந்த பொருட்களை வீட்டில் வைக்குமாறு கொடுத்து அனுப்பினான் தேவியின் மைந்தன்.
சரியாக அந்த நேரம் அங்கு தோன்றினாள், வழியில் கண்ட அதே பெண். முழங்காலை தொடும் ஒரு பாவடையும், மேலே ஒரு சட்டையும் அணிந்து, நீண்ட கூந்தல் அசைந்தாட, மான் போல துள்ளி குதித்து அவள் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடனே அவளின் ஏழ்மை நிலைமையை சொல்லிவிடலாம்.
அவளை கண்டவுடன் ‘சாலையில் அந்த ஆடவனுடன் பேசிக்கொண்டிருந்த காட்சி’ அவன் கண்முன்னால் தோன்றியது. ஏனோ அந்த காட்சியை ரசிக்க முடியாமல் அவனது மனம் முரண்டியது. அவளை பார்க்கவும் பிடிக்காதவனாக, (அந்த அழகு வதனத்தை மீண்டும் காண மாட்டோமா?’ என ஏங்கபோகிறோம் என்பது தெரியாமலே) வீட்டினுள் நுழைந்தான்.
நீண்ட வருடங்களுக்குப் பின் தங்கள் இல்லம் வந்திருக்கும், தன் பேரனை ஆசையுடன் தழுவிக்கொண்டனர் அந்த கிராமத்து பெரிய மனிதர்கள், இவன் அன்னையை பெற்றவர்கள்.
அங்கு அவனின் மாமா, அத்தை, அவர்களின் பிள்ளைகள் என அனைவரும் ஒன்றாக இவர்களுக்காக காத்திருந்தனர்.’ஏன் இவளோ கும்பலா இருக்காங்க?’ என அந்த சூழ்நிலை பிடிக்காமல் போனது. தனித்து வளர்ந்திருந்த ஈஸ்வருக்கு கூட்டுக் குடும்பத்தின் அருமை தெரியவில்லை.
முகத்தில் தன் பிடித்தமின்மையை காட்டி கொள்ளாமல், தான் ஓய்வெடுக்க செல்வதாக கூறி, அவர்களிடமிருந்து பிரிந்து சென்று ஒரு அறையில் அடைந்தான்.
அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட மற்றவர்களும் விருந்து தயாரிக்க தொடங்கினர். நீண்ட நேர பயணம் அவனை சோர்வடைய வைத்திருந்தது. படுக்கையில் விழுந்த அவன் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்தான்.
††††††
மறுநாள் மாலை நேரத்தில், “அம்மு வா விளையாடப் போகலாம்” என அவளின் நண்டு சிண்டு தோழர்கள் அனைவரும் அவளது வீட்டு வாசலில் கூடிவிட்டனர்.
“அம்மு வேண்டாம். அவங்க கூட போகாத. அம்மா நம்ம இரண்டு பேரையும் கோயிலுக்கு போயிட்டு வர சொல்லி இருக்காங்க.” என பிருந்தா, அமிர்தாவை தடுத்து கொண்டிருந்தாள்.
“பிந்து என் செல்ல குட்டி இல்ல. நீ கோயிலுக்கு போயிட்டு வருவியாம். நான் இவங்க கூட விளையாட போவேனாம்.” அம்மு பிந்துவை கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“அம்மு அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. ஏதோ நேரம் சரி இல்லையாம், நாற்பத்து எட்டு நாள் சனி பகவானுக்கு விளக்கு போட சொல்லி ஜோசியர் சொன்னாராம். நம்ம கோயிலுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் வேணா நீ போய் விளையாடு.”
“ப்ளிஸ் பிந்து நீ போய் விளக்கு போடு. அம்மா கிட்ட நான் வரலைன்னு சொல்லாத. கொஞ்ச நேரத்தில் இவங்க எல்லாம் வீட்டுக்கு போயிடுவாங்க. அப்புறம் விளையாட முடியாது” என கெஞ்சி அவளை சம்மதிக்க வைத்தாள்.
‘அன்னைக்கு தெரிந்தால் என்ன நடக்குமோ?’ என்ற பயத்துடனே, அம்முவின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்தாள் பிந்து.
ஒருவேளை பிந்துவுடன் கோவிலுக்கு சென்றிருந்தாள், இனி வரும் பல இன்னல்களிலிருந்து தப்பித்திருப்பாள். அவளின் நேரம் கோவிலுக்கு செல்லவிடாமல் தடுத்தது. அம்முவின் தலையெழுத்து அங்கே மாற வேண்டும் என்பது விதி, அதை மாற்றியமைக்க மானுடனால் முடியுமா?
பிந்து கோவிலில் நுழையும் போது, ஈஸ்வரின் குடும்பத்தார் சன்னிதானத்தில் கூடியிருந்தனர். அங்கு செல்ல தயங்கி வாசலில் தேங்கினாள்.
அவளை முதலில் கண்டது ஈஸ்வரனின் பெரியம்மா மகன் கார்த்திக், ஈஸ்வரை விட ஒரு வயது இளையவன். அவனின் பார்வை ஆர்வமாக அவளை சுற்றி யாரையோ தேடி தோற்றது. முகம் சுருங்க தனதருகிலிருந்த ரேகாவின் தோளில் இடித்து, பிந்து வந்ததை கண்களால் சுட்டி காட்டினான்.
ரேகா அவளை பார்க்கவும் ஓடிச்சென்று அவளை அழைத்து வந்து தன் பக்கம் நிருத்திக் கொண்டாள்.
கார்த்திக்கின் பார்வையை தொடர்ந்த ஈஸ்வர், பிந்துவை பார்த்து விட்டு திரும்பும்போது அவன் பார்வையில் பட்டது, ஏமாற்றத்தோடு சுருங்கிய கார்த்திக்கின் முகம்.’இவன் இவ்வளவு ஆர்வமா யாரை தேடுறான்?’ என்ற கேள்வியோடு அவர்களை கவனிக்க தொடங்கினான்.
ரேகாவின் அருகே நின்ற பிந்துவின் மேல் அவன் பார்வை பதிந்தது. பாவாடை தாவணியில், ஒற்றை பின்னலிட்டு தலைநிறைய மலர் சூடி, அமைதியின் உருவமாக நின்ற பெண்ணை கண்டதும் அவன் மனதிலும் ஒரு அமைதி பரவியது.
சுவாமி சன்னிதானத்திலிருந்து வெளியே வந்த அர்ச்சகர் பிந்துவை பார்த்து,”வாடா குழந்தை. என்ன நீ தனியா வந்து இருக்க? உன் தங்கை எங்கே?”
“அவளைப் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே மாமா. வழக்கம்போல தான்.”
முகம் சுருங்கி விட,”சரி விடு. இன்னைக்கு நீயே சுவாமிக்கு ஒரு பாட்டு பாடு.”
“நானா?” என தயங்கிய பெண்ணை, “உன் பாட்டைக் கேட்டால், சுவாமி உருகியே போயிடுவார். நீ பாடு குழந்தை.” என்ற அர்ச்சகரின் வார்த்தைக்கு பின் மறுப்பு சொல்லாத பிந்து அழகாக பாட ஆரம்பித்தாள்.
“குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா”
அவளின் குரல் வளம் அங்கிருந்த அனைவரையும் கட்டிப்போட்டது. அனைவருக்கும் சிம்மசொப்பனமாக இருக்கும் ஈஸ்வரனை கூட அவளின் பாடல் ரசிக்க வைத்தது.
†††††
பூஜை முடியவும் ரேகா, பிந்துவை அழைத்து வந்து தேவியிடம் அறிமுகப்படுத்தினாள்.”அத்தை இவ பிருந்தா. என் கூட தான் ஒன்னா படிக்கிறா.”
ஈஸ்வரனின் அன்னை தேவி, பிந்துவின் தலையை வருடி,”நீ ரொம்ப நல்லா பாடின மா.”
“ரொம்ப நன்றிங்க”
“நான் ரேகாவுக்கு அத்தை. நீயும் என்னை அத்தைனே கூப்பிடு” என தன்னையறியாமலே தங்கள் உறவை உறுதிப்படுத்தினார்.
‘சரி’ என தலையசைத்து விடைபெற்ற பெண்ணை, வழி மறித்து நின்றான் கார்த்திக். பயந்த பார்வையை அவனை நோக்கி வீசிய பெண்ணிடம்,”அமிர்தா வரலையா பிந்து.” என்றான் ஆர்வமாக. “இல்ல… அவள் பிரெண்ட்ஸ்… கூட விளையாட…. போயிட்டா” என திக்கித் திணறி ஒரு வழியாக கூறி முடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.
ஆரம்பம் முதலே கார்த்திகை கவனித்திருந்த ஈஸ்வரன் கேள்வியாக அவனைப் பார்க்க, “அமிர்தா! பிந்து ஓட டிவின்சிஸ்டர். அவளைக் காணோம்னு கேட்டிட்டிருந்தேன்.” என்றான் அசடுவழிய.
சகோதரனின் எண்ணம் புரிய ஈஸ்வரன் தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து அகன்றான். ஒருவேளை கார்த்திக் தேடிய பெண், தன் மனதை ஈர்த்தவள், என்பதை தெரிந்திருந்தால் இவன் நடவெடிக்கை என்னவாக இருந்திருக்கும்?
ஈஸ்வரனின் அன்னை தேவி தன் சகோதரியை பார்க்கவும்,’அவர்களுடன் நடந்து வீட்டுக்கு வருவதாக’ சொல்லி ஈஸ்வரனை தனித்து அனுப்பினார்.
ஈஸ்வரன் தன் காரை எடுத்துக்கொண்டு, சுற்றிப் பார்த்து வருவதாக கூறி சென்றான்.
தனித்துச் செல்லும் ஈஸ்வர், ஒரு பெண்ணின் மீது வஞ்சம் வளர்த்துக் கொள்வான் என்பதையோ? அவள் வாழ்க்கையையே திசை மாற்ற போகிறான் என்பதையோ, தெரியாத தேவி தன் சகோதரியுடன் வயல் வரப்பில் இறங்கி நடந்தார்.