kkavithai03

kkavithai03

கவிதை 03

ரிஷி நல்ல தூக்கத்தில் இருந்தான். பயணம் செய்த களைப்பு நிறையவே இருந்ததால் தூக்கம் அழைக்காமலேயே அன்றைக்கு வந்திருந்தது. போதாததற்கு அன்னம்மா வேறு அவன் வயிற்றை நிரப்பி இருந்தார். நாட்டுக்கோழி, பிரியாணி என்று ஏதேதோ அவனுக்காக விசேஷமாகச் சமைத்திருந்தார்.

“ஐயையோ! என்னால இவ்வளவெல்லாம் சாப்பிட முடியாது அன்னம்மா.”

“ஏன்டா கண்ணா? சாப்பாடு டேஸ்ட்டா இல்லையா?”

“ஐயோ அன்னம்மா! ரொம்ப டேஸ்ட்டா இருக்கு, ஆனா நான் கொஞ்சம்தான் சாப்பிடுவேன்.” எவ்வளவோ மறுத்தும் ரிஷியின் வயிற்றில் இரண்டு ப்ளேட் பிரியாணியை திணித்துவிட்டுத்தான் மறுவேலை பார்த்தார் அன்னபூரணி. ரிஷிக்கு கொஞ்ச தூரம் நடந்தால் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது. ஆனால் கண்ணைச் சுழட்டிக் கொண்டு தூக்கம் வரவே தன் அறைக்கு வந்து கட்டிலில் வீழ்ந்து விட்டான்.

“ரிஷி…” தன்னை யாரோ எழுப்பவும் கண் விழித்தான் இளையவன். எதிரே அன்னபூரணி நின்றிருந்தார். கையில் டீ.

“இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருவாங்க, நீ எந்திருச்சுக் குளிச்சு ரெடியாகு, முதல்ல இந்த டீயை குடி.”

“ம்…” டீயை வாங்கிய ரிஷி அதைப் பருக ஆரம்பித்தான்.

“அன்னம்மா.” கதவை நோக்கி நடந்த அன்னபூரணி நின்று திரும்பிப் பார்த்தார்.

“என்னடா கண்ணா?”

“இன்னைக்கு எதுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க?”

“அடையாளம் போடுறதுக்கு.”

“அப்பிடீன்னா…”

“உங்க பொண்ணைத்தான் எங்க பையனுக்கு நாங்க எடுக்கப் போறோம்னு உறுதிப் படுத்துறது.”

“அதான் ஏற்கனவே பேசி முடிச்சாச்சே, அப்புறம் என்ன?”

“இது சம்பிரதாயம் டா, நம்ம வழக்கப்படி இப்பிடித்தான் பண்ணுவாங்க.”

“அப்போ மாப்பிள்ளையை இன்னைக்கு நான் பார்க்கலாம்னு சொல்லுங்க.”

“ம்ஹூம்… இது லேடீஸ் ஃபங்ஷன், மாப்பிள்ளை வரமாட்டாரு.”

“லேடீஸ் ஃபங்ஷனுக்குத்தான் இப்போ என்னை எழுப்பி குளிச்சு ரெடியாகச் சொன்னீங்களா?” ரிஷி ஒரு தினுசாகக் கேட்கவும் அன்னபூரணி பக்கென்று சிரித்தார்.

“ஒரு வாரந்தான் இந்த அன்னம்மாக்கூட இருக்கப் போறே, லண்டனுக்கு போய் நல்லாத் தூங்கிக்கலாம், இப்போ ஜம்முன்னு ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வா ரிஷி, இங்க இருக்கிற அத்தனைப் பேருக்கிட்டயும் இது என்னோட பையன்னு நான் காட்டணும்.” சொல்லிவிட்டுக் கண்கலங்கிய பெரிய தாயைத் தோளோடு அணைத்துக் கொண்டான் மகன்.

“என்ன அன்னம்மா இது? எதுக்கெடுத்தாலும் இப்பிடிக் கண் கலங்கிக்கிட்டு…”

“இந்தக் கல்யாணம் முடிஞ்சுக் கிளம்பிப் போனா இனி எப்ப வருவியோ? இன்னுமொரு பதினைஞ்சு வருஷம் கழிச்சு வரும்போது நான் உயிரோட இருப்பனோ இல்லையோ?!”

“இதெல்லாம் என்னப் பேச்சுன்னு பேசுறீங்க, இனிமேல் அப்பிடியெல்லாம் கிடையாது, ஒவ்வொரு வருஷமும் உங்களை வந்து நான் பார்க்கிறேன், போதுமா?”

“யாரு… நீ? ஒவ்வொரு வருஷமும் இங்க வந்து என்னைப் பார்க்கப் போறே!” நீட்டி முழக்கினார் அன்னபூரணி.

“ஆமா…”

“நான் நம்பமாட்டேன் போடா!”

“உண்மையாத்தான் சொல்றேன் அன்னம்மா.”

“நான் நம்பவே மாட்டேன், நம்புற மாதிரியா இருக்கு உன்னோட பேச்சு?”

“நான் என்னப் பண்ணினா நீங்க நம்புவீங்க?”

“அன்னம்மா என்ன சொன்னாலும் பண்ணுவியா ரிஷி?” ஆவலோடு கேட்ட பெரிய தாயைப் பார்த்துச் சிரித்தான் ரிஷி. அவர் எங்கே வருகிறார் என்று அவனுக்கு நன்றாகவேப் புரிந்தது.

“என்ன வேணும்னாலும் பண்ணுறேன்.” சொல்லிவிட்டு ரிஷி மேலும் சிரிக்க இப்போது அன்னபூரணியும் மகனோடு சேர்ந்து சிரித்தார்.

“ராஸ்கல், நான் என்ன சொல்லப் போறேன்னு தெரிஞ்சுக்கிட்டே என்னைக் கேலி பண்ணுற இல்லை?!”

“ஹா ஹா… அவ்வளவு பெரிய நகையைச் சட்டுன்னு பவித்ராக்கு குடுன்னு சொல்றீங்க, இப்பிடித்தான் போட்டு உடைப்பீங்களா? அந்தப் பொண்ணோட முகம் வெளிறிப் போச்சு.”

“உனக்குப் புடிச்சிருக்கா ரிஷி?” ஆவலாகக் கேட்டார் அன்னபூரணி.

“யாரை? இந்த அன்னம்மாவையா? உங்களை எனக்கு ரொம்ம்ம்பப் பிடிக்குமே!” சொல்லிவிட்டுப் பொங்கிச் சிரித்தான் ரிஷி.

“டேய்! வம்பு பண்ணினா அடிதான் வாங்குவே, பவித்ராவை உனக்குப் பிடிச்சிருக்கா?”

“ம்… பிடிச்சிருக்கு…”

“என்னடா கண்ணா இழுக்கிறே?”

“பார்க்க ரொம்ப அழகா இருக்கா.”

“ம்… தங்கமான பொண்ணு ரிஷி.”

“அப்பிடியா?”

“ஆமா.”

“அப்போ அந்தத் தங்கத்தை என்னோட கண்ணுல அடிக்கடி காட்டுங்க.”

“நீ இப்பிடித் தூங்கி வழிஞ்சா எங்க நான் காட்டுறது? பவித்ரா ஏற்கனவே வந்தாச்சு.”

“ஓ…”

“ஆமா… இன்னைக்கு ஃபங்ஷன் இல்லையா, அதால காயத்ரியை ரெடி பண்ண வந்திருக்கா.”

“எல்லாமே அவதான் பண்ணுறாளா?”

“ஆமா, மண்டபத்துல இருந்து காயத்ரியோட ட்ரெஸ், மேக்கப் ன்னு சகலதும் அவளோட பொறுப்புத்தான், ரசனைக்காரப் பொண்ணுடா, என்ன அழகா எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துப் பண்ணுறா தெரியுமா!”

“ம்…” ரிஷி அனைத்தையும் மௌனமாக உள்வாங்கிக் கொண்டான்.

“சரி சரி, குளிச்சிட்டு சீக்கிரமா ரெடியாகி வா.” அன்னபூரணி படபடவென பேசிவிட்டு வெளியே போக ரிஷி பாத்ரூமிற்குள் போனான்.

***

வீடு முழுவதும் பெண்கள் கூட்டம் ஜேஜே என்றிருந்தது. பார்க்கும் இடமெல்லாம் பெண்களாகவே இருக்க ரிஷி சற்று அசௌகரியமாக உணர்ந்தான். கண்கள் ஒரு நொடி அவளைத் தேடியது. ஆனால் தேடியது கண்ணிற்கு அகப்படவில்லை.

“ரிஷி, சீக்கிரமா வா, பெரியப்பா உன்னைத்தான் தேடுறாங்க.” இளையவனின் தலை தெரியவும் அன்னபூரணி அழைத்தார். 

“இதோ…” அந்த அழைப்பிற்காகவே காத்திருந்தவன் போல சட்டென்று கீழே போனான் ரிஷி. வாசலில் பெரியப்பா நின்று கொண்டு யாரோடோ பேசிக் கொண்டிருந்தார்.

“பெரியப்பா, கூப்பிட்டீங்களா?”

“ரிஷி, வா வா… இதுதான் சாரங்கன்… இது ரிஷி, காயத்ரியோட சித்தி பையன்.” பெரியப்பா இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்க ரிஷி புன்னகைத்தான். காயத்ரிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் பெயர் சாரங்கன் என்று அவனுக்குத் தெரியும். பெரியம்மா ஃபோட்டோ கூட அனுப்பி வைத்திருந்தார்.

“இது லேடீஸ் ஃபங்ஷன், மாப்பிள்ளை வரமாட்டார்னு பெரியம்மா சொன்னாங்க.” குறும்பாக இவன் கேட்கவும் மாப்பிள்ளை அசடு வழிந்தார். பாண்டியனும் ஒரு புன்னகையோடு அப்பால் நகர்ந்து விட்டார்.

“இதையெல்லாமா கண்டுக்குவீங்க… பொண்ணைக் கண்ணுலேயே காட்ட மாட்டேங்கிறாங்க, அம்மாவை ட்ராப் பண்ண வந்தேன், அத்தையைக் கூட்டிக்கிட்டு வந்தேன்னு ஏதாவது காரணம் சொல்லிக்கிட்டு வர வேண்டியதுதான்.” சாரங்கன் மனம்விட்டுப் புலம்ப ரிஷி இப்போது வெடிச்சிரிப்புச் சிரித்தான்.

“ஐயையோ! எங்க மாப்பிள்ளை இவ்வளவு தூரம் பொலம்பக்கூடாதே!”

“ஏதாவது பார்த்துப் பண்ணுங்க மச்சான்.” அந்த இளம் வாலிபன் தன்னோடு சட்டென்று நட்பு பாராட்டிக் கொண்டது ரிஷிக்கு மிகவும் பிடித்திருந்தது.

“நீங்க உள்ள வாங்க மாப்பிள்ளை.”

“ஐயையோ! வேணாம் மச்சான், மானம் போயிடும்.”

“அட! நீங்க வேற, நீங்க பொண்ணைப் பார்க்கவா வாறீங்க, பொண்ணோட அண்ணன் நான்… உங்க மச்சான், லண்டன் ல இருந்து வந்திருக்கேன், நீங்க என்னைப் பார்க்கத்தானே இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்திருக்கீங்க.” ரிஷி அழகாகக் கதை புனைய சாரங்கன் தலையைச் சந்தோஷமாக ஆட்டிக் கொண்டான்.

வீட்டின் இரண்டு மாடிகளிலும் பெண்களே அமர்ந்திருந்தார்கள். உள்ளே வரத் தயங்கிய சாரங்கனின் கையைப் பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றான் ரிஷி. ஃபங்ஷன் இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை. மணப்பெண்ணுக்கு இன்னும் அலங்காரம் நடந்து கொண்டிருப்பதனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் ஆரம்பித்துவிடும் என்று கூடி இருந்த பெண்கள் பேசிக் கொண்டார்கள்.

“கேட்டீங்க இல்லை, இன்னும் கொஞ்ச நேரத்துல ஃபங்ஷன் ஆரம்பிச்சிடுமாம், அதுக்கப்புறமா உங்களுக்கு நேரடி தரிசனம்தான்.” 

“தான்க் யூ மச்சான்.” சாரங்கனின் வாயெல்லாம் இப்போது பல்லாகிப் போனது. ரிஷியின் ரூமிலிருந்து பார்க்கும் போது காயத்ரி அமரும் இடம் எங்கே துல்லியமாகத் தெரியுமோ, அங்கே புது மாப்பிள்ளையை அமர வைத்தான் ரிஷி.

சற்று நேரத்தில் ஃபங்ஷன் ஆரம்பித்து விட்டது. சாரங்கன் கண்களுக்கு விருந்து கிடைத்தது. ஆனால் ரிஷிதான் அவளைக் கண்களால் தேடிச் சலித்துப் போனான். அதன் பிறகு இருவரும் வியாபாரம், பொருளாதாரம், அரசியல் என பலதும் பேச ஆரம்பித்து விட்டார்கள். பேச்சு பேச்சாக இருந்தாலும் சாரங்கன் தான் வந்த வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தான். ரிஷிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. 

மாப்பிள்ளை வீட்டிலிருந்து காயத்ரிக்கு பெரிதாக ஒரு ஆரம் அணிவித்தார்கள். சம்பிரதாயங்கள் அனைத்தும் நிறைவு பெற பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

“என்ன மாப்பிள்ளை, தரிசனம் மட்டும் போதுமா… இல்லை… ஏதாவது பேச்சு வார்த்தையும்…” ரிஷி இப்போது மாப்பிள்ளையை ஆழம் பார்த்தான்.

“மச்சான்…” 

“ம்… புரியுது புரியுது, வெயிட் பண்ணுங்க.” ஒரு உல்லாசச் சிரிப்போடு ரூமை விட்டு வெளியே வந்தான் ரிஷி. மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் கலைந்து போயிருக்க, பெண் வீட்டார் மாத்திரமே அங்கு இப்போது கூடி இருந்தார்கள். அவர்களும் ஆளுக்கொரு வேலையில் ஈடுபட்டிருக்க ரிஷி மெதுவாக காயத்ரியிடம் வந்தான்.

“காயத்ரி…”

“என்ன ண்ணா?”

“கொஞ்சம் என்னோட ரூமுக்கு வாயேன்.” இதுவரை மாப்பிள்ளை அண்ணாவின் ரூமில் அமர்ந்திருந்ததை தங்கை கவனிக்கவில்லை.

“எதுக்கு?”

“ம்ப்ச்… கூப்பிட்டா வரணும், அதைவிட்டுட்டு எதுக்குன்னு என்ன கேள்வி கேக்குறே?”

“அது இல்லை ண்ணா, பவித்ரா வெயிட் பண்ணுறாங்க, ஹேர் ஸ்டைல், மேக்கப் எல்லாம் ரிமூவ் பண்ணணும், அதையெல்லாம் முடிச்சிட்டு நான் உன்னோட ரூமுக்கு வர்றேனே.”

“ம்ஹூம்… இப்போ ஒரு பத்து நிமிஷந்தான், நீ எங்கூட வா.” பவித்ரா என்ற பெயர் அவனைக் கலைத்தாலும், தங்கையின் பேச்சைக் காதில் கொள்ளாமல் அவள் கைப்பிடித்துத் தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

“உள்ள போ.” தங்கையிடம் சொல்லிவிட்டு அவன் வாசலிலேயே நின்றுவிட்டான்.

“நீங்க?”

“நான் பவித்ராக்கிட்ட ஒரு வார்த்தைச் சொல்லிட்டு வாறேன், நீ உள்ள போ காயத்ரி.” தங்கையை ஒரு சிரிப்போடு உள்ளே அனுப்பிவிட்டு காயத்ரியின் அறைக்கு வந்தான் ரிஷி. அவன் கதவைத் திறந்து உள்ளே வருவதற்கும், பவித்ரா அங்கிருந்த பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

இவனைப் பார்த்ததும் பெண் கொஞ்சம் திடுக்கிட்டு நின்றுவிட்டது. ஆனால் ரிஷி ஆச்சரியமாகக் கண்களை விரித்தான். மெல்லிய சாம்பல் வண்ணக் காட்டன் புடவை, ஒரு சாண் அகலத்தில் நல்ல அடர்ந்த மெரூன் வண்ணத்தில் பார்டர், உடல் முழுவதும் அதே மெரூன் வண்ணத்தில் குட்டிக்குட்டி இலைகள். லேசான ஒப்பனையோடு அப்போது பெண்ணிருந்தாள். அன்று காலையில் பார்த்த போது இந்த ஒப்பனை, புடவை எதுவுமின்றி சாதரணமாக நின்றிருந்தவள், இப்போது விஷேட வீடு என்பதால் தன்னையும் கொஞ்சம் அலங்கரித்திருப்பாள் போலும்.

ரிஷி இதுவரை இளம் பெண்களைப் புடவையில் பார்த்ததில்லை. எப்போதாவது அவன் அம்மா புடவை அணிவதுண்டு. சற்று முன்பு கூட காயத்ரி புடவையில்தான் இருந்தாள். ஆனால் அது அவன் கண்களுக்குப் பெரிதாகப் படவில்லை. ஒரு அண்ணனாகத் தன் தங்கையைப் பார்த்திருந்தான், அவ்வளவுதான்.

ஆனால்… இப்போது ரிஷியின் மனநிலை வேறாக இருந்தது. எதிரே திகைத்துப்போய் நின்றிருந்த அந்தப் பெண்ணை அவன் கண்கள் அங்குலம் அங்குலமாக அவள் அனுமதியின்றியே ரசித்தது.

“காயத்ரி…” அவன் பார்வைப் பார்த்து அவள் தட்டுத்தடுமாறிய போதும்… நிதானமாக அவன் பார்வையை முடித்துவிட்டு அவள் கண்களைச் சந்தித்தான் ரிஷி. அவன் பெண்களை நன்கறிந்தவன். எதிரே நின்றிருந்த அழகுச் சிலை பூமியின் ஒட்டுமொத்த சுகம் என்று அவனுக்குப் புரிந்தது.

“காயத்ரி எங்க?” பெண் இப்போது பேசியது. உரிமையான அவன் பார்வை அவளுக்குள் ஏதேதோ சந்தேகங்களை விதைத்தாலும் எதையும் கண்டுகொள்ளாது நின்றிருந்தாள்.

“பத்து நிமிஷத்துல வந்திடுவா, மாப்பிள்ளை வந்திருக்கார்.” அவளிடம் எதையும் மறைக்கப் பிரியம் இல்லாமல் உளறினான் இளையவன்.

“ஓ…” முதலில் ஆச்சரியப்பட்டாலும் பிற்பாடு அவள் இதழ்கள் மலர்ந்தது. முகம் லேசாகச் சிவந்தது. அவள் முகம் பார்த்து இப்போது ரிஷியும் சிரித்துக் கொண்டான்.

“இங்க எல்லாம்…” எதையோ பேச ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக் கொண்டாள்.

“ம்… மேல சொல்லு.” உரிமையாக வந்தது அவன் ஒருமைச் சொல். இப்போது பெண் முழுதாகத் திணறியது, மௌனித்தது.

“சொல்லும்மா…” அந்தத் திணறலை, மௌனத்தை ரிஷி வெகுவாக ரசித்தான்.

“கல்யாணத்துக்கு முன்னாடி… இப்பிடி…”

“மீட் பண்ண மாட்டாங்களா?” அவள் சொல்லத் தயங்கியதை அவன் முடித்து வைத்தான்.

“ம்ஹூம்…” இடம் வலமாகத் தலையாட்டிய பெண் தனக்குள் வியந்து போனது.

‘நான் ஏன் இப்படித் தடுமாறுகிறேன்?! காயத்ரியின் அண்ணனை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசுவதில் எனக்கெதற்கு இத்தனைத் தயக்கம்?!’ பெண்ணுக்குப் புரியாத அவள் மனம் ரிஷிக்கு நன்றாகவேப் புரிந்தது. அவளிடம் இப்போது வேண்டுமென்றே வம்பு வளர்த்தான்.

“ஏன் மீட் பண்ணிக்க மாட்டாங்க?” அவன் கேள்வியில் பெண் சட்டென்று நிமிர்ந்து பார்த்தது.

‘இது என்ன கேள்வி என்று என்னிடம் கேட்கிறாய் நீ?! பஞ்சையும் நெருப்பையும் யார் பக்கத்தில் வைப்பார்கள்?!’  அவள் பார்வைக் கேள்வி கேட்டது.

அவன் முகத்தில் ஒட்டியிருந்த குறும்புப் புன்னகை அவன் தன்னோடு விளையாடுகிறான் என்று புரிய பவித்ரா வேறு பேசினாள்.

“ரொம்ப லேட் ஆகுது, நான் வீட்டுக்குப் போகணும்.”

“இன்னும் கொஞ்ச நேரந்தான்.”

“இதுக்கு மேலயும் என்னால தாமதிக்க முடியாது.” ஒரு தவிப்போடு அந்தக் கண்கள் அவனைப் பார்த்த போது ரிஷி தன்னையும் அறியாமல் அவளை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்தான். அப்போது பார்த்து சட்டென்று ரூம் கதவு திறந்து கொள்ள அன்னபூரணி உள்ளே நுழைந்தார்.

“காயத்ரி எங்க பவித்ரா?” அப்போதுதான் ரிஷியும் அங்கே இருப்பதை உணர்ந்தவர்,

“நீ இங்க என்னடாப் பண்ணுறே? ஆமா, காயத்ரி எங்க?” என்றார் மீண்டும்.

“அத்தை…” பெண் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறியது.

“அன்னம்மா, அவ என்னோட ரூம்ல இருக்கா.”

“அங்க என்னப் பண்ணுறா? பவிம்மா, அம்மா ஏற்கனவே ரெண்டு தடவை கால் பண்ணிட்டாங்க, சீக்கிரமாக் கிளம்பும்மா.”

“அத்தை… காயத்ரி…”

“காயத்ரிக்கு என்ன பவி?”

“மாப்பிள்ளையும் என்னோட ரூம்லதான் இருக்காரு அன்னம்மா.”

“ஓ… அப்பிடியா.” இயல்பாகச் சொன்ன அன்னபூரணி அதன் பிறகே தங்கை மகனின் வார்த்தைகளின் பொருள் உணர்ந்து அலறினார்.

“என்ன?! என்னடா ரிஷி இது?”

“என்ன?” கொஞ்சம் கறாராகவே கேட்டான் ரிஷி.

“கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்குடா!”

“அதைத்தான் நானும் சொல்றேன், கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு.”

“இங்க இதெல்லாம் பழக்கமில்லை ரிஷி.”

“பழகிக்கோங்க, பாவம் அந்த மனுஷன், பொண்ணைக் கண்ணுலயே காட்ட மாட்டேங்கிறாங்க மச்சான்னு கெஞ்சிக்கிட்டு நிக்குறாரு.”

“டேய்!” அன்னபூரணி அலற, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் பவித்ரா.

“என்ன டேய்? அவரா இருக்கப் போகக் கெஞ்சுறாரு, நானா இருந்திருந்தாப் பொண்ணைத் தூக்கி இருப்பேன்.”

“டேய் டேய்! என்னடாப் பேச்சு இது வில்லன் மாதிரி?!”

“வில்லனா?! பொண்ணைத் தூக்குறவனை வில்லன்னு சொன்னது உங்க காலம், இப்பல்லாம் பொண்ணைத் தூக்குறவன்தான் ஹீரோ அன்னம்மா.” அழகாக விளக்கம் சொன்ன தங்கை மகனின் தோளில் ஒரு அடி வைத்தார் அன்னபூரணி.

“பேச்சைப் பாரு, நீயும் உன்னோட மாப்பிள்ளையும் என்ன வேணாப் பண்ணுங்க, ஆனா பவித்ரா இப்போ அவளோட வீட்டுக்குப் போகணும், இல்லைன்னா அவங்கம்மா இங்க வந்திடுவாங்கடா.” 

“சரி சரி, கூட்டிட்டு வர்றேன்… ஒரு ஆம்பிளை சந்தோஷமா இருந்தா இந்தப் பொம்பளைங்களுக்குப் பொறுக்காதே.” புலம்பிய படி ரிஷி வெளியே போக அன்னபூரணியும் பவித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

Leave a Reply

error: Content is protected !!