நினைவு தூங்கிடாது 8.2
நினைவு தூங்கிடாது 8.2
நிழல்
உன் பயத்தை பயன்படுத்தி
உன்னை என் அருகிலேயே
வைத்துக் கொள்ள
நினைக்கும்
என் நினைவுகளை
என்னவென்று நான் சொல்ல
நள்ளிரவு நேரம். எங்கு திரும்பினாலும் இருள். பெயர் தெரியாத விலங்குகளின் பயங்கர சத்தம். சுற்றயிருந்த மரங்கள் அனைத்தும் கரும் பூதங்களாக. தான் விடும் மூச்சுக் காற்றும் பேரிரைச்சலாக. திக்குத் தெரியாத அடர்ந்த காட்டில் தன்னந்தனிமையில் அவள் மட்டும்.
அவளை சுற்றி காரிருள். அவளிடம் பயம், பயம், பயம் மட்டுமே.
மயக்கம் போட்டு விழுந்து விடுவோமோ என்ற பயம்; மிருகங்கள் தன்னை அழித்து விடுமோ என்ற பயம்; எந்த மரத்தில் எந்த பேய் தொங்கிக் கொண்டிருக்கிறது என்ற பயம்; உயிருடன் மீண்டும் வெளியே செல்வோமா என்ற பயம்; இனி தன் தாய், தமக்கையை காண்போமா என்ற பயம்;
பயம் என்பதே அறியாத அந்தப் பதினேழு வயது வளர்ந்த குழந்தை, பயத்தின் மொத்த உருவமாக, அந்த காரிருளில் திசை தெரியாமல், அவன் பெயரும் தெரியாமல் அவள் வைத்த பெயரை கொண்டு “கட்டவண்டி சார், கட்டவண்டி சார். எங்க இருக்கீங்க? எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” என பயத்தில் பரிதவித்து தேடிக்கொண்டிருந்தாள்.
தன்னுடன் இணைந்து வந்துகொண்டிருந்த மனிதரை திடீரென காணவில்லை. இந்த காரிருளில் எங்கே தேட? என மருண்டு தவித்தது அந்த சின்னஞ்சிறு அப்பாவி பெண் மான்.
‘நாம் தவறு செய்கிறோமோ?’ என மனதில் பயம் சூழ்ந்தது.
அவள் நினைவு முழுவதும் மாலையில் ஈஸ்வருடன் நடந்த உரையாடலுக்கு இழுத்துச் சென்றது.
†††‡†††
காலையில் பிருந்தாவுடனும், தன் குட்டி செல்லங்களுடனும், மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்த அமிர்தா, அவனை சந்திக்கும் நேரம் நெருங்கவும், ஏதேதோ காரணங்கள் கூறி பிருந்தாவையும் பசங்களையும் தவிர்த்து, தனியாக ஆற்றங்கரையை அடைந்தாள்.
அங்கு இவளுக்கு முன்பாகவே ஈஸ்வர் காத்திருந்தான்.’ஆயிரம் வேலைகள் தலைக்குமேல் குவிந்திருக்க, அனைத்தையும் விடுத்து, ஒரு சிறு பெண்ணிற்காக ஏன் இங்கே காத்திருக்கிறோம்?’ என சிந்திக்காமல் அவளின் வரவை எதிர்பார்த்திருந்தான்.
சரியான நேரத்திற்கு அவள் வந்து சேர, ஒரு மெச்சுதலான பார்வையுடன் ஒரு தலையசைப்பு மட்டுமே. வெளியே வேறு எந்த மாற்றமும் அவனிடம் இல்லை. ஆனால் அவன் மனதிலோ, அவளை கண்ட நொடி,’ஆயிரம் மத்தாப்புகள் வெடித்து சிதறியது’ போல் ஒரு சந்தோஷம். அதை காட்டிக்கொள்ளாமல்,”பரவாயில்லை இன்னைக்காவது சொன்ன நேரத்துக்கு வந்துட்ட” மிதமிஞ்சிய கேலி மட்டுமே இருந்தது அந்த குரலில்.
‘இவன் என்ன நம்மை கிண்டல் பண்றது?’ என்ற கோபம் கிளர்ந்தெழ,”நான்லாம் சொன்ன சொல்லை மீற மாட்டேன்” என தன் முகத்தை தோள்பட்டையில் இடித்துக் கொண்டாள்.
அனைவரையும் கண்ணசைவில் ஆட்டிப்படைக்கும் தன்னிடம், பயமில்லாமல் பேசிய அவளது துடுக்கு பேச்சை ரசித்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,”ஆமாமா ஊருக்குள்ள சொன்னாங்க. சொன்ன சொல்லை மீறமாட்டா இந்த நீலாம்பரி, ஆனால் மாங்காயை மட்டும்தான் திருடுவான்னு.” என்றான் நக்கலாக.
“எந்த களவாணி பய இப்படி ஒரு புரளியை கிளப்பிவிட்டது?” அவன் விளையாடுகிறான் என்பது புரியாமல் பொங்கி எழுந்தாள்.
வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டு,”ஒருத்தர், ரெண்டு பேர்ன்னா சொல்லலாம். ஊர்ல இருக்க அம்புட்டு பயலுகளும் அதையேதான் சொல்லுறாங்க.” என்றான் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு.
‘தானா இவளுடன் இப்படி வார்த்தையாடி கொண்டிருக்கிறோம்?’ என அதிர்ச்சியுடன் உள்வாங்கினான். அனாலும் இந்த விளையாட்டு அவனுக்கு மிகவும் பிடித்ததாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருந்தது தான் இங்கே கொடுமை.
ஊரில் விசாரித்திருந்தால், அவளை அவ்வாறு சொல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம், என்பதை உணர்ந்த பெண் பொங்கி வரும் பாலில், பச்சை தண்ணியை ஊற்றியது போல் அடங்கினாள். அவளின் பூர்விகம் பூகோளம் அவ்வாறு.
அவள் பசங்களுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் ஏராளம். அவளுக்கு வேண்டும்போது மாங்காய், கொய்யா போன்ற பழங்களை, யார் தோட்டத்திலிருந்து வேண்டுமென்றாலும் பறித்து செல்வாள்.
ஊரின் செல்லப்பிள்ளையாக சுற்றித்திரியும் அமிர்தாவின் சேட்டைகளை அனைவரும் ரசிக்கவே செய்தனர். அவள் எவ்வளவு அதிகமாக சேட்டைகள் செய்தாலும், யார் மனதையும் புண்படும்படி நடக்க மாட்டாள். அதுமட்டுமன்றி உதவி என்று கேட்டால், தன்னால் முடிந்ததை நிச்சயமாக அவர்களுக்கு செய்வாள்.
தனது வரலாற்றை தெரிந்த அந்த பாவையோ, ஈஸ்வர் கூறியதை நம்பினாள். அவன் எப்போது ஊரில் தன்னைப்பற்றி விசாரித்தான் என்பதை சிந்திக்க மறந்தாள். அவனிற்கு தனது பெயர் கூட தெரியாது என்பதை அந்த நிமிடம் மறந்து தான் போனாள்.
“ஓஹ்” என உதடு குவித்து இழுத்த பெண், ஒற்றை விரலால் நாடியில் தட்டி “சொன்னாலும் சொல்லியிருப்பாங்க நம்ம எஸ்டிடி அப்படி” என்றாள் வருந்துவது போல். நொடிக்கு நொடி மாறும் அவளின் முகபாவங்களை ரசித்து கொண்டிருந்தவன், அவள் கூறியது புரியாமல் புருவமுயர்த்தினான், ‘அப்படினா?’
“இது கூட உங்களுக்கு தெரியாதா? எஸ்டிடின்னா வரலாறு. நம்ம வரலாறு அப்படி.” என்றவள் அவன் செவியோரம் சென்று, “வரலாறு முக்கியம் கட்டவண்டி.” என்றாள் ரகசிய குரலில்.
அவளது நெருக்கமும், செவியோரம் கேட்ட ரகசிய குரலும், இதுவரை அவள் முகத்தில் தோன்றி மறைந்த வர்ண ஜாலங்களை ரசித்திருந்தவனின், மனதிலும் உடலிலும் உணர்ச்சிகளை தூண்டியது. எங்கே அவளருகில் இருந்தால், ‘தவறு செய்து விடுவோமோ’ என அஞ்சி அவளிடமிருந்து சற்று விலகி, அங்குமிங்கும் நடை பயின்றான், தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த. அந்த உணர்ச்சி கொந்தளிப்பில் அவள் ‘கட்டைவண்டி’ என அழைத்ததை கவனிக்க தவறினான். கவனித்திருந்தால் அதற்கு தண்டனை என்ற பெயரில், நிச்சம் அவளை அணைத்து முத்தமிட்டு தன் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடியிருப்பான் அந்த கோவக்காரன்.
முதல் நாளில் அவள் மீது தோன்றிய ஈர்ப்பே, அவளை மிரட்டி தினமும் சந்திக்க ஆவணம் செய்தது. அவளிடத்திருந்து விலகு என மூளை எச்சரித்தாலும், மனம் அவளின் அருகாமையை எதிர்பார்த்தது.
அவளுடனிருக்கும் நேரம் அனைத்தையும், வேற எந்த சிந்தனையுமின்றி தன்னை அவளுள் சுருட்டி கொள்கிறாள் என்பதையும், அந்த நேரம் முழுவதும் நொடிகளாய் மறைவதையும் உணர்ந்தே இருந்தான். ஏதோ ஒரு விதத்தில் அவள் தன்னை பாதிக்கிறாள் என்று மட்டும் புத்திக்கு புரிந்தது.
‘அனைவரிடமும் இறுகிய முகம் காட்டும் தான், ஏன் இந்த சிறு பெண்ணிடம் இளகி கொண்டிருக்கிறோம்?’ என சிந்திக்க மறந்தான். எத்தனையோ பெண்களுடன் பழகிய தன் மனம், ஏன் இந்த சிறு பெண்ணிடம் தடுமாறுகிறது? என சிந்திக்க தவறினான்.
தன் உணர்ச்சிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின், சிறிது நேரம் அவளுடன் சாதாரணமாக கதை அளந்து கொண்டிருந்தான். திடீரென ஒரு இடத்தை அம்முவிடம் சுட்டி காட்டி,”அங்கே என்ன இருக்கு?”
அவன் காட்டிய திசையை சாதாரணமாக பார்த்த பெண் மிரண்டுபோனாள். அவனை நெருங்கி அவன் கைப்பற்றி நின்றாள். அவளின் அருகாமையில் அவன் மனம் தடுமாறினாலும், அவளின் கரத்திலிருந்த நடுக்கம் ‘அவள் பயப்படுகிறாள்’ என எடுத்துரைத்தது. கேள்வியாக அவளை பார்த்து புருவமுயர்த்தினான்.
“அது.. பெரி.. காடு. அங்கே நிறைய மிருகம் இருக்கு.”
‘அதுக்கு எதற்காக இவ்வளவு பயப்பட வேண்டும்?’ என்ற கேள்வியுடன், அவள் முகத்திலிருந்த பார்வையை சிறிதும் விலக்கவில்லை.
அவன் பார்வையிலிருந்த கேள்வி புரிந்ததோ என்னவோ?”அங்க நைட்… பேய… உலாத்…தும்…ன்னு சொல்லுவாங்க” பேய் என்ற வார்த்தையை சொல்லவே அஞ்சி நடுங்கினாள்.
இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பேய், பிசாசு, பூதம் என கட்டுக்கதைகளை நம்பாத இளைஞன் அவன். அவனிடம் சென்று ‘பேய் இருக்கு’ என்று சொன்னால் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. சத்தம் போட்டு சிரித்து விட்டான்.
அவன் சிரிப்பில் கோபம் கொண்ட பெண், அவன் உதடுகளை தன் தளிர் கரங்களால் மூடி, அவள் வாயில் ஒரு விரல் வைத்து, ‘சிரிக்கக் கூடாது’ என சைகையால் தெரிவித்து, அவளது கயல்விழியை உருட்டினாள். அந்த விழிவீச்சில் காளையவன் கட்டுண்டான். அனைவரையும் ஆட்டிப்படைக்கும் சிம்மசொப்பனமான ஈஸ்வரை, தன் துரு துரு விழிகளால் கட்டிப்போட்டாள் இந்த அப்பாவி பெண்மான்.
அவள் கை பட்ட உடனேயே ஈஸ்வரின் சிரிப்பு நின்றது. அவளது அருகாமையை அவன் மனது மிகவும் ரசித்தது. அவள் பேச ஆரம்பிக்கவும் அவளிடம் தன் கவனத்தை திருப்பினான்.
“ஸ் சத்தம்போட்டு சிரிக்காதீங்க. எங்க பக்கத்து வீட்டு பாட்டி நிறைய கதை சொல்லி இருக்கு. இந்த மாதிரி இடத்தில் தான் பேய் இருக்கும். டெய்லி நைட் அங்க சுத்துமாம்” என அப்பாவியாக அவனிடன் விளக்கிக் கொண்டிருருந்தாள்.
அவளின் அப்பாவித்தனத்தில் மனம் கொள்ளை போக,”ஹய்யோ, நீலாம்பரி, நீலாம்பரி உன்னை டெரர் பீஸ்ன்னு நினைச்சா, இப்படி காமெடி பீஸா இருக்க.” என விழுந்து விழுந்து சிரித்தான்.
அவன் சிரிப்பினில் கோபம் கொண்ட அம்மு,”நான் சொல்றத நம்ப மாட்டீங்கல்ல. நீங்க வேணா இன்னைக்கு நைட்டு போய் டெஸ்ட் பண்ணுங்க” என முகத்தை திருப்பினாள்.
அவள் முக திருப்பலையும் ரசித்தவன்,”சரி வா! இன்னைக்கு நைட் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே, பேய்க்கு ஒரு ஹலோ சொல்லிட்டு வரலாம்” என குண்டை தூக்கி போட்டான்.
அவன் கூறியதில் தூக்கிவாரிப் போட,”என்னது நான் பேய்க்கு ஹலோ சொல்லனுமா? அதுவும் நைட் நேரத்தில். உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு கட்டவண்டி சார்.”
இப்போது அவளின் கட்டவண்டியை சரியாக பிடித்துக்கொண்டான். இதுல பைத்தியம்ன்னு வேற சொல்லியிருக்காள்.
இதுவரை அவளை சீண்டிப்பார்க்க மட்டுமே நினைத்தவன், அவளின் கட்டவண்டி, பைத்தியம் என்ற வார்த்தையில் தூண்டப்பட்டு,”என்னை பார்த்து பைத்தியம் சொல்லுற. என் வண்டியை கட்டவண்டின்னு சொல்ற.” என கர்ஜித்தான்.
அவன் கோபத்தை உணராத பெண்,”அந்த டப்பா வண்டியை பார்த்து கட்டவண்டி சொல்லாம வேற என்ன சொல்ல?” சிலுப்பி நின்றாள்.
தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்தவன்,”போனா போகுது உன்னை விட்டுடலாம்ன்னு பார்த்தேன். ஆனா இப்போ கட்டவண்டி, பைத்தியம்ன்னு சொல்லியிருக்க, நேத்து என்னை கல்லால் அடிச்சுயிருக்க, ரெண்டுக்கும் சேர்த்து உனகான தண்டனை, இன்னைக்கு நைட்டு ஒன்பது மணிக்கு அம்மன் கோவில் வர.”
“ஹய்யய்யோ அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன கொன்னே போடுவாங்க. நான் வரமாட்டேன்.”
“நான் உன்கிட்ட பர்மிஷன் கேட்கலை. வந்து தான் ஆகணும். இல்லைனா உங்க அம்மா கிட்ட நான் போய் பணம் கேட்டுக்கறேன்.” எனக் கிளம்புவது போல பாசாங்கு செய்தான்.
அவன் மிரட்டலில் பயந்து போன பெண் வருவதாக கூறி, தன் அன்னை உறங்க செல்லும் வரை காத்திருந்து, வீட்டைவிட்டு வெளியேறினாள்.
பொதுவாக அந்த கிராமத்தில் அதிக உழைப்பின் காரணமாக, அனைவரும் இரவு எட்டு மணிக்கே விளக்கை அணைத்து விடுவார்கள், என்பதால் அவள் வெளியேறுவது பெரிய சிரமமாக இல்லை.
**********
அவளுடன் பேசிக்கொண்டே காட்டுக்குள் வந்த ஈஸ்வர், திடீரென காணாமல் போக அவனை தேடி அலைந்து கொண்டிருந்தாள் அப்பாவி பெண் மான்.