kkavithai16

kkavithai16

கவிதை 16

ரிஷியும் ஆலிவரும் ‘லீட்ஸ்’ போய் சேர்ந்த போது நள்ளிரவு நெருங்கி விட்டது. அதற்கு மேல் லில்லியனை போய் பார்க்க முடியாது என்பதால் இருவரும் ஒரு ஹோட்டலில் தங்கினார்கள். ஆனால் விடிந்தும் விடியாததுமாக ரிஷி தன் முன் வந்து நின்ற போது அதை எதிர்பார்த்தவர் போல அவனை இலகுவாக எதிர்கொண்டார் அந்த வயதான பெண்மணி. 

ஆலிவரிடம் தான் இருக்கும் இடத்தைச் சொன்ன பிற்பாடு ரிஷி தாமதிப்பான் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லைதானே?!

“ஹலோ கைஸ், குட் மார்னிங்.” சிரித்த முகமாக வரவேற்ற லில்லியனுக்கு ஆலிவர் பதில் வணக்கம் சொன்னான். ஆனால் ரிஷி காட்டமாகக் கேள்வி கேட்டான்.

“பவித்ரா எங்க?” சற்றே உயர்ந்து ஆக்ரோஷமாக வந்தது குரல். 

“எனக்குத் தெரியாது ரிஷி.” நிதானமாகப் பதில் சொன்னார் பெரியவர்.

“பவித்ராக்கு நீங்க லெட்டர் போடலை?”

“போட்டேன்.” இப்போதும் பதில் நிதானமாகவே வந்தது.

“எதுக்கு? உங்கப் பொண்ணு யாருக்குக் குழந்தையைப் பெத்துப் போட்டாளோ அவங்களுக்கு லெட்டர் போட்டுச் சேதி சொல்லுங்க, எதுக்கு எம் பொண்டாட்டிக்கிட்ட இதையெல்லாம் சொல்றீங்க?” காரசாரமாகக் கேட்டான் ரிஷி.

“தப்புதான் ரிஷி.” சுலபமாக ஒப்புக் கொண்டார் லில்லியன். 

“தப்புன்னு தெரியுதில்லை, அப்போ எதுக்கு அப்பிடிப் பண்ணினீங்க?”

“ஒரு குழந்தை அநாதை மாதிரி வளர்றதை என்னாலப் பார்க்க முடியலை ப்பா.” இப்போது முதியவரின் கண்கள் கலங்கியது. ஆலிவருக்கும் அவரைப் பார்க்கப் பாவமாக இருந்திருக்கும் போலும். மெதுவாக ரிஷியின் கையைப் பிடித்துச் சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் நண்பனின் கையைத் தட்டிவிட்டான் ரிஷி.

“அதை உங்கப் பொண்ணுக்கிட்டச் சொல்லுங்க.”

“சொன்னேன் ரிஷி.”

“உங்கப் பொண்ணு மட்டும் நிம்மதியா அவ வாழ்க்கையை வாழணும், ஆனா நீங்க என்னைத் தண்டிக்க நினைப்பீங்களா?” ரிஷியின் கேள்விகளில் இருந்த நியாயம் பெரியவரை வாயடைக்க வைத்தது.

“ரிஷி, கொஞ்சம் அமைதியாப் பேசலாமே.” ஆலிவர் கெஞ்சினான்.

“உனக்கென்ன பைத்தியமாப் புடிச்சிருக்கு ஆலிவர்? நேத்துல இருந்து பவித்ராவை காணலை, எங்கப் போனான்னேத் தெரியலை, இதுல நீ அமைதியாப் பேசச் சொல்லுற!”

“உன்னோட நிலைமை எனக்குப் புரியுது ரிஷி.”

“பவித்ராக்கு இங்க எதுவுமே தெரியாது ஆலிவர், எங்கப் போனா, என்ன ஆனான்னு எனக்கு எவ்வளவு பயமா இருக்குத் தெரியுமா?”

“புரியுது ரிஷி.”

“உனக்குப் புரியுது, இந்தம்மாக்குப் புரியுதான்னு பாரேன்! தப்பு இவங்க வீட்டுல நடந்திருக்கு, ஆனா அதுக்கான பிராயச்சித்தத்தை என்னோட வீட்டுல தேடுறாங்க!”

“………..”

“இது எந்த வகையில நியாயம்? எனக்கேத் தெரியாம என்னோட குழந்தையை இவங்க பொண்ணு பெத்துக்குவாளாம், அதுக்கப்புறம் அவளே அதைத் தூக்கிப் போட்டுட்டு அவ வாழ்க்கையை வாழப் போயிடுவாளாம், ஆனா இவங்கப் பொண்ணு பண்ணின பாவத்துக்கு நான் பரிகாரம் பண்ணணுமா?” ரிஷி ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கக் கேட்க லில்லியனும் ஆலிவரும் தலைகுனிந்த படி அமர்ந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஆலிவருக்கு ரிஷி மேல் எந்தத் தவறும் இருப்பதாகத் தோன்றாததால் வாயைத் திறந்தான்.

“ரிஷியோட வைஃப் எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க மேடம், ப்ளீஸ்.”

“எனக்குத் தெரியாது ஆலிவர், பவித்ராக்கு நான் லெட்டர் போட்டது உண்மை, எனக்கொரு உதவி அவங்க மூலமாக் கிடைச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன்.”

“அதுக்குத்தான் இப்போ மதர் தெரேசா மாதிரிக் கிளம்பி வந்திருக்காளே, எங்க இருக்கான்னு மட்டும் சொல்லுங்க.” ரிஷி எகிறினான்.

“எனக்குத் தெரியாது ரிஷி.” எவ்வளவு வாதாடிய போதும் லில்லியனது வாயிலிருந்து வந்த வார்த்தை இதுதான். கடைசிவரை பவித்ரா எங்கே என்று தனக்குத் தெரியாது என்றே சாதித்தார். ஆனால் ரிஷி அசரவில்லை. பவித்ரா இந்தப் பெண்மணியைத் தேடித்தான் வந்திருப்பாள் என்பது அவனுக்குச் சர்வ நிச்சயம். 

“கண்டு பிடிக்கிறேன் லில்லியன், பவித்ரா எங்கேன்னு நான் கண்டு பிடிக்கிறேன்.” சூளுரைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ரிஷி.

ரிஷி எவ்வளவு முயன்றும் பவித்ரா இருக்கும் இடத்தை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. லில்லியனின் ஹோட்டல் இருக்கும் அனைத்து நகரத்திலும் தனது தேடுதல் வேட்டையை நடத்தினான். ஆனால் பதில் என்னவோப் பூஜ்ஜியம்தான். ஆலிவரும் குழம்பிப் போனான். ரிஷியோடு போகாமல் ஒருநாள் தனித்து லில்லியனை போய் பார்த்தான். 

“மேடம்… ப்ளீஸ், ரிஷியோட வைஃப் எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க, அவங்க இல்லாம ரிஷி ரொம்பவேக் கஷ்டப்படுறான்.”

“எனக்குத் தெரியாது யங் மேன்.” லில்லியன் சாதித்தார்.

“இல்லை மேடம், உங்களுக்குக் கண்டிப்பா ரிஷியோட வைஃப் எங்க இருக்காங்கன்னு தெரியும், உங்களைத் தேடித்தான் அவங்க வந்திருக்காங்க.”

“ஆலிவர்… வாழ்க்கையில ரொம்ப நொந்து போய் உட்கார்ந்திருக்கேன், என்னை நீயும் கஷ்டப்படுத்தாத ப்பா.” கண்கள் கலங்கப் பேசினார் முதியவர்.

“அவங்க பத்திரமா இருக்காங்க இல்லை மேடம்? அதை மட்டுமாவது சொல்லுங்க.”

“…………” லில்லியன் பதில் சொல்லாமல் தவிர்த்த போதே ஆலிவருக்கு புரிந்து போனது. பவித்ரா இருக்குமிடம் நிச்சயமாக இந்தப் பெண்மணிக்குத் தெரியும் என்பது. தான் லில்லியனை சந்தித்ததை ரிஷியிடம் ஆலிவர் சொல்லவில்லை. இருவரும் தங்கள் தொழிலைத் தூக்கித் தூர வைத்துவிட்டு முழுமூச்சாக பவித்ராவை தேடினார்கள். 

“நாம நினைச்ச அளவுக்கு லில்லியன் லேசுப்பட்ட ஆளில்லை ஆலிவர்.”

“எனக்கும் அப்பிடித்தான் தோணுது ரிஷி, பக்காவா எல்லாத்தையும் ப்ளான் பண்ணித்தான் பண்ணி இருக்காங்க போல.”

“ம்… நாம போட்ட லிஸ்ட் ல எங்கேயும் இல்லைன்னா எப்பிடி ஆலிவர்? நாம எந்த ப்ரான்ச்சையாவது மிஸ் பண்ணிட்டோமா?”

“இல்லையே ரிஷி, லில்லியனுக்கு எல்லாமா யூகே ல இருபது ப்ரான்ச்சஸ்தான் இருக்கு, இருபது சிட்டிலயும் தேடிட்டோம்.” 

“அப்போ பவித்ரா எங்க ஆலிவர்?” மண்டையைப் போட்டுக் குழப்பிய ரிஷி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“ஆலிவர்! லில்லியன் ஏதாவது சிட்டியில புதுசா ஹோட்டல் கட்டுறாங்களா?” நண்பனின் கேள்வியில் ஆலிவருக்கும் கண்ணில் மின்னல் வந்தது.

“தெரியலையே ரிஷி! அப்பிடியும் இருக்குமோ?!”

“கண்டிப்பா! புதுசா வேலை நடக்குற இடத்துல நாம தேட மாட்டோம் ன்னு லில்லியன் நினைச்சிருக்காங்க.” பரபரப்பாகச் சொன்ன ரிஷி அதன்பிறகு சிறிது நேரம் லில்லியனின் ஜாதகத்தை மீண்டும் ஆராய்ந்தான். இந்த ஒரு வாரமும் லில்லியனுக்கு எங்கெங்கே ஹோட்டல்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்தவன் இப்போது புதிதாக கட்டுமானப்பணி நடக்கும் இடங்களை ஆராய்ந்தான். பதில் சுலபமாக ‘விட்பி’ என்று கிடைத்தது. அன்றே ரிஷியும் ஆலிவரும் விட்பி நோக்கிப் பயணமானார்கள். 

***

ஒரு வாரம் கடந்து போயிருந்தது. விட்பி வந்த உடனேயே பவித்ரா புதிதாக ஒரு ஃபோன் வாங்கிக் கொண்டாள். தினமும் வீட்டினரோடு பேசவில்லை என்றால் பிரச்சனை ஆகிப்போகும்.

“என்னம்மா புது நம்பரா இருக்கு?” இது ரேணுகா.

“அந்த சிம் ல ஏதோ ப்ராப்ளம் ன்னு அத்தான்தான் இந்த சிம்மை குடுத்தாங்க ம்மா.” அழகாகப் பொய் சொன்னது பெண்.

“மாப்பிள்ளை எங்கே பவி? ரெண்டு நாளாக் கண்ணுலயேப் படலை?”

“ஏதோ ஒரு வேலையா அலைஞ்சு திரியுறாங்க ம்மா, ஒரு வாரமா வெளியே கவுன்சில் வரைப் போய் வர்றாங்க.”

“ஓ… அப்பிடியா?” இப்படிப் பலவகையில் பலரைச் சமாளிக்க வேண்டி இருந்தது பவித்ராவிற்கு. இந்த ஒரு வாரத்தில் குழந்தை அவளோடு மிகவும் ஐக்கியமாகி இருந்தான். இரண்டு மூன்று வார்த்தைகளை ஒன்றாகக் கோர்த்துப் புதிதாகப் பேச ஆரம்பித்திருந்தான்.

பவித்ரா சேலை அணியும் நாட்களில் அவள் முந்தானையைப் பிடித்துக் கொண்டு அவள் பின்னோடு நடக்கக் கற்றுக் கொண்டிருந்தான். புடவைக் கட்டாமல் பெண் சுடிதார் அணிந்திருந்தால் இடை வரை நீண்டு தொங்கிய அவள் பின்னலை எட்டிப் பிடித்துக் கொள்ளப் பழகி இருந்தான்.

ஆக மொத்தம், அவள் ஸ்பரிசம் அவனுக்குத் தேவைப்படுகிறது என்று பவித்ரா புரிந்து கொண்டாள். இதுவரைத் தான் அனுபவித்திராத தாயின் அருகாமையை அந்தக் குழந்தை பவித்ரா மூலம் அறிந்து கொள்ள முயன்றது. பவித்ராவுக்குமே அதில் கொள்ளை ஆனந்தம்தான். ஹரி தன்னோடு வெகு சீக்கிரத்திலேயே ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று அவள் மிகவும் ஆசைப்பட்டாள்.

‘அன்பு’ என்ற ஒரு விஷயத்தில் அந்தக் குழந்தைப் பரம ஏழையாக இருந்த போதிலும் மற்றைய எந்த விஷயத்திலும் லில்லியன் ஹரிக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வயதுக்கு மீறிய வளர்ச்சியோடு, ஒரு பொலிவோடு, தினம் தினம் கண்ணைக் கவரும் ஆடைகளோடு, அதற்கு ஏற்றாற் போல மேட்சிங்காக ஷூ அணிந்து கொண்டு என்று… குழந்தை பார்க்க அவ்வளவு அழகாக இருந்தான்.

காலை, மாலை என இரு வேளையும் இப்போதெல்லாம் பவித்ராவும் ஹரியும் வெளியே வீதியுலாப் போய் வருகிறார்கள். தன்னை இத்தனைக் காலமும் கூட இருந்து பார்த்துக் கொண்ட அந்தப் பெண்மணியை இப்போதெல்லாம் ஹரி பெரிதாகத் தேடுவதில்லை.

ஊதியத்திற்கு வேலை செய்ய வந்தவருக்கும், உண்மையான அன்போடு அரவணைத்தவருக்கும் உள்ள வித்தியாசத்தை அந்தச் சின்னஞ்சிறு குழந்தைப் புரிந்து கொண்டது. குழந்தைக்கு ‘அம்மா’ என்ற வார்த்தையே தெரிந்திருக்கவில்லை. தமிழில் இல்லையென்றாலும் ஆங்கிலத்திலாவது குழந்தைக்கு அந்த வார்த்தைத் தெரிகிறதா என்று பவித்ரா சோதித்துப் பார்த்தாள். 

எந்தவிதமான உறவுகளையும் அழைக்கத் தெரியாமல் அநாதை போல வளர்ந்து கொண்டிருந்த அந்தப் பணக்கார ஏழையைப் பார்த்த போது பவித்ராவிற்கு கண்கள் கலங்கியது. இலகுவாகத் தன்னை ‘அம்மா’ என அழைக்கச் சின்னவனுக்குக் கற்றுக் கொடுத்தாள் பவித்ரா. ஆச்சரியமாகக் கூட இருந்த பெண்மணி பார்க்கவும் புன்னகை ஒன்றைப் பதிலாகக் கொடுத்து விட்டு அமைதியாகி விட்டாள்.

கொழு கொழுவென நீல நிறக் கண்களோடு பால் நிறத்திலிருந்த அந்தக் குழந்தை தமிழில் ‘அம்மா’ என்று அழைப்பது பார்க்க அத்தனை அழகாக இருந்தது. குழந்தை அவளை அப்படி அழைக்கும் போதெல்லாம் பொங்கிச் சிரிப்பாள் பவித்ரா. சின்னவனை ஆசையோடு அள்ளி அவன் கன்னம் சிவக்க முத்தம் வைப்பாள்.

இந்த ஒரு வாரத்தில் உலகத்தையே அவளை மறக்க வைத்திருந்தான் ஹரி. ரிஷியை கூட பவித்ரா மறந்து போயிருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். சதா குழந்தையின் ஞாபகம் மட்டுமே அவள் சிந்தையை நிறைந்திருந்தது. அவனது சின்னச் சின்னத் தேவைகளையும் அவளே நிறைவேற்ற வேண்டும் என்று மிகவும் பெண் விரும்பியது.

உண்மையைச் சொல்லப் போனால் லில்லியன் எதற்காக பவித்ராவின் உதவியை நாடினாரோ அது அங்கு இயல்பாகவே நிறைவேறிக் கொண்டிருந்தது. இதுவரைத் தனது பேரனுக்குக் கிடைக்காத தாயன்பைப் பெறாத தாயான பவித்ரா கொடுப்பதை அலைபேசி வாயிலாகக் கேட்டு அறிந்து கொண்டார் முதியவர்.

இந்த ஒரு வாரமும் லில்லியன் விட்பிக்கு வரவில்லை. வேட்டை நாய் போல ரிஷி தன் செயற்பாடுகளைக் கவனித்த வண்ணம் இருக்கிறான் என்று அவருக்குத் தெரியும். அலைபேசி உரையாடல்களை அத்தனைச் சுலபத்தில் அவனால் பின்தொடர முடியாது என்பதால் அனைத்துத் தகவல்களையும் அலைபேசி மூலமாக அறிந்து கொண்டார்.

அழகிய எழில் கொஞ்சும் விட்பிக்கு இருபது மைல் தொலைவில் இருக்கிறது ‘பிக்கரிங்’ என்னும் சிறிய நகரம். இரு நகரங்களுக்கும் இடையில் பழைய காலத்து நீராவி ரயில் இன்னும் புழக்கத்தில் இருந்தது. பேச்சுவாக்கில் அந்த விஷயத்தைக் கூட இருந்த பெண்மணி பவித்ராவிடம் சொல்ல இளையவளுக்கு அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உருவாகியது.

உல்லாசப் பயணிகளுக்கான வண்டி அது என்பதால் வசதிகளுக்கு எந்தக் குறைவும் இருக்காது என்று அந்தப் பெண்மணி சொல்ல பவித்ரா ஹரியோடு அதில் பயணப்பட ஆயத்தமாகி விட்டாள். லில்லியன் ஏற்பாடு பண்ணியிருந்த மானேஜர் டிக்கெட் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அம்மாவும் மகனும் உல்லாசமாகக் கிளம்பிவிட்டார்கள். பழைய ஆங்கிலேயர் காலக் கட்டிடங்கள் இன்னும் இலங்கையில் இருப்பதால் அந்தப் புகையிரத நிலையத்தைப் பார்த்த போது பவித்ராவுக்கு ஏதோ தான் இலங்கையில் இருப்பது போலவே இருந்தது.

குழந்தை நன்றாகத் துறுதுறுவென நடப்பவன் என்பதால் ஹரியை நடை பவனியாகவேக் கூட்டி வந்திருந்தாள் பெண். புகையிரதத்தில் ஏறி இறங்க அதுவே வசதியாக இருந்தது. இரண்டு மணித்தியாலப் பயணம். சூச்சூ… என்று நீராவிப் புகையை சத்தமாக வெளியேற்றிய படி அந்த ரயில் நகர்ந்த போது சிறுவனோடு சேர்ந்து பெண்ணும் ஆர்ப்பரித்தது. 

ரயில் வளைந்து போகும் இடங்களிலெல்லாம் ஜன்னல் வழியாக அதன் என்ஜினை சின்னவனுக்குக் காட்டினாள். இரண்டு மணி நேரமும் காட்டு வழிப்பாதையிலேயே ரயில் பயணித்தது அத்தனை அழகாக இருந்தது. காட்டுக்குள் ஓடிய சின்னஞ்சிறு ஓடைகள், விதானமாக வளர்ந்திருந்த பெரு மரங்கள், சுத்தமான ஈரப்பற்றுடன் கூடிய காற்று என பவித்ரா ரசிக்க அங்கே ஏராளமான காட்சிகள் இருந்தன.

குழந்தை சிறிது நேரம் கண்ணயர்ந்து போகவே அவனை மார்போடு அணைத்தபடி அந்த இயற்கையை ரசித்திருந்தாள் பெண். சொல்லாமல் கொள்ளாமல் ரிஷியின் ஞாபகம் இப்போது வந்தது. இனிமையான வனப்பு மிக்க அந்த வனப்பகுதியில் இப்போது அவனும் கூட இருந்தால் இந்தப் பிரயாணம் எத்தனை இன்பமாக இருக்கும்! 

‘அத்தான்! இந்த ஹரியை பாருங்களேன்! என்னை ‘அம்மா அம்மா’ என்று வாய் நிறைய அழைக்கும் உங்கள் மகனை வந்து பாருங்களேன்! எத்தனை அழகாகப் பொம்மைப் போல இருக்கிறான்! இவனை விட்டுவிட்டு இனி என்னால் வாழ முடியாது அத்தான்!’ குழந்தை அசையவும் பவித்ராவின் சிந்தனைக் கலைந்தது.

“அம்மா…” குழந்தை அழைக்கவும் அனைத்தையும் மறந்து அவன் தேவைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள் பவித்ரா. 

‘பிக்கரிங்’ வந்து சேர்ந்த போது அவர்களுக்கென ஒரு கார் தயாராக நின்றது. அது மேனேஜரின் ஏற்பாடு. அங்கே ரயில் நான்கைந்து மணிநேரம் தங்கிய பிற்பாடுதான் மீண்டும் ‘விட்பி’ புறப்படும். அதுவரை பவித்ரா குழந்தையோடு சிரமப்படுவாள் என்று இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

அம்மாவும் மகனும் பிக்கரிங்கையும் காரில் நன்றாகச் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் விட்பிக்கு ரயில் மூலம் பயணப்பட்டார்கள். அன்றையப் பொழுது பயணத்திலேயே கழிந்துவிட இருவருக்கும் அடித்துப் போட்டாற் போல உறக்கம் வந்தது. உடம்பு கழுவிக்கொண்டு இரவு உணவையும் முடித்தவர்கள் எட்டு மணிக்கே உறங்கிப் போனார்கள், அடுத்த நாள் விடியல் வைத்திருக்கும் விந்தைப் புரியாமல்!

Leave a Reply

error: Content is protected !!