kkavithai19

kkavithai19

கவிதை 19

ஒரு மாதம் கடந்து போயிருந்தது.

வீடே அமைதியாக இருந்தது. அன்னபூரணியின் வீடு அது. வீட்டு அங்கத்தவர்கள் அத்தனைப் பேரும் அங்கே ஆஜராகி இருந்தார்கள். காயத்ரி, சாரங்கன் கூட அங்கேதான் இருந்தார்கள். எல்லோர் முகத்திலும் சொல்ல முடியாத வேதனை அப்பி இருந்தது. காரணம்… ரிஷி அப்போதுதான் இலங்கை வந்து சேர்ந்திருந்தான்.

பவித்ரா இரண்டு வாரங்களுக்கு முன்பே ஹரியோடு இலங்கை வந்து இங்கிருந்தவர் அத்தனைப் பேரின் தலையிலும் பெரிய இடியாக இறக்கி இருந்தாள். ரிஷி எவ்வளவு சொல்லியும் பவித்ரா அவன் சொன்னதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை. தனியாகவே குழந்தையோடு தாயகம் போகவேண்டும் என்று அடம்பிடித்தாள்.

தனியே அவளைக் குழந்தையோடு அனுப்புவது அவனுக்கு எவ்வளவு பெரிய அவப்பெயரை ஈட்டித்தரும் என்பதை ரிஷி நன்கு உணர்ந்திருந்தான். ஆனால் பவித்ரா அதை உணர மறுத்தபோது ரிஷியால் எதுவுமேப் பேச முடியவில்லை.

“அத்தான், சொன்னாக் கேளுங்க, இப்ப நீங்களும் எங்கூட வந்தீங்கன்னாப் பிரச்சினை இன்னும் அதிகமாகும்.”

“பரவாயில்லை பவி, பிரச்சினை எப்பிடியும் வரத்தான் போகுது, எனக்கு இப்ப அதைவிட நீ தனியாப் போறதுதான் பெரிய கவலையா இருக்கு.” ரிஷியின் பேச்சை பவித்ரா ஏற்றுக்கொள்ளத் திட்டவட்டமாக மறுத்துவிட்டாள். பேசிப் பயனில்லை என்று புரிந்த போது ரிஷி ஒதுங்கி விட்டான். 

ஏற்கனவே அவள் தன்னால் நொறுங்கிப் போயிருக்கிறாள், இன்னும் இன்னும் அவளை வதைக்க அவனுக்கு மனம் வரவில்லை. கடைசியில் பவித்ராவின் பிடியே வென்றது. பவித்ரா இலங்கை வந்த இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் தரப்பிலிருந்து அத்தனைப் பேரும் அவனோடு பேசினார்கள். அன்னபூரணி ஒப்பாரி வைத்துத் தீர்த்தார்.

ஆனால், பவித்ரா தரப்பிலிருந்து யாருமே அவனோடு பேசவில்லை. பவித்ரா கூட அவனை அழைக்கவில்லை. இரண்டு வாரங்கள் பொறுத்துப் பார்த்துவிட்டு, இதோ… ரிஷி கிளம்பி வந்து விட்டான். தங்கை மகனைப் பார்த்ததும் அன்னபூரணி தலையில் அடித்துக்கொண்டு அழுதார். மனைவியின் செய்கையைப் பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்தது.

“ஏய்! இப்போ எதுக்கு நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுறே பூரணி? கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?” அவர் அதட்டல் வேலை செய்ய அன்னபூரணி கொஞ்சம் தன் புலம்பலை நிறுத்தினார்.

பவித்ரா இலங்கை வந்த அடுத்த நாளே பாஸ்கர் இங்கே வந்து பயங்கரமாகச் சண்டைப் போட்டிருந்தார். தங்கள் பையன் மேல் தவறிருந்ததால் இங்கே யாரும் வாயைத் திறக்கவில்லை. பாஸ்கர் சொன்ன சேதி இங்கிருப்பவர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்ததால் யாருக்கும் பேச நா எழவே இல்லை.

அன்னபூரணி அழுதழுதேக் கரைந்து போனார். தன் தங்கை மகனின் வாழ்வு சுகப்பட வேண்டும் என்றுதானே இந்தக் கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். ரிஷிமேல் அத்தனை நல்ல அபிப்பிராயம் இருக்கப் போகத்தானே தன் கணவர் இந்தக் கல்யாணத்தைத் தைரியமாக முன்னின்று ஜாம் ஜாம் என்று நடத்தினார். ஆனால் எல்லாவற்றையும் இந்த ரிஷி கெடுத்து விட்டானே. எத்தனைப் பெரிய அவப்பெயரை, தீராத பழியை இந்தப் பையன் தன் கணவருக்கு ஏற்படுத்தி விட்டான்.

எல்லோரும் மாடியில்தான் உட்கார்ந்திருந்தார்கள். ரிஷி அப்போதுதான் வந்திருந்தவன் இன்னும் தன் உடையைக் கூட மாற்றி இருக்கவில்லை. படிகளில் தடதடவென யாரோ ஏறி வரும் சத்தம் கேட்டது. எல்லோரும் திரும்பிப் பார்க்க அங்கே பாஸ்கர் ருத்ரமூர்த்தி போல வந்து கொண்டிருந்தார்.

அங்கே கூடியிருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள். ரிஷி அப்போதுதான் வீட்டிற்கே வந்திருக்கிறான். அவன் வருவதை மனைவிக்குக் கூட அவன் சொல்லியிருக்கவில்லை. இப்போது அவன் கிளம்பி வருவதை நிச்சயம் பவித்ரா மறுப்பாள். கூடவே இங்கிருக்கும் அனைவரும் மறுக்க வாய்ப்பிருந்ததால் ரிஷி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல்தான் புறப்பட்டு வந்திருந்தான்.

‘அப்படியிருக்க எப்படி இந்த மனிதருக்குத் தகவல் கிடைத்தது?!’

ஆவேசமாகப் புயல் போல வந்த பாஸ்கர் பெரிதாகச் சண்டைப் போடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க அதைப் பொய்ப்பித்தார் மனிதர். வந்ததும் வராததுமாக மருமகன் என்றும் பாராமல் பாஸ்கர் ரிஷியின் கன்னத்தில் ஓங்கி அறைய அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கேப் போய் விட்டார்கள்.

ரிஷியின் உடல் ஒரு கணம் நாண் ஏற்றிய வில் போல முறுக்கேறியது. அடுத்த நொடி… தன்னெதிரில் நிற்பவர் பவித்ராவின் தந்தை என்ற ஒரே காரணத்துக்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

“பாஸ்கரா!” மீண்டும் ரிஷியை அடிக்க பாஸ்கர் கையை ஓங்கவும் பாண்டியன் சத்தம் போட்டார். சாரங்கன் ஓடி வந்து பாஸ்கரை பிடித்துக் கொண்டான். ரிஷி மேல் தவறு இருப்பது உண்மைதான். அதற்காக ஒரு மாமனார் தன் மருமகனைக் கைநீட்டி அடிப்பது சாரங்கனுக்கு கொஞ்சம் அதிகப்படியாகத் தெரிந்திருக்கும் போலும்.

“நீங்க எதுவும் பேசாதீங்க அத்தான்! இந்தப் பொறுக்கியை யாருன்னும் எனக்குத் தெரியாது! ஆனா உங்களை நம்பித்தானே எம் பொண்ணை நான் குடுத்தேன்?” வார்த்தைகள் அமிலத்தில் தோய்க்கப்பட்டுப்  பின் அங்கிருந்தவர்கள் மீது வீசப்பட்டது.

“பாஸ்கரா! வார்த்தைகளை அளந்து பேசு! அதென்ன வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை இப்பிடியெல்லாம் பேசுறே?” 

“வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையா? அந்த எண்ணம் இன்னும் இருக்கா உங்களுக்கு? இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் எம் பொண்ணு உங்க முகத்துல எல்லாம் முழிப்பான்னு நினைக்கிறீங்களா நீங்க?” பாஸ்கரின் பேச்சில் அங்கிருந்த மற்றவர்கள் அனைவரும் திடுக்கிட்டுப் போனார்கள். அன்னபூரணி புடவைத் தலைப்பை வாயில் வைத்து மூடி வந்த கேவலை அடக்கிக் கொண்டார்.

“அன்னைக்கே எம் பொண்டாட்டி கேட்டா, கண்காணாத தேசத்துல நம்ம பொண்ணைக் கட்டிக் குடுக்கிறோமே, இது சரியா வருமான்னு.”

“………..”

“பையனை முன்னப் பின்ன நாம பார்த்ததும் இல்லை, குணம் எப்பிடி இருக்குமோன்னு அன்னைக்கே என்னைக் கேட்டா.”

“பாஸ்கரா, கொஞ்சம் பொறுமையாக இரு.”

“என்னத்தை அத்தான் பொறுமையா இருக்கிறது? இதுவே உங்கப் பொண்ணுக்கு நடந்திருந்தா நீங்க பொறுமையாத்தான் பேசிக்கிட்டு இருப்பீங்களா? எம் பொண்ணு அத்தான்! அவ வாழ்க்கை இன்னைக்கு சின்னாபின்னமாகி நிக்குது.” 

“எனக்கு உன்னோட வேதனைப் புரியுது பாஸ்கரா, பொம்பளைப் புள்ளை விவகாரம், வார்த்தையைத் தாறுமாறா விடாதேன்னுதான் சொல்லுறேன்.”

“எல்லாமே முடிஞ்சு போச்சு அத்தான், எம் மூத்த பொண்ணுக்கு ஆசையாசையாக் கல்யாணம் பண்ணி வெச்சேன், ஆறே மாசத்துல அத்தனையும் இல்லைன்னு ஆகிப் போச்சு, எம் பொண்ணு வாழ்க்கையை இந்தப் பாவி குழி தோண்டிப் புதைச்சுட்டான்.” இவ்வளவு நேரம் பாஸ்கர் தாறுமாறாகப் பேசிய போதும் ரிஷி வாய்திறந்து ஒரு வார்த்தைப் பேசவில்லை. அமைதியாகவே நின்றிருந்தான்.

ஆனால் பாஸ்கரின் பேச்சு மேலும் மேலும் காட்டமாகப் போகவும் சாரங்கன் சட்டென்று ரிஷியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ரூமிற்குள் போய்விட்டான். வெளியே பாஸ்கரின் குரல் ஓயாமல் கொஞ்ச நேரம் ஒலித்த படியே இருந்தது. பயணம் செய்து வந்த களைப்பையும் தாண்டி மனது சலித்துப் போகக் கட்டிலில் உட்கார்ந்தான் ரிஷி. 

“மச்சான்.” சாரங்கன் ஒரு வார்த்தைதான் சொல்லி அழைத்தான். அதற்காகவேக் காத்திருந்தாற் போல சாரங்கனின் தோளில் சாய்ந்து ரிஷி குலுங்கிக் குலுங்கி அழுதான். சாரங்கன் விறைத்துப் போனான். இப்படியொரு ரியாக்ஷனை ரிஷியிடமிருந்து அவன் எதிர் பார்த்திருக்கவில்லை.

அப்போதுதான் ரூமிற்குள் நுழைந்த காயத்ரியும் தன் அண்ணனின் நிலை பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டாள். சாரங்கன் சட்டென்று மனைவிக்குக் கண்ணைக் காட்டவும், வந்த சுவடு தெரியாமல் வெளியே போய்விட்டான் காயத்ரி.

“சாரி மாப்பிள்ளை.” கொஞ்ச நேரத்தில் தன்னைச் சமாளித்துக்கொண்ட ரிஷி முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

“பரவாயில்லை மச்சான், நமக்குள்ள எதுக்கு சாரியெல்லாம்?” இயல்பாக சாரங்கன் நட்புக்கரம் நீட்டினான்.

சாரங்கனுக்கு ஏற்கனவே ரிஷியை மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம் அவன் தன் மனைவியின் அண்ணன் என்பதாலா? இல்லை, தன் வயதை ஒத்த இளைஞன் என்பதாலா? இல்லை, தன் திருமணத்தின் போது தன் உணர்வுகளைப் புரிந்து கொண்டு சகாயம் பண்ணிய தோழன் என்பதாலா? காரணம் என்னவென்று தெரியாத போதும் சாரங்கனுக்கு ரிஷியை மிகவும் பிடிக்கும். அந்தப் பிடித்தம் இன்றைக்குக் குறைந்து போகாமல் இன்னும் அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ரிஷியை பார்த்த போது சாரங்கனுக்கு ஏனோ அவன் மேல் இனம்புரியாத இரக்கமேத் தோன்றியது. ரிஷி மேல் தப்பு இருக்கலாம். ஆனால் அவன் மாத்திரமே நடந்த அனைத்துக்கும் காரணமாக இருக்க முடியும் என்று சாரங்கனுக்கு தோன்றவில்லை.

மாப்பிள்ளை என்று ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டாலும் நாட்டியம் ஆடுமாம்! அது போன்ற ஊரில் இன்றைக்குத் தன் மாமனார் தன்னைக் கை நீட்டி அடித்த பின்பும் அதை அமைதியாக வாங்கிக் கொண்டு நின்ற ரிஷி மேல் அவனுக்கு அனுதாபம் பிறந்தது. எத்தனைப் பேருக்கு இன்றைக்குத் தான் செய்யும் தவறைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் தைரியம் இருக்கிறது?! இதுவே ரிஷி இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால்,

“ஆமாய்யா! அதுக்கு என்ன இப்போ?! தப்புப் பண்ணிட்டேந்தான்! அதுக்காக எம்மேலயே நீ கையை வெப்பியா?!” என்று மல்லுக்குத்தானே கிளம்பி இருப்பார்கள்? இவை எதையும் செய்யாமல் அமைதியாக நின்றிருந்த ரிஷி அவனுக்கு விந்தையாக இருந்தான்.

“ஆனாலும் உங்க மாமனார் கொஞ்சம் ஓவராத்தான் நடந்துக்கிறாரு மச்சான்.” பொறுக்க மாட்டாமல் சாரங்கனே ஆரம்பித்தான்.

“பாவம் மாப்பிள்ளை அவரு, அவரோட நிலைமைல இருந்து நீங்க யோசிச்சுப் பாருங்க.” மாமனாருக்காக வக்காலத்து வாங்கினான் ரிஷி.

“அதுக்கு, இப்பிடியா மச்சான்?! கண், மண் தெரியாம நடந்துக்கிறது?” சாரங்கனுக்கு இப்போது கோபம் வந்தது.

“ம்ப்ச்… பரவாயில்லை மாப்பிள்ளை, விடுங்க.” 

“உங்க வைஃபோட பேசினீங்களா மச்சான்?”

“இல்லை மாப்பிள்ளை, ரெண்டு தடவை நான் கூப்பிட்டேன், ஆன்ஸர் இல்லை, லேன்ட் லைனும் வேலை செய்ய மாட்டேங்குது.”

“எல்லாம் இந்த மனுஷனோட வேலையாத்தான் இருக்கும், முன்னாடியும் இப்பிடித்தான் ஒரு தடவை இங்க வந்து குதிச்சிட்டுப் போனாரு.”

“ம்… காயத்ரி சொன்னா.” 

“இங்க எல்லாரும் கொஞ்சம் அமைதியாப் போறதால ரொம்பத்தான் ஆடிப் பார்க்கிறாரு.”

“பரவாயில்லை விடுங்க.”

“என்னத்தை விடுங்க மச்சான்? நீங்க என்ன வேணும்னே கொழந்தை இருந்ததை மறைச்சு இவங்கப் பொண்ணைக் கட்டிக்கிட்டீங்களா? இல்லையில்லை?”

“……….”

“தப்புப் பண்ணி இருக்கீங்க, நான் இல்லேங்கலை, அதுக்காக? உங்கப் பக்கம் இருக்கிற நியாயத்தையும் கொஞ்சம் யோசிக்கணும் இல்லை?”

“அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம், விடுங்க சாரங்கன், நான் யாரையும் ஏமாத்தணும்னு கனவுலயும் நினைக்கலை, என்னைச் சுத்தி என்னென்னமோ நடந்து போச்சு!” ரிஷி சொல்லி முடித்த போது காயத்ரி மீண்டும் அறைக்குள் வந்தாள்.

“அண்ணா, அப்பா உன்னைக் கூப்பிடுறாங்க.” 

“பவித்ராவோட அப்பா கிளம்பிட்டாரா?”

“ஆமா.” 

ஆண்கள் இருவரும் இப்போதும் ரூமை விட்டு வெளியே வந்தார்கள். அன்னபூரணி இன்னும் அழுத படியே இருந்தார். பாண்டியனும் ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தார்.

“ரிஷி…” இவன் தலையைக் காணவும் ஒரு கேவலோடு விம்மினார் அன்னபூரணி.

“அன்னம்மா.” தன் பெரிய தாயைத் தோளோடு அணைத்துக் கொண்டான் ரிஷி.

“என்னடா நடக்குது இங்க? கண்டவனும் வந்து உன்னை எங்கக் கண்ணு முன்னாடியே…” அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் மேலும் அழுதார் அன்னபூரணி.

“ரிஷி… இப்பிடி உட்காரு, நீங்களும் உட்காருங்க மாப்பிள்ளை.” பாண்டியன் சொல்ல இருவரும் சோஃபாவில் அமர்ந்தார்கள்.

“என்னென்னமோ நடந்து போச்சு ரிஷி, அதைப்பத்தி இனிப் பேசுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்லை, என்னோட வயசுக்கு இந்தக் கருமத்தையெல்லாம் பேசுறதும் நல்லதில்லை.” பெரியப்பாவின் கசந்த பேச்சில் ரிஷியின் முகம் இப்போது லேசாகக் கறுத்துப் போனது. தலையைக் குனிந்த படி அமர்ந்திருந்தவனைப் பார்த்த போது அங்கிருந்த அனைவருக்குமேப் பாவமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சனைக்கு ஒரு முடிவு வேண்டுமே!

“நீ தப்பானவன் கிடையாதுப்பா, அதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை, நீ பொறந்து வளர்ந்த நாட்டுல இதெல்லாம் சின்ன விஷயமா இருக்கலாம், ஆனா இங்க அப்பிடி இல்லை, பாஸ்கர் இன்னைக்கு நடந்துக்கிட்ட முறை வேணும்னாத் தப்பா இருக்கலாம், ஆனா அவன் கேட்ட கேள்வியில நியாயம் இருக்கு.”

“என்னங்க நியாயம் இருக்கு? இவன் என்ன வேணும்னா எல்லாத்தையும் பண்ணினான்?”

“பூரணி! உன்னோட தங்கைப் பையன் எங்கிறதுக்காக நீ அநியாயமாப் பேசக்கூடாது, அவன் பொண்ணைப் பெத்தவன், அப்பிடித்தான் கேட்பான்.”

“அதுக்குன்னு இப்பிடியாப்பா சட்டுன்னு கையை நீட்டுவாங்க? இன்னையோட முடிஞ்சு போற உறவாப்பா இது?” இது காயத்ரி.

“காயத்ரி, பாஸ்கரை பொறுத்த வரைக்கும் ரிஷியோட உறவு என்னைக்கோ முடிஞ்சு போச்சு.”

“பெரியப்பா!” ரிஷி தன்னையும் அறியாமல் வாய் திறந்தான்.

“நீ இப்ப ரொம்பப் பொறுமையா இருக்கணும் ரிஷி, தப்பு உம்மேல இருக்கு, பாஸ்கர் உன்னை நம்பிப் பொண்ணு குடுக்கலை, நானும் உன்னோட பெரியம்மாவும் போய் பேசப் போகத்தான் அவங்க பொண்ணு குடுக்கவேச் சம்மதிச்சாங்க.” 

“பெரியப்பா, எந்த நிலைமையிலயும் என்னக் கஷ்டம் வந்தாலும் பவித்ராதான் என்னோட வைஃப், அதுல எந்த மாற்றமும் இல்லை.”

“நல்லது.”

“நடந்து போன தவறுக்காக நான் அவங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்கவும் தயார்.”

“உனக்கென்ன பைத்தியமாடா புடிச்சிருக்கு?” இது அன்னபூரணி.

“பூரணி! நீ வாயை மூடு! நீ சொல்லு ரிஷி.”

“எத்தனை நம்பிக்கையோட நீங்கப் பொண்ணுக் கேட்டப்போக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாங்களோ அந்த நம்பிக்கையை நான் கடைசி வரைக்கும் காப்பாத்துவேன் பெரியப்பா.”

“ம்…” இப்போது பாண்டியன் முகவாயை நீவிக் கொண்டார்.

“அவங்க பொண்ணை நான் திட்டம் போட்டு ஏமாத்தலை, அதை அவங்க புரிஞ்சுக்கணும்.”

“அது கொஞ்சம் கஷ்டந்தான் ரிஷி, பாஸ்கரை அத்தனைச் சுலபத்துல சமாளிக்கலாம் ன்னு எனக்குத் தோணலை.”

“ஆமா! அவரு பெரிய இவரு! அவரை நீங்க சமாளிக்கணுமாக்கும்!” முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டு சமையலறைக்குள் போய்விட்டார் அன்னபூரணி.

அன்று இரவு உணவு முடிந்த பிற்பாடு தான் தங்கியிருந்த அறையின் பால்கனியில் நின்றிருந்தான் ரிஷி. கடந்த இரண்டு தடவையும் இவன் இலங்கை வந்த போது இதே ரூமில்தான் தங்கியிருந்தான்.

முதல் தடவை வந்திருந்த போது பவித்ராவைப் பார்த்த களிப்பில் அவளைப் பற்றிய எண்ணங்கள், கனவுகள் என்று இதே இடத்தில் மயங்கி நின்றிருக்கிறான். இரண்டாம் தடவை வந்த போது விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு உள்ளும் புறமும் அவளுக்காக ஏங்க இதே பால்கனியில் நின்றிருக்கிறான்.

அந்த இரண்டு தடவைகளும் பெண் அவனோடு இருக்கவில்லை. ஆனாலும் மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. இன்றைக்கும் அவள் அவனோடு இல்லை. ஆனால் மனம் முழுவதும் வேதனை அரித்துத் தின்கின்றது. சொல்லில் வடிக்க இயலாத துன்பம் அவனை வாட்டி வதைக்கிறது.

“அண்ணா.” காயத்ரி அழைக்கவும் சட்டென்று திரும்பினான் ரிஷி.

“தூங்கலையா? ட்ராவல் பண்ணினது ரொம்பக் களைப்பா இருக்குமே?”

“தூக்கம் வரலை டா.”

“வீணாக் கவலைப்படாம தூங்கு ண்ணா, எல்லாம் நல்லபடியா நடக்கும்.”

“ம்…” ரிஷி வெறுமையாகப் புன்னகைத்தான்.

“பவித்ரா கூட பேசினீயா?”

“இல்லைம்மா.”

“ஏன்? ஊருக்கு வந்திருக்கேன்னு தகவல் சொல்லி இருக்கலாமில்லை?”

“நான் வந்திருக்கிறது தெரிஞ்சுதானே அவங்கப்பா இங்க வந்தாரு.” அண்ணனின் வார்த்தைகளில் இருந்த உண்மை காயத்ரியை மௌனமாக்கியது.

“எனக்கு ஒரேயொரு கவலை மட்டுந்தான் காயத்ரி, பவி என்னை வெறுத்துடக் கூடாது.”

“சீச்சீ… என்ன வார்த்தை ண்ணா இது? அவளால எப்பிடி உன்னை வெறுக்க முடியும்?!”

“என்னை விட்டு ரொம்பத் தள்ளிப் போயிட்டா, என்னால நெருங்க முடியாத தூரம் ன்னு தோணுது காயத்ரி.”

“அதெல்லாம் ஒன்னுமில்லை, கொஞ்சம் நியாயமாச் சிந்திக்கிற பொண்ணு, அவ்வளவுதான், சும்மா மனசைப் போட்டுக் குழப்பிக்காம தூங்கு ண்ணா.”

அதற்கு மேலும் தான் அங்கே நின்றிருந்தால் தன் அண்ணன் தூங்கமாட்டான் என்று புரிந்த காயத்ரி மெதுவாக அறையிலிருந்து நகர்ந்து விட்டாள். ரிஷி சொல்லொணா வேதனையைச் சுமந்த படி அங்கிருந்த சுவரில் சாய்ந்து கொண்டான். அவனைச் சுற்றி வர காரிருள் சூழ்ந்திருந்தது.

Leave a Reply

error: Content is protected !!