kkavithai23

kkavithai23

கவிதை 23

காலம் யாருக்காகவும் எப்படிக் காத்திருக்கவில்லையோ, அதே போல ரிஷியும் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அடுத்து வந்த நாட்களில் அந்த ஊரிலேயே விலைக்கு வந்த வீடொன்றைத் தன் மனைவியின் பெயரில் வாங்கி இருந்தான். நல்ல கருங்கல்லில் கட்டப்பட்ட விசாலமான ஆங்கிலேயர் கால வீடு. அவன் போட்ட பட்ஜெட்டிற்கு சற்றுக் குறைவான தொகையில் அமைந்து போனது வீடு. ஆனாலும் வீட்டின் விலையைக் கேட்ட போது பவித்ரா திகைத்துப் போனாள்.

“இவ்வளவு காஸ்ட்லியா எதுக்குத்தான்?! நாம மூனு பேரு இருக்கிறதுக்கு சின்னதா ஒரு வீடு போதுமே!” என்றாள்.

“என்னோட வைஃப் எங்கிட்ட முதல்முதலா எனக்கு ஒரு வீடு வேணும்னு கேட்டிருக்கா, அதுக்குச் சின்னதாவா நான் வாங்குவேன்?” எளிதாகப் பதில் சொன்ன கணவனை விசித்திரமாகப் பார்த்தாள் பவித்ரா.

“இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் பவி?”

“எனக்கேத் தெரியலை த்தான், உங்களை என்னால புரிஞ்சுக்கவே முடியலை!”

“போகப்போகப் புரிஞ்சுக்கலாம், இப்போ வீட்டுக்கு என்ன வேணும்னு கவனி.” 

வீட்டை வாங்கிய கையோடு ஒரு காரையும் வாங்கி இருந்தான் ரிஷி. அந்த அழகான ப்ளாக் ஆடியை அவர்கள் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு,

“பவி, உனக்கு இது பிடிச்சிருக்கான்னு பாரு.” என்று கேட்டான் ரிஷி.

“யாரோடது த்தான் இந்தக் கார்?” காரை நோட்டமிட்டபடி கேட்டது பெண்.

“நம்மளோடதுதான் பவி.”

“நமக்கு எதுக்கு த்தான் இப்போ கார்?!” மீண்டும் ஆச்சரியம்!

“கார் இல்லாம எப்பிடிம்மா?”

“இவ்வளவு நாளும் இங்க நீங்க கார் யூஸ் பண்ணினதில்லையே?!”

“இவ்வளவு நாளும் யூஸ் பண்ணலை, ஆனா இனி தேவைப்படும் ன்னு தோணுச்சு.”

“ஓ…”

“வேற ஏதாவது வேணுமா பவி?” கணவனின் கேள்விக்கு பவித்ரா பதில் சொல்லவில்லை. பதில் சொல்லவில்லை என்பதை விட சொல்லப் பயப்பட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவள் சாதாரணமாக எதையாவது சொல்லப் போக அதற்காக அவன் பணத்தை இவ்வளவு கொட்டுவது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.

“அத்தான், ரொம்ப உங்களைச் சிரமப் படுத்திக்காதீங்க.” என்றாள் கவலையோடு.

“இல்லைம்மா.”

“யூகே ல ஆரம்பிச்ச ஏதோவொரு வேலையை நிறுத்திட்டுத்தானே இங்க இதெல்லாம் பண்ணுறீங்க?”

“அதனால என்னடா? உனக்காக எதை வேணும்னாலும் நிறுத்திட்டு என்ன வேணும்னாலும் நான் பண்ணுவேன்.” ரிஷி ஒவ்வொரு இடத்திலும் பவித்ரா மேல் அவனுக்கிருந்த காதலை நிரூபிக்க முயற்சி செய்தான். அவள் தேவைகள் அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தான்.

வீடு நல்ல விசாலமாக நான்கைந்து அறைகளோடு அமைந்திருந்தது. வீட்டைச் சுற்றி நிறைய இடமும் இருந்தது. வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ரிஷி ஒன்று விடாமல் வாங்கிப் போட்டிருந்தான். காயத்ரியும் சாரங்கனும் இப்போது தங்கள் வேலைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இவர்களுக்குப் பெரிதும் உதவினார்கள்.

“ரொம்ப தான்க்ஸ் மாப்பிள்ளை.” தன்னோடு எல்லா இடங்களுக்கும் அலைந்து திரிந்த சாரங்கனுக்கு நன்றி சொன்னான் ரிஷி.

“நமக்குள்ள இதெல்லாம் எதுக்கு மச்சான்?”

பவித்ராவின் தங்கைகளும் அப்பா பள்ளிக்கூடம் போன பிற்பாடு ஒருநாள் தங்கள் அக்காவின் வீட்டிற்க்கு வந்தார்கள். வந்த பெண்கள் வீட்டைப் பார்த்துவிட்டு மலைத்துப் போனார்கள்.

“அக்கா, வீடு சூப்பரா இருக்கு!” தங்கைகள் ஆர்ப்பரிக்கவும் பெரியவளுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அகல்யாவும் பைரவியும் வந்திருந்தார்கள்.

“பிடிச்சிருக்கா உங்க ரெண்டு பேருக்கும்?” ஆர்வமாகக் கேட்டாள் பவித்ரா.

“சூப்பரா இருக்கு க்கா, தர்ஷிக்கிட்ட சொன்னா ஒரு டான்ஸ் ஆடிடுவா.”

“ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீயாத்தானே இருப்பா, அன்னைக்குக் கூட்டிட்டு வாங்க அவளை.”

“ம்… அத்தான் எங்கக்கா?”

“என்னமோ வேலை இருக்குன்னு வெளியேப் போயிருக்காங்க.” 

“ரொம்ப செலவாகி இருக்குமில்லை க்கா?” அகல்யா யோசனையோடு கேட்டாள்.

“ஆமா அகல்யா, அங்க இன்னுமொரு ப்ரான்ச் ஓப்பன் பண்ண பணம் ரெடியா வெச்சிருந்திருப்பாங்க போல, வீடு வேணும்னு நான் சொல்லவும் எல்லாத்தையும் உடனே நிறுத்திட்டு அந்தப் பணத்தை இங்க அனுப்பச் சொல்லிட்டாங்க.”

“ஓ…” அகல்யாவும் பைரவியும் இப்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஹாலில் உட்கார்ந்து கொண்டுதான் பெண்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஹரி உள்ளே உறங்கிக் கொண்டிருந்தான். புதிதாக வீடு வாங்கி இருந்தாலும் குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் அழைக்க வேண்டும் என்று பவித்ராவும் நினைக்கவில்லை, ரிஷியும் நினைக்கவில்லை.

மங்களகரமாக இருக்கட்டுமே என்று சாதாரணமாக பால் காய்ச்சி தங்கள் சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டார்கள். எப்போதும் போல சாரங்கனும் காயத்ரியும் மட்டும் அன்று வந்திருந்தார்கள். அப்பா இத்தனைக் கோபமாக இருக்கும் போது அவர்களை அழைப்பது தேவையில்லாத பிரச்சனைகளை உண்டு பண்ணும். அப்பா வராமல் அம்மாவும் வரப்போவதில்லை என்பதால் பவித்ரா தன் பெற்றோரை அழைக்கும் எண்ணத்தையே கைவிட்டாள்.

“கொஞ்சம் ஃபோட்டோ எடுத்துக்கிட்டுப் போய் அம்மாக்குக் காட்டு அகல்யா, சந்தோஷப் படுவாங்க.”

“சரி க்கா.”

“அக்கா…” பேச ஆரம்பித்துவிட்டு லேசாகத் தயங்கினாள் பைரவி.

“என்ன பைரவி?”

“நான் ஒன்னு கேட்பேன், நீ தப்பா எடுத்துக்கக் கூடாது.”

“கேளு பைரவி, அப்பிடி என்னத்தை நீ கேட்டு நான் தப்பா எடுத்துக்கப் போறேன்?” கேட்டுவிட்டு பவித்ரா சிரித்தாள்.

“நீ சந்தோஷமா இருக்கியா?” பட்டென்று கேட்டாள் பைரவி. அகல்யாவின் முகத்திலும் இப்போது கவலைத் தெரிந்தது. அக்காவின் முகத்தையே இளையவர்கள் இருவரும் பார்த்தபடி இருந்தார்கள். பவித்ரா சிறிது நேரம் எதுவுமேப் பேசவில்லை. தனக்குத்தானே எதையோ யோசிப்பவள் போல சில நொடிகள் அமர்ந்திருந்தாள்.

“எனக்குத் தெரியலை பைரவி… இதையெல்லாம் நான் உங்கக்கிட்ட பேசுறது கூட சரியாத் தப்பான்னு கூட எனக்குத் தெரியலைடி.”

“மனசுல இருக்கிறதை வெளியே கொட்டிடு க்கா, உள்ளுக்குள்ள எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதே.”

“அத்தானை நீ வெறுக்கிறியா க்கா?” கவலையோடு கேட்டாள் அகல்யா.

“சத்தியமா இல்லை அகல்யா, அவரை என்னால வெறுக்க முடியாது… ஆனா என்னோட வாழ்க்கை இனி எப்பிடி இருக்கப் போகுதுன்னு எனக்குத் தெரியலை.” பவித்ராவின் குரலில் அத்தனைக் குழப்பம்.

“அத்தானை பார்க்கும் போது உனக்குக் கோபம் வருதா?”

“இல்லை… ஆனா என்னால… பழைய மாதிரி…” மேலே பேச முடியாமல் தவித்தாள் பெரியவள்.

“சொல்லு க்கா.”

“இந்தப் பிரச்சினை தெரியுறதுக்கு முன்னாடி அத்தானோட ஆறு மாசம் நான் வாழ்ந்திருக்கேன், அவங்களோட அன்பு எப்பிடிப்பட்டதுன்னு நான் அனுபவிச்சிருக்கேன்.”

“…….”

“அந்த அன்பு பொய்யில்லை.”

“பொய்யின்னு நாங்களும் சொல்லலையே!” சட்டென்று சொன்னாள் பைரவி.

“பைரவி?!” 

“அக்கா… நம்ம உலகம் வேற, அத்தான் வாழுற உலகம் வேற, இப்பிடியெல்லாம் நடந்துக்கிட்டதால அத்தான் கெட்டவங்களோ இல்லை உம் மேல பாசமில்லாதவங்களோன்னு அர்த்தமில்லை.”

“எந்த உலகமா இருந்தாலும் தப்பு தப்புத்தானே பைரவி?”

“அப்பிடி இல்லை க்கா, அவங்களைப் பொறுத்தவரை இது சாதாரண விஷயம், பசிக்குதா? சாப்பிடுவாங்க, அவ்வளவுதான்.”

“உன்னளவுக்கு என்னால இதையெல்லாம் சட்டுன்னு ஏத்துக்க முடியலை பைரவி.”

“ஹரி கிட்ட அத்தான் எப்பிடி நடந்துக்கிறாரு?”

“எனக்காக ஹரியை இப்போதைக்கு ஏத்துக்கிட்டிருக்காரு, அவ்வளவுதான்.”

“ஏன் க்கா? நீ என்ன உலகத்துலேயே இல்லாத அவ்வளவு பெரிய அழகியா? இவ்வளவு அவமானத்தையும் தாங்கிக்கிட்டு அத்தான் உங்கூட இருக்க?”

“பைரவி?!” இளையவளைப் பேச விட்டுவிட்டு அகல்யா அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

“அப்பா கை நீட்டி அடிக்கிறாங்க, ஒரு பொண்ணு அவருக்குத் தெரியாமலேயே ஒரு புள்ளையைப் பெத்து வெச்சிருக்கு, நீ என்னடான்னா அந்தக் குழந்தைக்கு நியாயம் பண்ணணும்னு ஒத்தக் கால்ல நிற்கிறே, இதையெல்லாம் தாங்கிக்கணும்னு அத்தானுக்கு எந்த அவசியமும் இல்லையே க்கா?”

“……..”

“உனக்கும் உங்கப்பாக்கும் ஒரு பெரிய கும்பிடாப் போட்டுட்டு, தாலி கட்டின பாவத்துக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையைக் தூக்கி வீசிட்டுப் போய்கிட்டே இருக்கலாமில்லை?”

“பைரவி?!” தங்கையின் பேச்சில் பவித்ரா திகைத்துப் போனாள். அகல்யாவின் முகத்திலும் கவலை மண்டிக் கிடந்தது.

“எம் மனசுல பட்டதை நான் சொல்றேன் பவித்ரா க்கா, நமக்குத்தான் அத்தான் பண்ணினது தப்பு, பாவம்… ஆனா அவங்க நாட்டுல இதெல்லாம் ஒன்னுமேயில்லை, ஆனா உனக்காகத்தான் அத்தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிறாங்க, அந்த அன்பை நீ புரிஞ்சுக்கோ.”

“ஹரி விஷயத்துல கூட அத்தான் இவ்வளவு தணிஞ்சு போறது உனக்காகத்தான்னு நான் நினைக்கிறேன் க்கா.” இப்போது அகல்யா வாயைத் திறந்தாள். வயதில் தன்னைவிட இளையவர்களான தன் இரு தங்கைகளும் எத்தனை ஆழமாகச் சிந்திக்கிறார்கள் என்று பவித்ரா வியந்து போனாள்! எவ்வளவு நிதானமாக ஒவ்வொன்றையும் அலசி ஆராய்கிறார்கள்!

“நீதி, நேர்மை, நியாயம் ன்னு சொல்லி உன்னோட வாழ்க்கையை நீயேப் பாழடிச்சுக்காதே க்கா.” 

அதன்பிறகு இன்னும் சிறிது நேரம் இருந்து பேசிவிட்டு தங்கைகள் இருவரும் புறப்பட்டு விட்டார்கள். பவித்ரா வெகு நேரம் வரை அங்கேயே அமர்ந்திருந்து சிந்தித்தாள். அம்மா தன்னிடம் பேசியது, தங்கைகள் தன்னிடம் பேசியது என அனைத்தும் பவித்ராவின் மனதில் படம் போல ஓடிக்கொண்டிருந்தது. என்னதான் ரிஷியின் தவறை பைரவி நியாயப்படுத்தினாலும் அத்தனை சுலபத்தில் நடந்தவற்றை ஏற்றுக்கொள்ள பவித்ராவின் மனது இடம் கொடுக்கவில்லை. அதற்காக இறந்த காலத்தில் நடந்ததைப் பிடித்துக் கொண்டு நிகழ்காலத்தைப் பாழாக்குவதும் புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. 

தங்கைகள் வளர்ந்தவர்கள் என்றாலும் எல்லாவற்றையும் அவர்களிடம் பகிர்ந்துகொள்ள இவளால் முடியவில்லை. நடந்த தவறை மறந்து ரிஷியோடு ஒரு வாழ்க்கை வாழ அவள் ஆசைப்படுகிறாள்தான். ஆனால் அந்த வாழ்க்கையில் எத்தனை அன்னியோன்யம் இனி இருக்கும் என்று பவித்ராவுக்கு விளங்கவில்லை. மிகவும் சிறியதொரு காலம் பிரிந்திருந்ததற்கே ரிஷி அன்று அன்னபூரணியின் வீட்டில் வைத்து அணைத்து, முத்தமிட்டு என்று அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணினான்.

ஒன்றாக ஒரே வீட்டில் இருந்து கொண்டு உன்னோடு ஒட்டி உறவாட என்னால் முடியாது என்று அவள் எப்படிச் சொல்வது? தன் மேல் இத்தனைப் பிரியம் வைத்திருக்கும் அத்தானிடம் அப்படிச் சொன்னாலும் அது நியாயமா?! தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இவ்வளவு பணம் செலவு செய்து, தனக்கு நேரும் அவமானங்களையும் தாங்கிக் கொள்ளும் அத்தான் மேல் அவளுக்கும் அன்பிருந்தது. ஆனால், அந்த அன்பு இப்போது தனக்கென ஒரு எல்லைக் கோட்டை வைத்திருப்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. அவன் அணைக்கும்போது பவித்ராவின் மனது ஏதேதோ வேண்டாத கற்பனைகளில் இறங்கித் தன்னைத்தானே வதைத்துக் கொண்டது.

நான்கு பெண்பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட அத்தானுக்கு அவள் நியாயம் செய்யவில்லை. அது அவளுக்கும் புரிந்தது. ஆனால் நடந்தவற்றை அவ்வளவு சுலபத்தில் மறந்து தூக்கிப் போடவும் பெண்ணால் இயலவில்லை. வாசலில் கார் சத்தம் கேட்கவும் சிந்தனைக் கலைந்தாள் பெண். ரிஷிதான் உள்ளே வந்து கொண்டிருந்தான். மனைவியைப் பார்த்ததும் அந்த முகம் மலர்ந்து போனது.

“என்ன பவி யோசனைப் பலமா இருக்கு?” சோஃபாவில் அமர்ந்திருந்தவள் எழுந்து நிற்கவும் அவள் அருகில் வந்தவன் அந்தத் தோள்களை உரிமையோடு பற்றிக் கொண்டான்.

“அகல்யாவும் பைரவியும் வந்திருந்தாங்க.”

“அடடா! ஒரு ஃபோன் பண்ணி இருக்கலாமே டா, நான் வந்திருப்பேன் இல்லை.”

“இல்லை த்தான், ரொம்ப நேரம் இருக்கலை, அதான் உங்களை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணணும்னு கூப்பிடலை.”

“ம்… என்ன சொல்றாங்க ரெண்டு பேரும்?”

“வீடு ரொம்ப அழகா இருக்காம்.”

“உன்னை விடவா? ம்…” ரிஷி லேசாகக் குழைந்த குரலில் கேட்க பவித்ரா தலையைக் குனிந்து கொண்டாள். ரிஷி புன்னகைத்தான். 

மனைவியின் தயக்கம் அவனுக்கும் புரிந்துதான் இருந்தது. கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்றுதான் ஆரம்பத்தில் அவனும் நினைத்திருந்தான். ஆனால் அந்த இடைவெளி பவித்ராவை தன்னிடமிருந்து பிரித்து விடுமோ என்ற பயம் அவனுக்கு வந்துவிட்டது. நடந்ததையெல்லாம் ஜீரணிக்க அவளுக்கு அவன் கொடுக்கும் அவகாசம் அவளையே அவனிடமிருந்து பிரித்துவிடுமென்றால் அதற்கு ரிஷி தயாரில்லை.

வாழ்க்கையில் இழந்ததெல்லாம் போதும். பவித்ராவை இழக்கும் திராணி ரிஷிக்கு இல்லை. புதிதாகக் கிடைத்திருக்கும் அந்தச் சின்னக் குழந்தையோடு அவள் நேரம் செலவழிப்பதையே அவனால் சில நேரங்களில் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அப்படி இருக்கும் போது அவளையே எப்படி அவன் இழக்க சம்மதிப்பான்?!

“என்ன பவி பேச்சையேக் காணோம்?” தோள்களை அவன் கைகள் இதமாக வருடியது.

“டீ போடட்டுமா த்தான்?”

“ம்… குடு டா.” அவன் சொல்லவும் விட்டால் போதுமென்று கிச்சனுக்குள் போனாள் பெண். ஆனால் பின்னோடு வந்து அவள் இடையை அணைத்துக் கொண்டான் ரிஷி.

“எத்தனை நாளாச்சு பவியோட இப்பிடித் தனியா இருந்து?!” அவள் வெற்று முதுகில் அவன் முகம் வைத்துப் புரட்ட பவித்ரா நெளிந்தாள்.

“அத்தான்… டீ போட வேணாமா?” 

“முடிஞ்சாப் போடு, இல்லைன்னா வேணாம்.” எனக்கு இப்போது டீ முக்கியமில்லை என்று அவன் சொல்லாமல் சொல்வது போல இருந்தது. வாசலில் அப்போது பார்த்து வாகனம் ஒன்று வந்து நிற்கும் ஒலி கேட்க சட்டென்று விலகினான் ரிஷி. பவித்ராவும் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க ஹாலுக்கு வந்தாள். அன்னபூரணியின் வீட்டு கார் இவர்கள் வாசலில் வந்து நின்றிருந்தது. கணவனும் மனைவியும் ஹாலுக்கு வந்த போது பாண்டியன் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

“இறங்கு பூரணி.” அசையாமல் அமர்ந்திருந்த மனைவியை அதட்டினார் பாண்டியன். முகத்தில் எந்த மலர்ச்சியும் இல்லாமல் காரை விட்டிறங்கினார் அன்னபூரணி. இப்படியொரு திடீர் வருகையை ரிஷியும் பவித்ராவும் எதிர்பாராததால் ஒருவர் முகத்தை மற்றவர் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டார்கள். ரிஷி சட்டென்று முன்னே வந்து அன்னபூரணியின் கையைப் பிடித்துக் கொண்டான்.

“வாங்க அன்னம்மா.” அன்பான அழைப்புத்தான். ஆனால் அவன் பற்றியிருந்த கையை வெடுக்கென்று உதறிவிட்டார் அன்னபூரணி.

“வாங்க மாமா, வாங்க த்தை.” பவித்ராவும் வந்து வரவேற்றாள். ஆனால் அன்னபூரணி யாரையும் கண்டு கொள்ளவில்லை, அமைதியாக நின்றிருந்தார்.

“புது வீடு எப்பிடி இருக்கு பவித்ரா?” கேட்டபடி உள்ளே வந்தார் பாண்டியன். 

“ரொம்ப நல்லா இருக்கு மாமா, உட்காருங்க… உட்காருங்க த்தை.” பவித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரிஷி அன்னபூரணியின் கையைப் பிடித்து இழுத்து வந்து அங்கிருந்த சோஃபாவில் உட்கார வைத்தான்.

“எதுக்கு அன்னம்மா எம்மேல இவ்வளவு கோபப்படுறீங்க? சும்மா இருந்தவனைப் புடிச்சுக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டு, இப்போ அதே கல்யாணத்தைத் தூக்கித் தூரப் போடச் சொல்றீங்களே, இது நியாயமா?” 

“நீ பேசாதடா! உனக்கு மரியாதைக் குடுக்காத இந்தக் கல்யாணம் உனக்கெதுக்குடா?” சட்டென்று தங்கை மகன் மேல் பாய்ந்தார் அன்னபூரணி.

“யாரு மரியாதைக் குடுக்கலை?” அவசரமாக பவித்ராவின் அருகில் போன ரிஷி மனைவியின் தோளைப் பற்றி இழுத்து அன்னபூரணியின் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினான்.

“யாரு மரியாதைக் குடுக்கலை அன்னம்மா? இவளா? நீங்க எனக்காக ஆசையாசையாப் பார்த்த இந்த பவித்ரா எனக்கு மரியாதைக் குடுக்கலையா?”

“இவ அப்பன் என்னடாப் பண்ணினான்?”

“அதுக்கு இவளை ஏன் தண்டிக்கிறீங்க?”

“அப்பனை ஆட விட்டுட்டு இவ வேடிக்கைத்தானேப் பார்த்தா?”

“அப்பா உங்க வீட்டுக்கு வந்தது எனக்குத் தெரியாது அத்தை.” மெல்லிய குரலில் சொன்னாள் பெண்.

“தெரிஞ்சிருந்தா மட்டும் என்னப் பண்ணிக் கிழிச்சிருப்ப?!”

“கண்டிப்பா அப்பாவை உங்க வீட்டுக்கு வர விட்டிருக்க மாட்டேன்.”

“அதான் வந்துட்டாரே! பட்ட அவமானம் பட்டதுதானே! அதை இனி உன்னால மாத்த முடியுமா?” ஆங்காரமாக அன்னபூரணி கேட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தையின் சத்தம் கேட்டது.

 “அம்மா…” மழலையாக அழைத்தபடி ஹரி வந்து நின்றான். அதுவரை தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அப்போதுதான் விழித்திருந்தது. 

இத்தனைப் பிரச்சனைக்கும் காரணகர்த்தாவான ஹரியை இதுவரை அன்னபூரணி பார்த்ததில்லை. சம்பந்தப்பட்ட குழந்தையோடு பவித்ரா தாய்நாடு வந்தது அவர்களுக்குத் தெரியும். அதன்பிறகு பாஸ்கர் அடித்த கூத்தில் குழந்தையைப் பார்க்க வேண்டுமே என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை. இப்போது முதல்முறையாகக் குழந்தையைப் பார்த்த அன்னபூரணி திகைத்து விட்டார். ரிஷியே மீண்டும் பிறந்து வந்தது போல இருந்தது குழந்தை. சண்டைச் சச்சரவையெல்லாம் மறந்துவிட்டு வைத்த கண் வாங்காமல் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தார் அன்னபூரணி.

Leave a Reply

error: Content is protected !!