நினைவு தூங்கிடாது 14
நினைவு தூங்கிடாது 14
நிஜம் 14
கோவம்…
உன்னால் என் காதலை
இழந்த கோவத்ததை…
என்னவென்று நான் சொல்ல…
“ஏன் கார்த்தி அம்முக்கு ஃபயர் ஆக்சிடென்ட்ன்னு எங்கிட்ட சொன்ன? அப்ப அந்த பொண்ணு பிருந்தா எங்க? எதுக்காக என்னை ஏமாத்தின?” கோவதில் கொந்தளித்தான் ஈஸ்வரன்.
கார்த்திக்கிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. மௌனம் மட்டுமே பதிலானது. ஆனால் அவனது கூர்மையான கண்கள், ஈஸ்வரனை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது. அதில் ஈஸ்வரனின் கோபம் இன்னும் ஏறியது.
“என்னோட அம்மு இறந்துட்டான்னு ஏன் பொய் சொன்ன? ஊர்ல இருக்க எல்லாரும் பேசுறதை பார்த்தால், அவள் உயிரோடிருக்கிறது எல்லாருக்கும் தெரியும்போல. நீ என்னை மட்டும் ஏமாத்தி இருக்க? டேமிட்! வாயைத் திறந்து பதில் சொல்லு.” கார்த்திக்கின் சட்டை காலரை பற்றி உலுக்கினான்.
‘நான் இழந்த நான்கு வருட வாழ்க்கை இவனால். என் சந்தோசத்தை மொத்தமாக தொலைத்து, இப்போது நடைபிணமாக வாழ்வதும் இவனால்’ என நினைக்க, நினைக்க கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.
தன் சட்டையை பற்றி இருந்த கரத்தை தட்டி விட்ட கார்த்திக், அவனது கோபத்திற்கு சற்றும் குறையாத கோபத்துடன், “என்ன பதில் சொல்லணும் ஈஸ்வர்? எதுக்கு சொல்லணும்? அவ உயிரோட இருக்குறது தெரிஞ்சிருந்தா, என்ன செஞ்சிருப்ப? சொல்லு என்ன செஞ்சிருப்ப? உலகத்தில எந்த மூலைல அவ இருந்தாலும், அவளைத் தேடி போயிருப்ப. அவ உடம்புல கொஞ்ச நெஞ்சம் ஒட்டியிருந்த, உயிரையும், நிம்மதியையும் மொத்தமா எடுத்திருப்ப.” என வெடித்து சிதறி இருந்தான் கார்த்திக்.
‘நான் என் அம்முவின் உயிரை பறித்திருப்பேனா? இவ்வளவு கடினமான வார்த்தையை சொல்லும் அளவு, நான் என்ன செய்தேன்? இவனுக்கு எதுக்கு என்மேல் இவ்வளவு கோபம்?’ என புரியாமல் விழித்து நின்றான்.
“நான் உன்னை ஏமாத்தினேன்னு சொல்லுற, ஆனா நான் சொன்னதும், யாரிடமும் விசாரிக்காமல் போனது என்னோட தப்பா? உனக்கு, அவ மேல கொஞ்சமாவது அக்கறை இருந்திருந்தால் விசாரிக்காமல் இருந்திருப்பயா? அவளை பத்தி பேசுறதுக்கான தகுதி கூட இல்லாத உன்கிட்ட, நான் எதுக்கு அவளைப் பத்தி சொல்லணும்?”
‘கார்த்திக் கேட்பதும் சரிதானே. இவன் சொன்னால், நான் ஏன் யாரிடமும் அம்முவை பத்தி விசாரிக்காமல் போனேன்? எங்கே தவறு செய்தேன்? அட்லீஸ்ட் அவளுடன் சுற்றித்திரிந்த, அந்த வாண்டுகளிடமாவது கேட்டிருக்க வேண்டுமோ?’ என காலம் கடந்து சிந்தித்துக் கொண்டிருந்தான் ஈஸ்வர். அப்போது தகுதியை பற்றி கார்த்திக் பேசவும் கோவம் கொண்டு முறைத்தான்.
”என்ன முறைக்குற? நீ முறைச்சா நல்லவன் ஆகிடுவியா? ஒரு பொண்ணு கழுத்துல மஞ்சள் கயிற கட்டிட்டு, அவள அம்போன்னு விட்டுட்டு போய், ஆறு மாசம் கழிச்சு, சாவகாசமா வந்து அவளை எங்கன்னு தேடுற. இப்ப உன்னோட தகுதி என்னன்னு நீயே முடிவு பண்ணிக்கோ?” என அவன் தவறை சுட்டிக்காட்டினான்.
கார்த்திக் தாலியை பத்தி பேசவும் திகைத்துப்போய், “உனக்கு எப்படி தெரியும்? அம்மு சொன்னாளா?” என்றான் சந்தேகமாக. ‘தான் தாலி காட்டியது யாருக்கும் தெரியாது’ என உறுதியாக நம்பினான். ஏனென்றால் தாலி கட்டியது வெளியே தெரிந்திருந்தால், தன் வீட்டிலிருந்து தன்னிடம் கேள்வி எழுப்பி இருப்பார்கள். இன்றுவரை யாரும் அவனிடம் அதை பத்தி ஒரு வார்த்தை கேட்கவில்லை.
அதுவுமில்லாமல் இப்போது அவள் திரையுலகில் முன்னணியிலிருக்கும் நட்சத்திரம். அவளுக்கு லேசான தலைவலி வந்தால் கூட, செய்தியாக மாறிவிடும் அபாயம் உண்டு. இன்றுவரை அவளது திருமணத்தை பற்றிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரிஷியுடன் மட்டுமே கிசுகிசுக்கப்படுகிறாள். தன்னுடனான திருமணச் செய்தி பரவியிருக்கும் பட்சத்தில், அது தலைப்புச் செய்தியாக மாறியிருக்கும். அதனாலேயே இந்த விஷயம் யாருக்கும் தெரியாது என ஈஸ்வர் எண்ணியிருந்தான். அதைப்பற்றி கார்த்தி கேட்கவும் திகைத்துப் போனான்.
அவ்வளவு நேரம் கோபத்தோடு பேசிக் கொண்டிருந்த கார்த்திக், ‘உனக்கு எப்படி தெரியும்?’ என்ற மூன்று வார்த்தையில் வெறுமை நிலையை அடைந்தான். அவனது முகம் உணர்ச்சிகளை துளைத்தது. “உனக்குத் தெரியாது ஈஸ்வர், நான் அவளை எவ்வளவு விரும்பினேன்னு. துறுதுறுன்னு சுற்றித்திரியும் அழகான பட்டாம்பூச்சி அவள். யார் மனதையும் புண் படுத்த தெரியாத தேவதை. ஆறு வருஷமா அவளை இங்க சுமந்தேன்” என்றான் மார்பில் கை வைத்து.
“அவள் என்னை மாமான்னு உரிமையா கூப்பிடும்போது வானத்தில் பறப்பேன். தூரத்திலிருந்து அவள் செய்யும் குறும்புகளை ரசிப்பேன். நெருங்கி போய் என் காதலை சொல்லல. ஏன்னென்று நீ கேட்கலாம்? அவளோட ஆசையே படிச்சு பெரியாளாக வேண்டும் என்பது தான். என் காதல் அவள் படிப்பை எந்த விதத்திலும் பாதிச்சுட கூடாதுன்னு விலகி இருந்தேன். அவள் இயல்பு மாறாமல், கடைசிவரை அவளை சந்தோஷமா வச்சுக்கனும்ன்னு மலையளவு ஆசை இருந்துச்சு. ஆனால் நீ வந்து அதை தரைமட்டமாக்கிட்ட.” என கூறி கொண்டிருந்தவனின் வெற்று குரல், சிறிது சிறிதாக உஷ்ணத்தில் ஏறியது.
“நீ வந்த அந்த பத்து நாள்ல அவளை முழுசா இழந்துட்டேன். நீ வந்தது மட்டுமில்லாமல், உன் பொறுக்கி பிரிண்ட்ஸையும் வரவச்ச. அவன்களிடம், நம்ம ஊரு பொண்ணுங்க மாட்டிக்க கூடாதுன்னு, அவங்க இருந்த ஐஞ்சு நாளும் அவங்களை பின் தொடர்ந்தேன்.” இவ்வளவு நேரம் திகைத்து போயிருந்தவன், நண்பர்கள் எனவும் இடையிட முயன்றான், அவனைத் தடுத்த கார்த்திக் தொடர்ந்தான்,
“என்ன உன் பிரெண்ட்ஸை ரொம்ப நல்லவர்கள், வல்லவர்கள்ன்னு சொல்ல போற?” என அவன் முகம் பார்த்தான்.
‘ஆமாம்’ தலையசைத்தான். பதில் பேச முடிய வில்லை. ஏதோ பெரிதாக நடந்துள்ளது என மனம் நடுங்கியது. இருந்தாலும் நண்பர்களை சந்தேகிக்க முடியவில்லை. குழப்பமான மனநிலை.
“உன் நம்பிக்கைக்கு தகுதியானவங்க அவங்க இல்லை. உனக்குத் தெரியாமல் அந்த இரண்டு பொறுக்கிகளுக்கும் பல கருப்பு பக்கங்கள் உண்டு. நான் முழுசா பேசி முடிச்சதும் நீ பேசலாம்.” எனக்கூறி இடையிடை முயன்ற ஈஸ்வரின் முகம் பார்த்தான். அதில்,’நீ சொன்னதை ஒத்துக் கொள்ள மாட்டேன்’ மறுப்பின் சாயல்.
ஈஸ்வரை பொருத்தவரை அவன் நண்பர்கள், ‘மனிதர்களிடம் தராதரம் பார்த்தே பழகுவார்கள். பெண்களை நல்ல முறையில் பார்க்க மாட்டார்கள். அவர்கள் பார்வை பெண்களின் உடலை மேயும். அதேநேரம் தன்னை விரும்பி வரும் பெண்களிடம் மட்டுமே, உறவு வைத்துக் கொள்வார்கள்.’ என்பது அவனது கணிப்பு. தன் மனதில் ஆழப்பதிந்துவிட்ட அம்மு என்ற பெண்ணின் மீது, அவர்கள் பார்வை தவறாக படக் கூடாது என்பதே ஈஸ்வரனின் எண்ணமாக இருந்தது.
அவனது கணிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள் அவனது நண்பர்கள் என்பது தெரியாமல் போனது யாரின் குற்றம்?
†††††
கார்த்திக் தொடர்ந்தான், “திருவிழா அன்று பிருந்தாவை தவறா தொட முயன்ற உன் பிரெண்டை, அம்மு அடிச்சுட்டாள். அப்போது மட்டும் அம்முவை, அவர்களிடமிருந்து என்னால் காப்பாற்ற முடிந்தது. பிருந்தாவுடன் உனக்கு திருமணம் பேசி முடிச்சது எனக்கு அதிர்ச்சிதான். அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. அதனால் நடப்பதை பேசாமல் வேடிக்கை பார்த்தேன். மணமகளாக பிருந்தாவை கண்ட உன் நண்பர்கள் முகத்திலும் அதிர்ச்சி. அம்முவையும் பிருந்தாவையும் பார்த்த அவங்க கண்கள்ல வஞ்சம் இருந்தது. பிருந்தாவை உனக்கு திருமணம் பேசி முடித்ததால், அவங்களால் தொல்லை வராதுன்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன்.
அன்று நிச்சயம் முடிஞ்ச உடனே நீங்க கிளம்புறதை பார்த்து, அதிக சந்தோசப்பட்டது நானாகத்தான் இருக்கமுடியும். அந்த மகிழ்ச்சி சிறிது நேரத்திலே தவிடுபொடியானது உன்னால். அம்முவை தேடி அலைந்த என் கண்கள் கண்டது,’நான் உயிராக விரும்பிய பெண்ணிற்கு என் அண்ணன் கட்டாய தாலி கட்டுறதை.’ நான் அங்கு வரும் முன் அனைத்தும் கை மீறி இருந்தது. நீ திரும்பியும் பார்க்காமல் அவளை அம்போன்னு விட்டுவிட்டு போய்ட்ட. நானும் இருந்த மனவருத்தத்துல அவள் அங்கிருந்து போனதை கவனிக்கல.” இப்போது குரல் மீண்டும் வெறுமையானது.
“அம்மு இறந்துட்டான்னு ஏன் பொய் சொன்னேன்னு கேட்ட இல்லையா? நான் சொன்னது பொயில்லை. இப்போது இருக்கும் உருவம் மட்டுமே அம்மு. ஆனால் அவளின் பழைய துறுதுறுப்பு, குழந்தைத்தனம், உயிர்ப்பு என அனைத்தும் இறந்துபோய் நாலு வருஷமாச்சு. இப்போ இருக்கிறது மித்ரா, வெறும் மித்ரா மட்டுமே. அம்மு இந்த உலகத்துல இல்லைன்னு, உன்கிட்ட சொன்னா, நீ அவளைத் தேட மாட்டன்னு நினைச்சேன். உன்னை பற்றிய என் கணிப்பு சரியானதுன்னு நிருபிச்சுட்ட. இப்ப தானா வந்து உன்கிட்ட மாட்டிக்கிட்டா.” ஒரு விரக்தி புன்னகை உண்டானது இருவரிடமும்.
“நீ விட்டுட்டு போனதுக்கு அப்பறம், அவள் வாழ்க்கைல நடந்தது அனைத்தும் கொடூரமும், கசப்புகளும் மட்டுமே. அன்றைய தினம் அவள் வாழ்வையே புரட்டிப் போட்டுடுச்சு. இப்போது அவளுடைய இயல்பை தொலைத்துவிட்டு நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளின் அரிதாரம் பூசிய புன்னகை முகத்திற்கு பின், மறைக்கப்பட்ட எத்தனை வலிகளும் வேதனைகளும் இருக்குன்னு உனக்குத் தெரியுமா? அவள் இழந்த இழப்புகளின் எண்ணிக்கை தெரியுமா? நேரடியாக இல்லாவிட்டாலும், அவளின் இழப்புகளுக்கு முக்கிய காரணம் நீதான் என்று தெரியுமா?” தொடர்ந்து கேள்வி எழுப்பினான். அதில் ஒரு கேள்விக்கு கூட ஈஸ்வரனிடம் பதிலில்லை.
கார்த்திக் கூறிய அம்முவின் நிலை, அவளின் தற்போதைய விலகல் (தன்னை யாரென்றே தெரியாதது போல் நடந்து கொள்வது) என அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்த ஈஸ்வருக்கு, ஏதோ பெரிதாக நடந்துள்ளது என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. அது என்ன என கார்த்தியிடமே கேட்க முடிவு செய்தான்.
“அன்னைக்கு நான் போனதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு? அம்முவின் அம்மாவும் சிஸ்டரும் எங்க? ரிஷி அவள் வாழ்வில் எப்போது, எப்படி நுழைந்தான்? அமிர்தா என்ற என்னுடைய அம்மு எங்கு தொலைத்தாள்? அவள் ஏன் இங்கு வர மறுத்தாள்? அவளை இங்க கூட்டிட்டு வரதுக்கு நான் எவ்வளவு பாடுபட்டேன்னு உனக்கு தெரியுமா?” என தன் இயல்பையும் மீறி, வரிசையாக கேள்விகளை அடுக்கினான் ருத்ரேஸ்வரன்.
அது அனைத்திற்கும் பதில் தெரிந்தாலும், கார்த்தியால் அம்முவின் கடந்த காலத்தை வெளிப்படுத்த முடியாது. அந்த உரிமை அவளுக்கு மட்டுமே உண்டு.
“சாரி ஈஸ்வர் நீ கேட்ட எல்லா கேள்விக்கும் எனக்கு பதில் தெரியும். ஆனால் அதை சொல்றதுக்கான உரிமை எனக்கு இல்லை. இது அவளது பர்சனல். முடிஞ்சா அவகிட்ட இருந்து உண்மையை வாங்கிக்க. ஒரு கேள்விக்கான விடையை மட்டும் என்னால் சொல்ல முடியும்.”
‘என்ன?’ என்ற பார்வை ஈஸ்வரனிடம்.
“விருது விழாவில், நீ அவளை பார்த்து, அவளுடன் நடிக்கப் போறேன்னு சொன்னது மட்டுமே தற்செயலாக நடந்தது. அதன் பிறகு நடந்த அனைத்தும் அம்முவால் திட்டமிடப்பட்டு நடந்தது. உன் ஈகோவை தூண்டி, பொறாமையை கிளப்பி, உன்னை இந்த கிராமத்திற்கு வரவைத்தது, முற்றிலும் திட்டமிடப்பட்ட ஒன்று. அனைத்திற்கும் விடை சொல்லக் கூடிய ஒரே ஆள்” யார் என்று கூறாமல், கார்த்திக் அந்த இடத்திலிருந்து கிளம்பினான்.
அந்த இடத்திலேயே ருத்ரேஸ்வரன் தேங்கினான். ‘என்ன நடந்தது?’ என அவனால் கணிக்ககூட முடியவில்லை. இதற்கு விடை சொல்லக்கூடிய ஆட்கள் என்று பார்த்தால் மித்ரா, ரிஷி மட்டுமே. ரிஷியிடம் கேட்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அதுவும் இல்லாமல் வேற ஒருவர் தங்களுக்குள் வருவதை அவன் விரும்பவில்லை.
மித்ரா தன்னிடம் நின்று பேச மாட்டாள் என்பது நிச்சயம். ‘எந்த தடைகளும் இல்லாமல் அவளை என்னுடன் பேச வைக்க வேண்டும். அதற்கு என்ன வழி?’ என சிந்தித்தவனின், மூளை காட்டிக்கொடுத்த ஒரே வழி ‘அவளை கடத்துவது.’
†††††
சூட்டிங் வேலைகள் ஒரு பக்கம் படுவேகமாக நடந்து கொண்டிருந்தது. நம் நட்சத்திரங்கள் சோகம் பாதி, சந்தோஷம் மீதியென கலந்த கலவையாக, தங்கள் வாழ்க்கையை பசுஞ்சோலையில் ஆரம்பித்தனர்.
‘அம்முவை கடத்த வேண்டும்’ என ருத்ரா முடிவு செய்துவிட்டால் தாமதமாகுமா?
அவள் வீட்டையே கண்காணித்துக் கொண்டிருந்தான். ஒருவழியாக இரண்டு நாட்களுக்கு பிறகு மித்ரா, ரேகாவுடன் ஆற்றங்கரைக்கு குளிக்க சென்றாள்.
‘ரேகா இருக்கும் போது எப்படி அவளை கடத்துவது’ என சிந்தித்து கொண்டிருந்தான். அவனுக்கு ஆண்டவனே உதவியதுபோல், சரியாக அந்த நேரம் அலைபேசியில் ஒரு அழைப்பு.
கார்த்திக் அழைத்திருந்தான். அதை ஏற்று பேசிக்கொண்டே,”நீ முன்னாடி போ. நான் வரேன்.” என அம்முவை அனுப்பி, ரேகா பின் தங்கினாள். ஒரு கேலி சிரிப்புடன் அம்மு நடந்தாள்.
அந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் ருத்ரேஸ்வரன். அம்முவின் முன் நின்று,”எனக்கு உன் கூட பேசணும் அம்மு.”
“உன்கூட பேச எனக்கு ஒண்ணுமில்லை ருத்ரா” என அவனை தவிர்த்து செல்ல முயன்ற பெண்ணை, தடை செய்தது ருத்ராவின் கரம். தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த, மயக்க மருந்து கலந்த கைக்குட்டையை, அவள் முகத்தில் வைத்து அழுத்தினான். அதை சுவாசித்த மித்ரா அவன் மேலேயே மயங்கி சரிந்தாள்.