gaanam15

gaanam15

கானம் 15

அந்த வாரம் முழுவதும் ஜேசன் மிகவும் பிஸியாக இருந்தான். பலதரப்பட்ட அலைபேசி அழைப்புகள். நான்சி பகிரங்கமாக அவன் மீண்டும் விளையாடப் போகிறான் என்று அறிவித்ததிலிருந்து இதுபோன்ற அழைப்புகள் வர ஆரம்பித்திருந்தன.
 
ஜேசன் முதலில் திணறிப் போனான். உடல் விளையாட்டுக்கு ஆயத்தமாக இருந்தாலும் அவனது மனது எதற்காகவோ தயங்கி நின்றது. இன்னது என்று சொல்லத் தெரியாத ஏதோவொரு தயக்கம் அவனைப் பின்னோக்கி இழுத்தது. அவமானம் என்ற ஒன்று ஐந்து வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த போது அநியாயமாக அவன் மீது வீசப்பட்ட பார்வைகள் இன்னும் அவனது ஞாபக அடுக்குகளில் மீதமிருந்தன. அவையெல்லாம் அவனைப் பார்த்துக் கேலி பண்ணியபோது ஜேசன் வெகுவாகத் துவண்டு போவான். 
 
ஆனால் இப்போது நிலைமை அதுவல்ல. வரும் அழைப்புகளுக்கு அவன் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏனென்றால், அறிக்கை விடுத்தது அவனது காதலி. 
 
“நல்ல நல்ல ஆஃபர் எல்லாம் வருது ஜேசன், கொஞ்சம் நீங்க என்னன்னு பார்க்கிறது பெட்டர்.” அவனது மானேஜர் அழைத்துச் சொன்ன போது ஜேசன் தன்னைக் கொஞ்சம் இந்த நிலைமையைச் சமாளிக்கத் தயார்படுத்திக் கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் அவன் மனது எதையோ எதிர்பார்த்தது.
 
“ஜேசன்! இன்னைக்கு பழைய டீம் கிட்ட இருந்து கால் வந்தது!” பூரிப்போடு மானேஜர் அழைத்துத் தகவல் சொன்னபோது இளையவன் முகத்தில் திருப்தியானதொரு புன்னகை மலர்ந்தது. அவன் எதிர்பார்த்த தருணம் இதுதானோ!
 
“எத்தனை வருஷ கான்ட்ராக்ட் மைக்கேல்?” இவன் குரலில் இப்போது புதிய துள்ளல்.
 
“அஞ்சு வருஷம்.”
 
“குட், எத்தனை மில்லியன் சொல்லுறாங்க?” மைக்கேல் சொன்னத் தகவலில் இவன் முகத்தில் இளஞ்சிரிப்பொன்று உதித்தது. மனதுக்குள் திருப்தி பரவ இரண்டொரு நொடிகள் சிந்தித்தவன்,
 
“டன் மைக்கேல்! மேற்கொண்டு நடக்க வேண்டியதை நீங்க கவனிங்க.” என்றான் உற்சாகமாக.
 
“மெடிக்கல் முடிக்கணும் ஜே, நீங்க எப்போ கிளம்பி லண்டன் வர்றீங்க?” 
 
“இன்னைக்கே வர்றேன், அதுக்கான ஏற்பாட்டையும் கவனிங்க.”
 
“ஓகே ஜே.” துள்ளல் குரலில் சொல்லிவிட்டு மைக்கேல் அழைப்பைத் துண்டிக்க ஜேசன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தான். மனது பொங்கி வழிந்தது. மீண்டும் அதே அணி. சிறுவனாக இருந்தது முதல் எண்ணற்ற கனவுகளோடு எத்தனையோ போராட்டங்களுக்கு மத்தியில் அவன் இடம்பிடித்த அவனது கனவு அணி. அது தொலைந்து போனபோது அவன் பட்ட வேதனையை அவன் மாத்திரமே அறிவான். அதே அணியில் இன்றைக்கு அவன் மீண்டும் இணையப் போகிறான். அவன் மீது வீசப்பட்டிருந்த களங்கத்தைப் பெண் துடைத்திருந்ததால் சதா முணுமுணுக்கும் மனசாட்சியை லேசாக அடக்கி வைத்தான். 
 
அதேவேளை, தோட்டத்தில் வேலையாக நின்றிருந்த லியோவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் நான்சி. அவளுக்குச் சில தகவல்கள் தேவைப்பட்டன. கேத்தரினுக்கு எதுவும் தெரியவில்லை. 
 
“ஜேயோட அம்மா எங்க இருக்காங்க லியோ?” அந்தக் கேள்வியில் லியோ திடுக்கிட்டு நிமிர்ந்தான். 
 
“மேடம்?!” 
 
“கேத்தரின் கிட்டக் கேட்டேன், அவங்களுக்குத் தெரியலை, ஆனா உங்களுக்குக் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும்னு எனக்குத் தெரியும்.”
 
“அது வந்து… மேடம்…”
 
“ப்ளீஸ் லியோ, சொல்லுங்க.”
 
“எதுக்கு மேடம் இப்போ இதெல்லாம்?”
 
“தெரிஞ்சுக்கணும், ஜேயை பத்தின எல்லாமும் எனக்குத் தெரிஞ்சிருக்கணும்.”
 
“ஆனா சார் இதை விரும்பமாட்டாங்க.”
 
“அதுவும் தெரியும்.”
 
“அப்புறம் ஏன் மேடம்…”
 
“சொல்லுங்க லியோ, டெய்சி எங்க இருக்காங்க?”
 
“மான்செஸ்டர்.”
 
“ஓ… தனியாவா?”
 
“இல்லை, அவங்க ஃப்ரெண்ட் ஒருத்தர் ‘போல்’ ன்னு இருக்காரு, அவரோட சேர்ந்துதான் அந்த சென்டரை நடத்துறாங்க.”
 
“போல் என்னப் பண்ணுறார்?”
 
“அவர் ஒரு டாக்டர், அவர் ரொம்ப நாளாவே இப்படிப்பட்ட பசங்களுக்கு சர்வீஸ் பண்ணுறார் போல, இவங்களுக்கும் அதே இன்ட்ரெஸ்ட் இருக்கவும் ரெண்டு பேருமாச் சேர்ந்து அந்த சென்டரை ஓப்பன் பண்ணி இருக்காங்க.”
 
“ஓ… ஜே கூடப் பேசுவாங்களா?”
 
“ம்… கால் பண்ணுவாங்க, ஆனா சார் பேசமாட்டாங்க.”
 
“வந்து பார்க்க மாட்டாங்களா?”
 
“சார் ரொம்ப பிஸியில்லையா மேடம், அவங்க வந்தாலும் அது சாத்தியப்படாதுன்னு வரமாட்டாங்க.”
 
“நீங்க அவங்களைப் பார்த்திருக்கீங்களா லியோ?”
 
“ஆமா மேடம், ரொம்ப அழகா இருப்பாங்க, உண்மையைச் சொன்னா… நம்ம கிரேஸ் மேடத்தை விட அழகு.”
 
“ஓ!”
 
“என்னவோ, இந்தக் குடும்ப வாழ்க்கையில ஒரு பிடிப்பில்லாமப் போச்சு அவங்களுக்கு, ஆனா ராபர்ட் சார் கூட அடிக்கடி பேசுவாங்க.”
 
“அப்பிடியா?!”
 
“ஆமா, ஆரம்பத்துல ராபர்ட் சாருக்கும் வருத்தம் இருந்திருக்கும் போல, ஆனா கிரேஸ் மேடம் வந்ததுக்கு அப்புறமா சார் எல்லாத்தையும் மறந்துட்டாங்க, மன்னிச்சுட்டாங்க.”
 
“ஓ…” ராபர்ட் என்ற மனிதரைப் பற்றி அவள் கேள்விப்படும் தகவல்கள் அந்த மனிதரைப் பற்றிய அவள் எண்ணத்தை வானளாவ உயர்த்திக் கொண்டே போயின. அதை லியோவிடமும் பகிர்ந்து கொண்டது பெண்.
 
“அற்புதமான மனிதர் மேடம், அப்பிடி மனுஷங்களைப் பார்க்கிறது ரொம்ப அரிது.”
 
“எனக்குத்தான் அந்த பாக்கியம் கிடைக்கலை லியோ.” சொன்னவளைப் பார்த்து ஆதூரமாகச் சிரித்தான் அவன்.
 
“எனக்கு அவங்களோட அட்ரஸ் வேணுமே.”
 
“சார் விரும்பமாட்டாங்க மேடம்.”
 
“பரவாயில்லை லியோ குடுங்க, நான் ஜே கிட்டப் பேசிக்கிறேன்.” தயங்கியவனை வற்புறுத்தி டெய்சியின் முகவரியை வாங்கிக் கொண்டது பெண். போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது எத்தனைத் தூரம் சாத்தியப்படும் என்றும் புரியவில்லை. ஜேசனுக்கு தெரிந்தால் கோபப்படுவான். கிரேஸுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார். இரண்டையும் சமாளிக்க வேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம் என்று நினைத்தவள் முகவரியைப் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
 
அன்றைய நிகழ்வுக்குப் பிறகு கிரேஸ் இவளிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. இவளோடு மாத்திரமல்ல, ஜேசனோடும் பேசுவதில்லை. இவள் வருத்தத்தோடு ஒதுங்கிவிடுவாள். ஆனால் அவன் அப்படியல்ல. நீ பேசினாலும் பேசாவிட்டாலும் எனக்கு அதைப்பற்றி ஒன்றுமேயில்லை என்பது போல அன்னையோடு பேசுவான். லியோவோடு பேசி முடித்துவிட்டு நான்சி உள்ளே வரும்போது ஜேசன் மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருந்தான். 
 
“நான்சி, அம்மாவோட ரூமுக்கு வா.” அழைத்துவிட்டு அவன் விடுவிடுவென கிரேஸின் அறைக்குள் போக இவளும் பின்னோடு போனாள். கேத்தரினும் அப்போது அங்கேதான் நின்றிருந்தார்.
 
“மாம்.” அழைத்தபடி அன்னையின் அருகே கட்டிலில் அமர்ந்தான் மகன்.
 
“பழைய டீம்ல இருந்து என்னைக் கூப்பிட்டிருக்காங்க‌ மாம்.” அந்த வார்த்தைகளில் கிரேஸின் கண்கள் மின்னின. ஆச்சரியத்தோடு மகனைப் பார்த்தவர் நான்சியை இப்போது திரும்பிப் பார்த்தார். தகவல் அவளுக்கும் புதிது என்பதால் அவள் முகமும் ஆச்சரியப்பட்டு விகசித்தது.
 
“இப்பதான் கால் வந்தது நான்சி, நான் இன்னைக்கு நைட்டே புறப்பட வேண்டியிருக்கும்.”
 
“சூப்பர் ஜேசன், சூப்பர்! எங்கத் தம்பியா கொக்கா?! கொஞ்ச காலம் சிங்கம் ஓய்வெடுத்துச்சு, இனிப் பாருங்கய்யா அதோட ஆட்டத்தை!” கேத்தரின் ஆர்ப்பரிக்க அங்கிருந்த அனைவருமே சிரித்தார்கள். அன்னையை நெருங்கி அமர்ந்த மகன் அவரது இடது கரத்தைப் பற்றியபடி தோளில் சாய்ந்து கொண்டான். கிரேஸின் கண்கள் லேசாகக் கலங்கின.
 
“எனக்குத் தெரியும், எம்மேல கோபப்பட உங்களால முடியாது, நான் உங்கப் பையன் மாம், உங்க ஜேசன், நான் இல்லைன்னாலும் இங்க இருக்கிற எல்லாருமே உங்களை நல்லாப் பார்த்துக்குவாங்க, என்னால எப்பத் திரும்ப வர முடியும்னு எனக்குத் தெரியாது, ஆனா நான் திரும்ப வரும்போது, உங்களை என்னோட பழைய அம்மாவாப் பார்க்கணும்.” கண்கள் கலங்கப் பேசியவன் கிரேஸின் கன்னங்களில் முத்தமிட்டான். 
 
“எனக்காகப் ப்ரே பண்ணுங்க மாம்.” என்றவன் கேத்தரினை பார்த்துப் புன்னகைத்துவிட்டு மாடிக்குப் போய்விட்டான்.
 
“சீக்கிரமா நீங்களும் போய் தம்பிக்கு என்னென்ன வேணும்னு பாருங்க நான்சி, நான் சீக்கிரமா சாப்பாட்டை ரெடி பண்ணுறேன்.” கேத்தரினின் பரபரப்பில் அந்த வீட்டில் தொலைந்து போயிருந்த உயிர்ப்பு மீண்டும் மலர்ந்தது. முன்னணி வீரர் ஜேசன் ராபர்ட்டின் வீடு என்ற அடையாளம் அந்த வீட்டின் மீது மீண்டும் பொறிக்கப்பட்டது.
 
மாடிப்படிகளில் மெதுவாக ஏறி வந்தாள் இளையவள். மனது முழுவதும் சந்தோஷம் நிரம்பி வழிந்தது. இத்தனை சுலபத்தில் ஜேசன் மாறிவிடுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அன்று அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியவன் இன்று சட்டென்று இளகி வந்தது அவளுக்குப் பெரு மகிழ்சியாக இருந்தது. அவன் அறை வாசலில் வந்து நின்றவளை உள்ளே இழுத்தான் அவன்.
 
“இப்போ சந்தோஷமா?” அவன் பார்வை அவளைத் துளைக்க அவள் கண்கள் கலங்கியது. எம்பி அவன் இதழில் முத்தம் வைத்தவள் தேம்பித் தேம்பி அழுதாள். ஒரு புன்னகையோடு அவளைத் தன் மார்பில் அணைத்துக் கொண்டவன் அவள் தோள்களை வருடிக் கொடுத்தான். 
 
“எல்லாத்தையும் மறக்க முயற்சி பண்ணலாம் நான்சி.” அவன் குரலில் அத்தனை வலி. பெண்ணின் அழுகை இப்போது அதிகமானது.
 
“அழாத, வருத்தப்பட்டதெல்லாம் போதும், நீயும் நானும் இழந்ததெல்லாம் போதும் நான்சி.”
 
“ஜே…” அவள் பேச முடியாமல் தடுமாறினாள்.
 
“பேசு நான்சி, இன்னைக்குக் கிளம்பிப் போனா இனி எப்ப வர முடியும்னு எனக்குத் தெரியாது, உன்னை இனி எப்பப் பார்க்க முடியும்னும் சொல்ல முடியாது.” 
 
“பழைய வாழ்க்கை, நானும் நீங்களும் வாழ்ந்த பழைய வாழ்க்கைக்குத் திரும்புறோம் ஜே, உங்களை டீவியில பார்த்துக்கிட்டு, அந்த ஹெலிகாப்டர் சத்தத்துக்காக வெயிட் பண்ணி…” கண்ணீரோடே அவள் கலகலவென்று சிரிக்க அவனும் இப்போது சிரித்தான். 
 
“ஆனா ரெண்டு மீட்டர் தூரத்துல நின்னு, கண்ணுல பயத்தோட பேசின நான்சி இப்போ இல்லை.” சொல்லிவிட்டு அவன் கண்ணடிக்க அவள் சிரித்தாள். 
 
“உனக்கதுல வருத்தமா நான்சி?”
 
“ம்ஹூம்.” சட்டென்று தலையாட்டி அதை மறுத்தது பெண். 
 
“வாழ்க்கை எங்கிறது அந்தந்த நேரத்து நியாயங்கள்தான்னு நான் எங்கயோ படிச்சிருக்கேன் ஜே,  குடும்பம், பழக்கவழக்கம், கலாச்சாரம்னு கட்டிக்காத்தது எல்லாமே உங்களுக்காகத்தானே!” அவள் பேச்சில் அவன் அணைப்பு இறுகியது.
 
“சாரி… சாரி நான்சி, என்னோட கவலைகளுக்கான மருந்தை, ஆறுதலை என்னால உங்கிட்ட மட்டுந்தான் தேடிக்க முடியும், என்னை நீ புரிஞ்சுக்கிறியா பொண்ணே?” 
 
“புரியுது ஜே.”
 
“என்னமோ ஒரு கோபம், வாழ்க்கை மேல, காலத்தின் மேல, என்னோட விதி மேல… கண்மூடித்தனமான கோபம், என்னோட வயசுக்கு எனக்குக் கிடைக்க வேண்டிய சராசரி ஆசைகள் மறுக்கப்பட்ட கோபம்.”
 
“ஆரம்பத்துல கொடுக்க மறுத்த காலம், பின்னாடி உங்களுக்கு எல்லாத்தையும் வாரி வாரிக் குடுத்திருக்கு ஜே.”
 
“கண்டிப்பா! தொலைஞ்சு போன அம்மாவை இட்டு நிரப்ப அதைவிட நல்லதா ஒரு அம்மா கிடைச்சாங்க, கைவிட்டுப் போன காதலி…”
 
“முன்னைய விட பெட்டரா கிடைச்சாளா?” அவனை முடிக்கவிடாமல் அவள் கேள்வி கேட்டாள்.
 
“ம்… கிடைச்சா, ஒதுங்கி ஒதுங்கிப் போன காதலி ஒட்டுமொத்தமாக் கிடைச்சா, ஆனா என்னோட அப்பா எங்க நான்சி?” மீண்டும் அவன் கேட்ட கேள்வி அவளை வாள் கொண்டு அறுத்தது. 
 
“ஜே!”
 
“தொலைஞ்சு போன என்னோட அப்பா எனக்குக் கிடைக்கவே மாட்டாங்களா நான்சி? யாருமே எட்டமுடியாத உயரத்துல என்னைத் தூக்கி வெச்சு அழகு பார்த்த என்னோட அப்பா எனக்கு இனி இல்லவே இல்லையா?‌ என்னால அந்தக் கஷ்டத்தைத் தாங்கவே முடியலையே!” நெஞ்சை நீவியபடி அவன் பேசிக்கொண்டிருக்க பெண் பதிலின்றி மௌனமாக நின்றிருந்தாள்.
 
“அஞ்சு வருஷம் முழுசாத் தொலைஞ்சு போச்சு நான்சி, அவ்வளவு விலை குடுக்க நான் பண்ணின தப்பென்ன? எனக்குப் புரியலை ம்மா.”
 
“…”
 
“ஏதோவொரு வெறி, சொல்லத் தெரியாத கோபம், யாருக்கிட்டக் காட்ட முடியும் சொல்லு? உன்னைவிட்டா எனக்கு வேற யாரு இருக்கா நான்சி?”
 
“போதும் ஜே.”
 
“இல்லைம்மா, எவ்வளவுதான் நியாயப்படுத்தினாலும் என்னோட தவறுகள் எனக்குப் புரியுது, மனசாட்சி உறுத்துது, ஆனா… நான் எழுதின தீர்ப்புகள் திருத்தப்பட வேண்டியவைன்னு இந்த நொடி வரைக்கும் எனக்குத் தோணவேயில்லை, அதுதான் உண்மை.”
 
“புரியுது ஜே, எதையும் நீங்க திருத்தி எழுத வேணாம், எழுதணும்னு நான் எதிர்பார்க்கவும் இல்லை.”
 
“நான்சி!” அவளை அவனோடு இறுக அணைத்துக் கொண்டான் ஜேசன்.
 
“போகணும் நான்சி.”
 
“போயிட்டு வாங்க ஜே, என்னோட பழைய ஜேசனை பிட்ச் ல பார்க்க நான் ஆவலா டீவிக்கு முன்னாடி உட்கார்ந்திருப்பேன்.”
 
“அம்மா பத்திரம்.”
 
“ம்…”
 
“நான் திரும்ப வரும்போது அம்மா பழையபடி மாறி இருக்கணும், அது உன்னோட பொறுப்பு.”
 
“கண்டிப்பா.”
 
“உம்மேல கோபப்படுவாங்க, ஆனா அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது, நீ அவங்களை விட்டுத் தள்ளிப் போகக்கூடாது நான்சி.”
 
“சரி ஜே.”
 
“ஆன்டனியும் லியோவும் எங்கூட வருவாங்க, செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணி இருக்கேன், ட்ரைவர் ஒருத்தருக்கும் சொல்லி இருக்கேன், நாளைக்கு அனுப்புவாங்க.”
 
“சரி.” அவன் ஒவ்வொன்றாகச் சொல்லி முடிக்க அவனை ஆமோதித்தபடி இருந்தது பெண். கறுப்பு நிற ஹெலிகாப்டர் ஒன்று அவர்கள் தோட்டத்தில் பேரிரைச்சலோடு வந்திறங்கியது. இது பிரிவிற்கான நேரம்.
 
“இனி எப்போ?” ஹெலிகாப்டரை பார்த்தபடி இருந்த பெண் காதருகில் கேட்ட கிசுகிசுப்பில் திரும்பியது.
 
“எது?!”
 
“அர்த்த ராத்திரியில, வேர்வை வடிய ப்ராக்டீஸ் பண்ணிட்டு, அழகான இந்தப் பொண்ணோட இனிக்க இனிக்க இனி காதல் பண்ணுறது எப்போ?” 
 
“தெரியலையே.”
 
“ஆமா, நீ ஏன் இவ்வளவு அழகாப் பொறந்தே நான்சி?” அவன் பிதற்ற ஆரம்பிக்க, அவள் சிரிக்க ஆரம்பித்திருந்தாள். 
 
***
 அன்றோடு ஜேசன் கிளம்பிப் போய் ஒரு மாதம் ஆகியிருந்தது. வீடு எப்போதும் போல இயங்கிக் கொண்டிருந்தது. காலை, மாலை இருவேளையும் தவறாமல் நர்ஸ் வந்தார்கள். கிரேஸின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பேச்சுக்கான பயிற்சிகளும் தொடர்ந்து நடக்க ஓரளவிற்குக் கோர்வையாகப் பேச ஆரம்பித்திருந்தார்.
 
புதிதாக ஒரு ட்ரைவர் வேலைக்கு வந்திருந்தார். அதனால் போக்குவரத்துக்கு எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை. நான்சி எப்போதும் போல பாடசாலைக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். வார இறுதியில் மாணவர்கள் இங்கு வருவதால் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடந்தது. ஜேசன் இல்லையே என்ற குறையைத் தவிர அனைத்தும் செவ்வனே நடந்து கொண்டிருந்தன. 
 
முன்பு போல கிரேஸ் இளையவளிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை என்றாலும் அடியோடு ஒதுக்கவில்லை. ஜேசனுக்கு பெரும்பாலும் இரவு வேளைகளில் ஓய்வு கிடைப்பதனால் அன்னையைத் தொந்தரவு செய்ய அவன் விருப்பப்படுவதில்லை. ஜேசன் பற்றிய தகவல்கள் அனைத்தும் நான்சி மூலமே அந்த வீட்டில் பகிரப்படுவதால் அவளைத் தன் அறைக்குள் கிரேஸ் அனுமதிக்க வேண்டியிருந்தது. இல்லாமல் போயிருந்தாலும் பெரியவர் எதுவும் சொல்லியிருக்கப் போவதில்லை. 
 
அன்றைக்கு எல்லோரும் கிரேஸின் அறையில் உட்கார்ந்த படி மாலைத் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த கூர்க்கா அறை வாசலில் வந்து நிற்கவும் நான்சி எழுந்து வந்தாள்.
 
“மேடம், யாரோ ஒரு பொண்ணு உங்களைப் பார்க்க வந்திருக்கு.”
 
“யாரது?”
 
“தெரியலை, அமீலியான்னு உங்ககிட்டச் சொல்லச் சொன்னாங்க.”
 
“அமீயா?! என்னோட தங்கைதான், வரச்சொல்லுங்க.” எஜமானி பரபரக்கவும் அந்த மனிதர் அவசரமாக வெளியே ஓடினார்.
 
“யாரு நான்சி?” இது கேத்தரின்.
 
“அமீ, என்னோட சிஸ்டர்.” வாயெல்லாம் பல்லாகப் புன்னகைத்தது பெண்.
 
“அடடே! இப்போதான் நம்ம நான்சியோட வீட்டாளுங்களுக்கு நம்ம வீடு தெரிஞ்சிருக்கு மேடம்.” கேத்தரின் கேலி பேச கிரேஸும் சிரித்தார். இப்போது அவர் புன்னகைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அமீலியா உள்ளே வந்தாள்.
 
“அமீ…” நான்சி கூவியபடி ஓடிவந்து தங்கையைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
 
“நான்சி.” தங்கையின் குரலும் கலங்கியது.
 
“வாங்கம்மா.” கேத்தரின் அழைக்கத் தன் தங்கையை கிரேஸின் அறைக்குள் அழைத்துப் போனாள் பெண்.
 
“இது கிரேஸ் ஆன்ட்டி, ஜேயோட அம்மா.” பெரியவள் அறிமுகப்படுத்தி வைக்க இளையவளுக்கு லேசாக நடுங்கியது. இந்தக் குடும்பத்தையே நடுத்தெருவிற்குக் கொண்டு வந்தவரின் மகள் அவள். அவளுக்கு இங்கே என்ன மரியாதைக் கிடைக்கும்?! 
 
“உட்காரும்மா.” ஆனால் அழகிய புன்னகையோடு மரியாதைக் கிடைத்தது. கிரேஸின் வரவேற்பில் தன் தமக்கையைச் சட்டென்று பார்த்தாள் அமீலியா.
 
“உட்காரு அமீ.”
 
“வீட்டுல எல்லாரும் எப்பிடி இருக்காங்க?”
 
“இருக்காங்க…” அமீலியாவுக்கு வார்த்தைகள் கொஞ்சம் சிக்கியது. சின்னவள் தடுமாறுவதைக் கவனித்த கிரேஸ் கேத்தரினை பார்த்தார்.
 
“அதான் இவ்வளவு நாள் கழிச்சு தங்கை வந்திருக்கில்லை, உங்க ரூமுக்கு கூட்டிட்டுப் போங்க நான்சி.” இளையவர்கள் இருவரும் தனித்துப் பேசட்டும் என்று வழி சமைத்துக் கொடுத்தார் கேத்தரின்.
 
“இல்லை கேத்தரின், எதுவா இருந்தாலும் அமீ இங்கேயே பேசட்டும்.” கத்தரித்தாற் போல பதில் சொன்னாள் நான்சி. பெரியவர்கள் இருவரும் இப்போது அமைதியாக இருந்தார்கள்.
 
“சொல்லு அமீ, பாட்டி எப்பிடி இருக்காங்க?”
 
“நல்லா இருக்காங்க, நான்சி… அப்பா…” அமீலியா எதையோ சொல்லத் தயங்கினாள். 
 
“ம்… சொல்லு.” அந்தக் குரலில் அத்தனைக் கடினம்.
 
“அப்பாக்கு… உடம்புக்கு முடியலை.”
 
“ஐயையோ! என்னாச்சு?” இது கேத்தரின்.
 
“என்னாச்சு ம்மா?” இது கிரேஸ். ஆனால் பதட்டப்படாமல் அமைதியாக இருந்தாள் நான்சி. 
 
“நெஞ்சு வலின்னு நேத்து நைட் சொன்னாரு, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்.”
 
“இப்போ எப்பிடி இருக்கு?”
 
“பர… பரவாயில்லை ஆன்ட்டி.” கிரேஸுக்கு பதில் சொல்லும் போது மாத்திரம் அமீலியாவின் குரல் தந்தியடித்தது.
 
“என்ன ப்ராப்ளமாம்?”
 
“இன்னும் சொல்லலை ஆன்ட்டி, அம்மா… நான்சிக்கு சொல்லணும்னு…” 
 
“உன்னோட படிப்பெல்லாப் எப்பிடிப் போகுது அமீ?” சூழ்நிலைக்குச் சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்ட நான்சியை அங்கிருந்த மூன்று பேருமே ஒரு தினுசாகப் பார்த்தார்கள்.
 
“நான்சி, உங்கப்பாக்கு உடம்புக்கு முடியலையாம்.”
 
“அதுக்கு நான் என்னப் பண்ண முடியும் கேத்தரின்? இந்த வீட்டுலயும்தான் நிறையப் பேருக்கு உடம்புக்கு முடியாமப் போச்சு.” சுலபமாகச் சொன்னவள்,
 
“உனக்கு நான் டீ போட்டு எடுத்துக்கிட்டு வர்றேன், நீ இவங்களோட பேசிக்கிட்டு இரு அமீ.” என்றுவிட்டு கிச்சன் நோக்கி நகர்ந்தாள். கிரேஸ், கேத்தரினை திரும்பிப் பார்த்தார். கேத்தரினின் முகத்திலும் குழப்பமே நிறைந்திருந்தது. 
 

Leave a Reply

error: Content is protected !!