தீயாகிய மங்கை நீயடி – 07

தீயாகிய மங்கை நீயடி – 07
கனவில் தன்னை யாரோ அழைப்பது போல கேட்ட சத்தத்தில் மெல்ல மெல்ல தன் கண்களைத் திறந்து கொண்ட அருந்ததி தன் தலையில் பலமாக எதுவோ தாக்கிய உணர்வில் வலி தாளாமல் தன் தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டபடி தான் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் நோட்டம் விட ஆரம்பித்தாள்.
ஓலையால் வேயப்பட்ட களிமண் குடிசை ஒன்றிற்குள் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருக்க, தான் எங்கே இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் சிறிது திணறிப் போனவள், “பாட்டி! பாட்டிம்மா” தன் உடலில் மிகுதியாக ஒட்டியிருந்த சக்தி அனைத்தையும் ஒன்று சேர்த்து அங்கேயிருந்த நபரை அழைக்க,
அவளது குரல் கேட்டு ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்த அந்த வயதான பெண்மணி, “அட! உனக்கு மயக்கம் தெளிஞ்சுடுச்சா?” என்று கேட்க, அவளோ அவரை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“மயக்கமா? என்ன பாட்டி சொல்லுறீங்க?”
“ஆமாம்மா, ஒரு நாலைஞ்சு நாளைக்கு முன்னாடி நான் காட்டுக்கு விறகு எடுக்கப் போகும் போது அந்த வழியில் நீ மயக்கமாகி விழுந்து கிடந்த”
“நாலைஞ்சு நாளைக்கு முன்னாடி காட்டுப் பாதையில் நான் எப்படி? எனக்கு என்ன ஆச்சு?” தனக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று அருந்ததி சிந்திக்க முயல அவளது தலையில் ஏற்பட்டிருந்த வலி தன்னிருப்பையும் அவளுக்கு பலமாக நினைவுறுத்தியது.
“அம்மா!” தலையில் ஏற்பட்ட வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அலறியவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட அந்த வயதான பெண்மணி,
“ஒண்ணும் இல்லைம்மா! கீழே விழுந்ததில் உனக்கு அடி பட்டு இருக்கும் போல. இரும்மா உனக்கு பத்து போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்றவாறே அவளது தலையை வருடிக் கொடுத்தபடி அங்கிருந்து விலகிச் செல்ல, அருந்ததி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாதவளாக வெகுவாக குழம்பிப் போய் அமர்ந்திருந்தாள்.
‘அன்னைக்கு கதிர் கூட கோபமாக சண்டை போட்டு விட்டு நான் என் வீட்டுக்கே திரும்பிப் போகலாம்னு தானே இருந்தேன்? அப்போ என் தலையில் ஏதோ அடி பட்டது போல இருந்தது, ஒருவேளை அது அந்தக் கதிரின் வேலையாக இருக்குமா? அப்படின்னா நான் இந்த காட்டுப்பகுதியில் விழுந்து கிடந்ததற்கும் அவன்தான் காரணமா? சே! அவன் எல்லாம் மனுஷ பிறவி தானா? எதற்காக இப்படி வெறி பிடித்து அலையுறான்? அவன் மட்டும் மறுபடியும் என் கண்ணில் படட்டும், அன்னைக்கு தான் அவனுக்கு கடைசி நாளாக இருக்கும்’ அருந்ததி கதிரை எண்ணிக் கோபம் கொண்டவளாக அவனை தன் மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டு அமர்ந்திருந்த நேரம் அந்த வயதான பெண்மணி அவளது வலிக்கான மருந்தை அவளுக்கு வைத்து விட, அவரைப் பார்த்து கண்கள் கலங்கிப் போனவள், “ரொம்ப நன்றி பாட்டி, நீங்க மட்டும் எனக்கு உதவி பண்ணேலேன்னா நான் இப்போ அவன் நிலைமையில் இருந்திருப்பேன்னு கூடத் தெரியாது” எனவும்,
அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவர், “மனுஷனுக்கு மனுஷன் உதவி பண்ணுவதில் என்ன இருக்கு” என்று கூற, அவளும் அவரைப் பார்த்து இயல்பாக புன்னகைத்துக் கொண்டாள்.
“ஆமா பாட்டி, இது என்ன இடம்?”
“இது கிருஷ்ணா நகரோட ஆரம்ப எல்லைப்புறம்மா”
“கிருஷ்ணா நகரா? ஆனா, நான் பூஞ்சோலை நகரில் தானே இருந்தேன்?” அருந்ததியின் குழப்பமான கேள்வியில் அவளை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தவர்,
“பூஞ்சோலை நகர் இங்கேயிருந்து ரொம்ப தூரம் ஆச்சே, அதுசரி, அங்கேயிருந்து நீ இங்கே தனியாகவா வந்த?” என்று வினவ, அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“சரிம்மா நீ கொஞ்ச நேரம் தூங்கி எழும்பு, நான் உனக்கு சூடா கஞ்சி போட்டு தர்றேன்” என்றவாறே அந்த வயதான பெண்மணி எழுந்து கொள்ளப் போக,
அவரது கையைப் பிடித்துக் கொண்டவள், “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் பாட்டி, என்னை எங்க ஊருக்கு போகும் ஏதாவது ஒரு வண்டியில் ஏற்றி விடுங்க, அது போதும்” என்று கூற, அவளது பேச்சைக் கேட்காமல் அவளுக்காகவென சூடான உணவைச் செய்தவர் அவளது மறுப்பை பொருட்படுத்தாமலேயே அதை அவளுக்கு ஊட்டியும் விட்டார்.
அவரது பாசத்தைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போன அருந்ததிக்கு அப்போது மனதிற்குள் முழுமையாக சூழ்ந்திருந்தது வைஜயந்தியின் எண்ணங்கள் மாத்திரம் தான்.
தான் வீட்டை விட்டு வந்து பல நாட்கள் கடந்து விட்டது என்ற உண்மையைக் கண்டறிந்த நொடியில் இருந்து அருந்ததிக்கு இருப்புக் கொள்ளவே இல்லை, இப்போதே தன் யாதுமாகிய வைஜயந்தியைப் பார்த்து அவரை ஆரத் தழுவிக் கொள்ள வேண்டும் என்பது போல அவளது மனது பரபரத்தாலும் அவளால் அதை அப்போது செய்ய முடியாது என்பது தான் நிதர்சனம்.
அருந்ததியின் மனது அந்த இடத்தில் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அந்த வயதான பெண்மணி, “என்னம்மா உன் வீட்டு ஞாபகம் வந்துடுச்சா?” என்று கேட்க,
அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள், “ஆமா பாட்டி, என் அம்மா ஞாபகம் வந்துடுச்சு” என்று கூற,
அவரோ சிறு புன்னகையுடன், “உன் அம்மா, அப்பா எல்லாம் என்னம்மா பண்ணுறாங்க? உன் கூடப் பிறந்தவங்க எத்தனை பேரு” என்று கேட்டார்.
“எனக்கு அம்மா, அப்பா, கூடப் பிறந்தவங்க எல்லாமே என் வைஜயந்திம்மா தான்”
“நீ என்ன சொல்லுற பொண்ணு? ஒண்ணுமே புரியலையே”
“அப்படின்னா எனக்கு என் வைஜயந்திம்மா மட்டும்தான் இருக்காங்க”
“ஓஹ்! அப்படின்னா உங்க அப்பா இறந்து போயிட்டாங்களா?” அந்த வயதான பெண்மணியின் கேள்வியில் சிறு கலக்கத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தவள்,
“இல்லை பாட்டி, எனக்கு அப்படி ஒரு சொந்தமே இல்லை” என்று கூற,
சிறிது தயக்கத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவர், “நான் ஒரு விஷயம் கேட்டால் நீ தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டியே?” என்று வினவ, அவளோ அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தாள்.
“நீ, அது வந்து நீ பொண்ணா? பையனா? ” அந்த வயதான பெண்மணியின் கேள்வியில் அருந்ததி அதிர்ச்சியாக அவரை நிமிர்ந்து பார்க்க,
அவரோ, “இல்லை ம்மா, நீ ஒண்ணும் தப்பாக நினைக்க வேண்டாம், உன்னைப் பார்க்க பொண்ணு மாதிரி இருந்தாலும் ஆனா நீ அப்படி இல்லை, அன்னைக்கு உன்னை இங்கே மயக்கத்தில் கொண்டு வரும் போதே எனக்கு இந்தக் குழப்பம் இருந்தது, ஆனா வயதான காலத்தில் எனக்குத்தான் அப்படி தோணுதோன்னு நினைச்சேன். ஆனா இப்போ நீ சொல்லுவதை வைத்துப் பார்த்தால் நீ நிஜமாகவே பொண்ணு இல்லையா?” என்று கேட்க, அருந்ததி சிறு புன்னகையுடன் தன்னைப் பற்றிய உண்மைகளைக் கூற ஒரு சில நொடிகள் அந்த இடத்தில் அமைதி மாத்திரமே நிறைந்திருந்தது.
“அப்படின்னா நீ ஆணும் இல்லை, பொண்ணும் இல்லையா?”
“ஏன் பாட்டி? நான் ஆணாகவோ, இல்லைன்னா பொண்ணாகவோ இருந்தால் தான் உதவி செய்யணும்னு சொல்லி இருக்காங்களா?” அருந்ததியின் கேள்வியில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவர்,
“எனக்கு ஆணோ, பெண்ணோ, இல்லை நீயோ எல்லோரும் ஒண்ணு தான் ம்மா, ஆனா நான் இருக்கும் ஊரு ஆளுங்க அப்படி பார்க்க மாட்டாங்களே. இன்னைக்கு எங்க ஊர்த் தலைவர் என் வீட்டுக்கு வந்து உன்னைப் பார்த்து, விசாரிப்பதாக சொல்லி இருந்தாங்க, ஆனா இப்போ அவர் வரும் போது நீ, அது எப்படி சொல்லுறது? அதாவது நான் என்ன சொல்ல வர்றேன்னா, நீ வந்து எங்களை மாதிரி இல்லாமல் வேறு விதமான ஆளுன்னு தெரிஞ்சா உனக்கு உதவி பண்ண என்னையும் இந்த ஊரை விட்டு அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லைம்மா, அதனால அவங்க யாரும் உன்னை இங்கே பார்க்க முதலே நீயாகவே போயிட்டேன்னா” என்றவாறே தயக்கத்துடன் அவள் அமர்ந்திருந்த புறமாக திரும்பிப் பார்க்க, அந்த இடமோ வெற்றிடமாகிக் கிடந்தது.
அத்தனை நேரமும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த அந்த வயதான பெண்மணி எப்போது பேச வார்த்தைகள் இன்றி தடுமாற ஆரம்பித்திருந்தாரோ அப்போதே அருந்ததி அவரது நிலையைப் புரிந்து கொண்டு அவருக்கு அதற்கு மேலும் சிரமம் கொடுக்க நினைக்காமல் தட்டுத் தடுமாறியபடி அந்த இடத்தை விட்டு வெளியேறி இருந்தாள்.
சிறு வயது முதலே அவளைப் பற்றிய உண்மைகள் தெரிய முன்பு அவளுடன் சகஜமாக பழகும் நபர்கள் அவளைப் பற்றிய உண்மைகள் தெரிந்த பின்னர் அவளைப் பார்க்கும் பார்வையே அவளுக்கு தனது நிலையை எடுத்துச் சொல்லி விடும், அதனாலேயே என்னவோ அவள் யாரையும் நெருங்கிச் சென்று பழகுவதில்லை, அதையும் மீறி யாராவது அவளுடன் நட்பு பாராட்ட வந்தால் தன்னைப் பற்றிய உண்மைகளை இன்னொருவர் சொல்லி அவர்கள் தெரிந்து கொள்ள முன் அவளே தன்னைப் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டு அதை ஏற்றுக் கொண்டு தன்னுடன் பழகும் பக்குவம் இருந்தால் தானும் சந்தோஷமாக அவர்களது நட்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி விடுவாள்.
ஆனால் இன்று வரை அவளுடன் உண்மையான நட்பு பாராட்ட ஒருவர் கூட முன்வரவில்லை என்பது தான் அவளது மனதிற்குள் பல வருடங்களாக சூழ்ந்திருக்கும் மிகப் பெரும் அழுத்தத்தை தரக்கூடிய விடயம்.
ஏன் தன்னைப் போன்றவர்களையும் சக மனிதனாகப் பார்த்து பழகும் பழக்கம் இன்னமும் பலரிடம் உருவாகவில்லை என்பது தான் அவளுக்குப் புரியாத புதிர்.
தன்னைப் பற்றியும் தன் சிறு வயது அனுபவங்களையும் பற்றியும் சிந்தித்தபடியே கிருஷ்ணா நகரின் பிரதான பாதையை வந்து சேர்ந்திருந்த அருந்ததி தன் ஊருக்கு செல்லும் வழி தெரியாமல் சிறிது நேரம் திணறித்தான் போனாள்.
அந்த வயதான பெண்மணி கொடுத்த சூடான ஆகாரத்தின் உதவியினால் அருந்ததியின் உடலில் சிறிது சக்தி சேர்ந்தது போல இருக்க, அந்த சக்தியின் உதவியினால் சிறிது தூரம் நடந்து செல்ல ஆரம்பித்தவள் ஓரிரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் பூஞ்சோலை நகர் செல்லும் வழியைக் கண்டு பிடித்திருந்தாள்.
கையில் எந்தவொரு பணமும் இல்லாமல் எப்படித் தன் ஊருக்குச் செல்வது என்று புரியாமல் தவித்துப் போய் நின்றவள் பின்னர் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
‘தன் உடலில் உள்ள சக்தி மொத்தமும் தொலைந்து போனாலும் பரவாயில்லை, தன் காலே தனக்கு உதவி’ என்ற வைராக்கியத்துடன் எட்டி நடை போட ஆரம்பித்தாள்.
எவ்வளவு நேரமாக அவள் நடந்து கொண்டிருந்தாலோ அது அவளுக்கே தெரியவில்லை.
மாலை மங்கி வானம் மெல்ல மெல்ல இருள் சூழ ஆரம்பித்திருக்க, கால் வலி தாளாமல் அந்த வீதியின் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டவள் தன்னிலையை எண்ணி தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.
“எதற்காக அருந்ததி இப்படி ஒரு காரியத்தை பண்ண? நீ மட்டும் அந்தக் கதிரை நம்பாமல் இருந்திருந்தால் இன்னைக்கு உனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நீ எடுத்த ஒரு தவறான முடிவு உனக்கு என்ன பலனைக் கொடுத்திருக்குன்னு பாரு, உன்னையே நம்பியிருந்த வைஜயந்திம்மா நிலை என்னவாகி இருக்கும்? இப்போ எப்படி நீ அவங்க முகத்தில் முழிப்ப?” காலம் கடந்த பின்னர் ஏற்படும் ஞானோதயம் போல தன் செய்த தவற்றை எண்ணி வருந்தியபடி அமர்ந்திருந்த அருந்ததி சில நிமிடங்கள் கழித்து தன்னையும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தை தழுவியிருந்தாள்.
அருந்ததி தன்னை மறந்து ஆழ்ந்து உறங்கியிருந்த நேரம் பறவைகளின் கீச்சொலியும், வாகனங்களின் சத்தமும் அவளை அந்த ஆழ்நிலையிலிருந்து விழிக்கச் செய்திருக்க, தன் கண்களை கசக்கிக் கொண்டு கண் விழித்தவள் அப்போதுதான் தான் இரவு முழுவதும் இந்த வீதியிலேயே உறங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டாள்.
தன்னுடைய நிலையை எண்ணி அவளுக்கு கண்கள் கலங்குவது போல இருந்தாலும் தன் மனது கொடுத்த தைரியத்தில் மீண்டும் சிறு வைராக்கியத்துடன் எழுந்து நின்றவள் தன் நடைபவனியை தொடர ஆரம்பித்தாள்.
சில நேரங்களில் கால் வலி தாளாமல் ஓரிடத்தில் அமர்வதும், பின்னர் வைஜயந்தியைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் வேகமாக நடப்பதுமாக தன் முயற்சியைக் கைவிடாத அருந்ததி அடுத்த நாள் மாலை வேளையில் தன் ஊரை வந்து சேர்ந்திருந்தாள்.
தன் ஊரைப் பார்த்ததும் அவளுக்கு எங்கிருந்து அத்தனை சக்தி வந்ததோ தெரியவில்லை இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கியவள் தாங்கள் தங்கியிருந்த பகுதியை நோக்கிச் செல்ல, அந்த இடமோ அவள் முற்றிலும் எதிர்பாராத ஒரு நிலையில் சிதைந்து கிடந்தது.
பல வீடுகள் இடிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகி கிடக்க, அங்கிருந்த மக்கள் எல்லோரும் அந்த இடிபாடுகளின் நடுவே தங்கள் உடைமைகளை வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கையாலாகாத நிலையில் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
“இது, இது எப்படி ஆச்சு? நம்ம இடத்துக்கு என்ன ஆச்சு?” தான் இத்தனை வருடங்களாக சந்தோஷமாக ஓடியாடித் திரிந்து வளர்ந்த இடம் இன்று இப்படியான ஒரு நிலையில் இருப்பதைப் பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் தன் வீட்டை நோக்கி ஓடிச் சென்றவள் அங்கே முக்கால்வாசி இடிந்து போன நிலையில் இருந்த அந்த வீட்டின் முகப்பில் எங்கோ ஒரு மூலையை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த வைஜயந்தியைப் பார்த்து முற்றிலும் உடைந்து தான் போனாள்.
இதுநாள் வரையிலும் எந்தவொரு அவமானத்தை சந்தித்த போதும் கலங்கிப் போகாத வைஜயந்தி, இன்று இப்படியான ஒரு நிலையில் இருப்பதைப் பார்த்ததும் அருந்ததியினால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
“வைஜயந்தி ம்மா” தன் உடலும், உயிருமான அருந்ததியின் குரல் கேட்டதும் கனவில் இருந்து விழித்தது போல அவளது குரல் ஒலித்த புறமாக திரும்பிப் பார்த்த வைஜயந்தி,
“அருந்ததி” என்றவாறே அவளைத் தாவி வந்து அணைத்துக் கொண்டார்.
“அருந்ததி! நீ எப்படி ம்மா இருக்க? நீ இத்தனை நாளாக எங்கேம்மா போய் இருந்த? நீ நல்லா இருக்க தானே? உனக்கு எந்த ஆபத்தும் இல்லையே? நீ நல்லா இருக்க தானே? சொல்லுடா ம்மா? உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை தானே?” வைஜயந்தி அருந்ததியின் முகத்தை வருடிக் கொடுத்தபடியே மூச்சு விடாமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல,
அவரது கை பிடித்து அழுத்தி அவரை சிறிது ஆசுவாசப்படுத்தியவள், “அம்மா, கொஞ்சம் பொறுமையாக இருங்க. எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நான் நல்லாத்தான் இருக்கேன், ஆனா உங்க எல்லோருக்கும் என்ன ஆச்சு? நம்ம இடத்துக்கு என்ன ஆச்சு?” என்று வினவ,
அங்கே கூடியிருந்த நபர்களில் ஒருவர் கோபமாக அவள் முன்னால் வந்து நின்று, “எங்களோட இந்த நிலைமைக்கு நீ மட்டும் தான் காரணம். இத்தனை நாளாக நாங்க திருநங்கைகளாக இருந்த போது எங்களை அசிங்கமாக பேசி அனுப்பி வைப்பாங்க, அப்போ எல்லாம் நாங்க அதைப் பெரிதாக எடுத்துக்கல, ஏன்னா இந்த சமூகத்தில் நமக்கு இந்த இடம்தான்னு எங்களுக்குத் தெரியும், ஆனா நம்மளை மாதிரி ஆளுங்களுக்கும் மனசு இருக்கு, அதில் உணர்வு இருக்குன்னு புரிஞ்சு எங்களுக்குன்னு ஒரு சந்தோஷமான உலகத்தை ஏற்படுத்தி தந்தவங்க எங்க வைஜயந்தி க்கா. ஆனா நீ பண்ண ஒரேயொரு காரியத்தினால் இன்னைக்கு அவங்க மட்டும் இல்லை, இந்த ஒட்டுமொத்த மக்களுமே நிர்க்கதியாகி நிற்கிறோம், இதற்கெல்லாம் காரணம் நீ மட்டும்தான், நீ மட்டும்தான்” என்றவாறே அவளை நோக்கி அடியெடுத்து வைக்கப் பார்க்க, அதற்கிடையில் வைஜயந்தி அருந்ததியை தன் புறமாக இழுத்துக் கொண்டார்.
“அம்மா, இவங்க என்ன சொல்லுறாங்க? எனக்கு எதுவுமே புரியல. என்னால தான் இந்த நிலைமைன்னா எனக்குப் புரியலம்மா, நான் என்ன பண்ணேன்?”
“நீ வீட்டிலிருந்து வெளியே கிளம்பி போன அப்புறம் ரொம்ப நேரம் கழித்து நீ திரும்பி வரவே இல்லை, உன் போனுக்கு ட்ரை பண்ணாலும் லைன் கிடைக்கவே இல்லை, ஏதாவது வேலையாக இருப்ப, இப்போ வந்துடுவ, அப்போ வந்துடுவன்னு காத்துட்டு இருந்தே முழுமையாக ஒரு நாள் முடிஞ்சுடுச்சு. அதற்கு மேலேயும் பொறுமையாக இருந்து பலன் இல்லைன்னு நாங்க எல்லாரும் ரொம்ப பதட்டமாக உன்னைத் தேடிட்டு இருந்த போது திடீர்னு எம்.எல்.ஏ மாணிக்கமும் அவனோட பையன் கதிரும் இங்கே வந்திருந்தாங்க”
“கதிர்?” கதிரின் பெயரைக் கேட்டதுமே அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்ட அருந்ததி கால்கள் தள்ளாட,
தன் உடலில் இருந்த ஒட்டுமொத்த சக்தியும் வடிந்து போனவளாக, “இன்னும் நீ என்னை எத்தனை வழிகளில் சித்திரவதை செய்யப் போற கதிர்? இன்னும் என்ன பண்ணப் போற?” என்றவாறே முழங்காலிட்டு அமர்ந்து கொண்டவள் தன் மனக்குமுறல் தாளாமல் தன் கையை தரையில் ஓங்கி அடித்தபடி கதிருக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்று தனக்குள் தீர்மானமாக முடிவெடுத்துக் கொண்டாள்……