gaanam18
gaanam18
கானம் 18
ஜேசன் தன்னிலை மறந்து அப்படியே நின்றிருந்தான். அவள் பேசிய பாஷையின் அர்த்தம் அவனுக்குப் புரியவில்லை. பெண்ணின் வயிற்றைத் தொட்டிருந்த அவன் கை நடுங்கியது. உடம்பை என்னவோ செய்யக் கண்கள் குளமானது. வாய்க்கு வார்த்தைகள் சிக்காமல் அவளையே பார்த்தபடி சில நொடிகள் நின்றிருந்தான்.
“நான்சி!” வெறும் காற்றாக வந்தது அவன் குரல்.
“எனக்கு நல்லாவே தெரியும் ஜே, இது பையன்தான், என்னோட அப்பா எங்க? என்னோட அப்பா எங்க நான்சின்னு கேட்ட உங்களுக்கு உங்க அப்பா திரும்பக் கிடைக்கப் போறாரு ஜே!” இப்போது அவள் கண்களும் கண்ணீரைச் சொரிந்தன. ஜேசன் அப்படியே அவள் காலடியில் சரிந்து மண்டியிட்டு உட்கார்ந்தான்.
“எப்பிடி ம்மா?!” அவன் ஆச்சரியத்தில் அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.
“ஹா… ஹா… என்னைக் கேட்டா? ஆட்டம் போடும்போது இதெல்லாம் நடக்கும்னு தெரியாதா?”
“ஹேய்! நான் ரொம்ப கவன…”
“போதும் போதும்!” அவன் பேச்சைக் கோபமாக அவள் இடைநிறுத்தினாள். ஆனால் அது பொய்க்கோபம்! சட்டென்று அவள் முகம் புன்னகையைத் தத்தெடுத்தது.
“ஜேசனோட கண்ணியம், கட்டுப்பாடெல்லாம் நாலு சுவருக்குள்ளதான், பிட்ச் ல ஐயா உங்களையே மறந்திடுறீங்களே!” அவள் கேலியில் அவன் முகம் சிவந்து போனது.
“ஐயையோ! என்னோட ஜே க்கு வெட்கமெல்லாம் வருதுப்பா!” சொல்லிவிட்டு அவள் சத்தமாகச் சிரிக்க இப்போது அவன் பெண்பிள்ளைப் போல முகத்தை மூடிக்கொண்டான். உண்மையிலேயே அவன் அந்த நொடி வெட்கப்பட்டான். அவன் வெட்கம் கூட பார்க்க அத்தனை அழகாக இருந்தது. முகத்தை அழுந்தத் துடைத்தவன் அருகே நின்றிருந்த நிலவை அண்ணார்ந்து பார்த்தான்.
“எப்பிடி நான்சி?”
“திரும்பத் திரும்ப அதையே சொன்னா அடிப்பின்னிடுவேன், என்ன விளையாடுறீங்களா?” கோபப்பட்டவளை அருகே இழுத்து நிலத்தில் அவளோடு சரிந்தான் ஜேசன்.
“ஹேய்! நான் எவ்வளவு கற்பனைகளோட கிளம்பி வந்தேன், நீ என்னடான்னா என்னென்னமோ சொல்றே?!”
“ஒரு வாரம் முன்னாடியே தெரியும் ஜே.”
“நான்சி! ஒரு வாரம் முன்னாடியா? ஏன் அப்போ எங்கிட்டச் சொல்லலை?”
“வெண்ணெய் திரண்டு வரும் போது எல்லாத்தையும் போட்டு உடைக்கச் சொல்றீங்களா? நிச்சயமா இந்த மேட்ச் ல உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்னு எனக்கு உறுதியாத் தெரியும், மேட்ச் முடிஞ்சு வரும்போது சொல்லிக்கலாம்னு வெயிட் பண்ணினேன்.”
“அம்மாக்குத் தெரியுமா?”
“ம்ஹூம்… உங்கக்கிட்டச் சொல்லாம வேற யார்கிட்டேயும் சொல்லுற ஐடியா இருக்கலை.” அருகில் கிடந்தபடி கதை பேசியவளின் வயிற்றில் லேசாகக் கை வைத்தான் ஜேசன்.
“இங்கேயா நான்சி?” அவன் வார்த்தைகள் வெல்வெட்டின் மிருதுவோடு வந்து வீழ்ந்தன. நான்சி இப்போது அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். மெதுவாக நகர்ந்து அவள் வயிற்றில் முகம் வைத்தவன் முத்தமும் வைத்தான். அவன் மொத்த உயிரையும் அங்கே வைத்தான்.
“எங்கப்பா மாதிரிப் பொறக்குமா நான்சி?”
“கண்டிப்பா.”
“எங்கப்பா கறுப்பா இருப்பாங்களே!”
“இருக்கட்டுமே ஜே, நம்ம வீட்டுல கறுப்பா ஒரு குழந்தை, உங்கப்பா ஜாடையில, பேர் கூட ராபர்ட் ன்னே வெக்கலாம், ஜேசன் ராபர்ட் எங்கிறது மாறி இப்போ ராபர்ட் ஜேசன், ரொம்ப நல்லா இருக்குமில்லை? ஆன்ட்டி கொஞ்சித் தீர்த்திடுவாங்க.” அவள் கற்பனைகளில் மிதக்க ஒரு வெறியோடு அவளை ஆக்கிரமித்தான் இளையவன்.
“ஜே! என்ன இது? விடுங்க என்னை.” அவள் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அவனாக விலகிய போது பெண் அவன் கன்னத்தில் வலிக்கும் படி அடித்தது.
“இது என்ன முரட்டுத்தனம்?” அவள் கேட்கும்போது அவன் கண்கள் கண்ணீர் சொரிந்தன. ஒரு புன்னகையோடு அவனைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டது பெண். அவன் அழுகைக்கான காரணம் அவளுக்குத் தெரியும். அவள் தந்தை அவனை மறுக்க முதற்காரணமாக அமைந்தது அவன் கறுப்பினக் குடிமகன் என்பதுதானே! இன்றைக்கு அவன் குழந்தை அவள் வயிற்றில். அதையும் இத்தனை ஆசையாசையாக அவள் பெற்றெடுக்க நினைக்கும் போது அவன் உணர்ச்சி வசப்படுவது நியாயம்தானே!
சிறிது நேரம் ஜேசன் எதுவுமே பேசவில்லை. அவள் வயிற்றில் தலை வைத்தபடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவ்வப்போது என்ன நினைத்தானோ, முகம் திருப்பி அந்த வயிற்றில் முத்தம் விதைத்தான். கடைசியாக ஏதோ முடிவுக்கு வந்தவன் போல அவன் எழுந்து உட்கார்ந்த போது நான்சி அவனைப் பார்த்தபடியே இருந்தாள்.
“நான்சி.”
“சொல்லுங்க ஜே.”
“நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.”
“எதுக்கு?”
“ஏய்! என்னடி கேள்வி இது?”
“என்னத் திடீர்னு கல்யாணம்? இதுக்கு முன்னாடி கல்யாணம் வேணாம்னு சொன்னீங்க?”
“நான்சி ப்ளீஸ்… என்னைப் புரிஞ்சுக்கோ, இது பத்தி ஏற்கனவே நாம பேசியாச்சு, நான்… இப்பிடியெல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கலை.”
“இதெல்லாம் நடக்கலைன்னா அப்போ என்னைக் கல்யாணம் பண்ணியிருக்க மாட்டீங்களா?” அவன் மனது தெரிந்தும் அவனைச் சீண்டியது பெண்.
“உன்னைக் கல்யாணம் பண்ணாம வேற யாரைப் பண்ணப் போறேன்? அது ஏதோவொரு கோபம் பொண்ணே! அது கூட உம்மேல இல்லை, இப்போ எதுக்கு நான்சி அதெல்லாம்? நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.”
“சரி பண்ணிக்கலாம், ஆனா ஒரு கண்டிஷன்.”
“கண்டிஷனா? என்ன?”
“நீங்க கோபப்படக்கூடாது.” அவள் எச்சரித்தாள்.
“இல்லை, நீ சொல்லு.”
“கல்யாணத்துக்கு உங்கம்மாவையும் நீங்க இன்வைட் பண்ணணும்.”
“அம்மா இல்லாம எப்பிடி நான்சி? என்னப் பேசுற…” பேசிக்கொண்டே போனவன் அப்போதுதான் அவள் டெய்சியை குறிப்பிடுகிறாள் என்றுணர்ந்து பேச்சை நிறுத்தினான். முகம் இறுகிப் போனது.
“அது நடக்காது நான்சி.”
“அப்போ நம்ம கல்யாணமும் நடக்காது ஜே.”
“நான்சி!” அவன் உறுமினான். ஆனால் அவள் பணிந்து கொடுக்கவில்லை. அவனையே பார்த்தபடி இருந்தாள்.
“எதுக்கு இந்தப் பிடிவாதம் பொண்ணே?” அவன் கேட்டபோது பெண் சிரித்தது.
“பேச்சுக்கூட அம்மா மாதிரியே இருக்கு.”
“அப்பிடின்னா?!”
“மான்செஸ்டர் போனப்போ உங்கம்மாவை நான் மீட் பண்ணினேன் ஜே.”
“ஓ… அந்தம்மா அங்கதான் இருக்காங்கன்னு உனக்கெப்பிடித் தெரியும்?”
“தெரிஞ்சுக்கணும்னு முடிவெடுத்துட்டா இதெல்லாம் ஒரு விஷயமா?”
“…” அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் அவன் முகம் கோபத்தைக் காட்டியது.
“தெரியும், உங்களுக்கு இது பிடிக்காதுன்னு தெரியும், இருந்தாலும் ஒரு ஆவேசம், இவங்க எப்பிடி என்னோட ஜே க்கு இப்பிடிப் பண்ணலாம்னு… அவங்களைப் பார்த்து நல்லா நாலு கேள்வி கேட்கணும்னுதான் போனேன்… ஆனா…”
“என்னாச்சு? ஏதாவது தப்பாப் பேசினாங்களா?” அவன் குரல் இப்போது கடினப்பட்டிருந்தது.
“இல்லையே ஜே… எதுக்கு ஜே அவங்க இவ்வளவு நல்லவங்களா இருக்காங்க?” அவள் கேள்வியில் ஒரு விசித்திரமான பார்வையை அவள் மீது வீசினான் ஜேசன்.
“உனக்கென்ன ஆச்சு நான்சி?!”
“எப்பவுமே அவங்களை ஒரு குற்றவாளியைப் பார்க்கிறதைப் போலவே பார்த்திருக்கீங்க, அவங்க பக்கமும் ஏதாவது நியாயம் இருக்கும்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா?”
“அந்தம்மா பண்ணினதே தப்பு, இதுல அவங்களுக்கு நியாயம் வேறயா?” அந்தக் கோபத்தின் அழகைச் சிறிது நேரம் ரசித்துப் பார்த்திருந்தாள் பெண். அவள் பார்த்தவற்றை, உணர்ந்தவற்றை எவ்வாறு இவனுக்கு விளக்குவது என்று அவளுக்குப் புரியவில்லை. அவனுக்கு அவற்றையெல்லாம் உணர்த்தும் வகையறியாது சிறிது நேரம் தவித்தவள் பிற்பாடு ஆரம்பித்தாள்.
“அவங்க சரியா, தவறான்னு எனக்குத் தெரியலை ஜே, என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்க பக்கமும் ஒருசில நியாயங்கள் இருந்திருக்கு, அது உங்கப்பாக்கும் புரிஞ்சிருக்கு.”
“புல் ஷிட்!” அவன் இன்னும் ஏதேதோ கெட்ட வார்த்தைகள் பேசினான்.
“அவங்கக்கிட்டப் பேசினதுக்கு அப்புறமா வாழ்க்கையைப் பத்தின ஒரு வித்தியாசமான புரிதல் வந்திச்சு, அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம் ஜே.”
“போதும் நிறுத்து நான்சி!”
“இல்லை ஜே, நீங்க புரிஞ்சுக்க மறுத்தாலும் இதுதான் உண்மை, யாரையும் எதுக்காகவும் இனி நான் குத்தம் சொல்லப் போறதில்லை… இன்னைக்கு நான் எங்க வீட்டுக்குப் போயிருந்தேன்.”
“வாட்?!” ஜேசன் இதை எதிர்பார்த்திருக்கவில்லைப் போலும், அதிர்ந்து போனான்.
“அந்த வீட்டுப் படியை என்னோட வாழ்நாள்ல இனிமே மிதிக்கக் கூடாதுன்னு நினைச்சிருந்தேன், ஆனா டெய்சி ஆன்ட்டியை பார்த்ததுக்கு அப்புறமா மனசு மாறிப் போச்சு, எதையும் மறக்கலை… மன்னிக்கவுமில்லை, இதுதான் அவங்களுக்குத் தெரிஞ்ச நியாயம், அந்த நேரத்து நியாயம்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது.” ஒரு தபஸ்வி போல பேசிக் கொண்டிருந்தாள் பெண். பேசும் பெண்ணையே விழியெடுக்காமல் பார்த்திருந்தான் ஜேசன்.
***
இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. அன்றொரு நாள் அவள் கண்ட கனவு இன்றைக்கு நனவாகும் திருநாள். சர்ச் முழு அலங்காரத்தில் மின்னிக் கொண்டிருந்தது. விருந்தினர்கள் சிறிது சிறிதாக வந்த வண்ணம் இருந்தார்கள். அன்றைக்கு ஜேசனுக்கும் நான்சிக்கும் திருமணம். ஆன்டனியும் லியோவும் நிற்க நேரமில்லாமல் பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தார்கள். மலர் அலங்காரம் கண்ணைப் பறித்தது.
சிறிது நேரத்திலெல்லாம் ஆராதனை ஆரம்பமாக அந்த இடமே அமைதியானது. ஃபாதர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த போது ஜேசன் புதுமாப்பிள்ளைக் கோலத்தில் ஆஜராகி இருந்தான். சற்று நேரத்தில் தேவதை போல, கடல் நுரையை அள்ளி ஆடையாக அணிந்தது போலப் பெண் வந்து சேர்ந்தது. அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் மணப்பெண்ணைத் திருமணத்திற்காக சர்ச்சுக்கு அழைத்து வந்தது அவள் தந்தையல்ல, ஆன்டனி!
திருமணம் என்று இருவரும் முடிவு செய்தபிறகு வீட்டிலுள்ள அனைவருக்கும் அதை அடுத்த நாளே ஜேசன் அறிவித்தான். கிரேஸ் மகிழ்ந்து போனார். அதோடு மாத்திரம் நிற்காமல் நான்சியின் பாட்டியை அலைபேசியில் அழைத்துத் தகவல் சொன்னார். முதலில் சம்பிரதாய பூர்வமாக அவர்கள் வழக்கப்படி திருமணத்தை முடிப்பதென்று தீர்மானித்தார்கள். எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு விரைவில் திருமணத்தை நிறைவேற்றவே ஜேசன் முனைந்தான். மறந்தும் அவள் அவனிடத்தில் சொன்ன நல்ல சேதியை யாரிடமும் அவன் சொல்லவில்லை.
மிகவும் முக்கியமான பிரமுகர்கள் மாத்திரமே திருமணத்திற்கென அழைக்கப்பட்டார்கள். இரு குடும்பத்தினர் சகிதம், நான்சியின் நட்பு வட்டமும் ஜேசனின் நட்பு வட்டமும் அழைக்கப்பட்டிருந்தது. மீடியாக்காரர்கள் ஒரு புறம் செய்தி திரட்டக் காத்துக் கிடந்தார்கள். நான்சி தரப்பில் பாட்டியும் அமீலியாவும் மாத்திரமே வந்திருந்தார்கள். தாமஸ் அன்ட் ஃபேமிலி என்ற பெயர் தாங்கிய ஒரு பத்திரிகை தாமஸின் வீட்டுக்கு வந்திருந்தது. ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரை அவருக்கு இப்போது இருப்பது அமீலியா என்னும் பெண் ஒருத்திதான். மேரி எப்போதுமே ஒரு நல்ல தாய் என்பதை விட ஒரு நல்ல மனைவி என்பதால் கணவர் கலந்து கொள்ளாத திருமணத்தில் அவரும் கலந்து கொள்ளவில்லை. அது அவர்களுடைய மகளின் திருமணமாக இருந்த போதிலும்!
கேத்தரின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். ஜேசனின் நண்பர்கள் என்ற ரீதியில் பல பிரபலமான முகங்கள் வந்திருந்ததால் அந்த ஊரே அன்று கொஞ்சம் அமர்க்களப்பட்டது. டெய்சி இவை எவற்றாலும் பாதிக்கப்படாதவர் போல அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தார். பெண்ணின் பிடிவாதத்துக்குக் கடைசியில் ஜேசன் சம்மதம் தெரிவித்திருந்தான். கிரேஸும் நான்சி சொல்வதே சரியென்ற போது அவனால் மறுக்க இயலவில்லை.
“இந்தப் பெண்ணைத் திருமணத்திற்காகக் கொடுப்பவர் யார்?” பாதிரியாரின் கேள்விக்கு பாட்டி எழுந்து நின்றார். அதன்பிறகு அனைத்துச் சடங்குகளும் செவ்வனே நிறைவேறின. மோதிரங்கள் மாற்றப்பட்டன.
“நௌ யூ மே கிஸ் த ப்ரைட்.” அனுமதி வழங்கப்பட்டபோது சபையில் லேசான புன்னகைச் சலசலப்பு. ஜேசன் தன் புத்தம் புது மனைவியின் முகத்தைப் பார்த்தான். வெட்கம் மேலிட அவள் தலையைக் குனிந்த போது சுற்றியிருந்த அனைவரும் சிரித்தார்கள். அவள் வெட்கத்தைப் புரிந்து கொண்டவன் போல அவள் கன்னத்தில் இதழ் பதித்தான் மணமகன்.
“ஓ நோ!” அழகானதொரு காதல் காட்சி தவறிப்போனதில் சபை மிகவும் வருத்தப்பட்டது. ஜேசன் வாய்விட்டுச் சிரிக்க இனிதே அந்த நிகழ்வு நிறைவு பெற்றது. டெய்சி அப்போதே விடைபெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார்.
பாட்டியும் அமீலியாவும் கூட அதிகம் தாமதிக்காமல் சென்றுவிட்டார்கள். வந்திருந்த நண்பர்களுக்கு ஜேசன் தடபுடலாக விருந்து வைத்திருந்தான்.
எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு அனைவரும் வீடுவந்த போது மாலை ஏழு மணி. கேத்தரினின் குரல் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த நீண்ட வெண்ணிற ஆடையோடு படியேறிய நான்சி லேசாகத் தடுமாற அவளைச் சட்டென்று தாங்கிக் கொண்டான் ஜேசன்.
“ஐயோ! பார்த்து நான்சி!” ரூமுக்குள் செல்வதற்காகத் திரும்பிய கிரேஸ் மகனின் பதட்டத்தில் சட்டென்று திரும்பிப் பார்த்தார். ஒரு கை மனைவியை அணைத்திருக்க அவனது இன்னொரு கை நான்சியின் வயிற்றில் இருந்தது.
இந்தக் காட்சியைக் கண்ட தாயின் நெற்றி சுருங்கியது. பிடிபட்ட உணர்வில் நான்சி தலையைக் குனிந்து கொண்டாள். அம்மா தங்களைப் பார்த்துவிட்டார் என்று புரிந்துகொண்ட மகனும் பார்வையை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டான். மகனின் திடீர் மனமாற்றத்திற்கான காரணம் பிடிபட கிரேஸ் எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டார்.
“ஜே…” நான்சி இப்போது பதறினாள்.
“எப்ப இருந்தாலும் தெரிய வேண்டியதுதானே, விடு… அவங்க சந்தோஷந்தான் படுவாங்க பொண்ணே!” மனைவிக்குச் சமாதானம் சொன்னவன் அதற்கு மேலும் அவளைக் கஷ்டப்பட விடாமல் கைகளில் அள்ளிக் கொண்டான். எப்போதும் அவள் அறைக்கு அவன் செல்வதுதான் வழக்கம். ஆனால் இன்றைக்கு அவன் அறைக்கு அவள் அழைத்துவரப்பட்டிருந்தாள்.
“ஜே… நான் சேஞ்ச் பண்ணணும்.”
“இங்கேயே பண்ணலாம்.” அவன் வார்ட்ரோப்பை திறக்க அவள் ஆடைகள் அங்கேயே இருந்தன. அதிலொன்றை அவன் எடுத்து நீட்ட துரிதமாகக் குளியலை முடித்தவள் உடைமாற்றிக் கொண்டு வந்தாள். மிகவும் களைப்பாக உணர்ந்தாள்.
“ஆர் யூ ஓகே பேபி?”
“கொஞ்சம் டயர்டா இருக்கு ஜே.”
“எங்கிட்ட வாடா.” என்றவன் அவளைத் தன்னருகே அழைத்து மடியில் கிடத்திக் கொண்டான். அன்றைய வானிலை மிகவும் நன்றாக இருந்ததால் அறையின் ஜன்னல்களை ஜேசன் ஏற்கனவே திறந்து வைத்திருந்தான். மெல்லிய பூங்காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. மனைவியின் தலையை வருடிக் கொடுத்தான் ஜேசன்.
“ஜே…”
“ம்…”
“தூங்கலையா?”
“ம்ஹூம்…”
“ஏன்?”
“ஏன்னா… இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்.” சொல்லிவிட்டு அவளிடம் நன்றாக நான்கு அடிகள் வாங்கினான் ஜேசன்.
“இந்தக் குசும்புதானே வேணாங்கிறது!”
“தூக்கம் வரலைம்மா.” என்றான் இப்போது அவன் செய்கைக்கு விளக்கம் போல.
“ஏன் ஜே?”
“கடந்து போன காலங்களைப் பத்திச் சிந்திக்கிறேன்.”
“ம்… வாழ்க்கையில இந்த நான்சியை சந்திக்காமலே போயிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்னு தோணுதா?” கேட்டவளை ஒரு புன்னகையோடு இழுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
“எனக்கப்போ பத்து வயசு, நடக்கிறது என்னன்னு சரியாப் புரிஞ்சுக்கக்கூடத் தெரியாத வயசு, என்னோட உலகத்துல பாதி சட்டுன்னு காணாமப் போச்சு… அப்பா தாங்கிக்கிட்டாரா ? இல்லை… தாங்கின மாதிரி நடிச்சாரான்னு எனக்குத் தெரியலை, ஆனா நான் நொறுங்கிப் போயிட்டேன், எனக்கப்போ இருந்த ஒரே ஆறுதல் நீ மட்டுந்தான் பேபி.”
“பத்து வயசிலேயா?! அப்பவே உங்களுக்கு என்னைத் தெரியுமா? எனக்கப்போ எத்தனை வயசிருக்கும்?”
“ஆறேழு வயசுன்னு நினைக்கிறேன், ஜேசன் ஜேசன்னு என்னோடயே இருப்ப, நீ என்னை ‘ஜே’ ன்னு கூப்பிடும்போது கேட்க அவ்வளவு அழகா இருக்கும்… தொலைஞ்சு போன என்னோட அம்மாவை நான் உனக்குள்ள அன்னைக்குத் தேடியிருக்கணும்னு இப்பத் தோணுது நான்சி.”
“ம்…” நான்சி அவன் தாடையில் அழுத்தமாக முத்தம் வைத்தாள். ஏதோ சிந்தனையில் பேசிக் கொண்டிருந்தவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“ஃபுட்பால்தான் என்னோட இலக்குன்னு அப்பா அதுக்கப்புறம் கண்டுபிடிச்சுட்டாங்க, வாழ்க்கை வேகமாப் போக ஆரம்பிச்சிடுச்சு, நீயும் வேகமா வளர ஆரம்பிச்சுட்டே, என்னோட காதலும் உங்கூடவே வளர ஆரம்பிடுச்சு.”
“எனக்கு இன்னும் ஞாபகமிருக்கு ஜே, முதல் முதலா நீங்க உங்களோட லவ்வை எங்கிட்டச் சொன்ன நாள்.”
“ஆமா… பயந்து பயந்துதான் சொன்னேன், எங்க நீ என்னை மறுத்திடுவியோன்னு பயம்! உன்னோட நட்பு வட்டம் எவ்வளவு தூரம் என்னோட பின்னணியைக் கேவலமா வர்ணிக்கும்னு எனக்குத் தெரியும் நான்சி.”
“ஆனா நான் அப்பிடியில்லையே ஜே?!”
“அது எனக்கும் தெரியும்டா, இருந்தாலும் ஒரு பயம், நீ கொஞ்சம் ஒதுங்கி ஒதுங்கிப் போனப்போ பயம் வந்திச்சு.”
“அது… அது அப்பிடியில்லை ஜே, சின்னப் பொண்ணா இருந்தப்போப் புரியாதது கொஞ்சம் வளர்ந்ததும்… ஒரு மாதிரியான கூச்சம்… உங்களை நெருங்க முடியாம…” அவள் தடுமாறினாள்.
“பின்னாடி புரிஞ்சுதுடா, ஆனா அப்போப் பயப்பிட்டேன், எங்க நான்சி நம்மளை மறுத்திடுவாளோன்னு.” அவனை அண்ணார்ந்து பார்த்து அவன் கழுத்தை வளைத்தவள் அந்த இதழ்களில் இதழ் பதித்தாள்.
“இந்த கம்பீரத்தையா?!” அவள் குரல் கிசுகிசுப்பாகக் காதல் சொன்னது. அவள் மென்மையாகச் செய்ததை அவன் இப்போது வன்மையாகச் செய்தான்.
“என்னோட எல்லாக் கவலைகளையும் நீ தவிடு பொடியாக்கினே, நீ முதல் முறையாச் சம்மதம் சொன்னப்போ நான் அப்பிடியே பறந்தேன் பொண்ணே!”
“அப்பிடியே என்னை விட்டுட்டுப் பறந்து லண்டனுக்கும் போயிட்டீங்க.” அவள் குறைப்பட்டாள்.
“நான் என்னடா பண்ணட்டும்? என்னோட நிலைமை அப்பிடி.”
“புரியுது ஜே, எங்கேயாவது ஒரு ஹெலிகாப்டர் சத்தம் கேட்டுட்டா மனசு கிடந்து அடிச்சுக்கும், இது ஜேயா இருக்கக் கூடாதான்னு.”
“அவ்வளவு ஆசை மனசுல இருந்துச்சில்லை? அதுக்கப்புறமும் ஏன் நான்சி அவ்வளவு விலகல்?”
“அது…”
“கூட இருக்கிற பசங்க ஒவ்வொன்னாச் சொல்லும் போது மனசு கிடந்து ஏங்கும், இத்தனைக்கும் அவங்களோட அந்த உறவுகள் நிரந்தரமில்லை, ஆனா எனக்கு நீ அப்பிடியா? வாழ்க்கை முழுசுக்கும் நீதானே! நீ எதுக்கு என்னைவிட்டுத் தள்ளியே நின்னே?”
“ஜே… அது…”
“அவ்வளவு நாள் கழிச்சு வரும்போது அப்பிடியே அள்ளிக்கலாம் போலத் தோணும், ஆனா நாலடி தள்ளி நிற்கிற பொண்ணை என்னப் பண்ணுறது சொல்லு?”
“சாரி…” அவள் சொல்ல அவன் சிரித்தான்.
“எம்பின்னாடி அத்தனைப் பொண்ணுங்க, என்னைத் திரும்பிப் பார்க்க வைக்க அவங்க என்னெல்லாம் பண்ணுவாங்கன்னு சொன்னா நீ மிரண்டிடுவே! ஆனா என்னோட மனசு ஒருத்திக்குப் பின்னால மட்டுந்தான் ஓடிச்சு, உலகத்துலேயே சொர்க்கத்தை எனக்குக் காட்ட எத்தனையோ பேர் துடிச்சாங்க, ஆனா என்னோட மனசு அவ எனக்கொரு முத்தம் குடுக்கமாட்டாளான்னு கிடந்து தவிச்சுது.” அவன் வாக்குமூலம் கேட்டு அவள் முகத்தில் அத்தனைப் பெருமிதம்!
“குடுக்காம இல்லையே… ஒருவாட்டி…”
“அடியேய்! உன்னை…” மார்போடு கிடந்தவளைக் கட்டிலில் தள்ளியவன் கொஞ்ச நேரம் அவளை வாட்டி வதைத்தான்.
“யானைப் பசியில இருந்தவனுக்கு நீ சோளப்பொரி குடுக்கிறியா? நீ அனுமதிச்ச அந்த ஒரேயொரு முத்தத்துக்கு அப்புறமாத்தாண்டி நான் தினமும் செத்துச் செத்துப் பிழைச்சேன்.”
“ம்… தெரியுமே, அதான் அன்னைக்குச் சொன்னீங்களே, அது வரமில்லை சாபம்னு.”
“இந்தத் தேவதையோட வரத்துக்காக நான் காத்திருந்தேன், ஆனா என்னோட தலைல இடிதான் விழுந்திச்சு!”
“…” அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான் ஜேசன். பெண்ணும் மௌனமாக இருந்தது இப்போது.
“இருந்தாலும், கல்யாணத்துக்கு அவரையும் நீ கூப்பிட்டிருக்கலாம் நான்சி, நீ கூப்பிட்டிருந்தா அவர் ஒருவேளை வந்திருப்பாரு.”
“அது மட்டும் இந்த ஜென்மத்துல நடக்காது ஜே.”
“வார்த்தைகளை விடாத நான்சி, நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்குத் தெரியாது.”
“இது உங்களுக்குப் புரியாது ஜே, இது என்னோட வலி, என்னோட உயிர் இருக்கிற வரைக்கும் எம்மனசை அரிச்சுக்கிட்டு இருக்கிற வேதனை இது!”
“மன்னிச்சிடலாம் நான்சி.”
“மறக்கலாம்… நான் மறந்திட்டேன், இல்லைன்னா அந்த வீட்டு வாசலை நான் மிதிச்சிருக்கமாட்டேன், அது அவரோட நியாயம், நான் ஏத்துக்கிறேன், ஆனா எம்மேலயே எனக்கு ஒருசில கோபங்கள் இருக்கு ஜே.” சொன்ன பெண்ணை அவன் கேள்வியாகப் பார்த்தான்.
“வேணாம் விடுங்க.”
“சொல்லும்மா, மனசுவிட்டு எங்கிட்டப் பேசு.”
“காதலிக்கத் தெரிஞ்ச எனக்கு அந்தக் காதலைக் காப்பாத்திக்கத் தெரியலையே!”
“ஏய்! உன்னால என்னப் பண்ணியிருக்க முடியும்?!”
“நான் ஏதாவது பண்ணியிருக்கணும் ஜே, என்னால முடிஞ்ச ஏதோ ஒன்னு, வீட்டுல கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சதுமே நான் முடிவெடுத்திருந்தேன், அதை உங்கக்கிட்டச் சொல்லக் கூடாதுன்னு, என்னால என்னோட வீட்டைச் சமாளிக்கிற தைரியம் இருந்துச்சு, என்னைத் தாண்டி எதுவும் நடக்காதுன்னு நான் உறுதியா நம்பினேன், ஆனா அதுக்குள்ள…”
“உங்க வீட்டுமேல ஒரு கண்ணை வெச்சுக்கச் சொல்லி லியோக்கிட்டச் சொல்லியிருந்தேன், நியூஸ் கிடைச்சதும் டென்ஷன் ஆகிடுச்சு, நீ என்னப் பண்ணுவியோ? துடிச்சுப் போயிடுவியோன்னு பயம், உன்னை எப்பிடியாவது காப்பாத்தணும்னு தோணுச்சே தவிர, இந்தளவுக்கு உன்னைச் சுத்தியிருக்கிறவங்க இறங்குவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை.” நான்சியின் கண்களிலிருந்து இப்போது கண்ணீர் வழிந்தது.
“ஹேய்! ஃபர்ஸ்ட் நைட்ல யாராவது அழுவாங்களா? அதுவும் இந்த மாதிரி நேரத்துல?” அவன் கை அவள் வயிற்றைத் தடவிக் கொடுத்தது.
“அதுக்குக் காரணம் அந்த ஸ்டீவ், அவனுக்கு அவன் பெரிய ரோமியோன்னு நினைப்பு, அடிக்கடி வீட்டுக்கு வருவான், எங்க வீட்டு மனுஷனும் அதுக்கு ஜால்ரா அடிப்பாரா… அவனுக்கு!” அவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
“நான்சி! என்ன இது? எதுக்கு நீ இப்போ இப்பிடியெல்லாம் கோபப்படுறே? இந்தப் பேச்சே வேணாம் விடு.”
“இல்லை ஜே, நிறைய நாள் நான் அழுதிருக்கேன், இப்பிடிக் கையாலாகாத பொண்ணா இருக்கோமேன்னு வருத்தப்பட்டிருக்கேன், என்னை அப்பிடி வளர்த்துட்டாங்க, வீட்டுல அமீ அவ்வளவு ஃப்ரீயா பேசுவா, அவளுக்குத் தேவையானதைச் சாதிச்சுக்குவா, ஆனா நான் அப்பிடியில்லை, என்னோட கல்யாணத்துக்கு எதிர்ப்புச் சொல்ல மட்டுந்தான் எனக்குத் துணிச்சல் இருந்துச்சு, பதினெட்டு வயசு தாண்டினதுக்கு அப்புறம் கூட உங்களுக்குச் சாதகமா எதுவும் பண்ணத் தைரியம் வரலை, அழ மட்டுந்தான் தெரிஞ்சுது.”
“இல்லைம்மா, நீ சின்னப் பொண்ணு, பாதுகாப்பான ஒரு கூட்டுக்குள்ள அழகா வாழ வேண்டிய பொண்ணு, எனக்கு அப்பிடியொரு ஐடியா இருந்திருந்தா என்னோட லாயர் மூலமா நான் உன்னை நெருங்கியிருக்க முடியும், கேஸ் நடந்தப்போதான் நீ மைனர், ஒரு மாசத்துக்கு அப்புறமா நீ எதுவும் பண்ணியிருக்கலாம், ஆன்டனியும் லியோவும் உன்னை கைட் பண்ணியிருப்பாங்க, ஆனா என்னோட நான்சி போலீஸ் ஸ்டேஷன், கோட், கேஸ் ன்னு அலையணுமா சொல்லு?”
“ஜே!” வெடித்து அழுத பெண்ணைக் கட்டி அணைத்துக் கொண்டான் ஜேசன்.
“அழக்கூடாது பொண்ணே! எதுக்கு அழுறே? அதான் நான் இழந்தது எல்லாத்தையும் திரும்ப எனக்குக் குடுத்துட்டயே! இதுக்கப்புறமும் என்ன அழுகை?”
“இது குற்றவுணர்ச்சி ஜே.”
“தேவையில்லைடா.”
“ஜே எம்முன்னாடி திரும்ப வந்து நின்னப்போ சாஸ்திரம், சம்பிரதாயம், கலாச்சாரம் எல்லாம் தூள் தூளாப் போச்சு, என்னோட ஜே சந்தோஷமா இருக்கணும், அவருக்கு இனி சந்தோஷம் மட்டுந்தான் கிடைக்கணும்னு ஒரு வெறியே வந்துச்சு.”
“அதுக்காக இப்பிடித்தான் எல்லாத்துக்கும் ஒத்துக்குவாங்களா? ரெண்டு அடி அடிச்சுப் புரிய வெச்சிருக்கலாமில்லை?”
“அப்போ எப்பிடி உங்க அப்பாவை உங்களுக்குத் திரும்பக் குடுக்கிறது?”
“நான்சி!” இப்போது அவன் திகைத்துப்போனான்.
“இந்த வீட்டுக்கு நான் வந்தப்போ என்னோட அப்பா எங்க நான்சின்னு நீங்க கேட்ட அந்த நொடி நான் முடிவெடுத்துட்டேன், நீங்களா என்னோட ரூமுக்கு வராமப் போயிருந்தாலும்… நான் இங்க வந்திருப்பேன் ஜே.”
“நான்சி!” அவன் முரட்டுத்தனத்தைச் சிறிது நேரம் அனுமதித்தது பெண். கொத்தாய் அவன் தலையைப் பிடித்து நிமிர்த்தி முகம் பார்த்தவள்,
“நீங்க சந்தோஷமா இருந்தீங்களா ஜே? என்னால உங்களைச் சந்தோஷமா வெச்சிருக்க முடிஞ்சுதா ஜே?” என்றாள் ஆர்வமாக.
“அந்த சந்தோஷத்துக்காக அஞ்சு வருஷமென்ன? அம்பது வருஷம் ஜெயில்ல கிடக்கலாம்டி.”
“ஓஹோ! ஐயா நெல்சன் மண்டேலா பரம்பரையோ?!” அவன் இப்போது சிரித்தான். அழகாகச் சிரித்தான்!
“போதும் பேபி.”
“இப்பிடிக் கொஞ்சிக் கொஞ்சியே பேபி வரைக்கும் கொண்டுவந்துட்டீங்க.”
“உங்க ஐடியாவும் அதானே? ஆனா… கொஞ்சம் லேட்டாகி இது நடந்திருக்கலாம்.”
“ஏன் ஜே?”
“பிட்ச் ல இன்னைக்கு ரெண்டு கேம் விளையாடி இருக்கலாம்.” என்றான் அவன் சோகமாக.
“இப்பவும் உங்களை விளையாட வேணாம்னு யாரு சொன்னது?” அவள் அனுமதியில் அவன் கிறங்கிச் சிரித்தான்.
“இந்த முகத்துல இன்னைக்கு எவ்வளவு அசதி தெரியுது தெரியுமா? காலைல எந்திரிச்சதும் உங்க ஆன்ட்டி வேற போலீஸ் மாதிரி விசாரிக்கப் போறாங்க.”
“ஐயையோ! கண்டுபுடிச்சுட்டாங்களா ஜே?”
“ம்… அப்பிடித்தான் நினைக்கிறேன், என்னை அறியாமலேயே உன்னோட வயித்துல கையை வெச்சுட்டேன், அதை அம்மா கவனிச்சாங்க.”
“ஏன் ஜே அப்பிடிப் பண்ணினீங்க?” அவள் சிணுங்கினாள். அவள் கண் பார்த்துச் சிரித்தவன் அந்த வயிற்றில் இதழ் பதித்தான். தன் மொத்த உயிரையும் விதைத்தான்.
“இதைத்தாண்டி இப்ப வேற எதையுமே யோசிக்கத் தோணலைப் பொண்ணே! உன்னை விட்டுட்டு இனி என்னால எப்பிடி லண்டன் போக முடியும்? எப்பிடி விளையாட முடியும்?”
“கொன்னுடுவேன் ஜே! மரியாதையா ரெண்டு நாள் கழிச்சுக் கிளம்பிடணும்.”
“ம்… நீயும் எங்கூட வர்றியா?”
“எல்லாரும் போலாம் ஜே.” அவள் வார்த்தைகளில் உற்சாகமாகத் தலையை ஆட்டியவன் அவள் வயிற்றை ஒட்டித் தலையைச் சாய்த்தபடி உறங்கிப் போனான். நான்சி வெகுநேரம் வரை அவன் தலையை வருடிய படியே கண் விழித்திருந்தாள்.
“ஜே… எத்தனை இனிமையான மனுஷன் நீங்க!” அவளையும் அறியாமல் அவள் வாய் முணுமுணுத்தது.
“என்ன பேபி?” தூக்கக் கலக்கத்தில் கூட அவள் குரலுக்கு அவன் பதில் சொன்னான்.
“ஒன்னுமில்லை ஒன்னுமில்லை… நீங்கத் தூங்குங்க.” அவனை அவள் மெதுவாகத் தட்டிக் கொடுக்க அவன் மீண்டும் உறங்கிப் போனான். மனது நிறைந்து போகப் பெண்ணும் கண்ணயர்ந்தாள்.
‘வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள்தான்!’ எங்கோ, எப்போதோ படித்தது அவளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது!