siraku06

siraku cp-14d79587

siraku06

சிகு 06

டாக்டரை பார்த்துவிட்டு அப்போதுதான் வீடு வந்திருந்தாள் அஞ்சனா. வீடு என்றால், அவள் அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள். அன்றைக்கு லீவு சொல்லிவிட்டு அபியும் அவளோடு கூடவே இருந்தாள். அம்மாவும் அப்பாவும் ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தார்கள். இருந்தாலும் கூட இருந்த நட்பு அவளுக்குப் பேருதவியாக இருந்தது. 
 
அதிலும் அபிநயா ஒரு டாக்டர் என்பதால் சடசடவென அனைத்து வேலைகளையும் முடித்தாள். முதலில் டாக்டரை பார்த்தார்கள். லதா இவர்களைப் பார்த்த பார்வையிலேயே அஞ்சனா யார் என்பது அவருக்குச் சர்வ நிச்சயம் என்று அபி புரிந்து கொண்டாள். உடனேயே அவள் ஷியாமைத்தான் அழைத்தாள்.
 
“என்ன சீனியர், டாக்டர் பேபியை அந்தப் பார்வைப் பார்க்கிறாங்க? விஷயத்தைப் போட்டு உடைச்சிட்டீங்களா?”
 
“ம்…”
 
“ஏன் சீனியர்? ஏன் இப்பிடிப் பண்ணினீங்க?” அவள் குரலில் அதிருப்தி.
 
“அபிநய சுந்தரி! உங்க பேபி இப்பிடித் திடீர்னு வந்து தொபுக்கடீர்னு என்னோட வாழ்க்கையில திரும்பக் குதிப்பாங்கன்னு எனக்குத் தெரியாது, எப்பவோத் தெரியாத்தனமா உளறினது, அந்தம்மா அதை அநியாயத்துக்கு இன்னும் ஞாபகம் வெச்சிருக்கு!”
 
“ஓ…”
 
“எங்க உங்க பேபி?”
 
“டாக்டர் கூட இருக்கா… சீனியர்…” அபியின் குரல் இப்போது நடுங்கியது.
 
“சொல்லும்மா.”
 
“எனக்கு ரொம்பப் பயமா இருக்கு, என்ன நடக்கப் போகுதுன்னு நினைச்சாலே பக்கு பக்குங்குது.”
 
“நத்திங் டு வொர்ரி, எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.”
 
“அப்பிடின்னா?!”
 
“முதல்ல ரிசல்ட் வரட்டும், அதுக்கப்புறம் என்னப் பண்ணுறதுன்னு உட்கார்ந்து யோசிக்கலாம்.”
 
“ம்…” மனதுக்குள் எத்தனைச் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அபிக்கு லேசான உதறல் இருக்கத்தான் செய்தது. அன்றைக்கு முழுவதும் அலைந்து திரிந்தது மிகவும் சோர்வைக் கொடுக்க வீட்டுக்கு வந்தவர்கள் ஓய்வெடுத்தார்கள்.
 
“அபிம்மா, ரொம்ப நன்றி.” கோவிந்தராஜன் எழுந்து நின்று கரம் கூப்ப அபிநயா பதறிப் போனாள்.
 
“அங்கிள்! என்னப் பண்ணுறீங்க நீங்க?!”
 
“இல்லைம்மா…” அதற்குமேல் பேச இயலாமல் அவர் தொண்டை அடைத்துக் கொண்டது. ஆனால் அஞ்சனாவின் அம்மா மிகவும் திடமாகத்தான் இருந்தார். புருஷோத்தமன் தன் மனைவியோடு அன்று வீட்டிற்கு வந்திருந்தான். இவர்கள் எல்லோரும் ஹாஸ்பிடல் போவதால் வீட்டைக் கணவனும் மனைவியும் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் வந்ததும் வராததுமாக அண்ணி பரிமாற உண்டுவிட்டு இளைப்பாறினார்கள். அபியை அவள் வீட்டிற்குப் போக அஞ்சனா அனுமதிக்கவில்லை.
 
“கொஞ்ச நேரம் எங்கூடவே இரு அபி, எனக்கு நீ எங்கூடவே இருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு.”
 
“ஓகே பேபி, நீ நல்லா ரெஸ்ட் எடு, நான் எங்கேயும் போகலை.” இவளைத் தூங்கச் செய்துவிட்டு அண்ணி ரம்யாவோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள் அபி. மகள் வீட்டிற்கு வந்திருக்கும் சந்தோஷத்தில் அம்மா வடைக்கு அரைத்துக் கொண்டிருந்தார்.
 
“ரம்யா.”
 
“என்னத்தை?”
 
“பாயாசம் பண்ணலாம்மா, எம் புள்ளைங்க ரெண்டு பேருக்கும் புடிக்கும்.”
 
“பண்ணிட்டாப் போச்சு.” மூன்று பெண்களும் சேர்ந்துகொள்ளச் சமையலறை அமர்க்களப்பட்டது. நன்றாக உறங்கி ஆறு மணிபோல கண்விழித்தாள் அஞ்சனா. வீடெங்கும் வடை, பாயாசம் என பட்சண வாசம். ஏலக்காய் கமகமத்தது.
 
“என்னங்கய்யா நடக்குது இங்க?!”
 
“கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் ப்ரமாதம்…” சமையல் கட்டுக்குள் நுழைந்த அஞ்சு ஆச்சரியப்பட வடை ஒரு கையில், பாயாசம் மறு கையில் என அமர்ந்திருந்த அபிநயா பாடினாள்.
 
“நான்தான் அப்போ மிஸ் பண்ணிட்டேனா? செமையா என்ஜாய் பண்ணியிருக்கீங்கப் போல?”
 
“இந்தா அஞ்சு.” அம்மா நீட்டியதை வாங்கிக் கொண்டது பெண். வெளியே சென்றிருந்த ஆண்களும் வீடு வந்து சேர்ந்துவிட எல்லோரும் ஹாலில் கூடினார்கள். கொஞ்ச நேரம் பேச்சு கலாட்டாவாக இருந்தது. அனைவரும் உண்டு முடிக்கும் வரை அஞ்சனா எதுவுமேப் பேசவில்லை. எல்லாம் ஓய்ந்த பிற்பாடு வாயைத் திறந்தாள்.
 
“அப்பா…”
 
“சொல்லும்மா அஞ்சு.” மகளைப் பார்த்த அப்பாவின் பார்வையில் அத்தனைக் கனிவு. தேவதை போல பெண், இவள் வாழ்க்கை இப்படி ஆகியிருக்க வேண்டாம் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.
 
“நான் நேத்துச் சொன்னதுதான் ப்பா, நான் ஒருசில முடிவுகள் எடுத்திருக்கேன், அதை உங்க எல்லார்கிட்டயும் இப்போப் பேசுறது நல்லதுன்னு தோணுது.”
 
“ம்…”
 
“ரிசல்ட் எப்பிடி வரும்னு எனக்குத் தெரியாது…”
 
“அது நல்லதாத்தான் வரும் பேபி, பாஸிட்டிவ்வா மட்டுமே யோசி.” நண்பியை இடைமறித்தாள் அபி. இப்போது அஞ்சனா சிரித்துக் கொண்டாள்.
 
“எப்பிடி வந்தாலும் எனக்குச் சந்தோஷந்தான் அபி, அதை நினைச்செல்லாம் நான் வருத்தப்படப் போறதில்லை.”
 
“…” இப்போது அங்கே யாரும் எதுவும் பேசவில்லை. அசாத்திய அமைதி நிலவியது.
 
“ரெண்டு விஷயந்தான், ஒன்னு… எனக்குக் கொழந்தைப் பொறக்க வாய்ப்பிருக்கு, ரெண்டாவது… அதுக்கான வாய்ப்பில்லைங்கிறது… இதுல எந்த முடிவை ஆண்டவன் குடுத்தாலும் அதை நான் சந்தோஷமா ஏத்துக்குவேன், அதுக்கு முன்னாடி… எம் புருஷன்கிட்ட இருந்து எனக்கு டைவர்ஸ் வேணும்.”
 
“அஞ்சனா!” பதறியபடி எழுந்தான் புருஷோத்தமன். அவனைத் தவிர மற்றைய அனைவரும் நிதானமாகத் தன் முடிவுகளை அறிவித்துக் கொண்டிருக்கும் பெண்ணை எந்தச் சலனமும் இன்றிப் பார்த்திருந்தார்கள்.
 
“நீ மேல சொல்லும்மா.” இது அப்பா.
 
“என்னப்பா நீங்க? அவதான் ஏதோப் புரியாமப் பேசிக்கிட்டு இருக்கான்னா நீங்களும் ஏதோக் கதை கேட்கிற மாதிரிக் கேட்டுக்கிட்டு இருக்கீங்க?”
 
“நீ கொஞ்ச நேரம் அமைதியா உட்காரு புருஷோத்தமா, அவ இன்னும் பேசி முடிக்கலை.”
 
“அப்பா நீங்க என்…”
 
“ஷ்… அமைதியா இரு, நீ சொல்லும்மா.” மகனை அடக்கிவிட்டு மகளிடம் திரும்பினார் அப்பா.
 
“ஒருவேளை எனக்குக் கொழந்தைப் பொறக்க வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாங்கன்னா… நான் பழையபடி வேலைக்குப் போலாம்னு நினைக்கிறேன், வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா எனக்குப் பைத்தியம் புடிச்சிடும், என்னால இனி நாலு சுவருக்குள்ள நாலு மனுஷங்களுக்குச் சமைச்சுக் கொட்டிக்கிட்டு என்னோட சுயத்தைத் தொலைச்சிட்டு வாழ முடியாது.”
 
“கொழந்தைப் பொறக்கும்னு சொல்லிட்டா? நீ பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்டுன்னு சொல்லிட்டா?” ஆர்வத்தோடு கேட்டாள் அபிநயா.
 
“எனக்கொரு கொழந்தை வேணும், எந்தக் காரணத்துக்காக அந்த மதிவதனி என்னைப் புறக்கணிச்சாங்களோ அவங்களுக்கு முன்னாடி நான் என்னோட கொழந்தையோட வாழ்ந்து காட்டணும்.”
 
“சபாஷ்டி பொண்ணே! அப்பிடிச் சொல்லு!” இது அண்ணி.
 
“நான் ‘ஐவிஎஃப்’ பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.” நிறுத்தி நிதானமாகச் சொன்னது பெண்.
 
“எதுக்கு அதெல்லாம்? நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ அஞ்சனா, அப்பிடியென்ன வயசாகிப் போச்சு உனக்கு?”
 
“ரம்யா! என்னப் பேசுறே நீ?!” நாத்தனாருக்கு வழி சொல்லிக் கொடுத்த மனைவிமேல் பாய்ந்தான் புருஷோத்தமன்.
 
“ஏன்? ரம்யா அப்பிடி என்னத்தைத் தப்பாச் சொல்லிட்டான்னு நீ இப்போ பாயுறே? அம்மா அம்மான்னு அம்மா முந்தானையைப் புடிச்சிக்கிட்டு நீயும் அலைஞ்சா நாளைக்கு என்னோட மருமகளுக்கு நானே முன்ன நின்னு இன்னொரு கல்யாணம் பண்ணி வெப்பேன், மருமகளுக்குப் பண்ண நினைக்கிற நான் மகளுக்குப் பண்ண மாட்டேனா?” அம்மாவின் வார்த்தைகளில் புருஷோத்தமன் ஆடிப்போய்விட்டான். கணவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ரம்யா தொடர்ந்தாள்.
 
“அஞ்சனா, இப்பதான் உனக்கு முப்பது வயசு, பார்க்க அவ்வளவு அழகா லட்சணமா இருக்கே, நாளைக்கே ஒரு நல்ல ஜாப்ல உட்கார்ந்தா கை நிறைய சம்பாதிக்கப் போறே, எதுக்குத் தயங்கிறே நீ? உனக்கெதுக்கு ஐவிஎஃப்? ஜாம் ஜாம்முன்னு நல்லப் பையனாப் பார்த்துக் கல்யாணத்தைப் பண்ணிக்கோ, அத்தை மாமா ஓகேன்னு ஒரு வார்த்தைச் சொல்லட்டும், உனக்கு நான் மாப்பிள்ளைப் பார்க்கிறேன்.” அண்ணியின் ஆர்ப்பரிப்பில் பெண் சிரித்தது. ரம்யாவின் வார்த்தைகளில் அந்த வீட்டிலிருந்த அத்தனைப் பேரும் ஆச்சரியப்பட்டார்கள். இப்படியொரு அண்ணி யாருக்குக் கிடைக்கும்?!
 
“அண்ணி சொல்றது சரிதானே பேபி? நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாது? அங்கிள், நீங்க என்ன சொல்றீங்க?” கேள்வி கோவிந்தராஜன் மேல் எறியப்பட இப்போது ஒட்டுமொத்த வீடே அவரைத் திரும்பிப் பார்த்தது.
 
“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, எம் பொண்ணோட சம்மதம், அவளோட நிம்மதி இதெல்லாம்தான் எனக்கு இப்போ முக்கியம்.” அப்பாவின் பதிலில் ஆச்சரியப்பட்டது புருஷோத்தமன் மாத்திரமே. அஞ்சனா இப்போது மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
 
“அண்ணி… இன்னொரு மனுஷன், இன்னொரு வாழ்க்கை… இதையெல்லாம் என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை.”
 
“உம் புருஷனை மனுஷன் லிஸ்ட்லயா இன்னும் நீ வெச்சிருக்கே? அவரை அந்த லிஸ்ட்ல இருந்து நாங்கெல்லாம் தூக்கி ரொம்ப நாளாச்சு.” இது ரம்யா. அஞ்சனாவிடமிருந்து பெருமூச்சொன்று கிளம்பியது.
 
“போதும் அண்ணி… என்னால இன்னும் இன்னும் கஷ்டப்பட முடியலை, நாளைக்கே ஒரு நல்ல லாயரா பார்த்து மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கப் போறேன்.”
 
“அஞ்சு, இன்னும் ரெண்டு நாள் நல்லா யோசிக்கலாம்டா, உனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லைன்னு ரிப்போர்ட் வந்திடுச்சுன்னா மாப்பிள்ளையோட மனசு மாறிடும், அவங்கம்மாவை நீ கண்டுக்காதே, ஒரு கொழந்தைப் பொறந்திடுச்சுன்னா அவங்க வாய் தானா மூடிடும்.”
 
“இல்லைண்ணா, என்னோட வலி என்னன்னு உனக்குப் புரியலை, கடந்த அஞ்சு வருஷமா என்னையே தொலைச்சிட்டு ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன், ஏதோவொரு கட்டத்துல எனக்கும் அந்த மனுஷன் முக்கியத்துவம் குடுப்பாருன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்தே அஞ்சு வருஷம் கடந்து போயிடுச்சு, இனியும் என்னோட இளமைக் காலத்தை வீணடிக்க நான் விரும்பலை.”
 
“ஊர் உலகம் உன்னைத்தான் தப்பாப் பேசும்மா.”
 
“பேசட்டும் ண்ணா, நான் யார்னு எனக்குத் தெரியும், என்னைப் பெத்தவங்களுக்குத் தெரியும், என்னைப் படைச்ச ஆண்டவனுக்குத் தெரியும், அதுக்கு மேல‌ யாருக்கும் விளக்கம் சொல்லணும்னு எனக்கு அவசியமில்லை.” 
 
“இல்லைம்மா, நான் சொல்ற…”
 
“புருஷோத்தமா! போதும் நிறுத்து! அதான் அவ அவ்வளவு தெளிவாச் சொல்றா இல்லை? இதுக்கு மேலேயும் எதுக்கு விவாதிக்கிறே?”
 
“அப்பிடி இல்லைப்பா…”
 
“முடிஞ்சா ஒரு நல்ல வக்கீலை நாளைக்கே பாரு, இல்லைன்னாச் சொல்லு நான் பார்க்கிறேன், அவளுக்கு நாம தேடிக்குடுத்த வாழ்க்கையும் போதும், அவ வாழ்ந்ததும் போதும், எம் பொண்ணு இனிமேலாவது நிம்மதியா இந்த வீட்டுல வாழட்டும், உனக்கு அவ இங்கப் புருஷன் இல்லாம இருக்கிறது கவுரவக் குறைச்சலா இருந்தா நீ இங்க வராதே.”
 
“அப்பா! என்னப்பா இப்பிடிப் பேசுறீங்க? எனக்கு அஞ்சு மேல அப்போ அக்கறை இல்லையா?”
 
“இருந்தா அஞ்சு சொல்றபடி நட, அந்த வீட்டுல அவ ஒன்னுமத்தவ மாதிரி வாழ்ந்ததும் போதும், எல்லாத்துக்கும் அவ புருஷன்கிட்ட நீ கெஞ்சிக்கிட்டு நின்னதும் போதும், மானம் மரியாதை எல்லாத்தையும் விட்டுட்டு அந்தப் பொம்பளை முன்னாடி நாங்க தலைகுனிஞ்சு நின்னதும் போதும்! தலை முழுகிடலாம்! எல்லாத்தையும் தலைமுழுகிடலாம்!” சொல்லிவிட்டுக் கண்கள் கலங்க அப்பா எழுந்து போயிவிட்டார். அஞ்சனா அவளது அறைக்குள் செல்ல அவள் பின்னோடு போனாள் அபிநயா.
 
“அபி…”
 
“சொல்லு பேபி.”
 
“எனக்கென்னவோ ரிசல்ட் பாசிட்டிவ்வாத்தான் வரும்னு தோணுது.”
 
“கண்டிப்பா பேபி, கண்டிப்பா.”
 
“எதுக்குக் கடவுள் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் குடுக்கணும்? நிச்சயமா மாட்டாரு, அந்த மனுஷனைக் கட்டிக்கிட்டு நான் இவ்வளவு நாளும் பட்டது போதாதா?” குரல் நலிந்து போகக் கண்களில் கண்ணீரோடு அஞ்சனா கேட்டபோது அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள் அபிநயா.
 
“அதெல்லாத்தையும் மறந்து போ பேபி, அந்த மனுஷங்களைப் பத்தி இனி நினைச்சேன்னா உன்னோட நிம்மதி போயிடும்.”
 
“அபி… அம்மா முக்கியந்தான், ஏன்? நமக்கெல்லாம் நம்ம அம்மாங்க முக்கியமில்லையா? அவங்கெல்லாம் நம்மளைக் கஷ்டப்பட்டு வளரக்கலையா? என்னாலப் புரிஞ்சுக்க முடியலை அபி… என்னை வருத்தப்பட வெக்கிறோம்னு கூடவா அந்த மனுஷனுக்குப் புரியாது, நான் வருத்தப்படும் போது அந்தம்மா சந்தோஷப்படுது, அவருக்கு அதுவும் தெரியும், ஆனாலும் அம்மாவோட சந்தோஷந்தான் அவருக்கு முக்கியம், ஒருநாள்… ஒருநாள் கூட அந்தம்மா தப்பா நடக்கும் போது, இல்லைம்மா… நீ தப்பும்மான்னு இந்த அஞ்சு வருஷத்துல ஒரு நாள் கூட அவர் சொன்னதில்லை, நீ இப்பிடிப் பண்ணாத, அம்மா சொல்றதுதான் சரி, எனக்கு எங்கம்மாதான் முக்கியம், இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு! அவருக்கு அவங்கம்மா முக்கியம்னு சொல்லும்போது கூட எனக்கு வலிக்காது, ஆனா அதுக்கப்புறமா ஒரு வார்த்தைச் சொல்வாரு பாரு, செத்துப் போகலாம் போலத் தோணும்.”
 
“பேபி!” அபியின் கண்கள் கலங்கிப் போனது. தனது கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பேசினாள் அஞ்சனா.
 
“எங்கம்மாதான் எனக்கு முக்கியம், அவங்களுக்கு அப்புறமாத்தான் மத்தவங்க எல்லாரும்னு சொல்லுவாரு, அதுவும் அந்தம்மா முன்னாடியே சொல்லுவாரு, அப்போ அவங்க முகத்தை நீ பார்க்கணுமே! சில நேரம் அவரு அப்பிடிச் சொல்லும் போது என்னை ஒரு பார்வைப் பார்ப்பாங்க பாரு…” சொல்லிவிட்டு வெடித்து அழுதாள் அஞ்சனா. 
 
“எத்தனைப் படம் பார்க்கிறோம், எத்தனைக் கதை படிக்கிறோம், அதுல எல்லாம் புருஷங்க அவங்கப் பொண்டாட்டிங்களை எவ்வளவு தாங்குறாங்க, அதெல்லாம் எதுக்கு? எங்கண்ணாவைப் பாரு, அண்ணியை எப்பிடிப் பார்த்துக்கிறான்? எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்கணும் அபி? நான் அழகா இல்லையா? படிக்கலையா? நான் நல்ல பொண்ணில்லையா? எனக்கு ஏன் இப்பிடி நடந்துச்சு அபி?” கேவிக்கேவி அழுதபடி பேசிய நட்பை ஆற்றும் வகை தெரியாது அமைதியாக உட்கார்ந்திருந்தாள் அபிநயா.
 
“அதுக்குத்தான் சொல்றேன், எனக்கு எந்தக் குறையும் இல்லைன்னு தெரிஞ்சுதுன்னா, எனக்குத் தருணோட கொழந்தை வேணாம், எங்க ரெண்டு பேருக்கும் கொழந்தைப் பொறக்குற வாய்ப்பிருந்தாலும் என்னால இன்னொரு தருணை உருவாக்க முடியாது, அந்த மனுஷனைப் போல இன்னொரு ஆம்பிளை இந்த உலகத்துக்கு வேணாம், அதுவும் எம்மூலமா வேணாம்.”
 
“கரெக்ட்.”
 
“அதாலதான் ஐவிஎஃப் பண்ணலாம்னு முடிவெடுத்தேன் அபி, ஒரு கொழந்தையைப் பெத்துக்கிற பாக்கியம் எனக்குக் கிடைச்சுதுன்னா, அந்தப் பாக்கியத்தைக் கடவுள் எனக்குக் குடுத்தாருன்னா கண்டிப்பா நான் பெத்துக்குவேன்.”
 
“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ பேபி.”
 
“ம்ஹூம்… அது சாத்தியப்படாது, ஒரு மனுஷனோட பட்டதெல்லாம் போதும், ஆயுசுக்கும் போதும்.”
 
“அப்பிடியில்லை பேபி, தருணை வெச்சு இந்த உலகத்துல இருக்கிற எல்லா ஆம்பிளைங்களையும் நீ எடைபோடாதே, இப்போதானே சொன்னே, உங்கண்ணன் எவ்வளவு நல்லப் புருஷன்னு? அப்புறம் என்னடா?”
 
“இல்லை அபி, என்னால ரிஸ்க் எடுக்க முடியாது, இதெல்லாம் வாழ்க்கையில ஒரு தரம்தான்.” 
 
“அப்பிடி ஏன் நீ நினைக்கிறே? அம்மா சொல்லிட்டாங்கன்னு இன்னொரு வாழ்க்கைக்கு அந்தாள் ரெடியாகலை? அப்போ நீ மட்டும் ஏன் அப்பிடி நினைக்கணும்?”
 
“என்னால முடியலை அபி, என்னால அதையெல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை.” 
 
“இப்பிடிப் பேசிப்பேசி நீங்கெல்லாம் ஒதுங்கிறதாலதான் துணிச்சலா இன்னொரு வாழ்க்கையை அமைச்சுக்கிற பொண்ணுங்களையும் இந்தச் சமூகம் ஒருமாதிரியாப் பார்க்குது.”
 
“…” 
 
“உன்னோட வாழ்க்கையில ஒரு தப்பு நடந்து போச்சு, நீயும் அந்த வாழ்க்கையோட ஒன்றிப்போகப் படாதபாடு பட்டுட்டே, அதுக்கு மேலயும் முடியலைனா என்னடாப் பண்ண முடியும்? நல்லதா இன்னொரு துணையைத் தேடிக்கிறது தப்பில்லை பேபி, நான் சொல்றதைக் கேளு.” 
 
“இல்லை அபி, எனக்கு இப்போ தேவைப்படுறதெல்லாம் நிம்மதி, நிம்மதியா நான் மூச்சு விடணும், நிம்மதியாச் சாப்பிடணும், சுடுசொல் கேட்காம நிம்மதியா என்னோட காலம் கழியணும், அவ்வளவுதான்.” சொல்லிவிட்டு அபியின் தோளில் சாய்ந்து கொண்டாள் அஞ்சனா. இப்போது இவளிடம் எதைப் பேசினாலும் எடுபடாது என்று புரிந்து கொண்ட டாக்டரும் அமைதியாகிவிட்டாள்.
 
***
“ஹல்லோ யங் மேன்!” அலைபேசியில் கேட்ட அந்த உற்சாகக் குரலில் ஷியாம் நிமிர்ந்து உட்கார்ந்தான். மேடம் அவனை அழைத்திருப்பது மகிழ்ச்சியாக இருந்த போதும் அவனுக்கு ஏனோ உள்ளுக்குள் திக்கென்றது.
 
“ஹலோ மேடம்.”
 
“என்னப்பா வாய்ஸ் டல்லடிக்குது?”
 
“மேடம்… ரிப்போர்ட் வந்திடுச்சா?” ஷியாமிற்கு படபடப்பாக இருந்தது.
 
“ம்… வந்திடுச்சு வந்திடுச்சு, நத்திங் டு வொர்ரி ஷியாம், ஷி இஸ் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட், ஒரு தாயாகிறதுக்கான எல்லாவிதத் தகுதியும் அந்தப் பொண்ணுக்கு இருக்கு.” லதா சொல்லவும் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான் ஷியாம். மனதுக்குள் நிம்மதி படர்ந்தது. கண்களை மூடி வாயைக் குவித்து மூச்சை வெளியேற்றினான். 
 
“ஷியாம்! லைன்ல இருக்கியா?” 
 
“இருக்கேன் மேடம், சொல்லுங்க.”
 
“என்னாச்சு?”
 
“ம்ஹூம்… ஒன்னுமில்லை மேடம்.” 
 
“ரொம்ப டென்ஷன்ல இருந்தியோ?”
 
“கொஞ்சம் டென்ஷனாத்தான் இருந்துச்சு.”
 
“சச் அ நைஸ் கேர்ள், அன்னைக்குப் பார்த்தப்ப எனக்கு அவ்வளவு புடிச்சிச்சு, நீ அந்தப் பொண்ணை மிஸ் பண்ணியிருக்கக் கூடாது ஷியாம், இப்பிடிப் பேசி உன்னை நான் ஹர்ட் பண்ணுறேனாத் தெரியலை, ஆனா எனக்குச் சொல்லணும்னு தோணிச்சு.”
 
“…”
 
“அவ்வளவு ஸ்வீட்டா இருக்கா, சரி விடு, அபிக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேன், அநேகமா இன்னைக்கே வந்து ரிப்போர்ட்டை கலெக்ட் பண்ணுவான்னு நினைக்கிறேன்.”
 
“தான்க் யூ மேடம்.”
 
“அடப்போப்பா! ஷியாம்… நான் ஒன்னு கேட்கலாமா?”
 
“வேணாம் மேடம், இப்போ எங்கிட்ட எதுவும் கேட்காதீங்க, நீங்க என்னக் கேட்கப்போறீங்கன்னு எனக்குத் தெரியும்.”
 
“ம்… எந்த முடிவு எடுக்கிறதா இருந்தாலும் ரெண்டு தடவை நல்லா யோசிச்சு முடிவெடு, ஆனா உன்னோட மனசுக்கு எது புடிக்குதோ அதை மட்டும் பண்ணு, இது உன்னோட வாழ்க்கை, அதுல மத்தவங்களைச் சந்தோஷப்படுத்துறதுக்காக உன்னோட சந்தோஷத்தை இழந்திடாதே.”
 
“மேடம்…”
 
“உன்னோட வயசைக் கடந்துதான் நானும் வந்திருக்கேன், என்னால உன்னோட மனசைப் புரிஞ்சுக்க முடியும் ஷியாம்.”
 
“தான்க் யூ மேடம்.”
 
“சந்தோஷமா இரு, நீ விரும்புறவங்களையும் சந்தோஷமா வெச்சிரு, பை டா.”
 
“பை மேடம்.” ஷியாம் லதாவோடு பேசி முடித்த சில மணிக்கூறுகளிலேயே அபிநயா அவனைத் தேடிக்கொண்டு வந்துவிட்டாள்.
 
“சீனியர்! ரிப்போர்ட் வந்திடுச்சு!” என்று கூவியபடி.
 
“ம்… டாக்டர் பேசினாங்க அபி.” பெண்ணைப் போல அவன் ஆர்ப்பரிக்கவில்லை என்றாலும் முகம் மலர்ந்து கிடந்தது.
 
“எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு சீனியர், சும்மாக் கத்தலாம் போலத் தோணுது.”
 
“கத்துங்க அபி.”
 
“சும்மாப் போங்க டாக்டர், நீங்க வேற என்னைக் கேலி பண்ணிக்கிட்டு.” அபிநயா இப்போது சிரித்தாள். கடந்த சில நாட்களாக அவள் முகம் தொலைத்திருந்த சிரிப்பு அது.
 
“அவங்க வீட்டுல தெரியுமா?”
 
“ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேன், இன்னும் நேர்ல போய் பார்க்கலை சீனியர், அதுக்கு முன்னாடி உங்கக்கிட்ட சில விஷயங்கள் சொல்லலாம்னு வந்தேன்.”
 
“சொல்லுங்க அபி.”
 
“சீனியர்… டைவர்ஸுக்கு அப்ளை பண்ணுறதுன்னு பேபி முடிவு பண்ணிட்டா.” அபி சொல்லி முடிக்க ஷியாமின் முகத்தில் சிந்தனைத் தோன்றியது.
 
“இது எப்போ?! ரிப்போர்ட் வந்ததுக்கு அப்புறமாவா?”
 
“இல்லை, அன்னைக்கு டாக்டரை பார்த்து முடிச்ச கையோட நான் வீட்டுக்குக் கிளம்பப் போனேன், இல்லை அபி, எங்கூட வீடு வரைக்கும் வான்னு என்னையும் கூட்டிட்டுப் போனா.”
 
“இப்போ எங்க இருக்கா?”
 
“அவங்க அம்மா வீட்டுல.”
 
“ஓ…”
 
“இனி எப்பவும் அவ அங்கதான் இருப்பா சீனியர்.”
 
“ம்…” ஷியாம் தாடையை லேசாகத் தடவிக்கொண்டான்.
 
“அன்னைக்கு அவங்க வீட்டு ஆளுங்க எல்லாரையும் உட்கார வெச்சுக் கொஞ்ச நேரம் பேபி பேசினா.”
 
“ம்…”
 
“அப்போதான் டைவர்ஸ் பண்ணப் போறேன்னு சொன்னா.” 
 
“அவங்க வீட்டுல என்ன சொன்னாங்க?”
 
“அண்ணன் மட்டும் கொஞ்சம் குதிச்சாரு, ஆனா மத்தவங்க அத்தனைப் பேரும் பேபிக்குத்தான் சப்போர்ட் பண்ணினாங்க.”
 
“ஆச்சரியமா இருக்கு.”
 
“ஆச்சரியங்கள் இன்னும் இருக்கு சீனியர், அதையெல்லாம் ஒவ்வொன்னாக் கேட்டாச் சும்மா நீங்க அதிர்ந்திடுவீங்க.”
 
“அப்பிடியா என்ன?!” தன்னை மறந்து இவனும் இப்போது சிரித்தான். மனதின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தாற் போல இருந்தது.
 
“பேபிக்கு இப்போ ஒரு பேபி வேணுமாம், ஆனா அவ புருஷன் அவளுக்கு வேணாமாம், இதெப்பிடி இருக்கு?!” சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் கேட்டாள் அபிநயா.
 
“…”
 
“ஐவிஎஃப் பண்ணிக்கப் போறாளாம்.”
 
“ஓ!” ஷியாம் உண்மையிலேயே அந்த நொடி அதிர்ந்து போனான். அவனால் அவள் எடுத்திருக்கும் முடிவை நம்ப முடியவில்லை.
 
“இதுக்கு…‌ அவங்க வீட்டுல என்ன சொன்னாங்க?”
 
“மறுப்புச் சொல்லி இருப்பாங்கன்னு நீங்க நினைப்பீங்க, அதான் இல்லை, உனக்கென்னக் குறைச்சல்? நீ எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கப் போறே? பேசாம இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிக் கொழந்தைப் பெத்துக்கோன்னு அவங்க அண்ணி ஒரு பிடியில நின்னுட்டாங்க!”
 
“என்னால நம்ப முடியலை அபி!”
 
“நானும் சும்மா மலைச்சுப் போயிட்டேன் சீனியர்! அஞ்சுவோட அம்மாவும் அதையேதான் சொன்னாங்க, அப்பா எதுவும் பேசலை, ஆனா இனி பொண்ணு என்ன சொன்னாலும் அவர் தலையை ஆட்டுவாரு, அண்ணன் லேசாக் குதிச்சப்பக் கூட அடக்கி வெச்சுட்டாரு.”
 
“அவனெல்லாம் திருந்தவே மாட்டான்.”
 
“அப்பிடியில்லை சீனியர், அவர் பேசும்போது அஞ்சு மேல அவர் வெச்சிருக்கிற அளவுகடந்த பாசம்தான் எனக்குத் தெரியுது.”
 
“மண்ணாங்கட்டி! அதை விடு பொண்ணே, அடுத்தது என்ன?!”
 
“மர்ம நாவல் படிக்கிற மாதிரி இருக்கில்லை? அடுத்தது என்ன? நல்ல ஒரு டோனர் கண்டுபிடிக்கணும், அவ எங்கிட்டக் கேட்டுக்கிட்டது அதுதான் சீனியர், அவளுக்குப் பொறக்கப்போற கொழந்தை நல்ல குணங்களோடப் பொறக்கணும்னு ஆசைப்படுறா, அது நியாயந்தானே? இப்போ என்னோட வேலையே இதுதான், உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல ஸ்பர்ம் பேங்க் இருந்தாச் சொல்லுங்க சீனியர்.” படபடவென அடுக்கிக்கொண்டே போனாள் பெண்.
 
“ஏம்மா அபிநய சுந்தரி! உனக்கு எங்களையெல்லாம் பார்த்தா நல்ல டோனரா தெரியலையா?” சீனியரின் அந்தக் கேள்வியில் அபிநயா திடுக்கிட்டுப் போனாள்!
 

Leave a Reply

error: Content is protected !!