மோகனம்-20(1)
மோகனம்-20(1)
வீட்டிற்கு வந்த அருவியின் முகம் சோகத்தில் இருக்கவும், அப்போது தான் பள்ளி முடித்து வந்த அகல்விழி ஆராச்சியாய் பார்த்தாள்.
அவளின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத அருவி,”ஏன் இப்படி பாக்குற விழி?”கேட்டாள்.
“இல்ல, உன் முகம் டல்லா இருக்கு. ஏன்?” என்றாள் கேள்வியாக.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல” தங்கையிடம் மழுப்ப பார்க்க, அவளோ அதை நம்ப மறுத்தாள்.
“உண்மைய சொல்லு அக்கா அழுதியா என்ன? கண்ணு கொஞ்சமா வீங்கி இருக்கு? அப்பா ஏதும் உன்னை திட்டினாரா?” கண்டனத்துடன் கேட்க, பதறிவிட்டாள் அருவி.
“அய்யயோ அப்படிலாம் எதுவும் இல்ல ஆத்தா. எக்ஸாம் சரியா பண்ணல அவ்ளோ தான். வேற ஒன்னும் இல்ல ” சமாளிப்பாய் கூற,
“விடு க்கா, இதுக்கெல்லாம் யாராவது கவலை படுவாங்களா.நானெல்லாம் பத்தாவது, பாரு எப்படி ஜாலியா இருக்கேனு. கத்துக்கோ என்கிட்ட” சொல்லி இல்லாத காலரை தூக்க,
“கத்துக்கலாமே” சொல்லி மெலிதாய் புன்னகைத்தாள்.
அதன் பின் அகல்விழி படிக்கச் சென்றுவிட,அன்னை வேலைக்கு போயிருக்கவும் வீட்டு வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.
அன்று இரவே மூர்த்தி பெரிய தண்டத்தை அழைக்க, அவளோ அமைதியாய் அவர் முன் நின்றாள்.
“என்ன பரிட்சை எல்லாம் முடிஞ்சதா?” திமிராய் கேட்க,
“முடிஞ்சுது பா…” என்றாள் மெல்லிய குரலில்.
“அப்போ எத்தனை நாள் லீவ்?”
“ஒரு மாசம் பா” சொல்லவுமே அவர் முகத்தில் ஒரு ஒளி.
“சரி, இந்த ஒரு மாசத்தை வீணடிக்காம எங்கேயாவது வேலைக்கு போ” கண்டிப்பான குரலில் அவர் கூற, மண்டையை ஆட்டினாள் அருவி.
பார்த்திருந்த அகல்விழிக்கு ஆத்திரமாய் வந்தது.
“அக்கா எதுக்கு வேலைக்கு போகணும்?” ஆக்களுக்காக பேச,
“நடு தண்டம், வாய மூடிட்டு இரு. இல்ல அடிவாங்கி சாவ” மிரட்டல் விட்டார்.
அவரின் மிரட்டலுக்கு எல்லாம் அமைதியாய் அடங்கி போகும் ரகம் இல்லை அகல்விழி.
“ஒரு அடி விழுந்துச்சினாலும் நான் போலீஸ் கிட்ட போவேன் பா. பெத்த பிள்ளையை துன்புறுத்திய தந்தைன்னு நாளைய ஹெட் லைன்ஸ்ல வருவீங்க”அவளும் மிரட்டலாகவே சொல்ல,
“விழி அமைதியாய் இரேன்”தங்கையை அடக்க முயன்றாள். எங்கே அவள் தான் விறைத்து கொண்டு நிற்கின்றாளே.
“பொட்ட புள்ள மாதிரியா நடந்துக்குற. அடங்காபிடாரி ” ஆத்திரம் தாளாது கையை ஓங்கவும் அருவி விழியை தள்ளிவிட்டு அடியை வாங்கிகொண்டாள்.
“அக்கா…” என மதியும் விழியும் ஒருசேர கத்த, வாங்கிய அடியில் சுருண்டு விழுந்தாள்.
“வாய அடக்கி பழகு. என்னை எதிர்த்து நின்னா இது தான் கதி” எச்சரிக்கை விடுத்தவர்,” நாளைக்கு எங்கேயாவது வேலைக்கு சேர்ந்திருக்க. இல்ல சூடு வச்சிடுவேன்” என்றவர் அறைக்கு சென்றுவிட்டார்.
அதன்பின், விழி முகத்தை தூக்கி வைத்து சுத்த அவளை எப்படியோ சமாதானம் செய்தாள் அருவி.
பக்கத்திலிருந்த துணி கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.
இப்படியே நாட்கள் செல்ல, விடுமுறையும் முடிந்து அருவி கல்லூரிக்கு சென்றாள். விஷ்வா இல்லாத கல்லூரி ஏனோ வித்தியாசமாய் தெரிந்தது.
இங்கே விஷ்வாவின் வீட்டிலோ,” அடுத்து என்ன பண்றதா இருக்க ?” அருண் தமயனிடம் கேட்க,
அவனோ மஞ்சுளா மடிமீது தலை சாய்த்து படுத்திருந்தவன்,” பிஜி பண்ணலாம்னு இருக்கேன்” சொல்லவும்,” பி.எஸ்.ஜி தானே?”புருவம் சுருக்கி கேட்க,
“இல்ல, நம்ம ஊரு காலேஜ்ல தான்” என்றான்.
“என்னங்கடா அதிசயமா இருக்கு. படிச்சா பி.எஸ்.ஜில தான் படிப்பேன்னு யூஜி சேர்ந்தவன், அடுத்த இரண்டு வருஷத்துல அந்த காலேஜை விட்டு லோக்கல் காலேஜ்ல சேர்ந்த, இப்பவும் அதே சொல்ற இது சரி இல்லயே?” புருவமுயர்த்தி சந்தேகமாய் கேட்கவும் திருட்டு முழி முழித்த விஷ்வா “நான் தான் அப்போவே சொன்னேனே அம்மா சமையலை மிஸ் பண்ணேன்னு. ம்மா” என அன்னையிடம் சிணுங்க,
“டேய்! விடு டா அவனை. ரொம்ப தான் நோண்டிட்டு இருக்க”சொன்ன மஞ்சுளா,” பால் கொழுக்கட்டை செஞ்சி வச்சிருக்கேன். வேணும்னு சொல்றவங்க மட்டும் வாங்க” என்கவும் அன்னை பின்பே விஷ்வாவும் சென்றுவிட, போகும் தம்பியை புரியாது பார்த்தான்.
அதன் பின் ஒரு நாள் சந்தோஷமாக விஷ்வா வீட்டிற்குள் வர, அவனை பார்த்த தந்தை” என்ன விஷ்வா ரொம்ப ஹாப்பியா இருக்க போலையே” கேட்க,
“ரொம்ப இல்ல… ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்” சொல்லவும்,”என்ன விஷயம் டா ?” ஆர்வத்துடன் கங்காதரன் கேட்க,
“இட்ஸ் சீக்ரெட் ப்பா” சொல்லி வாயில் கைவைத்து காண்பித்தான்.
“என்ன அண்ணா ஓரே ஜாலி மூட் தான் போலையே” கேட்டபடி உள்ளே வந்த ஜீவா” ரிசல்ட் என்னாச்சி அண்ணா?” கேட்டான்.
“பாசாயாச்சி” பெருமையாய் கூறினான்.
அடுத்த சில நாட்களிலே அங்கே எம்.பி.ஏ சேர்ந்துவிட்டான்.
பிஜி முதல் வருட தொடக்க நாளில், பெண்கள் அனைவரும் எப்பொழுதை விட அதிக ஸ்ரத்தை எடுத்து கிளம்பி வந்திருந்தனர்.
அங்கே படித்த பெண்களிலே சாதாரணமாய் வந்த ஒருவள் நம் நாயகியே தான்.
முதல் வகுப்பே பிராக்டிகளாக இருக்க, ஜின்சியுடன் அங்கே நடந்தாள்.
“இப்போ எதுக்கு இவ்ளோ மேக்கப்?” அருவி கேட்க,
“ஹான், இன்னைக்கு பிஜிக்கு ஓப்பனிங் டே டி. அதான் இந்த டச்சப் ” சொல்லவும் தலையில் அடித்துகொண்டாள் அருவி.
மதியம் வரை பிராக்டிகல் இருந்துவிட, மதிய உணவிற்கு தான் வெளியவே வந்தனர்.
“முடில பா. இப்படியா அறுத்து தள்ளனும்” ஜின்சி பொரும,
“விடு…” என்ற அருவி அவளை கேண்டீன் அழைத்து சென்றாள்.
அங்கே சென்ற அருவிக்கு அதரங்கள் விரிந்து, அதற்கு காரணமான பெயரை உச்சரித்தன.
“சீனியர்…” கண்கள் பளபளக்க அவனை அழைத்தாள். பக்கத்தில் நின்ற ஜின்சியுமே அவனை தான் கண்கள் மின்ன பார்த்திருந்தாள்.
“வாங்க ஜூனியர்… நான் இல்லாம ரொம்ப ஜாலியா இருக்கீங்க போலையே?” நக்கலாய் கேட்டான்.
முகத்தை தூக்கி வைத்தவள்,”நான் இங்க ஜாலியா இருக்கிறதை பார்த்தீங்களா?” கோபமாய் கேட்டாள்.
“இல்லையா ஜின்சி?” ஜின்சியை பார்த்து விஷ்வா கேட்கவும், “ஹான்” விழித்தாள் அவள்.
“என்னாச்சி?”,” என்னடி?” என இருவரும் ஒருசேர கேட்க,
“நத்திங்…” பதில் கூறி அவ்விடத்தை விட்டு அகன்று விட்டாள்.
பின்னர்,இருவரின் நாட்களும் அழகாய் சென்று வருடங்கள் கடந்து, இருவருமே இறுதி ஆண்டில் வந்து நின்றனர்.
இந்த இடைப்பட்ட காலத்தில், விஷ்வாவை பற்றி அறிந்து கொண்ட அகல்விழி அவனை சந்திக்க சமயம் பார்த்தாள்.
அப்படி ஒருநாள் விரைவிலே அமைந்து விட, அவனை காண காத்திருந்தாள்.
அக்கா தங்கைகள் மூவரும் அன்று சிம்ஸ்பார்க் வந்திருக்க, இந்த பக்கம் அவனும் வந்திருந்தான்.
“வீட்ல இருந்து படிக்குறதை விட்டு இங்க எதுக்கு டி கூட்டிட்டு வந்த?” அருவி காட்டமாய் கேட்க,
“எவ்வளவு நேரம் தான் படிச்சதை படிக்கறது சொல்லு, அதான் ஒரு சேஞ்க்கு இங்க கூட்டிட்டு வந்தேன்” சொல்ல,
“என்னமோ செய்” விட்டுவிட்டாள் அருவி.
மதியும் விழியும் ஜாலியாய் சுற்ற, அருவி மலர்களை ரசித்தபடி வந்தாள்.
இருவரும் விளையாடியப்படி விழி யாரோ ஒருவர் மீது மோதி விழுந்தாள்.
“அச்சச்சோ!” பதறியவனாய் விஷ்வா கை நீட்ட,அதனை தட்டிவிட்டவள் அவனை கோபமாய் முறைத்தாள்.
“கீழ வீழுந்தேன்னு தானே மா கை நீட்டினேன். அதுக்கு எதுக்கு இந்த முறைப்பு?”
“இப்டி தான் கண்ணு தெரியாம வந்து இடிப்பிங்களா?” முறைப்புடனே கேட்க,
“நானா இடிச்சேன், இடிச்சது நீ மா?” சொல்லவும் அவள் மேலும் முறைக்க, மதி ஓடிப்போய் அக்காளிடம் விடயத்தை சொல்ல, பதறிப்போய் வந்தாள்.
“விழி…” அழைக்க, இருவரும் குரல் வந்த இடத்தை நோக்கினர்.
“சீனியர் இங்க என்ன பண்றிங்க?” அவனை பார்த்த மகிழ்வில் கேட்டாள்.
“என்னது சீனியரா?” விழி வினவ,” ஆமாம் இவரு தான் விஷ்வப்ரசாத்” என விழிக்கு அறிமுகப்படுத்தினாள்.
“ஹோ” என்றவள் அமைதியாய் அவனை கவனிக்க தொடங்கினாள்.
“என்ன பேமிலி கூட அவ்ட்டிங்கா அருவி?”
“சும்மா, இவளுக்கு போர் அடிக்குதுன்னு இழுத்துட்டு வந்துட்டா” என்றாள்.
பின், நால்வருமாய் சுற்ற, அகல்விழியை கவனித்தவன் அவளிடம் பேசினான்.
“என்கிட்ட ஏதாவது பேசணுமா?” கேட்கவுமே,” ஆமா சில கேள்விகள் கேட்கணும்” என்றாள்.
“ம்ம்.கேளு” என்றான்.
“உங்களுக்கு அருவி என்ன கைன்டாப் ரிலேஷன்ஷிப்?” நேரடியாக கேட்கவே, விழியை வியந்து பார்த்தான்.
அருவி கூறி அகல்விழியை பற்றி கேள்வி பட்டிருக்கிறான் தான். இன்று அதனை நேரடியாகவே பார்க்கிறான்.
“சீனியர்… ஜூனியர்…” சொல்லவும்,” உண்மை வேணும்” என்றாள் அவனை தீயாய் முறைத்து.
சிரிப்பு வந்தது அவனுக்கு,ஆனாலும் அடக்கிக்கொண்டான்.
“என்னோட வருங்காலம்… ஐ லவ் ஹேர்” அருவியை பார்த்து காதலாய் மொழிந்தான். சின்ன பெண் என்று உதாசீனம் எல்லாம் படுத்தவில்லை. அவளை எப்படியெல்லாம் பார்த்துக்க வேண்டும் என்று ஆசை கொண்டதை எல்லாம் சொன்னான்.
அகல்விழி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடை கூறி அவள் மனதை வென்றான்.
“நீங்க அக்காவை நல்லா பார்த்துப்பிங்கனு நம்புறேன்” சொல்ல, சிரித்தவன்” உன்னை பார்க்க எங்க அம்மா மாதிரியே இருக்க டா. இனி உன்ன அகல் மானு கூப்பிடுறேன்” என்றான்.
பின், அவரவர் வீட்டிற்கு கிளம்பி சென்றனர்.
இதற்கிடையில் அருணிற்கு பெண் பார்த்திருக்க,அது திருமணத்தில் வந்து முடிந்தது.
விஷ்வா ஆடை வாங்க அருவியை அழைக்க,” நான் வரல. அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு” பயந்தாள்.
“வேணும்னா அகல் மாவை கூட வர சொல்லு. ஆனா நீ வந்தே ஆகணும்” சிறு பிள்ளையென அடம்பிடித்தான்.
“அவளுக்கு எக்ஸாம் நெருங்குது. நான் வேணும்ன்னா ஜின்சியை கூட கூட்டிட்டு வரவா” என்கவும் மறுத்துவிட்டான். இப்போதெல்லாம் ஜின்சி பெயரை சொன்னாலே மழுப்பி வேறேதாவது பேச தொடங்கிவிடுகிறான். ‘ஏன்’ என்று தெரியவில்லை என்றாலும் அவனிடம் கேட்கவும் இல்லை.
“நீ மட்டும் வரதுன்னா வா,இல்லனா வேண்டாம்” சொல்லிவிட மனது தாங்கவில்லை பெண்ணிற்கு.
“சரி வரேன்” என்றாள். அதில் அவன் அவளுக்கே உரித்தான புன்னகையை வீசினான். அந்த ஒற்றை குழியை ஒருநொடி ரசித்தவள் கிளம்பிவிட்டாள்.
அடுத்து வந்த ஒருநாளில் இருவரும் கடைக்கு சென்றனர்.
அங்கு இருந்த ஜீன்ஸ் டாப்ஸை பார்த்தவள்,” இந்த மாதிரி போடணும்னு ஒரு ஆசை. பட், அப்பா விடமாட்டாரு”என்க,
“எதுக்கு உங்க அப்பாக்கு இப்படி பயந்து நடுங்குற அருவி?” பல நாள் சந்தேகத்தை இன்று கேட்டான்.
“அது பயம் இல்ல மரியாதை. அது மட்டும் இல்ல அவருக்கு என்னைய சின்ன வயசுல இருந்தே பிடிக்காது. நான் அதிகம் பேசினா, அது அம்மாவை தான் பாதிக்கும். அதான் எதிர்த்து பேசுறது இல்ல. நான் பேசினா மட்டும் மாற போறாங்களா இல்லையே” என்றாள்.
இப்படியொரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.
“சரி விடு. வா எனக்கு போய் ட்ரெஸ் எடுப்போம்”ஆண்கள் உடைப்பக்கம் அழைத்து சென்றான்.
நிறைய நேரம் எல்லாம் பாவை எடுத்து கொள்ளவில்லை. பத்துநிமிடத்தில் அவனுக்கு ஏற்ற மாதிரியான சட்டையையும் அதே நிறத்திலான சரிகை வைத்த வேஷ்டியையும் எடுத்தாள்.
பில்லை நான் தான் காட்டுவேன் என்று அடம்பிடித்து அவள் இதுநாள்வரை சேமித்து வைத்திருந்த பணத்தில் அவனுக்காக முதல் முறை வாங்கிக்கொடுத்திருந்தாள்.
விஷ்வாவின் மனம் இறகே இல்லாமல் உயரத்தில் பறந்தது. அங்கேயே ஒரு கடையில் மதிய உணவை முடித்துவிட்டு கிளம்பினர்.
அருண் மற்றும் இந்திரா திருமணதிற்கு அருவி எடுத்துக்கொடுத்த உடையை தான் அணிந்திருந்தான். திருமணம் நல்லமுறையில் நடைபெற, மூத்த மருமகளாய் அவ்வீட்டில் காலடி எடுத்து வைத்தாள் இந்திரா.
கல்லூரியில், அருவியை தேடி எப்போதும் சந்திக்கும் இடத்தில் சென்று பார்க்க, அங்கே அருவி இல்லாது ஜின்சி இருக்கவும் அவ்விடம் போக பிடிக்காது திரும்பி நடந்தான்.
அவனுக்காகவே காத்திருந்த ஜின்சி, விஷ்வா திரும்பி செல்வதை பார்த்து அவன் முன்னே வந்து நின்றாள்.
“என்னை எதுக்கு அவாய்ட் பண்றீங்க விஷ்வா?” ஜின்சி கேட்க,
“உங்க கிட்ட பேச என்ன இருக்கு,நீங்க அருவியோட தோழி அவ்வளோ தான்” சொல்லி நகர பார்க்க,போக விடமால் தடுத்தாள்.
“ஐ லவ் யூ விஷ்வா. ஏன் உங்களுக்கு என்னோட காதல் புரிய மாட்டேங்கிது”
“லிசன், நான் நீங்க காதல் சொன்னப்பவே முடியாதுன்னு சொல்லிட்டேன். சோ கம்பெல் பண்ணாதீங்க வழியை விடுங்க” என்றான் எரிச்சலான குரலில்.
“ஏன் பிடிக்கல?இங்க உள்ள பாதி பசங்க என் பின்னாடி சுத்தும்போது, எனக்கு உங்களை தான் பிடிச்சுருக்கு” பசங்க தன் பின் சுற்றுவதை பெருமையாய் கூற, நெற்றியை நீவிக்கொண்டான்.
அதற்குள் அருவி வந்துவிட, முகத்தில் எதையும் காட்டவில்லை இருவரும் சாதாரணமாய் இருந்தனர்.
நகர்வலம் போல் நாட்கள் செல்லாது வானூர்தி போல் வேகமாய் சென்று பிரியாவிடை நிகழ்ச்சியில் வந்து நிறுத்தியது.
வரமாட்டேன் என்று அடம் பிடித்தவளை கட்டாயப்படுத்தி கூட்டி சென்றான்.அன்றைய நாள் மட்டும் அவர்கள் வாழ்வில் வராமல் இருந்திருந்தால், அவர்கள் வாழ்வு திசையறியா பாதையில் பயணித்திருக்காது.