தீயாகிய மங்கை நீயடி – 09

தீயாகிய மங்கை நீயடி – 09
அருந்ததியின் முன்னால் அமர்ந்திருந்த இளைஞன் தனது பெயர் கிருஷ்ணா என்று சொல்லிவிட்டு தன்னைப் பற்றி விரிவாக சொல்லத் தொடங்கினான். பூஞ்சோலை கிராமத்தில் இருந்து சற்று தள்ளி இருக்கும் ஊரான கங்கைபுரம் தான் கிருஷ்ணாவின் சொந்த ஊர்.
கிருஷ்ணாவின் தந்தை முனுசாமி ஒரு பூர்வீக விவசாயி, அதோடு அவரது மனைவி வள்ளியம்மையும் அவர்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் தன் கணவனுக்கு உதவியாக வேலை செய்து வருகிறார்.
முனுசாமியும், வள்ளியம்மையும் பெரிதாக படிக்காதவர்கள், அதனால் என்னவோ தங்கள் ஒரே வாரிசான கிருஷ்ணாவை நன்றாகப் படிக்க வைத்து அவனை ஒரு பெரிய உயர் பதவியில் பார்க்க வேண்டும் என்பது அவர்களது அளவில்லாத ஆசை.
அவர்கள் இருவருக்கும் கிருஷ்ணா மாத்திரமே ஒரே பிள்ளை என்பதால் அவனுக்கு ஒரு சிறு குறை கூட ஏற்பட்டு விடக்கூடாது என்று அவனை அத்தனை பாசமாக வளர்த்து வந்தனர் அந்த பெற்றோர்.
கிருஷ்ணாவின் வீட்டில் அவனது அன்னை, தந்தையுடன் சேர்ந்து அவனது தாயின் அன்னையுமான பார்வதி பாட்டியும் வசித்து வந்தார்.
பார்வதி பாட்டிக்கு கூட தன் பேரன் என்றால் கொள்ளைப் பிரியம், வள்ளியம்மை சில நேரங்களில் கிருஷ்ணா மீது கோபப்பட்டால் கூட அவனை ஆதரித்து அவனுக்கு அன்பை அள்ளி வழங்குபவர்தான் அவனது பார்வதி பாட்டி.
கிருஷ்ணா பிறந்து வளர்ந்து அவனுக்கு பத்து வயது பூர்த்தியாகும் வரை அவனுக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அந்தக் கிராமத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்த ஒரு நபராக கூட அவனைச் சொல்லலாம்.
ஆனால் அவனது பத்து வயதுக்கு பின்னர் தான் அவனது உடலில் ஏற்படவிருக்கும் பெரிய மாற்றத்தை அவன் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தான்.
கிருஷ்ணா தனது பள்ளிப் படிப்பை ஆண், பெண் என எல்லோரும் கலந்து படிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் தான் படித்து வந்தான், அங்கே அவனுக்கு பல ஆண் நண்பர்கள் இருந்தாலும் அவன் மனமோ அந்த ஆண் நண்பர்களின் நட்பை விரும்பவில்லை, மாறாக பெண் பிள்ளைகளின் நட்பையும், அவர்களது அருகாமையையுமே அவனுக்கு ஒரு விதமான பாதுகாப்பை வழங்குவது போல உணர்த்தியது.
அவனது வீட்டின் அருகில் இருக்கும் பல ஆண் பிள்ளைகள் அவனுடன் சேர்ந்து விளையாட வந்தாலும் அவனுக்கோ பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதிலேயே பெரும் ஈர்ப்பாக இருந்தது.
தனக்கு ஏன் இவ்வாறு தோன்றுகிறது என்று அவனால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்க, இன்னொரு புறம் இதைப்பற்றி யாரிடம் கேட்பது என்பது கூட அவனுக்குத் தெரியவில்லை.
கிருஷ்ணாவின் இந்தக் குழப்பமான மனநிலையுடனேயே அவனது நாட்கள் கடந்து செல்ல ஆரம்பிக்க, அந்த நாட்கள் வருடங்கள் ஆகி அவனது வாழ்க்கையை மாற்றப் போகும் அந்த மிகவும் முக்கியமான தருணத்தின் முதல் கட்டமான நிகழ்வு அன்று அவனை வந்து சேர்ந்திருந்தது.
அன்று கிருஷ்ணாவின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து அவனது பள்ளிக்கூடத்தில் வருடாந்திர கலை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்க, அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு நாடகத்தை நடிக்க திட்டம் தீட்டியிருந்தனர்.
அதில் கிருஷ்ணனுக்கு பெண் வேடம் ஏற்று நடிக்கச் சொல்லப்பட்டிருக்க, முதன்முறையாக பெண் போன்ற ஒரு தோற்றத்தில் தன்னைப் பார்த்ததும் அவனுக்கு அவனது மனதில் என்ன மாதிரியான உணர்வு உருவாகியது என்று அவனால் இன்று வரை விவரிக்க முடியவில்லை.
அந்தத் தோற்றம், அந்த ஆடை, அந்த ஒப்பனை என ஒவ்வொரு விடயங்களையும் ரசித்து ரசித்து பார்த்தவன் மனமோ ஏன் தான் ஒரு பெண்ணாக பிறக்கவில்லை என்று அவனை சிந்திக்கத் தூண்டாமலும் இல்லை.
அன்றைய நாளின் பின்னர் தன் அன்னையிடம் இதைப்பற்றி கேட்டுப் பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டவன் ஒருநாள் அவரின் முன்னால் பெண் பிள்ளை போன்று ஆடை அணிந்து, ஒப்பனை செய்து கொண்டு சென்று நிற்க, அவனை பார்த்து அதிர்ச்சியடைந்த வள்ளியம்மை, “ஏய்யா! என்னைய்யா இதெல்லாம்? நீ எதற்காகய்யா இப்படி வந்து நிற்குற? உங்க அப்பாரு வந்து இதெல்லாம் பார்த்தால் உன்னை தொலைச்சி போட்டுருவாரு சாமி. ஆம்பிளைப் பிள்ளை இப்படி பொண்ணுங்க மாதிரி பாவாடை தாவணி எல்லாம் உடுத்தக் கூடாது சாமி. போ சாமி, போய் இதெல்லாம் தூக்கித் தூரப் போட்டுடுய்யா, போய்யா” என்று கெஞ்சிக் கேட்க, தான் கேட்க வந்த விஷயத்தை கேட்க முடியாமலேயே கவலையுடன் தன் அறைக்குள் திரும்பி வந்தவன் அந்த ஆடையையும், ஒப்பனையையும் தன்னை விட்டு அகற்ற மனமே இன்றி தன்னிலிருந்து அகற்றியிருந்தான்.
அதன் பிறகு வந்த நாட்கள் அனைத்தும் கிருஷ்ணாவின் மனதிற்குள் எழுந்திருந்த தான் ஒரு பெண் பிள்ளை என்கிற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்ல ஆரம்பித்தது.
வெளி நபர்களிடமும், தன் வீட்டினரிடமும் இதைப் பற்றி சொல்ல முடியாமல் தவித்துப் போனவன் தன் வீட்டில், தன் அறைக்குள் தனியாக இருக்கும் தருணமெல்லாம் தன்னை ஒரு பெண் பிள்ளை போன்று அலங்கரித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தான்.
தன் அன்னையோ, அல்லது தந்தையோ வரும் சத்தம் கேட்டதும் சட்டென்று அதை எல்லாம் மறைத்து வைப்பவன் மறந்தும் கூட இதைப்பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள நினைக்கவே இல்லை.
அன்றொரு நாள் அவர்களது நிலத்தில் நாற்று நடும் வேலைக்காக முனுசாமியும், வள்ளியம்மையும் நேரத்திற்கே வீட்டிலிருந்து சென்றிருக்க, அவர்கள் இருவரும் திரும்பி வருவதற்கு எப்படியும் இரவாகி விடும் என்று தெரிந்து வைத்திருந்த கிருஷ்ணா தன் பல நாள் ஆசையான தன் மனதிற்கு பிடித்த ஆடை மற்றும் ஒப்பனையை செய்து கொண்டு தான் வாழ்வை புரட்டிப் போடும் நிகழ்வை தானே நிகழ்த்தப் போவதை அறியாமல் தன் நண்பர்களைக் காண எண்ணி விரைந்து சென்றான்.
தன் நண்பர்களிடம் தனது இந்த மாற்றத்தைக் காட்டினால் அவர்கள் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள், ஆச்சரியப்படுவார்கள் என்ற நப்பாசையுடன் கிருஷ்ணா வீதியில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த வேளை, அவன் நினைத்ததற்கு மாறாக முழுக் கிராமமும் அவனைப் பார்த்து கை கொட்டி சிரிக்க ஆரம்பித்தது.
முதலில் அவர்கள் தன்னைத்தான் கேலி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் அவர்களுடன் இணைந்து சிரித்த கிருஷ்ணா சிறிது நேரம் கழித்தே அவர்கள் தன்னைக் கேலி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான்.
அவன் அந்த நிதர்சனத்தை முழுமையாக புரிந்து கொள்வதற்கு முன்னரே அவனது நண்பர்களும், இன்னும் ஒரு சில கிராமவாசிகளும் அவனை அந்த இடத்தை விட்டும் விரட்டியடிக்க தன் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்கிற எண்ணத்துடன் அங்கிருந்து தப்பியோடி தன் வீடு வந்து சேர்ந்திருந்த கிருஷ்ணா எவ்வளவு நேரமாக அந்த நிலையிலேயே அமர்ந்திருந்தானோ அவன் அறியான்.
நாற்று நடும் வேலையை முடித்து விட்டு பெரும் அசதியுடன் தங்கள் வீடு வந்து சேர்ந்திருந்த வள்ளியம்மை மற்றும் முனுசாமி தங்கள் வீட்டின் நடுவே பாவாடை, சட்டை அணிந்து தலையில் மல்லிகை சரத்தை வைக்க முடியாமல் ஏதோ ஒரு வகையில் அதை வைத்து முழங்காலின் மேல் தலை சாய்த்து அமர்ந்திருந்த தங்கள் மகனைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்து போயினர்.
“கிருஷ்ணா! என்னடா பண்ணி வைச்சிருக்க?” முனுசாமியின் அதட்டலான குரலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த கிருஷ்ணா தான் அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியோடும், பயத்தோடும் தன் தந்தையை நிமிர்ந்து பார்க்க, அவரோ அவனை வெட்டிப் போட்டு விடும் அளவிற்கு கோபமாக முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றார்.
“அப்பா, நான், எனக்கு, அம்மா, எனக்கு…”
“என்னடா அப்பா, அம்மான்னு உளறிட்டு இருக்க? நான் அன்னைக்கே இதெல்லாம் தூக்கித் தூரப் போடுன்னு சொன்னேனா இல்லையா?” வள்ளியம்மையின் கேள்வியில் அவரைத் திரும்பிப் பார்த்த முனுசாமி,
“என்ன சொன்ன? அப்போ உனக்கு இந்தக் கருமம் எல்லாம் முன்னாலேயே தெரியுமா?” என்று அதட்டலாக வினவ, அவரோ பதில் எதுவும் பேசாமல் தலை குனிந்து அமைதியாக நின்றார்.
“அப்பா, அம்மாவை எதுவும் சொல்லாதீங்க ப்பா. அம்மா எதுவும் பண்ணல, இதெல்லாம் நானாகத்தான் பண்ணேன். எனக்கு இப்படி பாவாடை, சட்டை போட்டு, காதில் கம்மல் போட்டு, நல்ல நீளமாக முடி வளர்த்து, தலை வாரிப் பொட்டு வைத்து, மல்லிகைப்பூ எல்லாம் வைத்து பொண்ணுங்க மாதிரி இருக்கத்தான் ப்பா ஆசையாக இருக்கு. பசங்க மாதிரி பேண்ட், சட்டை போட எனக்குப் பிடிக்கலப்பா. நான் இப்படியே இருக்கிறேனேப்பா” கிருஷ்ணா கையெடுத்துக் கெஞ்சிக் கேட்ட படி தன் தந்தையின் முன் சென்று நிற்க, அவன் பேசி முடித்த அடுத்த கணம் முனுசாமியின் வலிய கரம் அவனது கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.
“என்னடா சொன்ன? பொண்ணுங்க மாதிரி இருக்கப் போறியா? இப்படி இரண்டுக்கெட்டானாக நீ இருக்கணும்னா உன்னைத் தவமா தவமிருந்து இந்தப் பாவி பெற்றெடுத்தா? நீ இப்படி எல்லாம் செய்வேன்னு அப்போவே தெரிஞ்சிருந்தா உன்னையும் ஏற்கனவே எங்களுக்குப் பிறந்த ஒரு பாவத்தை விட்டெறிஞ்ச மாதிரி தூக்கிப் போட்டு இருப்போமே. இப்போ இப்படி எல்லாம் நாசமாகிடுச்சே!
ஊருக்குள்ள இந்த விஷயம் தெரிஞ்சா நான் எப்படி தலை நிமிர்ந்து நடப்பேன்? ஐயோ! ஆண்டவா, நான் உனக்கு என்ன கெடுதல் பண்ணேன்? எதற்காக எங்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைங்களையும் இப்படி இரண்டும் இல்லாத ஒன்னா அனுப்பி வைச்ச? ஐயோ! நான் என்ன செய்வேன்?” முனுசாமி கதறியழுதபடி தன் தலையில் கை வைத்துக் கொண்டு நின்ற தருணம், அவர்கள் வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்க சட்டென்று தன் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியேறி சென்றவர் மீண்டும் வீட்டினுள் திரும்பி வந்து கிருஷ்ணாவை அடித்து துவைத்து எடுத்து விட்டார்.
“இந்த கேடு கெட்டவன் நம்ம மானத்தை காத்தோடு காத்தாக்கிட்டான்டி வள்ளி. நம்ம வீட்டில் இல்லாத நேரம் இந்த அலங்கோலத்தோடு நம்ம ஊரை சுற்றி வந்து இருக்கான்டி இந்தப் பாவிப்பய. இவனுக்கு நான் என்னடி கெடுதல் பண்ணேன்? இவனுக்கு என்ன குறை வைச்சேன்? எதற்காக இந்தப் பாவி இப்படி பண்ணான்? எனக்கு வர்ற ஆத்திரத்திற்கு இவனை இங்கேயே கண்டம் துண்டமாக வெட்டிப் போடப் போறேன்” முனுசாமி கோபம் தாளாமல் தன் கையிலிருந்த கதிரருக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு கிருஷ்ணாவின் அருகில் செல்லப் போக, நொடி நேரத்திற்குள் பார்வதி வந்து தன் பேரனை தன்னோடு அணைத்துக் கொண்டார்.
“அடியேய் வள்ளி! என் பேரன் மேலே இதற்கு மேலேயும் ஒரு சின்ன அடி விழுந்ததுன்னு வைய்யு, என் பொண்ணோட புருஷன்னு கூட பார்க்க மாட்டேன், கொன்னு போட்டுடுவேன். அந்த ஆளை இங்கேயிருந்து கூட்டிட்டு போடி” என்றவாறே பார்வதி கிருஷ்ணாவைக் கைத்தாங்கலாக தனது அறைக்கு அழைத்துக் கொண்டு செல்ல, அப்போதும் முனுசாமி தன் கோபத்தைக் கை விடாமல் தன் கையிலிருந்த கத்தியை விட்டெறிந்து விட்டு வேகமாக அந்த இடத்தில் இருந்து வெளியேறி சென்றிருந்தார்.
கிருஷ்ணாவின் காயங்களுக்கு மருந்து போட்டபடியே அவனது முகத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த பார்வதி, “ஏன்யா ராசா இப்படி பண்ண? ஆம்பிளைப் பிள்ளை இப்படி எல்லாம் பண்ணலாமா?” என்று கேட்க,
சிறு கோபத்துடன் அவரது கையைத் தட்டி விட்டவன், “நீயும் ஏன் பாட்டி என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்குற? எனக்கு இப்படி இருக்கத்தான் பாட்டி புடிச்சிருக்கு. எனக்கு ஆம்பிளை பசங்க மாதிரி இருக்க, ஏன் அவங்க கூட சேரக்கூட பிடிக்கல” என்று கூற,
அவனது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவர், “நான் பொறுமையாக பேசுறேன்னு உன் இஷ்டத்துக்கு ஆடலாம்ன்னு மட்டும் நினைச்சுக்காதே. நீ ஆம்பள, ஆம்பிளைப் பிள்ளை எப்படி இருப்பானோ அப்படித்தான் இருக்கணும். அதை விட்டுட்டு இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி பேசுன மாதிரி பேசுனேன்னு வை, உன் அப்பன் வெட்டிடுவேன்னு தான் சொன்னான், ஆனா நான் சொல்ல மாட்டேன், செய்வேன்” என்று கூற, கிருஷ்ணா அன்றுதான் முதன்முதலாக தன் எதிர்காலத்தை எண்ணி அச்சம் கொள்ள ஆரம்பித்தான்.
தன் ஒட்டுமொத்த குடும்பமும் தனக்கு எதிராக இருக்கும் நிலையில் தன்னால் எப்படி இந்த வாழ்க்கையை வாழ முடியும் என்று வெகுவாக தவித்துப் போனவன் அதன் பிறகு தன் வீட்டினருக்கு அஞ்சியே ஆண் பிள்ளை போல நடக்க இல்லை, இல்லை நடிக்க ஆரம்பித்திருந்தான்.
வெளி நபர்கள் முன்னிலையில் ஆண் பிள்ளை போன்றும், தனக்கான தனிமையான நேரத்தில் பெண் பிள்ளை போன்றும் இரண்டு வாழ்க்கையை வாழ்ந்து வந்த கிருஷ்ணா இந்த இரட்டை வாழ்க்கைக்கு கூடிய விரைவில் முற்றுப் புள்ளி வைத்தே ஆகவேண்டும் என்று தீர்மானமாக முடிவெடுத்துக் கொண்டான்.
கிருஷ்ணா பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த நேரம் அவர்களது பள்ளிக்கூடத்தில் வெளியூரில் இருந்து வந்த ஒரு மருத்துவ குழுவினருக்கு ஒரு மருத்துவ முகாம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்க, அதில் ஒரு திருநங்கை ஒருவரும் வந்திருப்பதை அவன் கண்டறிந்து கொண்டான்.
எப்படியாவது அவரிடம் சென்று பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று வெகுவாக முயற்சி செய்த கிருஷ்ணாவிற்கு அந்த மருத்துவக் குழு அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் கடைசி நாளன்று தான் அவர்களுடன் பேசவே வாய்ப்பு கிடைத்தது.
அந்த திருநங்கையுடன் மிகவும் முக்கியமான விடயம் ஒன்றைப் பற்றி பேச வேண்டும் என்று அவரை அழைத்துச் சென்றவன் தனது நிலையைப் பற்றி அவரிடம் எடுத்துச் சொல்லி அழ அவனது தோளைத் தட்டி அவனுக்கு ஆறுதல் சொல்லியவர், “நம்மளை மாதிரி மனுஷங்களை மனுஷங்க மாதிரி நடத்த, ஏன் நினைக்க கூட நம்ம குடும்பத்து ஆளுங்க முன் வரமாட்டாங்க தம்பி. அப்படி நினைச்சு வந்தாங்கன்னா அதெல்லாம் வரப்பிரசாதம். பெரும்பாலான குடும்பத்து ஆளுங்க நம்ம இப்படி இருக்கிறது அவங்களுக்கு கௌரவ குறைச்சல்ன்னு நினைப்பாங்களே தவிர, அவங்க சொந்தப் பிள்ளையோட உணர்ச்சி, ஆசை, கனவு இப்படி எல்லாவற்றையும் நம்ம மண்ணோடு மண்ணாக்குறோம்ன்னு தெரியுறதே இல்லை. நானும் உன்னைப் போல பல கஷ்டங்களைத் தாண்டித் தான் ஒரு திருநங்கையாக இந்த சமூகத்திற்கு முன்னாடி இருக்கேன், ஆனா இந்த சமூகத்தில் இன்னமும் நம்ம ஒரு சக மனிதனாகப் பார்க்கப்படலேங்கிறது வேறு கதை.
உன்னோட குடும்பப் பின்னணியைப் பார்த்தால் உனக்கு யாருமே துணையாக இல்லைன்னு தெளிவாகத் தெரியுது, ஆனா நீ முழுமையாக ஒரு பொண்ணாக மாறணும்னா அதற்கு நிறைய செலவு ஆகுமேப்பா, அந்தளவிற்கு உன்கிட்ட பணம் இருக்காதுன்னு எனக்குத் தெரியும், நீ முதல்ல அதற்கு ஏற்ற மாதிரி பணத்தை சேமித்து வைக்க இப்போ இருந்து ஆரம்பி, அப்போதான் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வரும் போது நீயும் உன் ஆசைப்படி ஒரு பூரணமான மனிதனாக வாழலாம், நீ உனக்குத் தேவையான பணத்தை சேர்த்த அப்புறம் பூஞ்சோலை நகரில் வைஜயந்தி ம்மா என்று ஒருத்தங்க இருக்காங்க, அவங்களைப் போய் சந்தி, அவங்களும் ஒரு திருநங்கை தான், அவங்க நிச்சயமாக உனக்கு உதவி செய்வாங்க” என்று விட்டு அங்கிருந்து சென்று விட, அவர் சொன்ன பூஞ்சோலை நகர் மற்றும் வைஜயந்தி அம்மா என்கிற இரண்டு பெயரும் அவன் மனதிற்குள் ஆழமாகப் பதிந்து போனது.
அதன் பிறகு வந்த நாட்கள் முழுவதும் தன் படிப்போடு சேர்த்து கடுமையாக உழைக்கத் தொடங்கியவன் இப்போது ஐந்து வருடங்களுக்கு பின்னர் தன் உண்மையான வாழ்க்கையை அடைய வேண்டும் என்கிற நோக்கத்துடன் பூஞ்சோலை நகரை நோக்கிச் செல்ல முடிவெடுத்திருந்தான்.
தன் வீட்டில் உள்ளவர்களிடம் இதைப்பற்றி சொல்வதா? வேண்டாமா? என்று அவன் சிந்தித்துக் கொண்டிருந்த தருணம் அவனது அறை வாயிலில் ஏதோ சத்தம் கேட்கவும் மெல்ல எழுந்து சென்றவன் அது என்னவென்று காது கொடுத்துக் கேட்க, அவன் செவிகளில் விழுந்த வார்த்தைகளோ அவன் முற்றிலும் எதிர்பாராதவை.
அவனது அன்னை, தந்தை மற்றும் பாட்டி, ‘கிருஷ்ணாவை இதற்கு மேலேயும் இங்கே வைத்திருப்பது சரியில்லை. என்றாவது ஒரு நாள் அவன் பெண்ணாகத் தான் வாழப் போகிறேன் என்று பிடிவாதம் பிடிப்பான், அதற்குள் அவனை இந்த ஊரை விட்டு அனுப்பி விடலாம் அப்படி அதற்கு அவன் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவனை இந்தக் குடும்பத்திற்காக உயிர்த்தியாகம் செய்ய வைத்து விடலாம்’ என்று பேசிக் கொண்டிருக்க, அதைக் கேட்ட பின்னர் கிருஷ்ணாவால் அந்த இடத்தில் ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை.
தன் பிள்ளையின் உடலில் ஏற்படும் இந்த ஒரு சிறு மாற்றத்தைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத இவர்கள் மத்தியில் இருந்தும் பயனில்லை என்று எண்ணிக் கொண்டவன் அன்றிரவே தன் வீட்டை விட்டு வெளியேறி பூஞ்சோலை நகரை வந்து சேர்ந்திருந்தான்.
இங்கே வந்து சேர்ந்த பின்னர் தான் சந்தித்த எல்லா நபர்களிடமும் வைஜயந்தியைப் பற்றி கிருஷ்ணா விசாரித்திருக்க, அவர்கள் யாரும் அவனுக்கு எந்தவொரு பதிலையும் சொல்லாமல் அவனைக் கடந்து சென்றிருந்தனர்.
யாரிடம் சென்று என்ன கேட்பது என்று தெரியாமல், அடுத்து என்ன செய்வது என்றும் தெரியாமல் தவிப்போடு கிருஷ்ணா நின்று கொண்டிருந்த தருணத்தில் தான் அருந்ததி அவன் முன் வந்து சேர்ந்திருந்தாள்.
தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை சொல்லி முடித்து விட்டு கிருஷ்ணா அருந்ததியை நிமிர்ந்து பார்க்க, அதே சமயம் அருந்ததி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “நீ வரவேண்டிய இடத்திற்குத்தான் வந்திருக்க கிருஷ்ணா. வைஜயந்தி என் அம்மாதான். நான் உன்னை அவங்ககிட்ட கூட்டிட்டுப் போறேன்” என்று கூற,
அவளை ஆச்சரியமாகப் பார்த்த கிருஷ்ணா, “அம்மாவா? அப்படின்னா நீங்களும்?” அவளை கேள்வியாக நோக்க,
அவனைப் பார்த்து புன்னகை செய்தவள், “ஹான், நானும் ஒரு மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஆளு தான்” என்று நிமிர்வோடு அவனைப் பார்த்து கூறினாள்………