பூந்தளிர் ஆட… 2

பூந்தளிர் ஆட… 2

பூந்தளிர் – 2

அடங்காமல் அலை அலையாக இருந்த கருமையான கேசத்தை இடதுபுறம் வகிடெடுத்து வாரி அடக்கியிருந்தான் அரவிந்தலோசனன். இருபத்தியைந்து வயதென எண்ணத் தோன்றும் அளவான மீசை, கூர்மையான நாசி, இதழ்களுக்கு போட்டியாக கண்களும் சிரிக்க ஐந்தரை அடியில், மாநிறத்தில் பார்ப்பவர் மதிக்கும் தோரணையில் புன்னகை மன்னனாக வந்தமர்ந்தான்.

இன்று இவனுக்கு பெண் பார்ப்பது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கனவே மதுரை ஆலங்குளத்திலும் திருப்பரங்குன்றத்திலும் தமக்கைகள் மற்றும் மாமன்களோடு கோவிலில் வைத்து இரண்டு பெண்களைப் பார்த்திருக்கிறான்

அப்போதெல்லாம் தோன்றாத ஓர் ரசனையான பூரிப்பான உணர்வு இப்பொழுது தன்னை ஆட்டி வைப்பதை எண்ணி அவனுக்கே சற்று விந்தையாகத் தான் இருந்தது. தோற்றத்தில் மயங்கி, கண்டதும் காதல் கொள்ளும் வயதை எல்லாம் தாண்டிய பிறகு, கல்யாணச் சந்தையில் களம் இறக்கப்பட்டவனுக்கு இவையெல்லாம் புரியாத புதிராகவே தெரிந்தன.

“உங்க அத்தே வழியில தூரத்து உறவுமொற பெரியம்மா ஒருத்தவுக வீட்டுக்கு வந்தாகய்யா… உங்க அத்தைய (வி)சாரிக்க வந்த நேரத்துல உனக்கும் பொண்ணு பாக்குறோமுன்னு தெரிஞ்சு, தேனி அல்லி நகரத்துல ஒரு பொண்ணு, அவுக அக்கா வழியில இருக்கான்னு சொல்லி கையோட சாதகமும் தந்துட்டும் போனாக!” பூரிப்பாக கூறி முடித்தார் பரிமளவல்லி.

“பொண்ணு பாக்க அம்புட்டு அழகா இருப்பாளாம் தம்பி. அவுக அம்மா, அக்கா, மாமா எல்லாம் ரொம்ப நல்ல மாதிரியாம்!”

“சேதி தெரியுமா தம்பி? நம்ம அத்தையும் பொண்ணோட அம்மாத்தாவும் சின்ன வயசுல ஒன்னா வளந்தவுகளாம்!”

வாய் நிறைய பெண்ணைப் பற்றி சிலாகித்து பேசிய தாய் தமக்கைகளின் பேச்சில் அரவிந்தனின் மனம் ஆவல் கொண்டது.

அடுத்தடுத்து ஆளுக்கொரு அம்சங்களைச் சொல்லி அவனது வாலிப மனசை தூண்டிலில் மாட்ட வைத்து விட்டார்கள்.

“பொண்ணு வீட்டுக்கு கடைக்குட்டி, நீ மூத்தவன். இதுலயே ஜோடி சேர்ந்து போச்சு!”

“நல்ல பேரெடுத்த குடும்பமாம் தம்பி. போக்குவரத்து தூரமா இருந்தாலும் மனுஷ, மக்க நமக்கு முக்கியம் அரவிந்தா!”

“இந்த பொண்ண கட்டிகிட்டா. நம்ம வூட்டு புள்ளைகளுக்கு தனியா டியூசன் அனுப்ப வேணா ண்ணே!” என்றவாறே சுமதி தடுக்கில் புகுந்தாள்

“புரியல சின்னக்குட்டி!” அரவிந்தன் விளங்காமல் முழிக்க,

“பொண்ணு டீச்சர் படிப்பு படிச்சிருக்குது ண்ணே… கணக்கு டீச்சரா அங்கே இருக்குற இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலுல வேல பாக்குதாகளாம்!” சுமதி நீட்டி முழக்கி கூறியதும் ஆவலில் அலையடித்த உள்ளம் அனலாய் சூடேறிப் போனது.

‘டீச்சரா? கணக்கு டீச்சரா!’ இருமுறை தனக்குள் சொல்லிப் பார்த்தவனுக்கு தனது பள்ளிக்கால நினைவுகள் கொசுவர்த்தி சுருள் இல்லாமலேயே படமாக விரிந்தன.

இவன் படித்து முடித்த பத்தாம் வகுப்பு வரை, கணக்கிலும் அறிவியலிலும் பக்கத்து பெஞ்ச் மாணவனின் புண்ணியத்தில் மட்டுமே தேர்ச்சி பெறுவான். எத்தனை அதட்டி, உருட்டி, மிரட்டி, அன்போடு கூறினாலும் கணிதமும் விஞ்ஞானமும் இவனது அஞ்ஞானத்தில் ஏறவே இல்லை.

தந்தையின் அகால மறைவும் குடும்பச் சூழ்நிலையும் இவனது படிப்பிற்கு மூடுவிழா நடத்திவிட, அன்றே ஏட்டுக் கணக்கையும் மறக்கத் தொடங்கினான்.

இப்பொழுதும் தங்கை சுமதிதான் அனைத்து வரவு செலவுகளையும் பொறுப்பாக நோட்டிலும், கணிணியிலும் ஏற்றி வைத்து இவனது நிதிமந்திரியாக செயல்பட்டு வருகிறாள்.

மனம் வேகமாக பழைய கணக்கைப் போட, அப்போதே பொங்கிவிட்டான். “எம்மோவ்… ஊர் மெச்சுற படிக்காதமேதைய, போயும் போயும் ஒரு கணக்கு டீச்சர்கிட்ட புடிச்சு குடுக்க பாக்குறியே!” குரலில் சுருதியேற்றி பேசியவன்,

“சுதாக்கா, உந்தம்பி மேல இம்புட்டுத்தேன் பாசமா? எடுத்து சொல்லுத்தா… காவி கட்டி காசிக்கு போனாலும் போவேனே ஒழிய, டீச்சருக்கு வாக்கப்பட மாட்டேன்னு!” சிலிர்த்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டவனை ஒரு பொருட்டாக கூட யாரும் பார்க்கவில்லை.

“எம்மா… இதுக்குத்தேன் பொண்ணு போட்டோவ வாங்கி வைக்க சொன்னேன். இப்ப பாரு இவேன் என்ன சொல்லுதாண்டு!” சுதாமதி நொடித்துக் கொண்டு பேச,

“எக்காவ்… உந் தம்பிய என்னன்டு நினைச்ச நீயி? அவ எந்தூரு அழகியா இருந்தாலும் எனக்கு வேணாம்ன்னா வேணாம்தான்!” சற்று காட்டத்தோடு கூற,

“ஆத்தீ… எந் தங்ககம்பிக்கு கோவம் வந்துதுருச்சு த்தா!” தாடையில் கை வைத்து அங்கலாய்த்தாள் சாருமதி.

அவள் இப்படி சொன்னதற்கும் காரணம் உண்டு. அரவிந்தனுக்கும் கோபத்திற்கும் அத்தனை தூரம். அனைவரிடத்திலும் சிரித்துப் பேசியே காரியங்களை நடத்தி விடுவான். தேர்ந்த வியாபாரி, பொறுப்பான குடும்பஸ்தன் என்ற தனது நிலையை நொடிக்குநொடி தனது மனதில் பதியவைத்தே செயலாற்றுபவன்.

“ஒருக்கா பொண்ணை பாத்துட்டு சொல்லுவோம் ராசா!” தன்மையாக எடுத்துக் கூறிய பரிமளம்,

“ஆத்தா மீனாச்சி! என் மவனுக்கு இந்த சம்பந்தம் எப்படியாவது முடிஞ்சிடணும். உனக்கு பொங்க வைச்சு படையல் போடுறேன் தாயீ!” அவசரமாக மீனாட்சிக்கு ஒரு வேண்டுதல் விண்ணப்பத்தையும் வைத்தார்.

“போடா போக்கத்தவனே! நல்ல சங்கதி பேசும்போது உழட்டிட்டு கெடக்கான் பாரு!” கண்டனக்குரலை எழுப்பிய மனோன்மணி அத்தை,

“இங்காரு அரவிந்தா… பொண்ண போயி பாக்குதோம், புடிச்சு போச்சுன்னா அங்கனயே பூ முடிக்க பேசிட்டு வாரோம். அம்புட்டு தான் சொல்லிபுட்டேன்!” முடிவாகவே பேசிவிட்டார்.

வராத கண்ணீரை எல்லாம் துடைத்துப் போட்டுவிட்டு வீட்டுப் பெண்களின் ஆசைக்கு செவி சாய்த்து இதோ பெண்ணைப் பார்ப்பதற்கும் வந்து அமர்ந்து விட்டான் அரவிந்தன்.

உள்ளுக்குள் பல கற்பனைகளை சுமந்தபடி பெண்ணைப் பற்றிய எண்ணவோட்டத்தை அடக்கிக் கொண்டு மிக நல்ல பிள்ளையாக வந்தவன், தான் கொண்டு வந்திருந்த மசாலா பாக்கெட்டுகள் அடங்கிய தங்களது மசாலா பெயர் பொதித்த பெரிய வெள்ளை துணிப்பையினை கோவர்த்தனனிடம் நீட்டினான்.

“எங்கன போனாலும் நம்ம அன்பளிப்பா இத கொடுப்போம்ண்ணே… தயங்காம வாங்கிக்கங்க!” இன்முகத்தோடு கொடுத்ததில் பெண் வீட்டினர் அனைவரின் மனதிலும் நல்லவிதமாக பதிந்து போனான்.

“பொண்ணு பாக்க வார இடத்துலேயும் மார்க்கெட்டிங் பண்ண பையை தூக்கிட்டு வந்துட்டாப்படி நம்ம மச்சான்.” சுதர்சன், முகிலனின் காதினைக் கடிக்க,

“பிசினஸ் டெக்னிக்கு தம்பி, உனக்கும் எனக்கும் சுட்டு போட்டாலும் வராது!”

“அப்படி வந்தா நீங்களும் நானும் ஏன் இங்கன கெடக்கோம்!” குசுகுசுவென்று பேசியவர்களை சுமதி முறைக்க, சுதர்சனின் வாய் தன்னால் பூட்டு போட்டுக் கொண்டது.

இவன் வரும் நேரத்திற்கு சற்று முன்னர்தான் பெண் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டு இருந்தாள். கிருஷ்ணா உள்ளறையில் இருந்தவாறே ஜன்னல் வழியாக முன்னறையில் நடப்பதை பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.

சரியாக அவள் கண்ணில் படுமாறு நாற்காலியை மாற்றிபோட்டு அமர வைத்திருந்தாள் சுமதி. அவளின் அனுபவம் விளையாட்டாய் அதை செய்ய வைத்திருந்தது.

சாம்பலநிற சட்டையும், மஸ்கட்நிற ஜீன்சும் அணிந்து முகத்தில் வைத்த மெல்லிய குங்குமத் தீற்றில், எந்தவித அலட்டலும் இல்லாமல் புன்னைகையுடன் அமர்ந்து இருந்தவனைப் பார்த்ததும் நல்லதொரு அபிப்பிராயம் வந்தது பெண்ணிற்கு.

மாப்பிள்ளை வீட்டினர் பெருமையாக சொன்னதை விட கூடுதல் அம்சத்துடன் இருப்பது போலவே தோன்றியது கிருஷ்ணாவிற்கு.

“சித்தி, இவருதான் பாட்டி சொன்ன மதுரவீரன் மாமாவா?” அக்காபெண் சாத்விகா கேட்ட தினுசில் பக்கென்று சிரித்தாள் கிருஷ்ணா.

“இவர பாத்தா அருவா தூக்குறவக மாதிரியா தெரியுது? காலேஜுல பாடம் எடுக்கற புரொபசராட்டம் ஜம்முன்னு இருக்காக!” தன்னை மறந்து கூறியவளை ஓரப் பார்வையில் அக்கா கோமளவல்லி பார்க்க, சட்டென்று தலைகுனிந்து கொண்டவள்,

‘ஆத்தி… இந்தக் கூட்டம் கெளம்பிப் போற வரைக்கும் மாப்பிள்ளயை ஏறெடுத்தும் பாக்கக் கூடாது.’ மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.

“ஏன்டி? வந்த வேலைய பாக்காம கெழவிக ரெண்டும் ஊர் கதைய பேசுது. உந்தொம்பி என்னமோ இப்பத்தேன் அதானி குருப்புக்கு டஃப் குடுக்கறவனாட்டம் பிஸினஸ் நியூஸ் பேசிட்டு வாய் வளக்கான்! சட்டுபுட்டுன்னு பொண்ண பாத்து முடிக்க சொல்லு. ஊரு போயி சேரணும்.” கதிரவனின் முணுமுணுப்பில் பெரியவர்களும் சமயசந்தர்ப்பத்தை அறிந்து கொண்டு சபையில் பெண்ணை வரவழைத்தார்கள்.

“மாப்ளே… செத்தநேரம் உன் மசாலா மூளைய ஒறங்க விட்டு, ஆம்பளையா கண்ணு முழுச்சு பொண்ணைப் பாரு! ஊருக்கு போயி சேந்த பொறவு, பொண்ணு இடதுகண்ணு பாக்கல, வலதுகால பாக்கலன்னு லந்து பண்ணிட்டுத் திரியக்கூடாது!” முகிலன் காதினைக் கடித்த நேரத்தில் பெண்ணும் வந்து நின்று விட்டாள்.

மஞ்சள் பூசிய இயற்கையான நிறத்தில் ஐந்தேகால் அடி வாளிப்பான தோற்றத்தில் அடர்ந்த கூந்தல் இடைதாண்டிப் பின்னலிடப் பட்டிருக்க, மெல்லிய இடையை வெள்ளி ஒட்டியாணம் தழுவி இருந்தது.

வில்லென வளைந்த புருவங்களின் இடையே நீள் வடிவ ஆண்டாள் ஸ்டிக்கர் பொட்டும் அதற்கு கீழும் மேலும் குங்குமம், விபூதியை மெலிதாக தீற்றி இருந்தாள்.

பட்டுப்புடவை அணிந்து பகட்டினை காட்டாமல், தாமரைநிற சில்க் காட்டனில் பச்சைநிற பார்டரில் மெல்லிய தங்கயிழை இழையோடிருந்த சேலையை சுற்றி இருந்தாள் கிருஷ்ணா. பெண்ணின் ஒப்பனையும், நகைகளும் மிகவும் எளிமையாக கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

“அண்ணே… நாங்க எல்லாம் பார்த்து வேணுங்கிற அளவுக்கு பேசியும் முடிச்சாச்சு. வெரசா நீயும் ஸ்கேன் பண்ணிக்கோ. சட்டுன்னு உள்ளே போயிடுவாக!” சுமதி காதினைக் கடித்த நேரத்தில் தலைநிமிர்த்திப் பார்த்தான் அரவிந்தன்.

அவள் தலைகுனிந்து நின்றதில் முகம் முழுதாய் தெரியாமல், கண்களை இமைகள் மூடியிருக்க, இவனுக்குள் அவஸ்தை தொற்றிக் கொண்டது.

முழுமதி முகத்தை பார்த்தால் தானே அழகை ரசிக்க முடியம். பற்றாக்குறைக்கு பின்னலில் சூட்டபட்டிருந்த குண்டு மல்லிச்சரம் பெண்ணின் தோளினை உரசிக் கொண்டு முன்னால் வந்து விழுந்து, ஒருபக்க கழுத்தும் மறைந்தும் போனதில் மிகப்பெரிய மனக்குறைதான் மாப்பிள்ளைக்கு!

‘கண்ணுக்கு தெரிந்தவற்றை பார்த்து வைப்போம்.’ என பார்வையை தளர்த்திக் கொண்டதில், பெண்ணின் கழுத்தில் ஒற்றைச் சங்கிலியும் மெல்லிய பிளாட்டின ஹாரமும் அழகாய் வீற்றிருந்ததைக் கண்டான்.

காதினை அலங்கரித்த தங்க ஜிமிக்கியில் மனம் ஊஞ்சலாடியது. இரு கைகளில் நான்கைந்து மெல்லிய தங்க வளையல்கள். அவ்வளவுதான். பெண்ணின் ஒப்பனை முடிந்தது எனும் விதமாக இவனும் பார்த்து முடித்தான்.

‘ஏற்கனவே லட்சணமா இருக்கிறதால சிம்பிளா இருந்தாலும் அம்சமா தெரியுறாக போல… அவுக சுபாவமும் இப்படிதானோ!’ மனம் உள்ளுக்குள் பெண்ணைப் பற்றி கணித்துக் கொண்டது.

மாப்பிள்ளை நடத்தியதை போன்ற பார்வை ஊர்வலத்தை பெண்ணவளால் நடத்திட முடியவில்லை. அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக,

“நாம எல்லாரும் சுத்தி இருந்தா புள்ளைக ரெண்டும் பாத்துக்கவும் செய்யாது. என்ன விசாலம் புள்ளைகள தனியா போயி பேசிட்டு வர சொல்லுவோமா?” பெண்ணின் பாட்டியிடத்தில் நேரடியாகவே கேட்டுவிட்டார் மனோன்மணி.

“அதுக்கென்ன மணி, தாராளமா போயி பேசட்டும்.” என சம்மதிக்கவும் உள்ளறையில் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

error: Content is protected !!