தீயாகிய மங்கை நீயடி – 16

ei34NQ073963-81c55298

தீயாகிய மங்கை நீயடி – 16

அருந்ததி வெகு நேரமாக அந்தக் குழந்தைகளை அணைத்திருப்பதைப் பார்த்து சிறு தயக்கத்துடன் அவளது தோளில் தன் கையை வைக்கப் பார்த்த சிவகுரு சிறிது நேர சிந்தனைக்கு பின்னர் தன் கையைப் பின்னிழுத்து விட்டு, “அருந்ததி! இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்கிறதாக உத்தேசம்?” என்று வினவ,

அவனது குரல் கேட்டு தன் அணைப்பில் இருந்து அந்தக் குழந்தைகளை விடுவித்தவள், “தெரியலைங்க, இவங்க கூடவே இப்படியே இருந்து விடலாம் போல இருக்கு” என்று கூற, அவனோ அவள் சொன்னதைப் புரிந்து கொள்ள முடியாமல் அவளைக் குழப்பமாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“முதல்ல இவங்களை உள்ளே அனுப்பி வைக்கலாம், ரொம்ப நேரமாக வெளியே இருக்கிறாங்க” என்றவாறே அங்கிருந்த குழந்தைகளின் மேற்பார்வையாளர்களை வரச்சொல்லி விட்டு அவர்களிடம் குழந்தைகளைப் பொறுப்புக் கொடுத்தவன் அருந்ததியை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் நடந்து செல்ல ஆரம்பித்தான்.

சிவகுருவும், அருந்ததியும் நடந்து சென்று கொண்டிருந்த அந்தத் தருணம் மௌனம் மாத்திரமே அவர்கள் இருவரையும் சூழ்ந்திருக்க, அந்த மௌனத்தைக் கலைப்பது போல சிவகுரு தன் தொண்டையை லேசாக செருமிக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“க்கும்… என்னாச்சு அருந்ததி? நானும் நீங்க வந்ததிலிருந்து பார்க்கிறேன் ரொம்ப அமைதியாகவே இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?”

“சேச்சே! அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க, இந்த இடத்திற்கு வந்ததிலிருந்து மனசு அப்படியே இலேசானது போல இருக்கு, ஏதோ ஒரு புதுவிதமான உணர்வு. அதுதான் அந்த உணர்வை ஆழ்ந்து ரசிச்சுட்டு இருக்கேன்”

“முதல் தடவை இங்கே வந்ததற்கே உங்க கிட்ட இவ்வளவு மாற்றமா? பரவாயில்லையே! ஒருவேளை இங்கே நீங்க இதற்கு முன்னாடியும் வந்திருக்கீங்களா?”

“சேச்சே! இல்லைங்க. இவ்வளவு காலமாக இந்த ஊரில் இருக்கேன், இப்படி ஒரு இடம் இங்கே இருக்கிறதே எனக்கு இன்னைக்குத் தான் தெரியும். அதுசரி, நீங்க அடிக்கடி இங்கே வருவீங்களோ?”

“அப்படி சொல்லிட முடியாது, வாரத்திற்கு இரண்டு, மூணு தடவை வருவேன், அதே மாதிரி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை எனக்கு என்ன வேலை இருந்தாலும் அதை எல்லாம் விட்டுட்டு கண்டிப்பாக இங்கே வந்துடுவேன்”

“ஓஹ்! அப்போ இது உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு சொந்தமான இடமாகத் தான் இருக்கும், கரெக்டா?” அருந்ததியின் கேள்வியில் சிரித்துக் கொண்டே தன் கைகளைத் தட்டியவன்,

“நீங்க ப்ரிலியண்ட் தான், நான் ஒத்துக்கிறேன். நீங்க சொன்னது சரிதான், இது எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமானவங்களுக்குச் சொந்தமான இடம் தான். எங்க அம்மாவோடது” என்று கூற, அவளோ அவனை ஆச்சரியமாகத் திரும்பிப் பார்த்தாள்.

“என்னங்க சொல்லுறீங்க? உங்க அம்மாவோடதுனா உங்களுக்கும் சொந்தமானது தானே?”

“அப்படியும் சொல்லலாம், ஆனா இந்த இடத்தை ஆரம்பிக்கிறதிலிருந்து இப்போ வரைக்கும் இந்த இடத்தை மேற்பார்வை செய்து வருவது எல்லாமே எங்க அம்மா தான், ஷோ அவங்க தான் முதல் உரிமையாளர்”

“நீங்க இருக்கீங்களே, எதையும் நேரடியாகவே சொல்ல மாட்டீங்க. சுற்றி வளைத்துத் தான் சொல்லுவீங்க”

“என்ன பண்ணுறது? அதுதான் நம்ம சிறப்பு” சிவகுருவின் பேச்சில் சிறு புன்னகையுடன் அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டவள்,

“கொஞ்ச நேரம் இப்படி உட்கார்ந்து இருக்கலாமே?” என்று வினவ, அவனும் புன்னகையுடன் அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு அவளுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

“இந்தக் காலத்தில் இப்படியான மனது இருக்கும் நல்லவங்களைப் பார்க்கிறது ரொம்ப ரொம்ப அரிதான விஷயம். நிச்சயமாக ஒருநாள் உங்களோட அம்மாவை நான் சந்தித்து அவங்களுக்கு பாராட்டு சொல்லியே ஆகணும்” அருந்ததி சிறு பிரமிப்புடன் அந்த இடத்தை நோட்டம் விட்டபடியே சிவகுருவைத் திரும்பிப் பார்க்க,

அவனோ எப்போதும் போல அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு, “ஆனா எங்க அம்மா இந்தப் பாராட்டை எல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டாங்க, ஏன்னா இந்த இடத்தை உருவாக்குவதற்கு அவங்களைத் தூண்டிய காரணம் அப்படியான ஒன்று” என்று கூற, இப்போது அவனது பேச்சைக் கேட்டு அருந்ததி சற்றுக் குழம்பித்தான் போனாள்.

“என்னங்க சொல்லுறீங்க? எனக்கு எதுவும் புரியலையே”

“உங்க கிட்ட இந்த விஷயத்தை மறைத்து வைத்து என்ன ஆகப்போகிறது? ஒரு வகையில் ஆபத்தில் இருந்த இந்த இடத்தை மீட்டுத் தந்ததே நீங்க தானே?”

“சத்தியமாக நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலைங்க”

“நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லுறேன், அப்போ எல்லாம் புரியும்” என்றவன் தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு அந்த இடத்தை ஆரம்பித்தற்கான காரணத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினான்.

“ஆக்சுவலி நான் உங்க கிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன், எங்க தாத்தா, பாட்டிக்கு எங்க அம்மா மட்டும்தான் ஒரே பிள்ளைன்னு சொன்னேன் இல்லையா? ஆனா உண்மையாக எங்க அம்மாவுக்கு கூடப்பிறந்த ஒரு தங்கச்சியும் இருந்தாங்க, அதாவது எங்க அம்மாவும், சித்தியும் இரட்டைக் குழந்தைகள்.

பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் கிடைச்சுடுச்சுன்னு எங்க தாத்தாவுக்கு ரொம்ப சந்தோஷமாம், அதுவும் இரண்டும் பெண் குழந்தைகள்ன்னு தெரிஞ்சதும் எங்க தாத்தா அவ்வளவு சந்தோஷமாக இருந்தாராம், ஆனா சந்தோஷம் அவங்க யாருக்கும் ரொம்ப நாளைக்கு நிலைச்சு இருக்கல, எங்க அம்மாவும், சித்தியும் வளர வளரத் தான் எங்க சித்திக்கு ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்குன்னு தாத்தா, பாட்டிக்கு தெரிய வந்திருக்கு, அப்போ எல்லாம் அவ்வளவு வசதிகளோ, படிப்பறிவோ அவங்க கிட்ட இருக்கல, இருந்தும் அவங்க குழந்தைக்கு ஏதோ பிரச்சினைன்னு தெரிந்ததும் அவங்க ஊரில் இருந்த பெரிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போய் அவங்களை பரிசோதித்துப் பார்த்திருக்காங்க, அப்போதான் எங்க சித்திக்கு மனவளர்ச்சி போதாதுன்னு கண்டுபிடிச்சாங்க.

அந்த உண்மையைக் கேட்டதிலிருந்து தாத்தா, பாட்டிக்கு பாதி உயிரே போயிடுச்சு. இருந்தாலும் எங்க அம்மாவுக்கு அது எதுவுமே தெரியாது இல்லையா? தாத்தா, பாட்டி கலங்கிப் போய் நிற்கிறதைப் பார்த்துட்டு அவங்க எப்போதும் போல தன்னோட தங்கச்சி கையைப் பிடித்துக் கொண்டு,’தங்கச்சி பாப்பவை நான் நல்லாப் பார்த்துப்பேன்பா, நீங்க இரண்டு பேரும் அழாதீங்க. நான் அவளுக்கு உடம்பு சரி பண்ண வைச்சுடுவேன்னு’ அவங்க சொன்ன அந்த வார்த்தை தான் அப்போ எங்க தாத்தா, பாட்டிக்கு பெரிய ஒரு ஆறுதலே. ஒரு குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்துடுச்சுன்னு அவங்க அந்தக் குழந்தையை வெறுக்கல, முதல் இருந்ததை விட இன்னும் இன்னும் பாசமாக அவங்களைப் பார்த்துக்க ஆரம்பிச்சிருக்காங்க. அப்படியே நாள் நகர்ந்து போக ஆரம்பிக்க, எங்க அம்மாவும் வளர்ந்து ஸ்கூல் போய் வர ஆரம்பிச்சிருக்காங்க, அப்போ தான் அவங்க யாருமே நினைக்காத அந்த ஒரு நாள் அவங்களைத் தேடி வந்தது” தன் அன்னை மூலமாக தான் அறிந்த அந்த விடயங்களின் தாக்கத்தினால் தன் கண்களை மூடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், பின்னர் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மேலும் சொல்ல ஆரம்பித்தான்.

“அந்தக் கோரமான சம்பவம் நடக்கும் போது எங்க அம்மாவுக்கும், சித்திக்கும் எட்டு வயது. எங்க அம்மா எப்போதும் போல ஸ்கூலில் படித்துக் கொடுக்கும் பாடத்தை வீட்டிற்கு வந்து எங்க சித்தியைக் கூப்பிட்டு தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவங்களுக்கும் சொல்லிக் கொடுத்து, தானும் படிக்கிறது தான் பழக்கம், அன்னைக்கும் வழக்கம் போல எங்க சித்தியும், அம்மாவும் வீட்டு முற்றத்தில் இருந்து படிச்சுட்டு இருக்கும் போது பாட்டி ஏதோ ஒரு வேலையாக அம்மாவை சமையலறைப் பக்கமாக கூப்பிட்டு இருக்காங்க, எங்க அம்மாவும் எப்போதும் போல அங்கே போய் பாட்டி சொன்ன வேலையை செய்து முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்திருக்காங்க, சித்தியை அவங்க இருந்த இடத்தில் காணோம். ஒரு நிமிஷம் அவங்களுக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியாமல் உடனே போய் இதை பாட்டி கிட்ட சொல்ல அவங்க தாத்தாவைத் தேடி தோட்டத்துப் பக்கம் போயிட்டாங்க. எங்க அம்மாவும் இன்னொரு பக்கம் அவங்க வழக்கமாக விளையாடப் போகும் பக்கமாக சித்தியைத் தேடி ஓடி இருக்காங்க, அங்கே அவங்க…” என்று கூறும் போதே சிவகுருவின் குரல் மெல்ல நடுங்க ஆரம்பிக்க,

அவனது கையில் தன் கையை வைத்து அழுத்திக் கொடுத்தவள், “உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் இப்போ இதைப்பற்றி பேச வேண்டாம், இன்னொரு நாள் பேசிக்கலாம், விடுங்க” என்று கூற,

அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், “இல்லை அருந்ததி, ஐ யம் ஆல்ரைட்” என்றவன் மேற்கொண்டு சொல்லத் தொடங்கினான்.

“எங்க அம்மா போய் பார்த்த நேரம் எங்க சித்தியை நான்கு, ஐந்து குடிகாரனுங்க சேர்ந்து…சே! ஒரு சின்னக் குழந்தைன்னு கூடப் பார்க்காமல் துடிக்க துடிக்க அவங்களை நாசம் பண்ணிட்டானுங்க. அந்த வயதில் அங்கே என்ன நடந்ததுன்னு கூட எங்க அம்மாவுக்கு தெரியாது, ஆனா தன்னோட தங்கச்சிக்கு ஏதோ நடக்கக் கூடாதது நடக்குதுன்னு தெரிந்ததும் உடனே தான் வந்த வழியிலேயே ஓடிப் போய் வழியில் தான் கண்டவங்களையும், பாதி தூரத்தில் வந்து கொண்டிருந்த எங்க தாத்தா, பாட்டியையும் அழைச்சிட்டு அந்த இடத்திற்கு வந்திருக்காங்க, ஆனா அதற்கிடையில் எங்க சித்தியோட உயிர் போயிடுச்சு. அதை எல்லாம் பார்த்ததுமே அங்கேயிருந்த அத்தனை பேரும் கோபத்தோடு அவனுங்க அத்தனை பேரையும் அடிச்சது மட்டுமில்லாமல் அந்த இடத்திலேயே உயிரோடு எரிச்சுட்டாங்க”

“என்ன?” சிவகுரு இறுதியாக சொன்ன விடயத்தைக் கேட்டு அருந்ததி திகைத்துப்போய் நிற்க,

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன், “உங்க காதில் விழுந்த வார்த்தைகள் சரிதான் அருந்ததி, அந்தக் கயவர்களை மொத்த ஊரும் சேர்ந்த கபளீகரம் செய்துட்டாங்க. அப்போ இருந்த அந்த ஊர்க்காரங்க எல்லோரும் ரொம்ப ஒற்றுமையானவங்க, அதனால எங்க சித்தியை அடக்கம் பண்ண அதே இடத்தில் அந்த கயவர்களோட தடயங்களையும் மொத்தமாக அழித்து மறைச்சுட்டாங்க. அவனுங்க அந்த ஊரைச் சேர்ந்த ஆளுங்களே இல்லை, அதனால அவங்களைத் தேடி யாரும் வரவும் இல்லை, அதற்கு அப்புறம் அவனுங்களைப் பற்றி யாரும் பேசியதும் இல்லை.

ஆனாலும், எங்க அம்மாவால் அந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ளவே முடியல. சொந்த அம்மா, அப்பா, அக்கான்னு எல்லாரோட அரவணைப்பும், பாதுகாப்பும் இருந்தும் அந்த சின்ன உயிரை அவங்களால் காப்பாற்ற முடியாமல் போயிடுச்சு. அப்போ இந்த உலகத்தில், இந்த ஊரில் அவங்களை மாதிரி இன்னும் எவ்வளவோ குழந்தைகள் இருக்காங்க, அதுவும் எந்த ஒரு அரவணைப்பும், பாதுகாப்பும் இல்லாமலே. அப்போ அப்படியான குழந்தைகளை யாரு பாதுகாக்க முடியும்? அவங்களுக்கு யாரு அடைக்கலம் கொடுக்க முன் வருவாங்க? சில பெற்றவங்களே அந்தக் குழந்தைகளை அநாதாரவாக விட்டதற்கு அப்புறம் வேறு யாரு அவங்களைப் பார்த்துக்கப் போறாங்க? அதனாலதான் எங்க அம்மா ஒரு முடிவு எடுத்தாங்க, இனி எக்காரணத்தைக் கொண்டும் இன்னொரு உயிர் இப்படி அநியாயமாக பழி போகக் கூடாதுன்னு. எங்க அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் தன்னோட மனதில் இருந்த இந்த விடயத்தை அவங்க கிட்ட சொல்லி அடுத்த வாரமே இந்த நிலத்தை அம்மா பேரில் வாங்கிக் கொடுத்து இந்த இல்லத்தை கட்டுவதற்கான எல்லா வேலைகளையும் தொடங்கிட்டாங்க. இப்படி எங்க அப்பா, அம்மாவோட முழு முயற்சியால் உருவானதுதான் இந்த காயத்ரி இல்லம்” என்று கூற,

அருந்ததி சிறு புன்னகையுடன், “காயத்ரி உங்க சித்தியோட பேரா?” என்று வினவ, சிவகுருவின் தலை ஆமோதிப்பாக அசைந்தது.

“ஆனா இதில் என்னோட பங்களிப்பு என்ன இருக்கு? இதுவரைக்கும் நான் இந்த இடத்திற்காக எந்த ஒரு உதவியும் செய்ததே இல்லையே?” அருந்ததி இன்னும் தன் குழப்பம் தீராதவளாக சிவகுருவின் முகத்தைப் பார்க்க,

அவனோ, “நீங்க நேரடியாக எந்தப் பங்களிப்பையும் செய்யல, ஆனா மறைமுகமாக ஒரு பெரிய பங்களிப்பு இருக்கு” என்று விட்டு மீண்டும் அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தான்.

“என்னன்னு சொல்லுங்க? இல்லைன்னா என் தலை இப்போவே வெடிச்சுடும் போல இருக்கு”

“ஓகே, ஓகே கூல். நானே சொல்லுறேன். இந்த இடம் எப்படி முழுக்க, முழுக்க எங்க அம்மா, அப்பாவோட முயற்சியால் உருவானதோ, அதே மாதிரி இங்கே வர்ற செலவுகளும், மற்ற விடயங்களுமே எங்களோட பொறுப்புத்தான். அதனால நாங்க வெளியே யாருகிட்டேயும் இந்த இடத்தைப் பராமரிக்க எந்தவொரு உதவியும் கேட்டது இல்லை. எங்க பிசினஸ் மூலமாக வர்ற இலாபத்தில் ஒரு பங்கும், எங்க அம்மா பேரில் இருக்கும் நிலம் இருக்கே அது மூலமாக வர்ற மொத்த இலாபத்தையும் தான் இந்த இடத்திற்கான பராமரிப்பு செலவுக்காக பயன்படுத்துறோம். அதனாலதான் அந்த நிலத்தில் ஒரு பிரச்சனை வரப்போகிறதுன்னு தெரிஞ்சதும் அவசர அவசரமாக அந்தப் பிரச்சினையை நாங்க தீர்க்கப் பாடுபட்டோம். இப்போ புரிஞ்சதா? நீங்க எப்படி இந்த இடத்தைக் காப்பாற்ற உதவி இருக்கீங்கன்னு” சிவகுருவின் கேள்வியில் தன் கலங்கிய கண்களைத் துடைத்து விட்டபடியே அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள்,

“எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலைங்க, இந்தக் குழந்தைகளுக்காக என்னால பெரியளவில் எதுவுமே செய்ய முடியாதோன்னு ரொம்ப கவலைப்பட்டேன், ஆனா எனக்கே தெரியாமல் இவ்வளவு பெரிய காரியத்தை நான் செய்திருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாகவும், அதே சமயம் மனதுக்கு ரொம்ப திருப்தியாகவும் இருக்கு” என்று கூறி விட்டு,

“ஆனா இதற்கு எல்லாம் முக்கியமான காரணம் நீங்க தான். நீங்க மட்டும் உங்க கேஸை வாதாட சொல்லி என்னைக் கேட்டு வரலேன்னா இது எல்லாம் சாத்தியமே இல்லை. அதோடு இதுவரைக்கும் அந்த கோர்ட்டில் இருக்கும் ஒரு தூண் போலவும், மரம் போலவும் ஏதோ ஒரு கடமைக்கென அங்கேயிருந்த எனக்கு எனக்கான பாதையை ஏற்படுத்த ஆரம்பகர்த்தாவாக இருந்ததும் நீங்க தான், அது எல்லாவற்றிற்குமே ரொம்ப ரொம்ப நன்றி. இதைச் சொல்லத்தான் நான் உங்களைத் தேடி வந்தேன், ஆனா நீங்க நான் வாழ்நாளிலேயை எதிர்பார்க்காத ஒரு பெரிய மனநிறைவான பரிசை எனக்குக் கொடுத்திருக்கீங்க. அதற்கும் ரொம்ப ரொம்ப நன்றி” எனவும், அவனோ தன் சிரம் தாழ்த்தி அதை ஏற்றுக் கொள்வது போல பாவனை செய்து கொண்டு நின்றான்.

“சரிங்க சிவகுரு பிரசாத், எனக்கு ரொம்ப நேரம் ஆகிடுச்சு, நான் வீட்டுக்கு கிளம்புறேன், மறுபடியும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம்” என்றவாறே அருந்ததி அங்கிருந்து எழுந்து கொள்ள,

“அருந்ததி ஒரு நிமிஷம், நீங்க எங்களுக்குப் பண்ண உதவிக்கு உங்களுக்கு நன்றி என்கிற ஒரு வார்த்தையை சொல்லி முடித்து விட முடியாது, அதனால உங்களை உங்க வீடு வரைக்கும் டிராப் பண்ணுற ஒரு உதவியையாவது செய்ய எனக்கு அனுமதி தர முடியுமா?” என்றவாறே சிவகுரு அவளெதிரில் வந்து நிற்க, அவனைப் பார்த்து மறுப்பாக எதுவும் சொல்ல முடியாமல் தவித்துப் போனவள் சிறிது நேர சிந்தனைக்கு பின்னர் அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

“ரொம்ப ரொம்ப நன்றி அருந்ததி” என்றவாறே தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு தன் காரை நோக்கிச் சென்றவன் அவளருகில் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு அவளுக்காக காரின் கதவைத் திறந்து கொடுத்தவன் எதையோ பெரிதாக சாதித்து விட்ட திருப்தியோடு உற்சாகமாக விசிலடித்தபடியே அருந்ததியின் வீட்டை நோக்கி தன் வாகனத்தை செலுத்தத் தொடங்கினான்……..

Leave a Reply

error: Content is protected !!