Mogavalai – 8

Mogavalai – 8
அத்தியாயம் – 8
மறுநாள் காலை வரை ராகவ் ஆர்த்தியின் மௌனம் நீடித்துக் கொண்டே இருந்தது.
“மீரா… மீரா…” என்று ராகவ் குழந்தையின் பெயரை ஏலம் விட, மீரா ராகவை விசித்திரமாகப் பார்த்தாள்.
மீராவைத் தூக்கிக் கொண்டு, அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
“அப்பாவுக்கு…” என்று ராகவ் அவன் கன்னத்தைக் காட்டிக் கேட்க, மீரா அவன் கன்னத்தில் அழகாக இதழ் பதித்தாள்.
மீராவைத் தூக்கிக் கொண்டு, ஆர்த்தி அருகே சென்று, “அம்மாவுக்கு…” என்று ராகவ் கேட்க, குழந்தை தன் தாயின் கழுத்தை கட்டிக் கொண்டு அவள் கன்னத்தில் இதழ் பதித்தது.
ராகவ் மீராவின் காதில் கிசுகிசுக்க, மீரா ஆர்த்தியிடம் தன் கன்னத்தை நீட்டினாள்.
ஆர்த்தி குழந்தையை முத்தமிட, மீரா வேகமாக இறங்கி அறையை விட்டு சந்தோஷமாக ஓடினாள்.
ஆர்த்தி குழந்தையைப் பின்தொடர, அவள் கைகளைப் பிடித்து, “குழந்தைக்கு மட்டும் தானா?” என்று கண்களைச் சுருக்கிக் கேட்டான் ராகவ்.
ஆர்த்தி தலையைத் திருப்பிக் கொள்ள, “நான் ஏதாவது தப்பா சொல்லுவேனா?” என்று அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பி ஆழமான குரலில் கேட்டான்.
“மீராவைப் பத்தி யோசிச்சி அடுத்தக் குழந்தைக்கும் அதே பிரச்சனை வந்துட்டா?” என்று ராகவ் கேட்க, ‘என்ன தான் சொல்ல வராங்க?’ என்ற எண்ணத்தோடு ராகவை அமைதியாகப் பார்த்தாள் ஆர்த்தி.
“தம்பியோ, தங்கையோ பேச ஆரம்பிச்சா மீரா பேச ஆரம்பிச்சிருவா. நீ தான் யோசிச்சு யோசிச்சுப் பிரச்சனையைப் பெருசு பண்ற.” என்று ராகவ் கூற, தலை அசைத்துக் கேட்டுக்கொண்டாள் ஆர்த்தி.
அதன் பின் அவர்களுக்குள் பெரிய சண்டை எதுவும் எழவில்லை. ஆர்த்தியும் சுதாரிப்பாக நடந்து கொண்டாள். ராகவும் தன் வார்த்தைகளை அளந்துப் பேசினான்.
மாதங்கள் அதன் போக்கில் நகர, அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து.
குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்ட ராகவ், “ரொம்ப அழகா இருக்கில்ல?” என்று கேட்டான்.
ஆர்த்தி ஆமோதிப்பாகத் தலை அசைத்தாள். குழந்தை, ராகவின் அழகு, ஆர்த்தியின் அழகு மொத்தத்தையும் கொண்டுப் பிறந்திருந்தது.
குழந்தையைக் கேட்டு மீரா பிடிவாதம் பிடிக்க, ராகவ் உறுதியாக மறுத்துவிட்டான்.
மீரா தொடர்ந்து அழ, “மீரா உட்காரு. பாட்டி கொஞ்சம் நேரம் உன் மடியில் வைக்கிறேன்.” என்று பார்வதி கூற, மீரா ஆசையாக அமர்ந்தாள்.
“குழந்தை என் கையில் தான் இருக்கும். அவ மடியில் வைக்கிற மாதிரி வச்சிட்டு எடுத்தறேன்.” என்று பார்வதி குழந்தையை எடுக்க, “இல்லை அத்தை வைக்காதீங்க. குழந்தைக்கு இன்பெக்ஷன் ஆகிரும்.” என்று ராகவ் கூற, பார்வதி அடிபட்ட முகத்தோடு தன் மகளைப் பார்த்தார்.
குழந்தை கையில் கிடைக்காத ஏக்கத்தில், மீரா தன் தாயிடம் ஓட, “மீரா…” என்று கோபமாக அழைத்தான் ராகவ்.
“அம்மாவுக்கு உடம்பு முடியலை. நீ அங்க போகக் கூடாது.” என்று ராகவ் கண்டிப்போடுக் கூற, மீரா ஏமாற்றமாகத் தன் பாட்டியைப் பார்த்தாள்.
பார்வதி செய்வதறியாமல் திகைக்க, “நீ அப்பா கிட்ட வா.” என்று ராகவ் மீராவைத் தூக்க முயற்சிக்க, மீரா ராகவின் கைகளைத் தட்டி விட்டாள்.
குழந்தையைக் கொடுக்காத கோபம், தன் அன்னையிடம் செல்லக் கூடாது என்று ராகவ் சொன்ன கோபம் அனைத்தும் குழந்தை மீராவைப் பாதித்திருந்தது.
“மீரா…” என்று ஆர்த்தி அவளை மிரட்ட, “அவ குழந்தை அவளுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார் பார்வதி.
மீரா பார்வதியின் கைகளைப் பிடிக்க, “நான் மீராவைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போறேன். அங்க சாப்பாடு செஞ்சு வைக்கிறேன். எடுத்துக்கோங்க.” என்று கூறிவிட்டு பார்வதி வெளியே சென்றுவிட்டார்.
“ஊர் உலகத்துல இல்லாத பிள்ளை. அப்படி என்ன இன்பெக்ஷன் வந்திரும்.” என்று முணுமுணுத்தபடி நடந்தார் பார்வதி.
‘ஆர்த்தி கூட மீராவுக்கு சாதகமா பேசலியே?’ என்ற எண்ணம் தோன்ற, ‘சொன்னால் மட்டும் அவ புருஷன் கேட்கவா போறான்?’ என்ற எண்ணமும் அவர் மனதில் தோன்றியது.
ஆர்த்திக்கு சோர்வாக இருந்தது. எதுவும் பேசாமல் கண்களை மூடிக்கொண்டாள்.
இதே போன்ற சூழ்நிலையில் மீராவைத் தன்னிடம் வைத்துக் கொண்டு செல்வமணியிடம் விவாகரத்து கேட்டது நினைவு வந்தது. ‘எந்தக் குழந்தையை முன் வைத்து எல்லாம் செய்தேனோ, இன்று அந்தக் குழந்தை மீரா விரட்டி அடிக்கப்பட்டுவிட்டதோ?’ என்ற பிரமை தோன்ற, ஆர்த்தி சுற்றுப்புறத்தை மறந்து தீவிர ஆலோசனைக்குள் மூழ்கினாள்.
இப்பொழுது பிறந்த குழந்தை வீறிட்டு அழ, ஆர்த்தி அதைக் கவனிக்கும் மனநிலையில் இல்லாமல் சுய சிந்தனையிலிருந்தாள்.
“ஆர்த்தி… என்ன பண்ற? குழந்தை அழுவுது.” என்று தட்டுத் தடுமாறி குழந்தையை ஆர்த்தியிடம் கொடுத்தான் ராகவ்.
குழந்தையைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு பாலூட்டியபடி, “மீரா…” என்று ஆர்த்தி தொடங்க, ராகவ் அவளைச் சீற்றமாகப் பார்த்தான்.
“அவளைத் தான் யோசிச்சிட்டு இருக்கியா? பச்சை பிள்ளை அழுறது கூடத் தெரியாம?” என்று கடுகடுத்தான் ராகவ்.
“நீயும், உங்க அம்மாவும் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்குப் புரியலை.” என்று ராகவ் அழுத்தமாகக் கேட்டான்.
“பிறந்த பிள்ளையைப் பார்ப்பாங்களா? வளர்ந்த பிள்ளையைப் பார்ப்பாங்களா?” என்று ராகவ் கேள்வியாக நிறுத்தினான்.
ஆர்த்தி எதுவும் பேசாமல் ராகவைப் பார்க்க, “கைக்குழந்தையைப் பார்க்க முடியாம நாம கஷ்டப்படுறோம். உங்க அம்மா, மீரா தான் முக்கியமுன்னு கூட்டிட்டுக் கிளம்பிட்டாங்க.” என்று ராகவ் எரிச்சல்பட்டான்.
‘என்னைத்தான் பிடிக்காது. என் குழந்தையையுமா?’ என்ற எண்ணம் ராகவிற்குத் தோன்றியது.
“நீங்க மீரா கிட்ட கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம்.” என்று ஆர்த்தி தன்மையாகக் கூறினாள்.
“நான் மீராவை நல்லா பார்த்துக்கலையா?” என்று ராகவ் தன் கண்களைச் சுருக்கி கேட்டான்.
“நான் அப்படிச் சொல்லலை. ஆனால், இன்னைக்கி நீங்க சரியா நடந்துக்கலை.” என்று ஆர்த்தி பொறுமையாகக் கூறினாள்.
அவன் மனைவி அவனை எதிர்த்துக் குற்றம் சாட, அவன் மொத்தக் கோபமும் மீராவிடமும், பார்வதியிடமும் திரும்பியது.
“உனக்கா இப்படித் தோணலை ஆர்த்தி. உங்க அம்மா சொல்லிக் கொடுத்து தான் இப்படித் தோணுது. நான் தான் ஆரம்பித்துலயிருந்து பார்க்குறேனே. அத்தைக்கு என்னைப் பிடிக்காது. அவங்களுக்கு நான் மீராவை நல்லா பார்க்க மாட்டேன்னு நினைப்பு. அவங்க சொல்லிக் குடுத்திருப்பாங்க. குழந்தை பிறந்தவுடனே, நான் மீராவை ஒரு வார்த்தை சொன்னதும் உனக்கும் அதே நினைப்பு வந்திருச்சு.” என்று ராகவ் சத்தமாக பேச பால் குடித்துவிட்டுத் தூங்க ஆரம்பித்த குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது.
ராகவின் பேச்சை ஒதுக்கி விட்டுக் குழந்தையிடம் கவனத்தைத் திருப்பினாள் ஆர்த்தி.
ஆர்த்தியின் மனதில் பல குழப்பம். ‘ராகவ் இன்பெக்ஷன்னு பயப்படறதும் சரிதான். மீராவுக்கு இருமல் கொஞ்சம் இருக்கு.’ என்று ஆர்த்தி எண்ணினாள்.
‘ஆனால், ராகவ் கொஞ்சம் பொறுமையா பேசி இருக்கலாமோ?’ என்ற எண்ணத்தோடு முன்னே அமர்ந்திருக்கும் ராகவைப் பார்த்தாள் ஆர்த்தி.
‘மீராவும் சின்னக் குழந்தை தானே? அம்மா கொஞ்சம் பொறுமையாகப் போயிருக்கலாம்.’ என்ற வருத்தம் ஆர்த்தியின் மனதில் எழுந்தது.
ஆர்த்தியிடம் அனைவரும் பொறுமையாக இருக்கச் சொன்ன காலம் ஆர்த்தியின் மனதில் ஊஞ்சலாடியது.
‘இன்னைக்கி நான் எல்லாரையும் பொறுமையா இருந்தா என்னனு யோசிக்குறேனே? இது தான் காலத்தின் கோலமோ?’ என்ற எண்ணத்தோடுப் பிறந்த குழந்தையின் முகத்தைப் பார்த்தாள் ஆர்த்தி.
ஆர்த்தியின் மனக்குழப்பம் பஞ்சாகப் பறந்தது. அவள் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பிக்க, ராகவும் அவளோடு இணைந்து கொண்டான்.
அங்குச் சுமூகமான நிலை ஏற்பட்டது. ‘வீட்டுக்குப் போய் மீராவை சமாதானம் செய்து கொள்ளலாம்.’ என்று முடிவு எடுத்துக் கொண்டாள் ஆர்த்தி.
மருத்துவமனையில் இருக்கும் வரை பார்வதி, மீரா இருவரும் மருத்துவமனைக்கு வரவில்லை.
பார்வதி சமைக்க, ராகவ் வீட்டிற்கு வந்து உணவு எடுத்துச் சென்றான்.
ஆர்த்தி வீட்டிற்குத் திரும்பினாள். பிறந்த குழந்தைக்குக் கவனிப்பு தடபுடலாக இருந்தது.
விலை உயர்ந்த தொட்டில், பொம்மை, மெத்தை என அனைத்துமே செல்வச் செழிப்போடு இருந்தது.
மீராவுக்கு அனைத்தையும் பார்க்க ஆசையாக இருந்தது.
ராகவ் முன்பு போல் மீராவிடம் பாசமாக தான் இருந்தான். ஆனால், இப்பொழுது பிறந்த குழந்தையிடம் அதீதப் பாசமாக இருந்தான். அவன் ஆடாவிட்டாலும், அவன் தசை ஆடியது.
ஆர்த்தி மீராவை மடியில் இருத்திக் கொண்டாலும், பிறந்த குழந்தை அழுது, அதன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
“பாப்பா… பாப்பா…” என்று அந்த வீட்டின் சர்வமும் ஆகிப் போனாள் பாப்பா.
மீராவுக்கு விளையாட்டு சாமான் இருந்தாலும், பிறந்த குழந்தையின் விளையாட்டு சாமான் முன் மீராவின் பொருட்கள் பொலிவிழந்து காணப்பட்டன.
ராகவின் சில கண்டிப்புகளும் மீராவைத் தூர நிறுத்தின. அனைத்தும் இருந்தும், ஏதோவொன்று இல்லை என்று மீராவுக்குப் புரிய ஆரம்பித்தது.
ஆர்த்தி அதைப் புரிந்து கொண்டாலும், என்ன செய்வதென்றுத் தெரியாமல் தவித்தாள்.
‘முன்பு போல் ராகவிடம் இயல்பாகப் பேச முடிவதில்லை. குழந்தை விஷயத்தில் என்ன சொன்னாலும் தப்பாகத் தான் புரிந்து கொள்கிறான்.’ என்று எண்ணினாள் ஆர்த்தி.
அன்று குழந்தை வீட்டில் நடுவில் படுத்திருக்க, குழந்தையைக் கொஞ்சியபடி ராகவ் குழந்தை அருகே அமர்ந்திருந்தான்.
மீரா, தன் விளையாட்டு சாமான்களோடு பாட்டி அருகே அமர்ந்திருந்தாள்.
குழந்தை அழகாக இருந்ததால், “ரதி…” என்று கொஞ்ச ஆரம்பித்து ரதி என்றே பெயரிட்டனர்.
“ரதி… ரதி… ரதி…” என்று ராகவ் கொஞ்ச, மீரா ராகவை ஏக்கமாகப் பார்த்தாள்.
ஆர்த்தி மீராவிடம் எதோ பேசிக்கொண்டிருக்க, மீராவின் கவனமோ ராகவ் குழந்தைக்கென்று வாங்கி வைத்த பொருளிலும், ராகவின் மீதே இருந்தது.
‘ராகவிடம் எப்படி மீராவையும் கொஞ்ச சொல்வது?’ என்ற கேள்வி ஆர்த்தியின் மனதில் எழுந்தது.
‘இப்பல்லாம் ராகவ் அப்பப்ப குடிச்சிட்டு வராங்க. நான் அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாமல் மறைக்கிறேன். ராகவ் கிட்ட கேட்டா, நான் மொடா குடிகாரன் இல்லை. இந்த மாதிரி எப்பயாவது தான். நான் செய்றதெல்லாம் நீ தப்பாவே பார்க்குற. உன்னால தான் சின்ன விஷயம் கூடப் பூதாகரமாக வெடிக்குதுன்னு சொல்லிட்டாங்க. அதுதான் உண்மையோ?’ என்று தன்னைத் தானே குழப்பிக் கொண்டாள் ஆர்த்தி.
‘இப்பொழுதெல்லாம் ராகவுடனான பேச்சு சண்டையில் தான் முடிகிறது. இதில் இதை எப்படிக் கூற?’ என்று சிந்தனையோடு தன் இரு குழந்தைகளையும் பார்த்தாள் ஆர்த்தி.
மீராவை மடியில் வைத்துக் கொஞ்ச ஆரம்பிக்க, பிறந்த ஓரிரு மாசமே ஆன குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது.
மீராவைக் கீழே இறக்கிவிட்டு, ரதியை மார்போடு அணைத்துக் கொண்டாள் ஆர்த்தி.
மார்போடு அணைக்கப்பட்ட ரதியும், மனதோடு இணைக்கப்பட்ட மீராவும் வெவ்வேறு பருவத்தில் இருந்தாலும் ஆர்த்தியின் கண்களுக்குச் சமமாகவே தெரிந்தனர்.
தன் கருவில் உருவான சொந்தம் அன்றோ? ஆனால் ராகவின் கண்களுக்கு? நல்லவன் தான்… பாசக்கரன் தான். ஆனால், அவன் ரத்தம் அவன் சிந்தையை, அவன் மனதை அவனறியாமல் அவனை ஆட்டுவிக்க ஆரம்பித்தது.