Mathu…Mathi! – 12

mathu...mathi!_Coverpic-0c3e187f

Mathu…Mathi! – 12

மது…மதி! – 12

மதுமதி வீலென்று அலற, கெளதம் அவள் வாயை மூடி அவளை புதருக்கு இடையில் இழுத்தான். அவள் அவன் மீது முழுதாக சாய, அவன் அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

“மதும்மா, சத்தம் போட்டிராத. எல்லாரும் நம்மளை சுத்தி இருக்காங்க” அவன் கிசுகிசுப்பாக அவன் செவிகளில் கூற, “அந்த பொண்ணு…” அவள் கூற, “எனக்கு தெரியும் மதும்மா. மேகனாவைத் தேடித்தான் இங்க வந்திருக்கோம்.” அவளை பாதுகாப்பாக தன் கரங்களின் அணைப்பில் வைத்துக்கொண்டு கூற, அவள் முகம் சுளித்தாள்.

அவள் கால்களில் உதிரம் வடிந்து அவன் மீது பிசுபிசுப்பை உணர்த்த, “மதும்மா…” அவன் அவள் கால்களை பிடிக்க, “தொடாதீங்க வலிக்குது” அவள் அவன் தோள்பட்டையை அழுத்தி வலியை உணர்த்துவது போல் கூறினாள்.

“டேய், அவங்க ரெண்டு பெரும் இங்க தான் ஒளிஞ்சிருக்கணும்.” ஒருவன் மற்றோருவனிடம் கூற, “இரண்டு பேரில்லை. மூணு பேர்.” என்றான் மற்றோருவன்.

“என்னடா சொல்ற?” ஒருவன் சந்தேகமாக கேட்க, “நான் கத்தியை வீசியது, ஒரு பொண்ணு மேல விழுந்துச்சு. ஆனால், பின்னாடி இருந்து ஒருத்தன் என்னை தட்டிவிட்டான். அதுவும் அவங்க ஆளாத்தான் இருக்கனும்” என்றான் மற்றோருவன்.

மதுமதி தன் கணவனை கேள்வியாக பார்க்க, “நம்ம ஆளுங்க வராங்க. ஆனால், இன்னும் வரலை. இவங்க சொல்றது யாருனு எனக்கு தெரியலை?” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் தணிந்த குரலில்.

அவர்கள் பேசும் பொழுதே மடமடவென்ற சத்தம் வர, அவர்களை துரத்திக் கொண்டிருந்தவர்கள் ஓடினார்கள். அதற்குள் காவலர்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

மதுமதி எழும்புவதற்கு சிரமப்பட, அவன் அவள் கைத்தாங்கலாக பிடித்தான். “நான் உன்னை தூக்கிக்கறேன்” என்று கெளதம் அவள் இடையை தீண்ட, “தேவையில்லை” அவள் அவன் கைகளை பட்டென்று தட்டினாள்.

அவர்கள் காவல்துறையினர் இருக்கும் இடத்தை நோக்கி செல்ல, கௌதமின் கண்கள் தனக்கு உதவிய நபரை தேடியது. அப்பொழுது கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் அங்கு ரத்த வெள்ளத்தில் இருக்க, கெளதம் அந்த நபரை கண்டுகொண்டான்.

அந்த நபரை பார்த்த நொடி, மதுமதி மயங்கி சரிந்தாள்.

மயங்கிய மனைவியை கைகளில் ஏந்திக்கொண்டு கெளதம் மடமடவென்று சாலையை நோக்கி நடந்தான். அதன்பின் அங்கு இருப்பவர்களிடம் கட்டளையிட்டுவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

மருத்துவமனையில் அவன் அருகே மேகனா நின்று கொண்டிருந்தாள். அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை. எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவன் கவனம் முழுதும் தன் மனைவியின் மீதே இருந்தது. மதுமதிக்கு அவசர சிகிச்சை முடிந்திருந்தது.

“ஹை பிளட் லாஸ். அது தான் மயங்கிட்டாங்க. காலில் கத்தி வெட்டு ஆழமா இருக்கு. கட்டு போட்டிருக்கோம். அவங்களுக்கு பெட் ரெஸ்ட் வேணும். பார்த்துக்கோங்க” மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல, கெளதம் தலையசைத்துக் கொண்டான்.

“நீயும் உள்ள வா” கூறிக்கொண்டு தன் மனைவி இருக்கும் அறைக்குள் அவளையும் அழைத்துச் சென்றான் கெளதம்.

அங்கு மீண்டும் மௌனம். சில நிமிடங்களில், மதுமதி கண்களை திறந்தாள். அவள் முன் ரத்த வெள்ளத்தில் கிடந்த உருவம் வர, அவள் உடல் நடுங்கியது.

“மதுமதி” என்றழைத்தான் சற்று அழுத்தமான குரலில். அவன் நனவுலகிற்கு வர, அங்கிருந்த மேகனாவை பார்த்தாள் மதுமதி.

“மேகனா” என்றழைத்தாள் மதுமதி. மேகனா மேலும் கீழும் தலையசைத்தாள்.

“நீ நல்லாருக்கியா? ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று மதுமதி வினவ, “நான் உங்களை பார்த்து கேட்க வேண்டியதை நீங்க என்னை பார்த்து கேட்கறீங்க?” என்று சிரித்தாள் மேகனா.

மேகனா, இளம் பெண். சற்று ஒல்லியான உருவம். இத்தனை பிரச்சனைக்கிடையிலும், அவள் கண்களில் ஒரு குறும்புத்தனமும் கேலியும் கலந்திருந்தது. சூழ்நிலை கருதி, அவளிடம் ஓர் அமைதி.

“அன்னைக்கு என்ன நடந்தது?” என்று நேரடியாக அவளை பார்த்து கூர்மையாக கேட்டான் கெளதம். மேகனாவிற்கு கௌதமின் அழுத்தமும் பாவனையும் சுத்தமாக பிடிக்கவில்லை. அவள் மதுமதியை பார்த்தாள். மதுமதி மேகனாவை அருகே அழைத்து அமர்த்திக் கொண்டாள்.

“என்னால், உங்களுக்கு எவ்வளவு பிரச்சனை? நான் யாருன்னே உங்களுக்கு தெரியாது. இருந்தாலும், என்னை காப்பற்றி, நான் நல்லாருக்கேனான்னு கேட்கறீங்க?” அவள் கூற, மதுமதி சிரித்தாள்.

“அன்னைக்கு என்ன நடந்தது?” என்று கெளதம் மீண்டும் அழுத்தமாக கேட்க, “அன்னைக்கு என்னால் தான் ஆக்சிடென்ட் நடந்தது. என் மேல தான் தப்பு. ஆனால், பத்திரமா வீட்டுக்கு போய்ட்டேன். உங்களை பத்தி நியூஸ் தெரிந்ததில் பயந்தே போய்ட்டேன்” என்று நிறுத்தினாள் மேகனா.

“பத்திரமா வீட்டுக்கு போன நீ எப்படி இவங்க கிட்ட சிக்கின?” என்று கெளதம் கூர்மையாக கேட்டான். மேகனா சற்று தயங்கினாள். “நீ இங்க சொல்றது, யார் கிட்டயும் போகாது” என்று மதுமதி உறுதியாக கூற, “எனக்கு அன்னைக்கு தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வந்தது. என்னை தனியா வர சொன்னாங்க” என்று மேகனா மென்று விழுங்கினாள்.

“தனியா யார் வர சொன்னாலும் போய்டுவீங்களா?” சிடுசிடுப்பாக கேட்டான் கெளதம். மேகனாவின் உடல் சற்று நடுங்கியது. “நான் ட்ரிங்க்ஸ் பண்ணிருந்தேன். அன்னைக்கு அம்மா, அப்பா ஊருக்கு போயிருந்தாங்க நான் ட்ரிங்க்ஸ் பண்றதெல்லாம் எங்க அம்மா அப்பாவுக்கு தெரியாது. நான் ட்ரிங்க்ஸ் பண்ணதுக்கு ஆதாரம் இருக்கு. வீட்டில் சொல்லி கொடுத்திருவோமுன்னு மிரட்டி என்னை வர சொன்னாங்க. நானும், அம்மா அப்பா ஊரிலிருந்து வாரத்துக்கு முன்னாடி விஷயத்தை முடிச்சிருவோமுன்னு போனேன்” மேகனா நிறுத்தினாள்.

“ஸோ, நீயா போய் அவங்க வலையில் சிக்கிட்ட?” என்று கெளதம் கேட்க, மேகனா மேலும் கீழும் தலையசைத்தாள்.

“அப்புறம், என்னை கடத்தி, என் வண்டியை கொண்டு போய்ட்டாங்க. என்னை கடத்தி வச்சவங்க உளறும் பொழுது தெரிந்த விஷயம் தான் உங்களை பத்தின நியூஸ். ஆனால், என்னை கொன்னுடுவாங்கன்னு நினச்சேன். எப்படி என்னை கொல்லாம விட்டாங்கன்னு தான் தெரியலை” என்று மேகனா தோள்களை குலுக்கினாள்.

“இதுல யோசிக்க ஒண்ணுமில்லை. உன்னை கொலை பண்ண நினைச்சிருந்தா அன்னைக்கே கொலை செய்திருக்கணும். அன்னைக்கு அவங்க மிஸ் பண்ணிட்டாங்க. இல்லை, எதுவும் பெரிய பிரச்சனை வருமோன்னு பயந்திருப்பாங்க. அப்புறம் உன்னை கொலை செய்தாலும் வேஸ்ட். பழியை என் மனைவி மேல போட முடியாது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல விஷயம் தெரிஞ்சிரும். அதனால், உன்னை கொலை செய்யாம விட்டிருக்காங்க” கெளதம் சர்வ சாதாரணமாக கூற, மேகனா அவனை வேற்று கிரக மனிதர் போல் பார்த்தாள்.

“போலீஸ் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். உன்கிட்ட எல்லாம் கேட்பாங்க. இங்க சொன்னதையே சொல்லு. உன் கிட்ட எழுதி வாங்கிட்டு, பத்திரமா உன்னை உன் வீட்டில் கொண்டு சேர்த்திருவாங்க” மேகனா தலையசைத்தாள்.

“நான் போய் இன்ஸ்பெக்டரை பார்த்திட்டு வரேன்” கெளதம் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு செல்ல, “இவங்க தான் அட்வகேட் கெளதம் ஸ்ரீநிவாஸனா?” என்று மேகனா கண்களை சுருக்கி கேட்க, மதுமதி தலையசைத்தாள்.

“நீங்க இவங்களை டைவர்ஸ் பண்ண போறீங்களா?” என்று கேட்டாள் மேகனா. மதுமதி ஆமோதிப்பாக தலையசைக்க, “முதலில் அதை பண்ணுங்க. இப்படி ஒரு சிடுமூஞ்சி கூட வாழவே முடியாது. ரொம்ப கஷ்டம்” என்றாள் மேகனா.

மதுமதி சிரிக்க, “ரொம்ப தேங்க்ஸ். யாருன்னே தெரியாத உங்களுக்கு நான் நிறைய கஷ்டத்தை கொடுத்துட்டேன். நீங்க என்னை காப்பாத்திருக்கீங்க. என்னை அப்படியே விட்டு கூட உங்க ஹஸ்பண்ட் உங்களை காப்பாத்திருப்பாங்க. அவர் பெரிய அட்வகேட்டாமே. ஆனால், உங்களுக்கு கஷ்டம் கொடுத்த எனக்கு நல்லது பண்ணிருக்கீங்க. உங்களக்கு நான் என்ன திரும்பி பண்ண போறேன்னு தெரியலை” மேகனா கேட்க, “நான் என்ன கேட்டாலும் செய்வியா?” என்று கேட்டாள் மதுமதி.

“என்ன வேணும்?” என்று கேட்டாள் மேகனா. “இனி ட்ரிங்க்ஸ் பண்ணாத மேகனா. இதை உன் கிட்ட சொல்ல எனக்கு உரிமை இருக்கான்னு தெரியலை. ஆனால், நீ கேட்டதால் சொல்றேன்” என்றாள் மதுமதி அமைதியான குரலில்.

“நான் மொடா குடிகாரி எல்லாம் இல்லை. ஜஸ்ட் சோசியல் ட்ரிங்கிங். எப்பவாது பிரெண்ட்ஸ் கூட. அவ்வுளவு தான்” மேகனா கூற, “அதுலையே பிரச்சனை வந்திருச்சே. அது கூட வேண்டாமே” என்று கோரிக்கையாக கேட்டாள் மதுமதி.

‘இவங்க யார்? எனக்காக எதுக்கு இவ்வளவு யோசிக்கணும்? அவங்களுக்கு கஷ்டம் கொடுத்த என் மேல் எதுக்கு இவ்வளவு அக்கறை காட்டணும்?’ என்ற கேள்வி தோன்ற, “இனி குடிக்கவே மாட்டேன் ” மதுமதியின் கைகளை பிடித்து மேகனா கூறினாள்.

அப்பொழுது கெளதம் உள்ளே வர, மேகனா எழுந்து நின்றாள். “வீட்டில் சொல்ல தைரியம் இருந்தால் ட்ரிங்க்ஸ் பண்ணு. இல்லைனா, பண்ணாத” என்று கெளதம் அமர்த்தலாக கூற, மேகனா வேகமாக தலையசைத்தாள்.

‘இவர் உங்களுக்கு வேண்டாம்’ என்று கண்களால் சமிங்கை காட்டி, கை அசைத்து காவல்துறையினருடன் சென்றாள் மேகனா.

“இந்த பெண்ணை பத்திரமா கூட்டிகிட்டு கொண்டு போய் விட்டிருவாங்க தானே?” என்று மதுமதி வினவ, “நம்ம ஆளுங்க தான்” என்றான் கெளதம். “ரொம்ப விளையாட்டு பொண்ணா இருக்கா. அதனால், தான் பயமில்லாம இருக்கா” என்று மதுமதி கூற, “இந்த பெண்ணை இங்க கூட்டிகிட்டு வந்த விஷயம் தெரிந்து தான், காரணத்தை தேவராஜ் பக்கம் திருப்பிவிட்டுட்டு இங்க வந்தேன். அப்படியே சரண்யா வேலையும் முடிந்தது. ம்…ச்…” சலிப்பாக முடித்தான் கெளதம்.

“அது தான் வேலை முடிஞ்சிருச்சே. அப்புறம், என்ன சலிப்பு?” என்று கேட்டாள் மதுமதி. “உன் கேஸ் முடிச்சிருச்சு. மேகனாவிற்கு எந்த விஷயமும் தெரியலை. யார் இதை எல்லாம் செய்யறாங்கனு கண்டுபிடிக்க சரண்யாவை அனுப்பிட்டோம். எல்லாம் நல்ல படியா முடியும் பொழுது உனக்கு இப்படி அடிபட்டிருச்சு. உன்னை கூப்பிட்டு வந்திருக்க கூடாது. ஆனால், உன்னை எங்க விடறதுன்னு எனக்கு தெரியலை. உன்னை தனியா விடவும் பயமா இருந்ததால, உன்னை என் கூடவே கூட்டிகிட்டு அலைஞ்சேன். என் பக்கத்தில் இருந்தா பாதுகாப்புன்னு யோசிச்சேன். அப்படியும் இப்படி ஆகிருச்சு” அவன் வேகமாக அருகே இருந்த கம்பியை குத்தினான்.

அவன் அன்பில், அவள் உள்ளம் கரைய ஆரம்பிக்க, அவள் சட்டென்று அவளை மீட்டுக்கொண்டாள். “அந்த பொண்ணுக்கு உங்களை சுத்தமா பிடிக்கலை.” என்றாள் மதுமதி, பேச்சை மாற்றும் விதமாக. “அந்த பொண்ணுக்கு எதுக்கு என்னை பிடிக்கணும்? உனக்கு என்னை பிடித்தால் போதும்” என்றான் புன்முறுவலோடு.

“உங்களை டைவர்ஸ் பண்ணா நான் சந்தோஷமா இருக்கலாமுன்னு சொன்னாள்” அவள் கூற, “நீ சந்தோஷமா இருக்கவே வேண்டாம். என் கூடவே இரு. அது போதும்” கூறிவிட்டு அவன் எழ, அவள் சிரித்துக் கொண்டாள்.

“நாம இன்னைக்கு சென்னை கிளம்புறோம். காரில் போறோம். கொஞ்சம் கஷ்டம் தான். நீ வசதியா கால் நீட்டி பின்னாடி உட்கார்ந்துக்கோ. நான் எல்லாம் ரெடி பண்ணிட்டு வரேன்.” மடமடவென்று கெளதம் செல்ல, ‘இப்ப எங்க போறோம்?’ அவளுள் கேள்வி எழுந்தது.

சில நிமிடங்களில் திரும்பி வந்தவன், அவளை கைகளில் ஏந்த முற்பட்ட, “வேண்டாம், நானே நடக்கிறேன்” என்றாள். “அப்பவும் இப்படி தான் சொன்ன. அப்புறம் என் மேலயே அப்படியே விழுந்திட்ட.” அவன் கண்சிமிட்ட, அவள் முறைத்தாள்.

“எதை பார்த்து இப்படி மயங்கி விழுந்த?” அவன் கைகட்டி அவளை ஆழமாக பார்த்து கேட்க, “அ…. அ…” என்று அவள் தடுமாறினாள். அதன் பின் மறுப்பாக தலையசைத்தாள்.

‘உயிர் பிழைத்திருப்பாரா?’ என்ற கேள்வி அவளுள் எழ, அவள் முகம் வியர்த்தது. “எதாவது சொல்லனுமா மதும்மா? ஏதாவது கேட்கணுமா?” என்று அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி கேட்டான் கெளதம்.

ரத்தம் வழிய அவள் கண்ட காட்சி, அவள் நெஞ்சை பதம் பார்த்துக் கொண்டிருந்தது.

மது… மதி! வருவாள்…

Leave a Reply

error: Content is protected !!