Mathu…Mathi!-15

mathu...mathi!_Coverpic-ede87e4a

Mathu…Mathi!-15

மது…மதி! – 15

 சிகிச்சை முடிந்து வரவேற்பு என்பதற்கு அவன் மறுப்பு தெரிவிக்க, அதன் காரணம் புரியாமல் அவள் அவனை பார்த்தாள்.

“ஆபரேஷன் முடிஞ்சி, என் ஹெல்த் சரியான கையோட நாம ஹனிமூன் போறோம்” அவன் அவள் தோள் பிடித்து கூற, அவள் தன் வெட்க புன்னகையை அவன் மார்பிலே புதைத்து மறைத்து கொண்டாள்.

அவர்கள் ரிசெப்ஷன் தினமும் வந்தது.

விலை உயர்ந்த புடவையிலும், நகையிலும் அவள் அழகு இன்னும் பன்மடங்காக உயர்ந்து தேவதையாக ஜொலித்தாள். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாலும், அவன் கம்பிரம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

மதுமதியின் உதவியோடு அவனால் சில தூரம் நடக்கவும் முடிந்தது. ஆனால், கெளதம் தன் மனைவியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

பலரின் பார்வை மதுமதியை சற்று பொறாமையோடு தழுவியது.

“நான் தான் சொன்னேனில்லை. கௌதமிற்கு சீக்கிரம் சரியாகிருமுன்னு. நீ தான் நான் சொல்றதை கேட்கலை. அவனை கல்யாணம் செய்திருந்தா, இந்நேரம் மொத்த சொத்தும் பிஸினஸும் நம்ம கையில்.” மத்திய வயது பெண்மணி தன் மகளின் காதில் கடிந்து கொண்டாள்.

அவ்வப்பொழுது, அவன் அத்தை பார்வதியும் தன் மகள் ரம்யாவை கடிந்து கொண்டார்.

“எல்லாம் சரியாகிரும்முனு யார் சொன்னா?” அந்த பணக்கார மகள் தன் தாயிடம் சிடுசிடுத்தாள். அவசரப்பட்டு கௌதமை இழந்துவிட்டோமோ என்ற கடுப்பு அவள் முகத்தில் வடிந்து கொண்டிருந்தது.

“யார் சொல்லணும்? எல்லாரும் பேசிக்குறாங்க. ஆப்பரேஷன் முடிந்ததும் அவங்க பிசினெஸ் ட்ரிப், ஹனிமூன் அப்படின்னு இரெண்டு பேரும் வெளிநாட்டுக்கு போறாங்க போல. அதுக்கு தான் இப்பவே ரிசெப்ஷன் வச்சிட்டாங்க போல.” தாய் பெருமூச்சு விட, மகளின் கண்கள் சுருங்கியது.

“என்ன யோசிக்கிற?” மகளை பார்த்து அந்த தாய் கேட்க, “கெளதம் என்கிட்டே இதெல்லாம் சரியாகாதுன்னு சொன்னான் அம்மா. நான் தான் அவன் கிட்ட பேச்சு கொடுத்து பார்த்தேனே. எல்லாரையும் அப்படி தான் நம்ப வைத்து அவன் நம்ம ஸ்டேட்ஸில் பொண்ணு எடுக்கலை.” தன் மகள் கூற, இப்பொழுது தாயின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

இப்படி பல பேச்சுக்கள் கெளதம் மதுமதியை சுற்ற, அதை எதையும் சட்டை செய்யாமல் பிஸ்தா க்ரீன் நிறத்தில், வைர கற்கள் பதித்த சேலையில் நின்று கொண்டிருந்த தன் மனைவியை ஆசையாக பார்த்து கொண்டிருந்தான் கெளதம்.

அவள் காதோரம் வளைந்து தொங்கி கொண்டிருந்த அவள் சிகை அவள் ஜிமிக்கியின் அசைவுக்கு ஏற்ப அசைந்து கொண்டிருந்தது. குடை போன்ற ஜிமிக்கியின் அசைவுக்கு இசைவாய் அவள் முத்து பற்கள் சிரிக்க, அந்த புன்னகை அவன் மனதை வருட அவன் முகத்திலும் அழகான புன்னகை.

தன் கணவனின் புன்னகை அவள் மனதை வருட, அவளறியாமல் அவள் அவனை திரும்பி பார்த்தாள்.

அவன் அவளை தன் அருகே அழைத்தான். அவன் கண்ணசைவில், அவனுக்கு என்ன தேவையோ என்று பதறிக்கொண்டு அவன் அருகே விரைந்தாள் அவர்களுக்கு இடையே இருந்த கொஞ்சம் இடைவெளியையும் குறைத்து கொண்டு.

அவளுக்கு தொந்தரவாக இருந்த அந்த சிகையை ஒதுக்கி, அவளை பார்த்து அவன் புன்னகைக்க, அங்கு “ஓ…” என்று சத்தம் எழும்பியது.

மதுமதியை வெட்கம் ஆட்கொள்ள, குனிந்து கொண்டாள். கெளதம் கம்பீரமாக புன்னகைத்து கொண்டான்.

பலரின் பார்வை பலவிதமாக இருந்தாலும், அவை மதுமதியை பாதிக்கவில்லை. அவர்களை சுற்றி இருந்த செல்வச்செழிப்பு தராத சந்தோஷத்தை அவனின் கரிசன செயல் அவள் மீது சந்தோஷ பூக்களை கொட்டியது.

ரிசெப்ஷன் சிறப்பாக நடந்து, பலரும் உணவருந்த சென்றனர். பல வகை உணவுகள், அவர்களை மணத்தால் வரவேற்று கொண்டிருந்தது.

அப்பொழுது, கௌதமின் நண்பன் அவனை கைகளால் அழைக்க, கெளதம் அவர்களுக்கு கையசைத்து சமிங்கை காட்டினான். அதன்பின், கெளதம் தன் மனைவியின் காதில் கிசுகிசுக்க, அவள் தலை அசைத்து கேட்டு கொண்டாள்.

சில நிமிடங்களில், கெளதம் தன் நண்பர்கள் குழாமோடு இணைந்து கொண்டான்.

அங்கு சிரிப்பும் பேச்சும் சற்று அளவுக்கு அதிகமாகவே இருந்தது.

மதுமதி வந்திருந்த விருந்தினர்களோடு பேசி கொண்டிருந்தாள். சிலர், நட்போடு பேசினர். சிலர் பட்டும்படாமலும் பேசினர். சிலர், ‘இவளுக்கு வந்த வாழ்வை பாரேன்…’ என்ற தொனியில் பேசினர்.

அவளோ அனைவரிடமும் இன்முகமாகவே பேசினாள்.

அப்பொழுது, கெளதம் இருந்த இடத்திலிருந்து, “ஹோ… ஹோ…” என்ற சத்தம் எழும்ப, “ஒன்னு சேர்ந்துட்டா இவங்க இப்படி தான்…” ஒரு பெண் கூற, மற்றவர்கள் சிரித்து கொண்டனர்.

மதுமதியின் கண்கள் கௌதமை தேடியது.

“உங்க ஹஸ்பேண்டும் அங்க தான் இருக்காங்க” அங்கு நின்ற ஒருத்தி, புது பெண்ணை கேலி செய்யும் விதமாக கூறினாள்.

“கெளதம் இல்லாமலா?” மற்றொருத்தி கேலி செய்ய, மதுமதிக்கு எதுவோ புரிந்தும் புரியாதது போலவும் இருந்தது.

அப்பொழுது அங்கு பாட்டு கச்சேரியும் களைக்கட்டியது.

மதுமதி செவிகளை தொட்ட பாடல், அங்கு அரங்கேறி கொண்டிருந்த செயலை கூற, அவள் மொத்த சந்தோஷமும் நொடிக்கும் குறைவான நேரத்தில் வடிந்து போனது.

‘எனக்கு தெரியும் எல்லாரும் குடிப்பாங்கன்னு. ஆனால், கௌதமுமா? மத்தவங்க குடிக்காங்க. இன்னைக்கு ரிசெப்ஷனை வச்சிக்கிட்டு இவங்க குடிக்கணுமா?’ அவளுள் கோபம் கனன்றது.

மேடை அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டினாள்.

‘இது என்ன வாழ்க்கை?’ என்ற கேள்வி எழுந்தது.

தன் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்தி கொண்டாள். தன் கண்களை சுழலவிட்டாள். எங்கும் செல்வச்செழிப்பு.

‘இந்த செல்வச்செழிப்பு போதுமா என் வாழ்க்கைக்கு?’ கேள்வி எழ, தனக்கு தானே மறுப்பாக தலை அசைக்க,’கௌதமின் அன்பு பொய்யா?’ அவள் முன் பூதாகரமான கேள்வி காதலோடு நிற்க, அவள் கண்கள் கலங்கியது.

‘கௌதமுக்கு என்னை பிடிக்கும். எனக்கும் கௌதமை பிடிக்கும்’ அவள் மனமும் அவள் விழிகளோடு அழுதது.

‘பொறுமை… பொறுமை…’ அவன் மீது கொண்டுள்ள அன்பில் அவள் மனம் கதறினாலும், அவள் அறிவே வார்த்தைகளாக வெளி வந்தது.

“எந்த காதலுக்காகவும், எந்த அன்புக்காகவும் குடிகார புருஷனை சகிச்சிக்கிட்டு வாழணுமுன்னு அவசியமில்லை.” அவள் இதழ்கள் முணுமுணுத்தன.

அப்பொழுது அவள் அருகே வந்த பெண்மணி முகத்தில் மெல்லிய புன்னகை. மதுமதியின் முகபாவத்தை வைத்து அவள் மனப்போக்கை அறிந்து கொண்டவள் போல பேசினாள்.

“இதெல்லாம் இங்க சகஜம். வீட்லையே வச்சி ட்ரிங்க்ஸ் பண்ணுவாங்க. இதெல்லாம் நாம கண்டும் காணாமலும் விட்டுடனும். ரொம்ப காஸ்டலியான ட்ரிங்க்ஸ் தான். உடம்பை எல்லாம் ரொம்ப பாதிக்காது. அவங்களும் எந்த பிரச்சனையும் பண்ண மாட்டாங்க.” அந்த பெண்ணின் பேச்சில் மதுமதி முகம் சுளித்தாள்.

“அப்பா, பையன் எல்லாரும் சேர்ந்தே…” அந்த பெண்ணின் பேச்சை மேலும் கேட்க திராணி இல்லாமல், சோர்வாக சாய்ந்தாள் மதுமதி.

‘இல்லை… இல்லை… இது தொடர கூடாது. இந்த விஷயத்திற்கு நான் இன்றே முடிவு கட்ட வேண்டும். இதனால் என்ன நடந்தாலும் சரி. என்னால் இப்படி ஒரு வாழ்வை சகித்து கொள்ளவே முடியாது’ வேகமாக கௌதமை நோக்கி நடந்தாள் மதுமதி.

அவள் நடந்து வரும் வேகத்தில், தன் மனைவியின் மனநிலையை அறிந்து கொண்ட கௌதமின் செவிகளில், ‘நம்ம ஸ்டேட்ஸில் பொண்ணு பார்த்தா தான் நமக்கு செட் ஆகும்.’ அவர்கள் வீட்டில் சொன்ன வார்த்தைகள் அவன் அவள் மீது கொண்ட அன்பையும் தாண்டி நெருடலுடன் ஒலித்தது.

‘ச்… ச்ச… என்ன யோசனை இது?’ தன்னை தானே நிந்தித்து கொண்டு தன் மனைவியை நோக்கி தன் சக்கர நாற்காலியை செலுத்தினான்.

“ஹோ… ஹோ…” என்று மீண்டும் ஒரு சத்தம் அங்கு.

‘என்ன ஃபிரெண்ட்ஸோ? இப்படி தான் எப்ப பாரு ஒரே கூப்பாடு போடுவாங்களா?’ தன் மனதோடு சிடுசிடுத்து கொண்டாள் மதுமதி.

கோபமாக மனைவியை நெருங்கிய கெளதம், தன் நண்பர்களின் கேலியில் தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தான்.

“பசிக்குது, நாம சாப்பிடுவோமா?” அவன் கேள்வியில், மொத்தத்தையும் மறந்து, தலை அசைத்தாள் மதுமதி.

“சாப்பிட்டுட்டு மாத்திரை சாப்பிடணும். வாங்க” அவள் குரலில் அக்கறை வழிய, அவன் புன்னகைத்து கொண்டான்.

‘இந்த அன்பும், அக்கறையும் தான் அனைத்தையும் சரி செய்யும்’ என்று அவன் நம்பினான். இருவரும் சாப்பிட, ‘இவுங்களும் குடித்திருப்பாங்களோ?’ அவள் கண்களில் சந்தேகம்.

அவன் உதட்டில் நமட்டு சிரிப்பு. எதுவும் நடவாது போல் தானும் சாப்பிட்டபடியே, தன் மனைவியை எதிரே அமரவைத்து அவளிடம் அக்கறையாக பேசினான். அவளுக்கு என்ன பதார்த்தங்கள், பிடிக்கும் பிடிக்காது என்று கூறி எடுத்து வர சொன்னான்.

அவன் அக்கறையில் அவள் நெகிழ்ந்து போனாலும், அவள் மூக்கை உள்ளிழுத்து பார்த்தாள். அவள் கண்கள் சுருங்கி கொண்டு அவனை சந்தேகமாக பார்த்தது.

அவள் அவன் மூக்கை பிடித்து ஆட்டி, “ஹா…ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான்.

“நான் ட்ரிங்க்ஸ் பண்ணலை.” அவன் கூற, அவன் சொல்லை விட, அவன் சிரிப்பில் அவள் முகம் கோபம் கொண்டது.

அவள் கோபத்தை ரசித்து அவன் இன்னும், “ஹா… ஹா…” பெருங்குரலில் சிரித்தான்.

“என்ன சிரிப்பு?” அவள் சிடுசிடுக்க, “நான் மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன். அதனால இப்ப ட்ரிங்க்ஸ் பண்ணலை” அவன் அழுத்தமாக கூறினான்.

‘இதை எப்படி எடுத்து கொள்வது? இன்று குடிக்கவில்லை என்று சந்தோசம் கொள்வதா? இல்லை…’ மேலும் சிந்திக்க முடியாமல் அவள் திருதிருவென்று விழித்தாள். அவளுள் குழப்பம். எதை சொல்வது, எதைக் கேட்பது என்ற குழப்பம்.

தற்காலிகமாக பொறுமையையும் மௌனத்தையும் கையிலெடுத்துக் கொண்டாள். அதன் பின் அவர்கள் நாட்கள் வேகமாக நகர்ந்தது அவன் அறுவை சிகிச்சை நாளை நோக்கி.

கௌதமை அவள் அன்போடும், அக்கறையோடும் கவனித்து கொண்டாள். அவள் அன்பில் அவன் இன்னும் நெகிழ்ந்து போனான். அவளிடம் இதுவரை அவன் பகிர்ந்திராத சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்பினான். ஆனால், நேரம் வரவேண்டும் என்று எண்ணினான். நேரம் கைகூடும் பாக்கியத்தை நேரம் கொடுக்காது என்று பாவம் அவன் அறியவில்லை.

அறுவை சிகிச்சைக்கு கெளதம் உள்ளே செல்ல, அவன் வருகைக்காக மதுமதி வெளியே காத்திருந்தாள். அப்பொழுது அவள் அறிந்து கொண்ட செய்தி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவன் எழுந்து நடப்பானா? அவன் நடந்தாலும், அவர்கள் வாழ்வு தள்ளாட்டம் இல்லாமல் நடக்குமா? என்ற சந்தேகம் அவள் மனதில் எழுந்தது. அவன் நடந்தான். ஆனால், அவர்கள் வாழ்வு தள்ளாட்டம் கொண்டது.

*** *** ***

அவர்கள் வாகனத்திற்கு குறுக்கே நாய் ஒன்று செல்ல, காரை சட்டென்று நிறுத்தி மீண்டும் கிளப்பினான் கெளதம்.

சட்டென்று நனவுலகத்திற்கு திரும்பியவளாக, “எதுவும் மாறலை” என்றாள் கண்களில் கண்ணீர் மல்க. “மாறும் மதும்மா” அவன் கண்களிலும் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

“எனக்கு உன்னை பிடிக்கும் மதும்மா.” என்றான் கரகரப்பான குரலில். “எனக்கும் உங்களை பிடிக்கும்.” என்றாள் அவளும் அதே கரகரப்போடு. கண்ணீர் ததும்ப, இருவர் முகத்திலும் புன்னகை கீற்று.

“நான் அவசியம் உங்க வீட்டுக்கு வரணுமா? வேண்டாமே” என்றாள் கெஞ்சும் குரலில். இப்பொழுது அவன் பெருங்குரலில் சிரித்தான்.

“சமூக போராளி குரலில் பயம் தெரியுதே. ஊருல எவனெவனையோ எதிர்க்கிற. ஆனால், மாமனார் மாமியார்ன்னா பயமா?” அவன் கேலி பேச, “பெரிய பெரிய பதவியிலிருந்தாலும் பெண்கள் தோத்து போற இடம் குடும்பம் தான். பாசம், அன்பு எல்லாம் அவங்களை பலவீனமாக்கிறது” அவள் பல நினைவுகளில் கூற, “பாசம், அன்பு எல்லாம் பலம் தானே மதும்மா” அவன் அவளுக்கு ஆறுதல் போல் கூறினான்.

அவள் முகத்தில் விரக்தி புன்னகை. “எதிராளியை துணிந்து அடிக்கலாம். ஆனால், பாசம் வச்சவங்களை அடிக்கவும் முடியாமல், சேர்த்துக்கவும் முடியாமல், காயப்படுத்தவும் முடியாமல் காயப்பட்டு போறது தானே எங்கள் தலையெழுத்து” அவள் கூற, அவன் எதுவும் பேசவில்லை.

அவர்கள் மௌனத்திற்கு இடையே, கௌதமின் வீடு வந்தது. அவர்கள் வீட்டிற்குள் செல்ல, யாரும் தடை கூறவில்லை. வரவேற்கவுமில்லை. அவன் யாரையும் சட்டை செய்யவுமில்லை. முதல் நாள் விழுந்த பொழுது ஏற்பட்ட சுளுக்கு. அதன் பின் காயம், என பலவீனமாக இருந்ததால் அவளை அவன் கைகளில் ஏந்தி படியேறி அவர்கள் அறைக்கு தூக்கிச்சென்றான்.

“எனக்கு வேலை இருக்கு. நான் போய்ட்டு வந்துடறேன்” அவளை தன் வீட்டில் பாதுக்காப்பாக விட்டுவிட்டு, இல்லை அவளுக்கு பாதுகாப்பு என்று முழு நம்பிக்கையோடு அவன் வெளியே சென்றான்.

சில நிமிடங்கள் கழித்து, “பால் குடிங்க” என்று ரம்யா அவள் அறைக்குள் வந்தாள். “இப்ப வேண்டாம், நான் அப்புறம் குடிக்கிறேன்” என்று கூறி மதுமதி அந்த பாலை ஜன்னல் ஓரமாக வைத்தாள். ரம்யாவிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள். ரம்யா அவள் அறையை விட்டு செல்லவும், மதுமதி சுய அலசலில் இறங்கினாள். அப்பொழுது, அவள் வைத்திருந்த பாலை ஜன்னல் வழியாக வந்த ஒரு குட்டி பூனை குடித்ததை அவள் கவனிக்கவில்லை.

திடிரென்று, மொந்தென்று சத்தம் வர அங்கு எட்டிப்பார்த்தாள் மதுமதி. அவளுக்கென்று வைத்த பாலை குடித்த குட்டி பூனை செத்து விழுந்திருந்தது. அதைப்பார்த்த மதுமதியின் உடல் சில்லிட்டது.

மது… மதி! வருவாள்…

Leave a Reply

error: Content is protected !!