உள்ளத்தின் காதல் நீங்காதடி-20
உள்ளத்தின் காதல் நீங்காதடி-20
காதல்-20
மறக்கவேண்டுமா,அது உன்னால் முடியவே முடியாது,அவன் உன் உணர்வில் கலந்தவன்,உயிரில் கலந்தவன்,நீ அப்படி மறக்கநினைத்தால் துன்பம் உனக்கே யோசித்துக்கொள்-ஒரு காதலின் எச்சரிக்கை.
________________
நால்வரின் கண்ணீரும் முதலில் அழுகையாய் ஆரம்பித்து இறுதியில் ‘இனி எல்லாம் வசந்தமே’ என்று ஆனந்தத்தின் கண்ணீரில் முடிந்தது.
இவர்களின் பாசபிணைப்பை அமைதியாய் பார்த்திருந்த உதய் மற்றும் குடும்பத்தார்கள் அவர்களுக்கான தனிமையைக் கொடுத்து ஒதுங்கிக்கொண்டனர்.
உதய் உடன் அவனின் தாய் மற்றும் தந்தையே வந்திருந்தனர், அதோடு மீராவின் குடும்பமும் இவர்களுக்கு புதியவர்கள் இல்லை, ஆதலால் முதலில் அவர்கள் பேசட்டும் பின் நாம் பேசுவோம் என்று அமைதி காத்தனர்.
ஆனால், இவர்களுக்கு பேச நிறைய இருந்தது, தந்தையை நேரில் பார்க்க முடியாமல், அவரின் ஸ்பரிசம் உணராமல், வலியில் தோள் சாய அவர் இல்லாமல் வாழந்த மீராவிற்கு, அவரின் தோள் சாய்ந்து ஆறுதல் தேட, அவரின் மடியில் குழந்தையாய் தவழ, அவரிடம் திட்டு வாங்க, அவரிடம் தண்டனை பெற இப்படி பட்டியல் நீண்டிருந்தது.
உண்மை தானே, அவள் தோழிகளிடமிருந்து கேட்டிருக்கிறாள், தந்தை மகள் உறவு வார்த்தையால் வர்ணிக்க கூடியவை அல்லவே, அது புனிதம், தவறிழைத்து தாயிடம் மாட்டும் சமயம் ஒரு பெண் பிள்ளையை காப்பாற்றி விடும் கடமையை ஒவ்வொரு தந்தையும் அழகாய் செய்து கொண்டிருக்கின்றனரே.
தந்தையின் வலது புறம் போய் நின்றுக்கொண்டவள், “அப்பா” என்று அவர் தோள் சாய்ந்துக்கொண்டாள். அவளை அணைவாய் அணைத்துக்கொண்டார் அந்த பாசமான தந்தை.
அனு சற்று தெளிந்தவராக “ஏங்க, அவுங்க” என்று ஒதுங்கி நின்றிருந்த உதய் மற்றும் அவனது பெற்றோரை காண்பித்தார்.
“வாம்மா, வாடா, வாப்பா உதய்” என்று மூவரையும் அழைத்தவரை பார்த்து உதய் மென்னகை புரிந்தவன், “எப்படி இருக்கீங்க அங்கிள்” என்றான்.
“நல்லா இருக்கேன் பா” என்றார் அவரும்.
மீனாட்சி “ண்ணா மன்னிச்சுடுங்க ண்ணா” என்றார்.
ரகுராமும் என்ன பேசுவது என்று தயங்கி நிற்க.
குணசேகரனே ஆரம்பித்தார் “விடும்மா, இனி அதை பற்றிய பேச்சே வேண்டாம், மன்னிப்பும் வேண்டாம், உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை, அதனால் தானே என் பொண்ணையே கொடுக்க போறேன்” என்றார்.
“அது எங்க பாக்கியம், உங்க பெரிய மனசு, எங்க உறுத்தல் எங்களுக்கு, மீரா அந்த உறுத்தலுக்கான மருந்து, எங்க வாழ்கையில் வர போற வசந்தம்” என்றார் மீனாட்சி உளமாற.
இதை அனைத்தையும் கண்டுக்கொள்ளவேயில்லை மீரா, தன் தந்தையின் அருகாமையே போதுமாய் இருந்தது அவளுக்கு, எப்படியும் இந்த திருமணத்தை நிறுத்திவிட அவள் நினைத்தாள்.
உதய்யின் பார்வை மீராவையே வட்டமிட்டது, அவள் அப்படி ஒருவன் அங்கிருப்பதையே மதிக்கவில்லை.
“சரி, கிளம்புவோம், வீட்டுக்கு போய் மத்ததை பேசுவோம்” என்றான் மித்ரன்.
அதுவே சரியாய் பட, தாங்கள் வந்த காரில் செல்லலாம் என்று உதய் அனைவரையும் அழைக்க, அப்போது அவனை நிமிர்ந்து பார்த்த மீரா, ஒரு நிமிடம் அவன் கண்ணோடு தன் கண்ணை கலக்கவிட்டு பின் தாழ்த்திக்கொண்டாள்.
“அது வந்து…” மித்ரன் தயங்க.
“என்ன தயக்கம் வாங்க” என்றனர் மீனாட்சியும், ரகுவும்.
“அதில்லை அங்கிள், அப்பாவும் அம்மாவும் பைக்ல வரட்டும்” என்றான்.
அவனது வாக்கியம் அனுவையும், குணசேகரனையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வைத்தது.
அனு தான் பேசினார் “என்னடா உளருர அதுலாம் முடியாது, அவங்க முன்னாடி ஏன்டா இப்படி” என்றார் கண்டிக்கும் விதமாக.
“இதுல என்ன தப்பு இருக்கு, நீங்க பைக்லையே வாங்க “என்று மீனாட்சியும் கூற, மறுத்துவிட்டார் அனு.
குணசேகரனும் “இல்லப்பா, அதுலாம் வேண்டாம்” என்று மறுக்க மித்ரன் எவ்வளவோ பேசியும் அவர்கள் சம்மதிக்கவேயில்லை, நாகரிகம் கருதி உதய் குடும்பம் ஒதுங்கி நின்றது.
மித்ரன் அமைதியாய் நின்ற மீராவை உதவிக்கு அழைத்தான் இந்த ஐடியா மீராவோடது. பெண்ணின் வாழ்வு சிறு சிறு விஷயங்களில் மகிழ்ச்சி காண்பது, தன் தாயின் ஆசைகள் சிலவை அவளுக்கும் தெரியும். அதை முடிந்த மட்டும் நிறைவேற்ற நினைத்தாள்.
இது சரிபடாது என்று முடிவெடுத்தவள் குறும்பாய் ஆரம்பித்தாள் “விடுண்ணா ஐ திங்க் டாடிக்கு பைக் எப்படி ஓட்டுறதுன்னு மறந்திருக்கும், அதான் அப்படி சொல்றாரு” என்று ஆரம்பிக்க.
“ஏய். . . வாலு, எனக்கு பைக் ஓட்ட தெரியாதா” என்று குணசேகரன் அவள் காதை வலிக்காமல் திருக.
“ஆமா, அதான் போக மாட்றீங்க, ஓட்ட தெரியாம அம்மாவை எங்கையாவது தள்ளி விட்டுடீங்கனா” என்று அவள் முடிக்க.
“ஏய், என்னடி பேசுற அவர் எவ்ளோ அழகா வண்டி ஓட்டுவார் தெரியுமா? மேடு பள்ளம் பார்த்து இதமாய் ஓட்டுவார்” என்று அனு தன் கணவனுக்காய் வந்தார்.
“தோடா, நான் எப்படி நம்ப, இருங்க இருங்க, அப்போ ஓட்ட தெரியும் அப்றம் ஏன் ஓட்ட மாட்றீங்க” என்று கேட்டவள்.
“ஒருவேலை ஊருல ஒரு சின்ன மம்மி கரெக்ட் பண்ணி அவுங்க கூட மட்டும் தான் பைக்ல போவேன்னு…” என்று அவள் இழுக்க.
அனு “அடியேய்” என்று அவளை அடிக்க துரத்த, சிரித்துவிட்டனர் குணசேகரனும் மித்ரனும்.
வெகு நாட்களுக்கு பிறகான மீராவின் சிரிப்பை பத்திரமாய் கண் வழியே இதயத்தில் பதித்தவன், அவள் மகிழ்வில் தன் மனநிறைவை உணர்ந்தான். ‘அவளை எப்பொழுதும் இப்படி சிரிக்க வைக்க வேண்டும்’ என்று அவன் மனது நினைத்தது ஆனால் பின் நாளில் அவள் இவனை சோதிக்கும் சோதனையில் இவனே அவளை அழுக வைக்க போகிறான் என்று அவனிடம் யார் கூறுவது?
ஒருவழியாக இருவரையும் பைக்கில் அனுப்பிவிட்டாள் மீரா. பட்டும் படாமலும் அமர்ந்திருந்த அனு சிறிது தூரம் தாண்டியதும் ஆசையுடன் அவர் தோளில் கை வைத்தார் கண்களில் நீர், குணசேகரனுக்கும் அதே நிலை தான்.
இங்கே மித்ரன் தனக்கு அவசர வேலை இருப்பதால் கேப்பில் செல்வதாக கூறியவன் தங்கையை அவர்களுடன் செல்ல சொன்னான், அவள் கண்களாலே மறுக்க அதை கிடப்பில் போட்டவன், உதய்யிடம் கண் ஜாடை காட்டியவனாக சென்று விட்டான்.
மீராவிற்கு இப்போது வேறு வழி இல்லை, மீனாட்சி ஒரு ப்ளான் போட்டவராக “ஏங்க மறந்துட்டீங்களா நாம இன்னைக்கு உங்க ஃபிரண்ட் ஆஸ்பத்ரிக்கு போய் பாக்கணும்ல” என்றார்.
ரகு முழிக்க “அதாங்க உங்க ஃபிரண்ட் ஹார்ட் அட்டாக் ஆகி ஆன்ஜியோ பண்ணியிருக்குல” என்று அவர் சற்று அழுத்தி மீராவை கண்ணசைவில் காட்டி கூற
“அட அமாம்மா மறந்துட்டேன், ஹாஸ்பிட்டல் கூட இங்க பக்கம் தான், நாம போய் பாத்துட்டு வந்திருவோம்” என்று அவர் முடிக்க.
இவர்கள் இருவரையும் மீரா மாத்தி மாத்தி பார்க்க, அவளிடம் வந்த மீனாட்சி.
“மீரா கோச்சுகாத டா, நீ உதய் கூட பைக்ல போய்டு, ப்ளீஸ்” என்று முடிக்க.
உதய் மனதிற்குள் தாயிற்கு கோவில் கட்டினான் என்றாள் மீராவோ அவரை டபுல்யூ டபுல்யூ வில் வருவது போல் தூக்கி போட்டு மிதித்து கொண்டிருந்தாள் (கற்பனைக்கு எதுக்கு எல்லை)
அவளின் பதிலையும் எதிர்பாராது கணவனை அழைத்துக்கொண்டு அவசர அவசரமாய் அவர் கிளம்பிவிட.
தனித்துவிடப்பட்டனர் உதய்யும் மீராவும். வேகமாய் சென்று பைக்கை எடுத்துவந்த உதய் அவளின் முன் அதை நிறுத்தி ஹேண்ட் பேரரை முறுக்கினான் ஒன்றும் பேசாது.
அதன் குறிப்பை அவள் உணர்ந்தாலும் ஏனோ, அவனோடு செல்ல மனம் முரண்டியது. இருந்தும் வேறு வழியில்லை வீம்பு பிடித்து நடந்து போக நினைப்பது முட்டாள்தனம்.
ஞாபகமாக அவனை விட்டு சற்று தள்ளியே அமர்ந்தாள், மெதுவாக வண்டி ஊர்ந்தது. உதய்யின் கைகளில் அந்த ராயல் என்ஃபீல்ட் மிதமான வேகத்தில், சற்றே வெயில் மங்க துவங்கிய அந்த சாயங்கால வேளையில் பிடித்தவளோடான பயணம் மிக ரம்மியமாய் இருந்தது.
மீராவின் மனதில் பல பிரளயங்கள், ஏதேதோ அவள் மனம் கணக்கு போட்டது, இத்திருமணத்தை எப்படி நிறுத்துவது, பல திட்டங்களை வகுத்தவளுக்கு எதுவுமே சரியாய் படவில்லை.
உதய்யோ நேராய் பீச்சிற்கு சென்றான், அவள் மனதிலிருந்த குழப்பங்கள் அவளை எங்கே செல்கிறோம் என்று கூட பார்க்கவிடவில்லை, அவளின் மௌனம் இவனை தாக்கியது, பீச்சில் பேசிக்கொள்வோம் என்று விட்டுவிட்டான். அந்த ஒரு மணி நேர பயணம் மிகவும் விரைவிலே முடிவடைய.
வண்டி நின்றதும் மீரா அவனை கேள்வியாய் பார்க்க “இறங்கு, உள்ளே போகலாம்” என்றான்.
சுற்றும் முற்றும் பார்த்தவள் ‘சரி நாமும் அவனோட பேச வேண்டி உள்ளது போய் பேசுவோம்’ என்று அவனோடு நடந்தாள்.
சிறிது தூரம் சென்றதும் “என்ன யோசனை” என்றான் மென்மையாக.
“ம்ப்ச், ஒன்னுமில்லை” என்றாள் சலிப்புடன்.
“சின்ன வயசுல நீ எப்படி இருப்ப, என் மேல எவ்ளோ உயிரா இருப்ப, எப்படி பேசுவ, அதுலாம் ஏன் இப்போ இல்ல மீரா” என்றான் உண்மையான வருத்ததுடன்.
“ஏன்னு உங்களுக்கு தெரியாதா?” அவள் பார்வை அவனை நேராய் பார்த்து கேட்டது.
இருவரின் பார்வையும் மோதிக்கொண்டது. கடந்த காலம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தையும், அனுபவத்தையும் தந்திருக்கும் இவர்களின் வாழ்வில் என்ன தந்தது?
************
சரியாக பதினான்கு வருடங்களுக்கு முன்,
உதய்யின் வீடும், மீராவின் வீடும் எதிர் எதிரே அமைந்திருந்தது, மீராவின் வீட்டிற்கு பக்கத்தில் அவளுடைய அத்தை ராகினியும் வசித்து வந்தார்.
ராகினி மீராவின் தந்தை குணசேகரனின் தங்கை, அவர் தன் தமையனிடமிருந்து அனைத்தையும் பிடிங்கி கொண்டு வாழும் ஒரு பேராசை பிறவி. அவரின் கணவர் ராஜா நன்றாக சம்பாதித்தும் அதை வெளியே கூறாது என்றும் அவரை குறை கூறி அண்ணணிடம் பிடிங்கி கொள்வார், இவர்களுக்கு ஒரே மகள் பெயர் சுபா, இவரின் கொடுமைகள், உதாரணமாக குணசேகரன் தன் மகளுக்கு எடுத்து வரும் ஆடைகளை தன் மகளுக்கு என்று எடுத்துக்கொள்வது துவங்கி, என் வீட்டில் அது கேட்கிறார்கள், அது வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொள்வதில் மன்னியாய் திகழ்ந்தாள்.
மீராவும், சுபாவும் ஒரே வயதை உடையோர் அதுமட்டுமில்லாமல் ஒரே உருவத்தையும் பெற்றிருந்தனர். இருவருக்கும் இரண்டு மாதமே வித்தியாசம், மீரா தங்க நிறம் மாறாக சுபாவோ சற்றே நிறம் கம்மியாய் பிறந்திருந்தாள். அதுவே ராகினிக்கு மீராவை பிடிக்காமல் போக காரணமாய் அமைந்தது.
சிறுவயது முதலே உதய்யோடும், சஞ்சையோடும் குட்டி வாலாகவே வளம் வந்தவள் மீரா, மானஸா தாத்தா பாட்டியுடன் வளர்ந்தாள், யாரும் இல்லாமல் வாடிய மீனாட்சியின் தாயிற்கும் தந்தையிற்கும் பேரபிள்ளையின் வாசம் மிகவும் அவசியமாய் இருந்தது, மானஸா பிறந்தது முதலே பாட்டியுடன் இருந்ததால் அவரிடம் இருப்பதாக கூறி விட்டாள், இவர்களுக்கு அவள் இல்லாமல் கஷ்டமாகவே இருந்தது, அந்த கவலை கூட மீராவாள் மட்டுமே தீர்ந்தது. இவளின் சேட்டைகள் அவர்களுக்குமே ரொம்ப பிடிக்கும், ஒரு நாள் மீரா அவர்கள் இருவரோடும் செல்வதை பார்த்த ராகினி, இவர்களின் பிணைப்பை பார்த்து சுபாவையும் அவர்களோடு பழக சொன்னார்.
பொதுவாகவே சுபாவை அவர் எங்கும் வெளியே அனுப்பமாட்டார், ஆனால் சுபாவை இப்பொழுது அனுப்ப ஒரு காரணம் இருந்தது, அது அவர்கள் பணக்கார வீட்டு பசங்க என்பதே ஆகும்.
இப்படி எல்லாவற்றிலும் போட்டி அவருக்கு, இவர்களின் வாழ்வு அழகாய் நகர, உதய்யிடம் மட்டும் மீராவிற்கு சற்று அதிகமான ஈர்ப்பு, ஒரு நாள் அவன் டைரியை பார்த்ததில் அதில் அழகாய் வரைந்திருந்த கிளிகளை பார்த்தாள் அதில் “ஐ லவ் பேரெட்” என்று எழுதியிருந்தான்.
அவனுக்கு கிளி என்றாள் பிடிக்கும் என்பது அவளுக்கு புரிந்தது.
சிறிது நாளில் உதய்யின் பிறந்த நாள் வரவிருக்கிறது என்று தாய் சொல்ல, அதற்கு கிப்ட் கொடுக்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது, அந்த வயதில் அவளுக்கு பிறந்த நாள் என்றால் அது கேக் மற்றும் கிஃப்டே ஆகும், என்ன வாங்கலாம் என்று யோசித்தவளுக்கு ஞாபகம் வந்தது அவன் வரைந்திருந்த கிளிகள். (இதை ஏற்கனவே அத்தியாயம் ஒன்பதில் கொடுத்திருக்கிறேன்)
“நமக்கு பிடித்தவர்களுக்கு பிடித்ததை கொடுப்பதே உண்மையில் அழகான, அர்த்தமுள்ள பரிசு”
உண்மையான கிளிகளை அவள் தந்தையிடம் கூறி வாங்கி வைத்தவளுக்கு அவைகள் கூண்டில் அடைப்பட்டு கிடப்பதை பார்க்க வேதனையாய் இருந்தது. இருந்தும் அதை உதய் நன்றாக வளர்பான் என்ற நம்பிக்கையில் அவன் பிறந்த நாளிற்காக காத்திருக்க துவங்கினாள்.
உதய்யின் பிறந்த நாளுக்கு மீரா என்ன வாங்கி வந்திருக்கிறாள் என்று பெண்ணை விட்டு தூது அனுப்பிய ராகினிக்கு அவள் கிளி வாங்கி வைத்திருப்பதை தெரிந்துக்கொண்டு எள்ளி நகையாடினாள். ஒரு அழகிய கை கடிகாரத்தை வாங்கி மகளிடம் கொடுத்தவள், அதை உதய்யின் பிறந்த நாள் பரிசாக கொடுக்க சொன்னாள்.
அன்றைய நாள் அழகாய் விடிந்தது யாருக்கும் காத்திராமல், அன்றைய மாலை ஆறு மணி போல் பிறந்த நாள் விழா கொண்டாட இருந்தனர். ஆறு மணிக்கெல்லாம் விழா ஆரம்பம் ஆகிவிட, கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து, ஆடி, பாடி மகிழ்ந்தனர். பின் ஒவ்வொருவராய் பரிசு கொடுக்க ஆரம்பிக்க, மீரா பரிசை எடுத்து வருவதை பார்த்த ராகினி “அவளுக்கு முன் நீ கொடு” என்று தன் மகளை அனுப்பி வைத்தாள்.
சுபாவின் பரிசை பெற்றவன் அதை நன்றி சொல்லி வாங்கிக்கொண்டான். “பிரிச்சு பாருப்பா” என்று ராகினி வாய்முழுவதும் பல்லாக சொல்ல “அப்றம் பிரிக்குறேன் ஆண்ட்டி, தாங்க்ஸ்” என்று விடையளித்து விட. அவரும் சரி என்று விட்டுவிட்டார்.
அடுத்ததாக மீரா கொடுக்க, அதை புன்னகையுடன் வாங்கியவன், அதை உடனே பிரிக்கலானான். இதில் ராகினியின் மனது குமைந்தது. இருந்தும் அவள் வாங்கி வைத்திருந்த பரிசு பற்றி அவர் அறிந்ததால் அதை பார்த்து அனைவரும் சிரிப்பார்கள் என்று நினைத்தார்.
பரிசை பிரித்த உதய்யின் கண்கள் அதன் அழகில் மயங்கியது, களி மண்ணால் ஆன ஜோடி கிளிகள், இரண்டு நாட்களுக்கு முன் தான், தன் அண்ணணின் உதவியுடன் இரு அழகான களிமண் கிளியை உருவாக்கி அதற்கு கலரும் கொடுத்து உண்மையான கிளியை போல் உருவாக்கியிருந்தாள் மீரா.
அதற்கு அழகான கூண்டையும் தயார் செய்து கம் கொண்டு அந்த கிளிகளை அதில் தொங்குவது போல் உருவாக்கினாள். அழகிய வெள்ளை நிற கூண்டில், ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு செவ்விதழ் வாய் அழகாய் திறந்திருக்க, ஒரு கிளியின் கழுத்தில் இருந்த “உ” எழுத்தும், மற்றொன்றிலிருந்த “மீ” எழுத்தும் அழகாய் அதே சிவப்பு நிறத்தில் மின்னியது, கீழே அழகாய் “இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஃப்ரண்ட்” என்று எழுதப்பட்டிருந்தது.
அதில் மயங்கிய உதய் “தாங்க் யூ மீரா” என்று உள்ளத்தின் மகிழ்வுடன் கூறினான்.
மீராவோ “உனக்கு பிடிச்சிருக்கா” என்றாள் மெதுவாக.
உதய்யோ “ரொம்ப பிடிச்சிருக்கு, தீ பெஸ்ட் கிப்ட்” என்றான் அழகாய் புன்னகைத்து.
அவள் முகம் தெளியாததை கண்டு “மீரா, ஒருத்தருக்கு தர்ற பரிசுங்கிறது அதன் விலையை பொருத்தோ, உயர்ந்த தரத்தை பொறுத்தோ நியமான படாது, உண்மையில் பரிசு என்பது ஒருத்தர் அதற்காக எவ்ளோ நேரம் செலவிடுறாங்க, எத்தனை உண்மையாய் முழு மனசோட அதை கொடுக்குறாங்கன்றதுல இருக்கு” என்றான் தன்மையாக. அதை கேட்ட ராகினிக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது.
“நீ என் கூட கொஞ்சம் வர்றியா” என்றாள் மீரா.
அவளின் முகத்தை பார்த்தவன் என்ன நினைத்தானோ சென்று விட்டான், அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ராகினியின் கண்களில் வன்மம் கூடியது.
அவனை அவளது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்து சென்றவள், அந்த உண்மையான கிளிகளை காண்பித்தாள்.
அதை கண்ட உதய் “ஹேய், வாவ் எவ்ளோ அழகு, எப்போ வாங்கின” என்று கேட்டான்.
“உனக்காக தான் வாங்கினேன்” என்றாள் அமைதியாக.
“அப்றம் ஏன் கொடுக்கல” என்றான்.
“இல்லை இதை நம்ம பறக்க விடலாம்” என்றாள் அமைதியாக.
“ஏன்?” என்றான் உதய்.
“எந்த அனிமல்ஸையும் கஷ்ட படுத்துறது தப்பு, அன்னைக்கு அந்த அங்கிள் கிளியை அடைச்சு வச்சிருந்தப்போவே தோனிச்சு அதை திறந்து பறக்க விட்டா என்னன்னு, அது என்னால முடியல, நீ உன் டைரில வரஞ்ச கிளியையும், ஐ லவ் பேரட்டையும் பார்த்து உனக்கு அதை கொடுக்கலாம்னு நினைச்சு வாங்குனேன், பட் அதை அடச்சு வைக்க மனசு வரல, ஐ நோ நீ அத நல்லா பாத்துக்குவ பட் அதை பறக்க விடுறது தான் நல்லது” என்றாள் அமைதியாக.
அந்த சிறு வயதில் அவளது இரக்ககுணம் அவனையும் தாக்கியது, எத்தனை அழகாய் கூறுகிறாள்.
“நீ பண்ணினது ரொம்ப சரி, ஆனால் நம்மல மாறி அதை எல்லாரும் பறக்க விட மாட்டாங்க, ஃபார் எக்ஸாம்பில் அந்த கிளி ஜோசியம் பாக்குற அங்கிள் அவரு மாதிரி சிலர் கிளிகளை நம்பி இருக்காங்க, அவுங்க அதுக்கு ட்ரைய்னிங் கொடுத்து வளப்பாங்க, ஒன்னு பண்ணலாம் நம்ம அதை கூண்டுல அடைக்காம நம்ம ரெண்டு வீடுகளோட மொட்டை மாடியில ஃப்ரீயா பறக்க விட்டு நம்ம வளக்கலாம் சரியா” என்று அவன் அழகாய் புன்னகைக்க.
முகம் மலர்ந்தவள், “அப்படி பண்ண முடியுமா?”
“கண்டிப்பா” என்றான் புன்னகையுடன்.
இருவரின் வாழ்விலும் இன்னதென்று தெரியாத ஒரு அழகிய உறவு அந்த சிறு வயதிலே அழகாய் மலர்ந்து வாசம் வீசிக்கொண்டிருந்தது.
கண் படும் அளவு எதுவும் இருக்ககூடாது அதுபோல தான் இவர்கள் உறவு பலர் கண் படும் அளவு இருந்தது சிலருக்கு பகையை வளர்த்தது, அந்த பகை யாருக்கு தீங்காய் அமைந்தது.
அது என்ன?
_தொடரும்_