நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!13
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!13
அத்தியாயம் 13
இரவின் நிசப்தம் அவ்வண்டியில் வருகை புரிந்தவரிடமும் இருக்க, வண்டி ஓட்டிக் கொண்டிருந்த விபுனன் தூங்காமல் இருப்பதற்காக எதை எதையோ வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தான்.
அவனுக்கே சிறிது நேரத்தில் சந்தேகம் வந்தது தான் பைத்தியமா என்பது போல், அதை அவர்களிடம் கேட்கவும் செய்தான்.
“இங்க நான் மட்டும் பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க எல்லாம் அமைதியாவே வரீங்க. அப்போ என்னை பார்த்தா லூசு மாதிரி தெரியுதா?” என்று கண்ணாடி வழியாக இருவரையும் பார்த்து கேட்க,
“இத்தனை நாட்கள் உனக்கு இது தெரியலையா?” என்று கூறி பாரி நகைக்க, விபு முறைக்க முயன்று புன்னகைத்தான்.
“பா இதெல்லாம் நல்லா இல்லை பாத்துக்கோங்க” என்று முகத்தை திருப்பிக் கொள்ள,
“என்ன நல்லா இல்லையாம்” என்று எதிர்வினையாய் பேச,
“இப்படி கேட்டா நான் என்னத்த சொல்றது” என்று அங்கலாய்த்தான் விபுனன்.
“இது என்னடா வம்பா போச்சி. நீதானே சொன்ன இதெல்லாம் நல்லா இல்லைன்னு. அதான் எதைன்னு கேக்குறேன்” என்றவரின் குரலில் குதூகலம் நிறைந்திருந்தது.
“நான் எதுவும் சொல்லலை போதுமா” என்று இதழில் கைகளை வைத்து காண்பித்தான்.
அங்கே அமைதியாக இருந்தது என்னவோ நங்கையும் வசியும் மட்டுமே…
இருவரின் எண்ணவோட்டங்களும் வெவ்வேறு விதமாக இருந்தது.
வசியினுள் தன்னை எப்படி அவர் கண்டுக்கொண்டார் என்றதிலும், இத்தனை வருடங்களாக இருவரும் பிரிந்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்றதிலும் இருந்தது. அவர்கள் பேசுவதை கேட்கும் போது இருவரின் திருமணத்திற்கு முன்பே தாயின் வயிற்றில் தான் கருவுற்றிருப்பது போல் தோற்றுவிக்க, அதுவே அவனுக்கு அபாயமாக இருக்க அவனால் எதையும் சரிவர சிந்திக்க முடியவில்லை.
சிந்தனைகள் யாவும் ஒவ்வொன்றாய் அவனுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்க, எங்கோ ஒரு மூலையில் ஆதினியின் நினைவும், இறுதியில் அவளின் வலிகளை மறைத்த புன்னகை பூசிய முகமும் தோன்ற, சிந்தனையுள் குழம்பி இருந்தவனின் இதழில் வெளித்தெரியாத புன்னகை ஒன்று உதித்தது.
நங்கையின் மனதிலோ பாரி அனைவரின் முன்பு காட்டிய திருமண பதிவை நம்ப முடியாமல் தவித்தார். அவருக்குதான் தெரியுமே அவர் கருவுற்ற சமயம் எத்தகையது என்று. எப்படி இந்த விடயம் சாத்தியமாகும். பாரியை இறுதியாக சந்தித்தது என்னவோ வசி பூவுலகத்தை தொட்ட பதினாறாவது நாளன்றே… அப்படி இருக்கையில் இச்செயல் எவ்வாறு நடந்தேறியது. போலி காகிதங்களை காட்டி ஏமாற்றியுள்ளாரா? இருக்கவே இருக்காதே. எப்படி? எப்படி? என்று நங்கையின் மனம் யோசனையிலே மூழ்கியது.
விடியலின் போது நால்வரும் வீடு வந்து சேர்ந்தனர்.
தன் நினைவினிலே இருந்த இருவரையும் உலுக்கிய பின்பே தான் சுயவுணர்வு பெற்றார்கள். அதன்பின்பே இருவரும் இறங்கினர்.
இறங்கிய நங்கை அவ்வீட்டின் வடிவமைப்பை கண்டு நெகிழ்ந்து போனார். அவரால் நம்ப முடியவில்லை, இத்தனை பெரிய வீட்டிற்கு சொந்தக்காரராக இருப்பாரென்று. அதிலிருந்தே அவரது விடா முயற்சியைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
அவ்வீட்டின் நுழைவினிலே, ‘தேவநங்கை இல்லம்’ என்று கற்களால் பொறிக்கப்பட்டு இருக்க, அதனை கண்டு நெகிழ்ந்து போனது அந்த உள்ளத்திற்கு.
உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்டு தத்தளிக்க தொடங்கினார் தேவநங்கை. அதனை அறிந்து கொண்ட பாரிவேந்தர் அவரை ஆதரவாக அணைத்துக் கொள்ள நங்கையும் அவர் தோள் மீது வாகாக சாய்ந்து கொண்டார்.
முதன் முதலில் நங்கை இவ்வீட்டிற்குள் வருவதால், வசீகரன் உள்ளே சென்று ஆரத்தி தட்டு எடுத்து வந்து மூன்று முறை சுற்றி திருஷ்டி கழித்த பின்பே உள்ளே செல்ல விட்டான்.
வீட்டினுள் வந்தவர்கள் சோர்வினால் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட, ”நான் கிளம்புறேன்” என்று வந்து நின்றான் விபு.
“எங்கடா போற நீ?” என்று வசி புருவம் உயர்த்திட,
“இது என்ன அபத்தமான கேள்வியா இருக்கு, நான் எங்க வீட்டு போகணும்டா. எனக்காக என்னோட மம்மியும் டாடியும் காத்திட்டு இருப்பாங்க” என்று கூற,
“அதெல்லாம் அவங்க ஒன்னும் காத்திட்டு இருக்க மாட்டாங்க. நான் அம்மாக்கு போன் போட்டு சொல்லிட்டேன் உங்க பையன் ஒரு வாரத்துக்கு வரமாட்டான்னு. அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்கடா” என்றான் சீரியசாக.
“ஏன்தான் எனக்கு மட்டும் இப்படி நடக்குதோ. உங்க ரெண்டு பேர் கிட்ட இருந்து எனக்கு விமோசனமே கிடைக்காதா” என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு சொல்ல,
“சான்ஸே இல்லடா” என்று அவன் தோளில் கை போட்டுக்கொண்டு அவனோடு சமையலறைக்குச் சென்றான்.
நால்வருக்கும் தகுந்தாற்போல் டீ போட்டவன் அதனை எடுத்து வந்து மற்ற இருவருக்கும் கொடுத்து விட்டு, வசியும் விபுவும் அவர்களுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
விபுவிற்கு அவ்விடத்தில் இருக்க தர்மசங்கடத்தை கொடுக்க, அதனாலே உறக்கம் வருகிறது என்று கூறி நைசாக கழன்று கொண்டான்.
மூவரும் எதிரெதிர் திசையில் இருக்க, என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனம் காத்தனர்.
சிறிது நேர மௌனத்தைக் கலைத்தது என்னவோ வசீகரனின் குரல்தான்.
“என்கிட்ட இனி நீங்க ரெண்டு பேரும் எதையும் மறைக்க வேணாம். உங்க ரெண்டு பேர் வாழ்க்கையில என்ன நடந்துச்சின்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும். இத்தனை வருஷமா நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சி? நீங்க ரெண்டு பேர் பிரிஞ்சு இருக்கீங்கன்னு பார்த்தா அம்மா அவங்க குடும்பத்தை விட்டு தள்ளி இருந்திருக்காங்க. இதெல்லாம் எதுக்கு? எதனால நீங்க இப்படி ஒரு வாழ்க்கைய வாழ்ந்தீங்க? எங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு இருக்க வேண்டிய நிலை ஏன்?” என்று தனக்குள் இத்தனை ஆண்டுகளாய் இருந்த கேள்விகளை வரிசையாய் தொடுக்க, இருவருமே என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்வையிட்டு கொண்டனர்.
அவர்களுக்குதான் தெரியுமே இவர்களது கடந்த காலம் மகனுக்கு தெரியவந்தால் நிலைகுலைந்து விடுவான் என்று.
எப்படி சொல்வது என்று பாரி தயங்கியவாறே நங்கையை பார்வையிட, நங்கையின் விழியசைவின் சம்மதத்தில் பாரியும் அவரின் கடந்த காலத்தை சொல்ல தயாராகினார்.
***
இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு…
சென்னையின் மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்த பரணிதரன் அடுத்ததாக பிஜி படிப்பதற்கான முனைப்பில் இருந்தான்.
அவனுக்கு ட்ரைவராக வேலையில் இருந்ததுதான் பாரிவேந்தர்.
மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்த பரணிக்காக சென்னையிலே ஒரு வீட்டை வாங்கி தங்க வைத்திருந்தனர் நாச்சியாரின் குடும்பம். இந்த ஐந்து வருடங்களாக பரணியுடன் இருந்து வருவது பாரி மட்டுமே.
அனாதை என்று கூறி வேலை கேட்ட போது, வேலையையும் தந்து இருக்க ஒரு இடத்தையும் அமைத்து கொடுத்த பரணியின் மீது அத்தனை அன்பு வைத்திருந்தான் பாரி. அதேபோல்தான் பரணியும். இருவரின் பந்த பாசத்தை கண்டு அவனின் குடும்பத்திற்கே அத்தனை பிடித்தமில்லை. ஆனால் வாரிசு என்பதற்காகவே அமைதியாக இருந்தனர்.
படிப்பை முடித்த பரணிதரன் தன் சொந்த ஊரை நோக்கி பாரியுடன் பயணித்தான்.
சொந்த மண்ணில் விதைத்த விதையல்லவா அவன். அவ்வூரின் காற்றே அவனின் இதயம் வரை தீண்டி புத்துயிராக்கியது.
பரணி ஊருக்குள் வந்தவுடனே அத்தனை மக்களும் திருவிழா போன்று கொண்டாடி மகிழ, அத்தனையும் ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டு வீட்டிற்குள் சென்றான்.
வாசலிலே அவனுக்காக மொத்த குடும்பமும் காத்திருக்க, அதனை பார்த்த பாரிக்கு மலைப்பாக இருந்தது இத்தனை பேரை ஒரே இடத்தில் கண்டு.
பாரியின் தாய் அவனை இப்பூவுலகில் விதைத்து விட்டு மண்ணுலகை நீர்த்தவர், அதன்பின் அவன் பள்ளி படிப்பின் போது தந்தையின் மதுப்பழக்கத்தால் அவரும் விடைப்பெற, தனிமரமாய் ஒற்றையாளாக நின்று வாழ்வில் பயணித்து வருபவனுக்கு இக்குடும்பத்தில் பிறந்த பரணியை நினைத்து மகிழ்ந்துதான் போனான்.
அத்தனை பெரிய கூட்டு குடும்பத்தில் பிறந்தது அவன் செய்த நற்பயனே காரணம் என்பது பாரியின் ஆத்மநம்பிக்கை அதனை ஒருமுறை பரணியிடமும் கூறியுள்ளான்.
அதற்கு அவனோ புன்னகைத்து விட்டு, “யாருக்கு என்ன கிடைக்கும்னு யாருக்கு தெரியும் பாரி. பிற்காலத்தில் உனக்கு கூட இதேபோல் சொந்தங்கள் வரலாமேடா” என்று பிற்காலத்தில் நடக்கப்போவதை முன்பே உறைத்துவிட்டு சென்றான்.
அப்போது நங்கை பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
இவ்வூருக்கு வருகை தந்த பின் நங்கைக்கும் சேர்த்தே பாரிதான் வண்டி ஓட்டினான்.
ஊருக்கு வந்த புதிதில் பரணிதரன் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் பயிற்சியாளனாக பணியாற்றினான். அது மட்டுமின்றி அப்ராட் சென்று படிக்கவேண்டி அதற்கான தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக்கொள்ள துவங்கியிருந்தான். அதனை பற்றி வீட்டு பெரியவர்களிடமும் பேசியிருந்தான்.
வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு அவன் வெளிநாடு சென்று படிப்பதில் அத்தனை பிடித்தம் இருக்கவில்லை. அதில் சொந்த பந்தங்கள் யாவும் நாலு விதமாக பேசி அக்குடும்பத்தினரை குழப்பி விட்டு சென்றிருந்தனர். அவ்வீட்டின் முக்கிய புள்ளிகள் யாவும் அதற்கான தீர்வினை அறிய முற்பட்டது.
பாரி, “அண்ணா நீங்களும் இங்க வந்ததுல இருந்து ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும்தான் அலையிறீங்க. வாங்களேன் அப்படியே இந்த ஊரை கொஞ்சம் எனக்கு சுத்தி காட்டுங்க ண்ணா” என்று பரணியிடம் வேண்ட,
அவனுக்குமே சிறிது இடைவெளி தேவைப்பட்டது போல் தோன்ற, “சரி பாரி நாம வெளிய போகலாம். நீ கிளம்பி வா அப்படியே வீட்டுக்கு வரும்போது நங்கையையும் கூப்பிட்டு வந்திடலாம்” என்று உரைத்தான் பரணிதரன்.
வாழ்வின் பயணங்கள் யாவும் எங்கோ ஓரிடத்தில் இருந்தே பயணமாகிறது. அதேப்போல இவ்விருவருக்கும் இந்நொடியிலிருந்து பயணங்கள் துவங்கியது இவர்கள் அறியாமலே.
காலத்தின் பிடியில் இவர்கள் சிக்கிக்கொள்ள, அவராடும் விளையாட்டில் பாதிக்கப்பட போவது என்பதோ ஒரு சிறு பெண்ணின் வாழ்வே.
அன்றைய தினம் இருவரும் ஊர் சுற்றி விட்டு மாலைப்போல் நங்கை படிக்கும் பள்ளிக்கு வருகை தந்தனர்.
அந்நேரம் பார்த்து பரணிக்கு தெரிந்த நபர் ஒருவரை அவன் சந்திக்க சென்றுவிட, பள்ளி வாசலில் தனித்து நின்றான் பாரி.
நான்கு மணிப்போல் மணியடிக்க அடித்து பிடித்துக் கொண்டு ஓடிவந்தாள் அந்த பதினாறு வயது பட்டாம்பூச்சி தன் நண்பர்கள் கூட்டத்துடன். அவளின் சிறகின் காலம் குறைய துவங்கியது அறியாமல்…
“வாங்க காருகாரரே! இன்னைக்கு என்ன சீக்கிரமாவே உங்களோட ப்ரவேசம் இங்க நடந்திருக்கு” என்று கிண்டலில் இறங்கிட,
“அதில்லமா இன்னைக்கு அவ்வளவா வேலை இல்லை, அதான் சீக்கிரமாவே வந்துட்டேன்” என்றான் நகையாமலே.
“ம்ம் பரவால்லயே பதில் எல்லாம் சொல்லுறீங்க. நீங்க ஊமையோன்னு நினைச்சேன். இத்தனை நாளாய் ஒருதடவை கூட வாய் திறந்து பேசலை” என்றே புருவம் உயர்த்த,
“தேவையின்றி பேசுறது இல்லைமா” என்றான் வெகு நேர்த்தியாக.
“சரி வண்டியை எடுங்க” என்று கூறி பக்கத்தில் அமைதியாக நின்றிருந்த சௌந்தர்யாவிடம் திரும்பி, “அக்கா நான் போயிட்டு வரேன்” என்று வண்டியில் அமர்ந்தாள்.
“சரி” என்றவள் திரும்பி தன் வீட்டிற்கு நடைப்போட்டவள் தீடிரென கால்தடுக்கி விழப்போக, அவளை கீழே விழாமல் பிடித்தது ஓர் கை.
அதில் சற்று பயந்தவள் பிடிமானத்திற்காக காப்பாற்றியவனின் மேல் சட்டையை இறுக்கி கொள்ள, அவளின் பயத்தினை உணர்ந்த அவன், ”கண்ணை திறந்து பாரு, நீ கீழ ஒன்னும் விழுகலை” என்றுரைக்க, அதில் தன்னுணர்வு பெற்றவள் மெதுவாக அவனிடமிருந்து பிரிந்து நின்றாள்.
“பார்த்து போக மாட்டியா நீ” என்றவன் ஒரு மருத்துவனாக, ”கால்ல ஏதும் வலி இருக்கிற மாதிரி தோனுதா?” எனக் கேட்க, சௌந்தர்யாவோ பேந்த பேந்த தன் பெரிய கண்ணை வைத்து விரித்து பார்த்தாள்.
“இப்படி பார்த்தா என்ன அர்த்தம். கால்ல ஏதாவது வலி இருக்கா?” என்று மீண்டும் கேட்க,
“ஹான் வலி எதுவும் இல்லை” என்றாள் மெல்லிய குரலில்.
“அப்போ சரி பார்த்து போ” என்றவன் அவளிடமிருந்து விடைப்பெற்றான்.
அவளிடமிருந்து மட்டுமே விடைப்பெற்றானே தவிர அவள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தான் அந்த சிறு நிகழ்விலே.
நந்கை அமர்ந்து, ”ஏன் இன்னும் வண்டி எடுக்காம இருக்கீங்க கார்க்காரரே” என்க.
“பரணி அண்ணாவோடதான் ம்மா நான் வந்தேன். அவங்க யாரையோ பார்க்க போனாங்க. இதோ வந்துடுவாங்க” என்றான் பவ்யமாக.
“சரி” என்றவள் இருக்கையில் அமர்ந்து விழித்திரையை மூடிக் கொண்டாள்.
சிறிது நாழிகையிலே பரணிதரன் வருகை தந்து விட, மூவருமாய் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டிற்குள் நுழையும்போதே இருவமாய் நுழைவாயிலில் நுழைய, அதனை கண்ட பெரியவர்களின் மனம் வேறுவிதமாய் சிந்திக்கத் தொடங்கியது.
இவர்களின் பயத்தினாலும் குழப்பத்தினாலும் ஒரு பெண்ணின் வாழ்வே பாதை மாறப்போவது அறியாமல் இருந்தனர்.