NSK–17

NSK–17
அத்தியாயம் 17
விபுனன் செம்மலபுரத்தில் இருந்து அனைத்து வேலைகளையும் முடித்தான். வீட்டு வேலைகள் கூட தொடங்கியாகிவிட்டது.
வெகு நாட்களாக இங்கேயே இருப்பதால், ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, விபுனன் அதனை ஆதினியிடமும் சதாசிவத்திடமும் சொல்லி செல்லலாம் என்று வந்தான்.
அவன் வந்ததும், ”வாங்க அண்ணா” என்று ஆனந்தமாக வரவேற்றாள் ஆதினி.
ஆதினியின் குரல் கேட்டு அனைவரும் கூடத்திற்கு வந்தனர்.
இத்தனை நாட்களாய் விபுனன் வீட்டிற்கு வராமல் இருந்து வந்ததும் என்னவோ ஏதோவென்று பார்க்க, அங்கிருந்த மிளனி மட்டுமே அவனின் துணிகள் அடங்கிய பையையே வெறித்து பார்த்தாள்.
மிளனியின் கண்கள் சிறிதாக கலங்க தொடங்கி இருந்தது. அதனை கண்ட ஆதினிக்கு எவ்வாறு அவளை ஆறுதல் படுத்துவது என்று புலப்படவில்லை. அதற்கான தகுதியும் தனக்கில்லாததால் அமைதிக் காத்தாள். தானே இன்னும் காதலில் வெற்றியடையவில்லை என்ற நிலையில் இவளுக்கு எவ்வாறு உதவி செய்வாள். இதற்கும் சேர்த்து அவளுக்கு அவளின் விருமாண்டி மீது கோபமாக வந்தது.
இன்னும் விபுனன் உள்ளே வராததால், “வாங்க அண்ணா, இது உங்க தங்கச்சி வீடு. உங்களை யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என்றிட அவனும் மென்னகையோடு உள்ளே நுழைந்தான்.
“ஆதினி மா. நான் ஊருக்கு போக வேண்டிய நேரம் வந்துடுச்சி மா. இனி இங்க உள்ள வேலையை எல்லாம் நீயே பாத்துக்குவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு மா. அதுவுமில்லாம அங்க அந்த பையன் தனியா எல்லா வேலையையும் செஞ்சிட்டு இருக்கான். அவன் சொன்னதுக்காகதான் இங்க வந்து எல்லா வேலையையும் பார்த்து உனக்கும் சொல்லி கொடுத்தது. எனக்கான நேரம் இப்போ இங்க முடிஞ்சிடுச்சி மா. நான் இன்னைக்கு நைட் பஸ்க்கு கிளம்புறேன்” என்று கிளம்ப எத்தனித்தவனை பார்த்து, ”ஒரு நிமிஷம் இருங்க ண்ணா” என்ற ஆதினி உள்ளே சென்றாள்.
எதற்காக என்பது போல் குடும்ப உறுப்பினர்களின் பார்வை ஆதினியை தொடர, மிளனியின் பார்வை மட்டும் விபுவிடமே நிலைத்திருந்தது.
அவள் கண்களாலே காதலை அவனுக்கு உரைத்திட முனைய, அதனை அறிந்தோ அறியாமலோ விபுனன் அவளை பார்ப்பதை தவிர்த்து நின்றான்.
திரும்பி வந்த ஆதினி, ஒரு பெட்டியை விபுவிடம் கொடுத்து, ”இது எல்லாம் அத்தையோட முக்கியமான பொருட்கள். இதை அவங்ககிட்ட கொடுத்திடுங்க அண்ணா. அப்புறம் இதை உங்க தோஸ்த் கிட்ட கொடுத்திடுங்க ண்ணா” என்று ஒரு கவரையும் அதனுடன் கொடுத்து விட்டாள்.
“சரிம்மா நான் கொடுத்திடுறேன்” என்று கிளம்பிச் சென்றான்.
அவன் கிளம்பி சென்றதும் மிளனி அவளின் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அறைக்கு வந்தவளுக்கு அவனுக்காக காதல் உதித்த நாட்களோடு இன்று நடந்தது என அனைத்தும் ஞாபகத்திற்கு வந்தது.
***
மார்கழி மாதம் என்பதால் ஆதினியுடன் மிளனியும் கோயிலுக்கு சென்றிருந்தாள்.
இங்கே வந்த நாள் முதல் இருந்தே மிளனி, பாவாடை தாவணியே அணிந்தாள். ஏனோ ஆதினி அணிந்து பார்த்தவள் அதன் பின் வெஸ்டேர்ன் வியர் அவள் அணியவே இல்லை. அதற்கு தகுந்தாற்போல் அவள் தன் கூந்தலையும் வளர்க்க விருப்பப்பட்டு தினமும் எண்ணையை தேய்த்து கொள்வாள்.
அவளை பார்த்தால் யாருமே இவள் வெளிநாட்டு பெண் என்று கூற மாட்டார்கள் அப்படி ஒரு கிராமத்து பைங்கிளியாய் மாறிப்போனாள்.
அன்று நடந்த நிகழ்வில்தான் விபுவை முதன்முதலில் பார்த்தது. அங்கே வந்ததும் நண்பனுக்கு ஆறுதலாகவும் ஒரு தூணாகவும் இருந்த விபுவை கண்டு மிளனியின் மனதில் சிறிதாக சலனம் ஏற்பட்டது.
அடுத்து வந்த நாளும் அவன் நினைப்பாலே அவள் சுழன்று கொண்டு இருந்தவளின் கண்ணில் விழுந்தான் விபுனன். ஆற்றில் குதுகலமாய் சிறுப்பிள்ளை போல் விளையாடிக் கொண்டிருந்த விபுவை பார்த்த மிளனிக்கு ஏனோ அவளை சுற்றி பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் தோன்ற வேகமாய் அவளின் இதயம் அவனுக்காய் துடித்தது.
வெளிநாட்டில் வளர்ந்தாலும் அவள் தமிழ்நாட்டு பெண்ணல்லவா. காதல் வந்த நொடி நாணமும் வந்து கொள்ள, அவனை சீண்ட வேண்டும் என ஆசைக்கொண்டு தான் அவன் செல்லும் வழியிலே சென்று அவனின் பின்னந்தலையில் அடித்தது எல்லாம்.
ஆனால் அதனை அறிந்த ஆதினியிடம் அன்றே அனைத்தையும் மிளனி சொல்லிவிட, அவளால்தான் ஒன்றும் சொல்ல முடியவில்லை புன்னகையோடு நகர்ந்து விட்டாள்.
அதன்பின் வந்த நாளில் ஆதினியுடன் அவளும் தோப்பு, பேக்ட்ரி என அனைத்திற்கும் சென்று விபுவையே சுற்றி வந்தவளுக்கு காதலை சொல்ல துணிவில்லாமல் இருந்தாள்.
ஆனால், அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்த விபுனன் அவளிடம் பேச நினைத்து இன்று காலையில் பேசவும் செய்தான்.
“மிளனி ஒரு நிமிஷம் நில்லுங்க. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா?” என்க.
அவனே தன்னிடம் பேச வேண்டும் என்று கூற, திகைப்போடு பார்த்தவள், “சொல்லுங்க” என்றாள் மென்மையான குரலில்.
எடுத்த எடுப்பிலே, ”நீங்க பண்றது ரொம்ப தப்புங்க மிளனி” என்றான்.
அதிலே மிளனியின் கண்கள் கலங்கி விட, “எது தப்பு?” என்றாள் நேர்பார்வையோடு.
“இப்படி நீங்க என்னைய சுத்தி சுத்தி வரது எனக்கு சுத்தமா பிடிக்கலை. எனக்கு வரப்போற மனைவிய பத்தி பெரிய பெரிய கனவு எல்லாம் வச்சிருக்கேன். உங்களோட காதல் என்னைக்குமே நிறைவேறாதுங்க” என்க.
“ஏன் நிறைவேறாதுன்னு சொல்றீங்க? என்னோட காதல் ஒன்னும் தப்பில்லையே, உங்களை பிடிச்சிருந்தது, இதுல என்ன தப்பு இருக்குன்னு சொல்லுங்க”
“தப்பு இருக்குங்க. நான் படிச்ச பையன் ஆனா நீங்க படிக்கலை, அதுவும் இல்லாம நீங்க கிராமத்துல பிறந்து வளர்ந்தவங்க. உங்களால கண்டிப்பா என்னோட வாழ முடியாதுங்க. இப்போ இதெல்லாம் சரின்னு தோனலாம் ஆனா பிற்காலத்துல அது சரியா வராதுங்க. ப்ளிஸ் என்னைய என்னோட இஷ்டத்துக்கு வாழ விடுங்க” என்றான் எங்கோ பார்த்து.
“படிப்பு தானே இல்ல. வாழ்க்கைக்கு படிப்பு மட்டுமே முக்கியம் இல்லையே. அது இல்லாம எத்தனையோ பேர் வாழ்றது இல்லையா?” என்க.
“எனக்கு மத்தவங்களை பத்தி கவலை இல்லைங்க. என்னோட வாழ்க்கை மட்டும்தான் எனக்கு முக்கியம். நான் எதுக்கு மத்தவங்களை பத்தி யோசிக்கணும் சொல்லுங்க. அது தேவையில்லாத ஒன்று. நீங்க உங்க வாழ்க்கைய பாருங்க. அது என்னோட இணையவே இணையாதுங்க” என்றவன் அவளை கடந்து சென்றுவிட்டான்.
மிளனி, விபுனன் போகும் திசையையே வெறித்து பார்த்தவளுக்கு அவன் எதையோ நினைத்து காதலை மறைக்கிறான் என்று நன்றாகவே புரிந்தது. ஆனால் அது எதற்காக என்று புரியாமல் இருந்தது.
அன்று மதியமே ஊருக்கு கிளம்புகிறேன் என்று வந்து சொல்லி செல்கிறான்.
***
இவை யாவையும் நினைத்தவளுக்கு கண்ணீர் பெருக்கெடுக்க, அந்த நேரம் பார்த்து ஆதினி உள்ளே வர அவளை அணைத்துக் கொண்டு அழுதாள் மிளனி.
“விடு மிளா! எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்” என்று ஆறுதல் மொழி கூறினாள்.
“எனக்கு விபு வேணும் ஆதினி. கொஞ்ச நாளாவே இருந்தாலும் அவனை உயிருக்கு உயிரா காதலிச்சிட்டேன். அவன் எது சொல்லி மறுத்து இருந்தாலும் நான் சரிதான் போடான்னு விட்டிருப்பேன். ஆனா அவன் உப்பு சப்பு இல்லாத கிராமத்து ஆளு நீன்னு சொல்லி வேணாம்னு சொல்லிட்டு போறான். அதுக்கே அவனுக்கு திருப்பி கொடுக்கணும் ஆதினி. என்னைய எப்படியாவது அங்க கூட்டிட்டு போ டி. கிராமத்து பொண்ணுங்கன்னா துரைக்கு கசக்குதோ” என்று கண்ணீரில் தொடங்கியள் கோபத்தில் முடித்தாள்.
அவளுக்குமே வசீகரனை சும்மா விட மனதில்லை. அதுவுமின்றி நங்கையை பார்க்க வேண்டும் போல் தோன்றியது.
அதனால், அன்றிரவே தந்தையிடம் சொல்லி அபியுடன் அங்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தவள், “சரி போலாம், நீ பேக் பண்ணு” என்று வெளியேறினாள்.
சௌந்தர்யாவுக்கு நங்கையின் வாழ்வை சீதா மூலம் அறிந்து கொண்டதில் குற்றவுணர்ச்சியாக இருந்தது.
அவரை சென்று பார்க்க வேண்டும் தோன்ற, விபுவுடனே சென்று பார்த்து விட்டு வரலாம் என்று முடிவெடுத்தவர் கீழே வந்தார்.
அதே நேரம் ஆதினியும் கீழே வர, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே, ”அப்பா” என்றும், ”என்னங்க” என்றும் அழைத்தனர்.
இவர்களது அழைப்பில் குடும்பமே வருகை புரிய, “எதுக்கு இப்போ எங்களை கூப்பிட்டிங்க” என்று பரணி கேட்க,
“நாங்க சென்னைக்கு போறோம்” என்றனர் இருவரும்.
“எதுக்கு?” என்பது போல் பரணி பார்க்க,
“தப்பே செய்யாம இத்தனை வருசமா தண்டனை அனுபவிச்ச நங்கை கிட்ட நான் மன்னிப்பு கேக்கணும்” என்க.
“என்னது தப்பு செய்யாம அவ தண்டனை அனுபவிச்சாளா? தப்பு செஞ்சதுனாலதான் தண்டனை அனுபவிச்சா. அவளால தானே நான் அசிங்கப்பட்டேன். அதெல்லாம் எந்த கணக்குல வந்து சேரும் சௌந்தர்யா” என்று கர்ஜித்தார்.
“அன்னைக்கு அவ அப்படி நடந்துக்கிடதுக்கு காரணம் நான்தான். எனக்காக மட்டும்தான் அவ அந்த கல்யாணத்தை நிறுத்தினா?” என்று கத்தினார் சௌந்தர்யா.
“என்ன சொல்ற நீ?” என்று சதாசிவம் முன்னே வந்து கேட்டார்.
“ஆமா அண்ணா. நான் கிணத்துல குதிச்ச காரணம் தெரியுமா? நான் இந்த மனிஷனை காதலிக்க போய்தான் ண்ணா அப்படி ஒரு முடிவையே எடுத்தேன்” என்றவள் பரணியை பார்த்து, “நான் உங்களை எப்போ முதல்ல பார்த்தேன்னோ அப்பவே காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா வெளிய சொல்ல முடியல. அப்போதான் நங்கை உங்களுக்கும் அவளுக்கும் கல்யாணம்னு சொல்லி பத்திரிகை வச்சிட்டு போனா.
அதை தாங்க முடியாம நான் கிணத்துல குதிக்க, விஷயம் தெரிஞ்சு வந்தவ நான் காதலிக்கிறேன்னு தெரிஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்தி எனக்கே உங்களை விட்டு கொடுத்த மகராசிங்க அவ” என்று கண்ணீரோடு கூறினார் சௌந்தர்யா.
அப்படியே இறுகி போய் நின்றவர் முன்பு வந்த அபி, ”என்னையும் மன்னிச்சிடுங்க ப்பா. நான்தான் ஆதினியை அந்த ரூம்க்குள்ள வச்சி பூட்டுனது. அப்போதான் பூங்குழலி எனக்கு கிடைப்பான்னு செஞ்சேன். ஆனா அங்க வசி ப்ரோ இருந்தது தெரியாது ப்பா. ஐம் ரியலி சாரி டாட்” என்று மன்னிப்பு வேண்டினான்.
இறுகி போன பரணி இடிந்து அங்கேயே அமர்ந்து விட்டார். இத்தனை ஆண்டுகளாய் எப்படியோ நங்கைக்கு ஒரு தண்டனை கொடுத்திட்டோம் என்று நிம்மதியில் இருந்தவருக்கு நங்கையின் மீது தவறு இல்லை என்று தெரிந்த நொடி முள்ளின் மேல் நிற்பது போல் இருந்தது.
அதனாலே அன்றைய இரவு குடும்பத்தினரை அழைத்து கொண்டு சென்னை வந்து சேர்ந்தனர்.
***
ஆதினி கேட்ட கேள்வியில் இருவருமே திரும்பி பார்க்க, அங்கே ஆதினியோடு சேர்த்து மொத்த குடும்பமும் நின்றிருந்தது.
அதனை பார்த்த நங்கைக்கு கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க, “அம்மு” என்று மெதுவாக அழைத்தார்.
அம்மு என்ற அழைப்பிற்கு ஆதினி ஓடிவந்து அவரை அணைத்து கண்ணீர் சிந்தினாள்.
ஏதோ சத்தம் கேட்பது போல் வெளியே வந்த வசி, ஆதினியையும் மொத்த குடும்பத்தையும் கண்டு அதிர்ந்து நின்றான்.
ஆதினியை விலக்கிய நங்கை அனைவரையும் பார்த்து பொதுப்படையாக, ”வாங்க” என்று அழைத்தார்.
“என்னை முதல்ல மன்னிச்சிடு நங்கை. நான் ரொம்ப பெரிய தப்பு செய்துட்டேன். உண்மை என்னன்னு தெரியாம உன்ன தண்டிக்க செய்யிறதா நினைச்சு உன்ன குடும்பத்தை விட்டே பிரிச்சுட்டேனே மா” என்ற பரணி நேரடியாக நங்கை காலிலே விழுந்து விட்டார்.
“அய்யோ! அத்தான் எந்திரிங்க?” என்று பதறியவராய் விளகினார் நங்கை.
“என்னைய மன்னிச்சிடுமா. நான் ரொம்ப பெரிய தப்பை செஞ்சிட்டேன். உண்மை எதுன்னு தெரியாம உன்னை ரொம்பவே தண்டிச்சிட்டேன் மா. நான் பண்ணது தப்புதான். ஆனா என்னால நடந்ததை மாத்த முடியாதும்மா”என்று மன்னிப்பை வேண்டி நிற்க,
“முதல எந்திரிங்க அத்தான். நீங்க ஒன்னும் வேணும்னு செயலையே. அதுவும் இல்லாம இப்படி எல்லாம் நடந்ததுனால தானே எனக்கு இப்படி ஒரு அழகான கணவன் கிடைச்சாரு” என்று காதல் பொங்க பாரியை பார்த்து இறுதியில் பேசினார்.
அதில் பாரிக்கே வெட்கம் வந்து விட, காதலாக நங்கையை பார்த்து புன்னகைத்தார்.
அதற்குள் உள்ளே வசீகரன், “அதான் எல்லாம் இப்போ சரியாகிடுச்சில, வாங்க வந்து நான் போட்ட காப்பியை எடுத்துக்கோங்க” என்று சந்தோஷமாக கூறிட,
அவனின் மகிழ்ச்சியில் அனைவரும் மகிழ்ந்திட, ஆதினி மட்டும் அவனை முறைத்தபடி நின்றாள்.
அதனை சட்டை செய்யாமல் அனைவரிடமும் கதைக்க தொடங்கினான்.
“அப்புறம் அபிக்கும் பூங்குழலிக்கும் வர வாரம் இல்லாம அடுத்த வாரம் கல்யாணம் வச்சி இருக்கோம் மா. நீயும் என் தம்பி பாரியும்தான் முன்ன இருந்து இந்த கல்யாணத்தை நடத்தி கொடுக்கணும்” என்று பரணி கேட்டுக் கொள்ள, இருவருமே புன்னகையோடு, ”செஞ்சிட்டா போச்சி” என்றனர்.
அனைவரிடமும் பேசி வசீகரன் தனக்கு முக்கிய வேலை இருப்பதாக கூறி மேலே அறைக்கு சென்று கிளம்பத் தொடங்கினான்.
இங்கே ஊருக்கு வந்த விபுனனோ, சோர்விலும் மிளனியை காயப்படுத்திய வருத்தத்திலும் வீட்டிற்கு வந்தவுடன் சோர்ந்து படுத்து விட்டான்.
குளித்து முடித்து வந்த வசியோ மகிழ்ச்சியில், ”எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என்று உல்லாசமாக பாட,
அவன் பின்னாலிருந்து, ”லாலா லா” என்ற குரல் வர திடுக்கிட்டு திரும்பியவனை கதவோரமாக நின்று முறைத்து கொண்டிருந்தாள் ஆதினி.
“ஹே! நீ இங்க என்ன பண்ற முதல்ல வெளிய போ” என்று இருக்கைகளாலும் வெற்று மார்பை மறைத்தபடி சொன்னான்.
“பாருடா அய்யாக்கு கூச்சமா இருக்கோ?” என்றபடி அவன் பக்கத்தில் வர,
“எதுக்கு இப்போ முன்னாடி வர. முதல்ல நீ இந்த இடத்தை விட்டு கிளம்பு?” என்று துரத்தினான்.
“உனக்கு போய் மிஸ்டர். விருமாண்டின்னு பேரு வச்சேன் பாரு என்னைய சொல்லணும்டா. ஒரு தத்திக்கு போய் விருமாண்டின்னு பேரு வச்சிட்டேன்” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஆமா இப்போ எதுக்கு நீ என்னோட ரூம்க்கு வந்த? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?”
“யாரும் ஒன்னும் நினைக்க மாட்டாங்க” என்றவள் அவனின் கழுத்தில் மாலையாக கைகளை கோர்த்தவள், “உனக்குலாம் இந்த அழுமூஞ்சி ஆதினி செட்டாக மாட்டா. உனக்குலாம் என்னைக்குமே இந்த ஆக்ஷன் ஆதினிதான் செட்டாவா அதான் பேக் டூ ஃபார்ம்க்கு வந்துட்டேன் மிஸ்டர் விரு” என்றவள் அதிரடியாக அவனின் உயர்த்திற்கு எக்கி அவன் கீழ் அதரங்களை கவ்வினாள்.
இதழொற்றல் ஆரம்பித்து வைத்தது என்னவோ ஆக்ஷன் ஆதினியாக இருந்தாலும் முடிக்கவிடாமல் தொடர்ந்தது என்னவோ வசீகரனாக இருந்தது. பெயருக்கு ஏற்றாற் போல் அவனின் இதழொற்றலில் ஆதினியை வசியம் செய்தான்.
***